அ .முத்துலிங்கம் படைப்புகள்

ஒரூ நல்ல இலக்கியப்படைப்பானது புதிய புதிய வாசகர்களை தொடர்ந்து கண்டடைந்துக்கொண்டே இருக்கும். அப்படித்தான் நான் அ .முத்துலிங்கம் என்ற மாபெரும் கதைசொல்லியை கண்டடைந்தேன்.

சமநிலை குலைந்து செய்வதறியாது நிற்கும் தருணங்களில், மீளாத்துயரத்தின் இருண்ட காலங்களில், முடிவில்லா நீண்ட தனிமையினை உணரும் நாட்களில் அ .முத்துலிங்கம் போன்ற ஒரு சில குறிப்பிட்ட படைப்பாளிகளின் ஆக்கங்களை நோக்கி மனம் தானாகவே செல்லும். அவர்கள் தங்கள் படைப்பிலிருந்து ஒரு சொல்லையோ வரியையோ கொண்டு என் கைப்பிடித்து ஒரு அழகான பயணத்திற்கு என்னை அழைத்துச்செல்வார்கள். அந்த பயணத்தின் வழியே நான் காண்பவை எனது சிறிய இருண்ட உலகம் விரிந்து ஒளிப்பெற்று பிரமாண்டம் கொள்ளச் செய்யும்.

எனக்குப் பிடித்த அவரது பல கதைகள் கட்டுரைகளிலிருந்து நான் மிக நெருக்கமாக உணரும் சில படைப்புகளை பற்றிய எனது குறிப்புகள்.

நான் பல்வேறு கால கட்டங்களில் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்று படிக்கும் ஒரு கதை ‘பூமாதேவி’. தமிழ் மண்ணிலிருந்து பல்லாயிரம் மைல்கல் கடந்து அமெரிக்காவில் வாழும் ஒரு தந்தையையும் மகளையும் பற்றிய கதையிது. பாஸ்டன் நகரில் உள்ள ஒரு துணிதுவைக்கும் சலவைக்கூடத்தில் வைத்து, நிலத்தை தாயக உருவகித்த ஒரு பழங்குடி நம்பிக்கையையும், ஒப்பந்தத்தின் நேர்மை எனும் விழுமியத்தை விளக்க திருக்குறிப்பு நாயனார் புராணக்கதையையும் சிறுமியாகிய மகளுக்கு தந்தை சொல்கிறார். மகள் வளர்ந்து பெரியவளாகிறாள். தனது ஒவ்வொரு பருவத்திலும், அமெரிக்க பண்பாட்டு சூழலில் தனக்கான உலகை மகள் கட்டமைத்துக்கொண்டிருக்கும் காலத்திலெல்லாம் அதனை விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்க்கமுடிந்த தந்தையால், புராணங்களை அமெரிக்க நடைமுறை வாழ்க்கையின் உதாரணத்திலிருந்து தன்னால் இனிமேல் தன மகளுக்கு புரியவைக்க முடியாது என்று உணரும் நொடியில் அவளை இழந்துவிட்டதாக நினைக்கிறார். தனது மண் சார்ந்த, பண்பாடு சார்ந்த புராணம் அடுத்ததலைமுறைக்கு தொடர்பில்லாமல் போவது ஒரு நீண்ட நெடிய பண்பாட்டு சங்கிலியில் ஒரு தொடர்ச்சியை தன்னால் ஏற்படுத்தமுடியாமல் போனதால் ஏற்பட்ட இயலாமையின் வலியல்லவா அது? இந்த இழப்பை பற்றிய ஏக்கத்தினை பதிவுசெய்வதோடு மட்டும் முத்துலிங்கள் நிற்கவில்லை.மகள் பூமாதேவியை மறந்திருக்கலாம். திருக்குறிப்பு நாயனாரை மறந்திருக்கலாம். ஆனால் அவை உணர்த்திய விழுமியங்கள் எதோ ஒரு வகையில் நவீன மனதில் உருமாறி நிலைக்கொண்டிருக்கிறது என்பதை கதையினூடே சொல்கிறார். உணவகத்திலிருந்து வெளியேறும்போது மகள் பிளாஸ்டிக் குவளைகளை சிவப்பு நிற குப்பைத்தொட்டியிலும் மற்றவற்றை வெள்ளை நிறத்தொட்டியிலும் போடுவதும், ஒப்பந்தத்தைக் காப்பற்றுவதற்காக நானூறு மைல் தூரம் செல்வதும் கதையில் தந்தையின் பார்வையில் இயல்பாக சொல்லப்பட்டிருப்பது முக்கியமானது. மகள் விரைவாக நெடுந்தூரம் முன்னே சென்றுவிட்டாள். தந்தை பழைய நினைவுகளுடன் பூமோதேவியுடனும் திருக்குறிப்பு நாயனாருடனும் வாழ்ந்த்துக்கொண்டிருக்கிறார். அனால் இருவரும் ஒன்றாகவே பயணிக்கிறார்கள் – விழுமியங்களை மறக்காது. இந்த யதார்த்தத்தில் தான் வாழ்க்கை நடந்துக்கொண்டிருக்கிறது. அ .முத்துலிங்கத்தின் படைப்புலகத்தில் காவியங்களும் , புராணங்களும், தொல்குடி நம்பிக்கைகளும் பல இடங்களில் பேசப்படுகிறது. ஒரு மாபெரும் கதைசொல்லி இவற்றையெல்லாம் பேசிக்கொண்டேதான் இருப்பார். இவற்றின் மூலமாகத்தான் உயரிய மானுட விழுமியங்களை சொல்லிக்கொண்டே இருப்பார்.

