பரண்

உதிர்ந்த இலைகளின் மேல்  மட்கிகொண்டிருந்த சாமந்தி பூக்களின் நடுவே கிடத்தி இருந்த ஒற்றை ரோஜாவை முத்தமிட்டு பதினைந்து ஆண்டுகள் ஆயிற்று.

அப்பாவும், சித்தியும் இராமேஸ்வரம் போய்விட்டார்கள். வீட்டில் நான், அண்ணா, காயு குட்டி மட்டும்தான். அண்ணாவும், நானும் ஒரு வாரம் வேலையில் விடுப்பு வாங்கி ஊருக்கு வந்திருந்தோம்.

“வர்ரதுக்கு மூனு நாளாகும். பரணை கொஞ்சம் ஒழுங்கு பண்ணுங்க, வாலுங்களா” என்று அப்பா கிளம்பி இரு நாட்கள் ஓடி விட்டன.

“காயு தூங்கனது போதும் எந்திரி இன்னைக்காவது ஒழுங்கு பண்ணி முடிச்சிறலாம்”. என்னை விட ஐந்து வயது சிறியவள். அம்மா இறக்கும் பொழுது மூன்று வயது குழந்தை. அப்பொழுது அண்ணா பத்தாம் வகுப்பு பதட்டத்தில் இருந்தவன்.

தூங்கி எழுந்து அறையை விட்டு வரும்பொழுதே “அக்கா இந்த ஜெயமோகன் என்னமா எழுதுறார். சான்ஸே இல்லை”என்று வந்தாள்.

வளர்ந்து விட்டாள். வீட்டில் தங்கி கல்லூரியில் இலக்கியம் படித்து கொண்டிருக்கிறாள். இரட்டை சடையில் ஒன்றை, ஆள் காட்டி விரலில் சுற்றிக் கொண்டு, பதினெண் வயதுக்குரிய சதை பூரிப்போடு, காலை இளவொளியில் அழகாக இருந்தாள். அப்பாவை போல் மாநிறம். வலது கண்ணோரத்தில் அந்த சிறு வடுவை தடவிக் கொண்டு பேசுவாள். இளைஞர்கள் கிறங்கக் கூடும், ஆனால் சிறு வயதில் என்னை வெகு நாள் மிகவும் வதைத்த வடு. அவளுடன் பேசும் பொழுது, அவளை நேருக்கு நேர் பார்க்காமல், ஓரக் கண்ணால் பார்த்து பேச செய்ததே இந்த வடுதான்.

“நான் மத்தியானத்துக்கு மேல ஃப்ரண்ட்ஸெ பாக்க போகணும். இப்பவே இந்த வேலைய முடிக்கலாம். அந்த போளி, சித்தி எனக்கு மட்டும் தான் செஞ்சு வச்சுட்டு போயிருக்கா… யாராவது கைய வச்சீங்க…” அண்ணா வீட்டுக்கு வந்தாலும் அதிகம் இருப்பதில்லை. வெளியிலயே தான் இருப்பான். வீட்டில் இருந்தாலும் ஒன்றிரண்டு சொற்றொடர்கள் மற்றும் சித்தியின் போளி மட்டும்தான். காலையில் இருந்து, விடாமல் மழை. அதனால் அதிசயமாக வீட்டில் இருக்கின்றான்.

“குந்தி இருக்காளே குந்தி, மகாபாரதமே அவளோட சதிங்கறார் ஜெமோ. உனக்கு கர்ணன் கொழந்தயா இருக்கச்சே என்னாச்சு தெரியுமா?”

“கர்ணன பெட்டியில வச்சு ஆத்துல விட்டா”

“இல்ல ஜெமொ என்ன சொல்லறாருனா, குந்தி விரும்பிதான் குழந்தைய பெத்துகிட்டாளாம். அப்பலாம் கல்யாணம் ஆகாம கொழந்த பெத்துகிட்டா யாரும் வித்தியாசமா பாக்க மாட்டங்களாம். நீயும் அப்படி பெத்துக் கோயேன், இந்த ஸ்பேர்ம் பேங்க் அப்படினு இருக்கே. அப்பாவும், பாட்டீயும் கல்யாணம் பண்ணிக்கோனு நச்சரிக்க மாட்டாங்க”

“அடிச்சேனா பாரு லூஸு”. கை ஓங்கினேன். ஓர கண்ணால் பார்க்கையில் வடு இவளை இன்னும் அழகாக தான் ஆக்குகிறது. ஒருவகையில் இவள் வேகமாக வளருவது நல்லதுதான். வடுவை இரசிக்க முகம் பார்த்து பேசலாம்.

“எதிரிங்ககிட்ட இருந்து தப்பிக்க கை குழந்தைய வச்சுகிட்டு ஆத்துல குதிச்சு நீந்தினாளா, ஆத்து தண்ணி பலமா இருந்துச்சா, கொழந்த இருந்த பெட்டி ஆத்தோட போய்ருச்சாம். தப்பிச்சு வந்த இவ, ஆளுங்கள வச்சு தேடுனாளாம். கொழந்த கிடைக்கவே இல்லையாம். பாவம் இல்ல. நம்ம சின்ன வயுசல கேட்டதவிட வித்தியாசமா, ஆனா நம்பற மாதிரி, நல்லா இருக்கு இல்ல.”

