குளக்கரை


[stextbox id=”info” caption=”லண்டன் மாநகரம் உலக ஊழல்களின் தலை நகரா?”]

லண்டன் மாநகரம் உலகின் கௌரவமிக்க நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் லண்டனின் இருண்ட பகுதிகளை நாம் விளம்பரங்களிலோ, செய்திகளிலோ, தொலைக்காட்சிகளிலோ அனேகமாகக் காண்பதே இல்லை. இதற்குக் காரணங்கள் பல, ஒன்று ஊடகங்களும், விளம்பர நிறுவனங்களும், பல நாட்டு ‘உயர் குடி’ மக்களின் அதிகாரமும் சேர்ந்த நடத்தும் வசதியான ஒரு காட்சி மறைப்பு முயற்சியே ஆகும். இருந்தும் மேற்கின் பத்திரிகைகளுக்கே கூடச் சில நேரம் மனச்சாட்சி வந்துறுத்தும் போலும். அல்லது அவர்களுக்கு வளர்ந்து வரும் நாடுகளைத் தாழ்த்திக் காட்ட ஒரு வாய்ப்பு கிட்டுவதும் இப்படி ஓர் திரையைக் கிழித்து உண்மையை அம்பலப்படுத்தும் முயற்சிகளை அரங்கேற்ற வைக்கிறதோ என்னவோ.

பிரிட்டிஷ் பத்திரிகையான த கார்டியனில் இத்தகைய அம்பலப்படுத்தல்கள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இவை அனேகமாக இந்திய ஊடகங்களில் வெளியாவதே இல்லை, ஏனெனில் இந்திய ஊடகங்களுக்கு மேற்கின் அற்புதங்கள்தான் செய்தி, பெரும் ஊழல்கள் செய்தி அல்ல. மேற்குக்கோ இந்தியாவின் அவலங்கள்தான் செய்தி, சாதனைகள் அல்ல.

நைஜீரியா உலகெங்கும் பெரும் கள்ளத்தனம் நிறைந்த நாடாகப் பெயர் பெற்றிருக்கிறது. ஒரு சில ஆயிரம் ஊடக வலைஞர்கள் தொடர்ந்து வலைக் கடலில் மீன் பிடிக்கிறார்கள், அதில் நிறைய பேர் தம் உடைமைகளையும், நிதிகளையும் இழந்து அவல நிலைக்கு ஆளாகிறார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். பொய், பித்தலாட்டம், எத்து வேலைகள் ஆகியவற்றில் நைஜீரிய வலைஞர்கள் புகழ் பெற்று விட்டார்கள். இவர்களை ஒத்தவர்கள் ரஷ்ய, சீன வலைஞர்கள் என்றாலும் அவர்களின் தாக்குகள் நிறுவனங்கள்/ அமைப்புகளையே அதிகம் பாதிப்பவை. இந்த நைஜீரியாவின் அரசியலாளர்களும் இந்தியாவில் பெரும் ஊழல்களுக்குப் பெயர் வாங்கி விட்ட திராவிட/ காங்கிரஸ்/ ஜாதிக் கட்சித் தலைவர்களின் எத்து வேலைகளுக்குச் சளைக்காத திறன் கொண்ட கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுபவர்களே.

இந்திய அரசியலாளர்களின் பெரும் ஊழல்கள் எப்படி இந்தியர்களைத் தொடர்ந்து வறுமையில் ஆழ்த்தி இருக்கின்றனவோ, அதே போலவே ஆஃப்ரிக்கக் கண்டத்தின் ஏராளமான அரசியலாளர்களால் அம்மக்கள் தொடர்ந்து வறுமையிலும் பிணிகளிலும் ஆழ்த்தப்படுவது இன்று நமக்குத் தெரிந்து போன உண்மை. நைஜீரியத் தலைவர்கள் இப்படிப் பட்ட ஊழல்களில் தலைமை வகிப்பவர்கள். ஏனெனில் நைஜீரியாவில் ஏராளமாக எண்ணெய் வளம் உண்டு. நிலத்தடி எண்ணெயை உடனே உறிஞ்சி பன்னாட்டுச் சந்தையில் வாணிகம் செய்வதில் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்க/ பிரிட்டிஷ் நிறுவனங்களால் இந்த ஊழல் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது.

