பார்வை

மதிய வெயிலில் வெம்மை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. மார்ச் முடிந்து ஏப்ரல் தொடங்கிவிட்டால் அக்னி நட்சத்திரம் வேறு படுத்தியெடுத்துவிடும். ‘கேப்’-பிலிருந்து இறக்கிவிடப்படும் இடத்திற்கும் சுஜாதாவின் அலுவலக ப்ளாக்கிற்கும் இடையேயுள்ள தூரம் மட்டுமே கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் இருக்கும். இந்த வெயிலில் அவ்வளவு தூரம் நடப்பதற்குள் அவளுக்கு முதுகு முழுவதும் வியர்த்து ஆடைகள் முதுகோடு ஒட்டிக் கொள்ளும். அத்தனை தூரம் நடந்து, மனித வரவுகளை கிரகித்துத் திறந்து மூடும் தானியங்கிக் கதவின் வழியே அவள் தன் ப்ளாக்குக்குள் நுழைந்தாள். ஏ.சி-யின் குளிரும், அவளுக்குப் பிடித்த ஸ்ட்ராபெர்ரி நறுமணமூட்டித் தெளிப்பும் அதுவரையிலான வெம்மைக்கு இதமாக இருந்தது.

சாவி கொடுக்கப்பட்ட ஒரு பொம்மைக்கு உண்டான லாவகத்துடன் அன்னிச்சையாகச் சென்று தனது தளத்தில் வைக்கப்பட்டிருந்த வாட்டர் டாக்டரின் குளிர்ந்த நீரை எடுத்துப் பருகினாள். தன் இருக்கை அமைந்திருக்கும் இரண்டாவது தளத்திற்கு லிப்டைத் தவிர்த்து படிகளில் ஏறிவந்து மூச்சொரிந்தாள். சுஜாதாவின் மனது முழுவதும் அம்முவே நிலைத்திருந்தாள்.

போனை எடுத்து அம்மாவுக்கு அழைத்தாள். மனதுக்குப் பிடித்த பாடலை கேட்பதற்கும் சரியான மனநிலை வேண்டும்தான். அன்று, அவளுக்கு அது வாய்க்கவில்லை. முழு ரிங்கும் அடித்து முடியும் தருவாயில்தான் அம்மா போனை எடுத்தாள்.

“சொல்லுமா…  ஆபிஸ் வந்துட்டியா? மதியம் சாப்பாட்டு கட்டிக்கிட்டயா?”

“ஆமாம்மா… ஆபிஸ்ல இருந்துதான் பேசுறேன். எல்லாம் எடுத்தாச்சு. குழந்தை இப்போ எப்படி இருக்கா? சுரம் குறைஞ்சுடுச்சா?”

“சுஜிமா… இதோட காலையில இருந்து பத்து முறைக்கும் மேலாக கேட்டுவிட்டாய். முந்திக்கு இப்போ ரொம்பவே பரவாயில்லை. நீ போட்டு அலட்டிக்காம இரு. நான் கூடவேதான இருக்கேன். உன்னையும் சேர்த்து மூணு பிள்ளைகளைப் பெத்து வளத்தவடி நான். முடிஞ்சமட்டும் ஒரு நாள் லீவு போட்டு வரப் பாரு”

அம்மாவைவிட அத்தனை கவனமாக அம்முவை வேறு யாரால் பார்த்துக் கொள்ள முடியும். இருந்தாலும் பெத்த மனது அடித்துக் கொள்கிறது என்ன செய்ய. அதுவும் குழந்தைக்கும் தனக்குமான இடைவெளி நானூறு கி.மீ என்பதால் இன்னும் கொஞ்சம் அதிகமாக அடித்துக்கொள்கிறது.

‘ஓடிசி’க்குள் நுழைந்து தனது கணிப்பொறியை ஆன் செய்தாள். அது உயிர்ப்பித்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் அந்த ஒரு நிமிடத்தில் அன்றைக்குச் செய்ய வேண்டிய, நேற்றைக்குச் செய்யாமல் விட்ட அத்தனை காரியங்களையும் மனதிற்குள் ஓடவிட்டாள். மலைப்பாக இருந்தது.  இரண்டு நாட்களாக நல்ல தூக்கம் இல்லை. கண்கள் எரிந்தன. உடலில் சோர்வு அழுத்தியது.

