தமிழ் வளர்த்த சான்றோர் எனும் தலைப்புரையில் மாதம் ஒரு முறை முப்பது மாதங்களுக்கும் மேலாக கிருஷ்ண கான சபாவின் ஆதரவில் முன்னாள் விவேகானந்த கல்லூரி முனைவர் வா.வே. சு. என்றழைக்கப்படும் திரு. வி.வி. சுப்ரமணியன் ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தி வருகிறார். ஆனால், கால கட்ட வரையறுப்பினால் இச்சான்றோர்களைப் பற்றி தான் சேகரித்த விஷயங்கள் அனைத்தையும் வந்திருக்கும் ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்ற ஒரு ஆதங்கத்தினால் “தமிழர் முகங்கள்”என்ற பெயரில் ஆறு சான்றோர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை ஒரு புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளார். இதற்கு மதிப்புரை எழுத ஆரம்பித்தபோது ஓர் அறிமுகம் என்றுதான் தலைப்பு கொடுக்க நினைத்தேன். ஆனால் இதனுள் அடங்கிய தகவல்கள் எனக்குமே புதியதாக இருந்ததால் தலைப்பை சிறிது மாற்றி அமைத்துள்ளேன்.
இப்புத்தகத்தில் தமிழ் சுவடிகளை தட்டி எழுப்பிய உ.வே. சாமிநாதையர், தமிழ் உரைநடையை ராஜநடை போட வைத்த திரு. வி. கல்யாணசுந்தரனார், சங்கத்தமிழை துலக்கி தங்கத்தமிழாக்கிய ம.பொ. .சிவஞானம், நாடகத்தால் தமிழை வளர்த்த அவ்வை.தி.க. சண்முகம், பக்திப்பாட்டினால் தமிழ் வளர்த்த பாபநாசம் சிவன், பாரதிபித்தன் தமிழ் அறிஞர் பி.ஸ்ரீ. என்ற ஆறு சான்றோர்களைப்பற்றிய தகவல் அடங்கியுள்ளது. தலைப்பிலேயே இவர்கள் எவ்வாறு தமிழை வளர்த்தனர் என்று கோடி காட்டுவது இப்புத்தகத்தின் ஒரு சிறப்பு. சான்றோர்கள் என்பவர் தமிழை மட்டுமல்லாது தமிழர்களையும் வளர்த்தவர்கள் என்று இவ்வாசிரியர் ஓரிடத்தில் வரையறுத்து அதற்கு முக்கியத்துவமும் கொடுத்துள்ளார். இது இப்புத்தகத்தின் இன்னொரு சிறப்பம்சம். இனி புத்தகத்தின் உள்ளே நுழைவோம்.
உயிர் பெற்ற ஓலைச்சுவடிகள்: தமிழ் தாத்தா உ .வே.சாமிநாதையர்
வட மொழியினால் மேலுலகமும் ஆங்கிலத்தினால் இவ்வுலக நன்மைகளையும் அடையலாமே என்று கிண்டலாக ஒருவர் சொன்னபோது தமிழினால் இரண்டையுமே அடையமுடியும் என்று தன் தமிழார்வத்தை காட்டியவர் தமிழ்த்தாத்தா. இவரது குருபக்திக்கு அடையாளம் இவர் எழுதிய “மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம்” எனும் நூலில் கூட தன குருவின் பெயரை எங்கேயும் உபயோகப்படுத்தவில்லை என்பதே. தமிழ் ஏட்டுச்சுவடிகளை தேடி கண்டுபிடித்து பாதுகாப்பதை தன உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். இந்த ஏடுகளின் நிலைமையையும் இவருக்கும் கரையானுக்கும் இந்த ஏடுகளை அடைவதில் உள்ள ஆர்வத்தையும் போட்டியையும் கல்கி போன்ற இதர எழுத்தாளர்களின் எழுத்து மூலமாக விவரிப்பதால் மற்ற எழுத்தாளர்களின் சுவை மிகுந்த தமிழையும் அனுபவிக்கும் வாய்ப்பை வாவேசு நமக்களிக்கிறார். மணிமேகலை ஏட்டுச்சுவடி கிடைத்த மிதிலைப்பட்டியை தமிழ் தெய்வஸ்தலம் என்று வருணிக்கிறார் சாமிநாதையர். கரிவலம் வந்த நல்லூறில் சுவடிகளெல்லாம் ஆகமத்தில் சொன்னவாறே நெய்யில் தோய்த்து ஓமகுண்டத்தில் இறையாயின என்று கேட்டு அப்படி சொன்ன ஆகமத்தையல்லவா முதலில் ஆகுதி செயதிருக்க வேண்டும் என்று வருந்துகிறார். இவர் பதிப்பித்த காவியங்களுள் சிறந்த சீவக சிந்தாமணியின் விசேட உரை எழுதுவதற்கு சமண குருக்களிடமும் யானைப்பாகர்களிடமும் விளக்கம் கேட்டார் என்பதை படிக்கும்போது சுய ஆராய்ச்சி செய்யாமல் மற்ற புத்தகங்களிலிருக்கும் தகவல்களை வைத்தே ஒரு புதிய புத்தகத்தை உருவாக்கும் வழக்கத்தை என்னே என்று சொல்வது? சைவர் ஒருவர் எவ்வாறு சமண நூல்களை பதிப்பிக்கலாம் என்ற சர்ச்சையை கிளப்பியவர்களுக்கு இவரது பதில் மௌனம்தான்.
