ட்ரம்பியம் ஆளத் துவங்குகிறது

அதிபராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தினம் ஒரு அதிரடி அறிக்கையை வெளியிட்டு வெள்ளை மாளிகையை பதட்டத்துடனே வைத்துக் கொண்டிருக்கிறார் அதிபர் டிரம்ப். அவருடைய வெற்றியைத் தீர்மானித்ததே ரஷ்ய அதிபர் புடின் என, எஃப்.பி.ஐ மூலம் தீர விசாரிக்க அதிபர் ஒபாமா அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டதும், ஜனநாயக கட்சியினர் இன்றும் அந்த விவாதத்தைத் தொடருவதும், அதிபர் டிரம்ப்பும் அதனை மறுத்து முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுவதும் மக்கள் அறிந்ததே. தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தாலும் எதிர்ப்பு அலை நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதும் அவருடைய வழக்கமான பாணியில்அவற்றையெல்லாம் புறந்தள்ளுவதும் அமெரிக்க மக்களுக்கு அதிர்ச்சியாகவும் ஜீரணிக்க முடியாத விஷயமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

அதிபர் வெற்றியைத் தொடர்ந்து தலைமைப்பதவிகளுக்கு டிரம்ப் தேர்ந்தெடுத்தவர்கள் சிலர் அரசியல் பின்புலமில்லாதவர்கள். வியாபார உலகில் கோலோச்சிய தலைமை நிர்வாக அதிகாரிகள். அவரின் தேர்வுகளில் விருப்பமில்லாவிட்டாலும்அவருடைய அதிரடி முடிவுகளுக்கு அவர் சார்ந்த கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

டிபார்ட்மென்ட் ஆஃப் ஸ்டேட்-ன் தலைவர் பதவி அதிபர் பதவிக்கு அடுத்தபடி மிகப் பொறுப்பான ஒன்றாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியலை அறிந்தவரும், அதிபருக்கு மிகவும் நெருக்கமானவரும், இணக்கமானவருமே இப்பதவிக்குப் பொருத்தமான நபராக இருக்க முடியும்.

இப்பதவியிலிருப்பவர் டிபார்ட்மென்ட் ஆஃப் ஸ்டேட் ஐ வழிநடத்தி  அதிபர் எடுக்கும் வெளியுறவுக் கொள்கைகளில் முறையான பங்களித்து அயல்நாட்டில் அக்கொள்கைகளைச் செயல்படுத்தத் தன் துறைசார்ந்த தூதுவராகப் பணிபுரிய வேண்டும், வெளிநாட்டில் அமெரிக்கத் தூதரகங்கள், பிரநிதிநிதிகளை நியமிப்பதில் அதிபருக்கு ஆலோசனை வழங்க வேண்டும், பிற நாடுகளுடன் பேச்சு வார்த்தை மற்றும் வணிக ரீதியான மாநாடுகளில் பங்கேற்று முடிவுகளை உள்நாட்டில் செயல்படுத்த முயல வேண்டும், வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்- என நீள்கிறது இப்பதவியின் பொறுப்புகள்.

தொழில் முறை அரசியல் அனுபவமிக்க ஜான் கெர்ரி, ஹிலரி கிளிண்டன், காண்டலிசா ரைஸ், காலின் பாவெல் முந்தைய ஒபாமா மற்றும் புஷ் அரசில் இப்பொறுப்பான பதவியை வகித்தவர்கள்.

முந்தைய அரசினால் முறையாக கையாளப்படாத ISIS, சீனா, அரபு நாடுகள், சிரியா மற்றும் ரஷ்யாவுடனான பல பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டிய கூடுதல் பொறுப்புகளும் டிரம்ப் அரசிற்கு உள்ளது. அதற்கான தகுதியுள்ளவர் வெளியுறவுக் கொள்கைகளை அதிபருடன் கலந்தாலோசித்து நாட்டை வழிநடத்திட அனுபவமும் ஆட்திறனும் கொண்ட பலரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு இறுதியில் அதிபரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அறுபத்தி நான்கு வயதான, எக்ஸான் மொபில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரெக்ஸ் டிலர்சன்.

