புனைவுக் கட்டுரைகளும் ஆசிரியரின் மறுஜென்மமும்

ஒவ்வொரு தடவையும் ஒரு பிரதி வாசிக்கப்படுகையில் அதை எழுதியவர் மரணித்து அவருக்குப்பதிலாகப் புதிதாக வாசகர் என்ற ஒருவர் பிறக்கிறார். அதுவரைகாலமும் பிரதியை எழுதியவரின் பின்னணியைக்கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒற்றைப்படையான “நான்” என்கின்ற பாத்திரம் இப்போது வாசகருக்கு வாசகர் மாற்றம்பெறத்தொடங்கிவிட்டது.  பிரதியில் அலைகின்ற “நான்” அதை வாசிப்பவரின் பால், மதம், இனம், தொழில், பிரதேசம், குணம் சார்ந்து கட்டமைக்கப்படுகிறது. எழுதியவரின் படைப்பூக்கம், கற்பனை, கருத்துகள் எல்லாம் எழுதிமுடிக்கும்வரையிலும்தான். அதன்பின்னர் அவை எல்லாமே வாசகருக்குச் சொந்தமாகிவிடுகிறது. எழுதியவரின் பிரதிசார்ந்த கட்டமைப்பை விடுவித்து ஒரு வாசகர் தனக்கான புதிய ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறார். இன்னொரு வாசகர் முற்றிலும் வேறுவிதமான பிறிதொரு கட்டமைப்பை உருவாக்குவார். எழுதியவரின் சிந்தனைசார்ந்த மையக்கட்டமைப்பு அங்கே சிதறுண்டு வாசகருக்கு வாசகர் மையங்கள் உருவாக ஆரம்பிக்கின்றது. பிரதிக்கென்று ஒரு குறிப்பிட்ட மையம் இடம்பெறாமலேயே போய்விடுகிறது.  எழுதியவரின் மையம் இந்த மையங்களுக்குள் எங்கேயோ ஒரு மூலையில் கவனிப்பாரற்றுக்கிடக்கும் நிலை உருவாகிறது. எழுதியவர் என்ன சொல்ல விழைந்தார் என்பது தேவையற்ற ஒன்றாகிறது. அறுபதுகளில் பார்த் முன்வைத்த “ஆசிரியரின் மரணம்” என்கின்ற இந்த பின்னமைப்பியல் கோட்பாடு இலக்கியத்தை அணுகும்போக்கினிலே மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது.

உதாரணத்துக்கு ஜோர்ஜ் ஒர்வலின் 1984 என்கின்ற பிரபலமான நாவலை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டாலினுடைய சோவியத் ஆட்சியை விமர்சனம் செய்வதற்காக எழுதப்பட்ட அங்கத நாவல் 1984. நாவல் காட்டுகின்ற இருண்ட அதிகாரம் சூழ்ந்த ஆட்சியை வாசிப்பவர்களுக்கு, கூடவே நாவல் குறியீடுகளோடு காட்டுகின்ற சோவியத் யூனியனும் ஞாபகம் வரவும், இயல்பாக சோவியத்யூனியன்மீதும் கம்யூனிசம்மீதும் அவர்களுக்கு வெறுப்பு ஏற்படும். கம்யூனிசம் உலகம்பூராகப் பரவினால் என்னாகும் என்கின்ற மிரட்சி ஏற்படும். இது ஜோர்ஜ் ஒர்வல் நேரடியாக வாசகருக்குக் கட்டமைத்துக்கொடுக்கின்ற மையம். ஜோர்ஜ் ஒர்வல் என்கின்ற எழுத்தாளரை விலத்திவைத்துவிட்டு நாவலை அணுகும்போது நாவலுக்கு இன்னுமொரு மையம் கிடைக்கிறது. அதிகாரச் சூழல் நிலவும் எந்தத் தளத்துக்கும் இந்நாவல் அது இலங்கை, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளுக்கும் இது மிகவும் பொருந்தும். அதிகாரங்களைத் தக்கவைக்க, கம்யூனிசம், ஜனநாயகம், சோசலிசம், கலாச்சாரம், மரபு, போலியான அறம் என்று எதையுமே தம்முடைய கவசமாக மனிதர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். நாடுகளாகவும் இருக்கலாம். அல்லது நிறுவனங்களில் நிலவும் சூழலாக இருக்கலாம். குடும்பங்களில்கூட அது நிலவலாம். “Big Brother” ஐ ஒரு ஆணாதிக்கக் கணவனாகக்கூட உருவகிக்கலாம். இப்படிப் பல மையங்களை இப்போது வாசிக்கையில் நாவல் உருவாக்குகிறது. நாவலை மேற்குலக நாடுகளின் கம்யூனிசத்துக்கு எதிரான பிரச்சாரமாகவும் பார்க்கலாம். தேவையில்லாத பயப்பிராந்தியை (Appeal to fear fallacy) சாத்தியமில்லாத விளைவுகளை (Slippery slope fallacy) உருவகிப்பதன்மூலம் ஏற்படுத்தி நாவல் பொய்யான எச்சரிக்கையைக் கொடுக்கிறது. நாவல் காட்டுகின்ற சோவியத் யூனியன் பற்றிய பிம்பம் பல பொய்களை உண்மைகளோடு கலந்து கட்டமைக்கப்பட்டு வாசிப்பவரை ஏமாற்றுகிறது. நாவலில் பெண் என்பவள் மற்றமையாகச் (இவ்வளவு சிக்கலான வார்த்தை தேவையா?!) சித்தரிக்கப்படுகிறாள். பெண் காமத்துக்கும் கவர்ச்சிக்குமே பயன்படுத்தப்படுகிறாள். இப்படிப் பல குட்டிக் குட்டி மையங்களை 1984 நாவலை பின்னமைப்பியல் வாசிப்புக்குள் உட்படுத்துவதன்மூலம் அவதானிக்கமுடியும். அதற்கு ஜோர்ஜ் ஒர்வல் காட்டவிழைகின்ற மையப்புள்ளியை நாம் தாண்டிச்செல்லவேண்டும்.

