அ.முத்துலிங்கம் தற்கால தமிழ் சிறுகதையாளர்களில் முக்கியமானவர் ஆவதற்கு காரணம் அவரது கதைக்களங்களில் விளங்கும் தனித்துவமும் அதை அவர் சொல்லும் நேர்த்தியும். அயல்நாடுவாழ் தமிழரான இவர் தனது அனுபவத்தை தமிழில் தருகிறார். அதை தமிழ்ப்படுத்துவதில்லை. ஒரு ரயில் சிநேகிதன் போல இலங்கைத் தமிழில் சொல்லிக்கொண்டு போகும் கதையாடல் அவருடையது. உலகின் எந்தப் பகுதிக்கு போனாலும் எங்கும் மனிதம் தென்படுவதை இவரது கதைகளில் காண முடிகிறது. எளிமையும் சற்று வித்யாசமான தகவல் செறிவுகளும், இடையிடையே – சாப்பிட்டு கை கழுவி விட்டு ஈர விரல்களை சுண்டி நீர்ச்சாரலை குழந்தைகள் முகத்தில் தெறிப்பது போல – ஒரு அன்யோன்யமான நகைச்சுவையும் விரவியது இவர் கதைகள் பலவும்.
மேலும் அயலகத்தில் இருந்து கொண்டு தமிழில் எழுதும் சிலருள் இவரும் ஒருவர். பல நாடுகளுக்கு பயணித்து பணி புரிந்தவர் என்பதால் பிற மொழி ஆசிரியர்களை படிப்பதும் சந்திப்பதும் பேசுவதற்குமான வாய்ப்புகள் இவருக்கு அதிகம். இத்தகு அனுபவங்களின் செறிவை இவர் எழுத்தாக ஆக்கும்போது நமக்கு லாபங்கள் நிறைய உண்டு.

இவரது கட்டுரைகளிலும் கதைகளிலும் தகவல்கள் ஒரு பிரதான அம்சம். ஒரே கொத்தில் கிளைத்துச் செறிவுறும் கொன்றைப் பூக்கள் போல தகவல்கள் இவரது கதைகளில் பூத்திருக்கும். ஒரு கதையில் அக்கால புத்த பிட்சுக்கள் பள்ளிக்கால சீடர்களின் ஆற்றல் பற்றி சொல்லும்போது – ஒரு புத்தகத்தை விரித்து அதன் மேல் ஒரு ஊசியால் ஆழமாக குத்தினால் அது பல பக்கங்களை ஊடுருவிப் போகும். அப்படி அது துளைக்கும் இடங்களில் என்ன வார்த்தை இருக்கும் என்று அந்த புத்தகத்தை வாசித்தவனுக்கு தெரியும் என்று ஒரு ‘திடுக்’ கை சொல்வார். (அ.மு கதைகளில் தகவல்கள் என்று ஆராய்ச்சிக் கட்டுரை யாராவது எழுதி இருக்கிறார்களா என்று விசாரிக்கவேண்டும்.)
‘யானைப்படிகள்’ என்ற இவரது ஒரு கட்டுரை மிகச்சிறப்பாக இருக்கும். ஒரு அவதானிப்பை பழந்தகவலோடு ஒப்பிட்டு சொல்லும்போது சொல்லில் விளக்க இயலா ஏதோ ஒரு உணர்தல் நம்மை நிரடிவிட்டுப் போகும். இதில் வரும் பெண்மணி ஒரு சதாவதானி போல. ஆனால் அந்த திறன் மிகச்சாதாரண பலன்களுக்காக உபயோகம் ஆவதும் அது யாராலும் அறியப்படக் கூட இல்லாததையும் தினசரி வாழ்க்கையின் சாதாரணங்களில் அடித்துக் கொண்டு போவதையும் காண முடியும். ஒரு பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்கும்போது மின்னணு ரசீது போடும்போது பொருளின் மேல் மெல்லிய வரிகளால் ஒட்டப்பட்ட பார் கோடு இருக்கும். பார்கோடு ரீடர் முன் அதை வைத்தால் அதை இயந்திரம் படித்து அதற்கான எண்ணை கண்டு அதற்கான விலையை திரையில் காட்டும். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அடையாள எண். .
