உடன்வரும் நிழல்

தெளிவு, உறுதி, இறுதி, உண்மை போன்றவற்றையும் மையம், நிர்ணயம், முழுமை என்பவற்றையும் ஓயாமல் வலியுறுத்தும் ஆதிக்க கருத்தியல்களுக்கும் கேள்விகள் இன்றி ஒப்படைப்பையும் முழு நம்பிக்கையைம் கொண்டியங்கும் பொதுக்கள மதிப்பீடுகளுக்கும் இடையில் உள்ள நுண் இணைப்புகள் கேள்வி மறுப்பு, ஆய்வு மறுப்பு என்பவற்றின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றன. இந்த நுண் இணைப்புகளைத் துண்டித்து கேள்விகளைப் பெருக்கும் சொல்லாடல், கதையாடல், எடுத்துரைப்பு என்பவற்றை உருவாக்கும் செயல்தான் சமூகத்தை அறம்சார் அரசியல் நோக்கி நகர்த்தக் கூடியது.
: பிரேம் – ரமேஷ்
16-03-2006

அமெரிக்கக்காரி சிறுகதையை முன்வைத்து

புழல் சிறையில் சிறைக்கம்பிகளை எண்ணும்போதுதான் அந்த ஈ அவன் கண்ணில் பட்டது. அதற்கு மெள்ள பயிற்சி தர ஆரம்பித்தான் அந்தக் கைதி. கயிற்றில் மேல் நடப்பது, ஒற்றைச் சக்கர வண்டியை கயிற்றின் மேல் விடுவது, சாதத்தில் கல் பொறுக்குவது போன்றவற்றை அந்த ஈ கற்றுக்கொண்டது. நாளடைவில் இளையராஜாவின் எல்லாப் பாடல்களையும் ஹம்மிங் கொடுக்கவும் தெரிந்துகொண்டது. “நான் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆயிடுவேன். நாம் இரண்டு பேரும் இந்த ஜெயிலை விட்டு வெளியே போனப்புறம் உன்னை வைத்து வித்தை காட்டப் போகிறேன். இருவரும் பெரும் புகழடைவோம்.” என்று அதனிடம் சொல்லி வைத்திருந்தான். விடுதலையும் ஆனான். ஈயை ஒரு வத்திப் பெட்டியில் பத்திரமாக வைத்து, சட்டைப்பையில் கீழே விழாதபடிப் பார்த்துக் கொண்டு வெளியுலகை அடைந்தான். டாஸ்மாக் வளாகத்தில் ஈயை திறந்து விட்டு, ‘அந்த நிலாவத்தான் நான் கையிலப் புடிச்சேன்…’ பாடலைப் பாட வைத்தான். “பார்த்தியா அந்த ஈய?!” என்று சக குடிகாரரிடம் சொல்லவும் அவர் தி இந்து நாளிதழை வைத்து அந்த ஈயைப் பட்டென்றுக் கொல்வதற்கும் சரியாக இருந்தது.

இந்த நகைச்சுவை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்றால், நான் ஈ + சிறை எனத் துவங்கியவுடனே என்னை அடித்து நிறுத்தி சிரித்துக் கடந்துவிடுவீர்கள். ஏனென்றால், தெரிந்ததை எதற்கு மறுபடி சொல்லிக் கொண்டிருப்பானேன் – என்பது எண்ணமாக இருக்கும். இதற்கு நாளடைவில் ஜோக் #73 என்று எண் கூட கொடுத்து வெறும் எண்ணைச் சொல்லி நாமிருவரும் சிரித்துக் கொண்டிருக்கலாம். அ. முத்துலிங்கம் எழுதும் சிறுகதைகளைக் கூட இப்படி தடாலடியாக தட்டையாக விமர்சிக்கலாம் என கோகுல் பிரசாத் பதிவு மூலம் தோன்றியது.

அ முத்துலிங்கத்தின் எழுத்துகளிடையே ஆறு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியாது. இலக்கிய உலகில் இந்த மாதிரி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும். எதனிலிருந்தும் விலகி நிற்க வேண்டும் எனும் தத்துவத்தை அ முத்துலிங்கம் தவறாக புரிந்து கொண்டு விட்டார் என நினைக்கிறேன்.

அமெரிக்கக்காரி சிறுகதையை நான் இங்கே சுருக்கித் தரப் போவதில்லை. அது மே 2009 காலச்சுவடு இதழில் வெளியாகி இருக்கிறது. அங்கேயே வாசிக்கலாம்.

