வரலாறும், பிறந்த சூழலும் மனிதர்கள் மீது பெரும் பாரமாக அழுத்துகின்றன. வாழ்க்கையில் திரட்டிய அனுபவங்கள், அதன் விளைவான மதிப்பீடுகள், விழுமியங்கள், மனித உறவுகள் யாவும் வேறு ஒரு தருணத்தில் அர்த்தமிழந்து போகின்றன. அத்தகைய தருணங்கள் முத்துலிங்கத்தின் சிறுகதைகளில் உண்டு. இங்கு “தருணங்கள்” என்று நான் சுட்டுவது காலத்தை மட்டுமல்ல. நிலங்களையும். ஆனால் முத்துலிங்கத்தின் மனிதர்கள் சோர்ந்துபோவதில்லை. தங்களை புதிதாக வார்த்துக் கொள்கிறார்கள். நம்பிக்கையுடன் எழுந்து நிற்கிறார்கள்.
போரின் சுடுவிரல்கள் தீண்டிய மண் மீண்டெழ இந்த நம்பிக்கை அவசியம். பேரழிவுகளில் இருந்து கற்ற பாடங்களை பேசும், பல முறை தன்னை மீள் உருவாக்கம் செய்து கொண்ட தன்னம்பிக்கை தொனிக்கும், குரல் அது. பதட்டமில்லாத அறிவார்ந்த முதிர்ச்சியும் உள்ள குரல்.
வேறு ஒரு மண்ணில் வாழ்ந்து அங்கிருந்து தமிழ் கலாச்சாரத்தை பார்க்கும் பா.சிங்காரத்தின் எழுத்தில் ஒரு எள்ளல் இருக்கும் (”ரெண்டு தொடையும் இறுக்கி கட்டுனா எல்லா பொம்பளையும் கண்ணகிதான்”).கூடவே லட்சியவாதத்தின் அபத்தமும். ஷோபா ஷக்தியிலும் இது உண்டு. உண்மையில் ஷோபாவின் எழுத்துகளில் இருப்பது வன்முறை முடிந்த தருணங்களில் எழும் குற்ற உணர்ச்சியும், பதட்டமும், கழிவிரக்கமும். முத்துலிங்கத்தின் எழுத்தில் எள்ளலும், விமர்சனமும், குகையின் தொலைதூரத்தில் தெரியும் வெளிச்சம் குறித்த நம்பிக்கையும். வாழ்வின் சுழற்சியிலிருந்து மீண்டு வர யத்தனிக்கும் மனிதர்கள் மீண்டும் அதே சுழற்சியில் சென்று வீழ்வதின் அபத்தங்களும் உண்டு. அவரது ஆரம்பகால சிறுகதைகளில் உணர்ச்சி சுழிப்பில் அல்லாடும் மனிதர்களை காணமுடிகிறது. பிற்கால கதைகளில் சோகங்களை வெளிப்படுத்தாத, பக்குவத்துடன் அதை கடந்து வருகிற மனிதர்கள். ஒரு மெல்லிய துணியால் மூடப்பட்டு நம்மை கூர்ந்து நோக்கும் பாலுணர்வும் உண்டு.
ஒரு குறிப்பிட்ட புள்ளியை நோக்கி நகரும் அவரது சிறுகதைகளில் அநாவசிய வார்த்தை பிரயோகம், அது ஒரே ஒரு சொல் ஆயினும், கதையின் மொத்த அனுபவத்தையும் சிதைத்துவிடும். முத்துலிங்கம் இதை நன்கு அறிந்திருக்கிறார். படிமங்கள், குறியீடுகள் மீது அதீத பித்தில் வாசகர்களை தலை சுற்ற விடாமல் கட்டுகோப்பாக செல்லும் எழுத்து. ஆங்கிலத்தில் யோசித்து தமிழில் எழுதும் நடை. ஆனால் ஆங்கிலத்தை குஷிப்படுத்த தமிழின் கையை முறுக்கிபிடிக்கும் நடை அல்ல. உள்ளார்ந்த அங்கதம் கலந்த புது சொற்பிரயோகங்கள் கலந்த மொழி. சூழலியல் குறித்த அக்கறை ஒரு பிரச்சாரமாகவே ஒலித்தாலும் “பிரச்சார நெடி” என்ற வார்த்தையை உபயோகிக்க விடாமல் செய்வது அவர் மொழியின் சாமார்த்தியம்.
