மருத்துவம் – அறிவும் அதிகாரமும்

[பொறுப்புத்துறப்பு: மரபு வழி மற்றும் அல்லோபதி (ஆங்கில‌ மருத்துவம் என்ற சொல்லாடலில் எனக்கு நெருடல் இருக்கிறது. அது ஐரோப்பிய மருத்துவம்) வழி இரண்டின் மீதும் அடிப்படைப் புரிதலும் அதே சமயம் மருந்தாளும் முறைகளில் கேள்விகளும் உண்டு. ஒரு அறிவியல் ஆர்வலனாய் அதே சமயத்தில் மரபுக் கூறுகளில் நம்பிக்கை கொண்டவனாய், இரண்டு தரப்பிலிருந்து ஒரேயளவு விலகி எழுதுகிறேன்.]

2014 என்று நினைக்கிறேன். அடிவயிற்றில் ஏதோ ஒரு நோய்த்தொற்றில் தோல் சிவந்து தொட்டால் சுருக் சுருக் என்ற வலியுடன் கொப்பளம்‌ போல ஒன்று உருவானது‌. ஆங்கில மருத்துவத்தின் மீது அன்று அவ்வளவாக நம்பிக்கை இல்லாத காலம். அடையார் டெப்போ அருகில் இம்ப்காப்ஸ் இருக்கிறதல்லவா‌. அங்கு சித்தா, ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் இருப்பார்கள். நான் சித்த மருத்துவரிடம் போனேன். என்னவென்று பார்த்துவிட்டு எதற்கும் ஒரு இரத்தப் பரிசோதனை செய்து விடுங்கள் என்றார். எனக்கு அன்று கோபம் வந்தது. சித்த மருத்துவ அடிப்படைக் கோட்பாட்டில் இரத்தப் பரிசோதனை கிடையாது‌. நுண்ணுயிரிகளும் கிடையாது‌. வாத பித்த கபம் என்கிற முக்குற்றங்கள் தானே அடிப்படை. ஒரு சித்த மருத்துவர் எப்படி இரத்தப்பரிசோதனை செய்யச் சொல்லலாம்? அவர் என் நாடி கூட பிடித்துப் பார்க்கவில்லை. அன்றைய தேதிக்கு என் புரிதல் அது. முழுக்க மரபு வழி மருத்துவத்தை நம்பியவன் என்ற அடிப்படையில் எனக்குக் கோபம்‌ வந்தது. ஆனால் இன்று அவர் செய்தது சரிதானோ‌ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

அல்லோபதி என்பது ஐரோப்பிய நாடுகள் காலனியாதிக்கம் செய்த நாடுகளின் மரபு வழி மருத்துவக் கூறுகளில்‌, ஒத்து வருகிற விஷயங்களின் தொகுப்பு. அவர்களும் மருந்து, மூலிகை என்று இருந்தவர்கள்தான். ஆனால் ஒரு மூலிகையில் இருக்கும் ஏகப்பட்ட வேதிப்பொருட்களில் நோய் தீர்ப்பது எது என்பதை மட்டும் பிரித்து ஆராய்ந்தது. வூலர் (Wöhler) என்கிற விஞ்ஞானி கரிம வேதிப் பொருட்களை (organic compounds) சோதனைச் சாலையில் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கிறார். அதுவரை மருந்தின் வீரியப் பொருளை பச்சிலைகளில் இருந்து பிரித்து எடுத்துக் கொண்டிருந்த மருத்துவ உலகம், இப்போது கண்ணாடிக் குடுவையுடன் சோதனைச் சாலைக்குள் போனது. மருந்துகளைச் செயற்கையாகச் செய்ய ஆரம்பித்தார்கள். உடற்கூறியல் சார்ந்த புரிதல்கள் அதிகமாக அதிகமாக உடலையே ஒரு பெரிய சோதனைச் சாலையாகப் பார்க்க ஆரம்பித்தார்கள். உள்ளே நடைபெறும் வேதிவினைகளின் புரிதல் இந்த நோய்க்கு இந்த வடிவமுடைய மூலக்கூறே மருந்தாக முடியும் என்ற புரிதலுக்குக் கொண்டு வந்து விட்டது. மருந்துகள் தயாரித்தல் வணிகமயமானது.

