சொல்வனத்தின் 166 ஆம் இதழ் ஒரு சிறப்பிதழ். இந்தச் சிறப்பிதழ், பல நாடுகளிலும் நிலப்பகுதிகளிலும் வசித்தோ, பயணித்தோ பெற்ற அனுபவங்கள் வழியே இலக்கியம் படைக்கும் திரு. அ.முத்துலிங்கம் அவர்களைச் சிறப்பிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழும் பதிப்பாசிரியர்களைக் கொண்ட சொல்வனம் இணையப் பத்திரிகை, இப்படிப் புலம் பெயர்ந்த வாழ்வின் அனுபவங்களை இலக்கியமாக்குவதில் திறன் படைத்தவராகப் பரவலாக அறியப்பட்டிருக்கும் திரு.அ.முத்துலிங்கத்தைச் சிறப்பிக்க எண்ணியது இயற்கை.
இந்தச் சிறப்பிதழில் அனேகமாக எல்லாக் கட்டுரைகளும் இதழின் நாயகரது திறன் பற்றிய பாராட்டுகளாக, பலரது பார்வைகளில் அமைந்துள்ளன. இத்தனை பாராட்டுகளாகக் கொடுத்தால் திகட்டாதா, ஒரு ருசி மாற்றத்துக்காகவாவது கார சாரமாக ஏதும் கொடுக்கலாகாதா என்று பதிப்புக் குழு யோசிக்கவில்லை. என்றாலும், எழுதச் சொல்லிக் கேட்டவர்களில் சிலராவது அப்படி யோசித்திருப்பார்கள் போலிருக்கிறது. ஓரிரு ‘விமர்சனக்’ கட்டுரைகளும் கிட்டின.
மற்றதெல்லாம் ’விமர்சனம்’ இல்லையா என்றால், எது பார்வைக்குட்படும் பொருளைப் பிய்த்துப் போட்டு, என்பிலதனைப் பகலவன் போலக் காய்கிறதோ, அதுதான் விமர்சனம். மற்றதெல்லாம் புகழாரங்கள், அத்தனை பொருட்படுத்தத் தேவையில்லாதன என்பது நம் நிலத்தின் ’நிரந்தரப் புரட்சி’கர அறிவாளர்களின் அணுகல். ஒப்பீட்டில், தன் அணுகலில் வாழை மட்டைக் குளிர்ச்சியைப் பாவிக்கும் சொல்வனம், இப்படியோர் விமர்சன நோக்கத்தை விரும்புவதில்லை என்றாலும், ருசி மாற்றம் என்ற கருத்து ஏற்கக் கூடிய கருத்து என்பதால் சாரத்தோடு காரமும் கொடுக்கும் ஒரு விமர்சனத்தையாவது பிரசுரித்திருக்கிறோம். ஆனால் காரம் மட்டும் கொண்டதைப் பிரசுரிக்கவில்லை.
அந்தக் காரத்தின் பின்னே உள்ள வாதங்களைப் பற்றி யோசித்தோம். அவற்றை முன்வைத்து, அவற்றுக்கு ஏதும் பதில் சொல்லலாமே என்று நண்பர்கள் யோசனை சொன்னதால் இந்தக் கட்டுரையை எழுத நேர்ந்தது. இது மொத்தப் பதிப்பாசிரியர் குழுவின் பார்வையா என்றால், இல்லை. தனியொருவனின் கருத்துதான். அதை வலியுறுத்துவது அவசியம் என்று உணர்ந்தே சொன்னேன்.
~oOo~
எதிர் பார்வைகள் கிட்டுவது பலனுள்ள விஷயம். அவற்றை அறிவதும், தூண்டுதலைப் பற்றி யோசிப்பதும் நடுநிலையைத் தேட உதவலாம். சார்புடைமை என்பது கெட்ட வார்த்தை இல்லைதான். அதே நேரம் சீர் தூக்குகையில் நடுநிலைமை என்பதைத் தேடுவது பயன் தரும் முறை.
