ஆடிப்பாவை

வெளிர் நீலத்தில் அந்தத் திரை மிளிர்ந்தது.அவ்வளவு பெரிய திரையே அவனை வியக்க வைத்தது.அவனருகில் யாரும் இல்லையென்றாலும், அதைத் தொட மனம் விரும்பினாலும் ஏதோ ஒன்று தடுத்தது. எங்கிருந்து கேட்கிறது என்றே தெரியாமல் ஒரு குரல் அந்தத் திரையை நோக்கி கைகளை நீட்டச் சொல்லியது.மனிதப் பெண் குரலைப் போல் ஒலித்த அது இனிமையின் சாற்றினை ஏந்தி மெதுவாக நீட்டச் சொல்லி வலியுறுத்தியது.

கைகளை அவன் நீட்டியவுடன் அந்தத் திரை மறைந்து போனது.பெண் சிரிக்கும் ஒலி கேட்டது.அவனின் மூளைக்குள்ளாக அசைவுகளை நிகழ்த்துங்கள் என ஆணை கேட்டது.பாபுவிலிருந்து என்னை யாராக மாறச் சொல்கிறார்கள்? ஆறு மாதங்களாக அவன் நினைவு போல் கனவும், கனவு போல் நினைவுமாக இருக்கிறான். அவனுள் படிந்துள்ள அவனது செயலற்ற உடல் மங்கிக் கொண்டே வருகிறது.அவனால் கைகளை, கால்களை முதுகை, இடுப்பை ஏன் முழு உடலையுமே இயக்க முடியும் என்று திரும்பத் திரும்ப டாக்டர் சொல்கிறார். ஆனால், அது அவன் உடலல்ல. அவன் தலையுடன் இணையப் போகும் வேறொரு உடல்.அவன் நினைவடுக்குகளில் செயல் கொண்ட ஒரு உடலாகத்தான்  சேமிக்கப்படுகிறான். இருந்தும்  தன்னிச்சை செயல்கள் எப்படித்தான் நடக்கும்?

‘மீண்டும் முயலுங்கள்,நீங்கள் ஒரு பெரிய முயற்சியின் முன்னோடி என்பதை மறவாதீர்கள்’ என்று ஒரு ஆணை பிறந்தது. அவன் சமீபத்திய நினைவுகளில் தேடி  கை அசைவுகளைத் துல்லியமாகக் கொண்டு வந்தான். அது ஒரு நம்பிக்கை முன்னகர்வு என அவன்  அறிவான். இயங்காத இயக்கம் என உள்ளே தோன்றியது. தோற்ற மயக்கத்தின் ஊடாக திரை அவனை நோக்கி வந்தது.அவன் பயந்து பின்னகர்ந்தது போல் உணர வைக்கப்பட்டான். உடனே பாராட்டும் விதமாக திரையில் ஒரு மலர்க்கொத்து தோன்றி  மறைந்தது.’இங்கே மின்னல் வேகத்தில் வரும் கேள்விகளுக்கு நீங்கள் உங்கள் வலது கை சுட்டும் விரலை சரி என்பதற்கும் இடது கை சுட்டு விரலை இல்லை என்பதற்கும் ஒரு முறை மேல் நோக்கிக் காட்டி உடனே தழைத்துவிட வேண்டும்.கவனத்தில் வையுங்கள் நீங்கள் வேறு உடலைப் பெறப் போகிறீர்கள் என்பதை.’ கழுத்திற்கு கீழ் இயங்காத அவன் தான் எந்த செயலையும் செய்யவில்லை என்றும், திரும்பத் திரும்ப அதை பயிற்றுவிப்பதே நோக்கம் என்றும்,(வர்சுவல் ரியாலிடி)மறைமுக உண்மை போலும் தோற்றத்தின்  மூலம் நிலை நிறுத்துகிறார்கள் என்றும் புரிந்து கொண்டான்.

அவன் நினைவிலிருந்து அவன் உடல் வெளியேற பார்த்தறியாத மற்றொன்று குடி புக முயன்றது.