இப்பதவிக்கு நியூயார்க் மேயராக இருந்தவரும் தேர்தலில் டிரம்ப்பிற்குப் பெரும் ஆதரவளித்தவருமான ரூடி ஜூலியானி தேர்வாகலாமென எதிர்பார்ப்பிருந்த நிலையில் செனட்டர் பாப் கார்க்கெர், மாஸசூஸெட்ட்ஸ் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் மிட் ராம்னி, முன்னாள் ராணுவத்தளபதி மற்றும் CIA டைரக்டராகப் பணிபுரிந்த டேவிட் பெட்ரேயஸ், யூட்டா மாநில கவர்னராக இருந்த ஜான் ஹண்ட்ஸ்மான் ஜூனியர் எனப் பலரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தாலும் டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்ததால் டிசம்பர் 2016ல் எக்ஸான் தலைமை நிர்வாக அதிகாரி ரெக்ஸ் டிலர்சனை தன்னுடைய வெளியுறவுத்துறைச் செயலாளராக அதிபராகப் பதவியேற்கும் முன் அறிவித்தார் டிரம்ப்.

அவருடைய எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் ரஷ்யாவுடன் வியாபார ஒப்பந்தங்கள் போட்டிருப்பவர், அமெரிக்கா ரஷ்யா மீது விதித்திருக்கும் தடையினால் ஒப்பந்தங்கள் நிறைவேறாமல் இருக்கும் நிலையில் இவர் எங்ஙனம் இத்தகைய உயர்பதவிக்குப் பொறுப்பானவராகவும் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவராகவும் இருக்க முடியுமென  ஜனநாயக மற்றும் குடியரசுக்கட்சியினரிடையே அவருக்குப் பலத்த எதிர்ப்பு தொடர்ந்த வேளையிலும் செனட்டுக்குப்  பரிந்துரைத்தார் அதிபர் டிரம்ப்.

டிரம்ப்பின்  ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ அறிக்கையைச் சார்ந்த வெளியுறவுக் கொள்கைகளில் அதிருப்தி தொடரும் வேளையில் ரெக்ஸ் டிலர்சனை சரியான தேர்வாக ஏற்றுக் கொள்ள டிரம்ப்பை ஆதரித்தவர்களுக்கும் அவருடைய கட்சியினருக்குமே குழப்பங்கள் தொடர்ந்தாலும் நாட்டின் உயர்பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அதற்கான செனட் குழு உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற சட்டத்தால் தகுதியான ஒரு நபரையே தேர்ந்தெடுப்பார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை.

ஜனவரி 11, 2017 அன்று பதினோரு குடியரசுக்கட்சி செனட்டர்களும், பத்து ஜனநாயகக்கட்சி செனட்டர்களும் கொண்ட வெளிநாட்டு உறவுக்கான செனட் குழுவினரின் பல கேள்விகளை ரெக்ஸ் டிலர்சன் எதிர்கொண்டார். பெரும்பாலானகேள்விகள் அவருடைய ரஷிய ஆதரவு நிலைப்பாட்டினை குறித்தே இருந்தது.

ரஷிய அதிபர் புட்டினுடனான நெருக்கம், அமெரிக்கா ரஷியா மீது தடை விதித்திருந்த வேளையில் ரஷிய அரசின் ‘ஆர்டர் ஆஃப்   ஃப்ரெண்ட்ஸிப்’ அவார்ட், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அவருடைய நிறுவனத் தொடர்புகள் செனட் முன்பு அதிகம் விவாதிக்கப்பட்டது.

