சின்னக்
கண்ணாடித் தொட்டிக்குள்
கலர் கலர் மீன்கள்
நீந்துவது
முடிவில்லாததாய்
நீரில்
கண்ணாடித் தொட்டிக்குள் சுருங்கிக்
கடலா?
அம்மாவைக் கூப்பிட்டு கூப்பிட்டு காண்பிக்கும் குழந்தை.
~oOo~
கடலைப்பார்த்து
நெடுநாட்கள் ஆகிறது:
பரிசுத்தமான அன்புடன்
ஆர்ப்பரித்து ஓடிவந்து
கால்தழுவி உள்ளடங்கிய
வெள்ளலைகள்
என் பாதம்
புதைந்திருந்த மணலோடு
என் பயணத் தொலைவையும்
அரித்துச் சென்றன.
கடலின் ஈரக்காற்று
முகமெங்கும் பிசுபிசுப்பாய் மொய்த்தது.
அலைகளை மார்போடு
தழுவிக்கொண்டபோது
கடலின் உவர்ப்பு நாவில்
ஒட்டிக் கொண்டது.
மூழ்கியெழுந்து
கண்கள் சிவந்துவிட்டன.
கடலுக்காக நான் எதையும் வாங்கிச் சென்றிருக்கவில்லை எனினும் கடல் என்
உடுப்புகளின் பைகளில்
நிரம்பிவிட்ட மணற்துகள்களில்
சில இன்றும் நெருடுகின்றன
உள்ளாடையில்.
நுரைத்துப் பொங்கும் அந்நீலச்சமுத்திரத்தை
மீண்டும் காண்கையில்
அணைத்துக்கொள்ள முனைந்துவரும் அலைகளோடு
கண்ணாமூச்சியாடும் பொருட்டு நான்
எங்கு ஒளித்து வைப்பேன் என் பாதங்களை.
~oOo~
விடுமுறை நாட்களின்
வகுப்பறையில்
நிசப்தத்தின் ஈரம் தங்கிக்கொள்கிறது
சிதறிக்கிடக்கும் துண்டுத்தாள்கள்
காற்றில் படபடத்துச் சொல்கின்றன
எங்களின் வாசனைகளை
எங்களுக்கான அடையாளங்களுடன்.
எழுதி அழிக்காது விட்டுப்போன
கரும்பலகையின் எழுத்துகள்
வாசலை நோக்கியபடி
ஊர்ந்துகொண்டிருக்கின்றன.
துளைவிழுந்த பானையென
தனக்குள் வெறுமையை நிரப்பியபடி
சலனமற்றிருக்கிறது வகுப்பறை.
– தனசேகர்
~oOo~