அ.முத்துலிங்கம்: காலம் வழங்கிய கொடை

அ.முத்துலிங்கம் கதைகள் படிப்பதற்கு அலாதியானவை. அவர் கதைகளின் மிகப்பெரிய சிறப்பம்சம் அயர்ச்சியோ சலிப்போ ஏற்படாத வகையில் நாம் அவற்றைப் படிக்க முடியும் என்பதுதான். அவரது சரளமான நடையில் நாம் தங்குதடையின்றி சறுக்கி விளையாடலாம்.  நகைச்சுவை அவரது பலம். அவரது எந்தக் கதையையும் சிறு புன்னகை கூட வராமல் நாம் படிக்கவே முடியாது. அதனால்தான் ஜெயமோகன், “அ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. ‘இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே” என்கிறார்.

நாவல்களை விரும்பிப் படிக்கும் பலரும் சிறுகதைகளை விரும்புவதில்லை. இலக்கை நோக்கிய பயணத்தைவிடவும் இலக்கின்றிய பயணங்கள் சுவாரஸ்யமானவை. எனவேதான் ஒற்றை முடிச்சைக் கொண்டு நகரும் சிறுகதைகளை பலரும் விரும்பிப் படிப்பதில்லை. ஆனால் அ.முத்துலிங்கத்தின் கதைகள் இதற்கு மாறானவை. அவர் கதைகள் படிப்பதற்கு சுவாரஸ்யமானவை. எனவே யாரும் அவர் கதைகளை விரும்பிப் படிக்க முடியும். கல்கி, சுஜாதா இருவருக்குப் பிறகு வாசிப்பை சுவாரஸ்யமாக்கியவர் அ.முத்துலிங்கமே என்று ஜெயமோகன் குறிப்பிடுவது அதனால்தான்.

வேறு யார் கதைகளையம் விடவும், அ.முத்துலிங்கத்தின்  கதைகளினூடே பயணிப்பவர் ஓர் அற்புதமான வாசிப்பனுவத்தைப் பெறமுடியும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். அவர் கதைகள் நூற்றுக்கு நூறு உத்தரவாதமானவை என்பதை அவரது இரண்டொரு கதைகளை வாசிப்பவர்களே கண்டுகொள்ள முடியும். இலக்கியத்திற்கு காலம் வழங்கிய கொடை அ,முத்துலிங்கம் என்று துணிந்து கூறலாம். அவர் கதைகள் ஒவ்வொன்றையும் குறித்து ஒரு நீண்ட கட்டுரையே எழுத முடியும். அந்த அளவிற்கு அவர் கதைகள் வாசிப்போர் உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்துக் கூடியவை. அவர் கதைகளில் ஒரு சில கதைகளைப் பற்றி மட்டுமே இங்கு சொல்கிறேன். இந்தக் கதைகள் அவர் கதைகளில் முத்துக்களென ஒளிர்பவை. இந்தக் கதைகளை நாம் படித்து இன்புறலாம்; பரவசம் அடையலாம்; வியப்பு எய்தலாம்; நம்மை நாம் கண்டு கொள்ளலாம்.

அ.முத்தலிங்கத்தின் அக்கா சிறுகதையைப் பற்றிச் சொல்லும்பொது, “ஒரு படைப்பில் குழந்தைமையின் பார்வை வழியாக ஒரு சமூகக் கொடுமை அல்லது சமூக அவலம் அல்லது குடும்ப அவலங்கள் விவரிக்கப்படும்போது கூடுதலான அழுத்தத்தோடு அவை மனதில் பதிகின்றன. கம்ச வதமும், பூதணையின் வதமும், காளிங்க நடனமும், அபிமன்யு மரணமும், இரணிய வத விவரிப்பும் காலம் காலமாக நம் மனத்தில் பதிந்து கிடப்பதற்குக் காரணம், அவ்விவரிப்புகளின் ஒரு விளிம்பில் குழந்தைகள் இடம்பெறுவதுதான்” என்று  பாவண்ணன் சுட்டுவது நுட்பமான பார்வை. கூர்ந்து நோக்கினால் அ.முத்துலிங்கத்தின் பல கதைகளில் குழந்தைகள் வருவதைக் காண முடியும். அதனாலேயே அக்கதைகள் அழுத்தமும், ஆழமும் கொள்கின்றன என்பதை நாம் உணரலாம்.

கடவுச்சொல்

மாறிவரும் மனித வாழ்க்கையில் முதியோரின் பங்கு என்ன என்பதை, மிகச் சுருக்கமாக மட்டுமின்றி அழுத்தமாக, தனக்கேயான பாணியில் கடவுச்சொல் கதையைப் படைத்திருக்கிறார் முத்துலிங்கம். பலரும் பலவிதமாக இந்தக் கதையை அணுகலாம். ஆனால் முத்துலிங்கம் கதைக்கு சூட்டியிருக்கும் தலைப்பு மிக முக்கியமானது. அதையொட்டி இந்தக் கதையை வாசிக்கும் போதுதான் இந்தக் கதையின் அழகும், வீச்சும் புலப்படும்.

