முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்.

‘தில்லிகை’யின் இந்தச் சந்திப்பில், எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகளைப் பற்றிச் சில குறிப்புகளை உங்களிடத்திலே நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். அதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த உரைக்கு ஒரு தலைப்பு வேண்டும் என்று ‘தில்லிகை’யின் அமைப்பாளர் நண்பர் ஸ்ரீதரன் கேட்டபோது நான் “மூன்று உலகங்கள் – அ. முத்துலிங்கத்தின் சிறுகதை வெளி” என்று வைத்துக்கொள்ளலாம் என்று சொன்னேன். அதற்குப் பிரத்யேகக் காரணங்கள் என்று எதுவும் இல்லை. பொதுவாகவே எதையும் அட்டவணைப்படுத்திப் பழக்கப்பட்டவர்கள் நாம். எல்லாவற்றையும் ஒரு பட்டியலுக்குள் கொண்டு வரவேண்டும்.

சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? பத்துவகைப்படும். அவை யாவை? உயிர் மெய், ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம், உயிரளபெடை, ஒற்றளபெடை, ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம். அடுத்து, வேற்றுமை எத்தனை வகைப்படும்? எட்டு வகைப்படும். தமிழ் இலக்கணத்தை ஏழாகப் பிரிக்கலாம். இப்படிப் பயிற்சிப் பெற்றதினால், நான் தொழிலுக்கு வந்த பிற்பாடு எழுதுகிற மின்னஞ்சல்கள், கடிதங்கள் இவற்றிலெல்லாம் இதைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். இதில் ஒரு சின்ன சூழ்ச்சி இருக்கிறது. நாம் எழுதுவதை எல்லோரும் படிக்கவேண்டும் என்று நினைத்தால் பட்டியல் போட்டு விடவேண்டும். படிக்க வேண்டாம் என்று நினைத்தால் அதை நீளமான வாக்கியங்களில் எழுதிவிடலாம். அதில் பலவற்றை ஒளித்தும் வைத்துவிடலாம். தேவைப்படும்போது ஒட்டகம் மாதிரி அதை மீள எடுத்துச் சொல்லலாம்.

நான் முப்பது அக்டோபர் இரண்டாயிரத்துப் பதினொன்றில் எழுதிய கடிதத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறேன் என்று. பலரும் படித்திருக்க மாட்டார்கள். எண்களோடு பட்டியல் போட்டால்தான், அல்லது மைக்ரோசாப்ட் விண்டோசில் இருக்கிற குண்டுப்புள்ளிகள் போட்டு எழுதினால்தான் படிக்கிறார்கள்.

அதேமாதிரி முத்துலிங்கத்தின் படைப்புக்களையும் மூன்றாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இப்படிப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. அவர் பாவம் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கிறார். எதையும் நமக்கு வேண்டிய மாதிரிப் பிரித்துக் கொள்வது நமக்குத் தோதானது. கவிஞர் விக்ரமாதித்யன் “கோயிலுக்கு” என்று ஒரு கவிதை எழுதியிருப்பார். கவிதை நெடுக திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வருவார். நான்கு வாசல், இரண்டு சந்நிதி, ஆறு கால பூஜை,ஸ்தல விருட்சம், பிரகாரம், நந்தவனம் பொற்றாமரைக் குளம்- இப்படிச் சொல்லிக் கொண்டே வருவார். கவிதை இப்படி முடியும் – ‘தெய்வமும் ஐதீகத்தில் வாழும்’. ஒரு அமைப்புக்குள், ஒரு பட்டியலுக்குள் நாம் அடக்கி விடுகிறோம். தெய்வத்தையும் நமக்கு ஏற்ற மாதிரி ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறாம். அப்போதுதான் அது நம்முடைய தெய்வமாக இருக்க முடியும். அதேமாதிரி நான் முத்துலிங்கத்தினுடைய படைப்புக்களை என்னுடைய சௌகரியத்திற்காக மூன்றாகப் பிரித்துக் கொள்கிறேன் . அவரது படைப்புக்களின் களத்தை மூன்று பகுதிகளாக, அல்லது அவருடைய எழுத்தை மூன்று உலகங்களில் நடப்பாதாக நான் பாவித்துக் கொள்கிறேன்.

முதலாவது வகை இலங்கையில் நடைபெறும் கதைகள். கதாபாத்திரங்கள் இலங்கையில் இருப்பார்கள். கதை இலங்கையில் ஆரம்பித்து இலங்கையில் முடியும்.

இரண்டாவது வகைக் கதைகள் வெளிநாடுகளில் நடப்பவை. இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கும் பி.ஏ. கிருஷ்ணன் அவர்கள் முத்துலிங்கத்தின் எழுத்து பயணிக்கிற பிரதேசங்களைப் பற்றிச் சொன்னார்கள். முத்துலிங்கத்தைப் பற்றிப் பலரும் படித்திருப்பீர்கள். அவர் யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள கொக்குவில் என்கிற கிராமத்தில் பிறந்தார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானம் படித்தார். பிற்கு சாட்டர்ட் அக்கவுண்டண்ட்டாகப் பட்டம் பெற்று, அந்தத் துறையில் பணியாற்றினார். அதற்கப்பால் பல வெளிநாடுகளிலும் ஐ.நாவிலும் பணியாற்றினார். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சூடான், சியோரோலியன், அமெரிக்கா, கனடா போன்ற பல இடங்களிலே அவர் வாழ்ந்திருக்கிறார்.

இந்த அனுபவங்களையெல்லாம் அவர் தனது கதைகளிலே சொல்லுகிறார். தமிழில் இருக்கிற மிக முக்கியமான படைப்பாளியாக அவரைக் கருதுவதற்கு என்ன காரணம் என்றால், பாரதி சொன்ன மாதிரி எட்டுத்திக்குகளில் இருக்கும் கலைச் செல்வங்களை அவர் தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்கிறார். இந்த இரண்டாவது வகைக் கதைகள் பல்வேறு வெளிநாடுகளில் நடக்கிற கதைகள். அது காபூலாக இருக்கலாம். இஸ்லாமாபாத்தாக இருக்கலாம். டொராண்டோவாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதைகளிலெல்லாம் தமிழ்ப்பாத்திரங்கள் இடம் பெறுவார்கள். கதைசொல்லியோ, கதையிலுள்ள பிரதானப் பாத்திரங்களோ தமிழராக இருப்பார்கள். இது அவரது இரண்டாவது உலகம். அவரது பெரும்பாலான படைப்புக்களை இரண்டாவது வகைக்குள்ளே கொண்டு வந்துவிடலாம்.

மூன்றாவது வகைக் கதைகளும் வெளிநாடுகளில் நடக்கிற கதைகள்தாம். வெளிநாட்டு மண்ணில் வெளிநாட்டு கலாசாரப் பின்புலத்தில் நடைபெறும் கதைகள். ஆனால் இந்தக் கதைகளிலே ஒரு தமிழ் கதாபாத்திரமும் இராது. முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கதாபாத்திரங்கள் இடம் பெறும் தமிழ்க் கதைகளாக அவை இருக்கும். இரண்டாவது வகைக் கதைகளில் தமிழ்ப் பாத்திரங்கள் எனும் ஒரு சின்னப் பாலம் இருக்கிறது. இதில் அதுவும் இல்லை. முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கதாபாத்திரங்களை வைத்து நமக்கு முற்றிலும் அந்நியமான சூழலில் நிகழும் கதைகளை தமிழ் வாசகனுக்கு நெருக்கமான குரலில் அவரால் சிறப்பாகச் சொல்ல முடிகிறது. இந்தக் கதைகளின் வழி மனித மனத்தினுடைய ஆசாபாசங்கள் அடிப்படையிலே ஒன்று என்பதாக எடுத்துக் கொள்ளலாம். கலாசார வேறுபாடுகளை அவர் கொண்டு வந்து சேர்க்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சிரமமான வேலையை அவர் லாவகமாகச் செய்து கொண்டிருக்கிறார். இப்படியாக அவரது படைப்புகளை நாம் மூன்றாகப் பிரித்துக் கொள்கிறோம்.

