மொழி சமைக்கும் நிலம் – அ.முத்துலிங்கத்தின் எழுத்து

எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான கருவியாக கணிணியும் இணையமும் புழக்கத்துக்கு வந்ததன் பலனாக தமிழ் எழுத்தும் வாசிப்பும் மிக விரிவான தளத்தை அடைய முடிந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் உலகளாவிய உறவாடல் தமிழுக்குத் தந்த நற்கொடைகளில் ஒன்று அ.முத்துலிங்கத்தின் எழுத்து. பனிமூடிய தொலைதேசத்திலிருந்து தினமும் அவர் எழுதுவதை ஒவ்வொரு நாளும் வாசிக்க முடிகிறது.

அயல்வாழ் தமிழ் எழுத்தாளர்களில் அ.முத்துலிங்கம் தனித்துவம் மிக்கவர். இலங்கையில் பிறந்தவர் என்றாலும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் வரிசையில் அவரை சேர்க்கமுடியாது. காரணம் இரண்டு. ஒன்று, அ.முத்துலிங்கம் இலங்கையைச் சேர்ந்தவர் என்றாலும் அவரது எழுத்துக்கள் புலம் பெயர்ந்தோர் என்ற இலக்கிய வகைமைக்குள் அடங்காதது. இரண்டு, அவரது எழுத்துக்கள் சொந்த மண் குறித்த ஏக்கம் அல்லது கவலை அல்லது கனவு என்ற எல்லைக்கு வெகு வெளியே இன்னும் விரிவான உலகளாவிய மனித குலம் சார்ந்த அக்கறையைக் கொண்டது.

இலங்கையிலிருந்து 1972ம் ஆண்டு அ.முத்துலிங்கம் பணியின்பொருட்டு வெளியேறும்போது இலங்கையின் இனப்போர் உக்கிரம் கொண்டிருக்கவில்லை. இலங்கையில் போர் தீவிரமடைந்தபோதும் பல்வேறு உச்சங்களை அது தொட்டபோதும் வெளியிலிருந்து கவனிக்கும் நிலையிலேயே இருந்திருக்கிறார். எனவே ஷோபா சக்தி, சயந்தன், குணா கவியழகன் போன்றவர்களால் இன்று எழுதப்படும் போர் இலக்கியத் தொகுதிக்குள் முத்துலிங்கத்தின் எழுத்துகளைச் சேர்க்க முடியாது.

அ.முத்துலிங்கத்தின் எழுத்து பிரதேச எல்லைகளைக் கடந்து நிற்கும் ஒன்று. உலகளாவிய பார்வையும் பண்பாட்டு அடையாளத்தையும் கொண்டது. மொழிபெயர்ப்புகளின் மூலமாகவே உலக இலக்கியத்தை வாசித்துக்கொண்டிருந்த தமிழ் வாசகர்களுக்கு நேரடியாக அனுபவமாக்குபவை அவரது ஆக்கங்கள். உலகமெங்கும் பயணிக்கும் ஒரு யாத்ரீகனின் கண்களின் வழி தரிசனமாகும் காட்சிகளின் விநோதங்களையும் ஆழங்களையும் அவரது கதைகள் சாத்தியப்படுத்துகின்றன. தமிழ் சிறுகதை இதுவரையிலும் காட்சிப்படுத்திய வாழ்க்கையின் பரிணாமங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது இது. நமக்கு இதுவரை பழக்கப்பட்ட நிலங்களும், அதன் மனிதர்களும், கலாச்சாரமும் நமக்குள் கட்டமைத்திருக்கும் வாழ்க்கை சார்ந்த பல அடிப்படைகளை உலுக்கும் வகையிலான பல கலாச்சார அம்சங்களின் பிண்ணனியை முத்துலிங்கத்தின் கதைகள் முன்வைக்கின்றன.

அறிமுகமற்ற சூழலில் சந்திக்க நேரும் அனுபவங்களையும், கலாச்சார அம்சங்களையும் எதிர்கொள்ளும் மனம் எப்போதும் அவற்றை தனது சொந்த கலாச்சார பிண்ணனியைக் கொண்டே தரப்படுத்த முயலும். அவ்வாறான தரப்படுத்தலின்போது மேலை கருத்தாக்கங்கள் குறித்தும், கலாச்சாரம் குறித்தும் எப்போதும் ஒரு தகுதிக் குறைவையே உத்தேசிக்கத் தோன்றும். முத்துலிங்கம் அவ்வாறான பொதுவான உத்தேசங்களுக்கு சற்றும் இடம் தராமல் உள்ளவற்றை உள்ளபடி சொல்லுவதோடு நின்றுவிடுகிறார்.