காதல் திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மகளின் வீட்டில் இருக்கும் சிவபாக்கியம், மகள் தன்மீது அதிருப்தி கொண்டதால், முதியோர் காப்பகத்திற்கு அனுப்பப்படுகிறார். ஐந்து வருடங்களாக மகளும் அங்கே வந்து அவரைப் பார்க்கவில்லை.  அளவுக்கு அதிகமான வசதிகளும், தேவைகளும் கொண்ட அந்தக் காப்பகத்தில் சிவபாக்கியத்துக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனாலும் அவரால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. இந்நிலையில், 9 வயதில் விட்டுவிட்டு வந்த அவர் பேரன் ஆப்பிரஹாம், 14 வயதில் அன்று அவர் எதிரே வந்து நிற்கிறான். இருவரும் சந்தோஷமாக அன்றைய தினத்தைக் கழிக்கிறார்கள். அதன் பிறகு அவன் அங்கிருந்து தன் வீட்டிற்குச் செல்கிறான்.

மகளுக்கு சிவபாக்கியத்தின் மீது ஏன் அதிருப்தி ஏற்பட்டது என்பதை சில சம்பவங்களின் மூலம் விளக்குகிறார் முத்துலிங்கம். உண்மையில் யோசிக்கும்போது அந்த சம்பவங்கள் சிவபாக்கியத்தின் மீது அதிருப்தி கொள்ள போதுமானவை அல்ல என்றே சொல்லலாம். அப்படியிருந்தும் அவரது மகள் உள்ளத்தில் சதா இருந்துகொண்டிருக்கும் பய உணர்வின் காரணமாக, நடக்கும் சம்பவங்களை, தனது தாய் மீதான வெறுப்புக்கு ஆதாரமாக மாற்றிக்கொள்கிறாள். தனது சிறுவயதில் அவளது தாய் பிறரது வீட்டில் வேலைசெய்தது அவள் உள்ளத்தில் பசுமையாக பதிந்துவிடுகிறது. எனவே தாயைக் காரணமாக வைத்து, தனது காதல் திருமணத்தில் விரிசல் வந்துவிடுமோ என அஞ்சுகிறாள். ’அம்மா, நீங்கள் முழங்காலில் உட்கார்ந்து இன்னொருவர் வீட்டு தரையை துடைப்பதுதான் என் சிறுவயது ஞாபகம். அந்த நிலை எனக்கு வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.’ என்றும் ‘அம்மா, உனக்கு அறிவு கெட்டுப் போச்சா? எங்கள் வீட்டை நாசமாக்க வந்தாயா?’ என்றும் எல்லோர் முன்னிலையிலும் அவள் கத்துவதும் அவளுள் உறையும் அச்சத்தினால்தான்.

ஆக கணவனுக்கும் சரி, மனைவியிக்கும் சரி, திருமணத்திற்குப் பின் தங்களது தாய்-தந்தையரால் தங்கள் வாழ்க்கைக்கு குந்தகம் வந்துவிடுமோ என்ற அச்சம் இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாக குடும்பங்களில் நிலவுகிறது. அதன் அடிப்படைக் காரணம் தலைமுறை இடைவெளி என்ற சிக்கல் இன்று பூதாகராமாக வளர்ந்திருப்பதும், அந்த இடைவளியை இயல்பானது என்று எடுத்துக்கொள்ளத் தவறுவதும்தான். அந்த இடைவெளியை பெற்றோர்களின் மூடத்தனம் என்பதாக எடுத்துக்கொண்டு, அதனால் தாங்கள் பாதிக்கப்பட்டுவிடுவோம் என்று கணவன் மனைவிகள் அஞ்சுகிறார்கள். எனவே முதியோர்கள் புறக்கணிக்கப்பட்டு, காப்பகங்களில் சேர்க்கப்படுவது அதிகரித்து வருகிறது. கலாச்சாரங்கள் வேறுபடும்போது இந்தச் சிக்கல் மேலும் அதிகரிக்கிறது. அதுவே இங்கு சிவபாக்கியத்திற்கு நிகழ்கிறது.

சிவபாக்கியத்தின் மகள், கடந்த ஐந்து வருடங்களாக அவரை நேரில் வந்து பார்க்கவில்லை என்பதும், ஆனால் அவரது பேரன் அவரைப் பார்க்க வருகிறான் என்பதும் நுட்பமாக கவனிக்க வேண்டியவை. ஏனெனில் மகனுக்கும் தாய்-தந்தைக்குமிடையே ஏற்படும் இடைவெளியை பேரன் அவனது தாத்தா-பாட்டியிடம் நிறைவு செய்து கொள்கிறான். கணவன்-மனைவி இருவரும் தங்கள் தாய்-தந்தையரிடையே ஏற்படும் இடைவெளியை நிரப்ப திராணியற்றவர்களாகும் போது, தங்கள் குழந்தைகளுக்கிடையேயும் அந்த இடைவெளியைக் காண்கிறார்கள். ஆனால் அந்த இடைவெளியை மிகச் சுலபமாக சரிசெய்ய அந்தக் குழந்தைகளின் தாத்தா-பாட்டியால் முடிகிறது. இதுவே ஆப்பிரஹாமை அவனது பாட்டியிடம் கொண்டு சேர்க்கிறது.