அந்தக் கதை எங்கே என் வாழ்வை உணரவைத்தது என்றும் எவ்வாறு இன்றைய அமெரிக்காவின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ஓவியமாகத் தீட்டுகிறது என்பதையும் அ. முத்துலிங்கம் என்னும் மனிதர் எவ்வாறு இந்தப் புனைவில் தெரிகிறார் என்றும் பதிந்து வைக்கிறேன்.

~oOo~

காதலில் கூச்சங்கள் கிடையாது

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

அமெரிக்கா வந்த புதிதில் அந்தச் சிக்கல் என்னிடம் இருப்பதே எனக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய புலமையான வார்த்தைகளான rationale என்பதில் ஆரம்பித்து Amazon நிறுவனம் வரை எல்லாவற்றையும் அமெரிக்கர்களிடம் சொல்வேன். அவர்களுக்குப் புரியாது. நாலைந்து முறை சொன்னால்தான் விளங்கும். இப்போது இந்த சிக்கல் என் பேச்சோடு இருப்பது என நான் அறிந்திருக்கிறேன். நிறுத்தி நிதானமாகச் சொல்லப் பார்க்கிறேன். இந்த மாதிரி குழப்பங்களை கதைப் போக்கில் சொல்லிச் செல்லும்போது, ‘அட… மதி என்பவளைப் பார்த்தால் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது!’ என்னும் அன்னியோன்யம் எழ வைக்கும் லாவகம் அனாயசமாக வந்து போகிறது.

இந்த மாதிரி விஷயங்களை எழுதும்போது தன்னிரக்கம், தவிப்பு, சலிப்பு, துக்கம் எல்லாம் மேலிட்டு விடலாம். புரிந்து கொள்ளாத சமூகத்தின் மேல் அறச்சீற்றம் கூட எழலாம். இப்படி சிதைவுக்குள்ளாக்குகிறார்களே எனக் கோபம் தோன்ற வைக்கலாம். அது ஒப்புதல் வாக்குமூல எழுத்து. அதில் முத்துலிங்கத்திற்கு நம்பிக்கை கிடையாது. உங்களை கொம்பு சீவி விட்டு, உணர்ச்சிகளைத் தூண்டுவது அவர் நோக்கமல்ல. ”இந்த மாதிரி எனக்கு நடந்தது… ஏன் அப்படி நடந்தது தெரியுமா?’ என்று நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் ரகசியங்களை கிசுகிசுவாக இல்லாமல் விசுவாசமாகப் பகிர்கிறார். பாவ மன்னிப்பு வேண்டாம்; புரிந்து கொண்டால் போதும் என்பது அவரின் உத்தி.

~oOo~

உடன்வந்தி நிழல்

இதே சிறுகதை குறித்த விமர்சன அறிமுகத்தில் ரா. கிரிதரன் இவ்வாறு எழுதுகிறார்:

கதையில் இலங்கைக்காரி தனது அமெரிக்கக்காரியை வென்று எடுக்கும் இடமாக இப்பகுதி அமைந்துள்ளது.

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நகரத்தில் பஸ் பிடித்துச் சென்று அமெரிக்காவுக்குத் தொலைபேசும் தாயார் என்ன குழந்தை, பெயர் என்ன எனப் பெரும் இரைச்சலுக்கு நடுவே கேட்கிறாள். இவள் சொல்வதெல்லாம் குழந்தை ஒரு அமெரிக்கக்காரி என்பதுதான். ஆம், இவளைப் போல் இல்லாமல், அமெரிக்கா எதுவோ அதிலெல்லாம் இயல்பாய் பொருந்திப் போகும் அமெரிக்கக்காரியாக அவள் வளர்வாள்.

விமானப் பயணங்களின் போது நீங்கள் அந்த விமானத்தின் கூடவே பயணிக்கும் நிழலை கவனித்து இருக்கலாம். அ முத்துலிங்கத்தின் எழுத்தும் அது போல் நம்முடன் எப்போதும் வரும். அது நம்மைப் பற்றி சொன்னாலும், நாமே அதில் இருந்தாலும் கூட, விண்ணில் நாம் பறந்து திரிந்தாலும் அதை மண்வாசனையோடு தரையில் கொணர்ந்து நம் பயணத்தை பிரதிபலிக்கும். அதில் நம்முடைய வாழ்க்கையின் சாயல் இருக்கும்; ஆனால், அதற்காக கண்ணாடியைப் போல் பிரதிபலிக்காது. உங்கள் வயதிற்கேற்ப, அனுபவத்திற்கேற்ப, பிரபஞ்ச ஞானத்திற்கேற்ப அது சில சமயம் விரிவடையும்; சில சமயம் சுருங்கும்; சில சமயம் காணாமலே கூட போகும். விமானத்தினுள் பெருச்சாளி ஓடுகிறதா என்பதில் அசட்டையாக தூங்கிவிட்டு, அ முத்துலிங்கம் என்னும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் புதிய தரிசனங்கள் கிட்டிக் கொண்டேயிருக்கும்.