முத்துலிங்கத்தின் கதைகள் பெரும்பாலும் ஆண்-பெண் உறவின் ரோலர்-கொஸ்டர் பயணங்களை பேசி பேசி தீர்வதில்லை. மண உறவுகளும், சேராக் காதல்களையும் தாண்டி, 90-களில் எழுதப்பட்ட தாய்-மகன் இடையே உள்ள ஒரு மெல்லிய பிளவை பேசும் ‘ஃபீனிக்ஸ் பறவை’ எனக்கு முக்கியமானதாக படுகிறது. 2018-ல் நடக்கும் கதை. காகித பணத்தை ஆச்சரியத்துடன் பார்க்கும் மனிதர்கள். தொழில்நுட்பத்தின் உச்ச சாத்தியங்களின் காலம். தன் குடும்ப நீட்சிக்கு தன் மாமியாரை பலிமேடைக்கு செல்ல கேட்கும் மருமகள். அவள் மறுக்காமல் சம்மதிக்கிறாள். இந்த ஏற்பாடில் தன் மகனின் பங்கு என்ன என்பதை அவளால் அறிய முடிவதில்லை. தன் மகனின் கண்களை அவன் பிறந்த நாள் முதல் அவள் பார்த்த போதும் இன்றும் அவளால் அதன் ஆழத்தை புரிந்து கொள்ளமுடியவில்லை. நீண்ட காலமாக நீடிக்கும் ஒரு நெருக்கமான உறவிலும் தாண்டி விட முடியாத ஒரு பிளவை அவள் அறிகிறாள். விளக்கை பிரியாமல் அதன் நேர்கோட்டில் நிற்கும் இருட்டைப் போல். இக்கதையின் மற்றொரு புள்ளி பெண்கள் குறித்து மானுடத்தின் பார்வையும், ஓயாத மனித வன்முறையும். மானுடம் தன் நீட்சிக்கு பெண்களை தீயில் இடுகிறது. தன் பலி மேடைக்கு செல்லும் பெண்ணை சமூகம் ஆரவாரித்து ஊக்குவிக்கிறது. அவர்களும் மறுப்பதில்லை. ஆனால் இத்தியாகத்தை சமூகம் உணர்வதில்லை. இக்கதையின் இன்னொரு அம்சம், மனிதர் தொழில்நுட்பத்தில் எவ்வளவு முன்னேறினாலும், அவர்கள் வன்முறையை விடுவதேயில்லை. தொழில்நுட்பம் முன்னேறும்தோறும் வன்முறை இன்னும் வசீகரமான வடிவம் கொள்கிறது. பொதுவாக தன் எழுத்தில் மானுடத்தின் மீது நம்பிக்கை கொள்ளும் முத்துலிங்கம், இந்த கதையில் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறார்.