ஆப்பிரஹாம் தனது பாட்டியை அன்பின் காரணமாக பார்க்க வந்தானா அல்லது தேவையின் பொருட்டு வந்தானா என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளும் போது இந்தக் கதை நம்முள் நிகழ்த்தும் பாய்ச்சல் அபாரமானது. ஏதேதோ சம்பவங்கள் சிவபாக்கியத்தை காப்பகத்தில் கொண்டு சேர்த்திருந்தாலும், உச்சமாக நடந்தது, சிவபாக்கியம் ஆப்பிரஹாமுக்கு இறால் உணவைக் கொடுத்தாள் என்பதுதான். யூதர்களுக்கு இறால் தள்ளிவைக்கப்பட்ட உணவு என்பதால், ’எங்கள் குடும்பத்தை பிரிப்பதற்குத்தான் நீ வந்திருக்கிறாய். உன்னைப்போல என்னையும் வெகு சீக்கிரத்தில் வீடு கூட்ட வைத்துவிடுவாய்’ என்று கத்துகிறாள் மகள். இப்போது தனது பாட்டியைத் தேடி வரும் ஆப்பிரஹாம், இறால் செய்து தரும்படி கேட்டு விரும்பிச் சாப்பிடுகிறான்! தனது தாய்-தந்தையருக்குத் தெரியாமல் பாட்டியைப் பார்க்க வந்திருக்கிறான்!

பாவமன்னிப்பு கோரி தனது அப்பாவும் அம்மாவும் கோயிலுக்குப் போயிருக்கும் நேரத்தில் ஆப்பிரஹாம் தனது பாட்டியைப் பார்க்க வருகிறான். அவன் உள்ளத்தில் பாட்டியைத் தனியாக விட்டுவிட்டோம் என்ற குற்ற உணர்வு எழுந்ததால் பாட்டியைப் பார்க்க வந்திருக்கிறான் எனக்கொண்டால், நம்முள் முந்திய மனப்பாய்ச்சலுக்கும் முற்றிலும் மாறான வேறோர் பாய்ச்சல் நிகழ்கிறது! முதியோர்களை காப்பகத்தில் தவிக்கவிட்டுவிட்டு, பாவத்தை நீக்க கோயிலுக்குச் சென்றால், எந்த தெய்வமாவது மன்னிப்பு வழங்குமா என்ன? ஆனால் மனிதர்கள் தாங்கள் செய்வது அனைத்தையும் செய்துகொண்டுதான் இருப்பார்கள் ஆனால் தெய்வம் மட்டும் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்! எத்தகைய மனிதர்கள் நாம்! செய்யக்கூடாததை செய்யாமல் விட்டாலே தெய்வம் அவர்களைக் கடைத்தேற்றி விடாதா என்ன?

சிவபாக்கியத்துக்கு எந்தக் குறையையும் அவளது மகள் வைக்கவில்லை என்பது உண்மைதான் என்றாலும், கிளியைக் கூண்டில் அடைத்து பாலும் பழமும் கொடுத்து என்ன புண்ணியம்? கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக மட்டுமின்றி, புறக்கணிக்கப்பட்டவளாகவும் தன்னை சிவபாக்கியம் உணர்வதே அவளை அதிகமும் வேதனையில் ஆழ்த்துகிறது. கடவுச்சொல்லை நாம் பாதுகாப்பாக, பத்திரமாக வைத்திருப்போம் ஆனால் அதை யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டோம். தேவைப்படும் போது மட்டுமே அதைப் பயன்படுத்துவோம். அதே போன்ற ஒரு நிலையில்தான் சிவபாக்கியம் இருக்கிறாள். மனிதர்கள், குறிப்பாக முதியோர்கள் கடவுச்சொல்லாக மட்டுமே பயன்படுத்தப்படும் அவலத்தை முத்துலிங்கம் இந்தக் கதையில் மிகச்சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

எந்த இரு உறவிலும் இடைவெளி ஏற்படுவதற்குப் பெரிதும் காரணமாக இருப்பது மற்றவர்கள்தான் என்பதை இந்தக் கதை ஒருவகையில் நமக்குப் புரியவைக்கிறது.

தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில்

அ.முத்துலிங்கத்தின் தில்லை அம்பலப் பிள்ளையார் கோயில் என்ற கதையை வாசித்து முடித்ததும் அந்தக் கதை என்னை வெகுவாகக் கவரவில்லை. ஏதோ சிவாஜி படத்தில் வரும் காட்சி ஒன்றின் பிரதியாகவே எனக்குப் பட்டது. ஆனால் படித்து முடித்த பின்னரும் என் ஆழ் மனதில் கதை ஓடிக்கொண்டே இருந்தது. இது வெறும் சாதாரணக் கதைதானா? இல்லை இதில் உள்ள நுட்பங்கள் எனக்குப் பிடிபடவில்லையா? என்ற யோசனையாக இருந்தது. கதையின் காட்சிகளை ஒவ்வொன்றாக மனத்திரையில் ஓடவிட்டுப் பார்த்தேன். அப்போது வியப்பு ஏற்பட்டது. கதையின் நுட்பமான பல விசயங்கள் புலப்பட்டன. கதையின் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதற்கான பதிலாக நான் அறிந்ததை கடைசியில் சொல்கிறேன். கதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது:

எங்கள் வேலைக்காரச் சிறுமி ஓடிவிட்டாள். நான் சிறுவனாக இருந்தபோது நடந்த மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்று.