இந்தப் பிரிவுகள் கதைகளின் உள்ளடக்கம் சார்ந்தது. ஒரு கதை எப்போது சிறந்த கதையாகிறது என்றால், அது உள்ளடக்கத்திலேயும் சொல்லுகிற முறையிலும், வடிவத்திலேயும் சிறப்பாக இருக்குப் போதுதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலே ஒரு விபத்து மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சென்னையில் இலக்கியச் சிந்தனை என்றொரு அமைப்பு இருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலை ஒரு கூட்டம் நடக்கும். இங்கே இருக்கிற கூட்டம் கூட இராது. ‘தில்லிகை’க்கு வருகிறவர்களின் எண்ணிக்கை தில்லியில் உள்ள தென்னிந்தியச் சைவ உணவகங்களின் எண்ணிக்கையைக் கால் குறைவாக இருப்பதாக ஸ்ரீதரன் ஆதங்கப்பட்டார். இந்த நிலை தில்லி என்பதனால் அல்ல. சென்னையிலும் அப்படித்தான். நாங்கள் ஹாங்காங்கிலே இலக்கிய வட்டம் நடத்துகிறோம். அங்கேயும் அப்படித்தான். தமிழர்களின் சுபாவம் இது. தீவிர இலக்கியத்துக்கான வெளி என்பது தமிழில் மிகக் குறுகிய வெளிதான். சரி; இனி இலக்கியச் சிந்தனைக்கு வருவோம். இதன் மாதாந்திரக் கூட்டங்களில் அதற்கு முந்தைய மாதம் பருவ இதழ்களில் வெளியான சிறுகதைகளில் ஒன்றை ஒரு வாசக-விமர்சகர் தேர்ந்தெடுப்பார். ஆண்டிறுதியில் அவ்விதம் சேரும் பன்னிரண்டு சிறுகதைகளில் ஒன்றை ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒரு எழுத்தாளரோ திறனாய்வாளரோ தேர்ந்தெடுப்பார். 2010 ஆம் ஆண்டின் முடிவில் அந்தத் தேர்ந்தெடுக்கும் பணியினை எனக்குக் கொடுத்தார்கள். எனக்குக் கவலையாகப் போய்விட்டது. என்னைப் பற்றிய கவலையில்லை அந்த அமைப்பைப் பற்றிய கவலை. சரி, இந்தப் பன்னிரண்டு கதைகளையும் மதிப்பிட வேண்டுமென்றால் அதற்கு ஒரு அளவுகோல் வைத்துக் கொள்ளவேண்டும் அல்லவா?. ஏனென்றால் பன்னிரண்டு கதைகளும் வெவ்வேறு விதமான கதைகள். நல்ல கதைகளின் குணாதிசயங்களாகச் சிலவற்றை நான் பட்டியல் போட்டேன். பட்டியல் போடாமல்தான் எதுவுமே நடக்காதே.

ஒரு நல்ல கதைக்குச் சிக்கனம் முக்கியம். இங்கு சிக்கனம் என்பது கதையின அளவைக் குறிக்கவில்லை; அது சொற்சிக்கனத்தைக் குறிக்கிறது. தேவைக்கதிகமான சொற்கள் சேருகிறபோது அந்தப் படைப்பு வார்த்தைக் காடாகிவிடும். கட்டுரைகளினின்றும் உடனடியாக இனம் பிரிக்கக் கூடிய புனைவின் மொழி ஒரு. நல்ல கதையில் அமைந்திருக்கும். இந்த விதி முத்துலிங்கத்துக்குப் பொருந்தாது. அவரது கட்டுரைகள் விதிவிலக்கானவை. அதை நேரமிருந்தால் பின்னால் பார்க்கலாம்.ஒரு நல்ல கதை தனக்கென்று நிர்ணயித்துக் கொண்ட இலக்கை நோக்கி சரி கணக்காக முன்னேறும். இடையில் தடம் புரளாது. மையக் கருவுக்கு தேவையற்ற யாதொன்றும் கதையில் இராது. ஒரு நல்ல கதை முன்முடிவுகளையோ தீர்மானங்களையோ வாசகர்கள் மீது திணிக்காது. கதை நிகழும் புற வெளியாகிலும், கதை மாந்தர்களின் மன அவசங்கள் இடம் பெறும்

அக வெளியாகிலும், வாசகன் இந்த வெளிகளில் சஞ்சரிக்க முடிந்தால் மட்டுமே கதை நம்பகத்தன்மை பெறும். கடைசி விதிதான் முக்கியமானது. பி. ஏ. கிருஷ்ணன் சொன்னது போல ஒரு நல்ல கதை வாசகனைக் கேள்வி கேட்கும். அந்தக் கதையில் வாசகனுக்கான ஒரு வெளி இருக்கும். எழுதப்பட்டவரிகளுக்கிடையில் அவன் உய்த்து உணர்ந்து பொருள் கொள்ள ஏதுவான எழுதப்படாத வரிகளும் இருக்கும். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அவை மணற்கேணி போல் ஊறி வரும். ஒரு நல்ல கதையை கதாசிரியன் எழுதி முடித்துவிடுவதில்லை. வாசகன்தான் முடித்துக்கொள்ளவேண்டும். ‘அறிதோறும் அறியாமை கண்டற்றால்’ என்ற குறளுக்கு இலக்கியமாக அமைந்தால் அது பெரிய வெற்றி.