விரிந்து பரந்த வெளி. அதன் மேல் கவியும் வானம்.மழை பெய்து கலந்த செம்மண் என நிலம்.கரும் கண்ணீர்க் கோடென கரடு தட்டிய பொறுக்குகள்.அதன் இடைவெளியில் முள்மரங்கள், செவ்வரக்கு நிறத்தில் பூத்த மலர்கள். அச்சுறுத்தும் தனிமை.பசிய நிலம் பசித்த நிலமெனத் தோன்றியது.

திடீரெனக் காட்சி மாறியது.பெரும் பாறைகளும், மலைகளுமான இடம்.தொடக்கம் தெரியாமல் பேரிரைச்சலுடன்  இறங்கும் அருவி.மலை இடுக்குகளில் தலை நீட்டும் நீலக் கொத்துப் பூக்கள்.உன்னிடம் வரட்டுமா எனக் கேட்பதைப் போல் அவசரமாக விரைந்திறங்கும் மேகக் கூட்டம்.பெயர்  தெரியாத பேருருவ மரங்கள். உவகையுடன் பேரச்சம் ததும்பும் காற்றின் ஓசை எங்கேயும்.

பழங்களும், பல வண்ண மலர்களும், தேன் சிட்டும்,நெல் வயல்களுமான குளிரோடை.மணமே வயிற்றையும், மனத்தையும் நிரப்பியது. அவன் சிறு பை தோள்களில் தொங்க டயரை உருட்டிக் கொண்டு பள்ளி சென்றான். சிலேட்டுப் பலகைக்காக சண்டைபோட்டான். பகலுணவு கொண்டு வராதவனுடன் தன் உணவைப் பகிர்ந்து கொண்டான்.ரெட்டை ஜடை கனகாவை எப்படியாவது சினேகிக்க முயன்றான்.பார்த்துக் கொண்டேயிருக்கையில் அவன் நட்பை, துரோகத்தை,செல்வத்தை,சொந்தங்களைப் பெற்றான், இழந்தான்.

கடக்க முடியாத பெரும் பாலை இது.திசைகள் புரியவில்லை.நீர் என ஏமாற்றும் கானல்.அவன் இளமையின் செருக்கிற்கு வந்த சவால். தன் மூளைத்திறனை எத்தனையோ முறை பிறர் பாராட்ட அவன் கேட்டிருக்கிறான்; அவனுக்கே அதில் பெருமிதமும் உண்டு.மூளை நன்றாகத்தான் செயல்படுகிறது; ஆனால் உடல் தசைகள்சிறிது சிறிதாக செயலிழந்து விட்டன. அவன் மூளை வேண்டும், அவன் உடல் வேண்டாம்.

அவன் அறியப் போகும் யாரோ ஒருவரின் உடல் அவனுடையது என ஆகும்.தன் முழங்காலில் உள்ள தழும்பும்,முதுகில் இருக்கும் மச்சமும் இனி இருக்கப் போவதில்லை. அவன் கொடையாளியின் உடலைப் புதிதாக அறிய வேண்டும். அப்பொழுது தன் மூளை திணறாதா? அது அவ்வளவு விரைவாகப் புது உடலை ஏற்றுக் கொள்ளுமா?இதில் இருவரில் யார் இல்லாமல் போகப் போகிறார்கள்? தலையால் வாழும் ஒருவன், உடலால் இறக்கப் போகிறான். தலையால் சாகப் போகும் ஒருவன் உடலால் வாழப் போகிறான்.இவன் தன் மூளையுடன் அவ்வுடலில் இணையும் போது இறந்தவன் உடலாகத்  தொடருவான் தானே? புறத் தோற்றம் மாறுகையில் அகம் அதை ஒட்டி வடிவமைக்கப்படுமா?அகம் அதை மறுதளித்தால் வாழ்வு வீணாகிவிடாதா?மனம் என்பதில் எண்ணங்கள் ஒழியாது வந்து கொண்டேயிருக்கின்றனவே.? அது உடலில் எந்தப் பகுதியில் இருக்கிறது? தலை மாற்று அறுவை சிகிச்சையில் மூளையுடன் மனமும் என்ன ஆகும்?அறிவு, சிந்தனை, எண்ணங்கள் எல்லாம் ஒரே இடத்தில் தான் எழுகின்றனவா? அனைத்துமே இரண்டாக  எழுந்தால் அதற்கு மாற்று உண்டா?