இவர் நச்சினார்கினியர் , சங்கரர் போலவே தவறு செயது விட்டார் என்று சிலர் குற்றம் சாட்டியபோது இவ்வளவு பெரியவர்களுடன் தன்னை ஒப்பிடுகிறார்களே என்று மிக சந்தோஷம் அடைந்தார். தான் தீவிர சைவத்தை கடைப்பிடித்தாலும் சிறந்த சமண இலக்கியங்களை பதிப்பதற்கு தயங்கவில்லை. இவருடைய இலக்கிய ஆர்வம் இவருக்கு சமணர்களிடமிருந்து பவ்ய ஜீவன் பட்டத்தை வாங்கி கொடுத்தது. இவர் ஒரு சிறந்த தமிழாசிரியராகவும் விளங்கினார் என்பது இவரது மாணவர்களுடைய புகழாரமே சான்று. தனித்தமிழில் புரியாத வண்ணம் எழுதுவதை விட எளிய நடையில் பிற பாஷை சொற்களை கலந்து எழுதுவதையே இவர் விரும்பினார். இதனால் தமிழ் மேலும் உயரும் என்றே நம்பினார். ஆங்கில மோகத்தில் கட்டுண்டிருந்த மாணவர்களுக்கு அவருடைய வேண்டுகோள் தமிழுக்கு கால் அல்லது அரை மணி நேரம் ஒதுக்கி வையுங்களென்பதே. ஆங்கில அமெரிக்க மோகத்தில் கட்டுண்டு கிடக்கும் தற்காலத்தவர் செவிகளை இவ்வார்த்தைகள் அண்டுமோ என்பது சந்தேகமே. ஒருக்கால், இம்மாதிரி புத்தகங்களை தற்செயலாக புரட்டினால் நடக்கலாமோ என்னவோ!
உலா வந்த உரைநடைத்தென்றல்: திரு.வி.க.
இவரது முதலிரவன்று இவரது மனைவியை உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டாராம். நீங்கள்தான் வேண்டும் என்று சொல்வாள் என்று நினைத்தாரோ என்னவோ! ஆனால் அவர் மனைவியிடமிருந்து வந்த பதில்,”எனக்கு நீங்கள் தமிழ் சொல்லித்தர வேண்டும்”. இவ்வாறு சுவையான சிறு சம்பவங்கள் மூலம் தமிழ் சான்றோர்களை ஆசிரியர் வ.வே.சு நமக்கு அறிமுகப்படுத்துவதால் இக்கட்டுரைகள் எடுத்த எடுப்பிலேயே களை கட்டிவிடுகின்றன. கல்யாணமாகி ஆறே வருடங்களில் இரண்டு குழந்தைகளையும் தன மனைவியையும் இழந்தார் என்பது நம்மை வருத்தத்தில் ஆழ்த்துகிறது. இவருடைய தமிழ்ப்பணி தேச பக்தன், நவசக்தி என்ற இரு பத்திரிகைகளின் வாயிலாக வெளி வந்தது. இவருடைய தலையங்கங்கள் தமிழையும் தேச பக்தியையும் சேர்ந்தே வளர்த்தன. பழங்காலத்தமிழ் சொற்கள் இவரது எழுத்துக்களில் படையெடுத்து வந்தன. தமிழில் விளங்க வைக்க முடியாத பொருள் ஒன்றுமே இல்லை என்று இப்பத்திரிகைகளின் மூலமாக சாதித்து காட்டினார் திரு. வி.க. இவரது பத்திரிகைத்தமிழே பிற்காலத்தில் கல்கி போன்ற சிறந்த பத்திரிகையாளர்களை உருவாக்கியது என்பதில் சந்தேகமேயில்லை என்கிறார் வ.வே.சு. “மொழி வளர்ச்சியே தேச வளர்ச்சிக்கும் சமய வளர்ச்சிக்கும் மூலமாயிருப்பது. ஆங்கில மொழி எங்கெங்கே பரவி நிற்கின்றதோ அங்கங்கே ஆங்கிலேயர் வழக்க, ஒழுக்கங்களும் நிலவி வருகின்றன” என்கிறார் திரு.வி.க. தமிழர்களின் உடை, நடை, உள்ளம் எல்லாமே ஆங்கில மயமாக மாறுவதற்கு காரணம் ஆங்கில மொழி பற்றினாலேயே என்று சாடுகின்றார். “தமிழ் நாட்டார் தமிழை மறந்தார்கள். ஆங்கில மயமாக விளங்குகிறார்கள். அதனால் தேச வழக்க ஒழுக்கங்களும் தேசாபிமானமும் அற்று போகின்றன” என்று கூறுகிறார். மேடை பேச்சுகளை பத்திரிகைகளில் சரியாக அச்சேறுவதில்லை என்றும் இதற்கு காரணம் பத்திரிகை நிருபர்கள் தமிழ் சுருக்கெழுத்து பயிலாததுதான் என்று சொல்கிறார். ஆனால் மேடை பேச்சுகளை அப்படியே பதிவு செய்ய எல்லா வசதிகள் இருந்தும் இக்கால பத்திரிகைகள் திரித்தும் மறுத்தும் எழுதுவது அரசியல் காரணங்களுக்காகத்தான் என்று தோன்றுகிறது. எழுதுவோடு நில்லாமல் இவர் ஒரு சிறந்த மொழி பெயர்பாளராகவும் விளங்கினார். காந்தியின் பிரசங்களை மொழி பெயர்த்தோடல்லாமல் அவர் எழுதிய கட்டுரைகளையும் தமிழாக்கம் செய்து தேச பக்தனின் வெளியிட்டும் நூலாக செய்தும் தேச பக்தியை தமிழர்களிடையே பரப்பினார். இவரது காந்தீயமே சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்களை வெற்றிகரமாகத் தாண்ட உதவியது என்று ஆசிரியர் சொல்கிறார். தமிழ்ப்பணியில் தங்களைச் செலுத்திக் கொண்ட வி.க. போன்ற பெரியவர்கள் மற்ற பணிகளிலும் தங்களை அர்ப்பணித்து கொண்டார்கள். திரு.வி.க. அவர்கள் 1918ல் முதல் தொழிற் சங்க இயக்கத்தை உருவாக்கினார். அவரை நாடுகடத்த போகிறேன் என்று கவர்னர் வெல்லிங்டன் அச்சுறுத்த பார்த்தபோது நியாய தீர்ப்பு நாள் அந்த கிறிஸ்துவருக்கு இருப்பதை நினைவூட்டித் தப்பினார். ஏழை தொழிலாளர்களுக்கு உழைப்பதை ஈசுவரத்தொண்டாகவும் செல்வர்கள் ஏழைகளுக்காகவே ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கின்றனர் என உறுதியாக நம்பினார். அவரது வாழ்க்கை குறிப்பு நூல்-வரலாறு அல்ல- அவரது நற்குணங்களை எடுத்து காட்டுகின்றது. இயற்கையோடு இனைந்து வாழ்ந்தார் என்பது இராயப்பேட்டையிலிருந்து மைலாப்பூர் செல்லும் வழியில் இயற்கையன்னையின் ஆட்சி கோலத்தை விவரிப்பதிலிருந்து தெரிகிறது. பெண் ஆணுக்கு அடிமை என்று நினைப்பது பொய்யென்றும் கணவன் -மனைவி ஒரு மாட்டின் இரு கொம்பு போல என்று நக்கீரன் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார். சாக்ரடிஸ் நான் கிரேக்கனுமல்ல,எத்தீனியனுமல்ல நான் ஒரு உலகக் குடிமகன் என்று சொன்னதிற்கும் ஓர் படி மேல் போய் நான் உலகத்தை சேர்ந்தவன்; பாரதத்தை தாய் நாடாகக் கொண்டவன்; தமிழ் இனத்தை சேர்ந்தவன் என்று கூறுகிறார். தன் கண் பார்வை குறைந்த பிறகும் தன பேத்தியை எழுத வைத்து தமிழ் பணியை தொடர்ந்தார். அவர் இறந்த பின் அவரது புதிய விலாசம் மக்கள் உள்ளம் என்று பி.ஸ்ரீ .சொல்லி நெகிழ்ந்தார்.