குடியரசுக்கட்சியின் செனட்டர் மார்க் ரூபியோ, ரஷிய அதிபர் புடின் சிரியாவில் மனித உரிமை மீறல்கள் செய்த போர்க்குற்றவாளி. தன்னை எதிர்ப்பவர்களையும் உயிரோடு விட்டு வைப்பதில்லை என்று குற்றம் சாட்டிக் கேள்விகள் எழுப்பியபோது, அதற்கான ஆதாரங்கள் மற்றும் வெளிப்படையான தகவல்கள் ஏதுமில்லாமல் அப்படி புடினைக் குற்றம் சாட்டுவதை ஒத்துக் கொள்ள முடியாதென ரெக்ஸ் டிலர்சன் ரூபியோவின் குற்றச்சாட்டுக்களை மறுத்தார். ஃபிலிப்பைன்ஸ் அதிபரைப் பற்றின கேள்விகளுக்கும், அரபு நாடுகளில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும் ஊடகச் செய்திகளைக் கொண்டு தன்னால் கருத்துக்கள் எதுவும் சொல்ல இயலாது. நீங்கள் உலகை எங்ஙனம் காண்கிறீர்களோ அப்படித்தான் நானும் காண்கிறேன் என்று ரெக்ஸ் டிலர்சன் தன்னுடைய கருத்துக்களைக் கூற மறுத்து விட்டார்.

ரஷியாவின் கொள்கைகள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக இருந்தாலும் சில விஷயங்களில் இரு நாடுகளும் சேர்ந்து பணியாற்ற வேண்டியிருக்கும் என்பதையும், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்ய அதிபர் புடின் சம்பந்தப்பட்டிருப்பாரெனச் சந்தேகம் கொள்வதாகவும் செனட் முன்கூறியதும் பலரை வியப்புக்குள்ளாக்கியது.

அரபு நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குத் தஞ்சம் புகும் இஸ்லாமியரை தடை செய்வதில் தனக்கு உடன்பாடு இல்லையென்றும், அவர்களைக் கண்காணிக்கும் ரெஜிஸ்ட்ரியை உருவாக்கத் தேவைப்படும் தகவல்களைச் சேகரிக்கும் முறையான திட்டங்கள் எதுவும் இல்லையென அதிபர் டிரம்ப்-ன் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராகப் பேசியதும், டிரான்ஸ்பசிபிக் கூட்டு வர்த்தக ஒப்பந்த விஷயத்திலும் அவருடைய கருத்து டிரம்ப்பிறகு எதிராகவே இருந்ததும் செனட் எதிர்பாராத ஒன்றாக இருந்திருக்க வேண்டும் .
ரஷியாவின் மீதுள்ள தடைகளைத் தன் நிர்வாகம் ஆதரித்தோ எதிர்த்தோ கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. தடையால் ஏற்படும் வியாபார இழப்புகளை விவாதித்திருக்கிறோம். தடை சரியா தவறா என்பதை விட வணிக ரீதியான இழப்பு அமெரிக்காவிற்கு ஏற்படும் என்று தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் மனிதர்களால் ஏற்படுகிறதா என்று தனக்குத் தெரியாது ஆனால் அதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அதன் விளைவுகள் தீவிரமாகவே இருக்க வாய்ப்பிருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னவர், பருவநிலை மாற்றம் குறித்த தவறான கருத்துக்களை எக்ஸான் மொபில் பரப்புவதாக டிம் கெயின் கேட்ட கேள்விக்குப்பதிலளிக்க முடியாமல் தடுமாறவும் செய்தார்!

செனட்டில் மார்க் ரூபியோவின்  கடுமையான கேள்விகளால் அவருடைய ஒரு ஒட்டு குறித்த சந்தேகத்தால், இறுதி வரை இப்பதவிக்கு இவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற ஐயம் நிலவியது.

உலகின் பெரிய நிறுவனங்களில் ஒன்றான எக்ஸான் மொபிலில் 75,000 ஊழியர்களை நிர்வகித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தங்கள் நிறுவனங்களை நிறுவிய அனுபவம் ஸ்டேட் டிபார்ட்மெண்ட்டை வழிநடத்த உதவும். இப்பதவியில் இதற்கு முன்பிருந்த ஜான்கெர்ரி, ஹில்லரி கிளிண்டன் இருவரிடத்திலும் இல்லாத இவ்வனுபவம் ரெக்ஸ் டிலர்சனை பொருத்தமானவராகவும்;

