பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்

“ஷ்ஷ்ஷ் ” குக்கர் கொதிப்பு தாங்காமல் வீறிட்டது. தூளியில் தூங்கிப்போயிருந்த வள்ளி விதிர்த்தாள். லெட்சுமண செட்டியார் நிறைந்து வழிந்த தொந்தியை எக்கி, நெகிழ்ந்திருந்த வேட்டியை முறுக்கிக்கொண்டு எழுந்து வந்தார். வள்ளி நவ்வாப்பழக் கண்களை வெருட்டி அவரைப் பார்த்து ‘ஏமாந்தியா’ என்பது போல் லேசாகச் சிரித்தாள்.

வள்ளிக்கு அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு தட்டிவிடும். அலமு தூக்கக் கலக்கத்தில் அவளைத் தூக்கி வந்து ‘பாத்துக்குங்க’ என்றபடி மீண்டும் அறைக்குச் செல்வாள். ஏழு ஏழரை வரை குதியாட்டம் போட்டு அடங்கிய பின்னர் மீண்டும் அவளுக்கு தூக்கம் செருகும். மேற்கு மாம்பலத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் காலை ஏழு முதல் ஒன்பது வரையிலான நேரம் என்பது, போருக்கு முந்தைய ராணுவத் தயாரிப்பைப் போலிருக்கும். ஆறு வீட்டு குக்கர்களின் வீறிடலும், மூன்று வீட்டுச் சமையல் நெடியும், இருபது வீட்டு வண்டிகளின் ஓலமும் நாவன்னா லேனாவுக்கு, நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாகச் சிதைந்து கொண்டிருக்கும் கண்டனூர் மூணுகட்டு சிங்கசெல காரை வீட்டை விட்டுவிட்டு  இங்கு வந்த ஆறு மாசத்தில் நன்றாக வாடிக்கையாகி விட்டது.  அலமுவிடம் சொல்லலாம், ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி “குக்கர் வெக்காதீக, மிக்சி போடாதீக..பாப்பா தூங்குறா” எனக் கோர முடியுமா என்ன?

கட்டைக்குரலில் தூளியை ஆட்டிக்கொண்டே பாடத்துவங்கினார் “ஆயர்பாடி மாளிகையில்…”  கண்டனூர் சிவன் கோவில் பிரதோஷங்களில் கூட்டத்தோடு கூட்டமாக திருவாசகம் படித்து உரமேறிய குரல். “யோவ் நாவன்னா லேனா பக்தி எல்லாம் சரி தான்..உருகித் தான் பாடுறீக..ஆனா சத்தத்த கொஞ்சம் குறைச்சுகிட்டா நல்லது.,இங்க எல்லாரும் தரையில நடந்துகிட்டு வாராக, நீர் சம்மந்தமே இல்லாம கப்பி ரோட்டுல ப்ளெஷர ராவிகிட்டு வாரீர்” என நக்கலாக இந்த குரலுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பார் கோவில் குருக்கள் சாம்பசிவத்தையர்   “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும்.. போதை முத்தம் பெறுவதற்கும் ..கன்னியரே கோபியரே வாரீரோ” என இழுத்து முடிப்பதற்குள் வள்ளி தூங்கிவிட்டிருந்தாள். எப்போதுமே இந்த வரியை தொடுவதற்குள் அமைதியாக துயின்றிடுவாள். “பொன்னழகைப் பார்ப்பதற்கும் தான சரி?” என அலமு மட்டுமல்ல வேறு பலரும் கூட சிலமுறை கேட்டார்கள். ஆனால் ஏனோ இப்படி பாடுவது தான் நாக்குக்கோ மனசுக்கோ வாகாக வருகிறது.

