மானுடத்தை ஆராயும் கலைஞன்

அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகள் வடிவை ஒரு தோட்டம் என்று சொல்லலாம். விதை முளைவிட்டு, நிதானமாக வளர்ந்து, அதன் பலனை கண்ணால் பார்க்கும்போது வரும் குதூகலம், அதை அறுவடை செய்தபின் மறுநாள் தோட்டத்தைப் பார்க்கும்போது வரும் ஒரு துளி சோகம் போன்றவை அவரது கதைகள்.

தீவிர இலக்கியம் படிக்க ஆரம்பிக்கும்போது நமக்குத் தெரியவேண்டிய ஒன்று, இலக்கியவாதிகளின் கதைகளில் அவர்கள் சொல்லவந்தது வரிகளில் மறைந்திருக்கும். சில கதைகளை மீண்டும் படிக்க வேண்டியிருக்கும், அல்லது அசை போடவேண்டியிருக்கும். அவசர உலகில் நல்ல இலக்கியங்களுக்கு நேரம் ஒதுக்கத்தான் வேண்டும். அ. முத்துலிங்கத்தின் கதைகள் அந்தத் தகுதியைப் பெற்றவை.

மற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு முத்துலிஙகத்துக்குக் கிடைத்தது. அவரின் அலுவல் அவரை ஆசியா, முக்கியமாக ஆப்ரிக்க நாடுகளில் பல வருடங்கள் வசிக்க வைத்தது. 1995-க்குப் பிறகு அவரின் கதைகள் அவரின் பன்னாட்டு அனுபவங்களை களனாகக் கொண்டு, அவற்றின் கதாபாத்திரங்கள் வழியே மானுடத்தை ஆராய்கின்றன. நாட்டுக் கலாசாரம், பண்பாடு, பழக்கங்கள், நிலம், அதில் உலாவும் மனிதர்கள் வழியே எளிய இலங்கைத் தமிழில் கதைகள் விரிகின்றன. கதைகளில் உப்பாக இருப்பது இலங்கைத் தமிழ்.

நான் படித்தவற்றில் நான்கு கதைகள் வழியே முத்துலிங்கத்தின் இலக்கிய உலகைப் பார்க்க முயற்சி செய்கிறேன்.

 

வம்சவிருத்தி

கதை பாகிஸ்தான், வட மலைப்பகுதியில் அஸ்காரி, தன் மகன் அலியுடன், அவன் வாலிபனாவதற்கு மேற்கொள்ளும் பயணம். காண அரிதான மலை ஆட்டை வீழ்த்தினால் அலி சிறந்த வாலிபனாவான். கடினமான நடைப்பயணத்தினூடே அஸ்காரியின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. மனைவி நூர்ஜஹான் நான்கு பெண் பிள்ளைகளைப் பெற்றதனால், இரண்டாம் திருமணம் செய்து ஏழாவதாகப் பிறந்தவன் அலி. வீட்டின் ஒரே பிள்ளை. எனவே அவனின் வாலிபப் பருவ வேட்டை முக்கியமான ஒன்றாக அமைய வேண்டும். நீண்ட அலைச்சலுக்குப் பின் ஒரு மலை ஆடு தென்படுகிறது. அலி வாலிபனாகிறான்.

கதையின் அடிநாதமாக அலைவது ஒன்றைப் பெற இன்னொன்றை இழப்பது. அந்த மலை ஆட்டின் சாவு ஒரு செய்தியைப் போல சொல்லப்பட்டாலும் அதனால் வரும் இழப்பும் ஒரு செய்தி போலவே சொல்லப்படுகிறது. இதை கொஞ்சம் நீட்டித்தால் பாமியன் புத்தர் சிலைகள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டதன் பிண்ணனி வரை இந்தக் கதையைத் தொடர்புபடுத்தமுடியும்.