இப்படியாக நான் ஆறு விதிகளை வகுத்துக்கொண்டு அந்தத் தேர்வை மேற்கொண்டேன். ஆக முத்துலிங்கத்தின் கதைகளின் வடிவத்தில் மூன்று வகைகள் இருக்கின்றன. ஒரு நல்ல கதைக்கான அடையாளமாக ஆறு குணாதிசயங்கள் இருக்கின்றன. இவை இரண்டையும் எடுத்துக் கொண்டு முத்துலிங்கத்தினுடைய கதைகளுக்குள் போவோம். அதற்கு முன்னால் அவரது நூல்களைப் பார்த்து விடலாம். முத்துலிங்கம் அறுபத்திநாலில் “அக்கா” என்றொரு சிறுகதைத் தொகுதி வெளியிட்டார். அதற்குப் பிறகு சுமார் 25 ஆண்டுகள் அவர் பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. ஆனால் ஒரு கருமியைப் போலே நிறைய விசயங்களை சேமித்துக் கொண்டார், பின்னாலே செலவு செய்வதற்காக. தொண்ணூற்றைந்திலே “திகட சக்கரம்” என்றொரு சிறுகதைத்தொகுதி வருகிறது. தொண்ணூற்றாறிலே “வம்சவிருத்தி,” தொண்ணூற்றெட்டிலே “வடக்கு வீதி,” இரண்டாயிரத்து ஒன்றிலே “மகாராஜாவின் ரயில்வண்டி”-ரொம்ப அற்புதமான தொகுப்பு. அடுத்த தொகுதி இரண்டாயிரத்துநாலிலே வருகிறது. இரண்டாயிரத்தொன்றிலிருந்து இரண்டாயிரத்துநாலு வரை எழுதிய கதைகளையும், அதற்கு முன்னால் வந்த “அக்கா, திகட சக்கரம், வம்சவிருத்தி, வடக்குவீதி,
மகாராஜாவின் ரயில் வண்டி” ஆகிய தொகுதிகளில் வந்த கதைகளையும் சேர்த்து எழுபத்தைந்து கதைகளை “அ.முத்துலிங்கம் கதைகள்” என்ற பெயரிலே ஒரு தொகுப்பாக தமிழினி வெளியிட்டது. நல்ல தொகுப்பு. அதற்குப் பிற்பாடு வெளியான கதைத் தொகுதி என்றால் இரண்டாயிரத்தொன்பதில் வந்த “அமெரிக்கக்காரி.” இதற்கு நடுவில அவரது கட்டுரைகள் வந்தன. இரண்டாயிரத்தாறில் “அங்க இப்ப என்ன நேரம்” என்கிற ஒரு கட்டுரைத் தொகுதி. அதற்குப் பிற்பாடு “வியத்தலும் இலமே” என்றொரு நூல் வந்தது. ஆங்கில எழுத்தாளர்களை விரட்டிப் பிடித்து பேட்டிகண்டு எழுதிய நேர்காணல்கள் அடங்கிய புத்தகம். அதைப்பற்றி இன்று பேச நேரமிருக்காது என்று நினைக்கிறேன். அப்புறம் “பூமியின் பாதி வயது” என்கிற புத்தகம் இரண்டாயிரத்தேழில் வந்தது. இரண்டாயிரத்தெட்டில இன்னொரு நூல் வந்தது, “உண்மை கலந்த நாட்குறிப்புகள்.” இது ஒரு சுயசரிதத்தன்மை கொண்ட நாவல். தலைப்பைப் பாருங்கள் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்.” அவரிடம் யாரோ கேட்டார்களாம், “இந்தக் கதைகளில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும்?” அவர் சொன்னாரம், “சமையல் குறிப்பில் எல்லாம் வரும் பாருங்க, உப்பு தேவையான அளவு என்று, அதுமாதிரி இந்தக்கதைக்குத் தேவையான அளவு உண்மை இருக்கும்” என்றாராம். இந்த நாவலில் நாற்பத்தாறு அத்தியாயங்கள் இருக்கின்றன. இந்த நாற்பத்தாறு அத்தியாயங்களையும் தனித்தனியாகப் படிக்கலாம். தனித்தனி சிறுகதைகளாகப் படிக்கலாம். அவற்றை சேர்த்துப் படிக்கும்போது இதையொரு நாவலாகப் படிக்கலாம். தமிழில் இதற்கு முன்மாதிரி இருக்கிறதா என்று தெரியவில்லை.

“அ.முத்துலிங்கம் கதைகள்” வந்த பிற்பாடு “அமெரிக்கக்காரி” தொகுப்பு வந்திருக்கிறது. கிட்டத்தட்ட நூறு சிறுகதைகள் அவர் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். அதேயளவு கட்டுரைகளும் எழுதியிருப்பார். இந்த “உண்மை கலந்த நாட்குறிப்புக்கள்” நாவலில் இருக்கின்ற அத்தியாயங்களை சிறுகதைகளாக நாம் எடுத்துக்கொள்ளலாம். அப்படியானால் நூற்றைம்பது சிறுகதைகள் வரை இருக்கும். இவை எல்லாவற்றுக்குள்ளும் போய் வெளியே வருவதற்கான அவகாசம் இல்லை. முத்துலிங்கம் இரண்டாயிரத்தொன்பதில் இணையத்தளம் ஒன்றைத் தொடங்கினார். இதில் நாட்குறிப்புகள் மாதிரி நிறைய எழுதினார். சின்னச் சின்னக் கட்டுரைகளும் எழுதினார். பெரிய கட்டுரைகளும் எழுதினார். அவையும் நூலுருவம் பெற்றன. அப்படி வெளியானவைதான் “அமெரிக்க உளவாளி” , ”ஒன்றுக்கும் உதவாதவன்” ஆகிய தொகுப்புகள். அவர் கதைகள் எழுதியிருக்கிறார். கட்டுரைகள் எழுதியிருக்கிறார். விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். நேர்காணல்கள் நிகழ்த்தியிருக்கிறார். நாட்குறிப்பு எழுதியிருக்கிறார். இவை எல்லாவற்றுக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. அதை நேரமிருந்தால் கடைசியில் பார்க்கலாம்.

இனி கதைகளுக்குள் போவோம். மூன்று வகைக் கதைகள் என்று சொன்னதில்

ஒவ்வொன்றுக்கும் உதாரணமாக ஒவ்வொரு கதையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இலங்கையை மட்டும் பின்புலமாகக்கொண்டு எழுதப்பட்ட முதல் வகைக் கதைகளில் எனக்கு மிகப் பிடித்தமான கதை “அம்மாவின் பாவாடை”. இந்தக் கதை ஒரு பத்து வயதுப் பையனுடைய பார்வைக்கோணத்தில் சொல்லப்படுகிறது. அந்தப் பையன்தான் கதையைச் சொல்கிறான். சிறுவர்கள் சொல்கிற கதையை எழுதுவது கம்பியில் நடப்பது மாதிரியான விஷயம். ஏனென்றால் படிக்கிறவர்கள் வயதானவர்கள். அந்த வயதுக்கான அனுபவமும், சூழ்ச்சியும், முதிர்ச்சியும் வந்திருக்கும். இதையெல்லாம் கழட்டி வைத்துவிட்டு ஒரு பையனாக இருந்து கதை சொல்லவேண்டும். நான் தமிழ் சினிமா பார்த்துக் கொண்டிருந்த காலத்தில ரொம்பச் சின்னப் பையன்களெல்லாம் பெரிய பெரிய வசனங்களைப் பேசுவார்கள். அதாவது பெரியவர்கள் என்ன பேசவேண்டுமென்று கதாசிரியர் நினைக்கிறாரோ அதையெல்லாம் இந்த சின்னப் பையனின் தலையிலே சுமத்தி அவனைப் பேச வைத்துவிடுவார். எல்லோரும் கைதட்டுவார்கள். அவர்கள் குழந்தை நட்சத்திரங்களாகி விடுவார்கள். அவர்களுக்குப் பரிசு பட்டயம் எல்லாம் கிடைக்கும்.