பத்தாயிரத்துக்கும் மேலான பொருட்கள் அங்கிருக்கும். ஒரு முறை ஒரு குறிப்பிட்ட பொருளின் மேல் உள்ள கோடுகளை படிக்க இயந்திரத்தால் இயலாமல் போகும்போது அந்த பெண்மணி அந்த பொருள் என்ன என்று கேட்டு பொருளுக்கான பார்கோடு ‘எண்ணை’ சொல்லுவார். அப்போது விலை திரையில் தெரியும். பொருள் வாங்கப்பட்டுவிடும். கதை சொல்லி அந்த பெண்மணியிடம் ஆச்சரியமாக போய் கேட்பார். தான் நீண்டகாலம் இங்கே பணி புரிவதாயும் ஏறக்குறைய எல்லா பொருளின் எண்ணையும் தான் மனனமாகவே அறிந்திருப்பதாயும் சொல்லுவார். நமக்கு ஆச்சரியம் விரியும். ஒரு சாதாரண பணிப்பெண்ணுக்கு இருக்கும் மிகப் பெரிய நினைவாற்றல். எழுபதுகளில்தான் இவ்வகை பார்கோடு முறை அறிமுகம் ஆனது என்று ஒரு தகவலும் இடையே வந்து போகும். பிறகு கையில் செல்போன் இருக்கும் ஒரு சிறுமியிடம் உலகின் எல்லா தகவல்களும் இருப்பதைகுறிப்பிடுவார்.
ஆனால் கட்டுரையை இங்கு வேறு ஒருபுள்ளிக்கு நகர்த்துவார். தான் சென்ற ஒரு வரலாற்று புராதனமான சுற்றுலா இடத்தைப் பற்றி விவரிப்பார். அதில் கோட்டைக்கு மேலே செல்ல கருங்கற்களால் அமைக்கப்பட்ட மிகப் பெரிய படிகள் இருக்கும். நாம் நான்கு அடிகள் வைத்து ஒரு படியில் நடந்துதான் அடுத்த படியை தொட முடியும். இவ்வளவு அகலமும் உயரமுமாக ஏறுவதற்கு சிரமமாக உள்ள படிகளை பற்றி விளக்குவார். இவ்வளவு உறுதியும் நேர்த்தியும் உடைய படிகள் ஒரு காலத்தில் அரசர் (அக்பர் என்று நினைவு ) யானையின் மீது அமர்ந்தபடியே மேலே செல்வதற்காக அமைக்கப்பட்டவை என்று சொல்வார். தகவல்கள் இன்று எளிதாக கிடைத்துவிடுகின்றன. நாம் அதை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதே முக்கியம். மனிதனின் அறிவு முன்னேற்றம் இப்படி யானைப் படி போல இருப்பதாக சொல்லி இருக்கும் அவரது கட்டுரையில் எனக்கு கிடைத்தது வேறு ஒரு மின்மினி.
ஒரு சிறந்த விஷயம் தற்போது வெறும் அடையாளமாக ஆகிப்போனதையும் அதன் உபயோகமின்மையையும் சொல்லும்போது அந்த பெண்மணியின் நினைவாற்றலையும் யானைப்படிகளையும் ஒரு தொடர்புக்குள் வைத்து நம்மால் புரிந்துகொள்ள முடியும். கட்டுரையை முடிக்கும்போது அதன் சாதக பாதகம் உபயோகம் உபயோகமின்மை என்ற விவாதத்தில் செல்லாமல் மனம் திகைத்து நிற்கும். இத்தகைய திகைப்புகளை உருவாக்குவதில்தான் இவர் வெற்றி பெறுகிறார் என்று தோன்றுகிறது.
அக்கா என்ற இவரது சிறுகதையில் ஒரு சிறுவன் தனது அக்காவிடம் இருந்த நாட்கள் அவளது திருமணக் கனவு, பெண் பார்த்தால், மாப்பிள்ளையின் உருவம், அக்கா அதை கண்டு நாணம் கொள்ளுதல், என்னவோ காரணத்தால் நின்றுபோதல் – என பலவும் இருக்கும். ஒரு இடத்தில் கூட அந்த வயதுக்கு மீறிய பேச்சோ விஷயமோ சொல்லப்பட்டிருக்காது. ஆனால் நம்மால் அதை கிரகித்துவிட முடியும். இப்படியான நளினமான சாமர்த்தியங்களும் இவரது எழுத்துக்களில் காணமுடியும்.