அவளது க்யூபிக்கிளில் யாரும் வந்திருக்கவில்லை. அம்மாவிடம் சொன்னது போல மதியத்திற்கு எதையும் கட்டிக் கொண்டு வரவில்லை. காலையில் அருண் சுட்டு வைத்துப் போயிருந்த நான்கு தோசைகளில் இரண்டை கடமைக்கு தின்றுவிட்டு வந்திருந்தாள். மனது உம் சொல்லாமல் வயிறு மட்டும் கேட்குமா என்ன?

அமிழ்தினி என்னும் அம்முவுக்கு வயது பதினோரு மாதங்கள்.  அருணுக்கும், சுஜாதாவுக்கும் திருமணமாகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது. அருண் ஒரு திரைப்பட இயக்குனராகும் கனவில் பெரிய இயக்குனர் ஒருவரிடம் உதவி இயக்குனராக இருக்கிறான். சுஜாதா நாட்டின் முதன்மை ஐ.டி. நிறுவனம் ஒன்றில் சீனியர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறாள்.

கிராஃபிக்ஸ் டிசைனராகப் பணியாற்றி வந்த அருணை, அதை உதறிவிட்டு அவனது கனவைத் தொடரச் செய்தவளே சுஜாதாதான். அவனது கனவும், உழைப்பும், அதிர்ஷ்டமும் சங்கமிக்கும் ஒரு நாளில் அவன் இந்தியாவையேத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு திரைப்படத்தை இயக்கியிருப்பான் என்பது அவளது திண்ணம்.

அவர்களது வீட்டில் சுஜாதாவின் சம்பளமே பிரதானம். அருணின் சம்பளம் மிகவும் சொற்பமே. அதுவும் நிலையானது கிடையாது. அடுத்த இரண்டு வருடங்களில் எப்படியும் ஒரு படத்தை இயக்கிவிடும் நம்பிக்கையில் இருக்கிறான்.

வரும் சம்பளத்தில் கொஞ்சம் அவளது அம்மாவிற்கும், சில நேரங்களில் கொஞ்சம் அருணின் தம்பிக்கும் அனுப்ப வேண்டியிருக்கும். எனவேதான் குழந்தையின் பொருட்டு கூட இந்த பகல்-இரவு வேலையை போனால் போகிறதென்று உதறிவிட்டு வெளியேறி விடமுடியவில்லை. அருண் ஒரு நல்ல நிலைக்கு வரும்வரை மட்டுமே சுஜாதா வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது இருவருக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்கு குழந்தை வேண்டாம் என்று உறுதி எடுத்திருந்தார்கள். உறுதி மட்டும்தான் எடுத்திருந்தார்கள். அவளது அலுவலகத்தில் குழந்தைப்பேறுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே விடுப்புடன் கூடிய சம்பளம். கூடுதலாக ஒரு மாதம் சம்பளமற்ற விடுமுறை எடுத்தபோதே அருணும், சுஜாதாவும் திணறிப் போய்விட்டார்கள். சுஜாதாவின் அம்மா குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக கூடவே வந்து தங்கியிருந்தாள். ஆனால் சுஜாதாவின் தம்பிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்ததால் தன்னால் சென்னையில் இருக்க இயலாது எனவும், வேண்டுமானால் குழந்தையை தன்னுடன் தஞ்சாவூருக்குக் கொண்டு சென்று அங்கு வைத்துப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினாள். சுஜாதாவுக்கும், அருணுக்கும் வேறு வழி இருக்க இல்லை. அதற்குச் சம்மதித்திருந்தார்கள். தாயில்லாத அருணையும், தன் சொந்தப் பிள்ளை போன்றே கவனித்துக் கொண்டவள் சுஜாதாவின் அம்மா. அதனால் குழந்தையைப் பிரிந்திருக்க வேண்டும் என்பதைத் தவிர அவர்களுக்கு பெரிய வருத்தம் ஏதுமில்லை.