இதன்பின்னர் ஃபார்மா எனப்படும் தொழில்துறைக்கென ஒரு லாபி இயங்கத்தொடங்கியது‌. அவர்களுக்கிடையேயான போட்டி, வணிக மோதல்கள் மருந்து உற்பத்தியை நோயாளிக்குச் சாதகமான நிலையில் இருந்து லாபம் பெறும் திசைக்கு மாற்றியது. மருந்து நிறுவனங்கள் சாம, தான, பேத, தண்டப் பிரயோகங்களை அரசின் மேலும், மருத்துவர்கள்‌ மேலும்‌ பிரயோகிக்கலானார்கள். ஆனால் ஒவ்வொரு துறையும், நிறுவனமும் தரவுகளைக் கைக்கொண்டிருந்தார்கள். எல்லாமே ஆய்வுக்கும், சோதனைக்கும் உட்படுத்தப்பட்டன. எந்தச் சவாலையும் தர்க்க மற்றும் தரவு ரீதியிலான பின்புலத்தோடு அணுகினார்கள். உலகெங்கும் இன்று கோடிக்கணக்கான பேர் மருத்துவத்துறையில் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள். நம்‌ சராசரி வாழ்நாளைக் கூட்டியதிலும், விபத்து மற்றும் தீவிர சிகிச்சையில் உயிரிழப்பை பெருமளவு குறைத்ததிலும் அல்லோபதிக்குப் பெரும்பங்கு இருக்கிறது. மயக்க மருந்துகள் அதன் கொடை.

ஆனால் சறுக்கல்கள் இல்லாமல் இல்லை. அறிவியல் பூர்வமான எல்லாமே சிக்கல்களைச் சந்திக்கும். ஒவ்வொரு கோட்பாட்டிற்கும் அடிவிழும், திருத்தங்களுக்குப் பின் மாற்று நிமிரும். எந்த ஆன்டிபயாட்டிக்குகளை பொக்கிஷம் என்று சொன்னார்களோ அதுவே அவர்களுக்கு எதிராகவும்‌ போயிருக்கிறது. நுண்ணுயிரிகள் தம்மைக் கொல்ல அனுப்பப்பட்ட இந்த வேதிப்பொருட்களால் பாதிப்படையாதவாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன. வீரியக் கிருமிகள் (superbugs) என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக்குகளை சமாளிக்கத் தெரிந்த நுண்ணுயிரிகள் பெருகிவிட்டன. வெகு சாதாரணமான தொற்றுக்குக் காரணமான ஸ்டாஃபிலொகாக்கஸ் ஓரியஸ் (Staphylococcus aureus) என்னும் பாக்டீரியா தன்மேல் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட வான்கோமைசின் (vamcomycin), மெத்திஸிலின் (methicillin) என்னும் இரு ஆன்டிபயாட்டிக்குகளைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டு மெதிஸிலின் எதிர்ப்பு சக்தி உள்ள ஸ்டாஃபிலொகாக்கஸ் ஓரியஸ், மற்றும் வான்கோமைஸின் எதிர்ப்பு சக்தி உள்ள ஸ்டாஃபிலொகாக்கஸ் ஓரியஸ்  [MRSA (Methicillin Resistant Staphylococcus aureus), VRSA (Vancomycin Resistant Staphylococcus aureus)] என்று புது விதமாய் வலம் வருகிறது.  இரண்டிற்கும் பிரதான ஜாகையே மருத்துவமனைகள் தான். இன்று மருத்துவ உலகம் கையைப் பிசைகிறது. சுதாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதைப்பற்றித் தனியே எழுதுகிறேன். மேலும் சமீபத்தில் இங்கு நம்மைத் தாக்கிய மர்மக் காய்ச்சலை என்னவென்றே கண்டுபிடிக்க முடியாமல் முழிபிதுங்கி, கடைசியில் நிலவேம்புக் குடிநீர் கைகொடுத்தது.