“நீயும் உன்னொட ஜெயமோகனும். அந்த ஆளுதான் பொழுது போகாம மகாபாரதத்த உல்டா பண்ணறார்னா. நீயும் படிச்சுகிட்டு இருக்க. சுஜாதா மாதிரி புரியற மாதிரி எதாவது எழுதுனாவாது பரவாயில்ல”

“சீ. போ. மாயீ சொல்றா, இவர்தான் தாகூரோட வாரிசாம். யோசிச்சு பாரேன். அப்படி தவறி போன கொழந்தைய, குந்தி, பெரிய ஆளா பார்க்குறா. அப்படியே மடியல வச்சு கொஞ்சனும்னு தோணும்ல. அந்த கொழந்தைக்கும் அம்மா மடியல படுத்துக்கனும் போல இருக்குமல. பாவம்க்கா கர்ணன்.” என்று மூச்சிழுத்தாள். “இரண்டு பேராலும் அது முடியாதில்ல. அதவிட அந்த தேரோட்டி அம்மா பாவம், தன் கொழந்தய பங்குபோட நெஜ அம்மா வந்துட்டானு எவ்வளவு பத பதப்பா இருக்கும்”.

சித்தியைதான் மாயீ என்கிறாள். சித்திக்கு தஞ்சாவூர் பக்கம். அவர்களது பூர்வீகம் மராத்தி. சிறு வயதில் விதவையாகிவிட்டாள். குழந்தையுமில்லை.

மழை இன்னும் பலமாக பெய்ய ஆரம்பித்தது. காற்று வேறு ஜன்னல்களை அடிக்க ஆரம்பித்தது. அண்ணாவின் பழைய சிரிப்பை போல.

அம்மா இருக்கையில், சில நாட்களில் நானும் காயும், அம்மா-அப்பா படுக்கையில் புகுந்து விடுவோம். காயு நடு இரவிலேயே சென்று விடுவாள். அம்மா-அப்பா படுக்கையில் ஏறுவதற்கு ஏதுவாக, படுக்கையின் அருகே ஒரு சிறிய முக்காலி காயுவுக்காக அம்மா வைத்திருந்தாள். விடியகாலையில் முழிப்பு தட்டி, அவள் எங்கள் அறையில் இல்லையென்றால், நானும் ஒடிவிடுவேன். காயு, அவள் தலைகாணி இல்லாமல் போகமாட்டாள். சிறு குழந்தையின் தலை அளவேு சிறியது. நீலம், பின்க், மஞ்சள் என பல வண்ணங்களில், அதில் இருந்தே பூத்தது போல், சிறு சிறு பூக்கள் தைத்து, ஒரு துணி தோட்டம். அம்மா எழுந்துவிட்டாள் என்று தெரிந்தால், காயு எழுந்து உட்கார்ந்து, அந்த தலைகாணியை தடவி, ஒரு ஒரு பூவாய் நீவி விடுவாள். அம்மா படிகளில் ஏறி வரும் ஒலி கேட்டவுடன், படுத்து கொண்டு கால் மேல் கால் போட்டு கண் மூடி தயாராகி விடுவாள். அம்மா பால் புட்டியை அவள் கையில் கொடுத்தவுடன், உறிஞ்சி குடிப்பாள் உறிஞ்சும் சத்தம் நின்றுவிட்டால், தூங்கி விட்டாள் என்று அர்த்தம், திரும்பி அவளை பார்த்தால் கையில் இருந்து புட்டி உருண்டு கொண்டிருக்கும். முகத்தில் நிறைவு கலந்த சிறு புன்முறுவல் இருக்கும்.

“அது மகாராணியோட சிம்மாசனம், நான் அவளோட தாசி” என்பாள் அம்மா அந்த தலைகாணியை.

சில நாட்கள், அண்ணா சேட்டை செய்வான். அம்மா கீழே சமையலறையில் இருப்பாள். அம்மா மேலே வருவது போலேவே, இவன் போக்கு காட்டி, படிகளிலே மேலே வரும் சத்தம் கொடுத்து, காலி புட்டியை காயு கையில் கொடுப்பான், ஒரு உறி உறிஞ்சிவிட்டு, வீறீட்டு அழுவாள். கால்களை தப் தப் என்று உதைப்பாள். அப்பா மேல்தான் அதிகம் படும்.

“வாலுங்களா காலங்காத்தால நிம்மதியா தூங்க விடுறீங்களா” என்று அப்பா கத்துவது போல் நடிப்பார். அம்மா பால் புட்டியை வந்து கொடுக்கும் வரை ரகளை இதமாக இருக்கும்.

அண்ணா ஒன்பதாவது சேரந்த புது பள்ளியி்ல், இன்னொரு பையனும் சேரந்திருந்தான். “அம்மா பப்ளிமாஸ் மாதிரி கொழு கொழுனு இருக்கான் மா. பசங்க எல்லாம் அவன குஷ்பு ரவினு கூப்பிடறாங்க மா”. புது பையன்கள், நன்றாக படிப்பவர்கள் என்பதால் ஒட்டி கொண்டார்கள். குஷ்பூ. இல்லை இல்லை. ரவி வீடு இரண்டு தெரு தள்ளிதான். அண்ணாவும் ரவியும் சேர்ந்து வந்தால் லாரல் ஹார்டி மாதிரி இருக்கும்.

ஒன்பதாவது, பத்தாவது என்பதால் கூட்டு படிப்பென்று ரவி வீட்டில் அண்ணாவும், எங்கள் வீட்டில் ரவியும் நிறைய சாப்பிட்டனர். ரவி எதை கொடுத்தாலும் சாப்பிடுவான். அண்ணாவுக்கு நாக்கு சற்றே நீளம், சாம்பார், பொரியல் அம்மா இல்லாமல் வேறு யார் சமைத்ததையும் அவ்வளவு எளிதாக சாப்பிட மாட்டான். இனிப்பு மட்டும் விதிவிலக்கு.

