பொருந்துதல்

து ஒரு வாகன விபத்து. அதில் அடிபட்டு இறக்கிறார் ஒரு பெண். அந்த வழக்கில், இறந்த பெண்ணின் குடும்பத்திற்குத் தர வேண்டிய காம்பன்சேசன் தொகையைக் கணக்கிட வேண்டி வந்தது. அப்பெண் வெளி வேலை செய்து பொருள் ஈட்டவில்லை. ஹவுஸ் ஒய்ஃப். எனினும், அப்பெண் வீட்டில் செய்யும் வேலைக்கு பிரதியுபகாரமாக ஒரு தொகையாக ரூபாய் 5000, நிர்ணயிக்கப்பட்டு அதை அவள் சம்பளம் போல குறிப்பிட்டு காம்பன்சேசன் கோரப்பட்டது. (பின்னர் குறைவான தொகை பெறப்பட்டது) அதை ஒட்டி, வழக்கறிஞர்கள் விவாதித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு பெண் தாயாக, குழந்தைகளை கவனிப்பது முதல், கணவன், குடும்பம் என அனைத்தையும் கவனிப்பதற்கான தொகை அது. அத்தொகை சரிதானா என பேசிக்கொண்டிருக்கையில், அவளுக்கான கூலியா அது? அவளின் அந்த உழைப்பு அந்த ஆணுக்கான சேவையா? அது அவள் செய்த வேலையா/தொழிலா? அல்லது அவளுக்குத் தேவையானதையும் அதிலிருந்து பெற்றாளா? எனும் கேள்வியும் எழுந்தது. கவனிக்க… இங்கு பணத்தை மட்டுமே கணக்கில் கொள்ளவில்லை.

ஆம். பெண், தன் குடும்பத்திற்குச் செய்யும் சேவை என்பது அவள் தன் கணவன் மற்றும் அவன் குடும்பத்தாருக்குச் செய்யும் சேவை மட்டும் அல்ல. அதனால் அவளுக்குக் கிடைக்கும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை மட்டும் அவள் பெறவில்லை. அவளின் சொந்த விருப்பமான அவள் சந்ததியையும் பெற்று, வளர்த்துக் கொள்கிறாள்.

அந்த ஆண் அதற்கான விலையைத் தராவிட்டாலும், அவனின் மனைவியாகவே அவள் இல்லாது போனாலும் கூட அவள் தன் தனிப்பட்ட சந்ததி பெருக்கத்தைத் தொடர்ந்திருப்பாள். எனவே, பிரதியுபகாரமாகப் பணம் தருவதற்கு, அவள் அக்குடும்பத்திற்குச் செய்தது அத்தனையுமே வேலை/தொழில் அல்ல, அல்லவா?

சமீபத்தில், யாருமில்லா கிராமத்துக் கோவில் ஒன்றில் ஒரு பட்டர் மட்டுமே விளக்கேற்றி பூசை செய்து கொண்டிருந்தார். சிரிப்புத்தான் வந்தது. “கோவில்ல எல்லாம் பட்டர்கள் மட்டுமே பூசை செய்யலாம்ன்றது மாறி இப்ப எல்லாரும் பூசை செய்யலாம்ன்ன்னு ஆயாச்சாமே? உம்ம இந்த வேலைய விட்டு வெளியேத்தினா என்ன செய்வீர்?” என்றேன்.

“ஒண்ணுஞ்செய்ய மாட்டேன். ஆத்துலயே பூஜை பண்ணுவேன். வேறென்ன தெரியும் நேக்கு?” என்றார். ‘வேறு தொழில் தெரியாததால, வேற வேலைக்குப் போக மாட்டீரா?” எனும் கேள்விக்கும் அவரிடம் பதில் இருந்தது. “இல்லே, பகவானுக்குப் பூஜை பண்றது வேலை இல்லையே? எனக்கு இந்தக் கோவில்ல பூஜை பண்றதால பணம் ஏதும் கிடைக்காது. ப்ராமணன் பணம் தேடக்கூடாது. இது நான் செய்ய வேண்டியது. கோவில்ல உண்டக்கட்டிக்காக மாசம் நூத்தம்பது ரூவா தரா. அது தந்தாலும் தராட்டாலும், அதுதான் என் தலையெழுத்து.”