‘நாளை’ மற்றுமொரு பிரமாதமான சிறுகதை. எங்கோ சமீபத்தில் நடந்த போரில் பெற்றோரை இழந்த இரண்டு சிறுவர்கள் பற்றிய கதையிது. அண்ணனுக்கு 11 வயது. தம்பிக்கு 6 வயது. அடுத்தவேளை உணவைத்தேடி செல்லும் அவர்களது பயணத்தின் ஊடாக போரின் பல பரிமாணங்களை நமக்கு முத்துலிங்கம் காண்பிக்கிறார்.போர் சூழலானது 11 வயது சிறுவனை தன் தம்பியின் பாதுகாப்பையும், அவனது அடுத்த வேலை உணவை உறுதி செய்யவேண்டிய கடமையையும் ஏற்கும் பொறுப்பான தந்தையாக உருமாற்றுகிறது. ஆனாலும் அவன் சிறுவன் தான். குழந்தை தான். சூப் வாங்குவதற்காக வரிசையில் நிற்கும்போது தனக்கு முன்னாள் இருந்த பெரியவர் சூப் ஊற்றுபவரிடம் ‘நண்பரே! அடியில் நன்றாய் கலக்கி ஊற்றுங்கள்’ என்கிறார். இவன் முறை வரும்போது இவனும் அவரிடம் ‘ ‘நண்பரே! அடியில் நன்றாய் கலக்கி ஊற்றுங்கள்’ என்று சொல்லுமிடத்தில் மெலிதான புன்னகை நம்முள் பரவுகிறது. ஒரு சிறுமி துணிபொம்மையை கையில் வைத்திருப்பதைக்கண்டு அவளருகில் தம்பி சென்று அந்த பொம்மையை ஆசையோடு பார்க்கிறான். அது பிடிக்காது அந்த சிறுமி அங்கிருந்து ஓடிப்போய் விடுகிறாள். சிறுவர்களுக்கே உரிய உலகத்தை போரும் தொடமுடியாத தருணத்தை காட்டும் கணம் இது. ரொட்டியை விநியோகம் செய்துகொண்டிருக்கும் பெண், அண்ணனான சிறுவனுக்கு தனது தாயை நினைவூட்டுகிறாள். அவள் கைவிரல் நகப்பூச்சுக்கூட தனது தாயை நினைவூட்டுகின்றன. இந்த வரிகளை கடக்கும்போது முத்துலிங்கத்தின் ‘கடவுள் தொடங்கிய இடம்’ புதினத்தில் வரும் பெல்ஜிய நாடு காபி கடை மூதாட்டி நினைவுக்கு வருகிறாள். மொழி தெரியாத நாட்டில் முன்னறிமுகமில்லாத அந்த மூதாட்டி மூன்று அகதிகளின் பசியால் வடிய முகமறிந்து அவர்களுக்கு ரொட்டியும், பழமும், தண்ணீரும் தருவாள். உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் உணவளிப்பவள் எல்லோரும் தாய் தானே. இந்த ‘தாய்’ தரிசனம் முத்துலிங்கத்தின் பல கதைகளில் காணலாம்.’நாளை’ சிறுகதையின் முடிவில் அடுத்தநாள் பத்து மைல் தொலைவில் இருக்கும் முகாமிற்கு உணவு வாங்க செல்லலாம் என்று அண்ணன் முடிவெடுக்கிறான். அங்கு கட்டாயம் இறைச்சி கிடைக்கும் என்று நம்புகிறான். இந்த கதையை படித்து முடித்தவுடன் கதையின் தலைப்பானது ( ‘நாளை’) என்னுள் பேருருக்கொள்கிறது. எத்தனை துயரமான சூழலிலும் புன்னகைக்கும் நம்பிக்கைக்கும் இடமுண்டு என்பது முத்துலிங்கத்தின் புனைவுலகின் சாரம்.