குழந்தையை தஞ்சாவூரில் விட்டுவிட்டு வந்த பிறகு வாரம் ஒருமுறை போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் அவுட்டோர் சூட்டிங் காரணமாக அருணால் வரவியலாத போதும் கூட சுஜாதா தனியாகவாவது போய்ப் பார்த்து சனி ஞாயிறு இரண்டு நாட்கள் இருந்துவிட்டுத்தான் வருவாள். அந்த நாட்களிலும் தன் குழந்தையைவிட லேப்டாப்பைத்தான் அதிக நேரம் மடியில் கிடத்தியிருப்பாள்.

முந்தின நாள் சுஜாதா போன் செய்திருந்த போதுதான் அம்மா, குழந்தைக்கு தடுப்பூசி போட்டுவிட்டு வந்திருப்பதாகவும், அதனால் லேசாக சுரம் அடிப்பதாகவும் சொன்னாள். அம்மா அதை போனில் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே சுஜாதாவிற்கு கண்ணீர் கழுத்துக்கு  வந்துவிட்டது. பொதுவாக சுஜாதாவுக்கு மற்றவர்கள் முன் கண்ணீர் சிந்துவது அறவே பிடிக்காது. அதுவே பெண்களின் மிகப்பெரும் பலவீனம் என்று நினைப்பவள். அவள் வாய்விட்டு அழுது பார்த்தவர்கள் அரிது.

அப்போதிலிருந்து சுஜாதாவுக்கு எந்த வேலையுமே ஓடவில்லை. நான்கு மணி நேரத்தில் தீர்த்து முடித்திருக்க வேண்டிய ஒரு இஷ்யூவை இரண்டு நாட்களாக முடிக்காமல் வைத்திருந்தாள். நேற்று கிளம்பும்போதே அவளுடைய மேனஜர் ஸ்டேடஸ் கேட்டிருந்தார். இன்றைக்கு நேராக சீட்டுக்கே வந்துவிடுவார். மேலும் இன்று அவரின் பார்வை முழுவதும் சுஜாதாவின் முதுகில்தான் ஊர்ந்து கொண்டிருக்கும். இன்றைக்கும் முடிக்காமல் போனால், இல்லையில்லை முடிக்காவிட்டால் இன்று போகவே முடியாது.

அதைவிடக் கொடுமை இன்றைக்கு இதை முடித்து, மேலும் ஒரு இஷ்யூவை நிவர்த்தி செய்தால் மட்டுமே மறுநாளைக்கு விடுமுறை கேட்பதைப் பற்றி அவள் யோசிக்கவே முடியும். மறுநாளைக்குத் தேவையாயிருந்த விடுமுறைதான் அவளுக்கு அப்போது அசுர பலத்தை அளித்தது.

செய்தாக வேண்டிய வேலையை எந்திர வேகத்தில் செய்து முடித்தாள். முடித்த கையோடு மேனஜருக்கு மெயிலைத் தட்டிவிட்டு தேநீருக்குச் சென்றாள். பசி வயிறைப் பிசைய ஆரம்பித்திருந்தது. ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கிப் பிரித்தாள். அருண் சாப்பிட்டுவிட்டானா என்று அவனுக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள். பாவம் அவனுக்கு வாய்க்கு ருசியாக சமைத்துப்போட்டே நெடு நாட்களாகிவிட்டது. குழந்தைக்கு முன்பு, வார இறுதிகளிலாவது அதற்கு நேரம் வாய்த்தது. இப்போது அதுவுமில்லை. அவனுக்காக கடவுளிடம் இறைஞ்சினாள். சூடான தேநீர் அந்த நேரத்திற்கு அவளுக்கு வேண்டியதாக இருந்தது.

மானேஜரிடம் சென்று மறுநாளைக்கு விடுமுறை கேட்க வேண்டும். திட்டமிடப்படாத விடுமுறை. கிடைப்பது கடினம். ஆனால் வேறு வழியில்லை.

தேநீரை முடித்துவிட்டு, சீட்டிற்கு வந்தவுடன் மானேஜருக்குப் பிங் செய்து கேட்டாள். நேரில் வரச் சொன்னார். கண்ட்ரோல், அல்ட், டெலிட்டை அழுத்திவிட்டு அவரின் கேபினுக்குள் நுழைந்தாள்.