தமிழில் ஒரு உதாரணத்தை எடுத்துப்பார்க்கலாம். சயந்தனின் ஆதிரை அண்மையில் வெளிவந்து பரவலாக வாசிக்கப்பட்ட ஒரு நாவல். நாற்பது ஆண்டுகளுக்குமேலான ஈழத்துப்போராட்ட வாழ்க்கையை அழகியலோடு சொல்லிய நாவல் ஆதிரை. அதுவே ஆசிரியர் ஏற்படுத்துகின்ற நாவலின் மையப்புள்ளியுமாகும். ஆனால் ஆசிரியரின் மரணம் அந்நாவலின் மற்றமைகளை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டும். மலையகத்தமிழரையும் உள்வாங்குகின்ற அந்த நாவலில் முஸ்லிம்கள் என்பவர்கள் மற்றமையாகவே அதில் தெரிவர். அதன் அரசியல் நாவலாசிரியரின் சொந்த அரசியலைப்போலவே எல்லா விமர்சனங்களையும் எல்லாப்பாத்திரங்களினூடு கடமைக்குப் பதிவுசெய்துவிட்டு தமிழ்த்தேசியத்தின் மீதும் புலிகள்மீதும் ஒருவித உறவு கலந்த கரிசனையை வலிந்து ஏற்படுத்தும். இது சயந்தனை விலத்தி ஆதிரையை அணுகும்போது சாத்தியப்படும் மாற்று மையங்கள்.

தாஸ்தாவெஸ்கி (இடியட்), கார்க்கி (இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்), ஜோர்ஜ் ஒர்வேல் (விலங்குப்பண்ணை) முதற்கொண்டு தமிழின் சுந்தரராமசாமி (ஜே.ஜே சில குறிப்புகள்), புதுமைப்பித்தன் (சிறுகதைகள்) போன்றோரின் எழுத்துகள் எல்லாம் இவ்வகை பின்னமைப்பியல் வாசிப்புக்குள் உட்படுத்தப்பட்டு பல்வேறு விமர்சனங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. ஒற்றைப்பீடங்கள் சிதறும்போது, எழுத்தாளர் என்கின்ற பிம்பம் அறும்போது நமக்குக் கிடைக்கின்ற வாசிப்பனுபவம் வேறுபட ஆரம்பித்தது. பேரிலக்கியங்கள் என்று வரலாற்றில் கொண்டாடப்பட்டவை எல்லாம் நிறையவே அடி வாங்கின. புறக்கணிக்கப்பட்டன. ஷோபாசக்தியின் பொக்ஸ் நாவலை வாசித்தவுடன் கிடைக்கும் ஆசிரியரின் மையம்சார்ந்த அனுபவத்துக்கும், பின்னர் விளிம்புப்புள்ளிகளை(உ.தா தென்மாகாண பாலியல் விடுதிச் சம்பவம், பண்டாரவன்னியன் மீள்வருகை அங்கதம்) அறிந்தபின்னர் கிடைக்கும் அனுபவத்துக்கும் வித்தியாசம் நிறையவே இருக்கும்.