முத்துலிங்கம் இந்தப் பள்ளத்திலெல்லாம் விழாமல் அந்தப் பையனது பார்வையிலேயே கதையைச் சொல்லுகிறார். ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் நடக்கிற கதை. அந்தக் காலத்துக்கு நம்மை அழைத்துக் கொண்டு போகிறார். அந்தக் கிராமத்தில இருக்கிற பெண்கள் இரண்டு வகையானவர்கள். முதலாவது வகை இரண்டு பாவாடைகள் வைத்திருக்கின்ற வசதியான பெண்கள். இன்னொரு வகை ஒரு பாவாடை வைத்திருக்கின்ற ஏழ்மையான பெண்கள். ஒரு பாவாடை வைத்திருக்கின்ற பெண்கள் விசேஷங்களுக்கும், திருவிழாக்களுக்கும் மட்டும் அந்தப் பாவாடையை உடுத்திக் கொண்டு போவார்கள். மணியக்காரரின் மனைவிக்கும் இந்தக் கதை சொல்லுகின்ற பையனது அம்மாவுக்கும்தான் இரண்டு பாவாடை இருக்கிறது என்று ஊரில் பேசிக்கொள்கிறார்கள். அம்மா நல்ல வசதியான இடத்திலேயிருந்து வாழ்க்கைப்பட்டு வந்தவர். ஆனால் புகுந்த வீட்டைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. பையனுடைய அப்பாவைப் பற்றிச் சொல்லும்போது, “அவருக்கு எந்தப் பழக்கமும் கிடையாது. குடிப்பழக்கம் கிடையாது. சுருட்டுப் பழக்கம் கிடையாது. சீட்டாட்டம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அவருக்கு வேலை பார்க்கிற பழக்கமும் கிடையாது” என்கிறார். ஆக அப்பா வீட்டில்தான் இருக்கிறார். அம்மாதான் அவரது தாய் வீட்டிலிருந்து வருகின்ற நெல்லையும் தேங்காயையும் வைத்து குடும்பத்தைச் சமாளித்துக் கொண்டு வருகிறார். அந்தப் பையன் சொல்கிறான்- “எனக்குத் தெரியாமல் வறுமையை மறைப்பதற்கு அம்மா மிகவும் சிரமப்பட்டாள்” என்று. இந்தப் பையன் பக்கத்து வீட்டுப் பையனோடு விளையாடுவான். இவன் ரொம்ப ஒல்லியாக இருக்கிறான். அந்தப் பையனோ திடகாத்திரமாக இருக்கிறான். விளையாட்டின் முடிவில் எப்பவும் சண்டை வரும். அம்மா வந்து பிரித்து விடுவார். ஒரு சந்தர்ப்பத்தில இந்தப் பையன் அடுத்த வீட்டுப் பையனை திட்டிவிடுகிறான். தூமையன் என்று; கிராமத்தில் இருந்து வந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அது ஒரு மிக மோசமான வசைச் சொல். இதை அம்மாவால் தாங்க முடியவில்லை. உதட்டிலே சுண்டிவிடுகிறார். பூவரசங் கிளையை ஒடித்து பையனை அடிக்கிறார். அவ்வளவு அடி வாங்கிய பிறகுங்கூட அவனுக்கு அம்மா மேல் கோபம் வரவில்லை. அம்மாவை எப்படி impress பண்ணுவது என்றுதான் யோசிக்கிறான். ராத்திரியில்அம்மா வந்து பையனை கட்டிப்பிடித்துக்கொள்கிறார். “ஒரு சின்ன இடைவெளி விட்டால் கூட அது பெரிய அபராதமாகிவிடும் என்பதுபோல அம்மா என்னை இறுக்கியபடி அம்மா விம்மினாள்”. இவர்கள் வீட்டில கீரைப்பாத்திகள் இருக்கிறது. பக்கத்து வீட்டு மாடு அடிக்கடி வந்து கீரையைத் தின்றுவிடும். இனிக் கதையின் கடைசி வரிகளை உங்களுக்கு வாசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

“அம்மா அருமையாக வளர்த்த கீரை தகதகவென்று வளர்ந்து வயதுக்கு வரும் சமயம் ஒருமுறை மாடு புகுந்துவிட்டது. கீரைப்பாத்தியை துவம்சம் செய்துவிட்டது. கீரைப்பாத்தியை கொத்து கொத்தாக இழுத்து மண்ணை உதறி சாப்பிட்டு முடித்தது. கீரைப்பாத்தி வெறும் தொடக்கம்தான். அதை முடித்துவிட்டு பிராதான சாப்பாட்டை நிறைவேற்றும் நோக்கத்தோடு திரும்பியது. சூரியனால் பழுப்பேறிப்போய் கீழ்க்கரையோரம் கிழிந்து நுரைவராத சோப்பினால் கழுவித் துவைத்து உலர்த்தப்பட்டு நாவுக்குத்தோதான உஷ்ணத்தில் மொரமொரவென்று நாடாவில்லாமல் கிடந்தது அம்மாவின் பாவாடை.

அந்த மாடு கடிகார முள் சுழலும் திசையில் சுழன்று எட்டி ஒரு வாய் வைத்தது.கரையோரப்பகுதிகளை முடித்துவிட்டு தொடைப்பகுதியை தொடும்போதுதான் அம்மா கண்டார். மெய்யெழுத்துக்கள் அனைத்தையும் உதறிவிட்டு உயிர்எழுத்துக்களான ஒரு ஒலியை அப்போது அவர் கண்டம் எழுப்பியது. மூச்சுத் தெளிந்தபோது “ஐயோ என்ர பாவாடை” என்று பாய்ந்து வந்து உருவினாள். மாடு விடவில்லை. அம்மா இழுக்க அதுவும் இழுத்தது. இழுத்தபடியே படலையை நோக்கி ஓடியது. அம்மா முழங்கால் அரைய இழுபட்டாள். படலையைக் கடக்கும்போது மாடு பாவாடையைப் போட்டுவிட்டது. பாவாடையை நிலத்திலே பரப்பியபடி அம்மா குந்தியிருந்தாள். தொடையும் தொடை சார்ந்த பகுதிகளிலும் ஒரு குழந்தை புகுந்து போகும் அளவுக்கு ஒரு பெரிய ஓட்டை. வெகு நேரம் அதையே பார்த்தபடி இருந்தாள். அவளது வாய் தூமையன் தூமையன் என்று
சொல்லி முணுமுணுத்தது. கண்ணிலிருந்து உருண்டு இறங்கிய ஒரு கண்ணீர் கீழே போகத் தைரியமின்றி கன்னத்தின் நடுவிலேயே நின்றுவிட்டது.”

எதை ஒரு மோசமான சொல்லென்று சொல்லித் தன்னுடைய மகனை பூவரசங் கிளையை ஒடித்து அடித்தாரோ, அதே சொல்லை அந்த அம்மா சொல்கிறார். இது அம்மாவுக்கு ஏற்பட்டிருக்கிற மிகப்பெரிய இழப்பு. மறுபடியும் இரண்டாவது பாவாடையை அம்மாவால் வாங்கவே முடியாது. அவர் வாழ்க்கைப்பட்டிருக்கிற குடும்பம் அப்படி. தன்னுடைய மதிப்பீட்டில் தரம் தாழ்ந்த ஒரு சொல்லை அந்த அம்மாவே சொன்னார் என்பதன் மூலம் அந்த இழப்பின் வலி வாசகனைப் போய்ச் சேர்கிறது. கதைக் களனும், சம்பவங்களும், அம்மா- பையனின் மன அவசங்களும் நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருப்பதால், கதை நம்பகத்தன்மை பெறுகிறது.

இந்தக் கதை நெடுகிலும், இந்தக் கதை என்றில்லை அவருடைய எல்லாக் கதைகளிலும் அற்புதமான உவமைகள் வருகின்றன. இந்த உவமைகள் எல்லாம் இதற்கு முன்னால் நீங்கள் கேட்டிராத உவமைகளாக இருக்கும். “தனியாக எடுத்து வைத்த சாமிப்படையல் போல அம்மா சிரிப்பார்கள்.” என்று ஒரு வரி. படையல் போடும்போது சாமிக்கு வைக்கவென்று தனியாக எடுத்து வைப்பார்கள். இந்த இடத்தில் ஒரு கிராமத்துப் பையன் பார்வையில் கதை விரிகிறது என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும். இந்தப் பையன் பக்கத்து வீட்டுப் பையனை தூமையன் என்று சொன்னதும் அம்மா வந்து சேர்கிறார். எப்படி வருகிறார்? “கலீவரின் பயணங்களில் வரும் ராட்சதப்பறவை போல அம்மா எங்கிருந்துதான் பறந்து வந்தாளோ தெரியாது”. அந்த வயசில் அந்தப் பையன் படிக்கக்கூடிய கதையில் இருந்து உதாரணம் அமைகிறது.

இது முதல் வகைக் கதை; அதாவது இலங்கையில் நடக்கிற கதை. இரண்டாவது உலகம் என்பது தமிழ்ப் பாத்திரங்களோடு கூடிய வெளிநாடுகளில் நடக்கும் கதைகள். இதற்கு உதாரணமாக “தொடக்கம்” என்கிற கதையைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஒரு கட்டிடத்தின் இருபத்தொன்பதாம் மாடியில் தமிழனொருவன் பணியாற்றுகிறான். அவன் வேலை பார்ப்பது ஒரு ஆலோசனை நிறுவனத்தில். இந்த நிறுவனத்தில் ஒரு பிரச்சினை வருகிறது. அவர்கள் சொன்ன ஆலோசனைப்படி ஒரு நிறுவனம் வேறொரு நிறுவனத்தில் முதலீடு செய்ததில் நட்டம் ஏற்படுகிறது. அதைப்பற்றி ஒரு கூட்டம் நடக்கப் போகிறது.