பெண்களுக்கு சக மனிதர்களால் நேரும் துன்பங்களை பேசுவதோடு, இயற்கையால் கூட பெண்கள் வஞ்சிக்கப்படுவதை பேசும் கதையும் உண்டு. தங்கள் மாதவிலக்கு நிரந்தரமாக முடியும் தருவாயில் பெண்களின் மன உளைச்சலை பேசும் கதை ’முழு விலக்கு’. மனித உயிர்களின் விளைநிலங்களாக பெண்கள் மதிக்கப்படுகிறார்கள். ஆனால் தங்கள் உடலில் நிகழும் இம்மாறுதலை கையாளும் அவர்கள் உளவியலை பேசும் கதை. இதுவும் பெண்ணை குறித்து ஒரு ஆண் பேசும் கதை தான். ஒரு விஷயத்தை சகல பரிமாணங்களிலிருந்தும் அணுக அனுமதிக்காத சிறுகதை வடிவம் என்ற போதும், தான் தேர்ந்தெடுத்த களத்திற்கு நியாயம் சேர்க்கும் எழுத்து. இக்கதையின் முக்கியமான அம்சம் இப்பிரச்சனையை ஒளவை ஏன் பேசவில்லை என்ற கேள்வி. இன்றுவரை பொதுப்பேச்சில் விலக்கப்பட்ட ஒரு விஷயத்தை நம் முன்னோர்கள் பேசாததை புரிந்து கொள்வது கடினமல்ல. இருந்தும் பழந்தமிழ் இலக்கியங்களை மென்மையாக விமர்சிக்கும் முத்துலிங்கத்தை இதில் பார்க்க முடியும். ‘குங்கிலியக் கலிய நாயனார்’ கதையும் இவ்வரிசையில் சேர்க்கமுடியும். தற்கால பிரச்சனைகளுக்கான தீர்வுகளுக்கு பழந்தமிழ் இலக்கியங்களை துணை கொள்ள சொல்லும் முத்துலிங்கம்(’திகடசக்கரம்’,’தொடக்கம்’), தற்காலத்தில் நின்று அவற்றை விமர்சிக்கவும் தயங்கவில்லை.
பழந்தமிழ் இலக்கியங்களை விதந்தோதும் முத்துலிங்கம், இன்னொரு புறம் மொழி/ கலாச்சார அடையாளங்களின் முட்டாள்தனத்தை சாடுகிறார். கனடாவிற்கு பெயர்ந்த குடும்பத்தில் ஒரு சிறுமி பூப்பெய்துகிறாள். அச்சிறுமியை குப்பைகள் மேல் அமரவைத்து சடங்குகள் செய்வது அக்குடும்ப வழக்கம். குப்பை கிடைக்காமல் தவித்துப் போகும் குடும்பம், சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வெளியே மூட்டை கட்டப்பட்ட குப்பைகளை மறுபடியும் வீட்டின் நடுவே கொட்டி வைத்து சிறுமியை அதன் மேல் அமர்த்துகிறது. ‘கொம்புளானா’ சிறுகதை இதே பிரச்சனையின் இன்னொரு பரிமாணத்தை பேசுகிறது. மொழி/ கலாச்சார அரசியல் மேகங்கள் மீண்டும் திரளும் தமிழ்நாட்டு சூழலில் இக்கதைகள் முக்கியமானவை.

Image (c) by George E. Miller
முத்துங்கத்தின் கதைகளை ‘உலகப் பொதுமை’ என்ற சிமிழுக்குள் அடைக்க முயற்சி செய்யும் அவசரத்தில் பொதுவாக விடுபடும் முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. உலக வாசகர்களுக்கான பொது தளத்தில் நிகழும் இக்கதைகள் மனிதர்கள் அனைவருக்கும் ஒரே நிறத்தை பூசுவதில்லை. கலாச்சார வித்தியாசங்களை புரிந்து கொள்வதில் மனிதர் கொள்ளும் தடுமாற்றங்களை பேசுகின்றன. சமூகவியல்/மானுடவியல் ஆய்வுகளில் insider vs. outsider விவாதம் இன்றும் தொடரும் ஒரு விஷயம். தான் பிறந்த சமூகத்திடமிருந்து பெற்ற கலாச்சார சட்டகத்தை கொண்டு பிறரது