எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்திற்கும் ஒரு தேவை இருந்தாலே அது வெற்றி பெறுகிறது. தொலைதூரப் பயணம் என்பது மனிதர்களுக்குக் கால்நடையாகச் செல்வது அதிக நேரம் மற்றும் உடல் சோர்வு உண்டாக்குவதால், விலங்குகளில் ஆரம்பித்து (குதிரை, யானை), சைக்கிள் என்று முன்னேறி, கார் வரை தேவையானது. கடல் தாண்டிச் செல்ல கப்பல் மற்றும் விமானம் தேவையானது. தானோட்டிக் கார்களுக்கு என்ன தேவை?
மிக முக்கியமான காரணம் மனித ஓட்டுனர்கள்.
- இன்று உலகெங்கும், பல பெரிய நகரங்களில், பெரிய சாலைகள் இருந்தும், போக்குவரத்து நெரிசலால், முன்பு போலச் சரியான நேரத்திற்கு நாம் செல்லுமிடம் அடைய முடிவதில்லை.
- மனிதர்களும் அதிகரித்து விட்டதால், அனைவரின் போக்குவரத்துத் தேவைகளும் கார்கள் மூலம், இருக்கும் அதே சாலை அமைப்பில் நிறைவேற்றப்பட வேண்டும்.
- மலிவாகக் கார்களைத் தயாரித்தால், பிரச்னை சரியாகிவிடும் என்று நினைத்து, பல கோடி கார்களை வாகனத் தயாரிப்பாளர்கள் வருடா வருடம் தயாரிக்கத் தொடங்கினார்கள்.
- உலகின் பல அரசாங்கங்களும் இந்தத் தீர்விற்குத் துணை போயின. விற்பனை வரி, உரிம, நிறுத்துமிட, மற்றும் சாலை பயன்பாட்டு வருமானம் என்று அரசாங்கங்களும் பயனடைந்தன. ஒவ்வொரு நாட்டிலும் வரிப்பணத்தின் ஒரு பகுதி சாலைப் பராமரிப்பிற்குச் செலவிடப்பட்டது
- போக்குவரத்துக் கட்டுப்பாடு, ஓர் அளவிற்கு மேல், மனிதர்களால் இயலாது என்று வளர்ந்த நாடுகளில் சிக்னல்/கணினி மூலம் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முயற்சி, கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வரும் விஷயம். உதாரணத்திற்கு, கனடாவில், ஒரு பெரிய நகரம், அங்குள்ள சிக்னல்கள் அனைத்தையும் LED தொழில்நுட்பத்திற்கு மாற்றினால், மின்சாரச் செலவு மட்டும் வருடத்திற்கு 5 லட்சம் டாலர்கள் வரை மிஞ்சும் என்று கணக்கிட்டது என்றால் பாருங்களேன்
- கார்கள் பெருகியதால்,வட அமெரிக்காவில், மனிதர்கள் நகரின் மையப்பகுதியைத் துறந்து, புறநகர் பகுதியில் பெரிய வீடுகளில் வசிக்கத் தொடங்கினர். நகரங்கள் பெரிதாகிக் கொண்டே போயின. மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், வட அமெரிக்கப் பயணம் ஒன்றின் பொழுது, ‘என்ன, விடுதியும், இசை அரங்கமும் இரு நகரங்களிலா இருக்கிறது? காரை ஓட்டிக் கொண்டே இருக்கிறார்களே’ என்று அலுத்துக் கொண்டதாக எஸ்.பி.பி. ஒரு போட்டியில் சொன்னது, இந்த நகரப் பரவல் (urban sprawl) காரணமாகத்தான்.