குதம்பேயின் தந்தம்

கதை ஐவரி கோஸ்ட் (Ivory Coast) நாட்டுக்குப் அண்டை நாட்டில் நடப்பதாக சொல்லப்படுகிறது. கதாநாயகர் அந்த நாட்டிற்கு அலுவல் வேலையாக தன் குடும்பத்துடன் வருகிறார். அவர் மேலதிகாரி வீட்டில் இரண்டு யானைத்தந்தங்கள் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கிறன. அதைப் பார்த்த கதாநாயகரின் மனைவிக்கும் தந்தம் வேண்டும் என்ற விருப்பம் வருகிறது.. கதாநாயகர் தன் அலுவலக ஊழியரிடம் அது பற்றித் தெரிவிக்க தந்தங்கள் தேடும் படலம் ஆரம்பிக்கிறது. இறுதியாக தந்தம் கிடைக்கும்போது, கதாபாத்திரங்கள் அடையும் உணர்வுகளோடு கதை முடிகிறது.

இதன் முடிவை நீக்கிவிட்டால் கதை ஒரு நல்ல நகைச்சுவையான உண்மை சம்பவம் என்று நம்பிவிடலாம். விருந்தில் நாயகரின் பெயரை சுருக்கி அழைப்பதால் அவர் மனைவி அடையும் விசனம், அப்படிக் கூப்பிடுபவரின் பெயரை ‘சுக்ரீவன்’ என்று மாற்றக்கூறும் யோசனை, விருந்தில் சந்தித்த பெண் சேலை அணிய அவள் வீட்டார் செய்யும் ஆட்சேபம், நாயகரின் அலுவல் ஊழியரின் அறிவுக் குறைவான செயல்பாடுகள் (இதுதான் கதையின் முடிவை நிர்ணயிக்கிறது) என்று கதை நெடுக புன்னகைக்க வைத்துக்கொண்டே செல்கிறார். நதியில் ஓடத்தில் செல்லும்போது, பெரிய அருவியாக மாறுவதை நாம் இறுதிக் கணத்தில் உணர்வதைப் போன்றது இந்தக் கதை.

 

ஃபீனிக்ஸ் பறவை

விஞ்ஞானப் புனைவு என்று இதை சொல்லலாம். ஒரு நல்ல விஞ்ஞானப் புனைவு, அதன் பிரும்மாண்டமான வளர்ச்சியைக் கதையில் காட்டும்போது, அதன் கூடவே மனித மனத்தின் பழமையான முரண்களையும் வெளிப்படுத்தும். இந்தக் கதையிலும் அதுவே நடக்கிறது. கதை நடக்கும் காலம் 2018-2022. இருபது வருடங்களாகப் பிரிந்திருந்த ஓரே மகனுடன் வாழ்வதற்கு அவன் தாய் ஸ்வீடன் வருகிறாள். நாட்டின் அறிவியல் வளர்ச்சி உறுத்தினாலும் வசதியாக இருக்கிறது. மருமகளும், பேரனும் அவளை அன்புடனும், மதிப்புடனும் நடத்துகிறார்கள். ஸ்வீடனில் சட்டப்படியான கருணை மரணம் என்ற நிகழ்வுக்குத் தயாராகும் தன் அண்டை வீட்டு மனிதரை சந்திக்கிறாள். இலங்கைப் பண்பாட்டில் ஊறிய அவளுக்கு இது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

இது தவிர மகனும், மருமகளும், பேரனை செவிலித்தாயார் வழியே பெற்றது, இன்னொரு குழந்தைக்கு அரசாங்க அனுமதி நிராகரிக்கப்பட்டதால் அடைந்த சோகமும் தாய்க்குத் தெரிகிறது. இந்த நிலையில் அரசாங்கம் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாமாகவே விரும்பி கருணை மரணம் அடைந்தால் அவர்களின் இடம் அக்குடும்பத்தின் வருங்காலப் பிறப்புகளுக்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கிறது. அந்தத் தாய்க்கு எழுபது வயது பிறந்தநாள் விருந்தில் தன் மகனின் கண்களைப் பார்க்கும் அவள், அவைகள். என்ன செய்தி சொல்கின்றன என்று குழம்புகிறாள்.