தன் எண்ணெய் நிறுவனத்திற்காக ரஷியா மற்றும் கட்டார் நாடுகளுடனான தொடர்பு வெறும் வியாபார தொடர்பே என்று செனட் முன் அவர் கூறியதும், ரஷியா அமெரிக்கா விரிசல் உறவை முறையாகக் கையாளத் தெரிந்தவராகவும் கருதி, தனது நிறுவனத்திற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல உயர் அதிகாரிகளுடன் வெற்றிகரமாகப் பேச்சுவார்த்தை நடத்திய அனுபவமும், உள்நாட்டு வெளிநாட்டு அரசியலை அறிந்தவரும், முடிவுகளைச் சுயமாக எடுக்கும் ஆற்றலும், அதிபருக்கு நெருக்கமாக அறியப்படுபவராக இருப்பதால் இப்பதவிக்குப் பொருத்தமானவரெனச் செனட்டும் ஒப்புதல்அளித்துள்ளது.

வெளியுறவு செனட் குழுவில் ஆதரவளித்த பதினோரு செனட்டர்களும் டிரம்ப் கட்சியினரே. கடைசி நேர வாக்களிப்பில் ரூபியோவின் வாக்கு இவருக்கு ஆதரவாக அமைந்தது. ஜனநாயக கட்சியினர் அனைவரும் இவருடைய ரஷிய ஆதரவு, கார்ப்பரேட் நிர்வாகத்திறமை, ஆகியன் நாட்டின் உயர்பதவிக்கும், கொள்கைகளுக்கும் ஒரு தூதராவதற்குப் பொருத்தமற்றவை என இவருக்கு எதிராகவே வாக்களித்தனர். அமெரிக்க செனட்டில் அனைத்து (ஐம்பத்தி மூன்று) குடியரசுக்கட்சி செனட்டர்களும், மூன்று ஜனநாயக கட்சி செனட்டர்களும் ஆதரவளித்து வரலாற்றிலேயே அதிக எதிர்ப்புகளுக்கிடையே பிப்ரவரி 1, 2017ல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ரெக்ஸ் டிலர்சன் .

அதிபரின் பரிந்துரையைப் பரிசீலனை செய்யும் குழுக்களும், அவர்களின் விவாதங்களும், தகுதியான நபரை பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமைகள் இருப்பினும், டிரம்ப் அரசின் செனட் மெஜாரிட்டியால் மட்டுமே ரெக்ஸ் டிலர்சன் பலரின் எதிர்ப்புக்களையும் மீறி இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது என் கருத்து.

ஒருவர் எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும் அவரைக் கேள்வி கேட்கும் உரிமை அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்குஉள்ளது என்பதை இத்தகைய செனட் குழுக்களும் விவாதங்களும் ஜனநாயக நாட்டில் சாத்தியம் என்பதே, திராவிட கரைவேட்டி மற்றும் வாரிசு இந்திய அரசியலை கண்டிருந்த எனக்கு ஆச்சரியமான ஒன்று. முடிவுகள் எதுவாகினும் ஈமெயில் சர்வர் விவாகரத்தில் ஹிலரி கிளிண்டனையும், தேர்தல் நெருங்குகையில் வெளியிட்ட கருத்துக்களுக்காக FBI டைரக்டர் ஜேம்ஸ் கோமியையும் மக்கள்அறிய விசாரித்தது ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை முழுவதுமாக இழக்காமல் இருக்க வைத்திருக்கின்றன.

அடுத்த நான்கு வருடங்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரங்கேறப் போகின்ற பல நிகழ்வுகளை ரெக்ஸ் டிலர்சனின் கொள்கைகள் தீர்மானிக்கும். நாட்டின் வளர்ச்சியையும் மக்களின் நம்பிக்கையையும் மதித்து அரசியல் முன்அனுபவம் இல்லாவிடினும் கார்ப்பரேட் அனுபவமும், பல நாடுகளில் தனது நிறுவனத்திற்காகப் பல்வேறு அரசுகளுடன்ஒத்துழைத்த நிர்வாகத்திறமையும் இப்பதவியில் அவர் திறம்பட ஆள்வார். அதிபர் டிரம்ப்ன் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ தேர்தல் வாக்குறுதியையும் காப்பாற்றுவார் என்ற அமெரிக்க மக்களின் நம்பிக்கையோடு நிறைவு செய்கிறேன்.

நம்பிக்கை தானே வாழ்க்கை!

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.