களம் புதிது, கதை புதிது, கதையாடலும் புதிது

சுமார் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் இருக்கக்கூடும். சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் மித்ர அலுவலகத்தில் எழுத்தாளர் எஸ்.பொ. வைச் சந்தித்தேன். நான் எழுதிய புத்தகங்களின் மூலம் ஏற்கெனவே எஸ்.பொ. எனக்குப் பரிச்சயமாகி இருந்தார். எப்போதாவது அவரை மித்ர அலுவலகத்தில் சந்திப்பேன். இலங்கை இலக்கிய நிலவரம் பற்றிப் பேசுவேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு இலங்கை எழுத்தாளர் எழுதிய நூல் ஒன்றை எனக்கு அறிமுகப்படுத்துவார். அப்படித்தான் ‘பனியும், பனையும்’ என்ற நல்ல சிறுகதைத் தொகுப்பு அறிமுகமானது. அ. முத்துலிங்கத்தின் ‘வம்சவிருத்தி’ அறிமுகமானதும் அப்படித்தான்.

பொதுவாகவே இலங்கை புலம்பெயர் எழுத்தாளர்கள் எழுதும் தமிழ்ப் பிரதிகள் தங்கள் மொழியின் பிடிபடாத் தன்மையால் என்னை அயர்ச்சிக்குள்ளாக்கும். எனினும் இலக்கிய ஆர்வ மேலீட்டால் நான் எப்படியும் அவற்றைப் படித்துவிடுவேன். வம்சவிருத்தியையும் அப்படிப்பட்ட பிடிபடாத மொழியால் எழுதப்பட்ட பிரதியாகத் தான் இருக்கும் என்று அனுமானித்தேன். அப்போது முத்துலிங்கம் புகழ் பெற்றிருக்கவில்லை. அவரது வேறெந்த பிரதியையும் நான் படித்திருந்ததாக நினைவில் இல்லை. எந்தவிதமான முன் அனுமானமும் இன்றி வம்சவிருத்தி என்ற அந்த சிறுகதைத் தொகுப்பைப் படிக்கலானேன். முதல் சில பக்கங்களைப் படித்ததுமே, ‘வழக்கமான இலங்கைத் தமிழ் எழுத்து இல்லை இது வேறு மாதிரி’ என்று தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது.

மொத்தம் பதினொரு சிறுகதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். கதைகள் நிகழும் நாடுகள் வெவ்வேறு. கதை மாந்தர்களின் இனமும் வெவ்வேறு. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் வெவ்வேறு. ஒரு சராசரி தமிழ் எழுதாளன் எதிர்கொள்ளாத பிரச்சனைகளை முத்துலிங்கம் எதிர்கொள்கிறார். துணிக்கடையில் புதிய புதிய மோஸ்தர் துணிகளை அனாயாசமாகக் கடைக்காரன் வாடிக்கையாளனின் கண்முன் விரித்துப் போட்டு பிரமிக்க வைப்பது போல் வாசகனை பிரமிக்க வைக்க அவரால் முடிகிறது.

பணியின் நிமித்தம் உலகம் முழுதும் சுற்றும் வாய்ப்பு பெற்றவர்கள் எழுதும் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். அதே போல், எழுதும் திறமை பெற்றவர்கள் இது  போல் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் சென்று வாழும் வாய்ப்பு கிடைக்காதவர்களாக இருப்பார்கள். ஆனால்,முத்துலிங்கத்துக்கு இந்த இரண்டுமே வாய்த்திருக்கிறது. அது அவருக்குக் கிடைத்த வரம் என்று தோன்றுகிறது.

தொகுப்பின் முதல் சிறுகதையே கவனத்தை ஈர்த்துவிடுகிறது. ஒரு வளர்ப்பு நாயைப் பற்றிய கதை அது. துரி என்கிற அந்த நாயின் பெயர் துரியோதனன். அந்த நாய்க்குப் பெயரிட்ட நிகழ்ச்சி பற்றிச் சொல்லும்போது,

‘……கால்களைத் தூக்கி ஆண்நாய் என்று நிச்சயித்துக் கொண்டு என்ன பெயர் வைப்பது என்ற விசாரத்தில் மூழ்கினோம். பல பெயர்களை நிராகரித்த பின்பு, துரியோதனன் என்ற பெயரை நான்தான் முன் மொழிந்தேன். என் மகன் என்னைக் கீழ்க்கண்ணால் ஊடுருவிப்பார்த்தான். பேர்களை வீட்டோ பண்ணும் உரிமை அவனிடம் இருந்தது. ’ஆ, துரி என்று கூப்பிடுவோம்’ என்று இறுதியில் சொல்லிவிட்டான். பெயரும் அப்படியே நிலைத்துவிட்டது’

அப்படியே புதுமைப்பித்தனை வாசிக்கிற உணர்வு. புதுமைப் பித்தனே மீண்டும் பிறந்து வந்துவிட்டாரோ என்று நாம் திகைக்கையில், இன்னொரு சிறுகதையில் வேறு மாதிரி எழுதவும் செய்கிறார்.

