அ.முத்துலிங்கத்தின் ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ தொகுப்பைப் பற்றி
அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும், அவர் எப்படிப்பட்ட அனுபவத்தையும் அங்கதத்துடன் எழுதி ஒரு புள்ளியில் படிப்பவர்களைத் துணுக்குற வைப்பார் என்று. அனுபவங்களா, புனை கதைகளா என்று வரையறுக்க முடியாத எழுத்து அவருடையது.
’ஒன்றுக்கும் உதவாதவன்’ புத்தகத்தின் முன்னுரையிலேயே அ.முத்துலிங்கம் சொல்லி விடுகிறார் “இந்த நூலில் நான் எழுதியிருப்பவை என் சொந்த அனுபவங்களைத் தான். சமையல் குறிப்புகளில் ‘உப்பு தேவையான அளவு’ என்றிருக்கும். அது போல் ‘கற்பனை தேவையான அளவு’”.
இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் 1999 ஆம் வருடம் முதல் 2010 ஆம் வருடம் வரை எழுதப்பட்டவை. ஆதலால் பெரும்பாலும் அவருடைய கனடா /அமெரிக்கா அனுபவக் கட்டுரைகளே அதிகம். ஒரு சில இளவயது இலங்கை நினைவுக் கட்டுரைகளும் உண்டு.
தமிழ் எழுத்தாளர்களில் முத்துலிங்கம் அளவு உலகைச் சுற்றி வந்தவர்கள் வேறு யாருமில்லை என்று உறுதியாகச் சொல்ல்லாம். அவரது கட்டுரைகளில் ரஷ்ய உடற்பயிற்சி நிபுணர் முதல் கிரேக்கத் துப்புரவு பணிப்பெண் வரை, வியட்நாமில் உடல் எரிந்த சிறுமி முதல் நாட்டியப் பேரொளி பத்மினி வரை பலரும் வருகிறார்கள்.
அவர் அனைவரோடும் சரிசமமாக, கரிசனமாகப் பழகுகிறார். அந்த அனுபவங்களை ஒரு நண்பரிடம் பகிர்வது போல வாசகனிடம் பகிர்ந்து கொள்கிறார். ஆனால் அது வெறும் அனுபவக் குறிப்பாக இல்லாமல் பிரபஞ்ச உண்மையை வாசகனுக்கு எடுத்துக் காட்டும் ரசவாதத்தை எப்படி நிகழ்த்துகிறார் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
முத்துலிங்கத்தின் அங்கதம் அமைதியானது. ஆனால் படிப்பவர்களை இருக்கும் இடம் மறந்து வாய் விட்டுச் சிரிக்க வைத்து விடும். அவர் கார் ஓட்டிக் கொண்டு போகும் போது ரேடியோவில் கனடாவில் பிறந்த ஒரு பெண் ’தென்றல் வந்து என்னைத் தொடும்’ பாடலைத் தப்பும் தவறுமாகப் பாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரது காரை பின்னால் வந்த கார் இடித்து விடுகிறது. அந்த விபத்தை இப்படி விவரிக்கிறார்.
“என் பிடரி ஆசனத்தின் பின் பகுதியில் போய் இடித்தது. இது ஒன்றையும் அறியாமல் ரேடியோப் பெண் ’தெரிந்த பிற குதிரைகள் எதற்கு’ என்று பாடிக் கொண்டிருந்தார். அந்த அவலமான நேரத்திலும் கூட இந்தப் பாடலில் குதிரைகள் வராதே என்று என் மனது உறுத்தியது. வீட்டுக்கு வந்து நிதானம் அடைந்த பின்னர் ரேடியோப் பெண் ‘தெரிந்த பிறகு திரைகள் எதற்கு’ என்ற வரியைத் தான் ‘தெரிந்த பிற குதிரைகள் எதற்கு’ என்று பாடியிருக்கிறார் என்று புலனானது”
இந்த இடத்தைப் படித்தபின் சிரிக்காமல் எப்படிக் கடப்பது?
முத்துலிங்கம் கட்டுரைகளில் பழந்தமிழ் இலக்கிய மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகள் மிகக் குறைவு. எந்தவொரு நிகழ்வுடனும் அவரால் ஒரு புறநானூற்றுப் பாடலையோ, குறுந்தொகைக் கவிதையையோ அல்லது அவ்வையின் மூதுரையையோ ஒப்பிட முடிகிறது. தமிழில் இன்று எழுதும் மற்ற எழுத்தாளர்களில் நாஞ்சில் நாடனின் எழுத்துக்களில் நாம் இதைப் பார்க்கலாம். முத்துலிங்கம் சங்க காலப் பாடலை சமகால ஐரோப்பிய இலக்கியத்தோடு ஒப்பிட்டு வாசகனுக்கு உலகையே ஒரு சுற்று சுற்றிக் காண்பித்துவிடுகிறார்.
