உயிர் போய்டுமா? புதுசா மருந்தெல்லாம் குடுத்து டெஸ்ட் பண்ணுவாங்களாமே எலி கொரங்குக்கெல்லாம் பண்றாப்புல…
என்னன்னே புரியல. கையெழுத்துப் போட்டு தரச்சொல்றான். ஒரு ரூபா தருவாங்களாம். பணம் வேணாண்ணு சொல்லிட்டேன்.
அவனுக்கு எல்லாமே செய்யனுமே.எதுவும் செஞ்சுக்க முடியாதே.
ஆஸ்பிட்டல் தான அவுங்களுக்குத் தெரியாதா??
காற்றில் சலசலக்கும் தூங்கு மூஞ்சி மரக்காய்களின் சப்தம், மைனாக்களின் சிறகசைவுகள் , பாதி பழுத்த பப்பாளிப்பழத்தின் மஞ்சளைக் கொத்தும் காக்கையின் கரும் அலகு என பதினோரு மணிக்காலையின் சோம்பலைப் பார்த்துக் கொண்டே துணிகளுக்கு சோப்பு போட்டுக் கும்முகிறாள் மரியா.சோப்புக்குமிழ்கள் வண்ணங்களைச் சிதறடிக்கின்றன.
“என்னா சொன்னான்? முடிவு பண்ணிட்டீங்களா” கிழவி வந்து பலாமரத்தடியிலிருந்த கருங்கல்லில் அமர்ந்து கேட்கிறாள்.
இல்ல மத்தியானம் வருவாரு .,. என்னன்னே புரியல…
“ எவ வச்ச சாபமோ என் வூட்டுல வந்து பொறந்துச்சே. ஏசப்பா மரியா மகனே …… காயவைத்திருந்த. புளியம்பழங்களை எடுத்து கல்லில் வைத்து சுத்தியலால் தட்டிக்கொண்டே புலம்பத் தொடங்குகிறாள் கிழவி. வழக்கமாய் அவளை அதட்டும் மரியா எதுவும் சொல்லாமல் துணிகளைப் பிழிகிறாள்.
“ ம்ம்ம்ம்” …. உள்ளிருந்து சத்தம்.”இதோ வரேன்.”
சிவப்பு சிமெண்ட் படிகளைத் தாண்டி வீட்டிற்குள் நுழைகிறாள். வெளியிலிருந்து வந்ததில் சட்டென கண் இருள்கிறது.
“ திண்ணையில படுக்க வைக்கட்டுமா”
“ ம் ம் ம்…”
கழுத்துடன் தோளைச்சேர்த்து ஒரு கையிலும் முட்டிக்கால்களைச் சேர்த்து மறுகையிலுமாக. அவனைத் தூக்குகிறாள்.ஒரு கணம் மூச்சு இழுத்து குறுக்குத் தெரிக்கிறது. வெளியில் தூக்கிவந்து திண்ணையில் படுக்கவைத்து பக்கத்தில் தலையணையை அண்டக் கொடுக்கிறாள். அவளைப் பார்த்து சிரிக்கிறான். வெண்ணிற சர்க்கரைப் படிகங்கள் போன்ற பற்கள் ஒளிர கன்னங்கள் குழிகின்றன. நல்ல அதிர்ஷ்டந்தான் சலித்துக் கொள்கிறாள்.
“ பென்சரு வந்துடிச்சா… பதினோரு மணி ஆவிட்டிருக்கும் சொல்லிக் கொண்டே திண்ணைக்கு பக்கத்திலிருந்த இரட்டை அசோக மரங்களின் கீழே அமர்கிறாள் ரஞ்சனி. அவள் கைகளில் காய்ந்த தென்னங்கீற்றுகள்..
அவள் சிறு கத்தியால் கீற்றுகளைச் சீவி குச்சிகளை அடுக்குவதைப் பார்க்கிறான் பென்சரு என்று அவர்களால் அழைக்கப்படும் ஸ்பென்சர்.