பல விஷயங்களில் அறிவின் கண் மூடப்பட்டு இருக்கவேண்டும். மனதின் கண் மட்டுமே திறந்திருக்க வேண்டும். அப்படியான ஒரு அனுபவத்தை இவரது பல கதைகள் கொண்டிருப்பவை. பொம்மையுடன் திரும்பிப் பார்த்தபடி செல்லும் அவரது கதையில் வந்த அந்த குழந்தை எனக்குள் இன்னும் இருக்கிறாள்.
மயானப் பராமரிப்பாளன் என்பது அந்தக் கதை. பல நாடுகளுக்குப் பயணம் செய்வோருக்கு பகல் இரவு குழப்பமும் நீண்ட பணம் செல்வோருக்கு ஒரு நாளே கண்ணுக்கு முன்னாலே காணாமல் போகும் அனுபவமும் இருக்கும். இதை ஒரு உறவின் உணர்வின் மேலேற்றி சொல்லும் மிக நல்லதொரு கதை.
விமான நிலையத்தில் ஒருவருடைய நடப்பு கிடைக்கிறது. தனது சிறு மகளுடன் காத்திருக்கும் அவர் குழந்தையை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு செல்லும் சில நிமிடங்களில் அந்த குழந்தையிடம் பேசும்போது அவள் தன் அம்மாவை காண ஆஸ்திரேலிய செல்வதாகவும் இனி திரும்பி வர மாட்டாள் என்றும் சொல்கிறாள். ஏன் அப்பா உடன் வரவில்லை என்பதற்கு அப்பாவின் கல்லறை இங்கேதான் இருக்கு என்கிறாள். அப்போது மகளுக்கு ஒரு பொம்மையை வாங்கிக்கொண்டு வருகிறார் அப்பா. குழந்தைக்கு அது மிக பிடித்திருக்கிறது. தான் வாங்க விரும்பிய பொம்மை என்று சந்தோசப்படுகிறது.
அறிமுகமாகி பேசிக்கொள்ளும்போது நீதி மன்ற உத்தரவின் பேரில் குழந்தையை அதன் அம்மாவிடம் விட்டுவர போவதாயும் சொன்னவர் தனது மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதையும், திட்டமிட்டு அதை செய்ததையும் சொல்கிறார். அவரிடம் வருத்தங்கள் இல்லை. மயானத்தின் கல்லறைகளை சுத்தம் செய்யும் வேலையை 20 ஆட்களை வைத்து தான் கவனித்து வருவதாய் சொல்லும் அவர், நடைப் பயிற்சிக்கு சென்ற தன் மனைவியை காணவில்லை என போலீசுக்கு போகிறார். பிறகு தெரிகிறது படுக்கையில் அவரது உடைகள், காலணிகள் காணவில்லை. பிறகு அவரது வங்கியில் இருந்து பணத்தை காணவில்லை. மட்டுமின்றி பல கடன் அட்டைகளில் இருந்து பணம் எடுக்கப் படுகிறது. அட்டையை ரத்து செய்தாலும் புது அட்டை பெறப்பட்டு பணம் எடுக்கப் படுகிறது. அனைத்தையும் கட்டுகிறார். விவாக ரத்து செய்வதற்காக அவளுக்காக வாதாடிய வக்கீலுக்கு கட்டணத்தைக் கூட இவர்தான் கட்டுகிறார். தற்போது கூட அவளை விரும்புவதாகவே சொல்கிறார். என்னிடம் எப்போதும் பிணவாடை வருவதாக மனைவி சொல்லுவார் என்பதை புகார்களின்றி சாதாரணமாக சொல்கிறார். என் மகள் தன் அம்மாவிடம் நன்றாகவே வளர்வார் என்று நம்பிக்கை கொள்வார்.