இது ஏதோ நவீனகாலத்துக் கண்டு பிடிப்பும் இல்லை. நடுநிலை என்றவுடன் சமூக நீதி, சமத்துவம், அதிகாரத்தை எதிர்ப்பது என்றெல்லாம் நம் கற்பனை ஓடும்படி நம்மை வார்ப்பாக, பதிப்புகளின் பதிப்பாக, சோடைகளின் ஓடையாக இந்தக் கால கட்டம் ஆக்கி வைத்திருக்கிறது. அப்படி ஒரு தேய்மொழிகளின் வலைக்கண்ணியில் சிக்கி மூச்சுத் திணறாமல் இருக்க முடியும். அதற்குத் தேர்வு என்பது இருக்க வேண்டும். நடுநிலை என்பதும் அவசியம். இரண்டும் வார்ப்புகளின் கையில் சிக்கித் தேய்சொல்லாகி இருக்கிற ‘பகுத்தறிவு’ சார்ந்தவை. வெறும் பகுப்பு என்பதைத் தாண்டி, தொகுத்தும் அறியும் முயற்சியைக் கேட்பவை.
நம் பாரம்பரியத்தில், திருஷ்டிப் பொட்டு அல்லது பரிகாரம் என்று ஒன்று சொல்வார்கள். அது பிரமாதத்தின், அற்புதத்தின், பூரணத்தின் திகட்டலுக்கு ஒரு மாற்று கொடுக்கும் முறை. அல்லது, மானுட எத்தனத்தின் எல்லைகள் அத்தனை தூரம் தள்ளி இல்லை, அருகேயே எப்போதும் நின்று காவல் காக்கின்றன என்பதை நமக்கு உணர்த்தி ஜாக்கிரதைப்படுத்தும் முயற்சி.
அத்புதத்தில் ஆழ்ந்த துய்ப்பு அகந்தையை அழித்திடுமோ என்ற அச்சத்தில் சாமானியருக்கு அதிலொரு காக்கைக் குளியலுடன் வெளித் தப்பும் வாய்ப்புக்கான ஒரு திறப்பு என்று கூட வைத்துக் கொள்ளலாம். அகந்தையையுமே கூடத் துப்புரவாக அழித்தொழிப்பது உதவாது என்ற சூழல் பாதுகாப்புச் சிந்தனை அதில் ஓடுகிறதா என்றும் கேட்கலாம்.
இதெல்லாம் வரலாற்றின் பிரும்மாண்ட/ அற்புத அமைப்புகளைக் குறித்து ஏற்பட்டதாக இருக்கலாம். இவ்விதழின் கட்டுரைகளைக் குறித்து இப்படி ஏதும் தயக்கம் எழத் தேவை இல்லாதிருக்கலாம். இருப்பினும் ‘விமர்சன’க் கட்டுரைகள் இப்படித் தினசரி வாழ்வில் காணக் கிட்டும் மதியிலிடும் கரும்புள்ளியாக, பரிகாரம் போலிருக்கட்டுமே.
ஆரங்களோடு, சாரமும், காரமும் கொடுப்பது ஆரோக்கியமாக இருக்கும்.
~oOo~
மாற்றுப் பார்வையைப் பரிசீலித்த போது கிட்டிய ஒரு சில விமர்சனங்களை நோக்கி இனி இந்தச் சிறுகுறிப்பு செல்லும்.
அ. முத்துலிங்கம் தன் எழுத்துகளில் ஒரு சில உத்திகளையே தொடர்ந்து பயன்படுத்துகிறார்; அவருடைய பல வெளியீடுகளும் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் கதை, கட்டுரை, சுயக் குறிப்பு, பிறருக்கான குறிப்பு என்ற எந்த வகைப்படுத்தலுக்கும் அடங்காதவை;அப்படியே சில வகைப்படுத்தல்களை அவற்றுக்குப் பிறர் கொடுத்தாலும், எழுதுவன எல்லாவற்றிலும், எல்லா வடிவ அமைப்பிலும் ஒரே மாதிரியே எழுதுகிறார்; தட்டையாக இருக்கிறது, வேறுபாடற்ற எழுத்துகள், நுணுக்கமான கவனிப்பு இல்லாமை என்று எல்லாம் வரிசையாகக் குறைபாடுகள் அடுக்கப்பட்டன. இறுதியாக அவர் தொடர்ந்து அனைத்து நிலங்களிலும், களங்களிலும், நிகழ்வுகளிலும் பார்வையாளனாகவே இருந்து பதிவு செய்கிறார். ஈடுபடுதல் என்பதே நிகழாத புனைவு என்ன வகை என்பதாகவும் ஒரு விமர்சனம் இருந்தது. விமர்சனத்தைத் தாண்டி வர அ.மு ஒரு சாகச நாயகராக, ஆயிரம் கோடி ரூபாய் வசூல் கொண்டு வரும் திரைப்படங்கள் சித்திரிக்கும் பாஹுபலியாக ஆகியிருக்கத் தேவைப்படும்.