- பெட்ரோல் மூலம் இந்தக் கார்கள் இயங்குவதால், புகை ஒரு பெரிய பிரச்னையாகிவிட்டது. பெய்ஜிங், டில்லி போன்ற நகரங்களில், காற்று மாசடைந்து அதனால் வரும் நோய்கள் அதிகமாகி, இதுவே ஒரு பெரிய சமூகப் பிரச்னையாகிவிட்டது
- இவற்றை எல்லாம்விடப் பெரிய பிரச்னை, விபத்துக்கள். வாகன விபத்துக்கள் என்பது இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. விபத்துக்களால், உயிர்கள் பரி போவது மட்டுமல்லாது, மருத்துவச் செலவுகள் நம்முடைய சமூகத்தில் அதிகரித்தும் வருகிறது. இதனால், நெருக்கடிச் சேவைகளுக்கு (emergency services), வாகனங்கள் மிகப் பெரிய பாரமாகி வருகிறது
- விபத்துக்களில், மிக முக்கியப் பிரச்னை, மது அருந்திய வாகன ஓட்டுனர்களால், ஏற்படும் விபத்துக்கள். அரசாங்கங்கள் எத்தனைதான் முயன்றாலும் உலகெங்கும் இவ்வகை விபத்துக்கள் அதிகரித்தே வருகின்றன
- நிறுத்துமிடம் என்பது இன்று வசிக்க ஒரு வீடு போன்ற ஒரு பூதாகாரமான பிரச்னையாகி விட்டது. சில நகரங்களில், வீடு கிடைத்தால்கூட, வாகன நிறுத்துமிடம் கிடைப்பதில்லை. குறிப்பாக, பழைய, பெரிய நகர மையங்களில் இது உல்கெங்கும் ஒரு பிரச்னை
இந்தப் பிரச்னைகள் நம்முடைய பொறுப்பின்மையால் வந்ததா? எளிதாக ஆம் என்று சொல்லி விடலாம். ஆனால், வேறு வழியில்லை என்று வரும் பொழுது, நாம் பிரச்னைகளுடன் வாழப் பழகி விடுகிறோம். ஆனால், நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் ஒரு விலையுள்ளது. சமூகம் அந்த விலையை வரிகள் மூலம் கொடுத்து வந்துள்ளது. இங்குப் பட்டியலிட்டுள்ள எல்லாப் பிரச்னைகளையும் தானோட்டிக் கார்கள் தீர்த்துவிடும் என்று அர்த்தமில்லை. ஆனால், மிகப் பெரிய பிரச்னையான விபத்துக்கள் மற்றும் குடிபோதையில் வாகன ஓட்டுதல் என்ற இரு பிரச்னைகளைத் தானோட்டிக் கார்கள் நிச்சயமாகத் தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவாக இந்தப் பிரச்னைகளைப் பார்ப்போம்.
பொதுவாக, நாம் பெட்ரோல் விலை அதிகமானால் சீறுகிறோம். அரபு சர்வாதிகாரிகளைத் திட்டுகிறோம். கார் செலுத்துவதன் பிரச்னைகளில், பெட்ரோல் ஒரு சின்னப் பங்கே வகிக்கிறது. மேலே உள்ள படம், ஒரு மைல் பயணத்திற்குச் சமூகம் தரும் விலையைப் பட்டியலிடுகிறது. நம்முடைய பாக்கெட்டிலிருந்து பெட்ரோல், கார் பராமரிப்பு மற்றும் காப்பீடு – இந்த மூன்றே செலவுகள் தான் என்று நினைக்கிறோம். சமூகத்திற்கு, இன்னும் பல செலவுகள் உள்ளன. போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் மற்றும் காற்று மாசு/புவி சூடேற்றம் பெட்ரோல் விலையை விடப் பல மடங்கு அதிகம்.
