மனிதர் ஓட்டாத கார்களில் பயணிக்க நாம் தயாரா?

முரளி, காரில் தன் மனைவி செல்வியுடன் பயணிக்கும் பொழுது நடக்கும் உரையாடல்:

செ: பின்னாடி காரை எடுக்கும் பொழுது ஜாக்கிரதையாக எடுங்க.

மு: பின்ன எப்படி எடுக்கறேனாம்? முப்பது வருஷம் கார் ஓட்டினாலும் இதே பல்லவிதான்.

செ: பார்த்துங்க…ப்ளாட்ஃபார்ம் மேலயே ஏத்திடுவீங்களோன்னு பயந்திட்டேன்.

மு: ஓட்டற எனக்குத் தெரியாதா?

***

செ:என்னங்க, வேக எல்லையைத் தாண்டி ஓட்டறீங்க. ஸ்பீடோமீட்டரைப் பார்க்கறதே இல்லையா? 50 கி.மீ. லிமிட்ல 60 –ல போறீங்க. யார் அபராதம் அழுவது?

மு: லிமிட்டுக்கு மேல ஒரு 10 கி.மீ. ஓட்டினால் ஒன்னும் அபராதம் போட மாட்டாங்க

செ: லேன் மாத்தறபோது இன்டிகேட்டர் போடறதில்ல? அப்புறம் மோதிப் பிரச்னையாகிவிடும்.

மு:எல்லாம் போட்டேன். சத்தம் கேட்கல போல. எனக்கு வாழ்நாள் பூராவும் டிரைவிங் இன்ஸ்பெக்டரோட பயணம் செய்ய வேண்டிய தலைவிதி.

செ: எல்லாம் உங்க நல்லதுக்குத்தான சொல்றேன்…

~oOo~

2025 –ல் அதே முரளி, செல்விக்காக ஒரு ரோபோ டாக்ஸியை (தானோட்டிக் கார்) அழைக்கிறான். அழைக்கும் பொழுது எல்லாவற்றையும் சொல் – Verbose  என்ற சேவையையும் சேர்த்துக் கொண்டான். இதனால், கார் தன்னுடைய ஒவ்வொரு முக்கிய முடிவையையும் அறிவிக்கும்.

கார்: ப்ளாட்ஃபார்மிலிருந்து 137 செ.மீ. தொலைவில் நிறுத்தப்பட்டது. நிறுத்தும் கோட்டிற்கு இன்னும் 32 செ.மீ. உள்ளது. நிறுத்தும் குறியில் (stop sign) 47 வினாடிகள் நிறுத்தப்பட்டது.

செ:அய்யோ கொல்றியே. ப்ளாட்ஃபார்ம் பக்கத்துல போயி புள்ளி விவரம் வேற.

கார்: நான்கு வழி நிறுத்தத்தில், (four way stop) சந்திப்பில் எந்த வாகனமும் இல்லாத 15 நொடிகளுக்குப் பிறகு கிளம்பி, திடீரென்று கிழக்கிலிருந்து வந்த வாகனத்தைத் தவிர்க்க, 30 அடி வாகன இடை தூரத்தில் வாகனத்தை நிறுத்தி, குறுக்கே வந்த கார் சென்றதும், 15 நொடிகளில் கடக்கப்பட்டது.

செ: அய்ய, இதுக்கு என் புருசனே மேல். பாதி தூரம் போய் நிறுத்தி, எல்லாரும் ஹாரன் அடிச்சு களேபரம் தான். புள்ளி விவரத்தைக் குப்பையில் போட.

கார்: இடது வரைபாதையில் உள்ள  மணிக்கு 67 கி,மீ. வேகத்தில் பயணிக்கும் நீல வாகனத்தை மணிக்கு 75 கி,மீ. வேகத்தில், 150 மீட்டர் இடைவெளியில், முந்தப்பட்டது.