பிறந்து வளர்ந்த மண் மற்றும் பண்பாட்டு சூழலிலிருந்து பிரிந்து மேற்கத்திய நாடொன்றில் தனக்கும் தனது சந்ததிக்குமான வருங்காலத்தினை கட்டியெழுப்ப முனையும் ஒருவன் அல்லது ஒருத்தியுடைய வாழ்க்கையினை அ .முத்துலிங்கம் அளவிற்கு கலை படைப்பாக மாற்றிய தமிழ் எழுத்தாளர்கள் மிகக் குறைவே. ‘பூமாதேவி’, ‘அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை’, மற்றும் ‘எந்த நிமிடமும் பறிபோகும் வேலை’ ஆகியவை இந்த வகை எழுத்தின் முக்கிய கதைகள். இந்தக் கதைகளை படிக்கும்போது முத்துலிங்கம் என்றோ ஒரு நாள் எனக்குத் தெரியாமல் என் வீட்டில் நுழைந்து அங்கு நடப்பவற்றை எந்த சலனனமுமின்றி அமைதியாக, ஒரு புன்னகையுடன் பார்த்து சென்றாரோ என்றே எனக்கு சந்தேகம் உண்டு. முதல் கதை முதன் முதலில் ஒரு மேற்கத்திய நாட்டில் குடிபுகுந்த ஒரு தந்தையின் நோக்கில் விரிகிறது . அந்த தந்தைக்கு ஒரு மகனோ மகளோ இருந்தால் அவர்களின் வாழ்க்கையில் சந்திக்கநேரிடும் பிரச்சினையை பேசும் கதை இரண்டாவது சிறுகதை.அந்த மகனுக்கோ மகளுக்கோ குழந்தை பிறந்து அது வளரும் சூழலை பார்க்கும் பாட்டனின் பார்வையில் விரிவது மூன்றாவது கதை. இந்த மூன்று கதைகளையும் அடுத்தடுத்து படிக்கும் ஒருவருக்கு புலம் பெயர்ந்தோரின் மேற்கத்திய நாட்டு வாழ்க்கையின் ஒரு ஒட்டுமொத்த சித்திரம் கிடைத்துவிடும். இதை முத்துலிங்கம் அவருக்கே உரிய கனிவுடனும் புன்னகையுடனும் சொல்கிறார்.ஆணும் பெண்ணும் சமமாகிப்போன இந்த நவீன வாழ்வில் புதன்கிழமையால்

வந்த சோதனையையும் அந்த சோதனையை தனது அறிவுக்கூர்மையால் தீர்த்த நவீன மனைவியையும் பற்றிய வரிகளில் தெரியும் பகடி வாய்விட்டு சிரிக்கவைக்கும். தந்தை மகளுக்குமான உறவும், பாட்டனுக்கும் பேத்திக்குமான உறவும் எழுதப்பட்டிருக்கும் கோணம் முத்துலிங்கத்தின் எழுத்து எனக்குரியதாக ஆக்குகின்றது.

‘எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை’ கதையில் வரும் பின்வரும் வரிகளை படிக்கும்போது ஒரு புனைவு ஓவியமாகவோ, இசையாகவோ, கவிதையாகவோ உருமாறும் மாயத் தருணத்தை உணரமுடியும். “(பேத்தி) நித்திரை முறிந்து தானாக அந்த உலகத்தில் இருந்து இந்த உலகத்துக்கு வரும் காட்சியை காண்பதற்காக நான் பக்கத்திலேயே இருப்பேன். (அவள் முழித்தவுடன்) நான் அள்ளிக்கொள்வேன்,அந்த கணமே அடுத்த நாள் மூன்று மணிக்காக ஏங்கத் தொடங்குவேன்”