உதாரணத்திற்கு, AAA என்ற அமெரிக்க அமைப்பு, வருடத்திற்கு 10,000 மைல்கள் ஓட்டப்படும் ஒரு சாதாரணக் காருக்கு ஆகும் செலவுகளை இப்படிப் பட்டியலிட்டுள்ளது;
செலவு விவரம் | செலவு | விளக்கம் |
பெட்ரோல் செலவு | $1,500.00 | மைலுக்கு 15 சென்ட்கள் 10,000 மைல்களுக்கு $1,500 |
பராமரிப்புச் செலவு | $500.00 | மைலுக்கு 5 சென்ட்கள் 10,000 மைல்களுக்கு $500 |
டயர்கள் செலவு | $100.00 | மைலுக்கு 1 சென்ட். 10,000 மைல்களுக்கு $100 |
தேய்மானச் செலவு (depreciation) | $3,244.00 | பல கார்களின் சராசரி தேய்மானச் செலவு |
கடன் வசதிக் கட்டணம் (finance charges) | $831.00 | |
குத்தகை மற்றும் பதிவுச் செலவு (leasing and registration charges) | $600.00 | |
மொத்த செலவு | $6,775.00 |
நாம் முன்னே பார்த்த படத்தில், மைலுக்கு ஆகும் செலவில், அதாவது 15 சென்ட்களில், மற்ற சமூகச் செலவு பளூ எவ்வளவு என்று பார்தோம். 15 சென்ட்களில், 13.1 சென்ட்கள் இவ்வகைச் செலவிற்கே சரியாகி விடுகிறது. ஒரு கார் சராசரி 10,000 மைல்கள் ஒரு ஆண்டுப் பயணிக்கிறது என்று வைத்துக் கொண்டால், சமூகச் செலவு 13.1*10,000 = $1,310. அமெரிக்காவில், ஏறக்குறைய 2014 –ல் 243 மில்லியன் வாகனங்கள் இருந்ததாக ஒரு புள்ளி விவரம் சொல்லுகிறது. அதாவது, சமூகச் செலவு, இந்த வாகனங்களால்,
243,000,000 * $1,310 = $318,330,000,000
இந்திய ரூபாய்க் கணக்குப் படி (டாலருக்கு 66 ரூபாய்) 21 லட்சம் கோடி ரூபாய்கள். இந்தக் கணக்கில், கட்டுமானச் செலவுகள் எதுவும் அடங்காது. சாலைப் பராமரிப்பு, புதிய சாலைகள் மற்றும் பாலம் கட்டும் செலவு, புதிய சிக்னல்கள், புதிய சாலைக் குறிகள் எதுவும் இதில் அடங்காது.
கார்களில் சேர்க்கப்படும் பாதுகாப்பு அம்சங்கள் ஒவ்வொன்றும் பல கோடி கார்கள் ஓடுவதால், அதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என்பது பல வல்லுனர்களின் கருத்து. ஆனால், பாதுகாப்பு அம்சங்கள், பெரும்பாலும், விபத்தை எப்படித் தவிர்ப்பது என்ற நோக்கத்தையே முன் வைக்கின்றன. உயிர் சேதத்தை எப்படிக் குறைப்பது என்பதே இவற்றின் நோக்கம். உதாரணத்திற்கு, இருக்கை வார் (seat belts) மற்றும் காற்றுப் பைகள் (air bags) விபத்து விஷயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய முன்னேற்றங்கள். ஆயினும், உயிர்சேதத்தைக் குறைத்த இவ்வகை அம்சங்கள், விபத்தைத் தவிர்ப்பதில் வெற்றி பெறவில்லை. ஒரு 5 ஆண்டுகளுக்கு முன்பு, கார் விபத்துக்களால் இருந்த உயிரிழப்பு அளவு, இன்று இல்லை என்பது நிச்சயம். ஆனாலும், விபத்துக்கள் நேர்ந்த வண்ணம் இருக்கின்றன. நாம் பார்த்த 2.4 சென்ட்கள் (ஒவ்வொரு 15 சென்ட்களுக்கும்) இன்னும் குறைந்தபாடில்லை.
அத்துடன், இந்தப் படத்தில் காட்டாத இன்னொரு விஷயம் வாகனங்களை நிறுத்துமிடம் பற்றியது. ஒரு புள்ளிவிவரத்தின் படி, லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மையப் பகுதியில் உள்ள நிலப்பரப்பில் 81% கார்கள் நிறுத்துமிடத்திற்கே சரியாக உள்ளது. இதன் அர்த்தம், வெறும் 19% –ல் கட்டிடம், மனிதர்கள் எல்லோரும் இருக்கிறார்கள் என்பதல்ல. பல மாடி கார் நிறுத்துமிடங்களின் நிலப்பரப்பையும் சேர்த்துக் கொண்டால், கணக்கு இப்படி பூதாகரமாகத் தெரிகிறது. உலகின் எல்லாப் பெரிய நகரங்களிலும் இதுவே பிரச்னை.