கதைசொல்லியும் அவன் தம்பியும் தவிர, மூன்றாவதாக அந்த வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. அது தில்லை அம்பலப் பிள்ளையாரை வேண்டியதால் பிறந்த குழந்தையாகையால் அதற்கு நேர்த்திக் கடன் செய்வதற்குச் செல்லும் வேளையில்தான் வேலைக்காரச் சிறுமி ஓடிவிடுகிறாள். அவள் இல்லாமல் வீட்டு வேலைகளை யார் செய்வது? பாத்திர பண்டங்களை யார் துலக்குவது? ஆனால் தெய்வாதீனமாக அவள் கிடைத்துவிடுகிறாள். எனவே கோயிலுக்கு செல்வது உறுதியாகிறது. இதனால் பள்ளிக்கூடத்திற்கு ஒரு நாள் மட்டம் போடும் சந்தோஷம் கதைசொல்லிக்குக் ஏற்படுகிறது. அந்தக் குழந்தை ஒரு கறுப்புப் புழு என்பதாகவே கதைசொல்லி அதை அருவருப்பாகப் பார்க்கிறான். தன் தம்பி எப்போதும் மார்பிள் வைத்து விளைாடுவதும், தனக்கு அதை அவன் தராததும் அவனுக்கு எரிச்சலாக இருக்கிறது.

ஒருவழியாக எல்லோரும் கோயிலுக்கு கிளம்புகிறார்கள். ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த தன் தம்பியை எழுப்பிவிட்டு வரும்போது நீ உட்கார்ந்துகொள் என்கிறான். கோயிலில் ஒரு சிறுமி நாயுடன் விளையாடுவதைப் பார்க்கிறான் அது அவளது கெண்டைக் காலைக் கடிக்கும் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறான். ஆனால் அந்தச் சிறுமியின் தந்தை நாயை விரட்டியதால் அவனது அந்தக் குட்டி சந்தோஷம் கெட்டுப்போகிறது. என்னசெய்வது என்று புரியாமல் அவன் பொன்னியிடம் செல்கிறான். ‘பொன்னி இனி எப்ப நீ ஓடப்போகிறாய்?’ என்று கேட்கிறான். அவள் முறைக்கவே, மேற்கொண்டு என்னசெய்வது என்று தெரியாமல், அந்தப் பகல் பொழுது வீணாவதாக அவன் நினைக்கிறான்.

அப்போது மார்பிளை வைத்து அவன்போக்கில் விளையாடிக் கொண்டிருந்த தம்பியை உனக்கு ஒரு அருமையான இடம் காட்டுகிறேன் என்று குளத்திற்கு அழைத்துச் செல்கிறான். அப்போது மார்பிள்களை தன் அண்ணனுக்குக் கொடுத்து, இனி அதைத் திருப்பிக் கேட்கமாட்டேன் என்கிறான். குளத்தில் இறங்கிப் பார்க்க ஆசைப்பட்ட அவன் தம்பி, எதிர்பாராமல் குளத்தில் மூழ்கிப் போகிறான். அதைப் பார்த்து கதைசொல்லி ஒன்றும் செய்யாதவனாக, அவனுக்கு கையை நீட்டி உதவக்கூட முயலாதவனாக, வட்டவட்ட குமிழிகள் எழுவதை புதினமாகப் பார்த்தவாறு நிற்கிறான். அங்கிருந்து திரும்பும்போது உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தான் யாருக்கும் சொல்லவில்லை என்பதாகவும், தன் தம்பியை ஜன்னல் ஓரத்தில் உட்கார தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்பதாகவும், கதைசொல்லி நினைப்பதாகக் கதை முடிகிறது.