இங்கு கொடுக்கப்படும் செய்தியில் பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான ஷெல் சுமார் 800 மிலியன் டாலர்களை நைஜீரியாவின் முன்னாள் அதிபர் ஒருவருக்கும், அந்நாட்டின் ஹவாலா முறையில் நிதியைக் கடத்தும் ஒரு நபருக்கும் கொடுத்திருக்கிறது, இதை லண்டனின் பெரும் வங்கிகளோ, யூரோப்பின் வங்கிகளோ, பன்னாட்டு வங்கிகளோ அறிந்திருந்தும் எந்த எச்சரிக்கையும் எழுப்பப்படவில்லை, மாறாக பிரிட்டிஷ் அரசின் ஊழல் தடுப்பு அமைப்பே இந்த நிதிப் பரிவர்த்தனையை அனுமதித்திருக்கிறது. இது ஏன் என்று கார்டியன் கேள்வி எழுப்புகிறது. இந்தக் கேள்வி எழ ஒரு இதாலிய அரசின் குற்ற வழக்குரைஞர் இந்த நடவடிக்கையால் லண்டன் மாநகர வங்கிகள் பெரும் நிதியைச் சலவை செய்ய உதவி இருக்கின்றன, அவை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஒரு முயற்சியைத் துவங்கி இருப்பதே காரணம்.

செய்தியை இங்கே படிக்கலாம்.

https://www.theguardian.com/business/2017/mar/05/the-oil-deal-the-disgraced-minister-and-800m-paid-via-a-uk-bank
[/stextbox]


[stextbox id=”info” caption=”மனிதர் யானைகளை வாழ விடுவார்களா?”]

நீலகிரி மலைப்பகுதியில் உள்ள கூடலூர் என்ற ஊரில் வளர்ந்த ஒரு எழுத்தாளர் கார்டியனில் யானைகளைப் பற்றிய ஒரு சுவாரசியமான கட்டுரையை எழுதி இருக்கிறார். அந்தப் பகுதியில் சுமார் பத்து லட்சம் மக்கள் வாழ்வதாகவும் 150 காட்டு யானைகளும் இருப்பதாகவும் குறிக்கும் அவர், வருடந்தோறும் பனிரெண்டு பேர்களாவது யானைகளால் கொல்லப்படுவதாகக் குறிக்கிறார்.

கட்டுரையில் தான் யானைகளின் வாழ்வு பற்றியும், அவை மனித சமூகங்களோடு எப்படி உறவு வைத்திருக்கின்றன என்பதைப் பற்றியும் ஆராய்வதாகச் சொல்லும் அவர், பெருகி வரும் விவசாயத்தால் காடுகள் அழிக்கப்பட்டுச் சுருங்குவதாலும், மனிதர்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் அவர்கள் இயற்கை வளம் நிறைந்த நிலப்பகுதிகளில் வசிப்பிடங்களைப் பெருக்கி வருவதாலும் யானைகளுக்கான வாழ்வாதாரப் பகுதிகள் சுருங்குவதை மோதல்களுக்குக் காரணமாகச் சுட்டுகிறார்.

கட்டுரை நிறைய தகவல்களைக் கொண்டு இந்தப் பிரச்சினையின் பல பரிமாணங்களை நமக்கு அளிக்கிறது. பொறுமையாகப் படித்தால் நாம் நிறைய கருத்து வளத்தை அள்ளுவோம். கட்டுரையை இங்கே காணலாம்.

https://www.theguardian.com/environment/2017/mar/06/can-elephants-and-humans-live-together
[/stextbox]


[stextbox id=”info” caption=”அரேபியாவின் “அற்புதங்கள்””]

சௌதி அரேபியா விசித்திரங்கள் நிறைந்த நாடுகளில் ஒன்று என்று ஒரு தோற்றம் இருக்கிறது. அதற்கு அதன் மத நம்பிக்கைகளின் வன்மை மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. அதன் எண்ணெய் வள அடிப்படையில் கட்டப்பட்ட பொருளாதாரம், உலகின் பன்னாட்டு வங்கிகளில் கொட்டப்பட்டுள்ள அதன் ஏராளமான சேமிப்பு, அதன் ஆளும் கூட்டத்தின் பல வகை ஆடம்பரங்கள், பெண்களுக்கு அந்நாட்டில் உள்ள தாழ் நிலை என்று அடுக்கிக் கொண்டு போகலாம்.