ஆசிரியரின் மையப்புள்ளியோடு கொண்டாட்டத்தையும் நிராகரிப்பையும் செய்யும் வாசகர்கள் உண்மையிலேயே பலதை இழக்கிறார்கள். பிரதியும் அதன் நோக்கத்தை இழக்கிறது. அதே சமயம் மற்றமைகளை அறிதல் என்பது வாசிப்பின் சிறு வியாதியாகவே மாறி, ஹெமிங்வே கூறிய பிரதி கொடுக்கும் இன்பத்தை (“read the literature for the pleasure of reading it”) இல்லாதொழித்து ஒருவித நிராகரிப்பு மனநிலையை வாசகருக்குக் காலப்போக்கில் ஊட்டியது. பிரதியில் உண்மையைக் கண்டறிதல் என்ற செயற்பாடு ஒருவித பகடையாட்டமாக வாசகருக்கு ஆகிவிட்டது. ஒரு தேர்ந்த வாசகர் இவ்வாறான வாசிப்பு அனுபவங்களுக்கிடையேயான தன்னுடைய சமரசப்புள்ளியைப் பிரதிக்குப் பிரதி தேர்ந்தெடுத்துக்கொள்ளுதல் அவசியமாகிறது.

ஆசிரியரை விலத்திவைத்து பிரதியை அணுகும் பின்னமைப்பியலின் வாசிப்பு அணுகுமுறைக்குச் சவால் விடுக்கக்கூடிய ஒரு எழுத்து வடிவமாக புனைவுக்கட்டுரைகளைக் (creative nonfiction) கூறலாம். உண்மையான தகவல்களை கற்பனை கலந்து சொல்லும் இவ்வகை எழுத்துகள் எழுபதுகளில் உருவாகி இன்றைக்கு மிகப்பரவலாக எழுதப்பட்டுவருகிறன. ஒருவர் தான் அடைகின்ற வாழ்க்கை அனுபவத்தை, எதிர்கொள்கின்ற ஒரு சம்பவத்தை அல்லது தான் சந்திக்கின்ற மனிதர்களைப்பற்றி இடம், பொருள், பெயர்களை மாற்றாமல் அப்படியே எழுதும்போது அப்பிரதி உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்துவிடுகிறது. எழுத்துவடிவம் புனைவின் அழகியலோடு கட்டமைக்கப்படுகையில் உண்மைக்கு உணர்வும், வடிவமும் பன்முகத்தன்மையும் கிடைத்துவிடுகிறது. மரணமும் இழப்பும் கழிவிரக்கமும் வன்முறையும் இன்பமும் துன்பமும் அல்லது வேறெந்த உணர்வும் புனைவுலகத்தை விட நிஜ உலகில் ஏற்படுகையில் அது நமக்குக் கொடுக்கும் தாக்கம் மிகையானது. புனைவுக்கட்டுரைகள் நிஜ உலகத்துக்கு மிக நெருக்கமாக அமைந்துவிடுவதால் அவை வாசகரை எளிதில் வசப்படுத்திவிட வல்லது. அவற்றை எழுதுபவரின் வெற்றி அவற்றை உண்மை என்று வாசகரை நம்பவைப்பதிலேயே தங்கியிருக்கிறது. அதனாலேயே எழுதுபவர் அக்கட்டுரை பூராகவும் “நானாக” மாறித்திரிவார். சம்பவத்துக்குப் பின்னேயும், சிந்தனைக்குப் பின்னேயும், மனிதர்களுக்குப் பின்னேயும் முன்னேயும் அலைவார். அவரைத் தள்ளிவைத்துவிட்டு அக்கட்டுரையை வாசிக்கமுடியாதவாறு எங்கெனும் வியாபித்து நிற்பார். இன்றைய சமூக ஊடகக் காலகட்டத்தில் எழுதுபவர் நேரடியாக எங்களோடு தொடர்பு இருப்பதால் இது மேலும் சிக்கலாகிறது. ஆசிரியரை விலத்தி வைத்து அவர் எழுதும் புனைவை அணுகுவதே கடினமான செயலாக இருக்கையில் புனைவுக்கட்டுரைகளைப்பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