அந்த சிறுமிக்கு பிரிவின் தீவிரம் தெரியாத வயது. இந்த கதை ஆரம்பிக்கும்போதே மேற்கு நோக்கி பயணிக்கும் ஒருவர் பயணத்தில் ஒரு நாளை இழந்துவிடும் நாட்களின் கணக்கீடு பற்றி சொல்லி ஆரம்பிக்கிறது. உலகைச் சுற்றி 80 நாள் என்ற கதையின் நாயகன் பிலியஸ் கணக்குப்படி 79 -நாட்களில் சுற்றி முடித்துவிட்டார். மெகல்லன் ஒரு நாள் கூடுதலாக தனது கணக்கில் சேர்க்கவேண்டி இருந்தது. சர்வதேச தேதிக்கோடான கிரீன்விச் இடத்தை தாண்டும்போது உண்டாகும் குழப்பம் என்பதை சொல்லி இருப்பார். அந்த நகரில் தினமும் ஒரு மணிக்கு கருப்பு பந்து ஒன்று உயரத்தில் இருந்து போடப்படும். அதை பார்ப்பதற்கு சுற்றுலா பயணிகள் கூடுவர் எனும் தகவலையும் சொல்லி இருப்பார். அந்த கோட்டை தாண்டும்போது விமானத்தில் அறிவிக்கும்போது பேசிக்கொண்டு உடன்வருபவர் தூங்கி இருப்பார்.
இறங்கும் நேரம் வந்து விடும் சிறுமி தந்தை இருவரும் இறங்கிவிடுவார்கள். நடக்கும்போது சிறுமிக்கும் தந்தைக்கும் ஒரு சின்ன வாதம் நடக்கும். வெள்ளிக்கிழமை கிளம்பினோம். இப்போது அடுத்தநாள் ஞாயிற்றுக் கிழமை என்கிறாய். சனிக்கிழமை என்ன ஆனது? என்னோடு சனிக்கிழமையும் இருப்பாய் என்றுதானே சொன்னாய் நீ பொய் சொல்லி இருக்கிறாய் என்று வாதிடுகிறாள். நிரந்தரமாக மகளிடம் இருந்து பிரியும் நொடியில் தான் பொய் சொல்லிவிட்டேன் என்ற எண்ணத்தோடு குழந்தை பிரியக்கூடாது என்று ஆதங்கப் படுகிறார். ஆனால் அந்த சனிக்கிழமை எங்கே என்று எப்படி அவளுக்கு விளங்கும்படி அவரால் சொல்ல முடியும் ? நான் பொய் சொல்லவில்லை. பெரியவளான பிறகு நீயே புரிந்து கொள்வாய் என்கிறார்.
அவர் அவளிடம் சொல்வார் “அந்த சனிக்கிழமை உனக்கு எப்போதும் கிடைக்காது”. இந்த வரி நமக்குள் உண்டாகும் சலனங்கள் வித்தியாசமானவை. அந்த சனிக்கிழமை என்பது ஒரு நாள் அல்ல. நழுவிப்போன ஒரு உறவு. உணர்வு.பந்தம். அல்லது ஏதோ ஒன்று. ஒரு சிறுமிக்கு அந்த சனிக்கிழமையை பற்றி எப்படி விவரிக்க முடியாதோ அப்படித்தான் நம் வாழ்விலும் நாம் அறிவுபூர்வமாக ஒத்துக்கொள்ளும் பலவற்றுள் ஏதோ ஒன்று சுவடுகள் இல்லாமல் கண்முன்னே நழுவிப் போகிறது. அது உணர்வுபூர்வமான ஏதோ ஒன்று. அவை விவரணைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. அகப்படாத ஒன்று.
அப்போது விளம்பர நடிகை போல நவநாகரீகமான ஒரு பெண் நடந்து வருகிறாள். அவள்தான் அம்மா. கணவனும் மனைவியும் ஹலோ என்று ஒரு சொல்தான் சொல்லிக் கொள்கிறார்கள். மயானப் பராமரிப்பாளரான அப்பா ஒரு விரலால் குழந்தையின் முதுகில் தொட்டு முன்னே தள்ளுகிறார். அது அம்மாவிடம் போகிறது. பொம்மையை எடுத்துக்கொண்டு நடந்து சென்று திரும்பி பார்க்கிறது. பிறகு இவரிடம் ஓடிவந்து பொம்மையை கொடுத்து வைத்துக் கொள்ளச் சொல்கிறது. அதற்கு சனிக்கிழமை என்று பெயர் வைத்து அவள் நினைவாக வைத்துக்கொள்வதாக அப்பா சொல்கிறார். குழந்தை பதில் பேசவில்லை. ஒரு அமெரிக்கக் குழந்தை ஆம் என்று சொல்வதற்கு எப்படி தலை அசைக்குமோ அப்படி தலைஅசைத்தது என்று கதை முடிகிறது.