“வாங்க சுஜி.. ஒரு வழியாக ரிசால்வ் பண்ணி அனுப்பிட்டீங்க போல “

அவரின் பேச்சில் இருந்த எள்ளல் சுஜாதாவிற்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை. முடியவும் முடியாது. “ஆமா திவாகர்…“

“சொல்லுங்க சுஜி.. பிங்ல எதோ பேசணும் சொன்னீங்கல. ஏதாவது இஸ்யூவா?”

“இல்ல திவாகர்.. நாளைக்கு எனக்கு ஆஃப் வேணும். “

“என்ன சுஜி.. ஜோக் பண்றீங்களா?”

சுஜாதா இந்த முறை சற்று எரிச்சலாகி விட்டாள். “இருக்குற வேலையை விட்டுட்டு உங்க கேபினுக்கு வந்து ஜோக் பண்ற நிலைமையில நான் இல்லை திவாகர். ஐ யம் ப்ரெட்டி சீரியஸ்.”

“நானும் சீரியசாத்தான் கேக்குறேன். அரை நாள்ல முடிக்க வேண்டிய வேலைய இரண்டு நாள் எடுத்து முடிச்சீங்க. இன்னைக்கு முடிக்க வேண்டிய வேலை இதுவரைக்கும் பெண்டிங்லதான் இருக்கு. இதப்பத்தி இதுவரைக்கும் நான் ஏதும் சொன்னேனாங்க? ஏற்கனவே ஒருத்தர் கல்யாணம்ன்னு லீவ்ல போயிருக்கார். அவருக்கு பதிலா நான், அவர் வேலையைப் பாத்துக்கிட்டிருக்கேன்.  நீங்க நாளைக்கு லீவு சொல்றீங்க. என் பொஸிசன்ல இருந்து நீங்க கொஞ்சம் யோசிங்க மேடம்” கடைசியாக மேடம் என்ற வார்த்தையில் கொடுக்கப்பட்ட அழுத்தம் சுஜாதாவை உறுத்தியது.

குழந்தை, காய்ச்சல் என்று பச்சோபதாபம் ஏற்படுத்தி விடுப்பு கோருவதில் அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் எப்படியாவது காரியம் நடந்தாக வேண்டும். எனவே அவளே கொஞ்சம் தணிந்து பேசினாள். “புரியுது திவாகர். ஊருக்குப் போயாகணும். அதனால வேறு வழியில்லாமல்தான் நானும் உங்க முன்னாடி வந்து நிக்கிறேன். நான் வேணும்னா லேப்டாப் எடுத்துட்டுப் போறேன். வொர்க் ஃப்ரம் ஹோம் பண்றேன்.”

“அது எப்படிங்க.. போன தடவை நீங்க ஊருக்குப் போயிருந்தப்போ ஏன் அந்த கிளையண்ட் மெயிலுக்கு ரிப்பிளை பண்லன்னு கேட்டப்போ ஊர்ல கனக்ட்டிவிட்டி பிரச்சனை அது இதுன்னு சொன்னீங்க. நாளைக்கு மட்டும் எப்படி வொர்க் ஆகும்? அப்போ பொய் சொன்னீங்களா.. இல்ல வேலை பார்ப்பேன்னு இப்போ பொய் சொல்றீங்களா?”

இதுபோன்ற கேள்விகள் திவாகரிடமிருந்து எதிர்பார்த்ததுதான் என்ற போதும் அத்தனைக்கும் பதில் சொல்லும் மனநிலையில் அன்று அவள் இல்லை. வேறு ஏதாவதாக இருந்தால் இப்படியெல்லாம் நின்று கொண்டிருக்க மாட்டாள். ஆனால் குழந்தை என்று வரும் பொழுது கெளரவம் பார்த்துக் கொண்டிருக்க முடியாதல்லவா.