“அவனுக்கு எல்லாம் கரெக்டான நேரத்துக்கு செய்யனும். எப்பிடித்தான் டைம் தெரியுதோ முறத்திலிருந்த முருங்கைக் கீரைகளை உருவியவாறு சொல்கிறாள் மரியா. இவர்கள் பேச்சுகளைக் கேட்டுச் சிரித்தவாறு படுத்திருக்கிறான் ஸ்பென்சர்..
அவன் மீதமர்ந்த ஈக்களை விரட்டியவாறு அவனைப் பார்க்கிறாள். குட்டையாக வெட்டப்பட்ட சிகை அடர்ந்து காதோரங்களில் இறங்குகிறது. சற்றே மெலிந்த கைகள். நீண்ட கால்களில் ஒன்று பாதங்களில் லேசாக வளைந்திருக்கிறது. பதினாறு வயதிற்கு அதிக வளர்த்தி. கம்பளிப்புழுக்கள் போல ரோமம் அடர்ந்த புருவங்கள். உலகின் நேசமனைத்தையும் வெளிப்படுத்தி விடக்கூடிய கருணை ததும்பும் விழிகள். விடைத்த கூர் நாசிகள். காண்போரை ஈர்க்கும் புன்னகை நிறைந்த வளைந்த உதடுகள் . மேலுதடுகளில் இப்பொழுதே கருமை படர்கிறது. “ அவன் அப்பனாட்டம் இப்பவே மீசை வருது பாத்தியா. பெரிய ஆம்பளதான்” கிழவி சமயங்களில் மெச்சிக் கொள்வாள்.
போனவாரம் மெட்ராஸ் ஆஸ்பத்திரியில் வேலைபார்க்கும் குணா வந்து ஆபிரகாமிடம் “ அண்ணா இப்பிடியே அவனை எவ்ளோ நாள் வச்சிருக்கப் போறீங்க..எப்சியைப் பாக்க வந்தவங்க சொன்னதைக் கேட்டீங்க தான, மத்த ரெண்டு கொழந்தைங்களையும் நெனச்சிப் பாருங்க..நான் சொல்றபடி கேளுங்க. எங்க ஆஸ்பத்திரிக்கு தந்திடுங்க. அங்க டீச் பண்ண தேவைப்படும். ரிசர்ச் மெடிசன்ஸ் குடுத்து ட்ரையல் பார்க்க யூஸ் பண்ணிக்குவாங்க..பணமும் வாங்கித் தரேன்”என்று கேட்டான்.
முடியவே முடியாதென்று மறுத்து விட்டான் ஆபிரகாம். வீட்டிற்கு வந்து மகனைப் பார்த்ததும் கண்கள் கலங்குகின்றன. மரியாவிடமும் கிழவியிடமும் இரண்டு நாட்கள் கழித்தே சொல்லுகிறான். தனித்தனியே மௌனமாய் அழுதுகொண்டிருக்கிறார்கள். மரியாவின் குமுறல்கள் பொங்கிப் பெருகுகின்றன. காலம் முழுக்க அவனைச் சுமந்து வந்தது வீணா..
ஆண்பிள்ளையாய் அவன் பிறந்த மகிழ்வு. அழகு கருப்பாய் தகப்பனைப் போன்ற அடர் சிகையும் உயரமும், அவளைப் போன்ற சுடரும் விழிகளும், குழிவிழும் கன்னங்களுமாய் அவனைக் கையில் ஏந்திய பூரிப்பு..
கிறிஸ்துமசுக்குத் துணி எடுக்கையில் போலீஸ் ட்ரெஸ் தான் வேண்டுமென அடம் பிடித்து தொப்பியும் கையில் லத்தியுமாய்
காலாட் படையில் நானிருக்க மாட்டேன்
நான் ஏசுவின் படைவீரன்
என்று அவன் பாடி நடக்கையில் உளம் பொங்க பார்த்திருந்த தாய்மை..
