இதயமா? நுரையீரலா?

இது என்ன ஒரு அசட்டு கேள்வி என்று பல பேருக்கு , அதுவும், நுரையீரல் என்று ஒரு உறுப்பு உள்ளது என்ற நினைவற்றவர்களுக்கு தோன்றும். ஏன்! நானே என்னை வினவிய ஒரு சந்தர்ப்பம் உண்டு.

மருத்துவ மேற்பயிற்சிக்காக முயன்று கொண்டிருந்த சமயத்தில் இதய பயிற்சியா அல்லது நுரையீரல் பயிற்சியா என்று சிறி து நாட்கள் மனம் அலை பாய்ந்தது. அந்த சமயத்தில், அமெரிக்கா போன்ற முன்னேற்றமடைந்த நாடுகளில் இதய பயிற்சி என்றாலே இதய ரத்த கு ழாய் பற்றிய பயிற்சியாகவே இருந்தது. ஆனால் நுரையீரல் உடலியல் என்னை மிகவும் கவர்ந்ததால் என் மனசஞ்சலம் ஒரு சில நாட்களில் மறைந்தது. பொதுவாக, அமெரிக்காவில் தேசிய கீதம் பாடும்பொழுது எழுந்து நின்று தங்களது இதயம் மேல் கை வைத்து கொள்வது வழக்கம். சமீப காலத்தில் சில விளையாட்டு வீரர்கள் தங்களது மனததாங்கலை வெளிபடுத்த எழுந்துக்கூட நிற்காமல் ஒரு சச்சரவை ஆரம்பித்திருக்கின்றனர். அது வேறே விஷயம்.

இதயத்தின் மேல் சொல்கிறேன் என்று சத்தியம் செய்வதும் ஒரு வழக்கமாகவே இருக்கிறது. இந்திய பண்பாட்டில் இதயத்திற்கு உள்ள அளவிற்கு நுரையீரலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பஞ்ச தசி போன்ற வேதாந்த நூல்கள் பஞ்ச பூதங்களில் ஒன்றான பிராணன் என்று சொல்லப்படும் வாயுவையே தலைசிறந்ததாக சொல்கிறது. புராணங்களோ வாயுவை பகவானாகவே சித்தரிக்கிறது. அனுமநும் பீமனும் வாயு புத்திரர்கள் என்று தெரியாதவர் ஒரு சிலரே. யோக முறையில், பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சுக்கட்டுப்பாடு மிகவும் இன்றியமையாதது. யோக நூல்களில், பிராணனை ஐந்தாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி வேலை தரப்படுகிறது. பிராணா எனும் மூச்சு நாம் சாப்பிடும் உணவை கட்டுப்படுத்துகிறது. நாம் ஏப்பம் விடுவது நமது வயறு நிரம்பியதை நினைவு படுத்துவதற்கே . சமானா எனும் மூச்சு பிரிவு உண்ட உணவு செரிமானம் செய்ய உதவுகிறது. வியானா எனும் மூச்சு செரிமானம் செய்த உணவிலிருந்து வெளிப்படும் சக்தியை ரத்த குழாய்களின் வழியாக வெவேறு உறுப்புகளுக்கு செல்ல உதவுகிறது. உதானா உடலின் சக்தியை உணர உதவுகிறது. அபானா கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

இந்த முன் பீடிகை எதற்காக? போகப்போகத் தெரியும். இதய மருத்துவர்களுக்கு பொது மக்களிடம் இருக்கும் மதிப்பு நுரையீரல் மருத்துவர்களுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏன்!. இன்னும் சொல்ல போனால், மருத்துவர்களுக்கிடையேயே இதய நிபுணர்களுக்கு இருக்கும் செல்வாக்கு நுரையீரல் நிபுணர்களுக்கு இல்லை. என்னுடைய நண்பர் ஒருவர் சொன்னார்,” தடுக்கி விழுந்தால் ஒரு இதய நிபுணர்.ஆனால். நுரையீரல் வியாதி மருத்துவர் வேண்டுமென்றால் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும் என்றார். இதய சம்பந்தப்பட்ட நோய்கள் பணக்காரர்களின் நோய்கள். ஆனால்.காச நோய் போன்ற நோய்கள் ஏழைகளை தாக்கும் நோய்கள் எனற நம்பிக்கை ஒரு காரணமாகவும் இருக்கலாம். இதயம் நின்று விட்டது என்பதை விட மூச்சு நின்று விட்டது என்று சொல்வது வழக்கமாக இருந்தாலும் இதய வியாதிகளை கட்டுப்படுத்துவதில் உள்ள சமூக ஆர்வம் மூச்சு வியாதிகளுக்கு இல்லை. இதனால்தான் உலக அளவில், காச நோய் நிவாரணத்திற்கு சிறந்த மருந்துகள் இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாத தாகவே இருந்து வருகிறது. நான் இந்த கட்டுரைக்காக ஒப்பீடு செய்ய போகும் இரண்டு உபாதைகள் எம்பஸீமா எனப்படும் நுரையீரல் திசுக்காற்று புடைப்பு(நுதிப்பு)ம் ஹார்ட் பெய்லியர் எனப்படும் இதயச் செயலிழப்புமாகும். இதன் மூலம் இந்த கேள்விக்கு பதில் கிடைக்குமா என்று பார்க்கலாம்.