“திவாகர் யாருக்காகவும், எதுக்காகவும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை. லீவ் கூட வேண்டாம். வொர்க் ஃப்ரம் ஹோம் தான் கேக்குறேன்”

“சாரி சுஜி. நேத்திக்கு செந்தில் வந்து வொர்க் ஃப்ரம் ஹோம் கேட்டப்போ தராம உங்களுக்கு மட்டும் கொடுத்தா அது அவ்ளோ நல்லா இருக்காது. நீங்க புரிஞ்சுப்பீங்க. நாளைக்கு வேலைய முடிச்சுட்டீங்கன்னா சீக்கிரம் வேணும்னா கிளம்பிக்கோங்க.”

“ம்..”

“வேறு ஏதாவது சொல்லணுமா?”

“இல்ல… தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு சீட்டில் வந்து அமர்ந்தாள். தூங்காமல் வேலை பார்த்த இரவுகள் ஒவ்வொன்றாய் அவள் நினைவில் வந்து போனது. குழந்தையை தனியாக விட்டுவிட்டு இப்படி வேலைக்கு வருவதில் அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை. என்றாலும், கொடுத்த வேலையை கர்ம சிரத்தையுடன் தான் இதுவரை செய்து வந்திருக்கிறாள். அப்படிச் செய்து மட்டும் என்ன பயன்? மாதம் இறுதியில் ஆயிரம் ஆயிரமாய் கொட்டிக் கொடுத்துதான் என்ன பயன்? நில் என்றால் நிற்க வேண்டும். ஓடு என்றால் ஓட வேண்டும்.

அவளுக்கு தன் மீதே பரிதாபம் தோன்றியது. தன்னுடைய இந்த நிலைக்கு யார் மீதாவது குற்றம் செலுத்திவிட்டு சற்று ஆசுவாசப்படக் கூட முடியவில்லை. அப்போதைக்கு அவளுக்கு  அம்முவின் பிஞ்சு உடம்பின் ஸ்பரிசம் மட்டுமே தேவைப்பட்டது. அதற்கு மேலும் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற போதே மனது கனத்துப் போனது. என்னவானாலும் பரவாயில்லை. இப்போதே இந்த வேலையைத் தூக்கி எரிந்துவிட்டு போய்விடலாம் என்று மனது சொன்னாலும், அதற்குப்பின்னால் சந்திக்க வேண்டியிருக்கும் பிரச்சனைகளை எண்ணி அறிவு தடுத்தது.

பசியிலும், அழுத்தத்திலும் அவளுக்கு தலை வலித்தது. அன்றைக்கு முடிக்க வேண்டிய வேலையை முடிக்கும் பொழுது மணி இரவு 8.30 ஆகியிருந்தது. இரவு சாப்பாட்டிற்குப் போய் வந்து மேலும் ஒரு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். எப்படியானாலும் இரவு 10:30க்குத்தான் ‘கேப்’ வரும். அன்று அவளுக்கு அதுவரை காத்திருக்கப் பிடிக்கவில்லை. அருண் போன் செய்து அரை மணி நேரத்தில் தான் வீட்டிற்கு வந்துவிடுவதாய் கூறியிருந்தான்.

தலைவலியின் காரணமாக அன்று சற்று சீக்கிரம் வீட்டுக்குச் செல்வதாகவும், அன்றைக்குச் செய்ய வேண்டிய  வேலையை முடித்துவிட்டதாகவும், நாளைக்கு அலுவலகத்துக்குக் கண்டிப்பாக வந்துவிடுவதாகவும் ஒரு மெயிலை திவாகருக்கு அனுப்பிவிட்டு பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