“அம்மா, நானும் அவன் சாப்பிடற அளவுதான் சாப்பிடறேன், நான் மட்டும் ஏன் இவ்வளவு ஒல்லி. தெனம், அவங்க அம்மா நெய் கேசரி கொடுக்கறாங்க போல”

ஒரு நாள் அண்ணா, ரவி வீட்டில் இருந்து வந்து தரையில் புரண்டு புரண்டு சிரித்தான்.

“அம்மா நம்ம குஷ்பு இருக்கான்ல, அவன் டீவில குத்து சண்டையை பாத்துட்டு. வாடா நானும் நீயும் போடலாமனு சொன்னான்மா. நான் பயந்துட்டு வேண்டான்டானு சொன்னா கேட்டகவே இல்ல. பயந்தாகொள்ளி, பயந்தாகொள்ளினு வெறுப்பேத்தினான். சரி வாடானு ஒன், டூ, த்ரீ அப்படினு ஒரு குத்து விட்டேனா. குஷ்பூ பாக்குறதுக்கு தான் சோட்டா பீம் மாதிரி இருக்கான். ஆனா கை கால் எல்லாம் மெதுவாதான் ஆட்டறான். என் குத்த தடுப்பானு பார்த்தா, அவன் மெதுவா கையை தூக்கி முகத்த மறைக்கிறதுக்குள்ள, என் குத்து அவன் மூக்கு மேலே விழுந்துருச்சிமா. அப்படியே ஐயோனு கத்திக்கிட்டு கீழே ஒக்காந்துட்டான். கண்ணுல இருந்து ஓரே தண்ணீ”

அம்மா முறைத்தாள்.

“அது எல்லாம் ஒன்னு அடிபடல மா. அவன் அக்கா, ஓடி வந்து எங்க பேபிய இப்படி குத்திட்டீ…யேனு ஒரே திட்டு. எனக்கா ஒரே சிரிப்பு. குஷ்பூ குண்டன் பேபியாம். குஷ்பூ பே..பீ..” என்று வெடி சிரிப்பு.

அந்த வெடி சிரிப்பு….

ஜன்னல்களை இழுத்து மூடினாலும், கண்ணாடி வழியாக மழை ஊமையாக பெய்து கொண்டிருந்தது.

அம்மா தவறிய முதல் வருடம் அப்பா மிகவும் கஷ்டப்பட்டாராம். அந்த ஒருவருடம் எனக்கு மங்கலாக தான் நினைவில் இருக்கிறது. அதற்கு முன்பு நினைவில் இருக்கிறது, அதற்கு அடுத்த வருடம் நினைவில் இருக்கிறது. ஆனால் அந்த ஒரு வருடம் மட்டும் மற்றவர்களின் சொற்களால்தான் நினைவில் நிரம்பியுள்ளது. நானும் அண்ணாவும், ஜடம் போல் ஆகி விட்டோமாம். பேசுவது ஏகமாய் குறைந்து விட்டதாம். இரவில் மட்டும் இருவரும் விம்மி கொண்டே இருப்பது வெகு நேரம் கேட்டு கொண்டிருக்குமாம். அப்பா முதல் சில நாட்கள் தன் பக்கத்தில் இரண்டு பேரையும் படுக்க வைத்து கொண்டு, ஆறுதல் படுத்த பார்த்தாராம். பிறகு அழுதே கழிக்கட்டும் என்று விட்டுவிட்டாராம். காயு தான் அதிகம் கஷ்ட்டபட்டாளாம். காயு காலையில் எழுந்து பாலுக்காக காத்திருப்பாளாம். அப்பா புட்டியில் கொடுக்க சிரம்ம பட்டாராம். பின்பு அவளை சமயலறையிலேயே வந்து டம்ளரில் குடித்து பழக்க சிரம்ம பட்டாராம். பாட்டி தான் சொன்னாள். பாட்டி மாமா வீட்டில் பத்து தெரு தள்ளி தான் இருந்தாள். அம்மா இறந்த முதல் இரண்டு மாதம், எங்களுடன் இருந்தாள்.

காயு வந்தால் வேலை ஆரம்பிக்கலாம். ஆனால், இரவில் விட்டதை தொடர, அவள் திரும்பி அறைக்கு சென்றுவிட்டாள் போல். கேலண்டரில் நேற்றை கிழித்துவிட்டு குளிக்க சென்றேன்.

அப்பாவின் அந்த கண்…அப்பா அதிகம் குரலை உயர்த்த மாட்டார், யாரையும் திட்டவும் மாட்டார். ஆனால் அம்மா இறந்து ஒரு வருடத்தில் அவரும் தடுமாற ஆரம்பித்தார். அலுவலகத்துக்கு ஒரு நாள் தொலைபேசியில் காலையில் பம்மியபடி

“சார் இன்னைக்கும் வர முடியாது போல இருக்கு.. அது இல்ல சார் கொழந்தங்க… ஆமாம் சார்… மத்தியானத்துக்கு மேலே வேணும்னா…” என்று இழுத்துக் கொண்டிருந்தவர், சடாரென்னு “போய்யா உன் வேலையும் மயிரையும்” என்று ஒங்கி தொலைபேசியை அறைந்தவர், காலைக்கட்டி கொண்டிருந்த காயுவையும் ஒரே எத்தாக எத்தி விட்டு மாடிக்கு சென்று விட்டார்

காயு அதிர்ச்சியில் அழுவாள் என்று நான் பதறினால், அவளோ எதோ புரிந்தது போல, கையை சப்பி கொண்டு, அவள் தலைகாணியை சோஃபாவின் மேல் வைத்து, கண்களில் கண்ணீர் வடிய படுத்து விட்டாள்.