கீ.ராவின் கோபல்லகிராமத்தையும் சுஜாதாவின் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள், ஸ்ரீரங்கத்து தேவதைகள்”, செங்கை ஆழியானின் “வற்றாநதி” போன்ற தொகுப்புகளையும் தமிழில் எழுதப்பட்ட ஆரம்பகட்ட புனைவுக்கட்டுரைகள் என்று கூறலாம். ஒரு காலகட்டத்தின் சமூக கலாச்சாரம் பற்றிய விபரங்களை கீ.ராவும் செங்கை ஆழியானும் புனைவுக்கட்டுரையினூடாக சொல்லியிருப்பார்கள். ஸ்ரீரங்கத்து தேவதைகளும் அந்தவகைதான். ஆனால் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் வித்தியாசமானது. அதிலே தான் சந்தித்த, சிந்தித்த, அனுபவித்த விடயங்களை, தகவல்களைச் சுஜாதா கடைசிப்பக்கங்களில் கூறியிருப்பார். கீ.ராவையும் செங்கை ஆழியானையும் விலத்தி வைத்துவிட்டும் அவர்களுடைய பிரதிகளை நாம் அணுகமுடியும். ஆனால் கணையாழியின் கடைசிப்பக்கங்களை, சுஜாதாவை, சுஜாதா என்கின்ற பாரத் எலெக்ட்ரானிக்ஸ் ஊழியரை, சுஜாதா என்கின்ற கஸ்தூரிரங்கனின் நண்பரை, சுஜாதா என்கின்ற வைணவரை, சுஜாதா என்கின்ற வெகுஜனதொடர்பாளரை, சுஜாதா என்கின்ற ஊடகவியலாளரை, சுஜாதா என்கின்ற கூன் விழுந்த மீசை மழித்த மனிதரை விலத்திவைத்துவிட்டு வாசிக்கவேமுடியாது. அப்படியே விலத்திவைத்தாலும் அக்கட்டுரைகளின் ஆதாரம் சரிந்துவிடும். செல்லம்மாள் சிறுகதையில் நமக்காக புதுமைப்பித்தன் எங்கேயும் வரவேண்டிய அவசியமில்லை. பிரம்மநாயகம் பிள்ளையோடும், செல்லம்மாளோடும் வாசகர் தனியராகவே பிரதிமுழுதும் பயணம் செய்யமுடியும். ஆனால் புனைவுக்கட்டுரைகளில் அது கடினம். வாசகரைக் கையோடு கூட்டிச்செல்ல எழுத்தாளரின் பிம்பம் தேவைப்படுகிறது. அவர் இல்லை  எனில் அதன் நம்பகத்தன்மை சிதைந்துவிடும். புனைவுக்கட்டுரையின் நம்பகத்தன்மை சிதைந்துவிட்டால் வாசிப்பனுபவம் முற்றாகவே ஒழிந்துபோய்விடும். வெறும் புனைவுமில்லாத, வெறும் கட்டுரையுமில்லாத இரண்டுங்கெட்டான் வடிவமான புனைவுக்கட்டுரையை எழுதியவரின் “நான்”தான் ஒருங்கிணைத்து வாசிக்கவைப்பது.

சமகாலத்தில் புனைவுக்கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளராக அ. முத்துலிங்கத்தை அடையாளப்படுத்தலாம். தன் அனுபவங்களையும், தான் அறியும் தகவல்களையும் சுவையோடும் அழகியலோடும் சொல்வதில் முத்துலிங்கம் வல்லவர். பரவலான பகைப்புலங்களில் வசித்த அனுபவத்தால் புதுப்புது மனிதர்களையும் கலாச்சாரங்களையும் நிலங்களையும் பற்றி முத்துலிங்கத்தால் சுவாரசியமாகச் சொல்லமுடிகிறது. அவற்றில் உள்ள முரண்களை வெளிக்கொண்டுவரமுகிறது. தனிக் கட்டுரைக்கும் ஒவ்வாத, சிறுகதைக்குரிய களனையும் கொண்டிராத விடயங்களை முத்துலிங்கம் தனக்கேயுரிய புனைவுக்கட்டுரைப் பாணியூடாக வாசகர்களிடம் கொண்டுசேர்த்துவிடுவார். அவருடைய “ஒன்றுக்கும் உதவாதவன்”, “பூமியின் பாதி வயது” மற்றும் ஏராளமான இணையக் கட்டுரைகள் எல்லாமே முத்துலிங்கம் என்ற மனிதர் தருகின்ற தகவல், அனுபவத்தொகுப்புத்தான். ஆனால் அதற்குள் காதும் மூக்கும் வைத்துச் சுவை ஏற்றித்தருவதில் முத்துலிங்கம் கெட்டிக்காரர்.