அலமுவின் தங்கை சாலா முறையாக பாட்டு படித்தவள். அவளுடைய ஒடிசலான உடலுக்கு தொடர்பில்லாத நடிகை வரலட்சுமியின் குரல் அவளுக்கு. “நா தூங்க வைக்கிறேன்னு” அழகாக பாடி நிதானமாக தாளத்துக்குகந்து தூளியை ஆட்டியும் கூட வள்ளி உறங்காமல் விரல் சூப்பி வெறித்து கொண்டிருந்தாள். அவளும் விடாமல் “மன்னவா மன்னவா”, “மண்ணுக்கு மரம் பாரமா..” என்று வரிசையாக நாலைந்து பாட்டு பாடினாள். நேயர் விருப்பம் போல “சாலா..கருப்பு நிலா பாடேன்..சாலா முத்தான முத்தல்லவோ பாடேன்” என ஒவ்வொருவராக பட்டியல் இட்டுகொண்டிருந்தார்கள். வள்ளி தூங்கினபாடில்லை. சிணுங்கி அழ துவங்கினாள். “அவளுக்கு அவ அய்யா பாடுனத்தான் தூக்கம்” என்றான் நானா. கால் நீட்டினால் சுவரிடிக்கும் அந்த வீட்டில், சம்மந்தியார்கள் மத்தியில் பாட அவருக்கும் சங்கட்டமாக இருந்தது. கொஞ்சிக்கொண்டு தூளியை அமைதியாக ஆட்டினாலும் அவள் தூங்காமல் ராங்கி செய்தாள். “சும்மா பாடுங்க அண்ணே” என்றாள் சம்மந்தியம்மா. அதே கட்டைக்குரலில் “ஆயர்பாடி மாளிகையில்..” என துவங்கி மூச்சிரைக்க  பாடி முடிப்பதற்குள் வள்ளி உறங்கிவிட்டிருந்தாள். எல்லோருக்கும் ஆச்சரியம். “அண்ணன் குரலுக்கு தான் எம்புட்டு பவரு” என்று சம்மந்தியம்மா சொன்னபோது நாவன்னா லேனாவுக்கு பெருமை தாங்கவில்லை. “அதெல்லாம் ஒண்ணுமில்ல சாலா குரலு நல்லாருக்கா அதான் கண்ணுவிழிச்சு கேட்டுக்கிட்டு கிடக்கா.. ஷ்ரத்தா பாத்திருப்பா..இந்த அய்யா நாம தூங்கலைன்னா பாட்ட நிறுத்தமாட்டாருடோய். பேசாம தூங்கிருவோம்னு,,கப்சிப்புன்னு தூங்கிட்டா” என்றபோது எல்லோரும் சிரித்தார்கள். நல்ல விட்டு என அவரும் சேர்ந்து சிரித்தார்.

நானாவும் அலமுவும் எட்டரைக்கெல்லாம் கிளம்பிவிடுவார்கள். அலமு இப்போது தான் ஒன்றரை மாதமாக வேலைக்கு திரும்பி இருக்கிறாள். சாப்பாடெல்லாம் தயாராக்கித்தான் செல்வாள். நாவன்னா லேனா வள்ளிக்கு தேவையானதை செய்துக்கொண்டிருந்தால் போதும். “ஷ்ரத்தாவ குளிப்பாட்டிருங்க..சுவிச்சு எல்லாத்தையும் மறக்காம அமத்திருங்க” என்று வழக்கமாக சொல்வதைச் சொல்லிவிட்டு அலமு கிளம்பினாள்.

