ஆறாம் நிலத்தின் அடையாளம்

ஐரோப்பாவிற்கு வந்தபிறகு இணையப் புழக்கம் தான் புழக்கம் என்றானது. வாசிப்பில் அதீத ஈடுபாடுடைய நண்பர் மூலமாக தமிழின் முக்கிய எழுத்தாளர்களின் இணையப்பக்கங்களை அறியப்பெற்றேன். நான் ஐரோப்பாவிற்கு வந்த பிறகு பார்க்க நேர்ந்த முதல் திரைப்படம் டிடிஎல்ஜே.வாசிக்க நேர்ந்த முதல் சிறுகதை ‘ரயில்பெண்’. ஐரோப்பிய பின்புலத்தில் அமைந்த இவ்விரு படைப்புகளும் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் மாறாமலிருக்கிறது.சென்னையில் விமானமேறி துபையில் கொஞ்சம் ஓய்வெடுத்து சொகுசாக ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் வந்திறங்கி டாக்ஸி பிடித்து அடுத்த அரைமணி நேரத்தில் தங்கவேண்டிய முகவரியைக் கண்டடைந்தவன், ‘ரயில்பெண்’ கதை வாயிலாகவே அகதி வாழ்க்கையின் துயரம், நிச்சயமில்லாத எதிர்காலம், குளிரின் கோரமென அதிர்ச்சியுடன் ஐரோப்பிய புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை கவனிக்க ஆரம்பித்தேன்.

பிறகு அவர் பிறந்த கிராமமான கொக்குவில்லைப் பற்றிய கட்டுரையை அவருடைய இணையப்பக்கத்தில் வாசிக்க நேர்ந்தது.அதில் கொக்குவில்லின் மணமாக நெல் அவிக்கும் மணத்தைக் குறிப்பிட்டிருப்பார்.ஒருவருடைய பால்ய காலத்து நினைவுகளை மிக எளிதாகக் கீறிவிடக்கூடிய எத்தனை எளிதான வரி அது

“ராமர் இலங்கைக்கு வந்து ராவணனைக் கொன்றுவிட்டு சீதையை மீட்டுக்கொண்டு அயோத்திக்கு திரும்பமுன்னர் நடந்தது. ஒரு ரம்மியமான காலை நேரத்தில் சோலை ஒன்றை ராமர் கண்டார். உடனேயே அந்த இடத்தில் வில்லை ஊன்றிவிட்டு அமர்ந்து தியானம் செய்தார். தியானம் முடிந்து கண்விழித்தபோது அவர் முன்னே ஒற்றைக்காலில் ஒரு வெள்ளைக் கொக்கு நின்று தவம் செய்தது. ராமர் மனமுருகி கொக்கின் முதுகில் தடவிக் கொடுத்தார். ‘கொக்கையுமா? அதற்கு மூன்று குறி இல்லையே?’ என்றேன். அப்படியல்ல. அணிலுக்கு தடவியதோடு குறிகொடுக்கும் திறன் ராமர் விரல்களுக்கு முடிந்துபோனது”

இதனை வாசிக்கையில் என்னையும் அறியாமல் சட்டெனெ சிரித்துவிட்டேன் (அவரது தாயார் கொக்குவில்லுக்கான பெயர் காரணத்தை இப்படி கூறியதாக எழுதியிருப்பார்).
மேலும் அதே கட்டுரையில்

” கொக்குவில்லில் என்னை மூன்று நாய்கள் மூன்று வெவ்வேறு வருடங்களில் மூன்று தெருக்களில் மூன்று இடங்களில் கடித்திருக்கின்றன.காற்றை மணந்து பார்த்து மழை வரும் என்று சொல்லும் ஒருவர் மந்திரிப்பார். வயிற்றினால் சிரிப்பவர் பச்சிலை அரைப்பார். நிழலை அளந்து மணி சொல்பவர் எனக்கு பச்சிலை வைத்து கட்டுவார் “

என பால்ய நிகழ்வுகளை அசாதாரணமாகப் பகடி செய்திருப்பார் .அவருடைய ஒவ்வொரு படைப்பிலும் இப்படி நமக்கான புன்னகையையும் புதைத்து வைத்திருப்பார் என அப்போது எனக்குத் தெரியாது.

அதன் பிறகு அவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்.