இந்தக் குறைகள் அனைத்தையும் விலக்கும் வகையில், விளக்கப் பதில் எழுதுவதற்கு நிறைய அவகாசம் தேவைப்படும். சிலவற்றுக்கு உடனடியாகவே அதுவும் பொதுப்படையாகவே பதில் சொல்ல முடியும் என்று தோன்றுவதால் அந்தச் சில விளக்கங்களை இங்கு முயல்கிறேன்.
அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புகளில் எனக்கு ஆழ்ந்த அனுபவம் இல்லாத போதும், மேற்படி குறைபாடுகளைக் காண்பது என்பது இலக்கியத்தின் தன்மை குறித்த புரிதலிலேயே உள்ள குறை என்று தோன்றுவதால் அவற்றைப் பற்றிப் பேச முன் வந்தேன்.
~oOo~
எழுத்தாளர்கள் பல்குரல் மன்னர்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அ.மி அனேகமாக ஒரே குரலில்தான் இலக்கியம் படைத்திருக்கிறார். யாரும் குறையாகக் கருதவில்லை, அதைச் சொல்லி அவருடைய இலக்கியத்தைத் தள்ளி வைக்கவும் முயலவில்லை. கி.ரா கூட அப்படித்தான். தி.ஜா, மௌனி, கு.ப.ரா, ஜெயகாந்தன், என்று பலரும் தன் பாணியே வெளிப்படும் கதைகளையே அனேகமாக எழுதிச் சென்றனர். அ.மு அப்படி ஒரே குரலில் எதிலும் பேசுகிறார் என்றால் அது குறையல்ல, நிறைதான்.
ஆனால் பாத்திரங்களும் கதாசிரியர் போலவே பேசுகிறார்களா என்றால் இந்த எழுத்தாளர்களிடம் அதைப் பார்க்கவியலாது. அதுவுமே ஒரு குறை என்றாகாது. இல்லையேல் இ.பா, சுஜாதா போன்றாரின் நிறைய கதைகளை நாம் ஒதுக்க வேண்டி வரும்.
மாறாக இவர்களிடம் எல்லாம், வருணனை, கதை சொல்லும் முறைகள், நகைச்சுவையை/ அல்லது வேறு சுவைகளைக் கொணரும் விதங்கள் என்று சில மாறாத் தன்மைகள் இருக்கும். அவை உத்திகள் என்று ஒதுக்கப்பட முடியாதவை. அவை ஒருவரின் பாணி. ஒரு எழுத்தாளரின் சுயத்தன்மை வெளிப்படும் விதங்கள். அவரே வெளிப்படுகிறாரா என்றால் அதல்ல இங்கு சொல்லப்படுவது. அவர் உலகைப் பார்த்து விவரிக்கும் முறையில் அவரது ‘தன்மை’ வெளிப்படுகிறது. இந்த வெளிப்பாட்டிலும் எழுத்தாளர்களிடையே ஏராளமான வேறுபாடுகள் உண்டு.
~oOo~
தமக்கெனத் தனி ‘குரல்’ கிட்ட வேண்டுமென்று நிறைய எழுத்தாளர்கள் நிரம்ப முயற்சி செய்து அதை அடைவதாகத்தான் நமக்குத் தெரிய வந்திருக்கிறது. பல குரல்களில் எழுதக் கூடிய எழுத்தாளர்கள் என்று ‘சிறந்த’ எழுத்தாளர்களாக நமக்குத் தெரிய வந்தவர்கள் மிகச் சிலரே. பல குரல் எழுத்தாளர்கள் பொதுவாக, தம் ஆத்ம திருப்திக்காக அப்படியெல்லாம் முயல்வதில்லை, வாசகரை வயப்படுத்தத்தான் அப்படி பல குரல்களில் எழுதிப் பார்ப்பது. சில நேரம் தம் திறமையின் எல்லைகளைச் சோதித்துப் பார்க்கவும் அப்படி எழுதலாம்.
நடாத்தும் கலைஞர்களில் சிலராவது இப்படிப் பல வேடச் சோதனைகளைச் செய்து பார்ப்பதுண்டு. தொலை நிலங்களிலிருந்து நார்மன் விஸ்டம், அலெக் கின்னஸ், பீட்டர் ஸெல்லர்ஸ், எடி மர்ஃபி, பஸ்டர் கீட்டன், லில்லி டாம்லின், மெரில் ஸ்ட்ரீப், டெபொரா கெர் என்று பல நடிக நடிகைகள் இந்த உத்தியைச் செய்து காட்டியதுண்டு. தமிழில் இத்தகைய படங்கள் சிலவாவது உண்டு. [ நவராத்திரி என்றொரு திரைப்படம், பண்டைக் காலத்தது நினைவிருக்கலாம்.]
