[stextbox id=”info” caption=”உலக சினிமா”]
Senses of Cinema என்ற தளத்தில் சென்ற ஆண்டின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ஏறத்தாழ இருநூறு பட்டியல்கள் – உலக சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு தவிர்க்க முடியாத கருவூலமாக இருக்கும். இங்குள்ள பட்டியல்களின் சிறப்பு உலகெங்கும் உள்ள பல சினிமா அமைப்புகள், விமரிசகர்கள் மற்றும் ரசிகர்களின் தேர்வுகளைக் கொண்டது என்பது மட்டுமல்ல, ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் தம் தேர்வுகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
Francisco Algarin Navarro 2016ஆம் ஆண்டு தான் பார்த்த படங்களின் சிறந்த படமாக Maria Klonaris மற்றும் Katerina Thomadakiன் Unheimlich II: Astarti (1980) என்ற திரைப்படத்தைத் தேர்ந்தெடுக்கிறார், இவரது பட்டியலில் The Musketeers of Pig Alley (D. W. Griffith, 1912) என்ற படமும் இருக்கிறது. Adrian Danks, ஓசூவின் கல்லறைக்குச் சென்ற அனுபவத்தை சென்ற ஆண்டின் உச்சங்களில் ஒன்றாகக் குறிப்பிடுகிறார். தான் ரசித்த சிறந்த பத்து திரைப்படங்களில் ஒன்றை மட்டுமே திரையரங்கம் சென்று பார்த்ததாகச் சொல்கிறார் Gwendolyn Audrey Foster. பிற படங்கள் அனைத்தும் டிவிடியில் பார்த்ததாகச் சொல்லும் அவர், ஆக்னெஸ் வார்தாவின் From Here to There திரைப்படத்தை அமேசானில் கண்டு அதன் பின் டிவிடியில் ரசித்ததாகச் சொல்கிறார் (‘delightfully restorative’). திறமைவாய்ந்த சர்வதேச திரைப்பட மற்றும் காணொளி கலைஞர்களை Vimeoவில் கண்டுகொண்டதாகக் குறிப்பிடும் பாஸ்டர், திரைத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் கலைஞர்கள் பலரின் படைப்புகளும் இலவசமாய் காணக் கிடைக்கின்றன, பழசும் புதுசுமாய் குறிப்பிடத்தக்க, திகைக்க வைக்கும் ஏராளமான திரைப்படங்கள் இணையத்தில் இருக்கின்றன- என்ன ஒன்று, நாம்தான் முனைந்து தேட வேண்டும், என்று எழுதுகிறார்.
– Senses of Cinema, World Poll, http://sensesofcinema.com/2017/world-poll/world-poll-2016-introduction/
[/stextbox]
[stextbox id=”info” caption=”மொழியின் மனோபாவம்”]
‘புத்தகங்கள் நம் உணர்வு வட்டத்தை விரித்து அந்நியர்களை நம்மவர்கள் ஆக்குகின்றன,’ என்று சொன்னபோது நண்பர் ஒருவர், ‘ஆனால் நம்மவர்களை அந்நியர் ஆக்குகிறதே?” என்றொரு கேள்வி எழுப்பி அதிர வைத்தார். வள்ளுவரும்கூட கல்வியறிவு இல்லாதவர்களை விலங்குகள் என்றும் எதற்கும் பயன்படாத நிலம் போன்றவர்கள் என்றும் அன்னியப்படுத்தவே செய்கிறார் (வள்ளுவர் சொல்லும் கல்வி பன்மொழி அறிவல்ல என்று சமாதானம் செய்துகொள்ள இடமுண்டு). அண்மையில் வெளிவந்து, விமரிசக ஆதரவைப் பெற்றிருக்கும் Arrival என்ற ஆங்கில மொழி திரைப்படம், அயல்கோள்வாசிகளின் மொழியைக் கற்கும் ஒரு பெண்ணின் உணர்வுகள் ஆழப்பட்டாலும் அவள் தன் புவியுலக மனிதர்களிடமிருந்து வேறுபட்டு நிற்பதாய் காட்டுகிறது.
