[stextbox id=”info” caption=”பலவந்தமாக அபகரித்தல்”]
சீன அரசுக்கு பல நாட்டிலும் அதிகாரம் இருக்கிறது என்பதை இந்தச் செய்திகள் காட்டுகின்றன. தாய்லாந்து, ஹாங்காங் போன்ற நாடு/ தனி ஆளுமை உரிமை கொண்ட மாநிலம் போன்ற பகுதிகளில் இருந்து கூட சீனா பலரைக் கடத்துகிறது. இப்படிச் செய்வதில் அமெரிக்கா, ரஷ்யா, மேலும் சில யூரோப்பிய நாடுகளே முன்னிலை வகித்து வந்தன. இப்போது சீனா அங்கு வந்து சேர்கிறது. இது சீனா வல்லரசாகி விட்டது என்பதைக் காட்டுகிறது. இந்தியாவோ தெளிவாகத் தெரிந்த கொலைகாரர்களைக் கூடக் கைது செய்யவும் தெரியாமல், எல்லை தாண்டிக் கடத்தவும் தெரியாமல் தத்தளிக்கும் பேதை நாடாக விளங்குகிறது. அதோடு, அன்னிய மண்ணில் சிறைப்பிடிக்கப்பட்ட விமானத்தையும் பயணிகளையும் மீட்க இந்தியச் சிறையில் இருக்கும் கொலைகாரர்களை விடுவிக்கவும் அது தயங்குவதில்லை.
நாடு பூராவும் ஓட்டைகளே நிறைந்த எல்லைகள் வழியே சமூக விரோதிகளும், அன்னிய நாடுகளின் சதிகாரர்களும், கள்ள நோட்டுக் கும்பல்களும் எளிதே நுழைந்து நினைத்ததைச் சாதித்துப் போகிறார்கள். இவர்களுக்கு இந்திய ஊடகங்களும், பல உள்நாட்டு அரசியல் சக்திகளும் உதவவும் செய்கின்றன. ஆனால் இந்திய அரசோ தானும் ஒரு வல்லரசு என்பது போல பாவனை செய்து கொண்டிருக்கிறது.
[stextbox id=”info” caption=”குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்”]
சூழல் நசிவு, உலகம் வெப்பமாதல் அபாயம் என்று கூச்சல் போட்டுப் பார்த்து ஓய்ந்து விட்டனர் மேலை அறிவியலாளர்கள். மேற்கின் ஆளும் கூட்டங்கள், இப்போது எந்த நடவடிக்கையையும் எடுப்பதாக இல்லை. இப்போது மேற்கில் பரவலாக ஆட்சிக்கு வரத் துவங்கி இருப்பவர்களோ தீவிர வலது சாரியினர். ஏற்கனவே கிருஸ்தவ மதப் பார்வையை முன்வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிய இந்தக் கூட்டம், அறிவியலை நம்பாத, அதை இடதுசாரிகளின் சதித்திட்டம் என்றே பிரச்சாரம் செய்து வந்திருக்கிற கூட்டம். இக்கூட்டம் முன்பு பல பத்தாண்டுகளாகச் செய்து வந்த அதே தவறுகளை இன்னும் அதி தீவிரமாகச் செய்வதே உலக ஆதிக்கத்தில் தம் நிலை சரியாமல் இருக்கச் செய்யும் என்று கருதி அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் துவங்கி இருக்கிறது.