சிறிது நேரத்தில் மாடியில் இருந்து இறங்கி வந்தார். “இது வீடா, கோடவனா, சனியன்களா. கால எங்க வச்சாலும் எதுலயாவது படுது” என்று ஒரு பயங்கர சத்தம் போட்டார்.

அவர் கண்களை அப்படி பார்த்ததேயில்லை. கலங்கி, ஓரே சிவப்பாய். மாடியில் அழுதிருக்கிறார், ஆனால் அந்த கலங்கலை மறைக்க ரௌத்திரத்தை ஏற்றி் வைத்திருந்தார்.

வெளியே சென்றவர் கையோடு இருவரை கூட்டி வந்தார். அப்பாவின் கட்டளை படி வீட்டில் உள்ள பொருட்கள் பாதி வெளியேறின. வெறி கொண்டு, அம்மாவின் பொருட்களை கொண்டு போக சொன்னார். அவரே பலதை வெளியே வீசினார். அடுத்து கால்களில் எதெல்லாம் தட்டு பட்டதோ அவையெல்லாம் வெளியே பறந்தன. நானும், அண்ணாவும் எங்கள் புத்தகங்கள், எங்கள் பொருட்களை சேமிப்பதில் குறியாக இருந்தோம். காயு ஸோஃபாவில் இல்லை, எங்கோ மூலையில் ஒளிந்திருத்தாள்.

இரண்டு மணி நேரம் கழித்து ஆசுவாச படுத்திக் கொண்டு, வெளியே சென்று சிலவற்றை திரும்ப அம்மா அறையில் கொண்டு வைத்தார். சிலவை பரணுக்கு சென்றன. வெளியே எறிந்தவற்றை, வண்டி வைத்து எடுத்து சென்றார்கள். அன்றிலிருந்து வீடு மிகவும் அமைதியாகியது. அப்பா அதற்கு பிறகு குரல் உயர்த்தி நான் பார்த்ததேயில்லை (அண்ணா அடி வாங்கிய நாள் போக). காயுவின் தலைகாணியும் அன்று தான் நாங்கள் கடைசியாக பார்த்தது.

அதே வாரம் மாமாவின் அலுவலக நண்பர் சித்தி பற்றி மாமாவிற்கு சொல்லியிருக்கிறார். அந்த நண்பர், வீட்டில் குழந்தைகளை பார்த்து கொள்ள ஆள் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் மாமாவிடம் சொன்னாராம்.

அப்பா என்ன நினைத்தாரோ “கொழந்தங்களுக்கு வேலையாள் தேவையில்லை, அம்மாதான் வேணும் கல்யாணம் வேணா பண்ணிக்கிறேன்” என்று பார்த்து பேசி, இரண்டே வாரத்தில் சித்தி வீடு வந்து விட்டாள்.

முதல் நாள் ஓரு சிறு பெட்டியுடன்தான் வந்தாள். ஆனால் மறுநாள் வண்டியில், நிறைய அட்டை பெட்டிகளில் புத்தகங்கள். ஒரே இடத்தில் அவ்வளவு புத்தகங்களை நான் பார்த்ததே இல்லை.

பாட்டிதான் புலம்பி தள்ளி விட்டாள்

“என்ன இந்த வயசான காலத்துல தனியாவிட்டு அவ போய் சேர்ந்துட்டா. என் பொண்ணு இடத்தில இன்னொருத்திய பாக்க தான் அந்த பகவான் என்ன உயிரோட வச்சிருக்கானா?
பத்து வருஷம் புத்தகமே கதியேனு கெடந்தவ, வீட்டையும், கொழந்தயைகளையும் எப்படி பாத்துப்பாளோ.”

வந்த அன்று “என் பேர் ரமா, நான்தான் இனிமே உங்களுக்கு மாயீ, சரியா?” என்று தலையை தடவி முத்தம் கொடுத்தாள். காயு ஒன்றும் புரியாமல் விழித்தாள். எனக்கு அழுகை முட்டி வர என் அறைக்கு சென்று்விட்டேன். அண்ணா “ம்.” என்றுவிட்டு படிக்க ரவி வீட்டுக்கு சென்றவன், ஒரு வாரம் கழித்து பரிட்ச்சைகள் முடிந்துதான் வந்தான்.

அன்றிரவு கதை சொல்லட்டுமா என்று கேட்ட சித்திக்கு வேண்டாம் என்று என் அறைக்கு வந்து விட்டேன். காயுவும், அன்று வரை அப்பா அறையில் தூங்கி கொண்டிருந்தவள், என் பின்னாலேயே வந்துவிட்டாள். கால் பரிட்ச்சையில் இருந்து அரை பரிட்ச்சை வரை, என்னுடன்தான் தூங்கினாள். காயுவும் நானும் அதிகம் பேசியது அந்த மூன்று மாதங்கள்தான்.

நிறைய கேள்விகள் கேட்டாள்.

“அம்மா என்ன கலர் பிப்ஸ்டிக் போடுவா? என்ன எப்படி தூக்கி வச்சுப்பா? எப்படி மம்மம் ஊட்டுவாள்”. என்று தினம் வேறு வேறு கேள்விகள்.