“அமெரிக்காவின் மொன்றானா மாநிலம் எனக்குப் பிடிக்கும்” என்று ஒரு கட்டுரை தொடங்கும். அந்த முதல்வரியிலேயே ஏதோ வரவேற்பறையில் உட்கார்ந்து முத்துலிங்கம் தன் அனுபவத்தைச் சொல்வதுபோன்ற பிரமை எமக்கு வந்துவிடும். அப்படி ஆரம்பித்தபின்னர் அவர் மொன்றானா மாநிலம் பற்றிக் கொஞ்சம் பேசுவார். தான் அங்குத் தங்கியிருந்தபோது சந்தித்த மனிதர்களைப் பற்றிப் பேசுவார். அங்கு நிலவும் ஒரு நாட்டார் கதையைக் கூறுவார். எல்லாவற்றையும் வாயில் டைனோசர் நுழைவதுகூடத் தெரியாமல் நாம் கேட்டுக்கொண்டிருப்போம். பிரதி உண்மை அனுபவத்திலிருந்து ஆரம்பித்துப் புனைவில் சென்று முடிந்திருக்கும். ஆனால் எங்கே அந்த மாற்றம் நிகழ்கிறது என்பதைக் கவனித்தே இருக்கமாட்டோம். “இலங்கையிலிருந்து என்னுடைய பழைய நண்பர் கனடா வந்திருந்தார். திடீரென்று அவர் எழுத்தாளராகியிருந்தார்” என்று இன்னொரு கட்டுரை ஆரம்பிக்கும். “எழுத்துத் தடங்கல்” பற்றிய தகவல்களைச் சொல்லும் கட்டுரை. இது புனைவில் ஆரம்பித்து தகவல்களில் முடியும் ஒரு கட்டுரை. “நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போது பாகிஸ்தானில் ஒரு வழக்கு நடக்கிறது” என்று ஒரு கட்டுரை ஆரம்பிக்கும். யோசித்துப்பார்த்தால் எல்லாக்கட்டுரைகளிலும் இந்த உத்தியையே முத்துலிங்கம் பயன்படுத்துவது புலப்படும்.

இப்படி முத்துலிங்கமே நேரடியாக உரையாடுவதாலும் தகவல்களைப் பேசுபொருளாக எடுப்பதாலும் அவரை விடுத்துக் அவருடைய கட்டுரைகளை அணுகுவது கடினமாகிறது. அனேகமான கட்டுரைகள் கணையாழியின் கடைசிப்பக்கங்களின் வடிவத்தைக் கொண்டவை. தான் சந்தித்த விடயங்களை அவர் பெயர், ஊர், காலம் மாற்றாமல் சொல்லுவார். இடையில் தேவையான அளவுக்கு உப்பு, காரம் சேர்ப்பார். கீ.ராவின் போக்கில் எழுதும்போதும்கூட அவர் முத்துலிங்கம் என்கின்ற “நான்” ஐ விட்டுவிட்டு எழுதமாட்டார். அதனால் கோபல்லகிராமத்தை கீ.ரா என்ற எழுத்தாளரை விலத்திவிட்டு வாசிக்கமுடிவதைப்போல முத்துலிங்கத்தின் கட்டுரைகளை வாசிக்கமுடிவதில்லை. இதில் மிகப்பெரிய அசௌகரியம் எல்லாப்பாத்திரங்களையும் முத்துலிங்கம் கண்கொண்டே அணுகவேண்டியிருக்கிறது. கட்டுரைக்குக் கட்டுரை முத்துலிங்கம் என்ற நபரை நம்மால் புதிதாக சிருட்டிப்பது கடினம் என்பதால், கீராவின் அக்கையாவையும் சென்னாவையும் நெருங்கிய அளவுக்கு முத்துலிங்கத்தின் கனகியையும் ஒலிவியாவையும் நம்மால் நெருங்கமுடிவதில்லை. போதாக்குறைக்கு அவர் தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களையும் நண்பர்களையும் பெயர் சொல்லி அழைத்துவிட்டு(அப்ஸரா, வெங்கட் சாமிநாதன்) ஏனைய மனிதர்களை மற்றைமைகளாகவே காட்சிப்படுத்துவார். நண்பர், தபால்காரர், அழகி, ரசியப்பெண்மணி, மாணவி, ஆபிரிக்காக்காரி என்று அவர் மனிதர்களை அடையாளம் காண்பதும் இன்னொரு தடையாக அமைகிறது. கூடவே ஆல்பர்ட் கேமுவின் “அராபியன்” பாத்திரமும் ஞாபகம் வந்து தொலைத்துவிடுகிறது.