முதல் கட்ட நடவடிக்கையாக வங்கி/ நிதி நிறுவனங்களின் மீது அரசு கண்காணிப்பை வைத்திருப்பதை அகற்றப் போகிறது அமெரிக்க அரசு. இன்னொரு திக்கில் மருந்து நிறுவனங்கள், எரிபொருள் நிறுவனங்கள் என்று பற்பல கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நிறுவனங்களுக்கு சுதந்திரம் கொடுத்து என்ன விரிவாக்கம் வேண்டுமானாலும் செய்து கொள்ள அனுமதிக்கவிருக்கிறது அமெரிக்க அரசின் ஆளும் கூட்டம். இதே போன்ற அரசியலே இன்று பிரிட்டனிலும் ஆட்சி செய்கிறது. ஃப்ரான்ஸில் இந்த வகை அரசியல் பதவிக்கு வரவிருக்கிறது. மேலும் பல யூரோப்பிய நாடுகளில் தீவிர வலதுசாரியினர் ஆட்சிக்கு அருகிலோ, அல்லது ஏற்கனவே ஆட்சியிலோ இருக்கிறார்கள். சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் ஏற்கனவே வலது சாரிகள்தான் ஆட்சியில் இருக்கிறார்கள். [சீன தேசியம், சீன ஏகாதிபத்தியம் போன்றன வலது சாரிக் கருத்தியல்தான். அதைக் கம்யூனிஸ்டுகளும் பேசுவார்கள் என்பதில் ஒரு வியப்பும் இல்லை. ஏமாளி இந்தியாவின் கம்யூனிஸ்டுகள்தான் இந்திய தேசியத்தை ஃபாசிஸம் என்று இழிவு செய்யக் கூடியவர்கள். ]
இப்படி உலகெங்கும் உலகப் பார்வை என்பது அழிக்கப்பட்டு, தம் முன்னிலை என்ற கருத்தியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகையில், சூழலியல் அவதானிப்பாளர்களிடமிருந்து மேன்மேலும் நம்பிக்கை இழக்கச் செய்யும் அறிக்கைகள் வரத் துவங்கி இருக்கின்றன. உலகத்தில் ஏதேதோ ஜீவராசிகள் மொத்தமாக அழிந்து வருகின்றன, இது நமக்குத் தெரியும். பெரும் கடல் பகுதிகளில் கூட ஏராளமான கடல் வாசி ஜீவன்கள் சுவடற்று அழியத் துவங்கி இருக்கின்றன. நிறைய நாடுகளின் கடல்கரைப் பகுதிகளில் மீன் பிடிப்போருக்கு மீன்களே கிடைக்காத நாட்கள் நிறைய ஆகி வருகின்றன.
இந்த அறிக்கை நம் கவனத்தை ஒரு வகை ஜீவராசியின் தொடர்ந்த சரிவை, மெலிவாக்குதலைச் சுட்டி எச்சரிக்கை செய்கிறது. அவை மனிதரோடு தொடர்பு கொண்டிருக்கிற குரங்கு வகைகள். இவற்றை ப்ரைமேட் என்று இங்கிலிஷில் வகைப்படுத்துகிறார்கள். நாம் குரங்குகளின் மேம்பட்ட வகை மிருகங்கள் என்பது உயிரியல் துறையின் முடிபு என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்த கருத்து. மிருகங்களில் முதல் வரிசையில் உள்ளன என்ற அர்த்தத்தில் நாமும், இந்தப் பல வகை குரங்குகளும் ப்ரைமேட் என்று அழைக்கப்படுகிறோம். எங்கோ தொலை தூரத்தில் உள்ள பவழப் பாறைகளும், கடல் பாசிகளும், திமிங்கிலங்களும், தேனீக்களும், காண்டா மிருகங்களும், ஏராளமான மீன் வகைகளும் அழிவது நமக்கு ஒரு உறுத்தலையும் கொடுக்கவில்லை. ஆனால் இப்போது இந்தப் ப்ரைமேட்களும் அழிந்து வருகின்றன என்பதாவது நம்மை அழிக்கும் நெருப்பு நெருங்குகிறது என்ற ஆபத்துணர்வைத் தூண்டுமா என்று பார்க்கிறார்கள் இந்த அறிவியலாளர்கள்.
ஆனால் நம்மில் ஏராளமானோருக்குக் குரங்குகள் அழிந்தால் நமக்கென்ன வந்தது என்ற மனோநிலைதான் இருக்கப் போகிறது. மனிதக் குரங்குகளும், இதர குரங்குகளும் காடுகளின் நலன் பாதுகாக்கும் மிருகங்கள். காடுகளில் ஏராளமான தாவரங்கள் பலவேறு இடங்களுக்குப் பரவவும், சில தாவரங்கள் அளவு மீறி வளர்ந்து இதர தாவரங்கள் வளர விடாமல் செய்வதைத் தடுப்பதும் என்று பற்பல விதங்களில் இவை காடுகளின் நலனைப் பராமரிக்கின்றனவாம். காடுகள் அழிந்தால் அவற்றில் மானுடருக்கு உதவக் கூடிய ஏராளமான தாவரங்களும் அழிந்து போகும் என்பது நமக்கு உடனே புலப்படாமல் இருக்கலாம். ஆனால் காடுகளில் உள்ள தாவரங்களிலிருந்து அரிய மருந்துப் பொருட்களைக் கண்டு பிடித்துக் கொண்டிருக்கும் மருத்துவ மருந்து நிறுவனங்களுக்கு இந்த இழப்பின் கொடுமை புரியலாம்.