அந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு இவன் தயாரித்துக் கொண்டிருக்கிறான். அவன் பேச வேண்டிய விசயங்களை எல்லாம் எழுதி வைத்துவிட்டான். ஆனால் அதற்கு முன்னுரை வேண்டும். ஒரு தொடக்கம். ஆனால் அவனால் ஒரு சரியான தொடக்கவுரையை எழுத முடியவில்லை. கூட்டத்திற்குப் பெரிய பெரிய ஆட்களெல்லாம் வருகிறார்கள். அவர்களைப்பற்றி எல்லாம் சொல்கிறார். அலிசாம் பின் ஒஸ்மான் என்று ஒருவர். ‘இவரது கேள்விகளில் பள்ளம் இருக்கும். விழுந்துவிடாமல் சமாளிக்கவேண்டும்’. இன்னொருத்தர் மீசேல் பூனே, வயோதிகர். இந்த இடத்தில் இடம் பெறும் இன்னொரு உவமையைப் பாருங்கள். உருளைக்கிழங்குகளை எடுத்துவிட்ட உருளைக்கிழங்குச் சாக்குபோல அவரது உடல் சுருங்கி இருக்குமாம். ஒட்டகச்சிவிங்கி இரை மீட்பதுபோல மிகவும் நிதானமாகவும் ஆறுதலாகவும் பேசுவாராம். இன்னொரு அம்மா, பேர் குளோரியா பாண்ஸ். அவர் பெரிய யாக்கைக்கு உடமையானவர். முத்துலிங்கத்தின் கதைகளில் சில அற்புதமான வார்த்தைகள் இடம் பெறும். வேறொரு இடத்தில முத்துலிங்கம் எழுதியிருப்பார் ‘ஒரு வார்த்தை என்று ஒன்று இருந்தால் அதைப் பயன்படுத்தியாக வேண்டும். இல்லையென்றால் எதற்காக அந்த வார்த்தை இருக்கிறது?’ அப்படி இந்தக் கதையில் இடம் பெறும் ஒரு வார்த்தைதான் மௌடீகம். தமிழில அதிகம் பயன்படுத்தாத சொல். அறியாமை, ignorance என்கிற அர்த்தத்தில வரும் சொல். இந்த மாதிரிக் கம்பனிகளில் யார் பணம் போடுவார்கள்? அறியாதவர்கள்தான் போடுவார்கள். அது ஏமாற்றும் கம்பனி. மக்களுக்கு மௌடீகம் இருக்கிறது. அதனால் இந்த மாதிரி கம்பனிகளில் பணம் போடுகிறார்கள். கதையில் இடம் பெறும் இன்னொரு வார்த்தை முன்னாலே சொன்ன யாக்கை. “அவர் பெரிய யாக்கைக்கு சொந்தமானவர்”. அந்த அம்மாவைப் பார்க்கும்போதெல்லாம் கதைசொல்லிக்கு யாப்பெருங்கலக்காரிகை ஞாபகத்துக்கு வருகிறது.

ஏன் இப்படியான சொற்களைப் பயன் படுத்துகிறார்? நாயகனுக்கு பழந்தமிழ் இலக்கியத்திலே ஈடுபாடு இருக்கிறது. தன்னுடைய முன்னுரையை எழுதுவதற்கு ‘நான் பாயிரம் எழுத உட்கார்ந்தேன்’ என்று சொல்கிறான். பாயிரம் என்ற சொல்லைப் யாரால் பயன்படுத்த முடியும்? அந்தச் சொல்லின் பயன்பாட்டிற்கு வாசகனைத் தயார் பண்ணுகிற முகமாகத்தான் பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை முத்துலிங்கம் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். இவன் பாயிரம் எழுதிக் கொண்டிருக்கிறான். முடியவில்லை. அப்போது இருபத்தொன்பதாவது மாடியிலிருக்கும் ஜன்னலைச் சாத்துகிறான். இவன் பார்த்துக் கொண்டிருக்கும்பேதே ஒரு பறவை ஐம்பது மைல் வேகத்தில் வந்து அந்த ஜன்னல் கதவில் மோதி விழுந்து விடுகிறது. கதவைத்திறந்து பார்க்கிறான். அது கிட்டத்தட்ட உயிரை விட்டுவிட்டது. இப்போது கூட்டத்துக்கு எல்லோரும் தயாராக இருக்கிறார்கள். அவனுடைய செயலாளர் அவசரப்படுத்துகிறாள். இல்லை, இந்தப் பறவையை இப்படியே விட்டுவிட்டு வர முடியாது. கீழ போய் அடக்கம் செய்கிறான். அப்போதுதான் கவனிக்கிறான். அதன் நீல நிறக்கால்களில் ஒரு அலுமினிய வளையம் இருக்கிறது. அதில் மாஸ்கோ பறவை மையம், Z453891 என்று பொறித்திருக்கிறது. இணையத்தில் தேடினால் அது என்ன பறவை, எங்கேயிருந்து வந்தது போன்ற விபரங்கள் கிடைக்கின்றன. இந்தப் பறவை இந்த இடத்தில் இன்ன நேரம் இறந்து போய்விட்டது என்று ஒரு குறிப்பு எழுதி அதை மாஸ்கோ பறவை மையத்துக்கு அனுப்பிவிடுமாறு தனது செயலாளரைக் கேட்டுக் கொள்கிறான். இன்னும் அவன் தனது முன்னுரையைத் தயாரித்த பாடில்லை. இவனது நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் ஒரு கம்பனி இன்னொரு கம்பனியில் முதலீடு செய்தது, அது சரியாக வரவில்லை. அதுதான் பிரச்சினை. இவன் கூட்டத்திற்குப் போகிறான். உள்ளே பெரியாட்கள் எல்லாம் உட்கார்ந்திருக்கிறார்கள். இனி முத்துலிங்கத்தின் வார்த்தைகளில் கதையின் கடைசிப் பகுதியைக் கேட்கலாம்.

“என்னைக் கண்டதும் அங்கிருந்தோர் தங்கள் அதிருப்தியை தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு தெரியப்படுத்தினர். சில நாற்காலிகள் நகர்ந்தன. சிலர் அசைந்து கொடுத்தனர். பலர் குடித்த காப்பிக் கோப்பைகள் மேசையில் ஆடின. சிகரெட் பிடிக்கக்கூடாதென்ற அறிவித்தலையும் மீறி யாரோ புகைத்திருந்தார்கள். அந்த மணம் அறையிலே சூழ்ந்திருந்தது. என் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்பேன் என்று சிலர் எதிர்பார்த்திருந்தார்கள். ‘சீமாட்டிகளே, சீமான்களே’ என்று வழக்கமான சம்பிரதாயத்துடன் பேச்சை ஆரம்பிப்பேன் என்று சிலர் நினைத்தனர். இன்னும் சிலர் காலை வணக்கம் கூறுவேன் என்று காத்திருந்தார்கள். மாறாக நான் ஒன்றும் செய்யவில்லை. பேச்சுமேடையில் அஞ்சலி செலுத்துவதுபோல அசையாமல் நின்றேன். விரித்த சிறகுடன் வேகமாக வந்து கண்ணாடியில் மோதி இறந்துபோன அந்தப் பறவையே எனது ஞாபகத்திற்கு
வந்தது. என் உரையைத் தொடங்கினேன்.