” அக்கா கருப்பு, அண்ணா கருப்பு, அம்மா மாதிரி. காயு செகப்பு அப்பா மாதிரி, பாட்டி சொன்னா”

ஆனால் கடைசியில் தூங்குவதற்கு முன் திரும்ப திரும்ப ஃபோட்டோ ஆல்பம் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பாள். அம்மா எங்களுடன் இருக்கும் ஒவ்வொரு படமாக பார்ப்பாள், அவள் இல்லாத படமாக பார்த்து

“நான் ஏன் இல்ல? ” என்பாள். “அம்மா அண்ணா தனியா, அம்மா அக்கா தனியா, ஆனா காயு அம்மா ஏன் இல்ல? அம்மாவுக்கு என்ன பிடிக்காதா? நான் அப்பா மாதிரி அதனாலயா?” என்று சினுங்கலுடன் கை சூப்பி தூங்கிவிடுவாள்.

சித்தி நவராத்திரிக்கு ஒரு வாரம் முன் வீட்டிற்கு வந்தாள். நவராத்திரி விடுமுறையில் கதை சொல்லட்டுமா என்று சித்தி கேட்கும் பொழுதெல்லாம் நான் வெளியே விளையாட ஓடிவிடுவேன் காயுவும் என்னோடு வந்துவிடுவாள். மதிய நேரங்களில் மட்டும் சித்திக்கு புத்தகங்களை அடுக்க உதவினோம்.

புத்தக அட்டையில் தான் எத்தனை வகை முகங்கள், மீசைகள். சித்தி ஒரே முகமுள்ள புத்தகங்கள் ஓரே இடத்தில் இருக்குமாறு அடுக்கி வைத்தாள். வெள்ளை தலைபாகையுடன், கருப்பு மீசை முறுக்கிய பாரதியார். மீசையே இல்லாமல் ஜிப்பா போட்டவர். வெள்ளை தாடி முன் வழுக்கையுடன் ஒருவர். பஞ்சு முடி, பெரிய பஞ்சு மீசையுடன் ஒருவர். மீசையே இல்லாமல் சட்டை பான்ட் போட்ட ஒருவர். காதோரம் மட்டும் முடி நரைத்தவர். காயு அட்டை படங்களை தடவி பார்த்தவுடன், நான் முக அடையாளங்கள் சொல்லி நீட்டுவேன் சித்தி அடுக்கி வைப்பாள். காந்தி தாத்தா வேறு நிறைய அட்டைகளில். மாலைகளில் பக்கத்து வீடுகளுக்கு கொலு பார்க்க கூப்பிட்டாள். நான் போகவில்லை, காயு மட்டும் கூட போனாள்.

குளியறையின் ஜன்னலில் மழையின் தாளம் சீராக கேட்டது.

அம்மா தான் எங்களுக்கு அடிப்படை சங்கீதம் கற்று கொடுத்தாள். அண்ணா வயலின் வாசிப்பான். அம்மா இறப்பதற்கு ஒரு வருடம் முன்னால் கொலுவில் என்னை பாட அழைத்தார்கள். “இன்னும் ஒரு ஐஞ்சாறு வருஷம் கத்துகிட்டாளுனா பெருசா வருவா” என்றார்கள். அம்மாவிற்கு பெருமை. இரண்டு வயது காயு தான் “எனக்கும் பய்யி பாவாயை, பய்யி பாவாயை” என்று மழலையில் பக்கவாத்தியம் வாசித்தாள். ஒரு வீட்டு கொலுவில் மைசூர் அரண்மனை இருந்தது. வீட்டுக்கு வந்து அப்பாவிடம் ஓரு தசரா நம்ம கண்டிப்பா மைசூர் போகணும் என்று முகம் மலர ஆசையாக சொன்னாள். விளக்கு வைத்து பல நாட்கள் வீட்டில் பாடி கொண்டிருக்கும் பொழுது, பூக்காரம்மா இருந்து கேட்டுவிட்டு “மகராசியா இரும்மா” என்று என் தலையில் பூ வைத்துவிட்டு காசு வாங்காமல் போவாள்.

அது நடந்து அடுத்த வருடம், அண்ணா பத்தாவது படிக்கையில் பள்ளி கூடத்தில் வயலின் வாசித்து பரிசு வாங்கியிருந்தான்.

அண்ணா பரிசு வாங்கி ஒரு வாரத்தில் அம்மா இறந்து போனாள். மஞ்சள் புடவையில், பெரிய சிவப்பு பொட்டு வைத்திருந்தவளை முத்தமிட்டு, நான் வீட்டிலேயே இருந்தேன். தூக்கி போகும் பொழுது அண்ணா மட்டும் தான் கூட சென்றான்.

“அம்மா நினப்பா இருக்குதே கொழந்தக” என்று பாட்டி தான் அம்மா இறந்த இரண்டு வாரத்திலலேயே கொலுவுக்கு கூட்டி சென்றாள். கொலுவில் பாட உட்கார்ந்தவள், இரண்டாம் அடுக்கில் ஒரு அம்மா பொம்மை இரண்டு குழந்தைகளுடன், மடியில் ஓரு குழந்தையுடன் இருப்பதை பார்த்து விக்கி, விக்கி அழுக ஆரம்பித்து விட்டேன். அதற்கு பின் யாரும் என்னை பாட கேட்கவேயில்லை. அண்ணாவும், பத்தாவது, படிப்பு என்று சாக்கு காட்டி வயலினை நிறுத்திவிட்டான். பூக்காரம்மா என்று கடைசியாக வந்தாள் என்று நினைவில்லை.