“” ஏசு அழைக்கிறாருன்னா போங்களேன். அதை ஏன் பாடறீங்க “ என்று அவன் அத்தையைக் கேட்டபோது ஆவி அணைத்து முத்தமிட்ட பெருமிதம்.
காய்ச்சலென்று படுத்த பிள்ளை.,பத்து நாள் தொடரவும் மருத்துவமனை ஊசி ட்ரீட்மென்ட் அலைச்சல்.
சென்னை, வேலூர் மருந்து, ஊசி, ஸ்கேன் .டெஸ்ட் …
என்ஸெபலைட்டிஸ், மெனின்ஜைட்டிஸ், மூளைக்காய்ச்சல் என்னென்னவோ கூறினார்கள். ஆபரேசன் ,பிசியோதெரப்பி
சிகிச்சைகள் கண்ணீர்கள், பொருத்தனைகள், பிரார்த்தனைகள்… எல்லா மனித முயற்சிகளிலும் கைவிடப்பட்டு படுக்கையில் பன்னிரண்டாண்டுகளாய் இருக்கிறான். உடலில் எந்த வேலையும் செய்ய இயலாது. மூளை அறிவு வளர்ச்சி எல்லாம் மிகச் சரியாக இருக்கிறது. தண்ணீர் வேண்டுமென்றாலும் கூட.! யாராவது தான் கொடுக்க. வேண்டும்..பேச்சும் இல்லை,..ஜெபங்கள் விண்ணப்பங்கள் விசுவாசங்கள் என்று இறைவனைக் கேட்கிறார்கள்.
பன்னிரண்டாண்டுகளாய் பெதஸ்தா குளத்தருகே அவன் படுக்கையில் படுத்திருக்கிறான். எந்த தேவதூதனும் இறங்கி வந்து தண்ணீரைக் கலக்கவில்லை.
வேளாங்கண்ணிக்கு நடந்து வரேண்ணு வேண்டிக்க. சித்தூர்ல நாட்டு வைத்தியம் பாக்குறாங்க சாரப்பாம்பு எண்ணெய உருவி விட்டா நடந்திடுவான், பெங்களூர்ல காந்த சிகிச்சை தராங்க, மேக்னட் வச்சி ரெண்டு காலும் நடக்காத ஒரு அம்மாவுக்கு சரியாயிடுச்சி. மருதூர்ல இருக்குற சாமியாரு… நாகூர் தர்காவுல சரியாயிடும்.,கேரளாவுல மண்ணுல நாள் பூரா ஒக்கார வச்சி எண்ணத்தடவி சரி பண்ணிடறாங்க. எழுப்புதல் கூட்டங்கள். சுகமளிக்கும் பிரார்த்தனைகள். அக்குபஞ்சர்ல ஊசி குத்துனா சரியாயிடும். சித்த மருத்துவம், ஆயுர்வேதம், சோசியங்கள், ஆருடங்கள், கணிகாரர்கள்,.,தேவ ஊழியர்கள். ,இயற்கை மருத்துவர்கள், பழம் மட்டுமே சாப்பிடக் குடுங்க. எத்தனை எத்தனை ஆலோசனைகள்… பரிகாரங்கள்.. வழிகாட்டுதல்கள்… எல்லா இடங்களுக்கும் அவனைச் சுமந்து அலைந்தார்கள்.எதற்கும் இளகாத கரும்பாறையல்லவா வாழ்வு.
ஆனாலும் “இன்னும் அவள் மனதில் நம்பிக்கை ஒளிந்திருக்கிறது..
ஆண்டவரே என்னக்காவது எம்புள்ள எழுந்து வந்து அம்மா எனக்கு பசிக்குதுன்னு சொல்லிடுவான் என்றே அவள் மனம் நம்புகிறது.