“ஒரு பறவை இன்று வழிமாறி வந்துவிட்டது. சில நிமிடங்கள் முன்பு வெளி என்று நினைத்து எனது ஜன்னல் கண்ணாடியில் ஐம்பது மைல் வேகத்தில் வந்து மோதியது. தட்சணமே உயிர் பிரிந்துவிட்டது. அதை இப்போதுதான் அடக்கம் செய்துவிட்டு வருகிறேன். வளைந்த மூக்கும் வெள்ளைத் தலையும் கொண்ட பறவை. சாம்பல் நிறமான செட்டைகள் யாரையும் வசீகரிக்கும். இந்தக் கைகளில் விரிந்து அனாதரவாகக் கிடந்தது. அதன் உடம்புச் சூடு ஆறும் முன்னரே அது அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. இந்தப்பறவையை செக்கர் பால்க்கான்(Saker Falcon) என்பார்கள். ருஸ்யாவின் வடகிழக்கு மூலையிலிருந்து குளிர்கால ஆரம்பத்தில் இது புலம்பெயரும். தெற்கு ஆப்பிரிக்கா வரைக்கும் பறந்து வந்து வசந்தம் வரும் வேளைகளில் திரும்பிவிடும். ஐயாயிரம் மைல்கள் இதற்கு ஒரு பொருட்டல்ல. சூரியனையும் நட்சத்திரங்களையும் வைத்து இது திசையறிந்து செல்லும். சரி கணக்காக வந்து சரி கணக்காகத் திரும்பிவிடும். அப்படிப்பட்ட வல்லமை படைத்த ஒரு பறவை இன்று ஒரு சிறிய தவறு செய்தது. திரும்பவேண்டிய ஒரு சிறு திருப்பத்தில் திரும்ப மறந்துவிட்டது. அதனால் அது இறக்க நேரிட்டது. இனி அது தனக்குச் சொந்தமான ருஸ்ய நாட்டின் வடபகுதிக்குத் திரும்பவே போவதில்லை”

தொடக்க உரையை முடித்துவிட்டு அறிக்கையைக் கையில் எடுத்தேன். சபையோரின் முகங்களைப் பார்த்தேன். அந்த முகங்களை மறைத்த இருள் விலகுவது போலப்பட்டது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது விளங்கியது போலவும் இருந்தது. நான் என்னுடைய உரையை இனிமேல் படிக்கவேண்டிய அவசியமே இல்லை. அப்படித்தான் நினைக்கிறேன்” என்று அந்தக் கதையை முடிக்கிறார்.

ஆரம்பத்தில் நல்ல கதைகளின் இலக்கணத்தைப் பற்றிச் சொல்கிறபோது கதை ஒரே இலக்கை நோக்கிப் போக வேண்டும் என்று சொன்னோம். இந்தக் கதையில் வரும் செக்கர் பால்க்கான் என்கிற பறவை தனது இலக்கை நோக்கி சரி கணக்காகப் போகக் கூடியது. இந்தக் கதையும் அப்படித்தான். கதையினுடைய தலைப்புத் தொடக்கம். நாயகன் தன்னுடைய பேச்சை எப்படித் தொடங்கப் போகிறான் என்று கதை ஆரம்பிக்கிறது. அந்தத் தொடக்கம் கதையின் முடிவில் வருகிறது. அந்தத் தொடக்கத்துக்கான விசயங்கள் மட்டுந்தான் கதையில் இடம் பெறுகிறது. எங்கும் தடம் புரளவில்லை. இந்தக் கதை மிகவும் கட்டுச் செட்டானது. நீங்கள் எங்கேயுமே இரண்டு வரிகளை உருவிட முடியாது. இது எளிமையான கதைதான். வார்த்தைகள் முறுக்கிக்கொண்டு ஜாலவித்தை எதுவும் செய்வதில்லை. ஆனால் இதை எழுதிய எழுத்தாளன் எவ்வளவு சிரமமும் கவனமும் எடுத்துக்கொண்டு இதைச் செய்திருக்கிறான் என்பது அடுத்தடுத்துப் படிக்கிறபோது தெரிகிறது. அப்போது மணற்கேணி போலப் புதிய புதிய பொருள்கள் ஊறிவரும். ஒரு கணக்கில் பார்த்தால் அது புலம் பெயர்ந்த பறவை, அந்நிய மண்ணில் மரித்துப் போகும் அகதிப் பறவை. இன்னொரு பார்வையில் மற்ற உயிரினங்களைப் பற்றியும் சுற்றுச் சூழல் அக்கறையைப் பற்றியும் கலாபூர்வமாகச் சொல்லுகிற கதை.

முத்துலிங்கத்தின் மூன்றாவது உலகம் வெளிநாட்டுக் கதாபாத்திரங்களை மட்டுமே இடம் பெறுகிற வெளிநாட்டுக் கதைகளில் இருக்கிறது. தமிழில் அதிகம் பேர் பிரவேசித்திராத வெளி இது. இதற்கு உதாரணமாக “நாளை” என்கிற கதையைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

ஒரு அகதி முகாம். அந்த நாடு அந்நிய இராணுவத்தின் பிடியில் இருக்கவேண்டும். ஒரு அண்ணனும் தம்பியும் முகாம் முகாமாய்ப் போய் வரிசையில் நின்று உணவு வாங்குகிறார்கள். தம்பிக்கு ஆறு வயதிருக்கலாம். அண்ணனுக்கு பதினொரு வயதிருக்கலாம். பெயரெல்லாம் கிடையாது. பெரியவன், சின்னவன், அவ்வளவுதான். மேலும் கதை நடக்கிற இடம், அவர்களை ஆக்கிரமித்திருக்கிற நாடு, அவர்கள் பேசுகிற மொழி, கதை நடைபெறும் காலம் என்று ஏதொன்றும் சொல்லப்படவில்லை. எல்லைக் கோடுகளை மீறிய ஒரு சர்வதேசியப் பிரச்சனையைச் சொல்லுவதற்கு இந்த அடையாளங்களைத் துறப்பதே நல்ல வழி என்று முத்துலிங்கம் கருதியிருக்க வேண்டும்.

இந்தக்கதையும் பதினோரு வயதுப் பையனுடைய பார்வையில் சொல்லப்படுகின்ற கதைதான். பையனின் வயதுக்கு மீறிய விசயங்கள் கதையில் இடம் பெறுவதில்லை. பையன்களுடைய பெற்றோர்களைப் பற்றி நேரடி விவரணைகள் இல்லை. அவர்கள் யுத்ததத்தில் இறந்து போயிருக்க வேண்டும். இவர்களுக்குக் கிடைக்கிற சூப்பில் இறைச்சி இருப்பதில்லை. இதற்காக ஐந்து மைல் தூரத்திலிருக்கிற இன்னொரு முகாமுக்குப் போகிறார்கள். கூட்டத்தில் சின்னவன் காணாமல் போகிறான். பிற்பாடு கண்ணீரோடு அண்ணனிடம் வந்து சேர்ந்து கொள்கிறான். அகதிகளுக்கு அடையாள அட்டை உண்டு. இந்தப் பையன்களிடம் இருக்கிற அகதி அட்டை இவர்கள் புதிதாகப் போன முகாமில் செல்லாது. அதையும் மீறி அவர்கள் அங்கு வழங்கப்படுகிற ரொட்டியையும் சூப்பையும் வாங்குகிறார்கள். அன்றைக்கும் அவர்களுக்கு இறைச்சி கிடைக்கவில்லை. சின்னவனுக்குத் தாங்க முடியாத ஏமாற்றம். அவர்கள் ஒண்டியிருக்கிற காராஜிற்குத் திரும்புகிறார்கள்.

முத்துலிங்கம் கதையை இப்படி முடிக்கிறார்.