ஆழமான கதை என்று இதை சொல்லலாம். முரண்களே இல்லாமல் குடும்பத்தின் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கும்போது மனிதனின் சுயநலம் எப்போது வெளிப்படும் என்பதைக் கணிக்கமுடியாத வண்ணம் (ஆனால் அது சுயநலம்தானா என்று முடிவு செய்வதையும் படிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார்) அமைக்கப்பட்ட கதை இது. தமிழின் மிகச்சிறந்த கதைகளில் அவசியம் சேர்க்கப்படவேண்டிய ஒன்று.

 

விழுக்காடு

லோடா ஐ.நா. அதிகாரி. சியாரா லியோன் நாட்டில் பெண்களின் வாழ்க்கைத்தரத்தை (Human Development Index, HDI) உயர்த்துவதற்காக அமர்த்தப்பட்டவர். அவர் அந்த நாட்டில் அடையும் அனுபவங்கள்தான் கதை. ஒர் ஆப்ரிக்க நாட்டிற்கே உரிய தட்பவெப்பம், அந்த மக்களின் வாழ்க்கைச் சடங்குகளில் உள்ள விநோதங்கள்(அயலவருக்கு), அங்குள்ள உயிரினங்களால் அயலாருக்கு ஏற்படும் துன்பங்கள் போன்றவைகளையும் தாண்டி லோடா காதல் வயப்படுகிறார். அமீனாத்துவின் பிரமிக்க வைக்கும் அழகைவிட அவள் அவரிடம் காட்டும் அன்பும், விசுவாசமும் இருவரையும் தம்பதிகளாக்குகின்றன. ஆனால் அலுவலகத்தில் அவரால் எந்த நோக்கத்திற்கு அமர்த்தப்பட்டாரோ அது நடப்பதில்லை. பணிகாலம் முடிந்து கிளம்பும்போது, குறைந்தபட்சம் அமீனாத்துவின் வாழ்க்கையை உயர்த்தி ஐ.நா-வின் குறிக்கோளை நிறைவேற்றினோம் என்று நினைக்கிறார். ஆனால் ஐ.நா. HDI சதவீதம் வீழ்ச்சியடைந்தது என்கிறது. முழு விவரங்களுக்குக் கதையைப் படியுங்கள்.

தரமான நகைச்சுவைக்கு இந்தக் கதையைக் குறிப்பிடுவேன. கதை நெடுக லோடா படும் அவஸ்தைகளும், அமீனாத்துவின் குணங்களும், சியாரா லியோனின் வாழ்க்கைமுறைகளும் புன்னகைக்க வைத்துக்கொண்டே இருக்கின்றன.

கதைகளைப் படிக்கும்போது நமக்கு வரும் பிரமிப்பு, அந்த நிலத்தின் விவரணைகள். கூர்மையான அவதானிப்பு. முத்துலிங்கத்தின் ஆகச்சிறந்த நுட்பம் எதுவென்றால் அந்த விவரணைகளக் கதைகளில் சரியான இடங்களில் நுழைப்பதுதான். பதானியர்களின் நிலப்பகுதியும், அவர்களின் அதீத வன்முறைகளும் மறைமுகமாகத் தொடர்புபடுத்தப்படுகின்றன என்றால், ஸ்வீடனின் மென்மையான, உறுத்தாத வாழ்க்கைமுறையின் மறுபகுதி அழுக்கானது என்பதை சொல்லும் இடத்தில் பதானும், ஸ்வீடன் மகனும் உறவாகிவிடுகிறார்கள். ஆப்ரிக்காவில் யானைத்தந்தம் வாங்கும் ஆசை எதை விலையாக வாங்குகிறது என்ற கோரத்தைக் காட்டும்போது, அதன் மறு கோணத்தில் அந்த மக்களின் தூய்மையான அன்பையும் அமீனாத்துவின் வழியே வெளிப்படுத்துகிறார்.

அ. முத்துலிங்கத்தின் கதைகள் புனைவின் வழியே மானுடத்தை ஆராய முயற்சி செய்யும் பெரும் பயணம்.