இன்னொரு புள்ளி விவரப்படி, ஒரு சராசரிக் கார், தன்னுடைய பயனுள்ள ஆயுளில், வெறும் 5% நேரமே செலுத்தப்படுகிறது. 95% நேரம் நிறுத்தப்படுகிறது. இதைப் போன்ற நில விரயம் வாய்ந்த ஒரு தொழில்நுட்பம் ஏதுமில்லை. கார்கள் வருவதற்கு முன்னர், லண்டன் மாநகரத்தின் பெரும் பிரச்னை, குதிரை நிறுத்துமிடம் மற்றும் அதன் சாணம் என்றிருந்தது. இன்று, நம்முடைய பல நகரங்களின் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் ராட்சசனாகக் கார் மாறிவிட்டது!
பிரச்னைகளை அடுக்கியாகிவிட்டது. அடுத்தபடியாக, தானோட்டிக் கார்கள் எந்த வகைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும் என்று பார்ப்போம்.
டெஸ்லா போன்ற கார்கள் மின்கார்களாகவும், தானோட்டித் தன்மை வாய்ந்த கார்களாகவும் இருப்பதை, இங்கு ஒரு விதிவிலக்கு என்றே அணுகுவோம். இன்னும் சில ஆண்டுகளில் வரும் கார்கள் பெட்ரோலிலேயே இயங்கும் என்று வைத்துக் கொள்வோம்.
- நிறுத்துமிடம்: தானோட்டிக் கார்கள், ஒருவரை, அவர்களுக்கு வேண்டிய இடத்தில் இறக்கி விட்டு, அடுத்த பயணி இருக்கும் இடத்திற்குப் பயணிக்கலாம். எங்கே நிறுத்துவது என்று அல்லாட வேண்டாம். அப்படியே, அடுத்த பயணி கிடைக்கவில்லையென்றாலும், ஊரின் மையப் பகுதி அல்லாமல், ஒரு 30 அல்லது 50 கி.மீ. தள்ளி, நிறுத்திக் கொள்ளலாம். நகரின் மையப் பகுதியில், அடுக்கு மாடி நிறுத்துமிடங்கள் மற்றும், தெருவோர நிறுத்துமிடங்கள் என்று இடத்தை வீணாக்க வேண்டியதில்லை. தானோட்டிக் கார்களின் மிகப் பெரிய தாக்கம் நிறுத்துமிடமாக இருக்கும். உள்ளூர் அரசாங்கங்கள் ஊரின் வெளியே இவற்றை நிறுத்த இடம் தர வேண்டி வரும். இன்றுள்ளதைப் போல நிறுத்துமிட வாடகைப் பணம் கிட்டாது. ஒன்று மட்டும் நிச்சயம் – தானோட்டிக் கார்கள் 5% பயனுடன் மனிதக் கார்கள் போலத் தூங்காது
- போக்குவரத்து நெரிசல்: நகரின் மையப் பகுதிகளில், நிறுத்துமிடம் தேடும் கார்கள் குறைந்தாலே, சற்றுப் போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், பெரும்பாலும், போக்குவரத்து நெரிசலுக்கான முக்கியக் காரணம், மனிதர்கள் கார்களை, சீரான வேகத்தில் செலுத்தாதது, மற்றும் வாகனங்களுக்கிடையில் சரியான இடைவெளி விடாதது. இவ்விரண்டு பிரச்னைகளையும் தானோட்டிக் கார்கள், சீராக ஓட்டுவதால், நேர விடாது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பது வாதம். இன்னும் நடைமுறைக்குத் தானோட்டிக் கார்கள் வராததால், பொருத்திருந்துப் பார்க்க வேண்டும்
- காற்று மாசு/புவி சூடேற்றம்: நகர மையப் பகுதிகளில் நின்று நகரும் போக்குவரத்து பெட்ரோல் விரயத்திற்குப் பெரும் காரணம். மேலும், ஊரும் வாகனங்கள் காற்றை மாசுபடுத்துகின்றன. ஒரு பேச்சிற்கு, ஒரு நகரில் அனைத்து வாகனங்களும் தானோட்டி வாகனங்கள் என்று வைத்துக் கொள்வோம். சீராக ஒரே வேகத்தில் நகரும் வாகனங்கள் ரயிலைப் போன்று இயங்கும். இதனால், நின்று நகரும் போக்குவரத்து வெகுவாகக் குறையு வாய்ப்பு உள்ளது