தலையை துவட்டி கொண்டு கடிகாரத்தை பார்த்தேன். மதியத்துக்குள் பரண் வேலையை முடித்துவிடலாம்.

சித்தி வீட்டிற்கு வந்த பிறகு, முதல் அரை பரிட்ச்சை விடுமுறையில் சில நாட்கள் பாட்டி வீட்டிற்கு சென்றோம். காயுவுக்கு உடம்பு சரியில்லை என்று சித்தி அவளை வீட்டில் வைத்துக் கொண்டாள். நாங்கள் திரும்பி வந்த அன்று மாலை, அவளுக்கு ஒரே குதுகுலம். ஜுரம் குறைந்திருந்தது. மாலையில் திண்ணையில் என் கை பிடித்து “அக்கா, காயு ஒரு கத சொல்லட்டுமா” என்றாள்.

“ம்ம்”

“ஒரே பனி, ஒரே மல, வைட் வைட் மல. ஆர்மி ஆளுங்க. இவ்வளவு பெரிய கால்” என்று கை விரித்து காட்டினாள்.

“மேஜர் பாண்டியன்” என்று துப்பாக்கி மாதிரி கைகளை நீட்டி காட்டினாள். “அவ்வளவு பெரிய குரங்கு..” என்று எம்பி குரங்கின் நீளத்தை அளந்தாள். “டாக்டர், பாண்டியன், கிம், மூனு பேரும் குரங்கு மனிதனை பார்க்க போனாங்க” என்று மழலையில் சொல்லிக் கொண்டே போனாள்.

அன்று இரவு “அக்கா நான் கத கேக்கனும்” என்று சித்தியுடன் படுத்துக் கொண்டாள்”. நாங்கள் பள்ளிக்கு போனதும், சித்தியிடம் நாள் முழுதும் கதை கேட்க ஆரம்பித்து விட்டாள்.

ஒரு நாள் பள்ளியில் இருந்து திரும்ப வந்ததும் “அக்கா மேலே வாயேன்” என்று கை பிடித்து மாடி கூட்டி சென்று ஒரு படத்தை காண்பித்தாள்.

“இங்கே பாரு நானும், மாயீயும் தனியா ஒரு படம்”. என்று ஒன்றை காட்டினாள். என் ஆல்பத்தில் இருந்து, அம்மா மூன்று பேருடன் இருக்கும் படத்தை எடுத்து, என்னையும், அண்ணாவையும் அதில் இருந்து வெட்டி எடுத்து, அம்மா படத்தின் மேல் சித்தி படத்தை ஒட்டி வைத்திருந்தாள். சித்திக்கு தெரியாமல் அவள் பெட்டியில் இருந்து சித்தி படத்தை எடுத்தாளாம்.

எனக்கு சரியான கோபம், அவள் கையை தட்டி விட்டு கீழே சென்று விட்டேன். அண்ணாவும் முகத்தில கோபத்துடன் அவன் அறைக்கு சென்றுவிட்டான்.

அப்பா வீட்டில் நுழையும் நேரம் மாடியிலிருந்து வீல் என்று அலறல். அப்பா, மேலே ஓடினார், சித்தியும் நானும் அவர் பின்னால். காயு தரையில் கிடந்தாள், உடம்பு சற்றே விரைப்பாக. மூச்சு இருந்ததா என்று புரியவில்லை. அண்ணா ஓரத்தில் நின்று முறைத்து கொண்டிருந்தான். அப்பா அவசரமாக, அவளை குப்புற படுத்தி முதுக்கில் தட்டியதும், இரும ஆரம்பித்தாள்.

காயுவுக்கு விளக்கு ஸ்விட்ச் போடுவது பிடிக்கும். அண்ணா அவளை வந்து அவனது அறையில் போட சொல்லியிருக்கிறான். அவளும் அவள் குட்டி முக்காலில் ஏறி் போடும் பொழுது, ஃப்யுஸ் பெட்டியின் மூடியை கழற்றி விட்டான். அவளும் ஸ்விட்ச்சுக்கு பக்கதிலிருந்த ஃப்யுஸ்க்குள் கையைவிட்டு மின்சாரம் தாக்கி கீழே விழுந்துவிட்டாள்.

அப்பா பெல்ட்டை எடுத்து அண்ணாவை விளாசித் தள்ளி விட்டார். சித்தி தடுத்து பார்த்தாள். அண்ணா எப்படியோ தப்பித்து ரவி வீட்டிற்கு ஓடிவிட்டான்.

வார கடைசியில், ரவி அப்பாதான், “தோளுக்கு மேல வளர்ந்த பையன் ஸார், பாத்து” என்று விட்டு விட்டு சென்றார்.

சித்தி அன்று தான் முதலில் போளி செய்தாள்.

அண்ணாவும், அன்றிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன், காயுவை முதுகில் ஏற்றி குதிரை ஒட்ட தவறமாட்டான். முழு பரிட்ச்சை முடிந்து, பாட்டி வீட்டிற்கு செல்லும் வரை அவளிடம் சாரி சொல்லிக் கொண்டிருந்தான்.

முழு பரிட்ச்சை விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு சென்றவன், ஆறு மாதம் சாப்பிடாதவன் போல, கேட்டு கேட்டு சாப்பிட்டான். சித்தி கோசம்பரி, பலாபழ சாம்பார் என்று நன்றாக தான் சமைத்தாள். ஆனால் இவனுக்கு செட்டாக வில்லை. காயு நன்றாக சதை போட்டு கொழு கொழு என்று வளர்ந்திருந்தாள். பாட்டி என்ன நினைத்தாளோ, போகிற போக்கில், “அவ கொழந்தைய மட்டும்னா நல்லா பாத்துகிறா, எங்க கொழந்தங்கைனா இளக்காரமா. வளர்ர பையனுக்கு சரியா சாப்பாடு கூட போட மாட்டேங்கிறா” என்று சொல்லி வைத்தாள்.