உலகளவில், ஒரு கோடி மக்களுக்கும் மேலானவர்கள் இவ்விரண்டு பிணிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவையிரண்டும் தாங்க முடியாத அளவுக்கு உடம்பு தொல்லையும் அகால இறப்பையும் உண்டு பண்ணக்கூடியவை. இவ்விரண்டுமே ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருப்பதால் இதயக்கோளாறா நுரையீரல் கோளாறா என்று கண்டறிவது கடினம் . மூச்சடைப்பு, இரு ம ல், கழுத்தில் உள்ள ரத்தக்குழாய் வீக்கம், கால் வீக்கம் ஆகியவை இரண்டிற்குமே பொதுவானது. மேலும், நுதிப்பு வியாதியில் உள்ளே செல்லும் காற்று முழுவதும் வெளியே வர இயலாததால் நுரையீரல் பெரியதாகி கல்லீரலை கீழ் தள்ளுகிறது. இதை இதய வியாதியினால் ஏற்படும் கல்லீரல் வீக்கமாக சந்தேகப்படுவதற்கு காரணமாய் உள்ளது. இதய சத்தங்களை காற்றினால் வீங்கிய நுரையீரல்கள் நன்றாக கேட்க முடியாதவாறு செய்கின்றன.. இவ்விரண்டு பிணிகளாலும் தாக்கப்பட்ட நபர்ககளின் ஏஎண்ணிக்கை ஒரு பிணியால் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை போல இரு மடங்காக உள்ளது.இதய செயலிழப்பு எக்ஸ்ரே படங்களில் இதய அளவு பெரியதானதையும் நுரையீரலில் தண்ணீர் சேர்ந்ததையும் தெளிவாக கே காண முடியும்.ஆனால், நுதிப்பு நோயும் சேர்ந்து இருந்தால், வீங்கியுள்ள நுரையீரல்கள் இரண்டும் இதய அளவை குறைத்து காட்டும்;தண்ணீர் சேர்ந்து இருப்பதும் தெளிவாகத் தெரியாது. இது எக்ஸ்ரே மருத்துவர்களை கலங்க வைப்பதால், இதய வியாதி இருப்பதே தெரியாமல் போகக்கூடும். நுதிப்பு நோய் எக்ஸ்ரேயில் ஏற்படுத்தும் மாற்றங்களை இதய நோயினால் ஏற்படும் மாற்றங்களாக தவறாக புரிந்து கொள்வதற்கும் இடமுண்டு. மீயொலி அல்லது கேளா ஒலி எனப்படும் அல்ட்ரா சவுண்ட் இருதய வியாதிகளை கண்டறிவதற்கு ஒரு இன்றியமையாத சாதனம். ஆனால் நுதிப்பு வியாதி இதனை செயலற்றதாக செயது விடுகிறது. காற்றடைத்த நுரையீரல் ஒலியை இதயத்தை அண்ட விடுவதில்லை நுதிப்பு நோய் மிககே கடுமையாக உள்ளவர்களில் ஒரு பாதியினரிடம் மீயொலி சாதனம் வேலை செய்வதில்லை. காற்றடைப்பு அதிகமாக உள்ளவர்களிடம் நுரையீரல் இரத்த குழாய் அழுத்தம் அதிகமாக இருந்தாலும் அதையம் இச்சாதனத்தால் நுண்ணியமாக கணிக்க இயலாமற் போய் விடுகிறது.

சமீப காலத்தில் மிகவும் பிரபலமாகியுள்ள எம்மாரை (Magnetic Resonance Imaging) இதயத்தை சரியாக அளவெடுக்க உதவுகிறது. ஆனால் இதன் விலை மதிப்பு மிக அதிகமாயிருப்பதால் பணமற்றவர்களுக்கு இது ஒரு உபயோகமில்லாத சாதனம். பிஎன்பி எனப்படும் உயிர் சுட்டியின் அளவு குருதியில் 100க்கு குறைவாக இருந்தால் மூச்சிளைப்பு இதயச்செயலிழப்பினால் அல்ல என்று உறுதியாகக் கூற முடியும். அதே போல 500க்கும் மேல் இருந்தால் இதயச்செயலிழப்புதான் காரணம் என்றும் சொல்ல முடியும். ஆனால் 100க்கும் 500க்கும் இடையே உள்ள அளவு பல நுரையீரல் வியாதிகளில் காணப்படலாம்.