ஷிப்ட் முடியும் நேரம் கிளம்பினால் மட்டுமே ‘கேப்’ கிடைக்கும். இடையில் கிளம்பினால் பஸ்ஸில்தான் போக வேண்டும். அதை நினைத்தால்தான் சுஜாதாவிற்கு குமட்டிக் கொண்டு வந்தது. சென்ற மாதம் இப்படித்தான் பக்கத்தில் வசிக்கும் தோழியின் திருமண வரவேற்புக்குச் செல்லும் பொருட்டு சற்று முன்னராகக் கிளம்பினாள். அங்கே பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்துகள் அனைத்தும் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தின் காரணமாக இரண்டு பேருந்துகளை விட்டுவிட்டாள். இப்படியே போனால் நேரத்திற்கு வரவேற்புக்குச் சென்று சேர முடியாது என்பதால் அடுத்து வந்த பேருந்தில் ஏறிவிட்டாள். முந்திய பேருந்துகளைப் போலவே இதுவும் இருந்தது. தலை முதல் பாதம் வரை ஒருவர் உடல் மற்றவரில் பதிந்திருந்தது. வியர்வை நெடியில் பஸ்ஸே புழுங்கித் தவித்தது. பின்னால் நிற்பவர்களைத் திரும்பிப் பார்க்கக்கூட முடியாத அளவுக்குக் கூட்டம். சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்திருக்காத ஒருவர் அப்படியொரு கூட்டத்தைக் கற்பனை செய்து கொள்வதே கொஞ்சம் கடினம்தான்.  தனது லேப்டாப் பேக்கையும், ஹேண்ட் பேக்கையும் முன்னால் இழுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

பின்னால் இருந்து ஒருவன் அவள் மேல் நெருக்கிக் கொண்டிருந்தான். தெரியாமல் நெருக்குவதற்கும் தெரிந்தே செய்வதற்கும் வேறுபாடு தெரியாதவள் இல்லை. இருந்தாலும் அவளால் ஆனதெல்லாம் துப்பட்டாவால் கழுத்தை மறைத்துக் கொள்வதும், அதிகபட்சமாய் ஒரு உச்சுக் கொட்டி பின்னால் திரும்பி முறைப்பதும் மட்டுமே. அவனோ எதையும் பொருட்படுத்துவதாய் இல்லை. விலகிச்சென்று முன்னால் நகரக்கூட முடியாத கூட்டம். அவள் இறங்க வேண்டிய நிறுத்தத்துக்கு முன்னரே இறங்கிவிட்டாள். இறங்கியதும் அவளது ஹேண்ட் பேக்கை ஒருமுறை சோதித்துப் பார்த்துக் கொண்டாள். அங்கே பூக்கட்டிக் கொண்டிருந்த அம்மாள் சுஜாதாவை அருகில் அழைத்து பின்னால் அதைச் சுட்டிக் காட்டினாள்.  சுஜாதாவிற்கு அருவருப்பில் வாந்தியே வந்துவிட்டது. அவரிடமே கொஞ்சம் நீர் வாங்கித் துடைத்துவிட்டு ஆட்டோ பிடித்து நேராக வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அருண் கேட்டால் மிகவும் வருத்தப்படுவான் என்பதால் அவனிடம் கூடச் சொல்லவில்லை.

ஆட்டோ பிடித்துப் போகலாம் என்றால் பணமும் பயமும் முன் நின்று தடுக்கிறது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இப்போதுதான் பேருந்துக்காக காத்து நிற்கிறாள். இந்த முறை வந்த முதல் பேருந்திலேயே அப்படி ஒன்றும் கூட்டம் இருக்கவில்லை. ஆனாலும் உட்கார இடம் கிடைக்கவில்லை.

“உள்ள நகர்ந்து வந்து டிக்கெட் எடுத்துக்கோமா.. இல்லன்னா யார்கிட்டயாவது கொடுத்துவிடு” என்றார் நடத்துனர்.   அவளுக்கு உள்ளே நுழைந்ததும்தான் நினைவுக்கு வந்தது.  அவளிடம் சில்லரை ஏதுமில்லை. பத்து ரூபாய் கூட இல்லை. ஐநூறு ரூபாய் நோட்டுகள் இரண்டு மட்டுமே இருந்தது. ஹேண்ட் பேக்கின், லேப்டாப் பேக்கின் அத்தனை திறப்புகளிலும் துழாவிப் பார்த்து விட்டாள். மொத்தமாக இரண்டு ரூபாய் மட்டுமே தேறியது.

“யேம்மா… படியில நின்னு என்னமா தேடிக்கிட்டு இருக்க.. முதல்ல உள்ள ஏறி வாம்மா” என்று அந்தப் பக்கத்தில் இருந்து நடத்துனர் கத்தினார். உட்கார்ந்திருந்த அனைவரும் ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்தனர்.