புனைவுக்கட்டுரைகளில் எந்த அளவுக்குப் புனைவு சேர்க்கலாம் என்பது கயிற்றின்மேல் நடப்பதற்குச் சமானமானது. “உண்மை சரித்திரம் எழுதுபவர்கள் அதில் சிறு பொய் சேர்த்தாலும் உண்மையின் மதிப்பு போய்விடுகிறது” என்று “இலக்கியக்காரனின் இறுதி வார்த்தை” என்ற கட்டுரையில் முத்துலிங்கம் சொல்லியிருப்பார். உண்மை பொய்யாகிவிடும்போது அது உண்மை என்று நம்புவதாலேயே கிடைக்கின்ற சுவாரசியம் மறைந்துவிடுகிறது. வரலாற்றை புனைவுக்கட்டுரையூடாகச் சொல்வதன் சிக்கலும் அதுவே. வரலாறே ஒருவித நீண்ட புனைவுக்கட்டுரைதான். அதில் மேலும் புனைவுகலந்து சொல்லும்போது நம்பகத்தன்மை முற்றாகவே சிதைந்துவிடும். அத்தினையும் புனைவானபின்னர் தகவல்களுக்குரிய மதிப்பை அக்கட்டுரைகள் இழந்துவிடுகின்ற. அப்போது வெறுமனே புனைவாக, சிறுகதையாகத் தனித்து நிற்கவேண்டிய தேவை அவற்றுக்கு ஏற்படுகிறது. இங்கேதான் சிக்கல் நிகழ்கிறது. இரண்டு எந்திரங்களில் ஓடுகின்ற விமானத்தின் ஒரு எந்திரம் திடீரென்று பழுதாவதைப்போன்றது இது.