உலகின் மனிதக் குரங்குகளில் 60% இப்படி அழிவை நோக்குகின்றன. 70% தொடர்ந்து சரியும் உறுப்பினர் தொகையை ஏற்கனவே சந்தித்து விட்டன என்று சொல்கிறது அறிக்கை. மேலும் படித்தால் காரணங்களும், விளைவுகளும் பற்றி கூடுதல் விவரங்கள் கிட்டும்.
https://psmag.com/whats-behind-the-impending-primate-mass-extinction-ce071a045833#.5hw5b19gh
[/stextbox]
[stextbox id=”info” caption=”முன்னோர்களும் பழங்குடியினரும்”]
மனிதக் குரங்குகளின் அழிவைப் பற்றி யோசித்து முடிக்கையில் மனித குலத்தின் நசிவையும் பற்றி நாம் யோசித்திருப்போம். வேறு யாரும் அல்லது எதுவும் நமக்கு எதிரி இல்லை, நமக்கு நாமே போதுமான எதிரிகள். அதுவும் பல அடையாளங்களால் இயக்கப்பட்டு நாம் ஒருவரை ஒருவர் எதிரிகளாக ஆக்கிக் கூட்டம் கூட்டமாகக் கொன்றழிக்க முற்பட்டதை, முற்படுவதை எல்லாம் வரலாறு என்றும், அரசியலியல் என்றும் கற்றுக் கொண்டு வருவதை என்னவொரு அபத்த நாடகமும் மிஞ்ச முடியாது. இந்தச் சுட்டியில் ஒரு தாய்வானிய எழுத்தாளர், இப்போது அமெரிக்க வாசியாக இருப்பவர், இவருடைய குடியுரிமை எங்கு என்பது இக்கட்டுரையில் தெளிவாக இல்லை. இவர் இன்னும் தாய்வானியராக இருக்கவே வாய்ப்பு அதிகம். கட்டுரையில் தாய்வானின் சிக்கலான வரலாற்றை உணர்ச்சி பூர்வமான வகையில் சுருக்கிப் பேசுகிறார்.
எப்படி செஞ்சீனாவின் எழுச்சியில் உலகம் தாய்வானை அலட்சியம் செய்வதோடு, அந்தத் தீவுகள் ஒரு நாடாக இருப்பது கூட சாத்தியம் இல்லை என்று கருதவும் துவங்கி இருக்கிறது என்று வருத்தப்படுகிறார். தாய்வானின் மீது பற்பல நாட்டினர் தொடுத்த தாக்குதல்கள், படையெடுப்புகள் எப்படி அந்த வரலாற்றை மறுபடி மறுபடி அழித்து எழுதின என்றும் சுட்டுகிறார். குறுந்தேசியம், பெருந்தேசியம், பன்னாட்டியம், உலக ஏகாதிபத்தியம் ஆகியனவற்றின் இழுபறிப் போர்களில் சிக்கி மடிபவர் சாதாரணர் என்பதையும் அங்கீகரிக்கிறார். இவரது கட்டுரைக்கு ஒரு மாற்றாக வாசகர்கள் எழுதிய பதில்கள் அமைகின்றன. அவற்றில் இருவர் மிகச் சரியாகவே தாய்வானியர் என்று இன்று கருதப்படுவோரே அத்தீவுகளில் நெடுங்காலமாக வசித்து வந்த பழங்குடியினரை அழித்து ஒடுக்கித்தான் ஆட்சி செய்யத் துவங்கினர், அம்மக்களின் விடுவிப்பையும், அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கும் உரிமைகள் கொடுப்பதையும் கருதிப் பேசாத தாய்வானிய வரலாற்று விவரிப்பு முழுமை பெறாதது என்று சுட்டுகிறார்கள்.
http://lithub.com/on-taiwan-and-refusing-to-stay-silent/#
[/stextbox]