இவ்வளவும் அறிவியல்பூர்வமானது என்றால் மரபு வழி மருத்துவம் அனுபவப் பூர்வமானது. நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தலைமுறை தலைமுறையாய் கடத்தப்படுகிற விஷயம். அலோபதி அவ்வளவாய் பேசாத பொது ஆரோக்கியம் பேணலை, நோய்கள் தாக்கமல் இருக்கத் தேவையான வாழ்வியல் முறைகளை உள்ளடக்கியது மரபு வழி மருத்துவம். ஒரு கம்பளிப்பூச்சி பட்டால் வரும் அரிப்புக்கு ஹிஸ்டமின் வெளிப்படுதல் தடிப்பு ஏற்படக் காரணம் என்று அல்லோபதி ஹிஸ்டமின் தடுப்பு மருத்துகளை (antihistamine) எடுக்கையில் அது சட்டென்று மணலைச் லேசாகச் சூடாக்கி பூச்சி பட்ட இடத்தில் போட்டு அந்த முடியை கருகச் செய்துவிடுகிறது. தன்போக்கில் தடிப்பும் குறைந்துவிடுகிறது. அந்த மணலில் நாம் அல்லோபதி தேடுகிற active component என்று குடுவையில் போட்டு அலசினால் எதுவும் கிடைக்காது. இந்த அறிவுக் கடத்துதல் நம் சொத்து. மூதாதையர் அறிவு (indigenous knowledge). ஆம் சில மூடப் பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. ஆனால் அறிவியலும் சாஸ்வதம் இல்லை‌. மாறக்கூடியதுதான் அறிவியல். மரபு வழி மருத்துவம் போகிற போக்கில் விடை சொல்கிறது. எளிமை அதன் பலம். பத்தியங்கள் இருந்தாலும் சிலசமயம் சுவையான வக்கணைச் சமையலிலும் நோய்தீர்க்கும். ஜூரத்தின் கசந்த வாய்க்கு சுர்ரென்று மிளகு ஜீரக ரசம் சாப்பிடச் சொல்லும். இதுவும் ஆராய்ச்சிதான், தரவுதான். ஆனால் கவனித்தலின் அடிப்படையில் அமைந்தவை. விஞ்ஞானிகள் சேர்ந்து எலிகளை வைத்துச் செய்த சோதனை அல்ல. மேலை அறிவியல் எதிர்பார்க்கிற தர நிலைப்படுத்தல் (Standardisation) கிடையாது அவர்களிடம்.

இதுதான் இருதரப்பும். இப்போது சிக்கல் என்னவெனில் உரசல்கள் வருகையில், இருதரப்பிலுமே பெரும்பான்மையினர்‌ மட்டையடி அடிக்கிறார்கள். வெறும் கூச்சல்கள் நிறையக் கேட்கின்றன‌‌. சாடுதல்களும், வார்த்தை தடிப்படுதலும் சாதாரணமாகிறது. நிதர்சனம் என்னவெனில் நூறு சதம் துல்லிய மருத்துவ முறை என்பது உலகிலேயே கிடையாது‌. இவ்வளவு முன்னேறிடினும் எபோலா என்று ஒன்று வருகையில் உலக மருத்துவத்துறை ஸ்தம்பித்தது. அந்தக் கிருமியைப் பற்றி எதுவுமே தெரியாது. மருத்துவத்துறை ஆட்களை காவு கொடுத்துக் கற்றுக்கொள்ளும். இதற்கு மரபு வழி மருத்துவமும் விதிவிலக்கல்ல. அது தன் அனுபவம், சூழல் புரிதல், தன்னிடம் உள்ள இருப்பை வைத்து சமாளிக்கப் பார்க்கும். இது ஒருவகையான கூட்டு அறிவுச் சேர்க்கை (collective intelligence). இப்படித்தான் மருத்துவத் துறை வளர்கிறது.

சரி நம் பிரச்சனைக்கு வருவோம், இங்கு இரு துறைகளும் பரஸ்பரப் பகையுணர்வோடு இருக்கின்றன‌. சமூக வலைதளங்களில் காழ்ப்பு கக்கப்படுகிறது. வெகு சில உதாரணங்களை மட்டும் வைத்துக்கொண்டு அந்தத் துறை முழுதுமே புரட்டு என்கிற வாதங்கள் வருகின்றன. மனித மனத்திற்கு இருக்கும் ஏகப்பட்ட சார்பு நிலைகளில் ( bias) இதுவும் நேர்கிறது.