“மரியா இந்த மாறி பீத்துணியெல்லாம் இங்க கொழாயில அலசாத. நாங்கல்லாம் தண்ணி புடிக்க வேணாமா…
உம்மகன திண்ணயில படுக்க வைக்காத. காலங்காத்தால வேலைக்குப் போகயில பாத்துட்டு போனா என்னமோ மாதிரி இருக்கு.,இம்சைங்க…” பழைய வீட்டில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முகம் சுழிக்கவும் “நாம ஒரு வீடு கட்டனும் “என்று ஆபிரகாமிடம் சொன்னதுக்கு பாக்கலாம் .,.இப்பவே நெறய கடன் வாங்கியிருக்கேன்…என்றுவிட்டான்.அதன் பிறகு இது இரண்டாவது வீடு. மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.
சின்ன பையனாய் இருந்தபோது வேலைக்கு ஆள் கிடைத்தது. அவன் வளர வளர அதுவே பெருங்கவலையாய் ஆனது.” அக்கா எல்லாம் நீங்களே செஞ்சிட்டுப் போகணும். நான் பாத்துக்க காவலுக்கு மட்டுந்தான். தண்ணி மட்டுந்தான் குடுப்பேன். சோறெல்லாம் ஊட்ட முடியாது.”பத்மாவின் கண்டிஷன்கள். பணத்தை கணக்கு பார்க்காமல் கொடுத்தாலும் பாதி நாள் வேலைக்கு லீவ் போட வேண்டி இருந்தது.
“மரியா நீ அப்புடி போனதும் படுத்து தூங்கறா. பென்சரு தண்ணி வேணும்னு சத்தங்குடுத்தா கூடத் திட்டறா. ஒண்ணுக்கு போயிடுச்சின்னு கைய ஓங்கறா.. ,பக்கத்து வீட்டு ரஞ்சனி சொல்லவும் மனங்கசந்து அழத்தான் முடிந்தது. ஆபீசில் வீட்டு நினைவுடனே தான் இருக்க முடிந்தது.
வேலையிலிருந்து திரும்பிய ஒரு சாயங்காலம் படுக்கையெங்கும் மலமும் மூத்திரமுமாய் அவன் படுத்துக் கிடந்தான்.
“என்னால இதெல்லாம் செய்ய முடியாதுக்கா. மத்தியானத்துல இருந்து வெளியிலயே உக்காந்துட்டிருந்தேன்.”
நான்கு மணி நேரம் குழந்தை இப்படியே படுத்திருந்தான் என்ற போதுதான் வேலையை விட்டாள். “நம்ம புள்ளைக்கு நாம தான் அக்கறயா செய்ய முடியும். நீ வீட்ல. இருந்து பாத்துக்கோ. நான் எப்படியாவது சமாளிக்கறேன்” ஆபிரகாம் சொல்லிவிட்டான். ஆனால் பணத்தேவைகளைச் சமாளிக்க முடியவில்லை. மூத்தவள் காலேஜ் வந்துவிட்டாள். சின்னது இரண்டுக்கும் ஸ்கூல் பீஸ், வீட்டுச் செலவுகள் என்று கடன் ஏறியது.
அவனைச் சுமையாக அந்த வீடு எண்ணியதில்லை. எபனும்,பியூலாவும் ஸ்பென்சர் அண்ணன் என்று விடுமுறைகளில் அவனையேச் சுற்றி வருவார்கள்.அதுகள் சாப்பிடும் புளியம்பிஞ்சையும்,அழிஞ்சப் பழத்தையும் அவன் வாயில் கொண்டு தருவார்கள். குடும்ப ஜெபத்தில் ஏசப்பா எங்க அண்ணன் நல்லாயிடனும்னு முழங்காலில் வேண்டுவார்கள். எப்சியும் அப்படித்தான் அவனுக்கு பைபிள், சிறுவர் மலர் கதையெல்லாம் வாசித்துக் காட்டுவாள்.மரியா எங்காயாவது அவசரத்துக்குப் போகயில ஸ்பென்சர பாத்துக்கிட்டு சோறு ஊட்டி ,துணி மாத்தி எல்லாம் பண்ணுவா. குடும்பத்தில் எல்லாரும் அவனை நேசித்தார்கள். ஆனால் பிறரின் அனுதாபங்கள், ஏளனங்கள், எக்கலிப்புகள் மனதை வருத்தின. எப்படியாவது அற்புதம் நடந்து அவன் எழும்பி நடந்து விட மாட்டானா என்று அவர்களை ஏங்க வைத்தது.