நாவன்னா லேனாவிற்கு இங்கே ஒண்டிக் கொள்வதில் பெரிய வருத்தமோ கஷ்டமோ ஏதுமில்லை. வள்ளியாச்சியும் போய்ச் சேர்ந்துவிட்டாள். வேறு எந்த தொழிலிலும் சாமர்த்தியமில்லை. குடும்பப் பேருக்காக ஐயனார் பிராண்ட் அரிசி ஆலையில் கணக்கெழுதி ஒரு சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். இப்போது அதுவும் நின்று போய் ஒருவருடமாகிறது. பொட்டி பொட்டியாக கம்பீட்டர் வந்து சேர்ந்தது. ஒரு சின்னப்பயல் அங்கே வந்து அமர்ந்து கொண்டான். அவரை எவரும் போகச் சொல்லவில்லை. ஆனால் அந்த பயலுக்கு ஏவலாளாக இருக்க மனம் ஒப்பவில்லை. “ஒடம்பு சொவமில்ல..நின்னுக்குறேன்” என்றார்.  பெரியவர் புரிந்துகொண்டார். “எப்ப வேணாலும் வரலாம் லேனா..நம்ம எடம்தான்” என சொல்லித்தான் அனுப்பி வைத்தார். நானா எப்படியோ படித்துப் பிழைத்து மேலேறி வந்துவிட்டான். பிள்ளையையும் அம்மாளையும் மூன்று மாதத்தில் கொண்டு வந்து விட்டார்கள். ஒத்தாசையாக இருக்கலாமே என இங்கு வந்து சேர்ந்தார்.

ஒன்பது மணிக்கு வள்ளி எழுவாள். தண்ணி ஊற்றிவிட்டு, கேழ்வரகுக் கூழைக் கொடுத்துவிட்டு, கீழே தூக்கிச் செல்வார். கடயத்துக்காரப் பையன் வைத்திருக்கும் பலசரக்குக் கடையில் ஸ்டூல் போட்டு அமர்ந்திருப்பார். அவன் மளிகை பொருட்களை டிவிஎஸ் எக்சல் சூப்பரில் பிதுக்கி வீடுகளுக்குக் கொண்டு சேர்த்து விட்டுவரும் வரை கடையைப் பார்த்து கொள்வார். வள்ளியும் தோத்தோக்களையும், காக்காக்களையும், இன்னபிற மனிதர்களையும் பராக்கு பார்த்தபடி பொழுதைப் போக்குவாள். பிறகு அரிசிமாவு கூழ். மற்றுமொரு உறக்கம். தூளிக் கயிறை இறுக்கிப் பிடித்தபடி அவரும் உறங்குவார். எழுந்து மதிய சாப்பாடு. விளையாட்டு. அப்புறம் செரிலாக். இடைக்கிடையே வேகவைத்த காரட்டும் பீன்சும். உறங்கி எழுவதற்குள் நானாவும் அலமுவும் வந்துவிடுவார்கள். அதன் பின்பும் அழும்போதும், அடம்பிடிக்கும் போதும் அவர் தான் தூக்கிக்கொண்டு நடப்பார். வள்ளியும் பாய்ந்து ஏறிக்கொள்வாள். இரவு உறங்குவதற்கு முன் குடிக்கும் தாய்ப்பாலைத்தவிர பிற எல்லாவற்றுக்கும் அவருடைய தயவு தேவையாய் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் தாத்தாவை விட்டு அவள் வரமாட்டாள் என்பதனால் அவரையும் இழுத்துக்கொண்டு ஸ்பென்சருக்கும் மெரினாவுக்கும் செல்ல வேண்டியிருந்தது. நாகரீகம் தெரிந்தவர் என்பதால் அவர்களை விட்டுவிட்டு எவரும் சொல்லாமலே குழந்தையை தூக்கிக்கொண்டு வேடிக்கை காட்ட அகன்று விடுவார்.