- விபத்து: பெரும்பாலான விபத்துக்கள் இரு காரணங்களால் நிகழ்கின்றன. 1) அளவிற்கு அதிகமான வேகம் 2) மனித ஓட்டுனர் தவறுகள். இவை இரண்டும் தானோட்டிக் கார்கள் பெரிதும் குறைத்துவிடும் என்ற நம்பிக்கை வல்லுனர்களுக்கு இன்றுள்ளது. முதலில், ஒரு சாலையில், குறிப்பிட்டுள்ள வேகத்திற்கு மேல் தானோட்டிக் கார்கள் செல்லாது. மேலும், மனிதர்களைப் போல, தானோட்டிக் கார்கள், சரியாகக் கவனிக்காமல், வரைபாதைகளை மாற்றாது
- குடிபோதை விபத்துக்கள்: நிச்சயமாக இது நேராது என்று தைரியமாகச் சொல்லலாம். தானோட்டிக் கார்கள் மது அருந்தப் போவதில்லை. அதனால், காருடையை கணிப்புத் தவறாவதற்கு வாய்ப்பே இல்லை
நாம் பார்த்தப் படத்தில் உள்ள 13.1 சென்ட்களில், குறைந்தபட்சம், பாதியாவது மிஞ்சும் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. மின் கார்கள் ஒலியளவையும் சற்றுக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பின் ஒரு பகுதியில், இந்த வகைக் கார்கள் எப்படிப் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்று விரிவாகப் பார்ப்போம். ஈலான் மஸ்க் சொன்னச் சட்ட புறம்பான மனித கார் ஓட்டுனர்கள் என்ற நிலை வர இன்னும் 50 ஆண்டுகளாவது ஆகும் என்று சொல்லலாம். ஒன்று மட்டும் நிச்சயம் – மோசமான மனித கார் ஓட்டுனர்களால், சமூகத்திற்கு ஏராளமான பொருளாதார/சுகாதார பளு கடந்த 60 ஆண்டுகளாக நேர்ந்துள்ளது மறுக்க முடியாத நிகழ்வு.
பாதுகாப்பு அம்சங்களைப் படிப்படியாக வாகனத் தயாரிப்பாளர்கள் அறிமுகப் படுத்தி வந்துள்ளார்கள் என்று பார்த்தோம். பல அரசாங்க போக்குவரத்து மற்றும் பொறியாளர்களும், உண்மையில், தானோட்டிக் கார் என்றால் என்னவென்று அழகாகப் பட்டியலிட்டுள்ளார்கள்.
நன்றி: Scientific American, June 2016
Society of Automobile Engineers (SAE) என்ற அமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன், இதை முன் வைத்தது. வழக்கம் போல, அமெரிக்க அமைப்பான National Highway Traffic Safety Administration (NHTSA) சற்று, இதை மாற்றி, SAE –யின் 6 அடுக்குகளுக்குப் பதில் 5 அடுக்குகளை முன் வைத்துள்ளது. உலகின் பல நாடுகளும் SAE முறையை அங்கீகரித்துள்ளதால், அதோடு, இரண்டிற்கும் அதிக வித்தியாசம் இல்லாததால், அரசாங்க சச்சரவிற்குள் சிக்காமல், நாம் SAE முறையை இங்கு விளக்குவோம்.
- முதல் மூன்று அடுக்குகளிலும், மனித ஓட்டுனர் முழுப் பொறுப்பில் இருக்கிறார். அவ்வப்பொழுது சில சமயங்களில் (Cruise control, lane assist) தானியக்கம் நிகழும். சுற்று வட்டாரத்தில் நிகழும் அனைத்து விஷயங்களையும் மனித ஓட்டுனர் கவனிக்க வேண்டும். இதைப் பற்றி, காருக்குத் தெரியாது. இன்றைய பெரும்பாலான கார்கள், இந்த வகையில் அடங்கும்.
- நான்காம் அடுக்கில், ஒரு முக்கியமான பொறுப்பு மனிதனிடமிருந்து எந்திரத்திற்கு மாறுகிறது. சுற்று வட்டாரத்தைக் கண்காணிப்பது (அதாவது, எந்தப் பக்கத்தில் இன்னொரு கார் வருகிறது, அருகே உள்ள சிக்னலில் சிவப்பா, பச்சையா, திரும்புவதற்கு முன், பாதசாரி உள்ளாரா போன்ற விஷயங்கள்) என்பதை எந்திரம் செய்கிறது. சில சமயம், எந்திரம் தடுமாறும் பொழுது, மனிதரால் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள முடியும். இன்றைய டெஸ்லாக்கள் இதைச் செய்கின்றன. இவற்றிற்குச் சுற்று வட்டாரத்தைக் கண்காணிக்கப் பல உணர்விகள் மற்றும் கணினி உள்ளது.