இன்றைய தேவை என்னவெனில் இரண்டு துறைகளும் ஒன்றிணைந்து மனிதர்களின் நலனுக்காக யோசிக்கவும் செயலாற்றவும் வேண்டும்‌. பார்க்கப்போனால் இருவரின் நோக்கமும் ஒன்றுதான். ஆரோக்கியமான வாழ்வைச் சாத்தியப்படுத்துதலே அந்த நோக்கம்.  உடல்வலிகள், அன்றாடச் சிக்கல்களுக்கு மரபு வழி மருத்துவம் பெரிய பொக்கிஷம். ஆனால் விபத்து, அவசர சிகிச்சைக்கு அல்லோபதிதான் எளிதான வழி. ஆனால் இரண்டு பக்கமும் தோற்றுப்போன உதாரணங்களை வைத்துக்கொண்டு மட்டையடி அடிக்கிறார்கள். எந்த மருத்துவ முறையும் முழுமையானதல்ல என்று என் வர்ம ஆசான் சொல்லிக் கொடுத்திருக்கிறார். நோய் என்பதே பலதரப்பட்ட கூறுகள் என்கிறபோது, செய்யப்படும் மருத்துவத்திலும் பல கூறுகள் இருக்க வேண்டும் அல்லவா? இரு தரப்பும் இறங்கி வரவேண்டும். உரையாடல்கள் நிகழ வேண்டும். இருதரப்பும் ஒருவரிடம்‌ இருந்து ஒருவர் கற்க வேண்டியது நிறையவே இருக்கிறது.

இந்த முரணியக்கம் தொடர்பான பதிவுகளும் செயல்பாடுகளும் அவ்வப்போது எழுந்து அடங்கும். அதை ஒரு தொலைக்காட்சி விவாதமோ, ஒரு நிகழ்வோ தொடக்கி வைக்கும். சமீபத்திய தடுப்பூசி முறையும் அப்படித்தான். உண்மையில் தடுப்பூசிகளின் அடிப்படை நம்‌மரபு வழி மருத்துவத்திலேயே இருக்கிறது. கி.பி 1600 ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட ஆயுர்வேதக் குறிப்புகளில் இதற்கான குறிப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.  சீனர்களின் பாரம்பரிய மருத்துவ முறையிலும் (TCM -Traditional Chinese Medicine) தடுப்பு மருந்துகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. எட்வர்ட் ஜென்னர், லூயி பாஸ்டர் இவர்கள் எல்லோரும் பெரும்பங்காற்றினார்கள். தொடர்ச்சியான ஆய்வுகள்‌ நடந்தன. உயிர் வேதியியல், உயிர் தொழில்நுட்பவியல், உயிர்த் தகவலியல் (bioinformatics), போன்ற துறைகளின் வளர்ச்சி தடுப்பூசி மருத்துவத்தை அதன் உச்சத்துக்கே கொண்டு சென்றது.நோயின் வகையைப் பொறுத்து வேவ்வேறு வகையான தடுப்பு மருந்துச் செய்முறைகள், வெவ்வேறு வகையான மருந்து செலுத்தும் முறைகள்(routes of administration) என வளர்ச்சி ஏற்பட்டது. வழமைபோல் காசும், உட்கட்டமைப்பும் இருந்ததால் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இதிலும் களத்தில் குதித்தன. நிதர்சனமான உண்மை என்னவெனில் தடுப்பு மருந்துகளின் மூலம் தட்டம்மை, கக்குவான் இருமல், டிப்தீரியா, அம்மையின் வகைகள் முக்கியமாக போலியோ, இவை அனைத்தையும் நாம் ஒழித்திருக்கிறோம்‌. என்‌ தலைமுறை ஆட்கள் அம்மை நோயெனில் பதறுவதில்லை‌. காரணம்‌ ஊர் முன்னே செவுளில் அறைவாங்கி அவமானப்பட்ட ரவுடிபோல் அந்த நோய்கள் ஆகிவிட்டன.

இந்த மரபு வழி மருத்துவர்கள் எழுப்பும் கேள்விகள்‌ என்னவென்று பார்க்கலாம்.