நுதிப்பு நோய் இதய செயலிழப்பை மறைப்பதை போல் இதய நோய் நுதிப்பு நோயை மறைக்க வழியுண்டு. நுதிப்பு நோயின் கடுமையை கணிக்க வெளிமூச்சின் வேகத்தை அளக்க வேண்டும். . நுதிப்பு நோயில் மூச்சு குழாய் தடை இருப்பதால் வெளியேறும் காற்றின் வேகம் குறைகிறது.. நோய் முற்ற முற்ற வேகமும் அதற்கேற்ற அளவு குறையும். உள்லே சென்ற காற்று சுலபமாக வெளியேறமுடியாமல் நுரையீரல் சிறுது சிறிதாக வீங்கி மார்பு க்கூட்டின் பிற பகுதிகளை ஆக்ரமித்து கொள்கிறது. சமீப கால ஆராய்ச்சியில் இது எவ்வாறு இதயத்தை சுருக்கி வலியையும் உண்டு பண்ணுகிறது என்று காட்டப்பட்டிருக்கிறது. இதயச்செயலிழினால் நுரையீரலில் நீர் சேரும்பொது நுரையீரல் சம்பந்தப்பட்ட சோதனைகள் நுதிப்பு நோய் இல்லாதவர்களையும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் போல் காண்பிக்கக் கூடும். இதய நோய் மருத்துவதினால் கட்டுப்பாடோடு இருக்கும் சமயத்தில் இச்சோதனைகள் நுரையீரலை மிகவும் குறுகியதாக காட்ட வாய்ப்புண்டு. இச்சோதனைகளின் கணிப்பு நுரையீரல் வியாதிகளின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தாலும், மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானவர்கள் மருத்துவர் சாலையில் இருந்து வெளிவரும் சமயத்தில் கூட இவர்களை கவனித்து கொண்ட மருத்துவர்கள் இந்த பரிசோதனையை செய்வதில்லை. ஆனால் இதய செயலிழப்புக்காக அனுமதி பெரும் நோயாளிகளில் என்பது சதவீதத்திற்கும் மேலானவர்கள் மீயொலி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 75 வயது வரை நுதிப்பு நோய் இதயச்செயலிழப்பு நோயாளிகளிடம் ஒரு நேர்கோடாக அதிகரிக்கிறது. அதன் பிறகு அதிகரிக்காமல் இருப்பதற்கு நுதிப்பு நோயாளிகளின் அகால மரணம் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. நுதிப்பு நோய் உள்ளவர்கள் இதயச்செயலிழினால் பாதிக்கப்படுவதற்கு 50 சதவீதம் வாய்ப்புண்டு. இதற்க்கு காரணம் புகை பிடித்தலே .நுரையீரல் வியாதிகள் வலது பக்க இதய வீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்தாலும் இடது பக்க செயலிழப்பே நுதிப்பு நோயினரை அதிகமாக பாதிக்கிறது.

இந்த சிறிய கட்டுரையின் மூலம் நான் சொல்ல விரும்புவது இவையே:

இதயமும் நுரையீரலும் பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் உபாதைகள் இரண்டிற்கும் பொதுவானவையே.

நுரையீரல் வியாதியை இதய வியாதியாகவும் இதய வியாதியை நுரையீரல் வியாதியோ எனவும் சந்தேகப்பட வாய்ப்பு உள்ளது.

நுதிப்பு நோயும் இதய செயலிழப்பும் ஒரே நபரை தாக்கும் வாய்ப்பு மிக அதிகம். இதை நோயாளிகளும் முக்கியமாமாக மருத்துவ வல்லுனர்களும் நினைவில் இருத்தி கொள்ள வேண்டும்.

இதயத்தை கவனிக்கும் மருத்துவர்கள் நுரையீரலின் அருமையை உணர வேண்டும்; நுரையீரல் நிபுணர்கள் நுரையீரல்களுக்கு மத்தியில் இருக்கும் இதயத்தை மறந்து விட கூடாது.

இதயமும் நுரையீரலும் சேர்ந்தே வேலை செயகின்றன. ஒன்று பழுது பட்டால் இன்னொன்று பழுது படும் வாய்ப்பு உள்ளது .

ஆகவே , இதயமா நுரையீரலா என்ற கேள்விக்கே இடமில்லை, முக்கியமாக மருத்துவத்துறையில்.

அடுத்த முறை, உங்கள் மருத்துவர் இதயம் நன்றாக வேலை செயது கொண்டிருக்கிறது என்று சொன்னால் சநதோஷத்துடன் வெளி வந்து விடாதீர்கள். என் நுரையீரல் எப்படி வேலை செயகிறது என்று கேளுங்கள். அதே மாதிரியே, நுரையீரலை மட்டும் உங்கள்மருத்துவர் தொட்டால் இதயத்தை பற்றி சொல்லவில்லையே என்று வினாவுங்கள்.

ஆதாரம்: Heart Failure and Chronic Obstructive Pulmonary Disease: Diagnostic Pitfalls and Epidemiology; Hawkins, N.M., et al; EJHD (2009) 11,130-139

3 Replies to “இதயமா? நுரையீரலா?”

    1. அன்புள்ள ராஜா அவர்களுக்கு,
      இந்தக் கட்டுரையை மீள்பதிவு செய்ய திரு.கடலூர் வாசு அவர்கள் அனுமதி கொடுத்துள்ளார். அதை உங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.
      பதிப்பாசிரியர் குழு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.