“பெரியவன் பெட்டியின் விளிம்பில் சாய்ந்தபடி இருந்தான். சின்னவன் தூங்கிவிட்டான் போலும். திடீரென்று அவன் எழும்பி அனுங்கியபடி ஊர்ந்து ஊர்ந்து வந்தான். அண்ணனைக் கட்டிக் கொண்டான். ‘அண்ணா அண்ணா, நீ என்னை விட்டுப் போக மாட்டியே, போக மாட்டியே!’ என்றழுதான். பெரியவன் அவனை இறுக்க அணைத்தான். ‘இல்லை, என்கூடப்பிறந்தவனே, நான் உன்னைவிட்டு ஒருநாளும் போகமாட்டேன்’ என்றான். அந்தக் குரலில் இருந்த உறுதி சின்னவனுக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது. பெரியவன் அப்படியே வெகுநேரம் தூங்காமல் இருந்தான். அடுத்த நாளுக்கு வேண்டிய ஆலோசனைகள் அவனுக்கு நிறைய இருந்தன. நாளைக்கு கஞ்ச் முகாமுக்குப் போகலாம் என்று தீர்மானித்தான். அது பெரிய முகாம். பத்து மைல் தூரத்தில் இருந்தது. அங்கு கட்டாயம் இறைச்சி கிடைக்கும். அப்படித்தான் அவன் கேள்விப்பட்டிருந்தான்”

இந்தக் கதையை பச்சாத்தாபத்தைத் கோருகின்ற மொழியில் அவர் எழுதவில்லை. துயரம் மிகுந்த இந்தக் கதை பெரிய எதிர்பார்புகள் இல்லாத சிறுவர்களின் மொழியில் விரிகிறது. இந்த உள்ளடங்கிய வெளிப்பாடுதான் வாசகனை அதிகம் வேதனைப்படுத்துகிறது. கதையின் தலைப்பு “நாளை”. நேரடியான பொருளில் அடுத்த நாள். யோசிக்கையில் அதன் பொருள் விரியும். அதற்கான ஒரு வெளியை வாசகனுக்கு அவர் வைத்திருக்கிறார்.

மேற்சொன்ன மூன்று கதைகளும் ‘மகராஜாவின் ரயில் வண்டி'(காலச்சுவடு, 2001) நூலில் இடம் பெற்றிருகின்றன. ‘அ.முத்துலிங்கம் கதைகள்” (தமிழினி, 2004) நூலிலும் இவற்றைப் படிக்கலாம்.

முத்துலிங்கத்தின் கதைகளைப் பற்றிப் பேசுகிறபோது அவரது கட்டுரைகளைப் பற்றிப் பேசாமல் தீராது. ஒரு நல்ல சிறுகதை கட்டுரையிலிருந்து வேறுபட்ட ஒரு மொழியில், புனைவுகளுக்கான மொழியில் இருக்கவேண்டும் என்று பார்த்தோம். ஆனால் இந்த விதியைக் கொண்டு முத்துலிங்கத்த்தின் கதைகளை அளக்க வேண்டியதில்லை. அவர் ஒரு படி மேலே பாய்ந்து கதைகளுக்கான புனைவு மொழியை எடுத்துக்கொண்டு போய் கட்டுரைகள் எழுதி விடுகிறார். அப்போது அவர் கட்டுரைக்கு மேல் நீங்கள் கட்டுரை என்று போட்டால் அது கட்டுரை ஆக இருக்கும். மாறாக நீங்கள் சிறுகதை என்று போட்டால் அது சிறுகதையாகி விடும். கட்டுரையைப் புனைவு மொழியில் சொல்லுகின்ற இந்த ரசவாதத்தை வெகு அலட்சியமாக கடந்த சில ஆண்டுகளாகச் செய்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் அவரது இணையத்தளத்தில ஒலிம்பிக்ஸ் நடப்பதற்கு முன்னால் “நாடற்றவன்” என்றொரு குறிப்பை எழுதியிருக்கிறார். குவோர் மாரியல் தெற்கு சூடானைச் சேர்ந்தவன். 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் அகதியாக வாழ்பவன். தீவிரமான மாரத்தன் ஓட்டக்காரன். ஆனாலும் லண்டன் ஒலிம்பிக்கில் அவன் ஓடமுடியாது என்று கூறிவிட்டார்கள். ஏனென்றால் அவன் நாடற்றவன். தெற்கு சூடான் சமீபத்தில்தான் சுதந்திரம் அடைந்தது. ஆனால் அதனிடம் ஒலிம்பிக் குழு இல்லை. எல்லா நாட்டு வீரர்களும் தத்தமது நாட்டின் கொடிகளை ஏந்தி கொண்டு ஊர்வலம் வருவார்கள். அந்த நாடுகள்தான் ஒலிம்பிக்கில் பங்கெடுக்க முடியும். அதுதான் சம்பிரதாயம். யாரும் அதை மீற முடியாது. தெய்வமேயானுலும் ஐதீகத்தில்தான் வாழ்ந்தாக வேண்டும். வடக்கு சூடானின் அதிபர் தங்கள் அணியில் ஓடுமாறு அவனை அழைக்கிறார். சூடானுக்கும், விடுதலை கோரும் தெற்கு சூடானுக்கும் இடையில் நடந்த உள்நாட்டு போரில் இவனது எட்டுச் சகோதரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சூடான் அதிபரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்போர்க்குற்றவாளி என்று அறிவித்திருக்கிறது. அப்படிப்பட்டவர், இவனுடைய எட்டுச் சகோதரர்களைக் கொன்ற அரசாங்கத்தினுடைய தலைவர், ‘நீ என்னுடைய அணியில் வந்து ஓடு’ என்று அழைக்கிறார். இவானால் அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மறுத்து விடுகிறான். விளையாட்டு ஆர்வலர்கள் ஒரு கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள். கடைசியாக ஒலிம்பிக் அமைப்பிற்கு ஒரு கொடி இருக்கிறதல்வா, அதை ஏந்திக் கொண்டு இவன் போகட்டும். அதன் சார்பாக இவன் ஓடட்டும் என்று சொல்லி விடுகிறார்கள்.

முத்துலிங்கம் சூடானில் வேலை பார்த்தவர். அந்த அனுபவங்களைச் சொல்கிறார். அவரது அலுவலகத்தில் எல்லோரும் வடக்கு சூடானைச் சேர்ந்தவர்கள். மாலோங் என்றொருத்தன் மட்டும் தெற்கு சூடானைச் சேர்ந்தவன். அது உள்நாட்டு போர் மூண்டிருந்த காலம். அதனால் அவனுடன் ஒருவரும் பேசுவதில்லை. அலுவலக பணியாளர்கள் வரும் பஸ்ஸில் அவன் ஏற முடியாது. அலுவலக உணவு மேசையில் அமர முடியாது. அவருடைய காரியதரிசி மாலோங் ஒரு விலங்கு என்கிறாள். அவன் ஒருநாள் திடீரென்று காணாமல் போய்விடுகிறான். எப்படிப்போனான், யார் விரட்டியது என்றெல்லாம் தெரியவே இல்லை. அந்தக் நாட்குறிப்பை அல்லது கட்டுரையை இவர் இப்படி முடிக்கிறார்:

“இந்த மாரத்தன் ஓட்டக்காரன் ஓடுவதை பார்க்கும்போது சுதந்திரமடைந்த தெற்கு சூடான் மக்களை நினைந்து கொள்வேன். என்னுடன் வேலைசெய்து பாதியிலே வேலையை துறந்து எனக்குச் சொல்லாமலே ஓடிப்போன மாலோங்கை நினைந்து கொள்வேன். சூடான் உள்நாட்டு போரிலே மடிந்த 1.5 மில்லியன் மக்களை நினைந்து கொள்வேன். போரிலே அநியாயமாக கொல்லப்பட்ட மாரியலின் சகோதர்கள் எட்டு பேரையும் நினைந்து கொள்வேன். என் கண்கள் மாரியலின் ஓட்டத்தை மட்டுமே பார்க்கும். அவன் முதலாவதாக வந்தாலும் சரி, கடைசியாக வந்தாலும் சரி, 2012 ஒலிம்பிக் மாரத்தன் ஓட்டவீரன் அவன்தான். நாடற்றவன்.”