“காஞ்சிவரத்துல சித்த வைத்யம் பாக்கறாங்க. நேர்ல கூட்டிட்டுப் போனா தான் மருந்து தருவாங்களாம்” கவிதாக்கா சொன்னார்கள் என்று அவனைக் கூட்டிச் சென்றார்கள். பஸ்ஸில் எப்படியோ இரண்டு பேரும் கஷ்டப்பட்டுத் தூக்கி ஏற்றி விட்டார்கள். சீட்டில் அவள் ஒரு பக்கம், ஆபிரகாம் ஒரு பக்கமாக அமர்ந்து அவனைப் பிடித்துக்கொண்டார்கள். சிரித்தவாறே ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே வந்தான். வளவனூர்ல இறங்கும்போது எல்லாரும் பார்ப்பது சங்கடமாயிருந்தது. அடுத்த பஸ் வர அரைமணி ஆகும்னு அவளை நிழற்குடையில் உட்காரவைத்து விட்டு ஆபிரகாம் போய்விட்டான். முழு பேண்ட் போட்டு ஸ்பென்சரை மடியில் அமரவைத்து உட்கார்ந்திருந்தவளை எல்லாரும் விநோதமாய் பார்த்தார்கள். கிழவி ஒருத்தி வந்து
“நடக்காதா யம்மா?” என்கிறாள். ஆமென்று தலையசைக்கிறாள்.
அங்கிருக்கும் டீக்கடை பாய் “டீ வேணுமாம்மா ?எவ்ளோ நேரம் மடியிலயே வச்சிருப்ப. என்ன வயசாகுது”என்று விசாரிக்கிறார்.
பதினைஞ்சு வயசு”
பொறப்புலயே இப்படியா? பாசி மணிகளைக் கையில் தொங்கவிட்டிருந்த குருவிக்காரி கேட்கிறாள்.
“இல்ல நல்லாத்தான் பொறந்தான். நாலு வயிசுல ஜொரம் வந்து இப்பிடி ஆயடுச்சி.
சரியாயிடும்மா.,வெசனப்படாத…ஆறுதல்கள், பரிதாபப் பார்வைகள், எந்தக் குடியக் கெடுத்தாளோ எனக் குற்றஞ்சாட்டும் பாவனைகள், ,ஐயோ பாவம் என்ற கருணைகள்… சீக்கிரம் பஸ் வராதா என்று வேண்டுகிறாள். சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் எல்லாரையும் பார்த்து கன்னங்கள் குழிய சிரிக்கிறான் ஸ்பென்சர்.
இப்படி காட்சிப் பொருளாய், விநோதமாய் நடு பஸ் ஸ்டாண்டில் தானும் தன் மகனும் அமர்ந்திருக்க வைத்த விதியை சபிக்கிறாள்.நீ தெய்வமா? கருணையுள்ளவனா? வீசும் காற்றில் சுழன்றெழும் புழுதியுடன் கண்களைச் சேர்த்து துடைத்துக் கொள்கிறாள்.