இவை எல்லாம் அப்படிச் செய்து காட்டும் நபரின் அபாரத் திறமையை நமக்குக் காட்டி வியப்பூட்ட நினைத்தாலும், அதற்கு நாம் நம் ஒத்தாசையைக் கொடுத்தால்தான் அப்படி ஒரு வியப்புணர்வு எழும். அல்லது நாம் தொடர்ந்து அந்த நடிகரின் மூல உருவையேதான் வெவ்வேறு ஒப்பனைகளில் பார்த்துக் கொண்டிருப்போம்.
இன்னொரு தளத்தில், விகடக் (‘மிமிக்ரி’) கலைஞர்கள்தான் பலரைப் போலப் பேசக் கூடியவர்கள். அவர்களை பிரதியெடுப்பவர்கள் என்ற நிலையில்தான் சமுகம் வைத்திருக்கிறது. அகட விகடம் என்பது வஞ்சகப் புகழ்ச்சிச் சொல்லல்லவா?
~oOo~
சிலர் தன்மயமான எழுத்திலேயே சிறப்பாகச் செயல்படுகிறார்கள். சிலர் புறத்தை மட்டுமே கவனித்துக் கொடுத்துச் சிறப்படைகிறார்கள். பலரும் இவற்றின் கலப்பில் பல விகிதாசாரங்களோடு உலவும் நபர்கள். இங்கும் எழுத்தாளர்களின் தன்மைதான் அந்த வகைத் தேர்வுகளைக் கொணர்கிறது. சிலரின் எழுத்தை எத்தனை படித்தாலும் அவர்களுடைய சொந்த வாழ்க்கையின் விவரங்களைப் படைப்பில் காணவியலாது. தன்னை ரகசியமாக வைப்பதில் மிக்க ஆர்வம் கொண்ட பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். (மேற்கிலிருந்து உதாரணம் கொடுப்பது எளிது. ஜே.டி.சாலிஞ்சர் 50களின் எழுத்தாளர். சமீபத்தில் எலினா ஃபெராண்டே என்ற இத்தாலிய எழுத்தாளர் இந்த வகை.) எங்கும் எதிலும் தன்னையே கொடுத்துக் கொண்டிருக்கிற எழுத்தாளர்களைத் தமிழிலேயே நாம் நிறையக் காணலாம். [தேவையற்ற சர்ச்சையை விலக்கும் நோக்கத்தால் அவர்களின் பெயர்களை இங்கு கொடுக்க உத்தேசம் இல்லை. இவர்களில் ’சவ ஊர்வலத்திலும் சரி, திருமணத்திலும் சரி, தானே நாயகனாக இருக்கும்’ ஆசை கொண்டவர்களை நாம் பார்க்க முடியும்.]
எழுத்தாளரின் சுயம் என்ன காபந்து செய்து, ஈயப்பற்று வைத்த குண்டான் டப்பிகளில் அடைத்து வைத்தாலும், கசியும் கதிர்வீச்சுச் சக்தியும், எந்த உலோகத்தையும் அரிக்கும் தீவிரம் கொண்ட அமில குணமும் கொண்ட ஒரு பொருள்.
தூலமாகக் காணப்பட முடியாத ஒன்றை ‘பொருள்’ என்று சொல்வது சரியா என்று கேட்பீர்களே ஆயின், ஆம் என்கிறார் ஒரு கட்டுரையாளர். அவர் ராஜர் பென்ரோஸின் புத்தகம் ஒன்றைப் பரிந்துரைக்கிறார். பென்ரோஸைப் படிக்காவிடினும் அவரின் கட்டுரையையாவது படிக்கலாம். 🙂
தத்துவாளர் பாலகங்காதரா மிகச் சுலபமாக இந்தக் கேள்வியைப் புறப்படுத்தி விடுகிறார். தூல உரு இல்லாத பல, இந்த உலகில் உள்ளன. அவை எல்லாமே ஏதோ ஆவியாக, நம்மை அதிர வைக்கும் விஷயங்களாக இருக்கத் தேவை இல்லை. ஒரு சிறிய எளிய உதாரணம், கணிதம் பயன்படுத்தும் ‘முடிவிலி’ (இன்ஃபினிடி) என்கிற ஒரு கருத்து, கோட்பாடு. இது நாம் பயன்படுத்துகிற அளவில் ஒரு பொருளாகத்தான் இருக்கிறது. அல்லால், இந்தக் கோட்பாட்டை வைத்துக் கொண்டு நாம் செயல்படுத்தும் பற்பல கணிதச் செயல்பாடுகள் தூல உலகில் இயக்கம் பெறுவது எப்படிச் சாத்தியமாகும் என்கிறார் பாலகங்காதரா.