இந்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்‌ இதனை உற்பத்தி செய்வதை முதல் கேள்விக்குறி ஆக்குகிறார்கள். இதைச் சதி பற்றிய சந்தேகமாக (கான்ஸ்பிரஸி தியரியாக) நாம் ஒதுக்க முடியாது. ஆஸ்பர்டேம் (aspartame) என்னும் செயற்கை இனிப்புப் பொருளை சந்தைக்குக் கொண்டு வர இந்த மருந்து நிறுவனங்கள் ஆடிய கள்ளாட்டம் கேவலமானது. அப்போது இதனைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் அல்லோபதி மருத்துவர்களுக்கு உண்டு. தடுப்பு‌ மருந்துகளை போட்டுக் கொள்வதை மட்டுமே கட்டாயமாக்காமல், இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தடுப்பு மருந்துகளைப் பற்றியும் அதன் செயல்முறையைப் பற்றியும் திரையரங்குகளில்‌ படம் திரையிடப்படும்‌ முன் ஒளிபரப்பலாம். அரசு இதனை முன்னெடுக்க வேண்டும். கட்டாயமாக்கும் ஆணைகள் மீறப்பட வாய்ப்பு அதிகம். ஆனால் புரிந்துவிட்டால் மக்கள் கெட்டியாகப் பிடித்துக்கொள்வார்கள்.

அடுத்ததாக தடுப்பு மருந்துகளால் பிள்ளைகள் இறந்து போயின என்கிறார்கள். இது மாதிரி பீதியைக் கிளப்ப நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தைகள் இறந்தது தடுப்பு மருந்துகளால் மட்டுமே என்று ஆதாரப்பூர்வமாக நிறுவ முடியுமா? கேட்டால் இவர்களே‌ மூடி மறைக்கிறார்கள் என்கிறார்கள். இவை எதுவுமே நிரூபிக்கப் படவில்லை. எல்லாமே தமிழ் கூறும்‌ நல்லுலகம் நன்கு அறிந்த ’நம்பகமான வட்டாரங்கள்’ (ரிலையபிள் சோர்ஸ்) சொன்ன கதை. இதனால் காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை பிரம்மாண்டமானது. தரவுகள் ரீதியாக இதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதன்மேல் நம்பிக்கையின்றி தடுப்பு மருந்துகள் போட்டுக்கொள்ளாமல் இருந்த ஆட்களையும் இந்த herd immunity என்னும் குழும நோயெதிர் திறன் காப்பாற்றி வந்திருக்கிறது. அந்தந்த நிகழ்வுகளுக்குக் காரணமான மருந்தை, அதைத் தயாரித்த நிறுவனங்களைக் கேள்வி கேட்பதற்கு உரிமை‌ உண்டு. ஒரேடியாக ஒப்புக்கொள்ளாமை சிறுபிள்ளைத்தனம். ஆனால் தவறுகள் நேரும்‌ பட்சத்தில் இழப்பீடு கொடுப்பது தொடர்பான வாரியங்கள் அமைப்பதையும், இழப்பீடு வழங்கப்போவது யார் போன்ற கேள்விகளை எழுப்புவதையும் முன்னெடுக்க வேண்டும்.

மூன்றாவது தடுப்பு மருந்துகளால் ஆட்டிஸம் பெருகுகிறது என்ற குற்றச்சாட்டு. ஆட்டிஸத்தின் காரணங்கள்‌ வேறு. இன்னொன்று ஆட்டிஸம்‌ அதிகமாகிறாற்போல் தெரியக் காரணம், அதன் அறிதல் முறை முன்னேறியிருக்கிறது. ஆட்டிஸம் கிட்டத்தட்ட பிறப்பில் இருந்தே தொடங்கும். அதனைக் கண்டடையும் புள்ளி எப்படியும்‌ ஏதேனும்‌ ஒரு தடுப்பு மருந்து போட்ட நிகழ்வோடு இயைந்து வருவதால், உடனே காக்கை, பனம்பழம் கோட்பாட்டின்படி ஆட்டிஸத்திற்கு தடுப்பூசி‌ காரணம் என்று சொல்லிவிட வேண்டியது. இதை முதன்முதலில் சொன்ன ஒரு அரைகுறை ஆராய்ச்சிக் கட்டுரையை நாயடி பேயடி‌ அடித்துத் தொங்க விட்டிருக்கிறார்கள். அதை இவர்கள் பார்ப்பதில்லை போலும். திரும்பவும் அறிமுறையில் சார்புடைமை (Cognitive bias).