செ: என்னமோ உலகத்துல யாருமே முந்திகிட்டு போனதே இல்லையாக்கும். பெரிய சாதனை போ

கார்: பள்ளிப் பகுதியாதலால், இன்னும் 1 கி.மீ. 30 கி.மீ. வேகத்தில் பயணிப்போம்

செ: கிழிஞ்சுது போ. நான் போய் சேர்ந்தா மாதிரிதான்

கார்: இதுவரை 12.6 கி.மீ., 23 நிமிடத்தில் பயணித்திருக்கிறீர்கள்

செ: இது ஒண்ணுதான் குறைச்சல். யாருக்கு வேணும் இந்த விவரம். இன்னும் போய்ச் சேர எத்தனை நேரமாகும்?

கார்: எனது கணிப்பில், போக்குரத்து நெரிசலைப் பொறுத்து, இன்னும் 13 முதல் 16 நிமிடத்தில் போய்ச் சேர்ந்து விடலாம்.

வீட்டிற்கு வந்த செல்வியிடம் முரளி, ரோபோ டாக்ஸி அனுபவம் பற்றி கேட்டான்.

“ஒரே புள்ளிவிவர போர். உங்களப் போல ஒழுங்காக எதுவும் செய்யறதில்லை”

வாழ்க ரோபோ டாக்ஸி.

~oOo~

பயணித்தல் பற்றிய நம்முடைய புரிதல், அணுகுமுறை மற்றும் அனுபவம் எல்லாம் ஒருவரிமிருந்து இன்னொருவருக்குப் பெரிதாக மாறுபடும். உதாரணத்திற்கு, மிக அதிக வேகம் என்று ஒருவருக்குத் தோன்றுவது இன்னொருவருக்கு ஆமை வேகமாகத் தோன்றலாம். கார் ஓட்டுதலும் அப்படியே. அத்துடன் கார் ஓட்டுவது என்பது நம்மில் பலருக்கு ஒரு திறனாக ஆரம்பித்து, பழக்கமாக மாறும் பொழுதுதான் பிரச்னை. பல நல்ல/கெட்ட வாகன ஓட்டுதல் விஷயங்களை நம்மை அறியாமலே செய்கிறோம். உலகில் எந்த ஒர் அனுபவமுள்ள மனித கார் ஓட்டுனருக்கும் தன்னுடைய பழக்கத்தை முழுவது விவரிப்பது என்பது இயலாத காரியம். இந்த லட்சணத்தில், நாம் எந்திரங்களுக்கு ஓட்டுதல் பற்றி எப்படிச் சொல்லிக் கொடுப்பது? நல்ல வேளையாக, வளரும் தொழில்நுட்பம், மற்றும் வாகன ஓட்டுதல் பற்றிய தெளிவான செய்முறை விளக்கங்கள் யாவும் இருப்பதால், பொறியாளர்கள் இந்த முயற்சியில் பெரும் வெற்றிகளைப் பார்த்து வருகிறார்கள். எல்லாம் உடனே ரெடி என்ற அர்த்தமில்லை. இத்துறை வேகமாக முன்னேறி வருகிறது.

பல பில்லியன் டாலர்கள் இந்தத் துறையில் இன்று முதலீடு செய்யப்படுகிறது. ’கருவிகளின் இணையம்’ என்ற தொடரில் சொல்லியிருந்த முதலீட்டை விட பன் மடங்கு பெரிது இந்த முதலீடு. கார் தயாரிப்பு, கார் உதிரி பாக, தொழில்நுட்ப, இணைய வாடகைக் கார், பெரிய வாகனத் தொகுதி நிறுவனங்கள் என்று பல தரத்தினரும் இந்தத் துறையில், பெரிய புரட்சியில் லாபம் பார்க்க பெரிய முதலீடுகள் மற்றும் சின்ன பிரத்யேக தொழில்நுட்ப நிறுவனங்களை வாங்குவது என்று ஒரு முதலீட்டுத் திருவிழாவே நடந்து வருகிறது.