‘தொடக்கம்’ மற்றும் ‘ஆயுள்’ சிறுகதைகள் அவை பேசும் பொருளினாலேயே எனக்கு மிக நெருக்கமான கதைகளாக இருக்கின்றன. “பறவைகள் பறந்துதான் நான் பார்த்திருக்கிறேன். படுத்துப் பார்த்ததில்லை” என்று ‘தொடக்கம்’ கதையில் வரும் இரண்டு வரிகள் தரும் மனவிரிவானது இக்கதையினை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது. ‘ஆயுள்’ சிறுகதை ஒரு தேர்ந்த கதைசொல்லியால் மட்டுமே படைக்கப்பட முடியும். கால ஓட்டத்தில் எல்லாமும் மாறிப்போகும், அழிந்தும் போகும். உலகத்து ஜீவராசிகள் அத்தனையும் மடிந்தும் போகும்.அமரக் காதலும் மரணித்தும் போகும் . ஆனால் ஒரு சின்ன பிளாஸ்டிக் குடுவை மண்ணோடு மண்ணாக அழிந்துபோக மட்டும் 400 வருடங்களாகும். அது மாத்திரம் நிச்சயம் என்று முடியும் கதை அ .முத்துலிங்கத்தின் நல்ல படைப்புகளில் ஒன்று. ஒரு புனைவு பிரச்சார தொணி எடுக்கக்கூடிய அணைத்து சாத்தியக்கூறுகளும் கொண்ட கதைக்களத்தினை இவைக்கொண்டிருந்தாலும், அ .முத்துலிங்கம் என்ற தேர்ந்த படைப்பாளி அதில் சிக்காமல் நல்ல இலக்கியத்தைத் தருகிறார். சூழலியல் சார்ந்த முத்துலிங்கத்தின் கதைகள் தமிழ் படைப்புலகில் முன்னோடியானவை. முக்கியமானவை.

நாஞ்சில் நாடன் மற்றும் வண்ணதாசனின் கட்டுரைகளைப்போன்று முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் சிறுகதைகள் போன்றே சுவாரசியாத்துடனும் திருப்பங்களுடனும் இருக்கின்றன. புனைவுகளை காட்டிலும் அவரது கட்டுரைகளில் பகடி தூக்கலாக இருக்கும்.கதைகளில் நமக்குத் தெரியாத சினம் கொள்ளும் முத்துலிங்கம், கட்டுரைகளில் தெரிகிறார். முத்துலிங்கம் என்ற ஆளுமையின் பல்வேறு பரிமாணங்களை அறிய அவரது கட்டுரைகள் நமக்கு கிடைக்கின்றன.

முத்துலிங்கத்தின் படைப்புகள் மகத்தானவைகளாக ஏன் எனக்குத் தோன்றுகின்றன? அவரது ஒவ்வொரு ஆக்கமும் ஒரு பயணம். அந்தப் பயணம் தொடங்கி இலக்கை சென்றடையும் வரை பயணப்பாதையை சுற்றி இருக்கும் அனைத்தின் மீதும் விருப்பு வெறுப்பின்றி வெளிச்சத்தை தூவிக்கொண்டே வருகிறார்.உரக்கப்பேசாமல் புன்னகையுடன் நம்முடன் சகபயணியாக வருகிறார். நம் வாழ்க்கையில் முன் நிற்கும் நம்மால் அதிமுக்கியம் எனக்கருதப்படும் பல வினாக்களும், விழுமியங்களும், புரிதல்களும் காணாமல் போகும் மாயமும் இந்த பயணத்தில் நடக்கிறது. பயணத்தின் இறுதியில் எஞ்சுவது புன்னகையும் நம்பிக்கையும் தான். வாழ்க்கை என்பது வெறும் கருப்பு வெள்ளை மட்டும் கிடையாது. பல்வேறு வண்ணங்களுக்கும் அங்கு இடமுண்டு. அவை ஒவ்வொன்றும் அதனளவில் தனித்துவமும் முக்கியத்துவமும் கொண்டது . இந்த பல்வேறு வண்ணங்களின் இருப்பும் கவனிக்கப்படும்போது ஏற்படும் மனவெழுச்சியை நோக்கித்தான் முத்துலிங்கத்தின் படைப்புகள் நம்மை அழைத்துச்செல்கின்றன.

அ . முத்துலிங்கம் அவர்களுக்கு எனது பணிவான வணக்கமும் வாழ்த்துகளும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.