காலம் கண்ட தமிழ்ச் செல்வர்: ம.பொ .சிவஞானம்
பாடப் புத்தகங்கள் வாங்க பணமில்லாமல் 3 வது வகுப்போடு கல்வி நின்றது. 10 வயதில் பத்து ரூபாய் கடனுக்காக 2 வருடங்கள் அடமானம் வைக்கப்பட்டார். வயிற்றுப்பிழைப்புக்காக பல வருடங்கள் கூலி வேலை. இத்தகைய பின்னணியிலிருந்து எப்படி இவர் ஒரு தமிழ் செம்மலாக உருவெடுத்த்தார் என்று வியப்பாக உள்ளது.இந்த சூழ்நிலையில் தவறான வழிகளில் செல்லாமல் இவரை காப்பாற்றியது காந்தீயமே என்று இவர் கூறுகிறார். 1927ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் இறங்குகிறார். அமராவதி சிறை அனுபவம் அவர் வாழ்வின் ஒரு திருப்பு முனை. வருடத்திற்கு குறைந்தது ஒரு புத்தகம் என தீர்மானித்து 38லிருந்து 89 வயது வரை எழுதிய புத்தகங்கள் 140க்கும் மேல். அதில் முக்கியமான இரண்டு புத்தகங்கள் “விடுதலைப்போரில் தமிழகம்” (1312 பக்கங்கள்) “எனது போராட்டம் ” எனும் சுய சரிதை. போராட்டங்களின் மூலமே பிரபலனாதால் இந்த பெயர். போராட்டங்கள் அடர்ந்த அவரது அரசியல் வாழ்க்கை மொழிப்பற்றும் , நாட்டுப் பற்றும் தெய்வப் பற்றும் நிறைந்து இருந்ததால் திருப்திகரமாகவே இருந்தது என்று எழுதுகிறார். தீர்வு காண வேண்டிய விடயங்களில் அது சம்பந்தப்பட்ட நபர்களை பற்றிய தனிப்பட்ட எண்ணங்களை தவிர்த்து எடுத்துக் கொண்ட விஷயத்தை மட்டும் விவாதித்தால் முடிவெடுப்பது சுலபம் என்பது என் அனுபவம். இவ்வுத்தியையே ம.பொ .சி. சுயசரிதை எழுதுவோருக்கு அறிவுரையாக்குகிறார். “தனிப்பட்டவர்பால் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தாமல் நிகழ்ச்சிகளின் போக்கை மட்டுமே விமரிசிப்பது சுயசரிதை எழுதுவோரின் கடமையாகிறது” என்கிறார். வரலாற்று நூல்களை எழுதுபவர்கள் இவரது அறிவுரைகளை பின்பற்றினால் இந்நூல்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்பது திண்ணம். “எந்த போராட்டத்தை பற்றிய வரலாறும் அது நிகழ்ந்த காலத்திலேயே அதில் சம்பந்தப்பட்டவர்களாலேயே எழுதப்பட வேண்டும். விடுதலைப் போரில் தமிழர்களுடைய பங்கை விவரிப்பதுதான் எனது குறிக்கோள் ஆயினும் இந்திய விதலைப் போர் முழுவதையும் பின்னணியாகக் கொண்டு அதில் தமிழகத்துக்குள்ள பங்கை விவரிப்பதுதான் முறையாகும்” என்கிறார். தமிழும் சம்ஸ்க்ருதமும் என்ற நூலில் தான் சம்ஸ்க்ருதம் கற்றிருந்தால் அவருடைய தமிழ்த்தொண்டு இன்னும் சிறந்த அளவில் இருந்திருக்கும் என்று நம்புகிறார். தெய்வபற்றும் மதப்பற்றும் உள்ளவர்களாலேயே இதன் பொருளை புரிந்து கொள்ள முடியும் என்கிறார். கம்பர், திருமூலர்,வள்ளலார் பாரதியார் போன்றவர்களின் கவிச்சிறப்புக்கு காரணம் அவர்களது வட மொழி புலமையினால்தான் என்று அடித்து கூறுகிறார். இந்து மதத்தை ஏற்கும் எவராலும் ஸம்ஸ்க்ருதத்தை வெறுத்தொதுக்க இயலாது என்பது பேருண்மை. தமிழை வளர்ப்பது என்றாலே பிற மொழிகளை முக்கியமாக ஸம்ஸ்க்ருதத்தை வெறுத்திகழ்வது என்ற திராவிட இயக்கங்களின் கொள்கைகளை இவரது வாதங்கள் புறமுதுகிட்டு ஓடச் செய்தன என்கிறார் ஆசிரியர் வ.வே.சு. இவரை ராஜாஜி காந்தியிடம் இவர் கள்ளிறக்கும் ஜாதியை சேர்ந்தவரானாலும் கள்ளுக்கு முதல் விரோதி என்று அறிமுகம் செயது வைத்தார். இனப்பெருமை அதிகமாயிருந்த ஒரு காலம் போய் இன வெறியும் இன உணர்ச்சியும் அதிகரித்துள்ள இந்த காலத்தில் இம்மாதிரி அறிமுகம் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது இவரது முதல் மேடைப் பிரச்சாரம் மது விலக்குப் பிரச்சாரமே. சேலத்தில் இவர் மதுவை எதிர்த்து பேசிய பேச்சுகளே சேலம் மாவட்டத்தில் மது விலக்கு முதன் முதலாக அமல் படுத்துவதற்கு காரணமாய் இருந்தது என்றால் மிகையாகாது. தமிழையும் தேசத்தையும் சம அளவில் நேசித்தும் பேசியும் வந்ததாலேயே திராவிட கழகங்களின் பிரிவினை வாதம் பிசுபிசுத்தது என்கிறார் வ.வே.சு. ம.போ.சி யின் தமிழார்வம் தமிழ் வெறியல்ல என்பது அவர் கல்விக்குழு தலைவராக இருந்தபோது தமிழ் நாட்டு தெலுங்கர்களுக்கு தெலுங்கு மொழியில் கற்க வசதி செய்து கொடுத்ததின் மூலம் விளங்குகிறது. பாரதியாரிடம் இவருக்கிருந்த அன்பை பக்தி என்றே சொல்லலாம். பாரதியாரை கருத்து புரட்சியாளர் என்றும் படைப்பிலக்கிய கர்த்தா என்றும் வருணிக்கிறார். 1938லிருந்தே பாரதியார் விழாவை ஒரு வாரம் கொண்டாட வைத்தவர் ம.போ.சி. தமிழர்களின் 2000 வருடங்களுக்கு முன்னமே இருந்த உயர்ந்த கலாச்சாரத்தையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் காட்டும் முதல்காவியம் சிலப்பதிகாரம். உ .வே.சா. புதுப்பித்த இக்காவியத்தை தமிழர்களிடையே பரப்பிய பெருமை ம.பொ .சி.யை சார்ந்தது. அதுவே சிலம்புச்செல்வர் என்ற பெயரையும் வாங்கி கொடுத்தது.