ஆனால் அதே சமயம் பல்வேறு நாடுகளின் கலாச்சாரக் கூறுகளை பகுத்துணர்வதில் எப்போதும் ஒருவருக்கு துணையாக, உரைகல்லாக விளங்குவது அவரவர் அடிமனதில் கால்கொண்டுள்ள சுய பண்பாட்டுக் கூறுகளே. கதைகளாக, பாடல்களாக, புராணங்களாக, இலக்கிய வடிவங்களாக உருக்கொண்டிருக்கும் இக் கூறுகளே முத்துலிங்கத்துக்கு அவர் எதிர்கொண்ட பல்வேறு நிறங்களையும், வெளிகளையும் உள்வாங்கிக்கொள்ள உதவியுள்ளன. கம்பரும், ஒளவையாரும், திருக்குறிப்பு நாயனாரும், புறநானு¡றும், புராணக் கதைகளும் அவருக்கு தன் தரப்பைத் தெளிவுபடுத்திக் கொள்ளவும், உறுதி செய்து கொள்ளவும் துணை நின்றுள்ளன. கதைப்போக்கில் வெகு இணக்கமாக இவற்றைப் பொருத்தி வாசகனிடத்திலும் அவ்வாறான ஒரு அனுபவத்தை உறுதி செய்திருக்கிறார்.

கதை வடிவம், மொழி, சித்தரிப்பு நேர்த்தி என்று ஒரு சிறுகதையாளரின் அத்தனை பலங்களையும் கொண்டிருக்கும் முத்துலிங்கத்தின் கதைகளை மேலும் சிறப்புமிக்கதாக்கும் தனித்துவமான அம்சம் அவர் கதைகளில் காண முடிகிற அங்கதமே. அவருடைய எல்லாக் கதைகளிலுமே, அவை எந்த தளத்தில் அமைந்தவையானாலும், சின்னச் சின்ன வரிகளில் இந்த அங்கதத் தன்மை கொப்புளித்து நிற்கிறது. கதைகளின் வாசிப்புத்தன்மையை உத்தரவாதப்படுத்தும் இந்த அம்சத்தை இவ்வளவு நேர்த்தியாகவும் கச்சிதமாகவும் கையாண்டிருக்கும் இன்னொரு எழுத்தாளர் தமிழில் இல்லை என்று உறுதியாய் சொல்ல முடியும்.

முத்துலிங்கத்தின் ஒட்டு மொத்த கதை உலகையும் பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளே கட்டியமைத்துள்ளன.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் தத்தமது தேசம், மொழி, கலாச்சாரம் மற்றும் பொருளாதார நிலை என்று எல்லா வேறுபாடுகளையும் தாண்டி இந்த மூன்றையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.  இதற்கான போராட்டமே  மனித வாழ்வு. இம் மூன்றையும் ஏதோவொரு விதத்தில் வெல்லும் முயற்சியில்தான் மனிதனின் சகல ஆற்றல்களும் குவிந்து செயல்படுகின்றன.

முத்துலிங்கத்தின் புனைவுலகை கட்டியமைத்துள்ள பசி, காதல், மரணம் என்ற மூன்று புள்ளிகளையும் இணைக்கும் ஆதாரமான கோடாகவும் இத் தொகுப்பின் உட்சரடாகவும் அமைந்திருப்பது உயிர்களின் மீதான கருணை என்னும் அம்சமே.

முத்துலிங்கத்தின் பெரும்பாலான கதைகளிலும், கதையின் புலன் தளத்துக்கு அப்பால் அழுத்தமான உட்சரடுகள் மிக நுட்பமாக நெய்யப்பட்டுள்ளதை மிக முக்கியமான ஒன்றாக குறிப்பிட வேண்டியுள்ளது. அவரது கதைப்பாணி வாசகனை சரளமாக உள்ளிழுத்துக் கொள்ளுவது. ஆழ்ந்த வாசிப்பையும் அதிக கவனத்தையும் கோராதது. இதனால் கதைகளின் உட்சரடுகள் மேலும் துலக்கமற்றதாக்கிவிடுவதால் பல சமயங்களில் கதையின் உள் அடுக்குகளை நாம் உணரத் தவறிவிடலாம். இதுவே அவரது கதைகளை மேலும் சிறப்புமிக்கதாகவும், மீண்டும் மீண்டும் வாசிப்பிற்குரியதாகவும் ஆக்கித் தருகிறது.