உண்மையில் வேறு எவரையும் வாசிக்கையில் (எனக்கு) ஏற்பட்டிராத புது உணர்வாக/நெருக்கமாக இருந்தன அவை. அதை ஒரு ஆணுக்கு ஒரு குறிப்பிட்ட பெண்ணின் மீது தோன்றும் அபரிமிதமான உணர்வின் வகையைச் சார்ந்ததாகக் கொள்ளலாம்.அதனால்தான் அப்போதுவரை நான் செய்திராத அந்தக் காரியதைச் செய்தேன்.முதன் முதலாக அ.முத்துலிங்கம் அவர்களுக்கு என் கூச்சத்தை உடைத்துக் கொண்டு ஒரு கடிதம் (மின்னஞ்சல்) எழுதியிருந்தேன்.அக்கடிதத்திற்கு மறுதினமே பதிலெழுதி ஆச்சர்யப்படுத்தினார்.

உண்மையில் புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் வாழ்வு, சூழல், வலி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை அவரது எழுத்துக்கள் ஆழப் பதிவதால் மட்டுமல்ல, அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவருவதற்குப் பின்வரும் மூன்று காரணங்களைக் கூறுவேன்.

1.எளிய மனிதர்களின் எளிய உணர்வுகள் அவர் எழுத்துக்கள் எங்கும் தென்படுவது.

2.பெரும்பாலும் நவீன கலாச்சாரம் சார்ந்தே அமையும் படைப்புகளிலும் மிகவும் எளிமையான அதேவேளையில் பழமையான தமிழ்ச் சொற்களைப் பிரயோகிக்கும் வல்லமை.

3.அவருக்குள் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கும் அந்தக் குறும்புக்கார,அதீத நகையுள்ளம் கொண்ட ஒரு பொடியனின் மனம்.

அவரது சிறுகதைகளை வாசித்தபிறகு ஏற்படும் உணர்வுக் கொப்பளிப்பில் பலமுறை அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.சிலமுறை லேசாக பகடி செய்ததுமுண்டு.ஒரு மூத்த எழுத்தாளரை பகடி செய்யும் துணிவையும் சுதந்திரத்தையும் தந்தது எது? என பலமுறை ஆச்சர்யமடைந்திருக்கிறேன். அது அவரது படைப்பு மொழியும் அது தந்த நெருக்கமும் என பின்னாளில் உணர்ந்துகொண்டேன்.ஒரு வாசகனாக அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது வாசகர்களின் கடிதங்களுக்கும் தாமதமின்றி உடனுக்குடன் பதில் எழுத்துவதைக் கூறுவேன். உண்மையில் வேறு எந்த மூத்த எழுத்தாளர்களும் அவர் அளவிற்கு வாசகர்களுடன் இணங்கி உரையாடுவார்களா என்பது சந்தேகமே.

2014ல் அவரது தளத்தில் ‘அடைப்புகள்’ சிறுகதையை வாசித்துவிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.அதற்கு மிகுந்த உற்சாகத்துடன் பின்வரும் பதிலை எழுதியிருந்தார்.

Dear Arun

I am so glad you liked the story. I wrote this 10 years ago and nobody understood it. This time I received 5 letters and I think you understood it almost fully

அந்தச் சிறுகதையை இப்போது வாசித்தாலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என எவராலும் யூகிக்கமுடியாத வகையில் எழுதப்பட்ட கதை அது.

அவருடைய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவை ஓணானுக்கு பிறந்தவன், கோப்பைகள், போரில் தோற்றுப்போன குதிரை வீரன், ஒன்றைக் கடன்வாங்கு, உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது,நான்தான் அடுத்த கணவன், ஆதிப் பண்பு,இலையுதிர் காலம், ஆட்டுப்பால் புட்டு,மஹாராஜாவின் ரயில் வண்டி,சூனியக்காரியின் தங்கச்சி இன்னும் பல.

தமிழர் வாழ்வியலில் செவ்விலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஐவகைத் திணைகளுக்குரிய ஐவகை நிலங்களோடு பனியும் பனி சார்ந்த இடத்தையும் ஆறாவது நிலமாக குறிப்பிடுகிறார் ஐயா முத்துலிங்கம் அவர்கள்.

ஐவகை நிலங்களின் பின்புலத்தில் தமிழர்களின் வாழ்வியல் எப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிதோ அது போல பனியும் பனி சார்ந்த நிலத்திலிருந்து புலம்பெயர் தமிழர் வாழ்வையும் அவற்றோடு தொடர்புடையவற்றையும் பதிவு செய்ததில்/செய்வதில் அவருடைய பங்கு போற்றத்தக்கது. அவருடைய இந்த மகத்தான பணி தொடர, நலம் பெற்றிருக்க பிரார்த்திக்கிறேன் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.