அடுத்த முழு ஆண்டு தேர்வு முடிந்து அண்ணாவும் கிளம்பிவிட்டான். ரவியும், அண்ணாவும் இராஜஸ்தானிற்கு பொறியியல் படிக்க போனார்கள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வருவான்.

நான்தான் தனியவளாகி போனேன்.

அவன் வீட்டை விட்டு சென்ற வருடம் காயு என் பள்ளியில் சேர்ந்தாள். எங்கள் இருவரையும் பள்ளிக்கு சித்திதான் தயாராக்குவாள். நிதானமாக தலைவாரி, இரட்டை ஜடை போட்டு, நன்றாக இஸ்திரி போட்ட சீருடைகளுடன் பளிச் என்று பள்ளிக்கு செல்வோம். அம்மா வேலைக்கு சென்றதால், எல்லாம் அரக்க பரக்க தான். பாதி நாட்கள் பள்ளி செல்லும் வழியில் தான் என்னுடைய ஜடையை பின்னுவாள்.

காயு பள்ளி சேரந்த ஒரு வாரத்தில், புது ஆசிரியை ஒருவர் “ஏண்டீ, உனக்கும் காயத்திரிக்கும் எப்படி வேற வேற அம்மா?”. அந்த ஆசிரியை பள்ளிகூடத்தில் புதிதாக அந்த வருடம்தான் சேரந்திருந்தாள். காயு எழுதிய ஒரு படிவத்தை காட்டினாள். அம்மா என்ற இடத்தில் சித்தி பெயரை காயு எழுதியிருந்தாள். அக்கா என்ற இடத்தில் என் பெயரையும் எழுதிருந்தாள். அது வீட்டிற்கு செல்வதற்கு முன் விளையாட்டு நேரம். காயு அவள் வகுப்பு பிள்ளைகளுடன் விளையாடி கொண்டிருந்த இடத்திற்கு சென்று, அவள் முடியை பிடித்து தரதரவென இழுத்து சரமாரியாக அடித்து விட்டேன். சிறு பிள்ளைகள் எல்லாம் ஒரே கூச்சல் போட்டன. காயுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை

“அக்கா, அக்கா வலிக்குது” என்று கத்தி கொண்டே இருந்தாள்.

பள்ளிகூட ஆயா என்னை வந்து பிடிப்பதற்குள், எழுந்திருக்க முயன்றவளை மீண்டும் கீழே தள்ளி விட்டதில் கண்ணருகே கல் பட்டு ஓரே இரத்தம். வெள்ளை சீருடையெல்லாம் இரத்தம். பள்ளி அட்டன்டர் ஒருவரும், ஆசிரியை ஒருவருமாக அவளை ஆட்டோவில் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள்.
அப்பா அன்றைக்கு என் அறைக்கு வந்து, என் படுக்கையில் அமர்ந்து வெகு நேரம் என் தலையை கோதி விட்டு கொண்டேயிருந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து அவள் பள்ளி திரும்ப செல்லும் பொழுது என் கையை பிடித்து கொண்டுதான் காயு வந்தாள். கண்ணருகே பெரிய ப்ளாஸ்த்திரி. மூன்று தையலாம்.

வகுப்புக்குள் செல்லும் முன், “மாயீ சொன்னா கார்டியின்னு இருக்கற இடத்திலதான் மாயீ பேர போடனுமா, மதர்னு இருக்கற இடத்தில் அம்மா பேர தான் போடனுமா. ஸாரி அக்கா. இனிமே என்னை அடிக்காத அக்கா” என்று என்னை வந்து கட்டி பிடித்து, தயங்கி தயங்கி கேட்டாள்

“அம்மா முழு பேரு என்னக்கா?”

அடை மழை குறைந்து தூறிக் கொண்டிருந்தது.

நான்கு பேர் உட்கார்ந்து வேலை செய்யும் அளவுக்கு பெரிய பரண். சித்தி ஏற்கனவே எல்லாம் ஒழுங்கு பண்ணியிருந்தாள். அட்டை பெட்டிகளிலும், தகர ட்ரங்க் பெட்டிங்களிலும் அடுக்கி வைத்திருந்தாள். நாங்கள் எதை எடுத்து வெளியேபோட என்று முடிவு செய்ய வேண்டும் அவ்வளவுதான். மூவரும் இருப்பதால் பிரச்சனையில்லை, பிறகு ஒருவரை ஒருவர் திட்ட முடியாது.

பெட்டி ஒன்றை துழாவிக் கொண்டிருந்த அண்ணா திடீர் என்று “என் வயலின் ஃப்ரைஸ்” என்று கத்தினான். கத்தலா, இல்லை அவன் வெடி சிரிப்பா என்று எனக்கு ஆச்சரியம். கையடக்க சின்ன வீணையில், அவன் பெயர் எழுதி பத்தாம் வகுப்பு, முதல் பரிசு என்று பொறித்திருந்தது.

நான் வாங்கி வீணை மீட்டி பார்த்தேன். அண்ணாவை பார்ப்பது தவிர்த்து வீணையுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.