அமெரிக்காகாரிக்கும் இந்தியக்காரிக்கும் இலங்கைக்காரிக்கும் என்ன வித்தியாசம்?

நிழலைப் பார்த்தால் மனிதர் தெரிவார். நிஜத்தைப் பார்த்தால் என் தலைமுடியின் வண்ணம் தெரியும். அது பிறந்த தேசத்தையும் வயதின் ரேகையையும் உணர்த்தும். தோலின் நிறம் காட்டிக் கொடுக்கும். குரல் எடுத்து பேசினால் இங்கிலாந்தா ஆப்பிரிக்காவா ஆசியாவில் சீனாவா ஜப்பானா என்று அறியலாம். உங்களின் மொழி, உடை எல்லாமே உங்களைக் குறித்த பிம்பங்களை உணர்த்தும். தெற்காசியரா… இப்படித்தான் பேசுவார்; இன்ன தொழில் செய்வார். ஆப்பிரிக்க அமெரிக்கரா… கொண்டாட்டத்தில் திளைப்பவராக இருக்கக் கூடும் என்று முன்முடிவுகளை நீங்கள் ஒரு வார்த்தை சொல்வதற்கு முன் அடுத்தவரை ஒருதலைப்பாடான பாதைக்கு இட்டுச் செல்லும்.

இதில் நிழலைப் பார்த்தால் எப்படி அமெரிக்காகாரி, எவர் இலங்கைக்காரி என்று கண்டறிவோம்? இருவரும் வீடு வாங்க பணம் சேமிக்கிறார்கள். இருசாராரும் தங்களின் கணவர்களைத் தேர்ந்தெடுக்க சில பொதுவான சித்தாந்தங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவர் வேகமாக முடிமெடுப்பவர், இன்னொருவர் பந்தத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் பிரிக்கலாம். அதற்குத் தகுந்த வினா எழுப்பி, ஒவ்வொருவரின் குணாதிசயங்களைக் கண்டடையலாம். அது சாத்தியம். ஆனால், அமெரிக்காகாரி இப்படித்தான் நடந்துப்பாள் என்றும் இலங்கைக்காரி அப்படித்தான் செய்வாள் என்பதும் சொல்லமுடியாது. அதை இப்படி போட்டுடைத்த மாதிரி சொல்லாமல் பூடகமாக உணர்த்துவது எப்படி?

அ முத்துலிங்கத்தின் கதையைப் படியுங்கள். உங்களுக்கும் சூட்சுமமாக விளங்கலாம்.

டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவின் தொடக்க வாசகம் புகழ்பெற்றது. ‘மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன’. அதை இந்தக் கதையில் இவ்வாறு வருவதாக சொல்லலாம்: “மனிதர்களின் அடையாளங்கள் எல்லா நாடுகளிலும் ஒரேமாதிரியாக இருக்கின்றன. அவர்களின் குணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வசப்படுகின்றன.”

~oOo~

உண்மை கலந்த நாட்குறிப்புகள்

‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ என்னும் முத்துலிங்கம் எழுதிய நாவலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார்:

டேவிட் பெனியோவ் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் ஒரு நாவல் எழுதினார். 1942ல் ஜேர்மன் படைகள் ரஸ்யாவின் லெனின்கிராட் நகரத்தை முற்றுகையிடுவதுதான் நாவலின் பின்னணி. பதினெட்டு வயது இளைஞராக அப்போஉது இருந்த அவருடைய தாத்தா, டேவிட்டுக்கு அந்த சம்பவங்களை விவரிக்கிறார். எவ்வளவு விவரித்தாலும் டேவிட்டுக்கு அவை நாவல் எழுதும் அளவுக்கு போதுமானவையாக இருக்கவில்லை. ‘அன்று காலநிலை என்ன? ஆகாயம் எந்த நிறத்தில் இருந்தது? அந்தப் பெண்ணின் தலைமுடி குட்டையானதா, நீளமானதா?’ என்று தாத்தாவை கேள்விகளால் திணறடித்தார். அதற்கு தாத்தா சொன்ன பதில், ‘டேவிட், நீதானே நாவலாசிரியர். இட்டு நிரப்பு. அதுதானே உன் வேலை.’

டேவிட்டுக்கு அவர் தாத்தா சொன்ன புத்திமதிகள், நினைவலைகள் எழுதும் எவருக்கும் தேவை என்றாலும், வாசகருக்கும் தேவை.