கலாச்சாரத்தை அறிய முற்படுகையில் இருக்கும் பிரச்சனை தான் இந்த விவாதத்தின் மையம். முத்துலிங்கத்தின் கதைகளில் இந்த விவாதத்தின் அம்சத்தை காண முடிகிறது. வல்லுறவு கொள்வதை வன்கொடுமை என்று சொல்லும் கலாச்சாரங்கள் ஒரு புறம். அதை குற்றத்திற்கான தண்டைனையாக மட்டுமே பார்க்கும் கலாச்சாரம் மற்றொரு புறம். ஆப்பரிக்காவின் இந்த “வித்தியாசமான” விழுமியத்தை பிறர் பதட்டத்துடன் எதிர்கொள்வதை வேடிக்கையாக சொல்லும் கதை ‘ஆப்பிரிக்க பஞ்சாயத்து’. சரி தவறு என்ற நிலைபாடுகளில் சிக்கி கொள்ளாத கதை. கிழக்கும் மேற்கும் ஒரு புறம் நின்று தங்கள் சரிநிலைகளையும் விழுமியங்களையும் ஆப்பிரிக்கா மீது சுமத்தி அச்சமூகத்தை இழிவாக சித்தரித்து தங்கள் பதட்டத்தை கடந்துவிட துடிக்கும் உளவியலின் மீதான விமர்சனமாகவும் இக்கதையை புரிந்துகொள்ள முடியும். ஆந்தையை அதிர்ஷ்டத்தின் குறியீடாக எண்ணும் ஆப்பிரிக்க கிராம மக்களை மூடநம்பிக்கையாளர்கள் என்று கருதும் ஒரு மேற்கத்தியனின் முடிவை அவரது இன்னொரு கதை(’ஞானம்’) வேடிக்கையாக கேள்விக்குள்ளாக்குகிறது. மானுட நிலையில் முன்னேற்றம் அவசியம். ஆனால் அனைவரையும் ஒரே குடுவையில் குறுக்கி ஒரே நிறத்தில் வார்த்தெடுக்கும் அபத்தங்கள் மீது அம்முன்னேற்றம் நிகழாது. தனி மனிதன் என்றும் முக்கியம். ஒவ்வொரு மனிதனுள் உள்ள எக்காலத்திற்கும் உதவும் கலச்சார விழுமியங்களை கண்டெடுத்து அதை உள்வாங்கிக் கொண்டு முன்னகர்தல் அவசியம். ”உலகப் பொதுமை” என்ற கனவை பேசுபவர்கள் கடக்க வேண்டிய தூரத்தையும், சிந்திக்க வேண்டிய விஷயங்களையும் பேசுபவை அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்.
கணிணி நிரல்களை கொண்டு எந்த ஒரு கட்டுரை அல்லது கதையில் தென்படும் நகரங்களின் பெயர்களை வைத்தே பூமியில் அதன் அட்சரேகை/ தீர்க்கரேகையை கணிக்கும் முறை ஒன்று உண்டு. அந்நகரங்களுக்கிடையே உள்ள தூரத்தை கண்டடையலாம். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த முறை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. சிந்து சமவெளி அகழ்வாய்விற்கு தோதான இடத்தை கண்டறிய இந்த முறை உபயோகிக்கப்படுகிறது. ஆர்வ மிகுதியால் “Lord of the Rings” வாசகர்களும் அக்கதை நிகழும் நிலப்பகுதியை மிகநெருக்கமாக அறிய இம்முறையை கையாளுகின்றனர். இக்கணிணி நிரல்களை பொறுத்தவரை முத்துலிங்கத்தின் கதைகளில் வரும் இடங்கள் எதுவுமே அதிக தூரத்தில் இருக்க வாய்ப்பில்லை. கொக்குவில் கிராமத்தின் மனிதனும் சூடானிய கிராமமொன்றின் மனிதனும் தோளோடு தோள் உரசும் மாயம் இங்கே நிகழ்கிறது. தங்கள் தனிபட்ட பிரச்சனைகளை தாண்டி, வாழ்வின் வேடிக்கைத்தன்மையை உணர்ந்து சிநேக பாவத்துடன் மற்றொருவரை பார்த்து புன்னகைக்க முடிகிறது.