முதுகிற்கு பின்னால் இருந்து “யார் பர்ஸ் இது” என்றாள் காயு. தோலினாலான சிவப்பு பர்ஸ். பரணிலிருந்ததால் நிறம் மங்கி, பழைய வாடையுடன். அவளிடம் வாங்கி, தூசி தட்டுவதற்குள், அண்ணா பிடுங்கி கொண்டான்.

“அம்மாவோடது. வாய் மூட முடியாது. இந்த கிலிப் ரண்டும் சேரவே சேராது” வாய் திறந்துதான் இருந்தது.

“உள்ள என்ன இருக்கு பாரு” பர்ஸ் என்னிடம் வந்தது. வாயை திறந்து குப்புற கவிழ்த்தேன்.

சில்லறை காசுகள், பஸ் டிக்கட்கள், இரசிதுகள், துண்டு காகிதங்கள். ஒரு பாக்கெட் டயரி.

“இங்க பாரு அம்மா நவராத்திரிக்கு மைசூர் போறதுக்கு டிக்கட் எடுத்திருக்கா எல்லாருக்கும்” என்று டைரியினுள் இருந்த இரயில் டிக்கட்டை நீட்டினான்.

அங்கே நாங்கள் இருவரும் மட்டும் இருப்பது போல் ஒரு பாவனை, இந்த பேச்சில் காயுவுக்கு என்ன வேலை என்பது போல். எண்ணங்களை கலைக்க, நான் இரசிதுகளை தன்னிச்சையாக கிளறி கொண்டிருந்தேன்.

சாரதாஸ் ரசீது ஒன்றில் இருந்த தேதியை நம்பாமல், அண்ணாவிடம் கொடுத்தேன்.

“ஒரு நாளைக்கு முன்னாடி ரசீது. அம்மா கிரடிட் கார்டு கையெழுத்தும் இருக்கு” ஆச்சரிய பட்டான்

கேன்சர், இன்னும் இரண்டு மாதம்தான் என்று டாக்டர் சொன்னாலும் நடமாடி கொண்டுதான் இருந்தாள். கடைசி வாரம் படுக்கையில் இருக்கையிலும், சாரதாஸுக்கு சென்றிருக்கிறாள்.

“பட்டு பாவாடை மூன்று/நான்கு வயது” என்று கம்மிய குரலில் படித்துவிட்டு, என்னை பார்க்காமல் மெதுவாக காயுவிடம் கொடுத்தான்.

காயு புரியாமல் வாங்கிப் பார்த்து சற்றுக்கழித்து பெருமூச்சு விட்டாள். அந்த இரசீதையே திரும்ப திரும்ப பார்த்தாள். சற்று கை நடுங்கியபடி, அந்த இரசீதை நீவி விட்டு, அதை நன்றாக மடித்து பர்ஸ் உள்ளே வைத்தபடி, “இந்த பர்ஸ் நான் வச்சுக்கட்டுமா?என்று அதை வருடி கொண்டிருந்தாள்.

பரணில் இருக்க பிடிக்காமல் கீழே வந்தோம்.அண்ணா அவன் பரிசு வீணையுடன் அறைக்கு சென்றான். ஊருக்கு கொண்டு போவான் போல. தோழி இருக்கிறாளாம். கைபேசியில் அதிகம் முணுமுணுக்கிறான். வயலின் வாசிக்க ஆரம்பித்துவிட்டான் என்று ரவி சொல்லியிருக்கிறான்.

மழை நின்று, சூரியன், மேகங்களின் பின்னால் இருந்து எட்டி பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தான். மழை காற்றில் தோட்டம் எங்கும் பூக்கள் உதிர்ந்திருந்தன. அப்படி உதிர்ந்திருந்த ஒற்றை ரோஜா ஒன்றின் நனைந்த இதழ் வழியாக பிரதிபலித்த மெல்லிய சூரிய கீற்றுகள், மேலே செடியில் இருந்த மற்ற பூக்களை அரவணைத்தும், கிச்சு மூட்டியும், ஆறுதல் கூறிக் கொண்டிருந்தன.

என் கைபேசியில் அலுவலக தோழியிடம் இருந்து குறுஞ் செய்தி. “ஆப்பீஸ் ஆனுவல் டே பங்ஷனில் பாடுறீயா? சிவாதான் : ) : ) : ) கிட்டார் ப்ளே பண்றான். ஹொவ் மேனி டேஸ் பாத்ரூம் சிங்கிங் ஒன்லி , இதுதான் பெஸ்ட் சான்ஸ் டு கலக்கிஃபை”.

சரி என்று பதிலளித்துவிட்டு காயு அறை கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தேன். ஒரு முழு ஆள் அளவு பெரிய தலைகாணியைக் கட்டிப் பிடித்து, அதன் மேல் பர்ஸ்ஸை வைத்து, முட்டியை வயிற்றுக்கு இழுத்து படுத்திருந்தாள். முதுகு குலுங்கிக் கொண்டிருந்தது.

எத்தனையோ கேள்விகள் கேட்ட காயு, அம்மா எனக்கு எப்படி பால் கொடுப்பாள் என்று கேட்டதேயில்லை. அதனால் தான் என்னவோ நான் அவளுக்கு அந்த பூ தலைகாணியை பற்றி சொன்னதேயில்லை என்று நினைக்கிறேன். அடுத்த முறை, அந்த கதையை மாயீக்கும் இவளுக்கும் சொல்லி, பரணில் மீண்டும் தேட வேண்டும். தலைகாணி அங்குதான் எங்காவது இருக்கும்.

2 Replies to “பரண்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.