அந்நிகழ்வுக்குப் பின் அவனை வெளியில் தூக்கிச்செல்ல நிறையவே யோசிக்கிறாள். பன்னிரண்டாண்டுகளாய் இடுப்பில் சுமந்த காலம் முதல் மடியில் அமர்த்தி வைக்க முடிந்த வரை அவனைச் சுமந்து அவர்கள் செல்லாத இடங்களில்லை. கைகாலுக்கு பயிற்சி என்று பதினைந்து நாட்கள் சித்தூரில் தங்கிகூட சிகிச்சை செய்தாயிற்று. எங்கும் குணமாகவில்லை. சிறு பிள்ளையாய் இருந்தபோது இடுப்பில் சுமந்து எங்கும் செல்வாள்.வளர வளர அதுவே பெருஞ்சுமையாய் மாறுகிறது… விசாரணைகள் விளக்கங்கள் ஆலோசனைகள்…
டிவியில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை ஆவலுடன் மகன் பார்ப்பதைக் காண்கையில் அவள் உள்ளம் கசியும். எம்மகன் நடக்க. எவ்ளோ ஆசப்படறான். மாதாவே நீயும் ஒரு பொம்பள தான எம்புள்ள மேல இரங்கமாட்டியா.,
யாரோ சொன்னார்கள் என்று வேப்பிலை கட்டி வைத்தீஸ்வரிக்கு கூழ் ஊற்றினாள். அவள் சென்றறியா கோயில்களில் ஏகாம்பரேஸ்வரனையும், அண்ணாமலையாரையும், விக்னேஸ்வரனையும், சுப்ரமணியனையும், முப்பாத்தம்மனையும் கண்டு இறைஞ்சினாள். துலுக்கானத்தம்மனுக்கு நேர்ந்து கொண்டாள்.
விஷாரத்துல பள்ளிவாசலுக்கு அவனைத் தூக்கிச்சென்று ஓதினாள்., எந்த தெய்வமாவது இரங்காதா …
கற்சாடியிலுள்ள தண்ணீர் திராட்ச ரசமாவதும், நாக்கிலே காளி எழுதுவதும், செங்கடல் இரண்டாய் பிளப்பதும் , தூணைப் பிளந்து நரசிம்மம் எழுவதும் ,முடவன் எழுந்து நடப்பதும், திக்கற்றவளுக்கு நிறை சபையிலே ஆடை அளிப்பதும், பட்டுப்போன அத்திமரம் தளிர்ப்பதும், மரித்தவன் கல்லறையினின்று உயிர்த்தெழுவதும் …. …தேவதைக் கதைகளில் தான்.
நிஜம், யதார்த்தம் என்பது நிணமும் குருதியுமாய், குத்தும் ரணமாய் கண்முன்னே நிற்கிறது. ஸ்பென்சராய் படுக்கையில் படுத்திருக்கிறது. மரியாவின் விதியிலே வந்து எழுதியிருக்கிறது. அவள் சுமக்கும் சிலுவையும், மகனின் துயரங்களின் முட்கிரீடமும் அழுத்தும் பாதை எங்கே முடியும்.
உள்ளங்கைகளில் ஓங்கி அறையப்பட்ட பெரிய ஆணியில் தொங்கும் சரீரத்தின் பாரத்தையும் , விலாவில் குத்திய ஈட்டியின் கூர்மையையும் , பொங்கும் குருதியின் செந்நீரின் பாடுகளையும் கடவுளின் மைந்தன் அனுபவித்ததே மூன்று மணிநேரங்கள் தான். இவள் பன்னிரண்டாண்டுகளாய் துளித்துளியாய் பெருகும் ரணமாய், கண்ணீரின் பெருந்துளியாய் மகனைச் சுமந்து கற்களும் முரடுகளும் நிறைந்த கொல்கதா மலையின் மேட்டில் ஏறிக் கொண்டிருக்கிறாள். எந்த தேவதூதன் அவளுக்காய் சிலுவையில் மரிப்பான்?..