இங்கு கொடுக்கப்படும் செய்தி அந்நாட்டின் விசித்திரத் தன்மையை இன்னொரு தடவை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

சமீபத்தில் சௌதி அரேபியாவில் உள்ள படித்த பெண்களும், மிக்க கட்டுப்பாட்டுடன் வேலைகளுக்கு அனுமதிக்கப்பட்ட சில பெண்களும் தமக்கு மேலான உரிமைகளும், சுதந்திரங்களும் தேவை என்று குரல் கொடுக்கத் துவங்கி இருக்கின்றனர். வழக்கம்போல கசையடி, சிறை தண்டனை என்றெல்லாம் அவர்கள் அச்சுறுத்தப்படுவது இந்தக் கூக்குரலை நசுக்க முடியவில்லை என்று தெரிகிறது. பன்னாட்டரங்கிலும் இந்த அரசின் கடும் பார்வைக்கு எதிரான குரல் வலுத்து வருவதால், சௌதியின் ஆண்மைய அரசு சிறிது இளகுவது போல நடிக்க விரும்புகிறது போலும். அங்குதான் விசித்திரம் தலை தூக்குகிறது.

மேல்பார்வைக்குப் பெண்களின் உரிமைகளுக்கு சௌதி இடம் கொடுப்பது போலவும் தோன்ற வேண்டும், அதே நேரம் நிஜமாக ஏதும் நடந்து பெண்கள் சம உரிமை பெற்று விடவும் கூடாது, என்ன செய்யலாம் என்று ’ரூம் போட்டு’ யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது.

சௌதியின் காசிம் மாநிலத்தில் முதன் முறையாக ‘பெண்கள் குழுமம்’ என்று ஒன்று அரங்கேறியது. இது குறித்து செய்தி அளிக்கும் ஹஃபிங்டன் போஸ்ட் இணையப் பத்திரிகை இதை ‘சிறுமிகள் குழுமம்’ (Girls council) என்று வருணிக்கிறது. மூல மொழியான அரபியில் இந்தப் பெயருக்கு என்ன பொருள் என்பதைச் செய்தியைப் படிக்கும் வாசகர்கள் எழுதித் தெரிவிக்கலாம்.

சமீபத்தில் அரங்கேற்றப்பட்ட இந்த குழுமத்தின் கூட்டத்தில் 13 ஆண்கள் அரங்கில் மேடையில் வீற்றிருந்தனராம். ஒரு பெண் கூட மேடையில் இல்லை, அதாவது இந்த ஆலோசனைக் குழுவில் ஒரு பெண் கூட இல்லை என்பதான தோற்றத்தை இது உண்டாக்குகிறது.

பி.பி.ஸி தன் செய்திக் குறிப்பில் இந்தக் குழுமத்தில் பெண்கள் இருக்கிறார்கள், ஆனால் சௌதியின் கொள்கைகளின் படி பெண்கள் ஆண்களோடு மேடையில் தோற்றமளிக்கக் கூடாதென்பதால், அவர்கள் இன்னொரு அறையில் தனியே அமர்ந்து காணொளி மூலம் பங்கேற்றனர் என்று தெரிவிக்கிறதாம்.

அமெரிக்கா என்ன கிழித்தது என்று ஹஃபிங்டன் போஸ்ட் கேட்கிறது. ஏனெனில் இரும்புக்கை மாயாவியான டானல்ட் ட்ரம்பின் வலதுசாரி அரசு, சமீபத்தில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளைத் தடை செய்து ஒரு ஆணை பிறப்பிக்கையில் அவரைச் சூழ்ந்திருந்தவர் அனைவரும் ஆண்களே என்பதைக் காட்டுகிறது. இது ஹஃபிங்டன் போஸ்டின் பிரச்சாரம் என்று நாம் ஒதுக்க முடியும், ஆனால் ட்ரம்பிய அரசு பெண்ணெதிர்ப்பு நோக்கு கொண்டது என்பது ஏற்கனவே நன்கு நிறுவப்பட்டிருக்கிறது.