கணவன் மனைவி உறவுகளில் பொருளாதார ரீதியான எதிர்ப்பார்ப்புகள், அதற்கு குழந்தைகள் பலியாவது, அன்பு செலுத்துவதையும் முறிவதையும் ஏற்றுக்கொண்டு வாழ முயலும் தந்தை, குழந்தை மேலுள்ள அன்பு, போன பிறகும் இவரது பணத்தை சுவீகரிப்பதாக அபகரிக்கும் அந்த மனைவி என பலவும் நம்மை சங்கடப் படுத்திக்கொண்டே இருக்கிறது. இந்த கதையில் மனைவியிடம் வருத்தம் இல்லையா என்று கேட்கும்போது மனதை விட்டு அகலாத வரியை முத்துலிங்கம் எழுதுகிறார். ‘ ஓடும் தண்ணீரில் முகம் பார்க்க முடியாது’.
தொடர்ந்து சொல்கிறார். நான் புதைக்கும் பிணங்கள் சில கூட்டம் இல்லாமல் வெறுமனே புதைக்கப்படும். அவற்றையும் பிறவற்றைப் போலவே சமமாகவே பாவிக்கிறேன். இல்லாதவர்கள் எல்லாம் இங்கு சமம் எனும்போது இருப்பவர்கள் எல்லாருமே சமம்தான் என்கிறார். மனைவியை இன்னுமா நேசிக்கிறீர்கள் எனும்போது நேசிப்பதற்கு காரணங்கள் தேவையில்லை நண்பரே என்கிறார். இந்த வரியின் மூலமாக இந்த கதையை வேறு ஒரு கோணத்தில் மறுபடியும் வாசிக்கலாம். இறப்பை தினமும் சந்திக்கும் ஒருவருக்கு உயிரோடு இருத்தல் என்பதன் சாதாரணத்துவம் மற்றும் அதன் மேல் ஏற்றி வைக்கப் படும் அன்பு தேவை பாசம் போன்றவையும் எவ்வாறு தெரிகிறது என்று பார்த்தால் இந்த கதை வேறொரு அனுபவத் தளத்தில் விரிகிறது. இதில் நமக்குள் மினுங்கும் ஒரு அகப்பார்வையில் , நாடுகள் எனும் எல்லைகளை தாண்டி மனிதம் எனும் மிகப் பெரிய ஓவியத்தாளில் தூரிகையின் சிறு தீற்றல் போல இந்தக் கதை இருக்கிறது.
கதைகளின் தனித்துவம் என்பது அதன் பேசுபொருள் களம் மற்றும் வாசிப்பவரின் பார்வை இவற்றுக்கிடையேயான ஒத்திசைவை பொறுத்தது. அவ்வகையில் இவரது களங்கள் நாம் பொதுவாக கண்டிருப்பவை அல்ல.போர், மேற்கத்தைய கலாச்சரம், வாழ்வு முறை, காதல், பிரிவு, மணம், மணமுறிவு, இச்சைப்படி வாழும் முறை உள்ளிட்ட பலவும் அடங்கியவை. ஆகவே அங்கு நிலவும் அவர்களுக்கான சாதாரண ஒரு விஷயம் கூட நமக்கு புதிதாய் வியப்பாய் வித்தியாசமாய் இருக்கக்கூடும். அப்படியெனில் இவரது எழுத்துக்களை எந்த இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும்? வேறு வகையில் சொல்வதானால் இவரது எழுத்து எழுதப்பட்ட களத்தில் உள்ளவர்களுக்கு சாதாரண கதையாக இருந்துவிடுமா ? இதற்கான விடையை அவரை வாசிப்பவர்கள் மட்டுமே கண்டு கொள்ள முடியும். அதே சமயத்தில் இப்படியான வகை கேள்விக்கு உட்படுத்த முடியும்படியான தமிழ் எழுத்தாளர்கள் நம்மிடம் மிக அதிகம் இல்லை என்பதில்தான் இவரது பங்களிப்பின் இடம் உள்ளது. உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் மனிதன் பெறுவதும் இழப்பதும் தரும் உணர்வுகள் ஒரே மாதிரியாய்த்தான் இருக்கின்றன என்பதை இவரது எழுத்துக்கள் ருசுப்படுத்துகின்றன.