Utne Reader என்ற தளம், ‘மொழிக்கொரு ஆளுமை’ என்ற கட்டுரையில் மொழி நம் ஆளுமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதை உணர்த்தும் சில ஆய்வுகளைக் குறிப்பிடுகிறது – A Personality For Every Language. இதில் ஒரு ஆய்வு அமெரிக்காவில் வாழும் பிரெஞ்சு மொழியைச் சேர்ந்தவர்களிடம் நடத்தப்பட்டது. சில ஓவியங்களைக் காட்டி ஆங்கிலம், பிரஞ்சு இரு மொழிகளிலும் அவற்றைக் கதைப்படுத்தச் சொல்லப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட கதைகளில் பெண்கள் சாதனையாளர்களாய் இருந்தார்கள், வன்முறை மிகுந்திருந்தது, பெற்றோர் வசை பாடப்பட்டார்கள், குற்றவுணர்வு தவிர்க்கப்பட்டது; பிரஞ்சு மொழி கதைகளில், மூத்தவர்கள் அதிகாரம் செலுத்தினார்கள், குற்றவுணர்வு நிறைந்திருந்தது, சமவயதினர் வையப்பட்டனர். இதே போன்ற ஒரு ஆய்வை இதே ஆய்வாளர் பின்னர் ஜப்பானிய அமெரிக்கர்களிடம் மேற்கொள்கிறார். “என் விருப்பங்கள் என் குடும்பத்தினரின் விருப்பங்களுடன் முரண்படும்போது…” என்ற வாக்கியத்தை ஜப்பானிய மொழியில் நிறைவு செய்தவர்கள், “மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது,” என்றும், ஆங்கில மொழியில் நிறைவு செய்தவர்கள், “நான் நினைத்ததைச் செய்கிறேன்,” என்றும் முடித்தார்களாம்!
இதில் மிக ஆபத்தான, அல்லது, ஒரு ஆபத்தைச் சுட்டிக்காட்டும் ஆய்வும் பேசப்படுகிறது. தாய்மொழியில் சிந்திப்பவர்கள் உணர்ச்சிகரமாகவும் வேற்று மொழியில் சிந்திப்பவர்கள் புத்திப்பூர்வமாகவும் சிந்திக்கிறார்கள். இது நன்மைதானே என்று நாம் நினைக்கலாம், ஆனால் அவ்வளவு எளிய விஷயமில்லை இது. உணர்ச்சிகரமான முடிவுக்கு வருபவர்கள் தனிமனித உரிமைகளை மதிக்கிறார்கள், புத்திப்பூர்வமாக சிந்திப்பவர்கள் காரியவாதிகளாக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு ரயில் வரும் வழியில் ஐந்து பேர் கட்டி வைக்கப்பட்டுள்ளனர். ஒருவனை அதன் முன் தள்ளிவிட்டுக் கொன்றால் அவர்கள் உயிர் காப்பாற்றப்படும், நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, தாய் மொழியில் சிந்தித்தவர்களைவிட அதிக அளவில், அந்நிய மொழியில் பதில் சொன்னவர்களில் பாதிக்கு பாதி பேர், ஒருத்தனைக் கொன்று பலரைக் காப்பாற்றத் தயாராக இருந்தார்களாம். வேற்று மொழியை எந்த அளவுக்கு ஆழப் பயில்கிறோமோ அந்த அளவுக்கு புத்திப்பூர்வ சிந்தனை குறைகிறது என்பது இந்த ஆய்வாளர்களின் அனுமானம். மொழியும் பண்பாடும் அல்ல, அவற்றின் ஊடுபாவாயுள்ள உணர்ச்சிகளை அறியாத மேம்போக்கான அறிவு நம் அக உணர்வுகளிலிருந்து நம்மை அந்நியப்படுத்தி காலனியப்படுத்துகிறது என்று நினைக்க வைக்கும் முடிவு இது.
– Utne Reader, A Personality For Every Language http://www.utne.com/mind-and-body/a-personality-for-every-language.