இந்த வாதம் எனக்குப் பிடிக்கிறது என்பதாலேயே எழுத்தாளரின் சுயம் என்பதையும் ஒரு பொருளாகவே நான் காண்கிறேன். [யார் இதை ஒத்துக் கொள்வார் என்பதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டு அல்ல. 🙂 ]
ஆக, எதையும் ஊடுருவும் கதிர் வீச்சு போன்றதும், எதையும் அரிக்கும் கடும் திராவகமும் ஆன சுயம் என்பதைத் திரைகளும், சொல் பசப்புகளும், பூடகக்கதைகளுமா மறைத்து விடும்?
இந்தக் கேள்விக்குப் பதில் சுலபமல்ல. என் அனுபவத்தில், அப்படி நேர்வது சாத்தியம்.
துரதிருஷ்டவசமாகப் பல நேரம் பனிப்புகை மூட்டம் மறைப்பனவற்றை நாம் ஊடுருவி நோக்குவது எளிதே அல்ல. அதற்கு நமக்குக் கதிர்வீச்சில் நெளியும் அலையசைவுகளையே காணும் திறன் வேண்டி இருக்கலாம். அப்போதும் கண் பாவையும், கண் பின் திரையும் பற்றிக் கொடுக்கும் காட்சிப் பொருள் போன்ற துல்லியத்தைப் பெறாது, ஒரு ஊக உருவைத்தான் நாம் பெற முடியும்.
அதே நிலைதான் சுயம் என்பதைப் பற்றுவதற்கும் கிட்டும். எழுத்தாளரின் சுயம் என்பது, அவரே நம் கையில் அள்ளிப் போட்டாலும் நம்மால் அப்படி ஒன்றும் பற்றப்படக் கூடியதல்ல. உண்மையாகப் பார்த்தால் நம்மில் யாருக்கு நம் சுயத்தைப் பிறரிடம் கொடுக்குமளவு வெளிப்பாட்டுத் திறன் இருக்கப் போகிறது? அதுவும் சு.ரா போன்றார் சுயத்தை நோக்குகையில், ஆடை உரித்து அம்மணத்தைப் பற்றவே விரும்புவார்கள். அது இன்னமுமே சிக்கலான முயற்சி. தன் சுயத்தையே அப்படிப் பற்ற முடியாமல் இருப்பதைப் பற்றி விசனப்பட்டுக் கவிதை எழுதினார் பசுவய்யாவாக, சு.ரா. பிறரின் சுயம் என்ன தந்திரத்தில் அவருக்கோ, நமக்கோ கையில் பிடிபடக் கிட்டும்? உன்னை அறி என்று தத்துவ வாதிகளோ, ஆன்மிக வாதிகளோ ஒரு குறிக்கோளை முன்வைக்கக் கூடும். கிட்டாததை அடை என்று சொல்வதில் இவர்களுக்கு எப்போதுமே ஓர் ஆனந்தம். சாதாரணனான எனக்கு இப்படி எல்லாம் பேராசைகள் இல்லை. அ.மு. இப்படி எல்லாம் எதையும் சொல்லி நம்மைத் தொல்லை செய்பவராகத் தெரியவில்லை. தன் சுயத்தை அவர் எல்லாக் கதைகளிலும் தெரிவிக்கிறார், ஆனால் அதன் சிறு விளிம்புகளும், குறைச் சில்லுகளும்தான் நமக்குத் தெரிகின்றன என்பது பலரின் வாசிப்பனுபவமாகத் தெரிகிறது. விமர்சனம் என்னவோ அவருடைய சுயமே எங்கும் வியாபிக்கிறது என்று சொல்கிறது. சுயோதனப் பார்வையா என்று தோன்றுகிறது.