ஒரு பெண்ணாய், தாயாய், மனைவியாய் தன் உணர்வுகளை தேவைகளை வலிகளைப் பற்றியெல்லாம் அவள் என்றும் சிந்தித்ததேயில்லை.. மகனுக்கென பார்த்துப் பார்த்து அவள் செய்கையில் எல்லோரும் விந்தையாய் நோக்குகிறார்கள். கைவிரல்கள் சோர்ந்து கால்கள் பலமின்றித் தளர அவனை படுக்கைக்கும் திண்ணைக்குமாய் சுமக்கிறாள். இரவுகளில் ஒரு பக்கம் திரும்பினால் மாறிப் படுக்க அவனுக்கு முடியாது.அவள் அசந்து உறங்கி மாமங்கமாகிறது. நடு நடுவே எழும்பி அவனைத் திருப்பிப் போட்டு தலையணையைச் சரி செய்வாள். மின் விசிறியின் சப்தத்தில் உறங்கும் மகனின் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்தே அவள் இரவுகள் கரைகின்றன.
சோறு ஊட்டி, குளிக்க வைத்து, பீ மூத்திரம் எல்லாம் அவள் தான் அள்ள வேண்டும். அவள் சுழற்சியே அவன் தேவைகளை மையமாகக் கொண்டதே.
அவள் உடலும் மனமும் சோர்ந்து வேதனையில் என்றாவது அவனைத் திட்டும் போதும் அவன் சிரிக்கவே செய்கிறான். வாழ்வின் அழகியல் முரணாய் ஒரு ஞானியின் கண்களைப் போன்ற தெளிவான அவன் பார்வைகளே அவளுக்கு ஆறுதல்கள். அவனுக்குத் தெரியாதா அத்தாயின் மனது..
“உனக்கும் எனக்கும் என்ன விதிடா ஸ்பென்சர் ?” என்று அவனிடமே அவள் முறையிடுகையில், முடிந்த அளவு அசைக்க முடியா தன் கையைத் தூக்கி அவளைத் தொட்டுச் சிரிப்பான். அவனுக்கு உடலியக்கம் மட்டுந்தான் முடியாதது. மனமும் மூளையும் நன்றாகவே இருந்தன.தன் தாயின் வேதனைகளை உணர்ந்தே அவளுக்குத் தோழனாய் தகப்பனாய் தெய்வமாய் மூத்த சகோதரனாய் தமையனாய் தன் பார்வையிலும் சிரிப்பிலும் அவளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறான்.அவர்கள் இருவருக்குமான புரிதல்கள் உலகில் எவரும் அறியாதது. கணவனுடனான சண்டைகளை , மற்ற பிள்ளைகள் பற்றிய கனவுகளை, உறவுகளின் விவகாரங்களை அவன் தலைமாட்டில் அமர்ந்து முணுமணுவென சொல்லிக் கொண்டிருப்பாள்.அவளுக்கு புலம்புவதற்கும் புன்னகைப்பதற்கும் அவன் தானே. தன் மௌனத்திலேயே அவளுக்கு எல்லா ஆறுதல்களையும் தந்து விடுவான்.
வீட்டின் பண்டிகைகளும் அவன் வசதிக்கே செய்வார்கள்.”மரியா கடன் வாங்கியாச்சும் ஸ்பென்சருக்கு கோட் வாங்கி போட்டுடுவா.. கிறிஸ்மஸ் ஸ்டாரும் குடிலும் உங்க வீட்ல. தான் நல்லாயிருக்கு…”அம்பிகா மாமி எப்பவும் சொல்லுவாள்.
படுக்கையில் இருந்தாலும் கிறிஸ்துமசும் விளக்குகளும் அவனை உற்சாகமூட்டும் என்றே அவர்கள் கொண்டாடுவார்கள்.பிள்ளைகள் ஓடி ஆடுவதையும், அவர்களின் கொண்டாட்டங்களையும் ஸ்பென்சர் உற்சாகச் சிரிப்பும் துள்ளலுமாய் ரசிப்பான்.
எல்லா வைத்தியங்களும் கைவிட்ட பின் அவன் இப்படியே இருக்கட்டும் என்று இருக்கிறார்கள்.