நாடக மேடையில் தேசியத் தென்றல்- அவ்வை டி கே. சண்முகம்
அறுபத்து ஓரே ஆண்டுகள் வாழ்ந்த இவர் 55 வருடங்களை நாடக உலகில் கழித்தார்- 74 நாடகங்கள்,109 பாத்திரங்கள், பல திரைப்படங்கள். நாடக உலகில் இவரது ஆசான்கள்,சங்கரதாஸ் ஸ்வாமிகள், கிருஷ்ணஸ்வாமி பாவலர், எம். கந்தசாமி முதலியார் ஆகிய மூவரே. நாடகக்கலையை பற்றி பல நூல்களை எழுதினர். நாடகக்கலை என்ற பெயரில் அவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் செய்த மூன்று சொற்பொழிவுகள் நூல் வடிவமாகி பட்ட படிப்புக்கு பாட நூலாகவும் அமைந்தது. சங்கரதாஸ் ஸ்வாமிகள் இவருக்காக அபிமன்யு சுந்தரி, கோவலன் என்ற நாடகங்களை ஒரே இரவில் எழுதி முடித்தார். அபிமன்யு சுந்தரியில் வரும் ஒரு வசனம்,” தும் தும் தும் ,பம் பம் பம் தீம் தீம் தீம் தோம் தோம் தோம் எனும் வாத்திய ஒலிகள் சேர்ந்து துன்பம் தீர்ந்தோம் எனும் பொருளை கொடுக்கின்றன” என்பதாம். கோவலன் நாடகத்தில் கண்ணகி கூறும் வசனம், “மாபாவியோர் கூடி வாழும் மதுரைக்கு போகாதீர் மன்னா இன்று” மதுரையில் பெரும் கலவரத்தை எழுப்பியது. சங்கரதாஸ் ஸ்வாமிகள் மேடைக்கு வந்து மா என்ற சொல் திருமகளையும் பா என்ற சொல் கலைமகளையும் வி என்ற சொல் மலைமகளாகிய பார்வதியை குறிக்கிறது என்றும் இம்மூவர் கூடி வாழும் இடம் மதுரை என்றும் திருவிளையாடல் புராணத்தில் வந்துள்ள செய்யுள்களை உதாரணமாகக் காட்டினார். அவ்வை மூதாட்டியாக முதல் தடவையாக போட்ட பெண் வேடம் டி .கே.சண்முகத்தை அவ்வை சண்முகமாக மாற்றியது. பாரதியின் வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி பாடலை சேர்த்து தன் தமிழ்ப் பற்றை காட்டினார். பகத் சிங்கின் தூக்கு தண்டனை இவரை தேசிய நாடகங்களில் இறக்கியது. தேச பக்தி, கதர் பக்தி, தேசியக்கொடி போன்ற நாடகங்கள் தமிழையும் தேசிய உணர்ச்சியையும் சேர்ந்தே வளர்த்தன. பாரதியின் பாடல்கள் இவரது நாடகங்களில்தான் மேடையேறின. புராண இதிகாச நாடகங்களும் தொடர்ந்தது. இதை எதிர்த்து எள்ளி நகையாடிய பகுத்தறிவாளர்களை இவர் கேட்ட கேள்வியாவது பகுத்தறிவாளர்களால் மிகவும் பாராட்டப்பெற்று சென்னையில் நீண்ட நாட்கள் ஓடிய பத்து கட்டளைகள் எனும் புராணக்கதையை விட புராணக்குப்பைகள் என்று இவர்களால் தூற்றப்படும் வட மொழி தமிழ் மொழி நாடகங்கள் எவ்விதத்தில் தாழ்ந்தன என்பதே. தி.க. என்ற இவரது முன்னெழுத்துக்கள் திராவிடக்கட்சியை சார்ந்தவர் எனும் தப்பெண்ணத்தை உண்டாக்குவதை தவிர்க்கவே பின்னாளில் டி .கே.எஸ். என்று மாற்றி அமைத்துக் கொண்டார். எழுத்தாளர்களின் சம்மதமும் சன்மானமும் இல்லாமல் ஒரு நாடகத்தையும் இவர் மேடையேற்றியதில்லை என்பதை அறியும்போது எழுத்தாளர்களை துச்சமாக மதித்து உரிமை வாங்காமலே நாடகங்கள் நடத்துபவர்களை என்னவென்று கூறுவது? குமாஸ்தாவின் பெண் என்ற கதையை நாடகமாக்கியபோது கதையின் ஆசிரியை பெயர் இந்தி மலையாள பதிப்புகளில் இல்லாததால், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததாக இந்தி பதிப்பில் சொல்லப்பட்ட கல்கத்தா நூல் நிலையத்தின் மூலம் ஆசிரியை நிருபா தேவியின் முகவரியை கண்டுபிடித்து அவருக்கு ஒரு தொகை கொடுத்து அதன் உரிமையை பெற்றதை படிக்கும்போது நாடக உலகத்தில் இத்தனை நேர்மையுள்ளவர்களும் இருந்தனரா என்று ஆச்சரியப்பட வேண்டி உள்ளது. நாடகம் கலைக்கு அரசு; நாட்டின் நாகரீகக்கண்ணாடி; பாமரர்களின் பல்கலைக்கழகம் என்ற கருத்தை கொண்டவர்.