  1. கூகிள் நிறுவனம், தன்னுடைய தானோட்டிக் கார்கள் இதுவரை 1 மில்லியன் மைல்கள் பொதுச் சாலைகளில் பயணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தக் கார்கள், இதுவரை 17 சின்ன விபத்துக்களில் கடந்த 7 ஆண்டுகளில் சிக்கியுள்ளன. பெரும்பாலும் இவற்றுடன் இந்த விபத்தில் தவறுகள் மனிதர்கள் ஓட்டும் மற்ற கார்களால்தான் என்பது முக்கியமான விஷயம்
  2. 2015 –ல், ஊபர் (Uber) கம்பெனி, பிட்ஸ்பர்க்கில் உள்ள, கார்னகி மெல்லன் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்து வரும் உலகப் புகழ் பெற்ற ரோபாடிக்ஸ் விஞ்ஞானிகளைத் தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்ய மிக அதிகச் சம்பளத்திற்கு அமர்த்தியது
  3. ஊபரின் போட்டி நிறுவனமான லிஃப்ட் (Lyft) என்ற நிறுவனத்தை 500 மில்லியன் டாலருக்கு ஜி.எம். வாங்கியது
  4. தானோட்டிக் கார்களின் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கும் Cruise Automation  என்ற நிறுவனத்தை, ஜி.எம். 1 பில்லியன் டாலர்களை செலவழித்து வாங்கியது
  5. ஃபோர்டு நிறுவனம் கூகிளுடன் கைகோர்த்து தன்னுடைய தானோட்டிக் கார்கள் வெளிவரும் என்று அறிவித்தது
  6. கூகிளின் ஆண்ட்ராய்டு திறன்பேசிகளைத் தயாரிக்கும் சாம்சங்கைப் போல, மூன்றாவது பெரிய அமெரிக்க கார் நிறுவனமான க்ரைஸ்லரும் கூகிளின் கார்களைத் தயாரிக்கும் என்று நம்பப்படுகிறது
  7. தனித்து இயங்கும் அமெரிக்க மின்கார் நிறுவனமான டெஸ்லா, மற்ற கார் நிறுவனங்கள் போல் அல்லாமல், தானே கார் தயாரிப்பு, கணினி மென்பொருள், மற்றும் தானோட்டி காருக்கான உணர்விகள் ஒருங்கிணைத்தல் எல்லாவற்றையும் மின் காரில் செய்து பெட்ரோல் கார் நிறுவனங்களுக்கு முன் வெளியிடும் என்று சொல்லி வருகிறது
  8. யூரோப்பில், குறிப்பாக ஜெர்மெனியில், ஃபோக்ஸ்வாகன் (VW), பென்ஸ், பி.எம்.டபிள்யு. நிறுவனங்கள் கோதாவில் இறங்கியுள்ளன
  9. ஜப்பானின் நிஸ்ஸான், டொயோடா மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் சற்று மதில் மேல் பூனை போலப் பார்த்துக் கொண்டிருக்கின்றன
  10. இஸ்ரேலைச் சேர்ந்த Mobileye மற்றும் Autotalks போன்ற நிறுவனங்கள் பல தானோட்டி கார் நிறுவனங்களுக்குத்  தொழில்நுட்பம் வழங்கி வருகின்றன
  11. கார் தயாரிப்பாளர்களுக்கு உதிரி பாகங்கள் செய்யும் நிறுவனங்களான Delphi மற்றும் Continental  போன்ற நிறுவனங்கள், எப்படி உணர்விகளைக் கார்களுக்கான கரடு முரடுப் பயன்பாட்டிற்காகத் தயாரிப்பது என்பதில் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கின்றன
  12. இறுதியாக, கணினி தொழிலில் பிரபலமான Cisco (இணைய ரெளடர்கள் மற்றும் வலையமைப்பு வன்பொருள்) மற்றும் NVidia (கணினி விளையாட்டுச் செயலிகள்) தானோட்டிக் கார்களுக்கான மைய செயலிகளை தயாரிப்பதற்காக பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளார்கள்

காப்பீடு நிறுவனங்கள், தானோட்டிக் கார் வந்தால் தங்களுடைய தொழில் என்னவாகும் என்று கவலையில், பல புதிய அணுகுமுறைகளையும் முன் வைத்து வருகிறார்கள்.