அ.முத்துலிங்கத்தின் எழுத்து புனைகதைகளோடு நின்றுவிடவில்லை. எண்ணிக்கையிலும் தரத்திலும் வாசிப்புத்தன்மையிலும் சிறுகதைகளுக்கு சமமான அளவுக்கு முத்துலிங்கத்தின் கட்டுரைகள் வெளியாகின்றன. சமீபகாலத்தில் தமிழின் புனைவல்லாத எழுத்துக்களின் அமைப்பிலும் போக்கிலும் அபரிமிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கட்டுரைகள் பல சமயங்களில் புனைவுக்கு மிக நெருக்கமான இடத்தில் நின்று பிரமிக்கவைக்கின்றன. கட்டுரைக்கும் புனைவுக்கும் நடுவில் இருந்த அடர்த்தியான கோடு காணாமல்போயிருக்கிறது.

அ.முத்துலிங்கத்தின் புனைகதைகளையும் கட்டுரைகளையும் பிரித்தறிவது கடினம். இரண்டுமே ஒரே மொழியமைப்பை வாசிப்புத் தன்மையை கச்சிதத்தைக் கொண்டிருப்பவை. எதை கதையாக்க வேண்டும், கட்டுரையாக்கவேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக தீர்மானித்திருக்கிறார். அவரது கட்டுரைகள் பெரும் அறிவுப்புலத்தின் சிறு விள்ளல்கள். தகவல் வெள்ளத்தின் நடுவே நாம் தவறவிடுபவற்றையும் நமது பார்வைக்கு வராமல்போகும் நிகழ்வுகளையும் முதன்மைபடுத்துகின்றன இக்கட்டுரைகள்.

சமீபத்தில் வெளியான கணிதமேதை ராமானுஜத்தைப் பற்றிய கட்டுரை மிகச் சரியான உதாரணமாகும். அவரைப் பற்றி ஆங்கிலத்தில் வெளியான புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. புத்தகத்தை நேரடியாகப் படிப்பதைப் போன்ற தன்மையுடன் அதேசமயத்தில் ராமானுஜத்தைப் பற்றிய நுட்பமான சித்திரத்தையும் இக்கட்டுரை சாத்தியப்படுத்தியுள்ளது.

தான் வாசித்தப் புத்தகங்கள், எதிர்கொண்ட வாழ்வியல் அனுபவங்கள், அபத்தங்கள் எல்லாவற்றையும் அவருக்கேயுரிய தனித்துவமான மொழியில் புன்னகைத்தபடியே சொல்ல முடிகிறது. பில் பிரைசனின் புத்தகத்தினால் தூண்டப்பெற்று கட்டுரைகள் எழுதத் தொடங்கிய முத்துலிங்கத்தின் நோக்கம் தன்னுடைய பாண்டியத்தியத்தை காட்டவோ, மேதாவிலாசத்தை வெளிப்படுத்தி வாசகர்களை அசத்தவோ அல்ல. தான் வாசித்து உணர்ந்ததை பிறரிடம் பகிர்ந்துகொள்வது மட்டுந்தான். அதனால்தான் கால்பந்தாட்டத்தைப் பற்றியும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமிடையேயான உறவைப் பற்றியும் உற்சாகத்துடன் எழுத முடிகிறது.