நாடு+அகம் = நாடகம் நாட்டின் சென்ற காலத்தையும், நிகழ் காலத்தையும் வருங்காலத்தையும் தன அகத்தே காட்டுவதால் இப்பெயர் பெற்றது என்கிறார் முனைவர் வ.வே.சு. இதை திருப்பினால் அகம் நாடு உன்னுள் நோக்கு; உன்னையுணர் என்ற தத்துவமாகிறது என்று சுவைபட சொல்கிறார் வ.வே.சு. சென்னையில் அவ்வை ஷண்முகம் சாலை உள்ளது. அதில் யார் வேண்டுமானாலும் நடக்கலாம்.ஆனால் நாடகக்கலை மூலம் இவர் வளர்த்த தேசிய பண்பாட்டு சாலையில் தேசத்திலும், தெய்வத்திலும், தமிழிலும் நம்பிக்கை கொண்டவர்களே நடக்கமுடியும் என்று உறுதியாக கூறுகிறார் முனைவர் வ.வே.சு. இவ்வரிகளை படிக்கும்போது எனக்கோர் எண்ணம் உதித்தது; இவரது பிறந்த நாள் தோறும் இவரது பேரில் உள்ள இந்த சாலையை மாலை வேளையில் மறித்து இவரது நாடகங்களை தற்பொழுதுள்ள நாடக மன்றங்கள் உயிர்ப்பித்தால் இவருக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றி காணிக்கையாக இருக்கும் என்பதே..
பக்தியிசை அளித்த பண்பாளர்- பாபநாசம் சிவன்
“கா வா வா கந்தா வா வா”, “என்ன தவம் செய்தனை யசோதா “, “நானொரு விளையாட்டு பொம்மையா? என்ற பாட்டையே அறியாத பாட்டாளிகளையம் கவரும் பக்தி பாடல்களாலும் , “மன்மத லீலையை வென்றார் உண்டோ”,”வதனமே சந்திர பிம்பமோ”போன்ற திரைப்பட பாடல்களால் பாமர மக்களையும் கவர்ந்தவர்தான் போலகம் ராமையா என்ற பாபநாசம் சிவன். 2000 பாடல்கள் எழுதியவர்; 75 ராகங்களை கையாண்டவர்; 4 திரைப்படங்களில் நடித்தவர் என்கிறார் வ.வே.சு. ஏழாவது வயதில் தந்தையை இழந்து திருவனந்தபுரத்தில் அன்னை அண்ணாவுடன் குடியேறுகிறார். உணவும் படிப்பும் அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில் கட்டளை உபயம் . உபாத்யாய, வியாகரண என்ற வடமொழி பட்டங்களை பெறுகிறார். சிவபக்த ஸ்வரூபி,யோக புருஷர் என்று வ.வே.சு.வால் வருணிக்கப்படும் கரமணி நீலகண்ட சிவனுடைய பஜனை கோஷ்டியில் சேர்ந்து பஜனை பாடல்களில் தேர்ச்சி பெறுகிறார். நீலகண்ட சிவன் இறந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு சிவராத்திரி நாளில் தானே பஜனை பாடல்களை விடியும் வரை பாடுகின்றார். அன்று தொடங்கிய பஜனை அடுத்த அறுபது ஆண்டுகளுக்கு தொடர்கிறது. உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் மஹா மஹோபாத்யாய பட்டம் கிட்டாததால் பஜனைப் பாடல்களின் மேல் உள்ள ஆர்வம் மேலும் அதிகரித்து தேவாரம் திருவாசகம்,திருப்புகழ், திருவருட்பா,தாயுமானவர் பாடல் போன்ற எண்ணற்ற பாடல்களை பயின்றும் பாடியும் ரசிகர்கள் உள்ளங்களை கவருகிறார். தனது இருபதாவது வயதில் அன்னையை இழந்த பின்பே அவர் எழுதப்படிக்கதெரியாமலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை நினைவிலுறுத்தி தன்னுடைய திவ்ய சாரீரத்தினால் சங்கீத விதவான்களெல்லாம் அவர் பாடுவதை மணிக்கணக்கில் ரசித்து கேட்டதையும் அவரிடமிருந்து ஒன்றுமே தான் கற்றுக்கொள்ளாததையும் நினைத்து வருந்துகிறார். கோனேரிராஜபுரம் வைத்தியநாத அய்யரின் கரடுமுரடான குரலில் பாடிய தெலுங்குப் பாடலை தாங்க முடியாமல் வெளியேறிய சிவன் இன்னொரு கச்சேரியில் அவருடைய தெய்வீக கம்பீர சாரீரத்தில் திருவடி சரணம் எனும் கோபாலகிருஷ்ண பாரதியின் பாடலை பாடியதை கேட்டு மயங்கி 7 ஆண்டுகள் அவர் இறக்கும் வரை அவரிடம் இசை பயில்கின்றார். சிவன் பஜனை இல்லாமல் எந்த பெரிய கோயில் உத்சவமும் முடிவடையாது எனும் அளவிற்கு அவரது பஜனைப்பாடல்கள் பக்தியற்றவர்களையும் கோயிலுக்குள்ளே இழுத்து பிடித்து வைத்தது என்று கூட சொல்லலாம். திருவையாறு சப்தஸ்தான விழாவில் 45 வருடங்கள் தொடர்ந்து பஜனை செய்த்துள்ளார். ஐயாறப்பன் 15 மைல் ஊர்வலம் முடிந்து திரும்பி வர ஒரு நாளுக்கும் மேல் ஆகுமாம். கூடவே இவரது பஜனையும் தொடருமாம். அன்பர்கள் பகல் வெய்யிலையும் இரவில் உறக்கத்தையும் மறந்து இவருடன் செல்லுவார்களாம். மறுநாள் கோயிலை அடையும் சமயம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜனங்கள் இவருடன் திரும்புவார்களாம். கோயிலினுள் பல்லாயிரக்கணக்கான மக்கள் காத்திருப்பார்களாம். ஒரு நாளுக்கும் மேலாக பஜனை செய்வதற்கு எவ்வாறு இவரது உடலும் மனமும் நினைவும் குரலும் ஒத்துழைத்தன என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. என்ன தவம் செய்தனை! சிவனே! என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
