பதியம் – அ.மு.விற்கு ஒரு வாசக கடிதம்

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு..

ஒரு வாசகக் கடிதம்,

கடவுள் தொடங்கிய இடம் நாவல் மூலம் உங்களை வாசிக்கத் தொடங்கிய தொடக்கநிலை வாசகி நான்.வீட்டிலிருந்து இரண்டுமணிநேர திருச்சி பயணத்திற்கு இரண்டுநாள் திட்டமிடும் எங்களைப் போன்றோர்க்கு சேருமிடம் நிச்சயமில்லாத பயணங்கள் நிறைந்த இந்தநாவல் முதலில் ஏற்படுத்துவது பதட்டத்தை தான்.இயல்பாக ஈழவாசிகள் ஏதோ ஒருநாட்டின் பெயரைச்சொல்லி கிளம்புகிறார்கள்.நாடில்லாதது என்பது “எத்தனைகளின்   இல்லாததுகள்”என்று சொல்லும் நாவல்.எனக்குன்னு தனியா ஒருகணிணி இல்லை என்ற முறையீட்டை இந்தநாவலுக்கு பிறகு வைக்க தயக்கமாக இருக்கிறது.வாழ்க்கை எத்தனை சாத்தியங்கள் நிறைந்தது.அந்தவகையில் அகதி என்பது எத்தனை காயங்கள் நிறைந்த வாழ்க்கை சாத்தியம்.மகாபாரதம் சொல்லும்போது சிறுவயதில் அய்யா”எதற்காக நடந்தாலும் போர் என்பது யாருக்கும் வெற்றியாளருக்கும் நல்லதில்ல”என்று சொன்னது நாவல் முடியும்வரை நினைவில் ஓடிக்கொண்டேயிருந்தது .நிஷாந்த் உணவகத்தில் தட்டு கழுவுகையில்” அப்பாவின் மணம்” என உணருவது எந்த மணத்தை…..முடிவைத்துவிட்டு யோசித்தேன்…அவருக்குபிடித்த உணவிருந்த கலமா?அவருக்கு பிடித்த மணம்கொண்ட உணவின் எச்சமா? இல்லை  அப்பாவின் பிடிக்காதஉணவா?.

இதை எழுதும் அதிகாலையில் பிணப்பறைஒலி கேட்டு அதிர்ந்தெழுந்து வீதிக்கு செல்கையில் சற்றுதூரத்தில் வயல்மேட்டில் சூழை பகுதியில் இறப்பு.பொங்கலுக்கு அடுப்பு, பானை போடுகையில் நான்கேட்ட பூந்தொட்டி செய்துவந்து அம்மாவிடம் “தண்ணி படறதுண்ணு ரண்டுதரம் வேகவச்சேன்”என்று விலைசொன்னார்.அம்மா உள்ளே சென்றதும்”உனக்குன்னு சொல்லவும் மூணுதடவ வேகவச்சேன்.அது கணக்குல சேராதுன்னு”சொல்லி கன்னம் வழித்து முத்தமிட்ட அன்னைதான் கிடக்கிறாள்.இழப்பின் வலி தெரியும் கணங்கள்…இந்த நாவலில் அது ஒவ்வொரு அத்தியாயத்திலும் வருகிறது.

“பவித்ரா” சிறுகதை இறுதியில் வெடித்து சிரிக்கவைக்கும் கதை.சிக்கியவர்களிடம் தந்து கட்டாயப்படுத்திபடிக்கச்சொல்லி சிரிக்கவைத்தேன்.

பதின்பருவகழுத்துவலியை சொல்லும் சுளுக்கெடுப்பவர் கதை யதார்த்தம் தெரியா பதின்பருவ பறத்தலையும் திடீரென்று ரெக்கையில்லாதை நடுவானில் உணர்ந்த இளங்குருவி தரையிறங்கி வான்நோக்கும் பார்வையில் அடுத்த சிறகடிப்பை நிகழ்த்தும் என்பதை சொல்லாமலே புரிகிறது.பறத்தல் இயல்பல்லவா..பாவம் சீக்கிரம் ரெக்கை வளர்ந்தாலென்ன…

எதிரி சிறுகதையை என்மூளை உருவகக்கதை என்று கட்டம் கட்டியுள்ளது.

தாத்தா விட்டு போன தட்டச்சு மெசின் என்ற கதை எனக்கு மிகவும் பிடித்தது.பெண்தலைய முட்டைவடிவம் என்று சொன்ன யதார்த்தத்தால் மட்டுமல்ல வாழ்வின் உண்மையான இயல்பையும் சொன்னதால்.

அண்ணனின் புகைப்படம் என்றகதை இந்த செல்பியுகத்தில் படிக்க ருசிகரமான கதை.பறவை நடப்பது போல நடந்தான் என்ற உவமை கற்பனை பண்ற நேரம் நேரில் பார்க்கலாமென மாடிக்கு பெருமிதத்தோடு சென்று எட்டிஎட்டிப் பார்த்து குஞ்சுவைத்த காகம் துரத்த ஓடிவந்து மெதுவாக கற்பனைக்குள் செல்ல வைத்தது.

பெரும்பாலானகதைகளில் சிகைஅலங்காரம் கூம்பு  நீள்வாக்காக என்று கணக்கின் வடிவஎல்லைகளைத் தாண்டி அழகிய வடிவங்களைப் பெறுகிறது.படித்துமுடித்தப்பின் மீள அந்தவர்ணனணகளை கற்பனை செய்து கொள்வேன்.

தாத்தாதோட்டத்தில் செடிபிடுங்கி ஊருக்கு எடுத்து வருகையில் தாத்தா”தான்தண்ணி ஊரு வச்சதெல்லாம் முளைக்கும்”என்பார்.ஆனால் அம்மாச்சி “எப்டின்னாலூம் பதியச்செடிக்கு வேரடிமண் வேணும்”என்பார்.விதைகள் விழுந்தஇடங்களில் முளைத்துவிடும்.பதியன்களுக்கு வேரடிமண்ணும் வளமானமண்ணும் வேண்டும் ஏனெனில் பிடுங்கிநட்ட காயம் உண்டுல்ல.உங்கள்  எழுத்தின் மெல்லிய நகைச்சுவையையும் ஆழத்தையும் அவ்வாறே புரிந்துகொள்கிறேன்.வாசித்தது கொஞ்சமே..இன்னும் நிறைய இருக்கிறது .

அன்புடன்

கமல தேவி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.