கதையின் ஆரம்பம் முதல் கடைசிவரை மனித மனத்தை ஊடுருவி பார்க்கும் நுட்பத்தை வெளிப்படுத்தியவாறே கதையைச் செலுத்தும் முத்துலிங்கத்தின் எழுத்தாற்றல் நம்மை வியக்கவைப்பது. கதையின நோக்கம் வேலைக்காரச் சிறுமி பொன்னி ஓடிப் போவதுதானா என்றால் இல்லை. அப்படியிருக்க, தன் வாழ்வில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவமாக கதைசொல்லி இதைச் சொல்வானேன்? எந்த ஒரு மனிதனும் தான் மோசமானவன் என்று ஒப்புக்கொள்வதில்லை. தன்னைப் பிறருக்கு நல்லவனாகக் காட்டிக் கொள்ளவே அனைவரும் விரும்புகிறார்கள். எனவேதான் கதைசொல்லியும் முக்கியமானதை, தான் செய்த மிகப்பெரிய குற்றத்தை விட்டுவிட்டு அவள் ஓடிப்போனதை மறக்க முடியாத ஒன்றாகச் சொல்லி கதையை ஆரம்பிக்கிறான். மேலும் அவள் கிடைக்காமல் இருந்திருந்தால் நாங்கள் கோயிலுக்குச் சென்றிருக்க முடியாது, நானும் அவ்வாறு செய்திருக்க மாட்டேன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவே அவன் இவ்வாறு கதையைத் தொடங்குகிறானோ என ஊகிக்க இடமிருக்கிறது. ஏனென்றால் வேலைக்காரச் சிறுமிக்கு கதையில் எந்தப் பெரும் பங்கும் இல்லை. அவள் இல்லாமலேயே கதையைச் சொல்லமுடியும்.

இரண்டாவதாக, கதை நெடுகிலும் கதைசொல்லியின் குணாம்சத்தை நுட்பமாக நமக்கு உணர்த்தியபடியே கதையை நகர்த்துகிறார் முத்துலிங்கம். தன் வீட்டில் பிறந்த குழந்தையை கறுப்புப் புழுவாகப் பார்ப்பதும், தன் தம்பி தனக்கு விளையாட மார்பிள்கள் கொடுக்காதது எரிச்சலை ஏற்படுத்துவதும், காரில் அவன் ஜன்னலோர சீட்டை பிடித்தபோது கோபப்படுவதும், கோயிலில் சிறுமி ஒருத்தியை நாய் கடிக்கவேண்டும் என ஆசைப்படுவதும், பொன்னியை நீ எப்போது ஓடப்போகிறாய் என்று கேட்பதும் ஆகிய அனைத்துமே கதைசொல்லியின் மனோபாவத்தையே பிரதிபலிக்கிறது. அவனது குரூரம், கோபம் ஆகியவை மெல்ல மெல்ல வளர்ந்து கடைசியில் அதன் உச்சத்திற்குச் சென்று, அவன் தம்பி குளத்தில் விழுந்ததை வேடிக்கை பார்ப்பதில் சென்று முடிகிறது. கதையின் முடிவில் வரும் வாக்கியமும் முக்கியமானதாக நான் கருதுகிறேன். அந்த முடிவான வாக்கியம், தான் காரில் ஜன்னலருகே உட்கார்ந்து வரும்பொருட்டே, தன் தம்பியின் இழப்பை அவன் விரும்பினானோ என்ற தொனியை உள்ளடக்கி இருக்கிறது.

இறுதியாக கதையின் தலைப்புக்கு வருவோம். கதைக்கு வேறு தலைப்பு வைக்க முடியாமல் முத்துலிங்கம் இந்தத் தலைப்பை வைத்தாரா இல்லை ஏதாவது பொருள்பட தலைப்பு வைத்தாரா? எப்படி இருந்தபோதும், சும்மா இருந்தவர்களை கோயிலுக்கு அழைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்திக் காட்டியதில் கடவுளின் பங்கு என்ன? ஒருவேளை கதைசொல்லியின் இயல்பை அம்பலப் பிள்ளையார் அம்பலப்படுத்துவதாலா? இதன் மூலம் கடவுள் ஒவ்வொரு மனிதனையும் அவனுக்கே அடையாளம் காட்ட விரும்புகிறாரா? இக்கேள்விகளோடு இன்னும் பல கேள்விகளை நம்மிடம் எழுப்பும் முகமாகவே இத்தலைப்பு சூட்டப்பட்டதாக அறிகிறேன். இது அவரவர் அனுபவத்திற்கேற்ப மேலும் விரிவு கொள்ளும் என்பது நிச்சயம்.

ஆக, இந்தக் கதை ஒரு நல்ல கதை. அது நாம் கதையை அணுகும் விதத்திலேயே இருக்கிறது. முத்துலிங்கத்திடம் அவ்வப்போது வெளிப்படும், நம்மை அதிரச் சிரிக்க வைக்காமல் புன்னகைக்க வைக்கும், மெல்லிய நகைச்சுவையும், ‘திடீரென்று அந்த அறையில் இருந்த காற்றை யாரோ அகற்றிவிட்டார்கள்’ போன்ற வாக்கியங்களின் அழகும் நம் மனதைக் கவரக்கூடியவை. மேலும் இந்தக் கதை சிறுகதைக்கான அம்சமான முடிவை நோக்கி நகரவில்லை மாறாக நம்மை வாசிப்பின் பல இடைவெளிகளில் புகுந்து சஞ்சரிக்கும்படி செய்திருக்கிறார் முத்துலிங்கம்.