எழுத்தின் மீதான ஆர்வம் எழுத்தாளர்களைத் தேடி அவர்களுடன் உரையாடச் சொல்லும். நேரடியாக எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடும் அனுபவம் எல்லா நேரங்களிலும் உவப்பளிப்பதாக இருக்காது. ஆனாலும் எழுத்தாளனின் புற உலகை அறியவும் அதன் வழியாக அவனுடைய எழுத்தை அணுகவும் அத்தகைய சந்திப்புகள் உதவும். அ.முத்துலிங்கம் எழுத்தாளர்களை தொடர்ந்து சந்திக்கிறார். அவர்களை சந்திப்பதற்கென மெனக்கெடுகிறார். நேரில் சந்திக்க வாய்ப்புகள் அமையாதபோது மின்னஞ்சல்கள் மூலம் கேள்விகளை அனுப்பி பதில்களை பெறுகிறார். எழுத்தாளர்களுடனான உரையாடலில் அ.முத்துலிங்கம் காட்டுகிற ஆர்வம் சிறப்பான நேர்காணல்களை தமிழுக்குத் தந்திருக்கிறது. அத்தகைய நேர்காணல்களைக் கொண்ட வியத்தலும் இலமே என்ற அவரது நூல் மிக முக்கியமானது. பல்வேறு அயல்மொழிகளில் எழுதும் எழுத்தாளர்களுடனான உரையாடல்கள் அடங்கியது. சமகால எழுத்தாளர்களை நமக்கு அறிமுகப்படுத்துவதோடு எழுத்துச் செயல்பாட்டின் மீதான அவர்களது பார்வையையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. தமிழில் அறிமுகம் இல்லாத டேவிட் செடாரிஸ், டேவிட் பெஸ்மொஸ்கிஸ் போன்ற சமகால எழுத்தாளர்களின் குரலையும் அவர்களது கதைகளையும் நாம் அறியமுடிகிறது. ஓர் அங்குல உயரக் குறைவால் விண்வெளி விஞ்ஞானியாக முடியாத மேரி ஆன் மோகன்ராஜ் இன்று உலகில் காம இலக்கிய படைப்பாளிகளில் முன்னணியில் இருப்பவர். இவருடனான தொலைபேசி உரையாடலின்போது எப்படி இந்தத் துறையில் எழுத வந்தீர்கள் என்று கேட்டதற்கு மேரியின் பதில் – மிக மோசமாக எழுதினார்கள். அதை என்னால் தாங்க முடியாமல் இருந்தது. என்னால் நன்றாக எழுத முடியும். ஆகவே, எழுதினேன்.

அரும்பாடுபட்டு சென்னை வானொலி சிவாஜியின் பேட்டியை எடுத்து இன்றுவரையிலும் ஒலிபரப்பாகாத அதைக் கேட்கும் தன் ஆசையைத் தெரிவிக்கும் பிபிசி சிவராமகிருஷ்ணனுடனான பேட்டி வரலாற்றின் புதைகுழிக்குள் எத்தகைய பொக்கிஷங்களெல்லாம் மறைந்து கிடக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறது.

சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்பதோடு தனக்குப் பிடித்த கதைகளை மொழிபெயர்க்கவும் செய்கிறார் முத்துலிங்கம்.  உலகின் பல்வேறு மொழிகளில் வெளியான சிறப்பான கதைகளை மொழிபெயர்த்துத் தொகுக்கும் முயற்சி ஒன்றை சிலஆண்டுகளுக்கு முன்பு முன்னெடுத்திருந்தார். அதற்காக நான் ஜும்பா லகரியின் கதையொன்றை மொழிபெயர்த்தது நினைவிருக்கிறது. தொகுப்பு என்ன ஆனது என்பது தெரியவில்லை.

 

நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே

அ முத்துலிங்கத்தின் இணையப் பக்கத்தின் முகப்பில் உள்ள ஔவையின் இந்தப் பாடல் அவரது எழுத்தின் சாரத்தை வெகு கச்சிதமாக சுட்டி நிற்கிறது.

வாழிய நிலனே எனும் வாக்கின் வெவ்வேறு அழுத்தங்களையே அவரது படைப்புகள் தொடர்ந்து முன்னிறுத்துகின்றன.

அ.முத்துலிங்கத்தின் ஒவ்வொரு படைப்பும் புதியதை நோக்கியது. தமிழ் வாசகனுக்கான அறிவும் அனுபவமுமாய் அமைவது. விகாசமும் விநோதமும் கொண்ட உலகளாவிய தரிசனத்துக்கு இட்டுச் செல்வது. இத்தனை ஆண்டுகளின் உலகளாவிய பயணங்களிலிருந்தும் வாழ்விலிருந்தும் தேனீயைப்போல தேடித் தேடிச் சேர்த்த துளிகளை எழுத்தில் சேமித்துத் தருகிறார். காரியத்தில் உறுதியும் சோர்வுறாத ஊக்கமும் கொண்டே இப்படியொரு பணியைச் செய்வது சாத்தியம். ஒவ்வொரு நொடியிலும் எழுத்தின் வழியாக தன்னை நிறுவியபடியே இருக்க முனைகிறார். சொந்த மண் இல்லை, உறவுகளும் அருகில் இல்லை எனும் சோர்வை மொழியின் வழியாக கடக்கத் துணிகிறார். நிலம் கைவிட்டபோதும் அவரை மொழி கைவிடவில்லை.  மொழியின் வழியாக இன்னும் பரந்துபட்ட நிலத்தில் தன் பெயரை அவர் ஒவ்வொரு நாளும் எழுதிக் கொண்டே இருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.