அரசாங்கங்கள் பொதுவாக, வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று செயல்படும் அமைப்புகள். ஆனால், பல அமெரிக்க மாநிலங்கள், இவ்வகைக் கார் தயாரிப்பு தன்னுடைய மாநிலத்தில் நிகழ வேண்டும் என்பதால், அவசரமாக, தானோட்டிக் கார்களைப் பொது சாலைகளில் சோதிக்க முந்துகின்றன.

இந்தப் புரட்சியில் பெரும் தாக்கத்தைச் சந்திக்கப் போகும் மூன்று வகை அரசாங்க அமைப்புகள் 2016 –ல் வெறும் பேச்சளவில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இவர்களைக் குறை சொல்லிப் பயனில்லை. ஏனென்னில், இன்று இவ்வகைக் கார்கள் சாலையில் இல்லை – வெறும் சோதனையுடன் சரி.

  1. உள்ளூர் கார்பரேஷன் மற்றும் நகர அரசாங்கங்கள் – தானோட்டிக் கார்கள் பெருகினால், இந்த அரசாங்கங்களின் பெரும் வருமானமான நிறுத்துமிட வாடகை அடிபடும்
  2. வாகன உரிம அமைப்புகள் – தனியார் வாகனங்களைத் துறந்து ரோபோ டாக்ஸிக்கு மாறினால், உரிம வருமானம் அரசாங்கங்களுக்கு அடிபடும். வருடா வருடம், உரிமத் தட்டிற்கு (license plate) தனியார் தரும் வாடகைப் பணம் குறையத் தொடங்கும்
  3. போக்குவரத்து நெரிசலை சமாளிக்க சில வரைசாலைகளை கட்டணத்திற்கு விடும் அரசாங்க அமைப்புகள் வருமானம் இழக்கும், அல்லது குறையும். தானோட்டிக் கார்கள், போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைக்கும் திறன் கொண்டவை
  4. நகர மையத்தில், தவறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் என்பது உள்ளூர் அரசாங்கங்களுக்கு லட்டு மாதிரி வருமானம் தரும் விஷயம். நகர மையத்தில் தானோட்டிக் கார்களே நிறுத்தாத பட்சத்தில், இந்த வருமானம் அடிபடும்

அரசாங்கங்கள் போல அதிகம் இதைப் பற்றி கவலைப்படாத இன்னும் சில அமைப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

  1. வட அமெரிக்காவில், லட்சக்கணக்கான ராட்சச லாரிகள், சரக்குகளை பல்லாயிரம் கி.மீ. கடந்து, கப்பலிலிருந்து சூப்பர் மார்கெட் வரை கொண்டு சேர்க்கின்றன. கலிஃபோர்னியாவில் விளையும் காய்கள், பழங்கள், அமெரிக்கா, கனடா முழுவதும் இவ்வகை லாரிகள் பல நகரங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால், பல லட்சம் ஓட்டுனர்கள் வேலையில் இருக்கிறார்கள். ரோபோ லாரிகள் முழுவதும் வந்தால், இந்த வேலை வாய்ப்பு குறையும் அல்லது மறையும்
  2. வட அமெரிக்காவில் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை விமானப் பயணம் என்பது சர்வ சாதாரணம். சில உதாரணங்கள்;
    • நியூயார்க் – வாஷிங்டன்
    • நியூயார்க் – பாஸ்டன்
    • நியூயார்க் – டொரோண்டோ
    • டொரோண்டோ – மாண்ட்ரீயல்
    • லாஸ் ஏஞ்சலஸ் – சான் ஃப்ரான்ஸிஸ்கோ
    • டல்லஸ் – ஹூஸ்டன்

இது ஒரு சின்ன சாம்பிள். பல நூறு இவ்வகை அடர்த்தியான விமான வழிகள் உள்ளன. இவை இல்லையேல், இன்று, பல விமான நிறுவனங்கள் படுத்திருக்கும். ரோபோ டாக்ஸி வந்தால், 1.5 மணி நேர விமானப் பயணத்திற்கு பதில், 6 மணி நேர ரோபோ டாக்ஸி எவ்வளவோ மேல். விமானப் பாதுகாப்புத் தொந்திரவுகள், விமான நிலயத்தில் நேர விரயம் எல்லாவற்றையும் பார்த்தால், 2 மணிக்கு குறைவான விமானப் பயணங்கள் பெரிதாக அடிபடும்.