’ஒன்றுக்கும் உதவாதவன்’ கட்டுரையில் கனடாவில் நண்பரின் வீட்டுக்குப் போகையில் முத்துலிங்கம் வழியை மறந்து விடுகிறார். சாலையில் திகைத்து நின்று எதிரில் வரும் பெண்மணியிடம் விசாரிக்கிறார். அந்தப் பெண் கைபேசி மூலம் தன் ஒன்பது வயது மகனிடம் விசாரித்து கூகுள் வரைபடம் வழியாக விலாசத்தைக் கண்டுபிடிக்கிறார். அதற்குள் முத்துலிங்கத்திற்கு இடாலோ கால்வினோவின் சிறுகதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. தனக்குச் சப்பாத்தின் (காலணி) முடிச்சு கூடப் போடத் தெரியவில்லை என்று வருத்தப் படுபவனைப் பற்றிக் கதை. அவன் போகுமிடமெல்லாம் வரும் வழிப்போக்கன் கடைசியில் “உலகத்தில் எல்லாம் தெரிந்தவர் ஒருவருமேயில்லை. மக்கள் ஒருவர் கையை ஒருவர் பிடித்து வாழ்ந்தால் தான் வாழ முடியும். ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருப்பது தான் சமுதாயம். அது தான் வாழ்க்கை” என்று சொல்லி மறைந்து விடுவான்.
கால்வினோவிலிருந்து ”உண்டால் அம்ம இவ்வுலகம்” என்று எழுதிய புறநானூற்றுப் புலவன் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதிக்குத் தாவுகிறார் முத்துலிங்கம். கட்டுரையின் போக்கிலேயே இது ஏற்படுகிறது. வருத்தி வரவழைப்பதில்லை. இதுவே அவரது நடையின் வெற்றி.
இந்தத் தொகுப்பிலேயே ஆகச் சிறந்த (இதுவும் முத்துலிங்கத்தின் சொற்றொடர் தான்) கட்டுரை ’ஆறாத் துயரம்’. மரணத்தை எதிர் நோக்கியிருக்கும் அவரது போலந்து நாட்டு நண்பரைப் பற்றியது. நண்பர் கனடா வந்து அறுபது வருடமாகிவிட்டது. முத்துலிங்கம் பார்க்கப் போகும் போது தூது ஓலை கொண்டு போகும் புறாக்களை நண்பரும் அவரது தந்தையும் வளர்த்த கதையைச் சொல்லுகிறார். அவர்கள் வளர்த்த புறாக்களிலேயே நண்பருக்குப் பிடித்தமானது ஒரு வெள்ளைப் புறா. அதற்கு அல்பிங்கா (போலிஷ் மொழியில் வெள்ளை) என்று பெயர் சூட்டி வளர்த்துப் பயிற்சி கொடுக்கிறார். 50 மைல் தூரத்தில் விட்டாலும் வீட்டுக்கு வர அல்பிங்காவுக்கு வழி தெரியும்.
இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பின் வருமானம் குறைந்ததால் செலவுகளைச் சமாளிக்க அல்பிங்காவை விற்றுவிடுகிறார் நண்பரின் தந்தை. நண்பர் மனமுடைந்து போகிறார். ஒரு நாள் முழுவதும் சாப்பிடவேயில்லை. குடும்பமே பட்டினி கிடக்கும் நேரத்தில் அது ஒரு பெரிய விஷயமுமில்லை. இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் பார்த்தால் அந்தப் புறா தத்தித் தத்தி நடந்தே 17 மைல் தாண்டி இவர்கள் வீட்டுக்கு மீண்டும் வந்து விட்டது. புறாவை வாங்கியவரிடம் அது திரும்பிவந்தால் மீண்டும் தரமாட்டேன் என்று அவரது தந்தை கூறியிருந்ததால் அவர் புறாவின் இறக்கைகளைக் கத்தரித்திருக்கிறார். இருந்தாலும் நடந்தே வந்து விட்டது அல்பிங்கா. நடந்ததில் அதன் நகங்கள் கிழிந்து அதனால் நிற்கவே முடியாமல் அன்றிரவே இறந்துவிடுகிறது.
இந்தக் கதையை அறுபது ஆண்டுகள் கழித்துக் கூறும் போதும் போலந்துக் காரர் கண்ணீர் விட்டு அழுகிறார். ”அவர் புறாவுக்காக அழுகிறாரா, அப்பாவுக்காக அழுகிறாரா அல்லது தனக்காக அழுகிறாரா” என்று எழுதுகிறார் முத்துலிங்கம். புறா ஒரு புலம் பெயர்ந்தவரின் குறியீடாக மாறிவிடுகிறது.
பழைய புகைப்படம் கட்டுரை முத்துலிங்கம் தனது பள்ளிக்காலத்தில் நாடகம் ஒன்றில் நடித்த போது (காந்தி சிலையாக) எடுத்த புகைப்படம் பற்றியது. பல வருடங்கள் கழித்து சுகிர்தம் டீச்சர் கனடாவில் அந்தப் புகைப்படத்தை முத்துலிங்கத்திடம் தருகிறார். அதில் 26 பேர் இருக்கிறார்கள். முத்துலிங்கத்தின் குடும்பத்தினர் யாராலும் சின்ன வயது முத்துலிங்கத்தை அடையாளம் காண முடியவில்லை. இதுவே ஒரு விளையாட்டாக மாறிப் போகிறது. “இடது பக்க ஓரத்தில் நின்ற சிறுவனின் கண்களில் நிறைய கனவுகள் தெரிந்தன. அதில் பாதியாவது நிறைவேறியதோ என்னவோ” என்று முடிக்கிறார் முத்துலிங்கம். அது நமக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பயணத்தின் சுவாரசியமான் அனுபவங்களை (சற்றே கற்பனை கலந்து) வாசகனுக்கு கடத்துவதில் அந்தச் சிறுவன் வெற்றி பெற்றுவிட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
publisher of this book price details please.