இது ஒலிம்பிக் சம்பந்தப்பட்ட கட்டுரை. ஒரு ஓட்டக்காரனைப் பற்றிய கட்டுரை. ஆனால் இது பெரிய அரசியல் கட்டுரை. இதில் எந்த இடத்திலாவது இலங்கை என்றொரு வார்த்தையை, ஈழம் என்றொரு வார்த்தையை அவர் சொல்லுவார் என்று வாசித்துக் கொண்டே வருகிறேன். ஆனால் இந்த மனுஷன் பாருங்க; எவ்வளவு கட்டுப்பாடு. ஓரிடத்திலும் சொல்லவில்லை. கடைசிவரை சொல்லவில்லை. ஆனால் கட்டுரையின் ஒவ்வொரு வரியிலேயும் நாடற்றவர்களின் வலியையும் வேதனையையும் உணரவைக்கிறார்.

ஆக முத்துலிங்கம் கட்டுரைகள் எழுதுகிறார். நாவல் எழுதுகிறார். நாட்குறிப்புக்கள்
எழுதுகிறார். எல்லாவற்றிலும் அவர் புனைவு மொழியை லாவகமாகக் கையாள்கிறார். நான் இறுதியாக ஒரு செய்தியைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன். நான் போன மாதம் மதுரைக்குப் போயிருந்தேன். அங்கே இந்தியப் பார்வையற்றோர் கழகம்(Indian Association of Blind-IAB) என்கிற அமைப்பு பார்வையற்றவர்களுக்காக ஒரு பள்ளியை நடத்தி வருகிறது. அங்கே புதிதாக ஒரு கட்டிடம் திறந்து வைத்தார்கள். ஹாங்காங்கில் உள்ள ஒரு அமைப்பு அதற்கு உதவி செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசும்போது எனக்கு முத்துலிங்கம்தான் ஞாபகத்துக்கு வந்தார். அவர் பார்வையற்றவர்களுடைய உணவகம் ஒன்றுக்குப் போனதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவரது பார்வையற்ற நண்பர் ஒருவர்தான் அவரை அங்கு கூட்டிக்கொண்டு போகிறார். அந்த உணவகத்தில் பரிசாரகர்கள் எல்லாம் பார்வையற்றவர்கள். சமையல்காரர்கள் எல்லாம் பார்வையற்றவர்கள். அதைவிட முக்கியமானது என்னவென்றால் அந்த உணவகத்திலே இருக்கின்ற போசன சாலையின் கதவுகள், ஜன்னல்கள், திரைச்சீலைகள் எல்லாம் மூடப்பட்டிருக்கும். விளக்குகள்அணைக்கப்பட்டிருக்கும். இருட்டில் தடவித் தடவி பரிசாரகர்கள் உதவியுடன் உள்ளே போய் அமர்ந்து கொள்கிறார். சுற்றிலும் இருட்டு. அவர் கையே அவருக்குத் தெரிவதில்லை. இந்த இடத்தில் முத்துலிங்கம் சொல்வதைக் கேளுங்கள்:

“எங்களைச் சுற்றி தடவிப் பார்த்தோம். முன்னுக்கு மேசை, மேசை மேலே பிளேட், கரண்டி, முள்ளுக்கரண்டி, கத்தி, நாப்கின் போன்றவற்றை ஊகிக்கக்கூடியதாக இருந்தது. நிறைய ஆட்கள் அடுத்தடுத்த மேசைகளில் உட்கார்ந்து சாப்பிடும் சத்தம் கேட்டது. கரண்டி பல்லில் படும் ஒலி, கோப்பையில் கத்தி உரசும் ஒலி, அடிக்கடி எழும் சிரிப்பு அலை, கிளாஸ்கள் எழுப்பும் ணங் சத்தம், பரிசாரகர்கள் நடமாடும் ஒலி, உறிஞ்சும் ஒலி…” என்ன நடக்கிறது? முத்துலிங்கத்தால் பார்க்க முடியவில்லை. முதலில் அவரது தொட்டுணரும் புலன் கூர்மையடைகிறது, அடுத்தது செவிப்புலன், பிறகு நாசி. அதாவது ஒரு புலனில் குறைவு ஏற்படும்போது மற்ற புலன்கள் எல்லாம் சிறப்பாகச் செயற்படுகின்றன. அதனால்தான் அப்படியானவர்களை differently abled என்றோ மாற்றுத்தினாளிகள் என்றோ சொல்கிறோம். இதை முத்துலிங்கம் நேரடியாகச் சொல்லவில்லை. இது ஒரு கட்டுரைதானே, நேரடியாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் சொல்லவில்லை. அதுதான் கட்டுப்பாடு. அதே நேரத்தில் அந்தச் செய்தி வாசகனைப் போய்ச் சேரவும் செய்கிறது. அதுதான் அவரது எழுத்தின் வலிமை. இதை நான் மதுரையில் குறிப்பிட்டேன், ஒரு புலனில் குறைபாடு ஏற்பட்டால் மற்ற புலன்கள் அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாகச் செயற்படுகின்றன என்பதைத்தான் முத்துலிங்கம் சொல்ல வருகிறார் என்று குறிப்பிட்டேன். அந்த சிறுவர்களெல்லாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

முத்துலிங்கம் தனது படைப்புகளின் வழியாக நேராகச் சொல்லுவதைவிட வாசகனை வைத்து நிரப்பிக் கொள்ளச் சொல்லும் இடங்கள் மிக அதிகம். அவர் கதைகளில் மட்டுமல்ல புனைவு மொழியில் எழுதப்படும் அவரது கட்டுரைகளிலும் மூன்று உலகங்களில் சஞ்சரிக்கிறார். என்னைவிட்டால் முத்துலிங்கத்தைப் பற்றி இன்று முழுவதும் பேசிக்கொண்டேயிருப்பேன்.நேரமில்லை. முத்துலிங்கத்தினுடைய படைப்புக்களைப் பற்றி உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பைத் தந்த தில்லிகைக்கும், செவிமடுத்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைச் சொல்லி விடைபெறுகிறேன். நன்றி.

[செப்டம்பர் 8, 2012 அன்று, தில்லி இலக்கிய வட்டமான ‘தில்லிகை’யின் கூட்டத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.
ஒலியிலிருந்து எழுத்து – மயூ மனோ]

2 Replies to “முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்”

  1. அருமையான ஆய்வுக்கட்டுரை. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் அ.முத்துலிங்கம். கதை கட்டுரை இரண்டுக்கும் இடைப்பட்டதாக ஒருமொழி நடையை தனக்கென உருவாக்கிக் கொண்டவர். தமிழ் நடையில் சுஜாதா ஒரு துருவம் என்றால் முத்துலிங்கம் இன்னொரு துருவம் என்பேன்.உலகளாவிய கதைக்கருக்களை தமிழுக்குக் கொண்டுவந்தவர்.இலங்கை எழுத்தாளர் என்றாலே இப்படித்தான் எழுதுவார்கள் என்ற பிம்பத்தை மீறி ஒரு மறுமலர்ச்சி யை எழுதிக்காட்டியவர் அவர்.

  2. சிறப்பான கட்டுரை. மகாராஜாவின் ரயில் வண்டி தொகுப்பு மட்டும்தான் என்னிடம் உள்ளது. முன்பே திண்ணை இணைய இதழில் சில சிறுகதைகள் படித்த நினைவு (கனடாவில் கடன், கனடாவில் கார், கொழுத்தாடு பிடிப்பேன்) பல கதைகள் அப்படியே ஈர்த்துக்கொள்பவை.

    இதேபோல பூர்வீகம், கறுப்பு அணில், விருந்தாளி கதைகளும் அற்புதமானவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.