அலுவல் மொழி என்னும் பிதற்றல்

இந்தியா 130 கோடி மக்களும் 1500க்கும் மேற்பட்ட மொழிகளும் கொண்ட மாபெரும் தேசம். இந்த 1500 மொழிகளும் இந்தோ-ஆரியம், திராவிடம், ஆஸ்திரோ-ஆசியாடிக், சீனோ-திபெத்தியம், தாய்-கடாய், பெரு அந்தமானீய மொழிக் குடும்பங்களுக்கு உரியவை.

மொழிகள் தனித்து இயங்குபவை அல்ல. அவை கலாசாரத்தின் உறுப்புகள். உண்மையில், ஒவ்வொரு கலாசாரமும் அதன் மொழியில் தன்னை நேரடியாய் வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்தியாவுக்கு உரிய மொழிகள் 1500க்கும் மேற்பட்டவை என்று சொல்லும்போது அத்தனை கலாசாரங்கள் நமக்கு உரியவை என்று சொல்கிறோம்.

பல்வகைப்பட்ட மொழி மரபுகள் இத்தனை இந்தியாவில் உள்ள நிலையில் அரசுப்பணிகளையும் அதன் அதிகாரபூர்வ நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து தேசமெங்கும் மேற்கொள்வது கடினம். மிக எளிமையாய்ச் சொல்ல வேண்டுமென்றால், பொதுப்பண்புகளும் தொடர்புகளும் இல்லாமல் சாதாரண மனிதர்களும்கூட உரையாடிக் கொள்ள முடியாது. குழப்பமே நிலவும். அதிகாரபூர்வ அலுவல் மொழி ஒன்று வேண்டும் என்ற வாதத்தின் அடிப்படை இதுதான்.

ஆனால் இந்தியாவில் உள்ள மொழிகளில் பலவும் தொன்மையானவை, செறிவான பாரம்பரியம் கொண்டவை. எனவேதான், இவற்றில் குறிப்பிட்ட எந்த ஒரு மொழியையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள் தேசீய மொழியாய் அறிவிக்கவில்லை. என்றாலும், அரசு நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் முறையாய் பரிமாறிக்கொள்ளப்பட வழி வகுக்க வேண்டும் என்ற ஆவலில், இந்தி மொழியை அலுவல் மொழி அல்லது ராஜ்பாஷா என்று அறிவித்தனர்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 343 (1) இவ்வாறு குறிப்பிடுகிறது:

யூனியனின் அலுவல் மொழி தேவநாகரி எழுத்துகளைக் கொண்ட இந்தியாக இருக்க வேண்டும். யூனியனின் அலுவல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எண்களின் வடிவம் இந்திய எண்களின் சர்வதேச வடிவாக இருக்க வேண்டும்.

இது குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 351ஆம் ஷரத்து மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறது:

இந்தி மொழி பரவலாகப் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்க வேண்டும், இந்தியாவில் உள்ள பன்முக கலாசாரத்தின் அனைத்து கூறுகளும் வெளிப்படத்தக்க ஊடகமாக அது இயங்க வகை செய்வது யூனியனின் கடமையாக இருக்க வேண்டும். இந்துஸ்தானி மற்றும் எட்டாம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பிற இந்திய மொழிகளுக்குரிய தனித்தன்மைகள், வடிவங்கள், மொழியமைப்புகள் மற்றும் வெளிப்பாடுகளில் குறுக்கிடாமல் அவற்றை உள்வாங்கிக் கொண்டு இந்தி மொழி தன்னைச் செறிவுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்கு தேவையோ, அல்லது எங்கு விரும்பத்தக்கதோ அங்கு முதல்நிலையில் சமஸ்கிருதத்தில் இருந்தும், இரண்டாம் நிலையில் பிற மொழிகளிலிருந்தும் சொற்களைப் பெற்று இந்தி மொழி தன் சொற்தொகையை விரிவாக்கிக் கொள்ளலாம்.

இந்தி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது ஒரு சுவாரசியமான கேள்வி. அதற்கு முன், அலுவல் மொழி தன் தேவைகளுக்கேற்ப பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற என்று பரிந்துரைக்கும் நம் அரசியலமைப்புச் சட்டம், சம்ஸ்கிருத மொழிச் சொற்களுக்கு முன்னுரிமை அளிப்பது பிரச்சினைக்குரியதாய் இருக்கின்றது.

உலகறிந்த மொழிகளில் மகத்தானவற்றில் சமஸ்கிருதமும் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. பல இந்திய மொழிகளும் சம்ஸ்கிருதத்திலிருந்து சொற்களை எடுத்துக்கொண்டிருக்கின்றன, கொடுத்துமிருக்கின்றன. ஆனால் அலுவல் மொழி என்ற பின்னணியில் பார்க்கும்போது, சமஸ்கிருதச் சொற்களுக்கு முன்னுரிமை அளிப்பதென்றால் சம்ஸ்கிருதமயமாக்கப்படாத தமிழ் போன்ற மொழிகள் அலுவல் மொழிக் கொள்கையிலிருந்து துவக்கத்திலேயே விலக்கப்பட்டு விடுகின்றன.