நாம் புறத்தை அனுபவிக்கும் விதங்களிலும், அதைப் பிறருக்குப் புரிய வைக்கும் முறையிலும் நம் சுயம் ஓரளவே வெளிப்படும். ஆனால் அதுவே நாம் அல்ல. அது நம்மில் ஒரு பகுதிதான். இந்தச் சுயமும், காலப்போக்கிலும், நம் அனுபவங்களின் தாக்கத்தாலும், நம் விருப்பு வெறுப்புகளின் இயல்புகள் மாறுவதாலும், நாம் உலகைப் பார்க்கும் முறையே மாற நேர்வதாலும் எல்லாம் பாதிக்கப்படாமல் இருக்க வாய்ப்பில்லை. அ.முத்துலிங்கத்திடமும் இந்தக் காலப் போக்கின் மாறுதல்கள் புலப்படாமல் இருக்க வாய்ப்பு குறைவு. சில பத்தாண்டுகள் முந்தைய அ.மு இன்னமும் அப்படியே இருந்தால்தான் நாம் குறை சொல்ல முற்படலாம். இன்று அன்று எழுதியதைப் போல எழுதவில்லை என்றால் அது நல்ல வகை மாறுதல்தான். ஏனெனில் 80களைப் போன்றதல்ல 90கள். ‘00 கள் இன்னுமே குழப்படி. ‘10கள் என்ன வகைப் பெரும் குழப்பமான காலம் என்பதை நான் சொல்லி வாசகர்கள் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை. அ.மு வின் உரைநடையும், கருப்பொருட்களும் இந்தக் குழப்பங்களைப் பிரதிபலிக்கின்றன, அப்பிரதிபலிப்பிலும் அவர் தன் முத்திரையை, தன் தனிப்பார்வையைக் கொடுக்கிறார் என்றால் அதைத்தான் நாம் நல்லதோர் எழுத்தாளரிடம் எதிர்பார்க்கிறோம்.
இப்படி நேர ஒரு முக்கியக் காரணம், அவர் முற்றிலும் புறவயமாக, பிறரைக் கேளிக்கைக்கு ஆளாக்க வேண்டும் என்ற நோக்கங்களால் மட்டுமெ செலுத்தப்படும் வகை எழுத்தாளர் அல்ல. அந்த வித எழுத்தாளர்களுக்கும், தம் அனுபவ உலகைப் பகுத்துத் தொகுத்துச் சித்திரிக்க வேண்டும் என்ற நோக்கத்தால் செலுத்தப்படும் எழுத்தாளர்களுக்கும், இன்னும் இந்த இரு முனைகளுக்கு இடைப்பட்ட நிலையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கலாம், இருக்கும்.
அ.முத்துலிங்கம் தம் அனுபவங்களால் செலுத்தப்பட்டு, அவற்றிலிருந்து தாம் பெறும் உலகப் பார்வையை- பழைய இந்திய/ தமிழ் அழகியல் சொற்களில் சொல்வதானால், தரிசனத்தை- வாசகர்களுக்குக் கைமாற்றிக் கொடுக்க முயலும் ஒரு எழுத்தாளர் என்பது அவரது பற்பல புத்தகங்களைப் படித்தவர்கள் தொடர்ந்து சொல்வது. இது நான் சொல்வது கூட இல்லை, அவர் எழுத்துகளை நிறையப் படித்திருக்கிற பலர் சொல்வது. எனவே இது என் தன்மயப் பார்வையால் சாதிக்கப்படும் ஒரு கூற்றல்ல. அப்படிச் சொல்வாரின் பல கட்டுரைகளே இந்த இதழில் நிரம்பியுள்ளன. அவர் எதை எழுதினாலும் மாற்றங்களற்ற விதமாகவே கொடுக்கிறார் என்று குறை சொல்லல் பொருந்தாது என்பது உடனே புரியலாம்.
~oOo~
உருவத்துச் சோதனை செய்வது என்பது ஒரு தேர்வு. அது முடிகிற எழுத்தாளர்கள் அப்படிச் செய்ய முற்படாதவர்களை விட மேம்பட்டவர்கள் என்றெல்லாம் பாகுபடுத்தல் முடியாது. இலக்கியம் ஏதோ ஓட்டப் பந்தயம் இல்லை, அல்லது பனிச்சறுக்கல் போட்டியும் இல்லை. பின்னதில் உயர எழுந்து மூன்று சுற்றுச் சக்கர வட்டம் போட்டு, கீழிறங்கித் தரையில் சறுக்கலைத் தொடர்வது அவசியம் என்றால், நான்கு ஐந்து சுற்றுச் சுற்றுவோர் சாதனை செய்தவர்களாகக் கருதப்படுவார். அப்படி ஏதும் சாதனை பற்றிய தீர்மானங்கள் கொள்ள முன் நிபந்தனைகள் அற்றது இலக்கிய அரங்கம்.