[/stextbox]
[stextbox id=”info” caption=”கதை சொல்லிகள்”]
நீ யாராக இருந்தாலும், எவ்வளவு தனியாக இருந்தாலும்,
உலகம் உன் கற்பனைக்குத் தன்னைக் கொடுக்கிறது,
காட்டு வாத்துக்களைப் போல் உன்னை அழைக்கிறது,
கடூரமான குரலில், பரபரப்பான தொனியில்-
வஸ்துக்களின் குடும்பத்தில்
உன் இடத்தை மீண்டும் மீண்டும் அறிவிக்கிறது.
சிறைக்கைதிகளுடன் எழுத்துக்கலை குறித்து உரையாட மேரி ஆலிவரின் ‘காட்டு வாத்துகள்,’ என்ற கவிதை தொகுப்புடன் செல்கிறார் அமண்டா ஃபீன்மேன். வரிகளின் இறுதிச் சொற்கள், உவமைகள் குறித்த பேச்சு விரைவில் அனுபவங்களை எழுதி, பகிர்ந்து கொள்வதில் முடிகிறது. வேதனை நிறைந்த அனுபவங்களுக்கு சொற்கள் உருவம் அளிக்கின்றன, பகிர்தலில் உணர்வுகள் பொருள் கொள்கின்றன. இழப்பின் தவிப்பை கதைகள் நிறைவு செய்து ஆற்றுப்படுத்துவதை வாசிப்பு மற்றும் வாழ்வனுபவங்களுடன் பகிரும் கட்டுரை, The Storytellers, Entropy என்ற தளத்தில். ஆவண எல்லைகளுக்குட்பட்ட மெய்ம்மையும், கட்டற்ற புனைவு வெளிக்குரிய மொழியும் இணைந்த Creative Nonfiction என்ற வகைமைக்கு நல்ல ஒரு உதாரணம் இது.
http://entropymag.org/the-storytellers-by-amanda-feinman/
[/stextbox]
[stextbox id=”info” caption=”மொழிபெயர்ப்பு குறித்து…”]
உங்களின் நாவல் இன்னொரு மொழியில் வெளியாவது ஒருபுறம் பெருமை என்றாலும், மற்றொரு புறத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து உடலுறவு கொள்வது போல் அவஸ்தையான சமாச்சாரம் என்கிறார் போரிஸ் ஃபிஷ்மன் (Boris Fishman). இவர் ’A Replacement Life,’ என்னும் கதையை எழுதியிருக்கிறார்.
கதாநாயகனின் பாட்டி இறப்பதுடன் நாவல் துவங்குகிறது. நாஜி ஜெர்மனியால் துரத்தப்பட்டு ருஷியாவில் இருந்து தப்பித்து ஓடி வந்த பாட்டிக்கு இழப்பீடு தருவதற்கான கடிதம் நாயகனின் தாத்தாவிடம் வந்து சேர்கிறது.கொஞ்சம் நியு யார்க் நகரம். அதன் பின் அங்கே அமெரிக்காவிற்கு குடிபுகுந்த உக்ரைன், பெலாரஸ், மொல்டொவா, டஜிகிஸ்தான், ரஷியாவின் அருகில் இருக்கும் ஜியார்ஜியா, உஸ்பெகிஸ்தான்வாசிகள், என்று பல மாந்தரிடையே பயணிக்கிறது. நாவலும் சுவாரசியமான நாவல்.
கதையை மொழிபெயர்ப்புக்கு அனுப்புகிறார். ஜெர்மனியில் இருந்து மூலத்திற்கும் மொழியாக்கத்திற்கும் இடையே உள்ள பிசிறுகளைப் பட்டியலிட்டு நீண்ட கடிதம் வருகிறது. இத்தாலி மொழியில் பேச்சு மூச்சே காணோம். ரஷிய மொழியில் இவர் புத்தகத்தைப் போல் இரட்டிப்பு மடங்கு அதிகமான பக்கங்களோடு நாவல் உருவாகிறது. ஃப்ரெஞ்சும் அதே போல் நூற்றுக்கணக்கான பக்கங்களை சேர்த்து மொழிபெயர்ப்பாளரின் சொந்த விஷயங்களோடு இவர் கைக்கு வருகிறது. அவரின் அனுபவங்களை கீழே வாசிக்கலாம்.
https://www.nytimes.com/2017/01/13/books/review/on-being-translated-back-to-myself.html?_r=0
[/stextbox]