‘கோவிலில், தர்மதரிசனத்துக்கு கூட்டிப்போகிறேன்’ எனச்சொல்லி காசு பிடுங்கும் பட்டர்கள் மத்தியில், இது வேலை/தொழில் அல்ல எனச் சொல்லி அந்த இடத்தில் தம்மைப் பொருத்திக்கொண்டவர்களும் இருக்கிறார்கள் போல.

இதே போல, ‘நான் விவசாயிங்க.. பரம்பரை பரம்பரையா செய்யிறோம்.. அதனால செய்றோமுங்க. வேற வேல தெரிஞ்சாலும், இதில பணம் வராட்டியும் செய்வோமுங்க. நிலத்த வித்தா அம்புட்டும் துட்டு. ஆனாலும் விக்க மாட்டோமுங்க.” எனச் சொல்லி “தமது பொறுப்பு” என ஒன்றை நினைத்து தொடந்து செய்யும் ஆட்களும் இருக்கிறார்கள் தானே? அதற்கு விலை/ கூலி வைக்க இயலாது அல்லவா? ஏனெனில் அவை தமக்குத் தானே நிர்ணயித்துக் கொண்ட பொறுப்புகள்.

பணம்/ பிரதியுபகாரம் வந்தாலும் வராவிட்டாலும் தாம் அதைச் செய்வோம் எனச் சொல்பவர்கள் எவரும் செய்வது வேலை/தொழில் அல்ல.

மிருகங்களை உற்று நோக்கினால் ஒன்றை அறிய முடிகிறது. உயிர்கள் பலவும் தமது செயல்களை தமது பெற்றோரிடம் இருந்து கற்றுக் கொள்கின்றன என்றாலும், அவற்றின் பல செயல்கள் அவர்களின் உள்ளார்ந்த அறிவின் மூலமே கன கச்சிதமாக செய்கின்றன.

அதிலும் குறிப்பாக, உருவில் சிறிய மற்றும் ஆயுட்காலம் குறைவாக உள்ள உயிர்கள் அனைத்தும் தமது செயல் அனைத்தையும் தமது உள்ளார்ந்த (innate) அறிவினாலேயே செய்கின்றன. பெண் பறவை முட்டையிடும் பருவத்தில் ஆண் பறவை கூடு கட்டுவதும், விட்டில்கள் வெளிச்சத்தை நோக்கி ஈர்க்கப்படுவதும், கரப்பான் பூச்சிகள் வெளிச்சத்தை விட்டு ஓடுவதும் இந்த உள்ளார்ந்த அறிவினாலேயே.

இதைப் போலவே, பறவைகள் ‘V’ வடிவத்தில் பறக்கையில், அந்த கூட்டத்தில் மிக வலிமையான பறவை அந்த “V’-ன் முனையிலும், கொஞ்சம் வலிமையானவை அந்த “V” எழுத்தின் விளிம்பிலும், தம்மைத் தாமே பொருத்திக் கொள்கின்றன. நடுப்பகுதியில், மற்ற எளிய, மற்றும் இளங்குஞ்சுகள் பறக்கின்றன. எந்த இடத்தில் அவை தம்மைப் பொருத்திக் கொள்கின்றனவோ அந்த இடத்திற்கான வேலையை அவை செய்து முடிக்கின்றன. ஈகோவோ, போயும் போயும் நீ இந்த இடத்திலா? போன்ற கேள்விகளோ இல்லை.

ஏனெனில் ஒன்றை ஒன்று அண்டி இருக்கின்றன. எனவே அவரவருக்கான இடம் அவரவருக்கு.