உதாரணத்திற்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரேனினா நாவலை எடுத்துக் கொள்வோம். அது லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாயைப் பற்றியது அல்ல. ஆனால், அவரைப் போன்ற மனிதர்களைப் பற்றிய சித்தரிப்பு அந்த நாவல். அல்லது, தான் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருக்க வேண்டும் என நினைத்தாரோ அதன் பிரதிபலிப்பாக அந்தக் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாமாந்தர்கள் சில சமயம் உங்களுக்கு அசூயை தரலாம்; அல்லது உத்வேகம் தரலாம். இரண்டுமே நாவலாசிரியரின் வெற்றியே.

முத்துலிங்கம் குறித்து வாழ்க்கை வரலாறு எழுதுபவர்கள் சீக்கிரமே சலித்துவிடுவார்கள். அன்றாடம் என்ன செய்தார், எந்த ஊரில் தங்கினார், எவருடன் உரையாடினார், என்ன கோப்புகளை முன்னெடுத்தார், எவ்வாறு பழகினார், எதைக் குறித்து கதைத்தார், எப்பொழுது உண்டார் என்பதெல்லாம் வெகு எளிதாக கண்டுபிடிக்கலாம்; பதிவு செய்யலாம். அவர் எதைக் குறித்து யோசித்தார் என்பதும் இருபது புத்தகங்களுக்கு மேல் அச்சில் வெளிவந்து அனைவருக்கும் ஏற்கனவே வாசிக்கக் கிடைக்கிறது. அப்படியானால் விமர்சகரின் கடமை என்பது ’அமெரிக்காகாரி’ சிறுகதையோ, நாவல் விமர்சனமோ, கதாசிரியரின் கருத்தொட்டி, தொக்கி நிற்கும் ஆசிரியரை புனைவில் இருந்து விடுவித்து பொருள்காணுதல் என்பதேயாகும்.

சுதந்திரம் அடையாத சிலோனில் பிறந்தவர். பதின்ம வயதில் இலங்கை விடுதலை அடைவதைப் பார்க்கிறார். மின்சாரம் இல்லாத கிராமத்தில் வாழ்க்கையைத் துவங்கியவர். பெரிய குடும்பம் – ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். அங்கிருந்து உலகெலாம் பயணிக்கிறார். நவீன வசதிகளின் கண்டுபிடிப்பையும் அதன் பயன்பாடையும் பார்க்கிறார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘தென்னம் பொச்சில் நெருப்பை வைத்து மூட்டி ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு நெருப்பை எடுத்துச் சென்று, ஒரு குச்சி நெருப்பு ஒரு கிராமம் முழுவதற்கும் போதுமானதாக இருந்ததில்’ வாழ்க்கையைத் துவங்கி, ஒரு நொடி இணையம் இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து அபலையாய்த் தவிக்கும் நகர சமூகத்திற்கு குடிபெயர்ந்தவர்.

சூதாட்ட மையங்களில் ரூலே சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அந்தச் சக்கரத்தில் பல்வேறு எண்கள் தாறுமாறாக கலைந்து கிடக்கும்; சிவப்பு, கருப்பு நிறம் இருக்கும். சக்கரத்தை சுழலவிட்டு பந்தை அதன் தலையில் போடுவார்கள். பந்தோ எங்கும் நிற்காமல் குதித்து, தாவி ஓடும். எந்த எண்ணில் பந்து நில்லாமல் ஓடாமல் இறுதியில் நிலைத்திருக்கிறதோ, அந்த எண்ணில் பந்தயம் கட்டியவருக்கு வெற்றி. அன்றைய சிலோன் இதைப் போன்ற சூதாட்டக் களம் என்றால், சுதந்திரம், விடுதலைப் புலி, டொனால்ட் டிரம்ப் என்று எந்தக் காலகட்டத்தை வேண்டுமானாலும் இதே போன்ற நிலையற்ற சுழல்பந்தின் குதியோட்டத்தோடு தொடர்பாக்கலாம். ஆனால், அ. முத்துலிங்கம் தன் ஒவ்வொரு கதையிலும் சுழலுகிறார். மாணவன், அசட்டைப் பேர்வழி, மோசடி பிரகிருதி, போர்வீரன், வாத்திய வாசிப்பாளர், எல்லாம் தெரிந்தவர், சூதாட்டக்காரர், துப்பறியும் சாம்பு, நிருபர், ஆசிரியர், தந்தை, தாயுமானவன், பண்டிட், இயற்கையை நேசிப்பவர், போராளி, நம்பிக்கைவாதி – உங்களுக்கு இதில் எத்தனை பேர் இந்தக் கதையில் தெரிகிறார்கள்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.