ஒட்டகம்

நம் மனதை அழுத்திக்கொண்டிருக்கும் சிறிய விசயங்கள், பல பெரிய விசயங்களில் தவறான முடிவை எடுக்க உந்துதலாக அமைந்துவிடுகின்றன. தினமும் நாம் எதிர்கொள்ளும் அந்த விசயங்கள் தரும் அனுபவங்களின் அளவுகடந்த வெறுப்பு நம் மனதில் ஏற்படுத்திவிட்ட வடுவின் விளைவாக, அப்போது அதிலிருந்து தாற்காலிகமாகத் தப்பித்தால் போதும் என்று தோன்றுவதால், நாம் அத்தகைய முடிவுகளை எடுத்துவிடுகிறோம். இத்தகைய சிக்கல், பல சமயம் அவன் வாழும் சமூகத்தில் எடுக்கப்படும் சில தவறான முடிவுகளால் ஏற்படுகிறது. அது அவனை பாதிப்படையச் செய்கிறது. இன்று மினசாரப் பற்றாக்குறை காரணமாக அணுஉலை வேண்டும் என்கிறோம். ஆனால் நாளை அதுவே வாழ்க்கையை சீர்குலைக்கும் நாசகார சக்தியாகலாம். எனவே ஒரு சமூகத்தை பாதிக்கும் முடிவுகளில் நாளை பற்றிய முடிவுகளை இன்று தீர்மானிப்பது நம் தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் நாம் தீர்க்க தரிசனத்துடன் நடந்துகொள்வது நல்லது. இல்லையேல் சமூகத்தின் முடிவுகள் தனிமனிதனை பாதிப்பதிலிருந்து காப்பாற்ற முடியாது.

இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள அ.முத்துலிங்கத்தின் ஒட்டகம் கதை சேமாலியா நாட்டில் நடக்கிறது. அங்கே நிலவும் கொடுமையான தண்ணிர் கஷ்டத்தில் தவிக்கும் மைமுன் என்ற இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது. மைமுன் தினமும் அதிகாலையில் எழுந்து பதினாறு மைல் தூரம் நடந்து தண்ணீர் கொண்டுவருகிறாள். அந்தக் காரியம் அவளை மிகவும் சோர்வடைய வைக்கிறது. ஐ.நா. சிறகம் அவர்கள் ஊருக்கு வந்து என்ன வசதி வேண்டும் என்று கேட்டபோது பெண்கள் ஆழ்துழாய் கிணறு வேண்டுமென்கிறார்கள். ஊர்த் தலைவரான அவள் தகப்பனார், “மசூதியைக் கட்டித்தா மீதியை அல்லா பார்த்துக்கொள்வார்” என்று சொல்கிறார். அவ்வளவு நிதியை ஒதுக்க முடியாத ஐ.நா. சிறகம் இதனால் பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுகிறது.

இந்நிலையில் தினமும் தண்ணீர் எடுக்கவரும் அவளை அலிசாலா விரும்புகிறான். அவளோ பக்கத்து ஊரைச்சேர்ந்த ஐம்பது வயது கிழவனை மணக்கச் சம்மதிக்கிறாள். திருமணமும் நடக்கிறது. ஊருக்கு போகும்போது அவள் அழுகிறாள். விருப்பப்பட்டுத்தானே திருமணம் செய்துகொண்டாய் இப்போது ஏன் அழுகிறாய் என்று அவள் தாயார் காரணம் தெரியாமல் கேட்கிறாள். அதற்கு அவள், “பக்கத்து ஊரில் தண்ணீர் குடம் குடமாக வருகிறதாம். பதினாறு மைல் நடக்கத்தேவையில்லையாம். அதனால் இந்தத் திருமணத்திற்கு சம்மதித்தேன்” என்று சொல்கிறாள்.

இந்தக் கதைக்கும் ஒட்டகம் என்ற தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்? ஒட்டகம் பல நாள் தண்ணீர் அருந்தாமல் வாழக்கூடிய ஒரு பிராணி. தேவையான போது தண்ணீரை மொத்தமாகக் குடித்துக்கொள்ளும். அதே போல் மைமுன், தன் வாழ்க்கை முழுமைக்குமான தண்ணீரை இந்தத் திருமணத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறாள். தினமும் தேவைப்படும் தண்ணீரைப் பற்றிய கவலையைவிட இது எவ்வளவோ மேல் என்று அவளுக்குத் தோன்றிவிடுகிறது. மேலும் ஒட்டகம் முள்ளை விரும்பிச் சாப்பிடும். அதுபோல் அவளும் அந்தக் கிழவனுடடான திருமணத்தை, முள்ளாக இருந்தபோதிலும், விரும்பி ஏற்றுக்கொள்கிறாள்.

பூமாதேவி

அமெரிக்காவில் நியூஜேர்சியில் தங்கியிருக்கும் தன் மகளைப் பார்க்க நியூயார்க்கிலிருந்து வருகிறார் அவரது தந்தை. இருவரும் அவளது நண்பனின் பிறந்தநாளை முன்னிட்டு அவனைப் பார்க்க காரில் பயணிக்கிறார்கள். அமெரிக்காவில் தன் ஆரம்ப கால வாழ்க்கையை தன் மகளின் தற்போதைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு, தன்னைவிட அவளது வாழ்க்கை மேம்பட்டதாக இருப்பதாக அறிகிறார் அவர்.