டாக்டர். செர்ஜோ கானவேரோ (Dr. Sergio Canavero) சிரித்துக் கொண்டே வந்து  எதிர் இருக்கையில் அமர்ந்ததும் திரை,தோற்ற  மயக்கங்கள் எல்லாம் மறைந்தன.அவனது காதுகளுக்கான முகத் தசை அசைவை செய்யச் சொல்லி அவர் பேசத் தொடங்கினார்.

’மிஸ்டர். பாபு, உங்கள் தசைகளின் இழப்பீடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இருபத்தி எட்டு வயதில் நீங்கள் இந்த அழகிய உலகில் பார்க்க, ரசிக்க, நுகர, ஏன் உங்கள் விருப்பப்படி இயங்க எத்தனை இருக்கிறது?ஏன் விலக்க வேண்டும்?நானோ ரோபோ பெண் குரலே உங்களை எப்படிமயக்கியது என்பதைத்தான் நான் பார்த்தேனே! இன்னும் ஒரு வருடம்தான்- உலகம் பிறந்தது உங்களுக்காக. ரைன் நதியில் வண்ணப் பெண்களுடன் ஆடலாம், பாடலாம். மிகப் பழமையான ஃப்ரென்ச் மதுவுடன் நீங்கள் வாழ்வைக் கொண்டாடலாம்.என்ன வேண்டும் உங்களுக்கு-எதுவும் கிடைக்கும்.மூளைத் திறனுடன் இணைந்த செயல்படும் உடல். ஏழு வருடங்களாக எது உங்களுக்குக் கிடைக்கவில்லையோ அது என் மூலம் தங்கத் தட்டில்  வருகிறது.’

அவன் பதில் சொல்லவில்லை.களைப்பு அதிகமாக இருந்தது.உடனடியாக சக்தி திரவம் அவனுள் செலுத்தப்பட்ட போது அறிவியலின் முன்னேற்றம் அவனுக்கு மிகவும் பிடித்தது.

‘என் நண்பர் ஒரு இனிய செய்தி சொன்னார். மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞனின் உடல் நாளை இங்கு வருகிறது.என்னுடன் நூறு மருத்துவப் பணியாளர்கள் இருப்பார்கள்.முப்பத்து ஆறு மணி நேர அறுவை சிகிச்சை.மிக மிகத் துல்லியமான, கூரான வைரக் கத்தி உங்களுக்கெனவே’.

அவன் வலக் கன்னத்தைக் கோணி தான் கணினி மூலம் பேச விரும்புவதைத் தெரிவித்தான். கிட்ட்த்தட்ட ஆறு மாதப் பயிற்சிகளுக்குப் பின்னரும் தன் சுயம் பீறிட்டு எழுவதை வியந்தான்.

“மூளை வெறும் உயிர்க் கருவி மட்டும் தானா?”

‘வேறு என்னவாக இருக்க முடியும்?’

“மனம், விழிப்புணர்வு, ஆழ்நிலை, ஆத்மா இவையெல்லாமே மூளையில் தான் இருக்கிறதா?’

‘புல் ஷிட். ஆத்மா என்றெல்லாம் கிடையாது.மனம் என்பது மூளை கொள்ளும் எண்ணங்கள்.விழித்திருக்கையில் நீர் உணர்வுடன் இருக்கிறீர். உறங்குகையில் உமது மூளை பல பகுதிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சிறு எச்சரிக்கையுடன் உம்மைக் காக்கிறது. அதை நீர் ஆழ்னிலை என்று சொல்கிறீர்.’

“இல்லை  என் சந்தேகமே உயிர்க்கருவியும், உளத் தொடர்பும் ஒரே இடத்தில் இருக்க முடியுமா?’

‘ஒரே இதயத்தின் அறைகளில் நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் செல்லவில்லையா?’