முதல் பந்திலேயே ஹிட் விக்கெட்!

துவக்கத்திலேயே அலுவல் மொழி பிற மொழிகளை இரண்டாம் நிலைக்குத் தள்ளி விடுகிறது. இதன் விளைவுகள் நியாயமற்று இருப்பதற்கே சாத்தியங்கள் அதிகம்.

இத்தனை மொழிகள் இருக்க, இந்தி ஏன் அலுவல் மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற சுவாரசியமான கேள்வியை இன்னும் சற்று கவனமாகப் பார்க்கலாம்.

கடந்த 70 ஆண்டு கால வரலாற்றின் ஊடாக நாம் அறிந்த இந்தி மொழி ஒப்புநோக்க மிகப் புதிய மொழி. ‘அபப்ராம்ஸ’ என்று (திரிந்தது என்ற பொருளில்) அது ஏழாம் நூற்றாண்டிலும் பத்தாம் நூற்றாண்டிலும் சுட்டப்படுகிறது. ஆனால், முறையான இலக்கண அமைப்புடன் பரவலான மக்களால் பேசப்படும் முதல்நிலை மொழியாக அது முகலாய பேரரசின் இறுதிக் காலத்தில்தான் முக்கியத்துவம் பெற்றது. 18-19ஆம் நூற்றாண்டுகளில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றபோது அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது. 1881ஆம் ஆண்டுதான் பிகார் இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்ட முதல் மாநிலம் ஆயிற்று.

எனவே சமஸ்கிருதம், அல்லது தமிழ் அல்லது கன்னடம் போல் இந்தி ஒரு தொல்மொழியல்ல. மராத்தி அல்லது ஒடியா போல் கிருத்தவ சகாப்தத்தின் முதல் சில நூற்றாண்டுகளில் வளர்ந்த மொழியும் அல்ல. பழமையான, செறிவான பாரம்பர்யம் கொண்டது என்பதற்காக இந்தியாவில் உள்ள பிற தொல்மொழிகளை விடுத்து இந்தி அலுவல் மொழியாய் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

அடுத்து, பெரும்பான்மை மாநிலங்களின் அலுவல் மொழிகளைக் காணலாம். இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன. இவற்றில் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகராஷ்டிரா, கோவா, ஒடிஷா, மேற்கு வங்கம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, சிக்கிம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மிஜோரம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர்.ஆகிய இருபது மாநிலங்களின் அலுவல் மொழி இந்தியல்ல. ஏழில் ஐந்து யூனியன் பிரதேசங்களில் இந்தி அலுவல் மொழியல்ல (புதுவை, லக்சத்வீப், டாமன் அண்ட் டையூ, சண்டிகர், தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி).

எனவே, ஒரு தேசத்தின் 69% சதவிகித மாநிலங்களிலும் 70% யூனியன் பிரதேசங்களிலும் அலுவல் பணியில் பயன்படுத்தப்படாத மொழி அந்த தேசத்தின் அலுவல் மொழியாக இருக்க முடியாது. ஆக, தேசத்தின் பெரும்பான்மை மாநிலங்களின் அலுவல் மொழி இந்திதானா என்ற சோதனையில் அது தேறவில்லை.

அடுத்து மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தி அலுவல் மொழியாய் இருக்கத் தகுந்ததா என்பதைப் பார்க்கலாம். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 16.41 கோடி மக்கள் இந்தி அல்லது இந்தி போன்ற ஒரு மொழியை தாய் மொழி என்றும், 25.79 கோடி மக்கள் இந்தியை இரண்டாம் மொழி என்றும் கூறினர்.

அன்றைய மக்கள் தொகை 120 கோடி என்று வைத்துக் கொண்டாலும், பெரும்பான்மை மக்கள் இந்தி தவிர பிற மொழிகள் பேசுபவர்கள்தான். எனவே, மக்கள் தொகை அடிப்படையிலும் இந்தி அலுவல் மொழியாய் இருக்கத் தகுந்தது அல்ல.

அடுத்து நம் தேசத்தின் அலுவல் மொழியாகவோ அரசவை மொழியாகவோ விளங்கிய வரலாற்றினால் இந்தி தேர்ந்தெடுக்கப்பட முடியுமா என்று பார்க்கலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் இந்தியாவில் சிறிதும் பெரிதுமாய் பல அரசுகள் ஆட்சி செய்து வந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு காரணங்களுக்காக தம் அலுவல் மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டன. ஆனால் அவை எதுவும் இந்தியை அலுவல் மொழியாய் பயன்படுத்தவில்லை.