முத்துலிங்கத்தின் “முகம் கழுவாத அழகி” கட்டுரைக்கு நிகழ்ந்ததும் அதுவே. “பொலீசுடனான என்னுடைய பிரச்சனை” என்ற வழமையான அவரின் உத்தியோடு ஆரம்பிக்கும் கட்டுரை ஒலிவியா என்கின்ற பெண்மணியையும் அவருடைய சிறு குழந்தைகளையும் அறிமுகப்படுத்துகிறது. கூடவே பாடசாலை முடிந்ததும் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவரும் படலம் பற்றிய தகவல்கள். பாடசாலைக்கு வெளியே பெற்றோர்கள் காத்திருக்கின்ற சூழல். அப்போது ஏற்படும் இயல்பான நட்புகள் என்று ஒரு புனைவுக்கட்டுரைக்கேயுரிய அழகியலோடு அது நகர்கிறது. ஒரு கட்டத்தில் ஒலிவியா அவரின் வீட்டின் வரவேற்பறையில் தன்னுடைய ஒரு மார்பை வெளியே எடுத்து குழந்தைக்குப் பாலூட்ட ஆரம்பிக்கிறாள். பாலூட்டிக்கொண்டு இவர்களோடு பேசவும் செய்கிறாள். வாசிப்பவருக்கு அப்போதே சிறு சந்தேகம் எட்டிப்பார்க்கும். அடுத்ததாக அவள் தன்னுடைய மற்றைய மார்பையும் வெளியில் எடுத்து குழந்தைக்குப் பால் கொடுக்கிறாள். முதல் மார்பை உள்ளே இழுத்துவிடவும் இல்லை. இரு மார்புகளும் வெளியே தெரிய, ஒற்றை மார்பில் பாலூட்டியவாறு, ஒலிவியா இவரிடம் திரும்பிச்செல்லுவதற்கான பாதையை விசாரிக்கிறாள். இவரும் படம் கீறி விளக்குகிறார். புனைவு என்று தெரிகிறது. போலியான புனைவு என்பதில் விசனமும் அயர்ச்சியும் வாசகருக்கு ஏற்படுகிறது. அதன்பிறகு அக்கட்டுரையின் உண்மைத்தன்மைபற்றி வாசகர் அலட்டிக்கொள்ளவே மாட்டார். தனிப்புனைவாக அக்கட்டுரைக்கு என்று பெரிதாக மதிப்பு ஏதும் இல்லை. அதீதப் புனைவு ஒரு புனைவுக் கட்டுரைக்கு சத்துரு என்பதற்கு இது சிறந்த உதாரணம். புனைவுக்கட்டுரைகளில் அதீதப் புனைவை, ரசிக்கும்படி சொன்னவர் கீ.ரா மாத்திரமே. ஏனெனில் அவரிடம் ஒரு நாட்டார் கதை சொல்லும் வழக்கு இருந்தது. அவர் மார்க்கோபோலோபோல உண்மையை மாய யதார்த்தம் (Magical Realism) ஊடாகக் காட்டியவர். ஆனால் முத்துலிங்கம் செய்வது அதுவல்ல. அவர் பொய்யை மாயை கலக்காத உண்மை என்று நம்பவைக்க முயல்பவர். ஆரம்பத்தில் வாசகர்கள் வியப்புடன் அவரை அணுகலாம். உண்மை (அல்லது பொய்) வெளித்ததும் அதன் மதிப்பு பூச்சியத்தை எட்டிவிடும்.

பொய் என்று தெரிந்தும், புனைவு என்று வெளித்தபின்னரும் கட்டுரை தன்னுடைய மதிப்பை இழக்காமல் அழகியலோடு தனித்து நிற்பது அவருடைய “சுளுக்கெடுப்பவர்” பிரதியில் நிகழ்கிறது. கழுத்துச் சுளுக்கு எடுக்கப்போகும் இடத்திலே அவருக்கும் சுளுக்கெடுப்பவரின் மகள் கனகி என்பவருக்குமிடையே ஏற்படும் உறவுதான் அதன் கரு. இங்கேயும் இயல்பாகச்செல்லும் பிரதியில் திடீரென்று கனகி அவருடைய கழுத்தில் முத்தமிடத் தொடங்குகிறார். காமம், உடல் என்று வரும்போது இப்படி அதீதமான போலித்தனமும் இயல்பை மீறிய புனைவும் முத்துலிங்கத்துக்கு வந்துவிடுகிறது. ஆனாலும் அதையும் மீறி அக்கட்டுரை ஒரு காலகட்டத்தின், ஒரு சமூகத்தின் நடைமுறையைப் பற்றிப் பேசுவதால் அதன் இருப்பு குலையாமல் பாதுகாக்கப்படுகிறது.

பார்த்தினுடைய ஆசிரியரின் மரணம் என்ற கோட்பாட்டுக்கு சவால் விடுக்கும் எழுத்துவடிவமாக புனைவுக்கட்டுரைகள் ஆரம்பத்தில் தோற்றமளிக்கக்கூடும் ஆனால் பின்னமைப்பியல் இன்னுமொன்றையும் வலியுறுத்துகிறது. உலகில் முற்றுமுழுதான உண்மை (absolute truth) என்று ஒன்றில்லை. உண்மைக்குப் பல வடிவங்கள் உண்டு. “மாற்று உண்மைகள்” (Alternative facts) என்று பல உண்டு. ஒரு கட்டுரையில் புனைவு சேரும்போது, அதை வாசகர் உணர்ந்துகொள்ளும்போதும் மாற்று உண்மைகள் புற்றீசல்கள்போல வெளிக்கிளம்பும்.  கதைசொல்லிமீது இயல்பாக சந்தேகம் கிளம்பும். பிரதிமீதான கட்டவிழ்ப்பு நிகழும்.

அப்போது ஆசிரியரின் மறுஜென்மம் குறை ஆயுளுள் முடிந்துவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.