பல வகையான எழுத்தை முயலும் எழுத்தாளர்கள் கூட மிகச் சிலரே. இதற்குக் காரணங்களெனப் பலவற்றைச் சொல்லலாம். ஒன்று, தாம் பல காலம் முயன்று அடைந்த ஒரு சிறப்புத் தன்மையைச் சிதற விட அனேகருக்கு மனம் ஒப்பாது. பல வகை எழுத்தை முயல ஒரு சோதனை மனோபாவமோ, விளையாட்டுத்தனமோ, புதிர்களை விடுவிப்பதில் ஈடுபடுவதில் விருப்பமோ கொண்டவர்களாக அந்த எழுத்தாளர்கள் இருக்க வேண்டி வரலாம். நேராகக் கதை சொல்வதே புதிர் விடுவிப்புதான் என்றிருக்கையில் அதை மேன்மேலும் சிக்கலாக்கிக் கொள்வதில் என்ன பயன் என்றுதான் பலருக்கும் தோன்ற வாய்ப்பு அதிகம்.
தவிர, புனைவு- அபுனைவு என்பனவற்றிடையே உள்ள கடும் பிரிவைச் சமீபத்திய மேலை இலக்கியப் போக்கு மறுத்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் மேற்கில் எது உண்மை, எது பொய் என்பதைப் பிரிப்பதில் கூட நிறைய மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாமே கட்டுடைப்பில் பொய்மை என்று காட்ட முடியும் என்று சொல்லத் துவங்கிய ஃப்ரெஞ்சு ‘சிந்தனை’யாளர்களுக்கே எல்லாப் புகழும் சென்று சேரும். இதை ஆதவன் என்றோ கதையாக எழுதி விட்டாரே என்று உலகே தமிழ் மையம் என்று சொல்ல விரும்பும் சிந்தனையாளர்கள் – அல்லது தமிழே உலக மையம் என்று சொல்ல விரும்புவோர்?- சொல்ல முடியும் என்றாலும் அவருடைய ஜாதியை உத்தேசித்து அப்படி எல்லாம் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து விட மாட்டார்கள் என்று ஊகிக்கிறேன். 🙂
[ஆமாம், இதுவும் கட்டுடைப்புதான்.ஆதவனுக்கு மூலகர்த்தா எர்விங் காஃப்மேன் என்கிற சமூக உளவியலாளர் என்றும் மேற்கின் அபிமானிகள் சொல்லக் கூடும். அது வேறு விஷயம். நாம் புனைவிலக்கியம் பற்றிப் பேசுவதனால் ஆதவனைச் சொன்னேன்.
காயமே இது பொய்யடா என்று எப்போதோ ஒரு சித்தர் சொன்னாரே என்று தடாலடியாகப் போட்டுடைக்கவும் முடியலாம். ]
20 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதி வரை இலக்கியத்தில் நிலவிய இந்தக் கடும்பிரிவைச் சமீபத்தில் உடைத்துப் புகழ் பெற்று வரும் இரு நபர்களின் பெயர் எனக்கு உடனே நினைவு வருகிறது. இருவரையும் பற்றிச் சொல்வனத்தில் பிரசுரித்திருக்கிறோம். ஜெஃப் டையர், ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச் என்ற இருவர் அந்த எழுத்தாளர்கள்.
[அலெக்ஸியெவிச் பற்றி நியுயார்க்கர் எழுதியது]
இந்த மாறுதல்களைப் பற்றித் தெரிந்தால் அ.முவின் கதைகளை நம் தமிழ் வாசக விமர்சகர்கள் வேறெப்படிப் பார்ப்பார் என்று தெரியவில்லை. [இதே குறிப்பை இந்த இதழில் பிரசுரமாகி உள்ள ஜே.கே வின் விமர்சனத்துக்கும் பொருத்திப் பார்க்கலாம். ]
~oOo~
சிறப்பிதழ் என்றால் புகழாரம்தான் சூட்ட வேண்டும் என்றில்லை என்பது எனக்கும் ஏற்புடைய கருத்துதான். ஃபெஸ்ட்ஷ்ரிஃப்ட் (Festschrift) என்னும் வகைப் புத்தகங்கள் இப்படித்தான் தொகுக்கப்படுகின்றன என்று நினைக்கிறேன். மாற்றுக் கருத்துகளும் ஓரளவு விமர்சனமும் கொண்டுதான் அவை விளங்கும். இந்த ழ்ஜான்ரவையும் (வகை இலக்கியத்தையும்) விமர்சித்து ஒரு கட்டுரை இங்கே. இதில் உற்பத்தி நியாயங்கள், முறைகள், வியாபார வாய்ப்புகளையும் சேர்த்து நோக்கி இருக்கிறார் எழுதியவர் என்பது இதன் சிறப்பு.