ஆனால், மனிதரில் அப்படி இல்லை. ஏன் இல்லை? மிருகங்களில் அவைகள் எந்த இடத்தில் தம்மைப் பொருத்திக் கொள்கின்றனவோ அதற்கான பொறுப்பைச் செய்ய வேண்டும். அந்த பொறுப்பிற்காக வேறு வெகுமதிகளோ, மதிப்போ கிடைக்காது. மனிதர்களிடையே அப்படி இல்லை. ஒரு பொறுப்பு கிடைத்தால் அதற்கான வெகுமதி என ஒன்று உண்டு. அது மரியாதை, மதிப்பாகவும் இருக்கலாம். பணம் எனும் டோக்கனாகவும் இருக்கலாம். அதனாலேயே, மோதுகிறோம். கவனிக்க இங்கு பொறுப்பிற்காக மோதுதல் பற்றி மட்டுமே பேசுகிறோம். எப்போது, பொறுப்பு என்பதற்கு ஒரு விலை கிடைக்க ஆரம்பித்த்தோ, அப்போதே நம் மோதலும் ஆரம்பமாகிவிட்டது.

ஆக, இந்த பிரதியுபகாரத்தினாலேயே, மனிதர்களாகிய நாம், நம்மைப் பொருத்திக் கொள்ள விரும்பும் உள்ளார்ந்த விருப்பத்தை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு, வேறொரு இடத்தில் மோதிக்கொண்டிருக்கிறோம்.

நான் பாடகராக வேண்டும் என விரும்பினேன். ஆனால், அதில் என்னைப் பொருத்திக் கொள்ளவில்லை. காரணம்? ‘பாடகி’ பெயரை விட, ‘வழக்கறிஞர்’ மதிப்பு பெரிதாகப் பட்டது. என் சூழலில், என் கூட்டத்தில் வழக்கறிஞரே மதிப்பு என உருவாக்கம் செய்யப்பட்டதால், என் தேர்வு ‘வழக்கறிஞர்’ ஆகிப்போனது. நான் வழக்கறிஞராக என்னைப் பொறுத்திக் கொள்ளவில்லை. வழக்கறிஞராகத் தொழில் செய்கிறேன்.

து உசத்தி? என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று இருந்தாலுமே, சமூகம் எதை உயர்வாகச் சொல்கிறதோ அதில்தான் போய் நிற்க விரும்புகிறோம். Peer pressure.

சமீபத்தில், நண்பர் ஒருவர் சாமியாராகப் போயிருந்தார். “என்ன செய்யறீங்க?’ எனும் கேள்விக்கு, “ஆன்மிகப் பணி செய்யறேன்” எனும் பதிலுக்குப் பின்னும், “சாப்பாட்டுக்கு என்ன செய்யறீங்க?” எனும் கேள்வியையே திரும்பத் திரும்பச் சந்திப்பதாகச் சொன்னார். அவர் தம்மை, ஆன்மிகப் பணியில் பொருத்திக் கொள்ள விரும்ப, மற்றவர்களோ அவரின் தொழில் அது என எண்ணி, இக்கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்.

அபூர்வமாக சிலருக்கு மட்டும் தம்மைப் பொருத்திக் கொண்ட இடமே அவர்களுக்கான, தொழிலாகவும் அமைவது.

இந்திய கலாசாரத்தில், இன்று தொழிலாகப் பார்க்கப்படும் பலவும் சேவைகளாகவே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. விவசாயம் முதல், மருத்துவம் வரை. ஏனெனில், அவற்றினால் பணம் எனும் பிரதியுபகாரம் வந்தாலும் வந்திராவிட்டாலும், அவை தாம் எடுத்துக் கொண்ட பொறுப்புகள் என அதைச் செய்தவர்கள் நம்பியதாலேயே, தொடர்ந்து அவை செய்யப்பட்டன. இதை, இந்த நம்பிக்கையை அப்படியே வைத்திருக்க அவர்களுக்கு ஆன்மிகப் பயிற்சியோ, அல்லது இன்றைய வழக்கில் சொல்வதெனில் மூட நம்பிக்கைகளோ கை கொடுத்திருந்திருக்கின்றன. “பிராமணன் அன்னம் விற்கக்கூடாது”. “மருத்துவன் செய்யும் சூது, அவன் குடும்பத்தோடு போகும்” என்பன போல…