மார்கழி மாதத்தில் விடிகாலை வேளையில் கூட வீதிகளில் வேகமாக செல்லும் வாகனங்களின் சப்தம்தான் கேட்கிறது பஜனை சப்தம் கேட்பதில்லை. மேலும், பஜனை செய்பவர்கள் நடப்பதற்கு வீதியில் இக்காலத்தில் ஏது இடம்? கர்நாடக உலகத்தில் ஜாம்பவான்களாக விளங்கிய மதுரை மணி, எம்.எஸ். சுபபலக்ஷ்மி, செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், டி.கே,பட்டம்மாள், முசிரி சுப்பிரமணிய அய்யர் போன்றவர்கள் இவரிடம் தமிழ் பாடல்களை கற்று தேர்ந்து இவர் பாடல்களை பிரபலமாக்கி தங்களையும் பிரபலப்படுத்திக்கொண்டார்கள் என்றால் மிகையாகாது. இவர் இயற்றிய கீர்த்தனங்கள் ஏழு தொகுதிகளாக வந்துள்ளன. இதன் முதல் தொகுதிக்கு ரசிகமணி.டி .கே.சிதம்பரநாத முதலியார் அவர்கள் எழுதியுள்ள சிறப்புரையில் சிந்திக்க வைக்கும் பகுதிகளை வ.வே.சு. நமக்களித்துள்ளார். அவைகளில் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். “நமது ஸங்கீதம் உலகளவில் மிகச்சிறந்ததாகக் கருதப்பட்டாலும், உள்ளம் தணிதல் எழுச்சி பெறுதல் போன்ற மனோபாவங்கள் இல்லை என்ற குறையுள்ளது. இந்த வறட்சிக்கு காரணம் தமிழ் பாஷை மூலம் ஸங்கீதத்தைப் பாடாததும்,கேட்காததும் சொல்லி கொடுக்காததுமே ஆகும். பாஷைகளில் பயிற்சி இல்லாதவர்களுக்கு வார்த்தைகளிலுள்ள ரஸபாவங்களை அறியவே முடியாது. அனுபவிக்கிறோமென்று சொல்லுகிறதெல்லாம் மனப்பால் குடிக்கிறதைத் தவிர வேறில்லை. இதர பாஷா மோகமும்,ஸங்கதிப் பெருக்கமும்,தாள சிலம்பமும் ஒன்று கூடி ரஸபாவத்தையெல்லாம் உறிஞ்சி விட்டன என்று வருந்திக் கொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீமான் பாபநாசம் சிவன் பாட்டுக் கச்சேரியை கேட்க நேர்ந்தது. பாடிய பாடல்களெல்லாம் தமிழிலேயே இயற்றப்பட்டிருந்தது. பக்திரஸம் வார்த்தைகளில் ஊறிநின்ற நிலை வெளிப்படையாய் இருந்தது. நாங்கள் எல்லோரும் தமிழர்களாய் இருந்ததால் தமிழ்ச் சொற்களின் ரஸபாவம் எளிதிற் செவிப்புலன் வழியாக உள்ளத்துட் சென்று உணர்ச்சியோடு ஒன்றுபட்டுவிட்டது. சாகித்யம் என்பது கேவலம் ராகத்தையும் தாளத்தையும் தொங்கவிடுவதற்கான கோட்ஸ்டாண்ட் அல்ல. ஸங்கீதத்திற்கும் தாளத்திக்கும் அவைகள் உற்பத்திப் பண்ணிக் கொள்கிற சாகித்யத்திற்கும் உள்ள சம்பந்தம் உடலுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தத்தைப் போன்றது. சிவன் அவர்கள் பாடிய பாடல்கள் மேலே சொன்ன இலட்சணங்களுக்கெல்லாம் தக்க இலக்கியமாய் இருந்தன. ஸங்கீத ஸாரம் எவ்வளவு இருந்தாலும் அவ்வளவுக்கும் தமிழ் பாஷையும் தமிழ் சாகித்யமும் இடம் கொடுக்கும் என்பதை சிவன் நன்கு நிரூபித்து விட்டார்கள்”. இது இளைய தலைமுறைப் பாடகர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான பகுதி. கர்நாடக ஸங்கீதமே பிராம்மண ஸங்கீதமாகி விட்டது என்று குறைப்பட்டு கொள்ளும் டி .எம்.கிருஷ்ணா போன்றவர்கள் சிவனுடைய தமிழ் பாடல்களை ரஸபாவத்துடன் இசைத்தாலே பிராம்மண ஸங்கீதம் பாமரர்களையம் கவரும் ஸங்கீதமாகி விடும் என்பதில் சந்தேகமேயில்லை. பக்திப்பாடல்களோடு நிற்காமல் தமிழ் பெருமையையும் தேச பக்தியைப் பாராடடியும் திரைப்படங்களுக்கும் பாடல்களை எழுதியும் நடித்தும் உள்ளார் என்றறியும்போது தமிழிசைக்கே தன்னை முழுதும் அர்ப்பணித்து கொண்டவர் சிவன் என்பது அப்பட்டமான உண்மையேயாகும்.
பாரதியாரோடு பழகிய பைந்தமிழ் அறிஞர் பி.ஸ்ரீ.