அதே சமயம் ஜகதலப்பிரதாபன் போன்ற கதைகள் நினைவின் சிறப்புக் குறிப்புகள் என்பதைத் தாண்டி விரிவடையவில்லை. அந்நாட்டிலும் நேர்த்திக் கடனுக்காக மொட்டையடிக்கும் அம்மா உண்டு என்பதில் நின்றுவிடுகிறது அந்த கதை. அதே போல ‘குற்றம் கழிக்க வேண்டும் என்ற கதையில் பூப்பெயதும் பெண்ணுக்கான சடங்கின் முக்கியத்துவம் உள்ள குடும்பத்தில் உள்ள பெண் அதனால் ஒரு முக்கியமான தேர்வையே தவற விட நேருகிறது. ஆனாலும் இதையும் மீறி நான் என் எதிர்காலத்தை தீர்மானிப்பேன் என்ற நேர்மறை உந்துதல் கொள்ளும் பெண் இந்தக் கதையில் அப்பாவி அம்மாவின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் தொனி இருப்பதை விசேஷம் எதுவும் இன்றி சொல்கிறது.
அயலகம் சென்று வாழ்பவர்கள் வசதியாகவும் ஆடம்பரமாயும் இருப்பதாக எண்ணும் பொது அபிப்ராயத்துக்கு மாறான காட்சிகளை பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டுக்காரன் என்று இல்லை – எந்த நாட்டு பிரஜையும் அயலகனாக உள்ள இடத்தில் அவர்கள் இருப்பு பற்றி இவர் கதையின் கண்கள் மூலம் நாம் பார்க்க முடியும். இவர் கதைக்குள் புகுந்து அபிப்ராயங்களை உருவாக்குவதில்லை. அனைத்தையும் கவனித்து அதை தனது மொழியில் பகிர்கிறார். ஆங்கிலத்தில் fly on the wall என்று சொல்வதைப்போல யாரும் கவனிக்காமல் இருந்து தான் கவனித்தவற்றை சொல்லும் சுவற்றுக் கோழி போல. தேனீக்கள் பலகாதம் பறந்து சென்று தேர்ந்த மகரந்தங்களை சேகரித்து மரக்கிளைகளில் கூட்டில் தேனைச் சேகரிப்பது போல முத்துலிங்கமும் தனது பரந்துபட்ட வாழ்வனுபவச் சேகரத்தில் கற்பனை உமிழ் சேர்த்து நயமிகு அயலக தேன் சுவையை தருகிறார்.
இவரது முன்னுரை ஒன்றில் நிலவுக்கு சென்ற இருவரில் ஆல்டரின்தான் நிலவில் கால் வைப்பதாக இருந்தது. ஆனால் விண்கலத்துக்குள் சுருண்டு இருந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் இறங்கி கால் வைக்க வேண்டியதாக அமைந்தது. இதை எண்ணி ஆல்டரின் வாழ்க்கை முழுதும் குடித்துக் கொண்டே இருந்ததாய் சொல்லி தோற்றவர்களிடம்தான் சொல்வதற்கு சொல்வதற்கு கதைகள் இருக்கின்றன என்பார். அவ்வகையில் அதனாலோ என்னமோ அப்படியானவைகளை கண்டவற்றுள் இருந்து எழுதும் இவரிடம் இருந்து அவற்றில் வாயிலாக நிறைய கதைகள் நமக்கு கிடைக்கின்றன. சுவாரசியமாகவும். தகவல் கொத்துக்களாகவும். நிறைவாகவும்.