ஒரு சந்தேகம் இக்கட்டுரையைப் படிப்போருக்கு எழலாம் – அட, இந்தத் தொழில்நுட்பம் இதோ இருக்கிறது, யாரும் அதிகம் கவலைப் படாதது போல இருக்கிறதே. வழக்கம் போலப் புதிய தொழில்நுட்பமாகிய தானோட்டிக் கார்களிலும் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

  1. கூகிள் 1 மில்லியன் கி.மீ. தானோட்டிக் கார்களைச் சோத்தித்தாலும், இன்னும் பல சிக்கல்கள் எஞ்சியுள்ளன. இதைப் பற்றி தொழில்நுட்பத்தை விரிவாக அலசும் பொழுது அலசுவோம். பயங்கர மழை மற்றும் அடர்த்தியான பனிப் பொழிவு வந்தால், தானோட்டிக் கார்கள் தடுமாறுகின்றன (மனிதர்கள் மட்டும் என்ன தடுமாறாமலா இருக்கிறார்கள்?)
  2. கணினியால் கட்டுப்படுத்தபடும் எந்திரம் என்றவுடன் பாதுகாப்புச் சிக்கல்கள் உடனே பூதாகாரமாகி விடுகின்றன. இணைய விஷமிகள் ஓடும் கார்களை (கருவிகளின் இணையம் தொடரில் க்ரைஸ்லர் ஜீப்பை எப்படி இணையம் மூலம் கடத்துகிறார்கள் என்று பார்த்தோம்). இந்த மிகப் பெரிய சவாலை தானோட்டிக் கார்கள் கடந்தால்தான் இவற்றிற்கு ஆதரவு கிடைக்கும்
  3. இன்னொரு மனிதர் காரோட்டுகிறார் என்பது ஒரு விஷயம். கண்ணுக்குத் தெரியாத கணினி ஒன்று காரோட்டுகிறது என்பது இன்னொரு விஷயம். இது அவ்வளவு எளிதாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது ஒரு கேள்விக்குறி
  4. நம்மில் பலருக்குக் காரோட்டம் பிடிக்கும். வட அமெரிக்காவில் பரந்த சாலைகளில் காரோட்டுவது ஓர் அருமையான அனுபவம். என்னதான் காப்பீடு, விபத்து அபாயம், கார் சார்ந்த செலவுகள் இருந்தாலும், கடந்த 100 ஆண்டுகளாக கார் மோகம் நம்மை விட்டு சற்றும் நீங்கவில்லை
  5. சமூகத்தில் கார் ஓர் அந்தஸ்தைக் குறிக்கிறது. ஒரு பென்ஸ், லெக்ஸஸ், ரோல்ஸ் அல்லது டெஸ்லா என்றவுடன் ஒருவருடைய அந்தஸ்தைக் காட்டுகிறது. கணினி செலுத்தும் காரில் அந்த அந்தஸ்து கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறி
  6. வட அமெரிக்கப் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீடுகள் இரு/மூன்று கார்களை நிறுத்தும் கராஜுடன் கட்டப்படுபவை. தானோட்டிக் கார்கள் முழுவதும் வந்துவிட்டால், கராஜ்களை என்ன செய்வது?

அடுத்த பகுதியில், கார்களில் தானியக்கம் என்பது எவ்வாறு தோன்றி வளர்ந்து வந்துள்ளது என்று விரிவாகப் பார்க்கலாம்.

டெஸ்லாவின் தானோட்டி கார் செயல்முறை விளக்கம் – காரை வீட்டிலிருந்து எடுத்து அலுவலகத்தில் பயணியை இறக்கி விட்டு, நிறுத்துமிடம் தேடி தானே நிறுத்திக் கொள்கிறது;

தமிழ்ப் பரிந்துரை

தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்

ஆங்கிலச் சொல் தமிழ்ப் பரிந்துரை
Stop sign நிறுத்தும் குறி
Four way stop நான்கு வழி நிறுத்தம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.