“திருவளர்ந்தோங்கும் பரத கண்டத்துப் பாண்டிய நாட்டுத் தலைநகராகிய மதுரை என்னும் மாநகரத்து வையையாற்றின் வடகரைக்கண் ஒரு நாட் காலை பொழுது புலர்ந்து சிறிது நேரம் சென்ற பின்றைச் செவ்விய மேனியன் சிறந்த நோக்கினான், பரந்த மார்பினன், பவள வாயினன்,பதினாருட்டைப் பிராயத்தான் ஓரிளந்தோன்றல் போர்க்கோலம் பூண்டு புரவி மீதேறிக் காற்றினுங் கடுகித் தென்புலநோக்கி வாரா நின்றான்” ; சூரியநாராயண சாஸ்திரியாரின் ஒரு நவீனத்தின் இந்த முதல் வரியை தந்தையிடம் சொல்ல தந்தை உனக்கு நல்ல ஞாபக சக்தி என்று சொல்ல, என்னால் இவ்வரியை மறக்கவே முடியவில்லை என்று சொன்ன சிறுவன்தான் பின்னாளில் படிப்போர் மறக்க முடியாத எழுத்துக்களுக்கு சொந்தக்காரராக விளங்கிய பி. ஸ்ரீ என்ற இரண்டெழுத்து நூலாசியராகிய பி.ஸ்ரீ.ஆச்சார்யா அல்லது பிச்சுமணிஸ்ரீனிவாசாச்சாரி என்ற முன்னுரையோடு இக்கட்டுரையை ஆரம்பிக்கிறார் ஆசிரியர் வ.வே.சு.
இவரது தந்தை வழி பாட்டனார் தமிழிலும் பக்தி இலக்கியங்களிலும் தாய் வழி பாட்டனார் வடமொழியிலும் பகுத்தறிவிலும் ஆர்வத்தை உண்டு பண்ணினர். இது மட்டுமல்லாமல் தமிழ் தாத்தா உ .வே. சாமிநாதய்யர் என்னுடைய மூன்றாவது தாத்தா என்பாராம் பி.ஸ்ரீ. இலக்கியத்தில் முன்னோடிகளாக விளங்கிய அனைவரையும் தன சகோதரர்களாகவே பாவித்த குடும்பம் பி.ஸ்ரீயின் குடும்பம். இவருடைய காலத்து கல்வி சூழ்நிலை தற்போதைய கல்விச்சூழ்நிலையை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. அவர் காலத்தில் ஆங்கிலமும் ஆங்கிலேயர்களும்தான் உசத்தி என்ற எண்ணம் பொதுவாக எல்லோரையுமே பீடித்திருந்தது மத மாற்றமும் மும்முரமாக நடைபெற்றது.இக்கால இளைய தலைமுறையினர் அமெரிக்க மோகத்தில் சிக்குண்டு இந்து மதத்தை தூஷித்தும் இந்திய கலாச்சாரத்தை பின்தங்கியது என்றும் குற்றம் சாற்றுவதை காணும்பொழுது நாம் சுதந்திரம் அடைந்தென்ன பயன் என்று ஒரு சலிப்பு ஏற்படுகிறது.இவர் நெல்லை இந்து கல்லூரியில் படிக்கும் சமயத்தில்தான் இதே கல்லூரியில் ஐந்து வகுப்பு வரை படித்த பாரதியார் இந்தியா என்ற பத்திரிகை மூலமாக இக்கல்லூரியில் நுழைகிறார். பாரதியின் எழுத்து வெள்ளத்தை ஆசிரியர்களின் தடையுத்தரவு நிறுத்தமுடியவில்லை. பாரதியின் பாட்டுதான் எங்கள் கல்விப் பயிற்சி தேச பக்தனை உருவாக்கக்கூடிய பயிற்சி அன்று என்பதை நிலை நாட்டியது என்கிறார். “பாரதி கற்பித்ததெல்லாம் நாமிருக்கும் நாடு நமது என்பதுதான்” என்கிறார். இந்த ஒரு எண்ணம் போதுமே நம்மிடையே உள்ள வேறுபாடுகள் அனைத்தும் மறைந்தொழிய. விருந்தும் மறு விருந்தும் என்ற கட்டுரையில் பாரதியாரின் முதல் சந்திப்பின் வருனனையே ஒரு விருந்தாக அமைந்துள்ளது. “சீக்கிய வீரனைப் போல் முண்டாசு கட்டியிருந்தார்;வற்றி உலர்ந்த உடம்புதான்;வாடிப் போன கன்னங்கள்தான்; எனினும் மார்பை முன்னே தள்ளித் தலை நிமிர்த்தி ஒரு வெற்றி வீரனைப் போல் உள்ளே நடந்து வந்தார். எந்த போர் வீரனுக்குத்தான் அவ்வளவு காம்பீர்யம் இருக்கமுடியும்? நீண்டு நிமிர்ந்த மூக்கும், அடர்ந்த புருவங்களும், உருண்ட கண்களும் அவற்றின் கூர்மையான வீரப்பார்வையும், பரந்த நெற்றியும், அதன் நடுவிலே குங்குமப் பொட்டும் அந்த வீரம் செறிந்த முகத்தை வசீகரமாக்கிவிட்டன. பித்தான் இல்லாத கிழிந்த ஷர்ட்டு மேலே அல்பாகா கோட்டு ;அதற்கு ஒரே பித்தான்; கோட்டும் காலம் கண்டதுதான். ஆனால் அவ்வளவு வறுமையாலும் அவிக்க முடியாத ஒரு பெருமை-ஒரு பெருமிதம்-ஒரு மாட்சி ஒளி வீசியது அந்த முகத்திலும்,கண்களிலும்-மெல்லிய மேகத்திரைக்குள்ளே ஒளிந்து கொண்ட சந்திர பிம்பம் போலே . அந்த மாட்சிக்கு எந்த அதிகாரியின்-அரசனின் மாட்சிமையைத்தான் ஒப்பிட முடியும்? தேச பக்தியும் தெய்வ பக்தியும் இரண்டராக் கலந்து ஆத்ம சக்தியைத் தூண்ட உள்ளம் சக்திக் கனலாய் ஜொலித்தது. இந்த உணர்ச்சியும் கள்ளம் கவடற்ற குழந்தையுள்ளமும் , கவிதை வெறியும் அந்த முகத்திற்கும் கண்களுக்கும் அவ்வளவு வசீகர சக்தியையும் மாட்சியியும் அளித்து விட்டன” பாரதியின் முகப்பொலிவை வியப்பதா அல்லது அப்பொலிவை நம் கண் முன்னே நிறுத்தும் வார்த்தை வடிவங்களின் அழகை எண்ணி வியப்பதா என்றே தெரியவில்லை.