மேற்சொன்ன கேள்விகளுக்கு பதில்‌ சொல்கையில், மரபு‌ மருத்துவர்கள் ஏகப்பட்ட ஊகங்களை முன்வைக்கிறார்கள். ஆக்கமின் கத்தி என அழைக்கப்படும் (Occam’s razor) கோட்பாடு குறைந்தபட்ச யூகங்களை உடைய கோட்பாடே ஏற்கப்படும் என்கிறது. ஆனால் இம்மாதிரி புனைவுகளை நம்பும் கூட்டம் உலகமெங்கும் உண்டு‌. நாம் ஒன்றும் விதிவிலக்கல்ல.

மரபு மருத்துவர்கள் அவர்களுடைய சந்தேகங்களை, தர்க்க ரீதியாக முன்வைக்க வேண்டும். மேலும் அவர்களின் மருத்துவத்தின் கூறுகளை, கோட்பாடுகளை ஆய்வு ரீதியாகப் பதிவு செய்ய வேண்டும் வேண்டும். நிரூபிப்பதில் இருக்கும் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தீர்க்க, அரசும் மருத்துவத் துறையும் உதவ வேண்டும். திடீர் மருத்துவர்களைக் கட்டுக்குள் வைக்க அதை முறைமைப்படுத்த வேண்டும். போலிகள் நிறையத் திரிகிறார்கள்.

அதே நேரம் அல்லோபதியில் குடும்ப‌டாக்டர் என்னும்‌ கோட்பாடு உடைந்துவிட்டது. பெரு மருத்துவமனைகளுக்குச் செல்லுதல் அந்தஸ்தாக மாறிவிட்டது. குடும்ப டாக்டருக்கும் உங்களுக்குமான புரிதல் வெறும் மருத்துவர் நோயாளி‌ என்பதற்கும் மேலே இருக்கும். அவர் உங்களுக்கு செலவை இழுத்துவிட மாட்டார். எது தேவையோ அதை மட்டுமே அறிவுறுத்துவார். அதற்கு இன்று வழியில்லை‌ என்னும்‌ நிலையில், தடுப்பு மருந்துகள் விஷயத்தில் அரசு தடுப்பு மருந்துகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. உங்கள்‌ மருத்துவர் மேலதிகமாகத் தடுப்பு மருந்துகள் எதையெனும் சொன்னால் கேள்வி கேளுங்கள். குழந்தைகளுக்குப் போடும் தடுப்பு மருந்தை அவர் சீல்‌ உடைக்கும் முன் காலவதி தேதியைப் பாருங்கள். தடுப்பு‌ மருந்து போட்டபின் அந்தக்‌குப்பியை வாங்கி‌ பத்திரப்படுத்துங்கள். நாளை‌ ஏதேனும் சிக்கலெனில் உதவும்.

திருக்குறளின் மருந்து அதிகாரத்தில் வள்ளுவர் சொன்னதோடு நிறைவு செய்கிறேன்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து .  

(திருக்குறள் 950 / மருந்து அதிகாரம்/ நட்பியல்/ பொருட்பால்)

நோயுற்றவர், நோயைத் தீர்க்கும் மருத்துவர், தரப்படும் மருந்து, அதற்கு உதவியாக இருப்பவர்கள்/பவைகள்‌ ஆகிய நான்கும் சேர்ந்ததே மருந்து. குணமானாலும், மேலும் ரணமானாலும், ஒருவரை மற்றும் குறை சொல்ல முடியாது‌‌. எல்லாருக்கும் பங்கிருக்கிறது. இது தொடர்பான தொடர்ச்சியான உரையாடலும், பங்களிப்பும், கூட்டு முயற்சியுமே ஒரு துறையை முன்னேற்றும். உரையாடுவோம்.

***

 

One Reply to “மருத்துவம் – அறிவும் அதிகாரமும்”

  1. நல்ல கட்டுரை. மரபு மருத்துவம் vs நவீன மருத்துவம் எனும் இருமை கட்டமைக்கப்பட்ட ஒன்று. எல்லாவற்றையும் சதியாக ஐயப்படும் மனப்பான்மை நம்மை எங்கும் கொண்டு செல்லாது. நவீன மருத்துவர்கள் மரபு மருத்துவர்கள் என இரு தரப்பினரிடமுமே பல்வேறு முன்முடிவுகள் இருக்கின்றன/ புகட்டபட்டுள்ளன. அதை உடைத்து விவாதிக்க முன்வர வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.