கவிதைகள்

மழைக்குறிப்புகள்

*எவனோ புகைத்த
சிகரெட்டின் புகைத்திட்டுகளாக
சூழும் மேகங்கள்
முதுமையின் வெண்நரை கலந்த கேசத்தை நினைவூட்டுகின்றன.

*மழை வந்ததும் ஒண்டுகிறோம்
கூரைக்குக் கீழ்.
சுவர்கள் தங்கள்
கக்கத்தின் கதகதப்பில்
நம்மை வைத்துக்கொள்கின்றன.

*கூரைகளின்
மிச்சத் துளிகள்
சொட்டச் சொட்ட
தோன்றுமொரு
இசைமயக்கம்

*மழையில் நனைந்தன
சில பைத்தியங்கள்
அவற்றின் பைத்தியங்களை
கழுவிச் சென்ற மழை
பூமிக்குள் புகுந்துகொண்டது
பைத்தியம் நீங்கிய பைத்தியங்கள்
களிப்பில் குதித்தன
பைத்தியங்களின் பைத்தியத்தை
ஒருசேரக் குடித்த பூமி
பைத்தியம் கொண்டு
கரகரவெனச் சுற்றத் தொடங்கியது

மார்கழி

தவளைகளின் நாவுகளாய்
பொறிகளுடன் வெப்பம் சுடர்ந்து கொண்டிருக்க
கைகள் நீண்டு
சர்ப்பத்தின் நாவென
அதை உண்கின்றன.
அக்கினிப்பழத்தின் ருசி
குருதியில் கலந்து
மெய்சிலிர்க்க
மயிர்க்கால்களில் உருகுகிறது பனித்துளி

நிலக்காட்சி

முன்பகலின் சூரியன்
எரிகின்ற போது
கிளுவந்தழைகள் உதிர்ந்து
புழுக்கை வீச்சமடிக்கும்
தொழுவம் நீங்கி
செம்மண் காடோடும்
செம்மறிகள்;
கோடை மழையின்
ஈரம் குடித்து
முட்டியெழுந்திருக்கும்
கோரைப்புற்கள்
செம்மண்காட்டைப் பசியதாய்க் காட்டும்;
குனிந்த தலை நிமிராத குமரிகளென
உன்னிப்பாய் மேயும் செம்மறிகள்;
செம்புழுதியின் நடுவே
புணரும் அவைகளைக் கண்டு
சம்போகத்தின் வேட்கை முட்ட
வசவொன்றைக் கல்லென வீசி
அவற்றை முடுக்கிறான்
வாலிப மேய்ப்பன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.