~oOo~
இறுதியாகச் சில கருத்துகள்
மெச்சும் ஒரு கட்டுரையில் அந்தக் கட்டுரையாளர் சொன்னதை இங்கு சாரமாகத் தருகிறேன். அ.முத்துலிங்கத்தின் கதைகளில், எந்த நிலத்திலும் எந்த நாட்டிலும் வசிக்கும் மக்களிடையே உள்ள பொதுப் பண்புகள் வெளிச்சம் பெறுகின்றன என்று ஒரு பாராட்டு கிட்டுகிறது. இதையே குறையாகவும் ஒரு விமர்சகர் சொன்னார். பொதுப் பண்புகளைக் கொண்டாடுவது ஓர் அரசியல் என்றும் சிலர் கருதக் கூடும். அது தார்மிக நெறி என்று பண்டை இந்தியப் பண்பாடு போதிக்கிறது. தாம் இந்தியர் அல்ல என்று வெட்டி வைப்பதையே விரும்பும் தமிழ் தேசியர்கள் கூட, விசித்திரமான வகையில், ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று தமிழர்தான் ‘முதலில்’ சொன்னார்கள் என்றும் கொண்டாடுவார்கள். தம் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க இயலாதவர்கள். தம் சிந்தையை எங்கே வைத்துச் சோதிக்கப் போகிறார்கள்? பல நாடுகளிடையே ஊடாடிய ஒருவருக்கு இந்தப் பொதுப்பண்புகளைக் கொண்டாடத் தோன்றுவது மிக இயல்பானதே. எதிரிடையாகச் செயல்பட்டவர்களே உலகச் சரித்திரத்தின் கொடுங்கோலர்களாக பல நூறாண்டுகள் உலவினார்கள். மொத்த யூரோப்பியமுமே இதைத்தான் பல நூறாண்டுகள் செய்தது. அதன் கோர தாண்டவத்தின் விளைவுகளைத்தான் பற்பல ஆசிய, ஆஃப்ரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகள் இன்னும் கடக்கப் பெருமுயற்சி செய்து தவிப்புடன் முற்பட்டு வருகின்றன. அ.முத்துலிங்கத்தின் வேர் நாடான இலங்கையுமே இந்தக் கோர தாண்டவம் விதைத்துப் போன விஷ வித்தின் விளைவைத்தான் சந்தித்தது. அதுதான் இவரைக் கனடாவிற்குப் புலம் பெயர வைத்தது. மேன்மேலும் அதே பிளவை, மாற்றார் எனவே பன்னாட்டினரையும் காணும் குரோதம் இவரிடம் இல்லை என்பதை நாம் கொண்டாட வேண்டாமா?
இன்னும் சில பண்புகளாக, இவர் சொல்வது, எந்த ஊரில் அ.மு சென்றிருந்தாலும் அதற்கு நம் ஊரிலிருந்து சென்ற வழிகாட்டியைப் போல நமக்கு உதவுகிறார் என்பதும், எந்தக் குரூரத்தை உலகில் பார்த்தாலும், அதன் சித்திரிப்பு நம்மை அழித்து, மனச் சோர்வில் ஆழ்த்த விடாத வகையிலேயே அ.மு கொடுக்கிறார் என்பதும். வாசகர்கள் வாழ்வின் இயங்குகதியிலும், சீர் நிலைமையை அடைய அதுவும், அதன் இயக்க சக்திகளான மனிதர்களும் தொடர்ந்து முயலவே செய்வர் என்ற எதிர்பார்ப்பிலும் தம் நம்பிக்கையை வேரூன்றி வைக்கச் செய்ய அ.மு முயல்கிறார் என்று நான் எடுத்துக் கொள்கிறேன். வேரற்ற நாடோடியாக வாழும் எனக்கு புலம் பெயர்ந்த ஒரு கதைசொல்லி இதைச் செய்வதில் எந்த வியப்பும் எழவில்லை. அதற்கு மாறாக நம்பிக்கையின்மையைப் பரப்ப அவர் முயன்றிருந்தால்தான் நான் அதிசயித்திருப்பேன்.