தன் வாழ்க்கையில் அப்போது கிடைத்துவந்த ஒரே ஆறுதல் தன் நாலு வயது மகளுடன் சலவைக்கூடத்தில் மெசினில் துணிகளைத் துவைக்கச் செல்லும் நேரம்தான். அந்த தருணங்களில் அவருக்கும் அவள் மகளுக்குமிடையேயான நெருக்கம் அவருக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் தந்திருக்கிறது. அந்த சலவை செய்யும் மெசினுக்கு பூமாதேவி என்று பெயர் சூட்டுகிறார்கள். ஒரு முறை அங்கே தொலைந்துபோன அவளது காலுறை மீண்டும் திரும்பக்கிடைக்கிறது. இதனால் இருவருக்குமிடையே பூமாதேவி முக்கியமாகிறது. கார் தற்போது அதே சலவைக்கூடத்தின் வழியாக செல்கிறது. அப்போது அவர் உற்சாகமாக, “அதோ பூமாதேவி” என்று கத்துகிறார். அவர் மகளோ புரியாதவளாக என்ன என்பதுபோல் அவரைப் பார்க்கிறாள்.

வாழக்கைப் பயணத்தில் நாம் பிரதானமாகக் கருதிய பல விசயங்கள் வளர்ந்ததும் நமக்குச் சாதாரணமாகவும் அந்நியமாகவும் போய்விடுகின்றன என்பதை இந்தக் கதை அற்புதமாகச் சொல்கிறது. நம் வாழ்வில் நம்மை மகிழ்வித்த பலவற்றை நாம் பின்னாளில் மறந்துவிடுகிறோம். நம்மை வளர்த்து ஆளாக்கிய சூழ்நிலைகள் தற்போது வேண்டாதவையாகவும் சுவாரஸ்யமற்றதாகவும் ஆகிவிடுகிறது. இங்கே பூமாதேவி எனப்படும் சலவை மெசின் ஒரு குறியீடு. சலவை மெசின் எப்படி துணிகளின் அழுக்கை நீக்கி பளபளப்பாக்கியதும் நாம் எடுத்து அணிந்து மகிழ்கிறோமோ அப்படியே வாழ்க்கையில் நமக்கு முக்கியமாகத் தெரிந்த பலவும் காலமாற்றத்தில் மாறிப்போகிறது. நம் வாழ்க்கை வேகமாக பணம் என்ற ஒற்றை குறிக்கோளை நோக்கி விரைந்துசெல்கிறது. அதில் வேறு எதற்கும் இடம் இருப்பதில்லை.

முத்துலிங்கத்தின் சரளமான நடையும், மொழியும் இக்கதைக்கு அழகு சேர்க்கிறது. ஆங்காங்கே தென்படும் அவரது நகைச்சுவையான நடை அலாதியானது. தன் மகள் கார் சீட்டின் பெல்ட்டை அணிவதை ராமன் வில்லை எடுத்து முறித்ததோடு ஒப்பிட்டு, இன்றை இளைஞர்கள் வேகமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறார். ஆனால், தாய் நாட்டையும், இங்கே ஆற்றவேண்டிய பணிகளையும் அவர்கள் மறந்துபோவதும், வாழ்க்கையின் வசதிகளையே பிரதானமாகக் கருதும் அவர்களின் மனப்போக்கையும் விவேகமற்றதாக இக்கதையில் சுட்டிச்செல்கிறார்.

ராகுகாலம்:

மனிதனுக்கு தான் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கிறது. தான் தொட்டது அனைத்தும் துலங்கவேண்டும் என்ற விருப்பம் இருப்பதில் தவறில்லை. ஆனால் செய்யும் காரியங்கள் தவறாகிவிடுமோ என்ற ஐயம் அவனை பல விசயங்களில் அலைக்கழித்து வருகிறது. கால நேரம் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற எண்ணம் அவனிடத்தில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. தன் காரியங்களில் விளைவை அதைச் செய்யும்போதே தீர்மானித்துவிட வேண்டும் என்பது அவனது தர்க்க அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் அதை யோசனை செய்யும் நிலையில் அவன் இல்லை.

எனவே ஜோசியமும், கால நேரமும் அவனை வெகுவாக ஆட்டிப்படைக்கிறது. தான் என்னவேண்டுமானாலும் தவறுதலாகச் செய்யினும் காலமும் நேரமும் தன்னைக் காப்பாற்றவேண்டும் என அவன் நினைப்பது விசித்திரமாக இருக்கிறது. தன்னை தன் காரியங்களை நடத்திச்செல்ல இப்படி ஏதாகினும் ஒரு பற்றுதல் அவனுக்கு அவசியமாகிறது. உண்மையில் அவற்றால் எந்த அளவிற்கு தான் நினைத்தது நடந்துள்ளது, அல்லது எந்த அளவிற்கு நினைத்தது நடக்காமல் போயிருக்கிறது என்பதை சிந்திக்கும் நிலையில் அவன் இல்லை.