‘…..பாதையை நிறைத்து பனி மூடியிருந்தது. கனடாவின் அன்றைய வெப்ப நிலை மைனஸ் 20 டிகிரி. டாக்சி மெதுவாக ஊர்ந்து 32 ம் நம்பர் வீட்டு வாசலில் போய் நின்றது. வீட்டின் பெயர் ‘ஒரு சாதம்’ என்று போட்டிருந்தது…’

என்று ஆரம்பிக்கும் இந்தக் கதை சீரியசாக அடி எடுத்து  வைக்கிறது. வீட்டின் பெயர் ஒரு சாதமா..அதென்ன ஒரு சாதம் என்று வாசகனிடம் ஒரு மர்மத்தை முன் வைக்கிறது. கதையின் நாயகன் சிவலிங்கம் ஒரு கம்பெனியில் வேலை செய்கிறான். அந்தக் கம்பெனியில் இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் தொடர்ந்து ஒரு தவறு செய்கிறது. வருமானக் கணக்கில் தொடர்ந்து ஒரு சதம் வித்தியாசம் வருகிறது. இதை எப்படி சரி செய்வது என்று யாருக்கும் தெரிவதில்லை. அதை இவன்தான் சரி செய்கிறான். இதனால் கம்பெனிக்கு இதுவரை வந்து கொண்டிருந்த ஆயிரக்கணகான டாலர் நஷ்டம் நின்றுவிடுகிறது. உடனே இவனுக்கு ஃபைனான்சியல் கண்ட்ரோலர் என்னும் உயர்பதவி கிடைக்கிறது. கை கொள்ளாத சம்பளம் கிடைக்கிறது. அந்த வருமானத்தில் கிடைத்த வீடு என்பதால், வீட்டுக்கு ‘ஒரு சதம்’ என்று பெயர் வைக்கிறான். அதை ஆங்கிலத்தில் எழுதி வாசிக்கும் போது ஒரு சாதம் என்ற வாசிப்பு கிடைக்கிறது.

இப்படிப்பட்ட நூதனமான கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. அடுத்து லண்டனில் நிகழும் ஒரு சூரிய கிரணம் பற்றிய ஒரு கதை. பஸ்மினா என்னும் ஏழைச் சிறுமி சூரியகிரணம் பற்றிய ஒரு அசாதாரண கண்டுபிடிப்பைத் தெரிவிக்கிறாள். இப்படி ஒவ்வொரு கதையுமே புதுப் பொலிவுடன் மிளிர்கின்றன.

மேற்கு ஆஃப்ரிக்க நாடான சிய்ரா லியோனுக்கு பணி நிமித்தமாக வரும் ஹென்ரிகே லோட்டா என்கிற நாற்பத்தியெட்டு வயதான இத்தாலியருக்கு ஏற்படும் முதிர் காதல் பற்றிய கதைதான் விழுக்காடு. சிய்ரா லியோனில் இருக்கும் சுபிட்ச நிலைமையை அளக்க வரும் ஒரு மனிதர், அந்த நாட்டு வேலைக்காரியைத் திருமணம் செய்துகொண்டதன் விளைவாக அவள் தன் வேலையையும், அதன் மூலம் ஈட்டிவந்த வருமானத்தையும் இழந்து விடுகிறாள். இதனால் சிய்ரா லியோனின் சுபிட்ச நிலைமையில் ஒரு பின்னடைவு ஏற்படுகிறது. இந்த முரணை வேடிக்கையாகச் சொல்கிறார் இவர்.

கனடா, லண்டன், ஆஃப்ரிக்கா, ஸ்வீடன், பாகிஸ்தான் என்று பல நாடுகள். பல மனிதர்கள். பல நாகரிகங்கள், பலவிதமான உணவுப்பழக்கங்கள். இவையெல்லாவற்றையும் மீறிப் வெளிப்படும் மனித நேயம். அது ஒன்றுதான் இந்தக் கதைகளின் அடிநாதம் என்று தோன்றுகிறது. அதுவே இந்தக் கதைகளை மனதுக்கு அணுக்கமான கதைகளாக ஆக்குகின்றன.

இனி குழந்தையே பிறக்காது என்று கைவிடப்பட்டுவிட்ட ஒரு தமிழ்ப்பெண் ஓர் ஆஃரிக்கக் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும் புதுமை; சூடானில் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபடும் ஒரு பொறியாளர் ஒரு கிழவியின் பருத்திச்செடிகள் அழிந்து விடக்கூடாது என்பதற்காக அரசு இயந்திரத்துடன் மல்லுக்கட்டி நிற்கும் நியாயமான கோபம்; அருகிவிட்ட இனம் என்று அறிவிக்கப்பட்ட மலை ஆட்டை, தாங்கள் ஜீவிப்பதற்காக வேட்டையாடும் கிராமவாசிகள் என்று எத்தனை புதுப் புது கதை மாந்தர்கள். பதினொரு கதைகளிலேயே இத்தனை வண்ணக் கலவைகளை இவரால் குழைத்துத் தர முடிந்திருக்கிறது என்றால் நூறு கதைகள் எழுத முடிந்தால் அது எவ்வளவு பெரிய வண்ண மகோத்ஸவமாக இருக்கும்?

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இந்தத் தொகுப்பைப் படித்ததும் என் மனதில் உதித்த சொற்கள் இவை: களம் புதிது, கதை புதிது, கதையாடலும் புதிது. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது எடுத்துப் படித்தாலும் இதே வரிகள் மீண்டும் என் மனதில் தோன்றுகின்றன. இதுவே இந்தக் கதைகளின் நீர்த்துப் போகாத வீரியத்தை எடுத்துக் காட்டுகிறது.

 

##########

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.