- ஐந்தாம் அடுக்கில், பெரும்பாலும் எந்திரம் கார் ஓட்டுகிறது. ஆனாலும், சில குறிப்பிட்ட தருணங்களில் மட்டும் எந்திரமே மனித உதவியை நாடும்
- ஆறாம் அடுக்கில், மனித ஓட்டுனரே தேவையில்லை. ஏன், மனிதர்களுக்கு பரிச்சயமான accelerator, brake, steering எதுவுமே இவ்வகைக் கார்களில் கிடையாது. மனிதர்கள் வெறும் பயணிகள். கூகிளின் கார்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. சட்டம் இன்னும் இவ்வகைக் கார்களை அனுமதிக்காததால், கூகிள் தொழிலாளி ஒருவர் எப்பொழுதும் இவ்வகைக் கார்களில் ஓட்டுனராகப் பயணிக்கிறார்
மிகவும் மதிநுட்பமான தொழில்நுட்பம் இவ்வகைக் கார்களின் பின்னால் இயங்குகின்றது. வளர்ந்து வரும் இந்தத் தொழில்நுட்பத்தை, அடுத்த சில பகுதிகளில் விரிவாகப் பார்ப்போம்
பயனுள்ள கட்டுரைத் தொடர். பாராட்டுகள்.
முந்தைய அத்தியாயம் ஒன்றில், வணிக ரீதியில் இயங்கும் விமானங்களில் ஆட்டோ பைலட் வசதி 1910ஆம் ஆண்டே தொடங்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.
ஆனால், இதுவரை எந்த ஒரு பயணிகள் விமானமும் மானுட பைலட்டுகள் இல்லாமல் இயக்கப்படுவதாகத் தெரியவில்லை. விமானப் பயணமே இப்படி இருக்க, ஓட்டுனரின்றி இயங்கும் கார்கள் நடைமுறையில் சாத்தியமாகுமா?
அன்புள்ள குரு சாமிநாதன்
தங்கள் கருத்திற்கு நன்றி. விமானங்களில், ஆட்டோ பைலட் வசதி இருந்தும், ஒரு மனித பைலட் இருப்பது உண்மைதான். அத்துடன், இன்றைய டெஸ்லாவிலும், தானோட்டி அம்சங்களுக்கு ‘ஆட்டோ பைலட்’ என்றே பெயரிட்டுள்ளார்கள். இன்றைய சட்டம் ஒரு ஓட்டுனர் இன்றி காரைச் செலுத்த அனுமதிப்பதில்லை.
விமான ஆட்டோ பைலட்டிற்கும் கார்களின் தானோட்டி வசதிக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. SAE –யின் நான்காவது அடுக்கு, இந்த நிலையையே குறிக்கிறது. நடைமுறையில் இன்னும் சில ஆண்டுகளில் இது சாத்தியம் என்பது தொழில்நுட்ப அணுகுமுறையை வைத்து தாராளமாகச் சொல்லலாம். ஆனால், பிரச்னை என்னவோ கார் செலுத்தும் மனிதர்கள், அரசாங்கம், சட்டம், மற்றும் காப்பீடு போன்ற பல விஷயங்கள் உள்ளன.
உங்களுக்கு முழுமையான பதிலைச் சொல்ல ஆசைதான். ஆனால், எழுதிய கட்டுரைகளின் சுருக்கமாகப் போய்விட்டால், படிக்க சுவாரசியம் இருக்காது. ஆழமான தொழில்நுட்ப அலசலைத் தவிர, உங்களது கேள்விகளுக்கு அடுத்து வரும் இத்தொடரின் கட்டுரைகள் நிச்சயமாக பதிலளிக்கும். இல்லையேல் விடாதீர்கள் – மீண்டும் இந்த கட்டுரைத் தொடரின் இறுதியில் கேளுங்கள் – பதிலளிப்பேன்.
நன்றி
ரவி நடராஜன்