பிறகு தாமிரபரணி ஆற்றங்கரையில் உட்கார்ந்து பாரதி பாஞ்சாலி சபதத்தை பாடுகின்றார். பாட்டிற்கேற்ப மாறும் முக வேறுபாடுகளையும் பீமனின் சீற்றத்தை சிவந்திருந்த அந்தி வானம் போல் இருந்தது என்றும் அழகுடன் வருணிக்கிறார் பி.ஸ்ரீ. திரௌபதியின் நிலைதான் நமது தேசத்தின் நிலையும் என்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சொன்னதை எத்தனையோ வருஷங்களுக்கு முன்னரே பாரதியார் கண்டு பிடித்து அழியாத சபத சரித்திரமாக்கி விட்டார் என்கிறார் பி.ஸ்ரீ. பாரதியின் இளம் பருவத்தோழரான வேதநாயகம் பிள்ளை அவரது புதிய திருத்தொண்டகத்தொகையில் பாரதியாரை புறக்கணித்து தாகூரை கவிச்சிற்பியாக காட்டியிருப்பது இவரது மனதை வாட்டியுள்ளது. வங்கக்கவிக்கு நோபல் பரிசு கிடைத்த காரணத்தினாலோ என வருந்துகிறார். கீதாஞ்சலிக்கு ஆங்கில ஆக்கம் கிடைத்தது போல் பாரதியின் பாடல்களுக்கு ஆங்கில ஆக்கம் கிடைத்திருந்தால் அவருக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கும் .ஆனால், ஆங்கிலத்தில் மொழி மேயர்ப்பதில் புலமை பெற்ற அவரது நண்பர்களான வேத நாயகம் பிள்ளை நாவலர் பாரதி, அரவிந்தர் ஆகியோர் ஏன் முன் வரவில்லை என்று மனமுடைந்தார் பி.ஸ்ரீ. தனித்தமிழ் என்று சொல்லி வாசகர்களுக்கு குழப்பத்தை உண்டு பண்ணுவதை அவர் விரும்பவில்லை. ஆங்கிலம் வளருவதற்கு அடிப்படையே பிற மொழிச் சொற்களை தன வசமாக்கி கொள்வதால்தான் என்று அன்றே நம்பியவர் பி.ஸ்ரீ.க்கு தமிழ் இலக்கியங்களில் ஆர்வமூட்டியவர் ராஜாஜிதான். தலபுராணங்களிலும், செப்பேடுகள், கல்வெட்டுகள், சிற்பக்கலை ஆகியவற்றில் இவருக்கிருந்த புலமையும் ” கிளைவ் முதல் ராஜாஜி வரை” என்ற கட்டுரை நூல் மூலம் வெளிவந்தது. இவர் தொடங்கிய கிராம பரிபாலனம் என்ற வார இதழ் நஷ்டத்தினால் நின்றது. குமரன் என்ற பத்திரிகையின் ஆசியராய் மூன்றாண்டுகள் பனி செய்த சமயம் கட்டுரைகளை எழுதி குவித்தார். பல நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், மாத இதழ்களிலும் இவரது கட்டுரைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. தினமணியில் பதிப்பாசிரியராக ஆன பின் கணக்கற்ற நூல்களை மலிவிதழாக வெளியிட்ட பெருமை இவரை சேர்ந்தது. ஆனந்த விகடனில் பகுதி நேர ஆசிரியராக இருந்த பதினான்கு ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகள் எழுநூறுக்கும் மேல் .தனது 95 வது வயதில் தமிழ் பேராசிரியை சரஸ்வதி ராமநாதன் அவர்களுடன் இனைந்து “கம்பன் கலைக்கோவிலுக்கு ஒரு கை விளக்கு” என்ற நூலை வானதி பதிப்பகத்தின் வழியே வெளிக்கொணர்ந்தார். மேலும் கம்பனும் ஷெல்லியும், பாரதியும் ஷெல்லியும் போன்ற ஒப்பிலக்கியங்களை தமிழில் படைத்து மற்றவர்களும் எழுத அடித்தளம் அமைத்து கொடுத்தார் பி.ஸ்ரீ. பாரதீயத்தை துணையாகக் கொண்டால் தமிழரின் புது வாழ்வு இயக்கம் என்ற கட்டடத்தை புதுமையாகவும்பெருமையாகவும், அழகாகவும் உறுதியாகவும் கட்டி வாழலாம் என்று சொன்னவர் பி.ஸ்ரீ. தமிழில் பல துறைகளில் வல்லுநராகஇருந்து தமிழ் பொக்கிஷங்களான பாரதி கம்பன் புகழை பரப்பி அமரத்துவத்தை சம்பாதித்து கொண்டவர் பி.ஸ்ரீ என்கிறார் வ.வே.சு.
தமிழுக்காக உண்மையிலே உழைத்தவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டார்களே! அரசியல் காலத்தில் தமிழை ஓர் ஆயுதமாக மாற்றி விட்டார்களே! தமிழ் மொழிக்கும் தேசியத்திற்கும் தொடர்பில்லை என்ற மாயையைப் பரப்பி விட்டார்களே!தமிழின் மிக முக்கியமான பக்தி இலக்கியத்தையும் இறையுணர்வையும் இழிவுபடுத்தி விட்டார்களே! இவற்றையெல்லாம் எப்படி சரி செய்வது என்பதற்கான தீர்வுதான் தமிழர் முகங்கள் என்ற இப்புத்தகம் என்று பின் அட்டையில் கூறப்பட்டுள்ளது. இத்துடன், என்னை போன்ற சாதாரண தமிழன் ஒவ்வொருவரும் இத்தகைய சான்றோர்கள் பிறந்து வளர்ந்த பாரதத் தமிழ் மண்ணிலேதான் நானும் பிறந்து வளர்ந்தேன் என்று பெருமிதம் கொள்ள வைக்கும் ஒரு புத்தகத்தை அளித்துள்ளாரே முனைவர் வ.வே.சு.! என்பதையும் சேர்த்து கொள்ளலாம் என நினைக்கிறேன். ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றி.