இனி, செய்தியை இங்கே பார்க்கலாம்.

http://www.huffingtonpost.com/entry/saudi-arabia-girls-council-men_us_58c82d74e4b09cd957672c0e?a2
[/stextbox]


[stextbox id=”info” caption=”டொராண்டோ இளைஞர்களுக்குச் சிக்கல்”]

மேலை நாடுகள் படிப்படியாகத் தம் வாழ்வுத்தரத்தை இழந்து வருகின்றன என்று சொல்ல இடம் உண்டு. மொத்த நாடுமே தரமிழந்ததா என்பது தெளிவில்லை. ஆனால் அவற்றுக்கும் இதர பல நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறைவதால் இப்படித் தெரிகிறதா, இது ஒரு காட்சிப் பிழைதானா என்றால் அது ஒரு புறம் உண்மை, பல ஆசிய நாடுகளும், சில லத்தின் அமெரிக்க நாடுகளும் முன்னேறி வருவதாகத் தெரிகிறதென்றாலும், மேலை வாழ்வுத் தரம் இறங்கி வருவது என்பது காட்சிப் பிழை அல்ல. ஜாண் ஏறினால் முழம் சறுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றன அவை. உழைக்கும் மக்களும், விவசாயிகளும் அனேகமாகத் தொடர்ந்து சறுக்கு நிலையில் இருக்கிறார்கள். வெள்ளைச் சட்டை உழைப்பாளிகளும் இறங்குமுகம்தான். மேல்நிலை ‘நிபுணர்கள்’, நிதி நிர்வாகிகள், ஒரு சிறு அளவு முதலீட்டாளர்கள், தகவல் துறைகளில் உள்ள ஒரு சிறு சதவீதத்தினர் ஆகியோரே மேலெழும் பொருளாதாரத் தரமுள்ள வாழ்வைப் பெற்றிருக்கின்றனர் என்று சொல்ல முடியும்.

கல்லூரிகளை விட்டு வெளியே வந்ததும் கிட்டும் வேலைகள் என்னும் ஏணிகளிலோ, படிக்கட்டுகளிலோ தொடர்ந்து ஏறிக் கொண்டு 30 வருட உழைப்புக்குப் பிறகு ஓய்வெடுத்து, முதுமையை நிதானமாக அனுபவிக்கும் ஒரு வாழ்வு என்பதை ’50, ‘60களில் நிச்சயத்தோடும், ’70-’80களில் ஓரளவு உறுதிப்பாட்டோடும் பெறக்கூடிய வாழ்வைப் பெற்றிருந்த மேலை மக்கள், இன்று அத்தகைய உறுதிப்பாடுகள் முதியோருக்கும் இல்லாது, இளைஞருக்கும் இல்லாத வாழ்வையே பெறுகின்றனர்.

இங்கு கொடுக்கப்படும் செய்திக்கான சுட்டி கனடா நாட்டின் பெரும் நகரான டொராண்டோவைப் பற்றியது. கனடா பல நாடுகளோடு ஒப்பிடுகையில் ஓரளவு இன்னும் ஆரோக்கியமான பொருளாதாரமாக இருப்பதான தோற்றம் தருவது. அதன் முக்கியக் காரணம் கனிம வளங்கள் என்பதால் இது நீடித்து இருக்கக் கூடிய வளமோ, ஆரோக்கியமோ இல்லை என்பதை நாம் இப்போது பேச வேண்டாம்.

இங்கு டொராண்டோ நகரின் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மட்டும் பார்ப்போம். அங்கு ஜனத்தொகை பெருகுவதாலும், ஓரளவு அந்த மாநகரம் வர்த்தக நகரமாக வளர்வதாலும் நகரின் பல பகுதிகளில் சாதாரணக் குடியிருப்புகள், நிலத்துக்காக, தம் விலைகள் கிடுகிடுவென உயர்வதைக் காண்கின்றன. சாதாரணமாக விலை வேகமாக ஏறினால், பொருட்கள் சந்தைக்கு வருவது அதிகரிக்கும். அவை அதிகம் கிட்டக் கிட்ட பொருளின் விலை ஏறுவது மட்டுப்பட்டு மறுபடி ஒரு சமன நிலை கிட்டும் என்பது பொருளாதாரத்தில் பாலபாடம். ஆனால் இது அனேகமாக நடப்பதே இல்லை என்பதை வேறொரு சமயம் பேசலாம். டொரொண்டோ நகரில் வீடுகள், நிலங்களின் விலை வேகமாக ஏறினாலும், வீடு/ நிலத்தின் சந்தை அளிப்பு ஏறவில்லை. மாறாகக் குறைகிறது. இது முரண்பாடு. ஆனால் ஏன் இப்படி ஆகிறது?

அதைத்தான் செய்தி விளக்குகிறது. இங்கே போய்ப் படித்துப் பாருங்கள்.

https://www.nytimes.com/2017/03/12/world/canada/torontos-housing-boom-refills-empty-nests-driving-prices-even-higher.html
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.