அதற்குள் போன் வந்தது. அம்மாதான் அழைத்திருந்தாள். குழந்தையை மறுபடியும் டாக்டரிடம் காட்டிவிட்டு வந்ததாகவும், காய்ச்சல் குறையவில்லை ஆதலால் ஊசி போட்டிருக்கிறார் என்றும் கூறினாள். சுஜாதாவும் குழந்தை சாப்பிட்டுவிட்டாளா என்ன கொடுத்தீர்கள் என்று விசாரித்துக் கொண்டிருந்தாள். அதற்குள் வந்து டிக்கெட் வாங்கும் படி நடத்துனர் கத்தினார்.

வீட்டுக்குச் சென்று அழைப்பதாகக் கூறி போனை கட் செய்தாள். முன்னால் நகர்ந்து நடத்துனருக்கு அருகில் நின்று கொஞ்சம் தயக்கத்துக்குப் பின் அவளிடமிருந்த ஐநூறு ரூபாயை எடுத்து நீட்டினாள்.

நடத்துனர் அவளைப் பார்த்து ஒருமுறை நக்கலாக நகைத்துவிட்டு, “நினைச்சேன்.. சில்லர ஏதாவது இருக்காப் பாருமா. எட்டு ரூபா டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய நீட்டினா.. நாங்க என்ன சில்லர கொடுக்குற மிசினா வச்சுருக்கோம்.” கொஞ்சம் அதிகப்படியாகத்தான் பேசினார் என்ற போதும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளும் மனநிலையில் அவள் இல்லை.

“இல்ல சார். நான் ஏற்கனவே பாத்துட்டேன்”

“ஏற்கனவே தெரிஞ்சுதுல… கொஞ்சம் சேஞ்ச் மாத்திட்டு வந்தா என்ன? செல்போன் எடுக்காம வெளியில வர்றீங்களா.. சேஞ்ச் எடுத்துக்குறது என்னாவாம் ”

“சார்.. அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். உங்கக்கிட்ட சேஞ்ச் இருந்தா குடுங்க.. இல்லைனா அடுத்த ஸ்டாப்ல இறக்கிவிடுங்க.. அதைவிட்டுத் தேவையில்லாம பேசாதீங்க.. “

“இந்த ஸ்டாப்ல ஏறுறவங்களே இப்படித்தான் ஸார்.. சில்லர கொடுக்கிறதில்ல.. ஆனா கேட்டா கோபம் மட்டும் பொத்துக்கிட்டு வரும்..எல்லாம் காசு இருக்கிறத் திமிரு சார். உள்ள வந்ததுமே முப்பதாயிரம் நாப்பதாயிரம் கையில திணிக்கிறாங்கள்ல அந்தத் திமிரு.. அவங்களச் சொல்லணும்..காலைல இருந்து கால் கடுக்க நின்னு,, நாயா கத்தி மாசக்கடைசியில பஞ்சப்பாட்டு பாடிக்கிட்டு இருக்கோம்..” அவளைப் பார்க்காமல் அருகில் அமர்ந்திருக்கும் முதியவரைப் பார்த்துப் பேசுவது போல் பேசினார். வெண்கலத் தொண்டை. அந்தப் பெரியவரும் மையமாய்ப் புன்னகைத்து வைத்தார்.

இது சுஜாதாவுக்கு கோபத்தைக் கிளறியது. “அதான் அடுத்த ஸ்டாப்ல இறங்கிக்கிறேன்னு சொல்றேன்ல அப்புறம் ஏன் தேவையில்லாம கத்துறீங்க”

“ஆமா… எல்லாம் என் தலையெழுத்து உங்கிட்ட வந்து கத்தணும்னு.. நானும் உன்னப்போல மடிப்பு கலையாம கிளம்பி, மேக்கப் கலையாம திரும்பி, குளுகுளுனு ஏசியில உட்காந்து பெஞ்சத் தேய்ச்சுட்டு, காதுல பாட்டுக்கேட்டு ஜாலியா வந்தா ஏன் இப்படிக் கத்தப் போறேன் பைத்தியம் மாதிரி” என்று நடத்துனர் அடுக்கடுக்காய் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுதே சுஜாதா வெடித்துப் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

இப்போதும் பேருந்தில் அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.

***

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.