பரவலாய் பேசப்படாத சமஸ்கிருதம் போன்ற ஒரு இலக்கிய மொழியும்கூட பல அரசுகளின் அலுவல் மொழியாக இருந்திருக்கிறது. முகலாய பேரரசில் பாரசீகமே அலுவல் மொழியாகவும் அரசவை மொழியாகவும் இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியில், ஆங்கிலமே அலுவல் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. தமிழ், உருது, கன்னடம் போன்ற பண்டைய மொழிகள் மாபெரும் பேரரசுகளின் அலுவல் மொழியாக இருந்திருக்கிறது. எனவே, வரலாற்று அடிப்படையிலும் பரந்த பெருமபரபுக்குரிய பெரும்பரப்பு கொண்ட இந்திய மண்ணின் அலுவல் மொழியாய் இருக்கும் தகுதி இந்திக்கு கிடையாது.

மேற்கண்ட காரணங்களைப் பார்க்கும்போது, இந்தி போன்ற ஒரு புதிய மொழி இந்தியாவில் அலுவல் மொழியாய் இருக்க முடியாது என்பதை உணர முடியும். ஆனால்கூட, அடுத்தடுத்து பல அரசுகள் இந்தி மொழியை முன்னெப்போதும் இல்லாத அளவில் ஊக்குவித்து வருகின்றன. இத்தனைக்கும், அண்மையில் செய்திகளில் அடிபடும் தேசீய கீதமும்கூட இந்தியில் எழுதப்பட்டதல்ல – சாது வங்கம் அல்லது தத்சாம வங்கம் என்று அழைக்கப்படும் மொழியின் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்ட வடிவம்தான் அது.

வங்காளிகள், தமிழர்கள் மற்றும் பிற மொழியினர் இந்தி நியாயமற்ற முறையில் தம் மீது திணிக்கப்படுகிறது என்று போராடுவதில் ஓரளவு நியாயம் உள்ளது. தொன்மையான மொழிகளைப் பேசும் மண்ணுக்குரிய மக்கள் அது போல் உணர்வது இயல்பானதே.

இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி தொடர்வது பொருத்தமல்ல என்பது தெளிவு, . எனவே மத்திய அரசு ஆங்கில மொழியை அலுவல் மொழியாய்ப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். அலுவல் மொழியொன்றை உருவாக்குவதன் நோக்கம், தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் தெளிவும் தேசீய ஒருமைப்பாடும்தான் என்றால், அதற்குரிய தகுதி ஆங்கில மொழிக்கே உண்டு. இந்தியைவிட ஆங்கிலமே அலுவல் மொழியாய் பயன்படத் தகுந்தது. இன்றுள்ள டிஜிடல் மற்றும் உலகமயமாக்கப்பட்ட உலகில் சூழலில் இந்தியைவிட ஆங்கிலமே அலுவல் மொழியாய் இருப்பது பொருந்தும்.

நான் இந்தி பேசுவதை விரும்புகிறேன், இந்தி நூல்களை வாசிக்க விரும்புகிறேன் (அண்மையில் வாசித்த புத்தகம், ‘दूसरी परम्परा की खोज’). இவற்றைவிட முக்கியமாய், பாலிவுட் பாடல்களை விரும்புகிறேன்.

ஆனால் இந்தி அலுவல் மொழியாய் விளங்கும் தகுதி கொண்டதா என்பதை என் விருப்பு வெறுப்புகள் தீர்மானிக்க முடியாது. இந்தி அலுவல் மொழியாய் இருக்கக்கூடாது என்றுதான் நினைக்கிறேன், ஆங்கிலமே அதற்குரிய தகுதி கொண்டது.

இந்தி பிற மொழிகளைப் போல் தொன்மையான மொழியல்ல, அது இந்திய மக்களில் பெரும்பான்மையினர் பேசும் மொழியல்ல, பெரும்பான்மை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலுவல் மொழியல்ல. இவையெல்லாம் போக, இந்தி மிக இளம் மொழியும்கூட என்ற நிலையில் மகத்தான பிற இந்திய மொழிகளை ஏன் புறக்கணித்து இந்தியை ஊக்குவிக்க வேண்டும்? அதற்கான நியாயங்கள் இல்லை.

2 Replies to “அலுவல் மொழி என்னும் பிதற்றல்”

  1. Many state have 3-language policy. Many south Indians converse in Hindi outside their state (barring Tamilans) . This “Tamil chauvinism” stemmed out of “inferiority complex” against brahmins and North Indians made Tamil rabid paranoid ethnic chauvinists. This ledto civil war in Sri Lanka.And, we all know the result, Tamil chauvinists were obliterated from face off the earth in Sri Lanka, they were made refugess. But for Democratic setup of India, Tamils would have face the same in India ,too. From what I know, even the other south Indian states HATE Tamils. This is the legacy of Tamil chauvinism!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.