சமீபத்தில், பத்திரிகைத் தொடர் ஒன்றில், அரசன் ஒருவனிடம், வேற்று நாட்டு பிரதினிதி ஒருவன், அந்த நாட்டில் வியாபாரம் செய்ய அனுமதி கேட்டு வருவான். அரசன் அதற்கு மறுத்துவிடுவான். அத்தோடு நில்லாமல், தமது நாட்டில் எந்த ஒரு வியாபாரமும் செய்யப்படுவதில்லை என்பான். பிரதினிதி கேட்பான், “பண்டமாற்று செய்வதும் வியாபாரம்தானே?”

“அல்ல” என்பதோடு பேச்சு நிறைவடையும்.

மிக அருமையான விவாதம் அது. இந்த விவாதம், “பண்டமாற்று என்பது, வியாபாரத்திற்கு முன்னோடியாக மட்டுமே” எண்ணி வந்தவர்களுக்கு கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும்தான். உண்மையில், பண்டமாற்று என்பதிலிருந்து, வியாபாரம் எனும் வழித்தடத்தைத் தேர்ந்தெடுக்காதிருந்தால், இப்போது தொழிலாக மாறிய சேவைகள் பலவும், சேவைகளாகவே நின்றிருக்கும். தொழில்/வேலைகள் பலவும் பொறுப்புகளாகவே இருந்திருக்கக் கூடும்.

பண்ட மாற்று என்பது, தம்மிடம் இருக்கும் உற்பத்தியில் கொஞ்சத்தை, அப்பொருள் தவைப் படுபவருக்குக் கொடுத்துவிட்டு, தம்மிடம் இல்லாத ஒன்றை வைத்திருக்கும் ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொள்வது. அவ்வப்போது பிற தேவைகளுக்காக உபரி உற்பத்தியும் நடப்பதுண்டு. உபரி உற்பத்தி என்பது பாதுகாத்தல், பதுக்குதல் என விரிவடைந்திருக்கிறது.

வியாபாரம் என ஆன பின் தான், உபரி உற்பத்தி என்பது பெரும் வெறி கொள்ள வைக்கும் செயலாக ஆகிப்போனது.

எப்போது, “பால் சுரப்பு” என்பது, பால் உற்பத்தி, பால் பண்ணை என விரிவடைந்த்தோ அப்போதே, ‘பசு பால் தரும்” என்பது போய், மாடுகள் ஒரு பண்டமாக மாறத் துவங்கியது. “பசு பால் உற்பத்திக்கான ஒரு கருவி மட்டுமே” இந்த சூழலில், அதை “சேவை” என எவர் தம்மைப் பொருத்திக் கொள்வார்? அது பணம் கொழிக்கும் பால் தொழில்; அவ்வளவே. ஏனெனில் இன்றைய நமது நோக்கம் பணம். அதைத் தரும் ஒன்று தொழில். இங்கு சேவை, தமக்குப் பிரியமான, பொருத்தமான ஒரு இடத்தில் தம்மைப் பொறுத்திக் கொள்ளூதல் என எதுவும் இல்லை.

இதில் நுழைந்த உபரி உற்பத்தி வெறியே, தேவைப்படாத பொருட்களை உற்பத்தி செய்வதும், பின் அவற்றிற்கான தேவையை செயற்கையாக ஏற்படுத்துவதும் என விரிவடைகிறது.

வியாபாரம்தான் என்றானபின், அனைத்துமே தொழில்தான். அம்மாவாக பொருந்தி இருப்பதும், மருத்துவராக சேவையாற்றுவதும் கூட தொழில்தான்.

ஏன் இதை அம்மாக்களே நம்ப ஆரம்பித்துவிட்டதால் தானே? “மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்தேன், எனக்குப் பணம் அனுப்ப மாட்டேன்னுறான்” என்பன போன்ற மூத்தோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள்?

வியாபரத்தின் பலனை, அதனால் விளைந்த உபரிகளை அனுபவிப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.