உலகம் முழுமைக்கும் இந்த எண்ணம் அவரவர் காலாச்சாரத்துக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப மாறுபடுகிறது. மாறபடுகிறது என்பதோடல்லாமல், பல நாட்கள் பழகிய அவற்றில் நம்பிக்கை இழந்து, அடுத்த காலச்சாரத்தின் மீதும் அவர்கள் நம்பிக்கைகள் மீதும் பற்றுதல் ஏற்படுகிறது. நம் கடவுள் மீது நம்பிக்கை இழந்து அடுத்த கடவுள் மீது வரும் நம்பிக்கை போன்றதுதான் இது. ஒரு அயல்நாட்டவன் ஒருவன் நம் காலநேரம், ராகு காலம் பற்றியவற்றில் நம்பிக்கை கொண்டு பின்பற்றுவதால் ஏற்படும் விளைவை தனக்கேயான நகைச்சுவை மிளிர ராகுகாலம் கதையில் விவரிக்கிறார் அ.முத்துலிங்கம்.

தொடக்கம்

பறவையின் முடிவைத் தீர்மானித்தது யார்? நிறுவனத்தின் முடிவைத் தீர்மானித்தது யார்? தொடக்க உரை எப்படி இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானித்தவர் யார்? என்ற மூன்று கேள்விகள் இந்தக் கதையில் எழுப்பப் படுகிறது. ஆனால் மூன்றிலுமே அவரவர்கள் ஒன்றைத் தீர்மானித்துக் கொண்டு செய்ய, அது வேறொன்றாக முடிந்து போகிறது. எனவே, ஒரு செயலின் முடிவு என்பது நம் கையில் இல்லை. அந்தச் செயலைச் செய்யத்தான் நமக்கு உரிமை இருக்கிறதே அல்லாமல் அதன் விளைவை நாம் கட்டுப்படுத்த முடியாது. யாரோ ஒருவரால் நாம் அனைவரும் இயக்கப்படுகிறோம். இந்தப் பிரபஞ்சம் என்ற பெருவெளியில் நம்மை ஆடவிட்டு, ஓடவிட்டு கைப்பாவைகளாக்கி விளையாடுவது கடவுள் என்ற மாயாவிதான். ஆகவே, இந்த உலகில் நான் செய்கிறேன் என்று எதுவுமே இல்லை மாறாக அவன் செய்கிறான் என்ற ஒன்றுதான் இருக்கிறது என்பதையே இந்தக் கதை நமக்குக் காட்டுகிறது.

அ.முத்துலிங்கத்தின் இச்சிறுகதையை அழகான கதையாகச் சொல்லலாம். கதையின் தொடக்கத்தில் வரும் உயர்ந்த கட்டிடம், முழுதும் கண்ணாடி ஜன்னல்கள் போன்ற விவரணைகள் நம்மை ஈர்ப்பவை. உலகத்தை ராஜ்ஜியம் ஆள்வது, நட்சத்திரங்களுக்கிடையே வானத்தில் மிதப்பது போன்ற வாக்கியங்கள் நம் கற்பனையைப் பறக்கவிடுபவை. கதை சாதாரணமான கதைதான். ஆனால் முத்துலிங்கம் அதைச் சொல்லும் விதத்தால் சுவாரஸ்யமான, அழகான ஒரு கதையாக இதைச் செய்திருக்கிறார். ஏதோ ஒரு இனம்புரியாத ஒரு கவர்ச்சி இந்தக் கதையில் இருக்கிறது. அதுவே இந்தக் கதையை ஒரு நல்ல கதையாக நமக்குக் காட்டுகிறது.

அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகள் குறித்து உமாஷக்தி ஒரு அழகான, அற்புதமான கருத்தைச் சொல்லி இந்த கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமானது. “இத்தொகுப்பை வாசித்த சில மணித்துளிகள் வேறு எதுவும் செய்ய ஏலாமல் திகைத்துக் கிடக்கிறேன். கதைகளைச் சுற்றியே மனம் அலைந்து திரிகிறது. ரசனை மிகுந்த வரிகள், எள்ளல் கலந்த நடை, வாழ்வின் அபத்தங்களும் அற்புதங்களும் அருமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்க ஆகச் சிறந்த வாசிப்பனுபவத்தை ஒவ்வொரு கதையும் அள்ளி அள்ளித் தருகின்றது. கதைகளைக் கொஞ்ச முடியுமா? முடிகிறது. அ.மு.வின் கதைகளை வாரி எடுத்து உள்ளங்கையில் பத்திரப்படுத்துகிறேன்” என்று அவர் சொல்வது எத்தனை எத்தனை சத்தியமான வார்த்தை என்பதை அ.முத்துலிங்கத்தின் கதைகளை வாசிக்கும் ஒவ்வொருவரும் கண்டுகொள்ள முடியும்.

வானில் மிதந்துகொண்டே மண்ணை நுட்பமாக காணும் பார்வையை அ.முத்துலிங்கத்தின் கதைகள் நமக்குத் தருகின்றன. அ.முத்துலிங்கத்தின் கதைகளை வாசிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வேறென்ன சொல்ல?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.