குளிர் அதிகமான நாட்களிலும்,அமாவாசை போன்ற நிறைந்த நாட்களிலும் சில வேளைகளில் ஃபிட்ஸ் வரும்.கைகளும் கால்களும் இழுத்து இழுத்து வாய் கோணி அவன் விநோத சப்தம் எழுப்புகையில் உளம் வேகும்.இழுப்பு நின்று அவன் சோர்ந்து கண் சொருகுகையில் அக்னியில் புரட்டப்படுவாள். சில நாட்கள் தொடர்ந்து பிட்ஸ் வந்து ,காம்போஸ் மாத்திரைக்கும் கட்டுப்படாமல் அவன் வதைபடுகையில் “ஆண்டவரே எம் பிள்ளையை ஏன் இப்படி இம்சிக்கற..அவன் இதுக்கு செத்துடலாமே “என்று ஆக்ரோஷமாவாள்.அவன் சரியாகி புன்னகைக்கையில் இப்படி நெனைச்சிட்டேனே என்று பதறுவாள்.
போன மாசம் எப்சிக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்த போது தான் தொடங்கியது.சேலத்திலிருந்து வந்திருந்தார்கள்.பையன் வேலை படிப்பு எல்லாம் நன்றாகவே இருந்தது.வந்தவர்கள் எப்சியைப் பார்த்துவிட்டு தனியாகக் கூப்பிட்டு “ஸாரிங்க பொண்ண எங்களுக்குப் பிடிச்சிருக்கு.ஆனா இந்த பையன் இப்பிடி படுக்கையில படுத்திருக்கறது எங்களுக்கு என்னமோ மாதிரி இருக்கு.மனசுக்கு ஏத்துக்கல.”என்று சென்று விட்டனர்.
கிழவி ஏசினாள்”பொண்ணக்கட்டினு போக வேண்டியது தான.அவன் படுத்துகினு இருந்தா இவுங்களுக்கென்னாவாம்?
குணா வந்து சென்றதிலிருந்தே மரியா குமுறிக் கொண்டிருக்கிறாள். என்ன பாவம் செய்தாளோ எனக் கேட்டவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவே முடியாதா. அம்மா எனக் கன்றுக்குட்டியாய் நோக்கும் என் மகனின் பார்வைகளுக்கு பலனே இல்லையா. இரக்கம், கருணை, மானுடம் பரிவு எதுவுமே தெய்வங்களுக்கு இல்லையா.
“ரொம்ப யோசிக்காதீங்க இன்னும் எவ்வளவு நாள் தான் உங்களால பார்க்க முடியும்? மரியா உனக்கு வயசானா யார் அவனுக்கு செய்யறது. நீங்க எந்த பாவமும் பண்ணல.கடவுள் காட்டின வழின்னு ஒத்துக்கோங்க” வயலட் அண்ணி வந்து சொன்னபோது மறுத்துப் பேச முடியவில்லை.
நீண்ட நேரம் யோசித்து விட்டு ஆபிரகாம், “ சரின்னு சொல்லிடலாமா?” என்ற போது தலையசைத்து விட்டாள்.
எப்படி அவனிடம் சொல்லிப் புரியவைப்பது என்று இருவருக்கும் யோசனையாய் இருந்தது. குணா, வயலட் என்று ஒவ்வொருவராய் வருவதையும் பேசுவதையும் ஸ்பென்சர் கவனித்துக் கொண்டேயிருந்தான்.
மரியாவிற்கு கலங்கியது.”இவனுக்கு எல்லாமே புரியுமே, என்ன செய்வேன் ஏசப்பா” என வேண்டுகிறாள்.
இரண்டு நாளில் ஆம்புலன்சில் வைத்து கூட்டிப் போகிறேன் என்று சொல்லிச்சென்றான் குணா.
“நேத்தே இந்தப்பையன் சரியா சாப்புடல. ஏழு மணி வரைக்கும் தூங்கறானே காப்பி கூட குடிக்காம. ஸ்பென்சர் எழுந்திரேண்டா…
அவள் எழுப்பிய குரலுக்கு அன்று “ம்ம்ம்ம்” என்று அவன் பதிலே அளிக்கவில்லை..
இனி எப்போதும்…