“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உணர்வுகள் எழும்பி உறவுகளாகப் பரிணமிக்கும் விந்தை ஒரு ப்ரெய்ன் வொர்க்.”

‘சென்ட் பர்சென்ட். உணர்வுகளை ஒழுங்கு செய்ய உறவுகள்.’

அவன் புரியாமல் அவரைப் பார்த்தான்.

‘தனி மனித ஒழுக்கம், சமுதாய நியதிகள், அழகுணர்ச்சி, கலைகள், ஆன்மீகம்,உல்லாசக் கொண்டாட்டங்கள், வருத்தங்கள்,பிரிவுகள்,மறதிகள் அனைத்துமே உணர்வாக ஒரு காலத்தில் அமைந்து, சமூகக் கட்டமைப்பில் உறவுகளாக வந்துள்ளன.இதற்குள் குருதி உறவு முதல் அனைத்தும் வரும்-சிலை-பார்வையாளன் என்பதைப் போல்.’

அவனுக்கு பதில் சொல்லவரவில்லை.

‘பாபு, துணிவுதான் வாழ்க்கை. இந்த ஆறு மாதங்களில் நீங்கள் எவ்வளவு ஒத்துழைத்தீர்கள்-எத்தனை பயிற்சி செய்தீர்கள்.இந்தக் கடைசி அடியை வைத்துவிட்டால் உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாமனிதன் என்று சரித்திரத்தில் இடம் பெறுவீர்கள்.ஏழு வருட முடங்கிய வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். சிறு அசைவிற்குக் கூட கணினியும் பிற மனிதர்களும் தேவைப்பட்டார்கள் அல்லவா?’

“ இதில் நான் இறந்து விட்டால்?”

‘பாபு, நான் சொல்வதைக் கேட்டு வருத்தப்படாதீர்கள்.எல்லாவற்றிற்கும் பிறரை எதிர் பார்த்து வாழ்வதை விட இந்த சிகிச்சை எவ்வளவோ மேல்.நான் சொல்கிறேன்-நீங்கள் நூறாண்டு வாழ்வீர்கள். வேறு கேள்விகள்?’

“நான் சம்மதிக்கிறேன், டாக்டர்.சொல்லலாம் என்றால் வழி முறைகளைச் சொல்லுங்கள்”

‘நிச்சயமாக. உங்கள் தலையும், உடலும் மிகக் குளிரூட்டப்பட்ட நிலையில் உறைய வைக்கப்படும்.முக்கியமான இரத்த நாளங்கள் கழுத்தை அறுத்த பிறகு மூடப்படும். நான் முன்னரே சொன்ன வைரக் கத்தி தண்டு வடத்தை கிட்டத்தட்ட பத்து மணி நேரத்தில் அனாயாசமாக எடுக்க உதவும்.ஒரு சிறப்புப் பசை தலை மற்றும் தண்டுவடத்தை கொடையாளியின் உடலோடு இணைக்கும். உறுப்புகள், தசைகள், இரத்த நாளங்கள் மீள் இணைப்பு செய்யப்பட்டு தோல் தைக்கப்படும்.மின் கடத்தும் உணர்வு சோதிக்கப்படும்,’ டாக்டர் மூச்சுவிட்டார்.

“பிறகு?”

‘மருத்துவ தன்வயமற்ற நிலையில் நீங்கள் நான்கு வாரங்கள் இருப்பீர்கள்- அந்த சமயத்தில் உங்கள் தண்டுவடம் தூண்டப்பட்டு நரம்புகளின் இணைப்பை செயல் படுத்தத் தொடங்கும்.’

“நானாகச் செயல்பட எத்தனை மாதங்களாகும்?”

‘மூன்று மாதங்கள்  உடலியக்கப் பயிற்சி, பின்னர் சிறு நடை, பின்னர் நீங்களாக எடுத்து உட்கொள்ளும் சிறு உணவு. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் நீங்கள் மராத்தான் ஓடுவீர்கள்’

பாபு டிசம்பர் மாதத்திற்கு காத்திருக்கத் தொடங்கினான்- அறுவை சிகைச்சை முடிந்து.

One Reply to “ஆடிப்பாவை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.