சிலநாட்கள் வள்ளி தூங்கியபின் ஊரிலிருக்கும் சிநேகித மார்களுக்கு ஃபோன் அடித்து குசலம் விசாரிப்பார். வந்த இரண்டாவது மாதத்தில் ஆயிரத்தி சொச்சம் பில் வந்ததால் எஸ்.டி.டி அழைப்புகளை லாக் செய்தாள் அலமு. அவர்களே எப்போதாவது அழைப்பார்கள். கடையத்துப் பையனின் கடையிலிருந்து இவரும் காசு கொடுத்து சில நாட்கள் ரெண்டு நிமிடத்திற்குள் பேசிவிட்டு வைத்துவிடுவார். ஐநூறு ரூபாய்க்கு ரெண்டு என வாங்கிய கைபேசிகளில் ஒன்றை நேற்றுதான் நானா அவரிடம் கொடுத்தான். அலமுவுக்குப் புதிதாக கலர் ஃபோன் வாங்கவிருக்கிறேன் என்றான். ஆபீசுக்கு போகும்போதும் வரும்போதும் பாட்டு, எப்.எம் எல்லாம் கேட்கலாம் என்றான். இதில் அதெல்லாம் கேட்க முடியுமா என கேட்க ஆசைதான், ஆனால் கேட்கவில்லை. எப்படியும் கொஞ்சநாள் கழித்து அலமுவின் அல்லது இவனுடைய ஃபோன் இவருக்கு தான் வரும். கடையத்து பையன் அந்த ஐநூறு ரூபாய் ஃபோனில் நம்பர் போடக் கற்றுத் தந்திருந்தான்.

பீத்துணி மாற்றியாகிவிட்டது, இரண்டாம் சுற்று உறங்கிக் கொண்டிருந்தாள் வள்ளி. மீனாட்சி சுந்தரத்திற்குப் பேசினால் என்ன என தோன்றியது. மீனாட்சி மில் சூப்பர் வைசர். “மீனாட்சியா..நாதேன் நாவன்னா லேனா.. .ஊருல என்ன சேதி..சொவமா..”

“லேனா..நூறாயுசு போ..நேத்து ரவையில பெரியவருக்கு சோத்தாங்கையும் காலும் விழுந்துபோச்சு, மூளையில ஏதோ கோளாறாம், ஜான் டாக்டரு மீனாட்சிக்குக் கொண்டு போவ சொல்லிட்டாரு..இப்ப ஆம்புலன்ஸ் வண்டில சின்னவரு, அம்மா எல்லாம் போயிட்டு இருக்காக..நானும் போவப்போறேன்…உசுரோட இருக்கும்போதே ஒரு எட்டு வந்து பாத்துட்டுப் போயிரு..” என்று சொல்லி வைத்துவிட்டார்.

சோறுபோட்ட முதலாளி. நல்ல மனுசர். இன்றைக்கோ நாளைக்கோ என இருக்கிறார். நாவன்னா லேனாவிற்கு ஒரு மாதிரி நெஞ்சு கனத்தது. மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது. வீட்டையும் போய்ப் பார்க்க வேண்டும். அங்கே இருக்கும்வரை வெள்ள மூக்குக் கரையானுடன் நிதமும் போராட்டம் தான். இப்போது என்ன நிலைமையில் இருக்கிறதோ தெரியவில்லை.

சாயங்காலம் நானாவும் அலமுவும் வந்த போது வள்ளி விழித்திருந்தாள். ஊருக்கு சென்றாக வேண்டிய நிர்பந்தத்தை சொன்னார். “இன்னிக்கு புதன், நாளைக்கு இருந்துட்டு வெள்ளிகெழம போயிட்டு வா” என்றான் நானா. ஆனால் நாவன்னா லேனாவால் இருக்க முடியவில்லை. “மொதலாளி சாவ கெடக்குறாரு தம்பி..ஒரு எட்டு போயிட்டு ஓடியாந்துர்றேன்”. “நீங்க போனா வர மாட்டீங்க..உங்கள நம்பித்தான வேலைக்கு போறேன்..ஷ்ரத்தாவ பத்தி யோசிச்சிங்களா?” நாவன்னா லேனாவை தூண்டில் முள் போல கண்டனூர் இழுத்து கொண்டிருந்தது. அவரே வேண்டாம் என்றாலும் போகாமல் இருக்க முடியாது. “ஒரு ரெண்டுநாள்..போயிட்டு வந்துர்றேன்” என்றபடி கிளம்பினார். எரிச்சலுடன் அலமு அவளுடைய புதிய கலர் ஃபோனில் யார் யாருக்கோ அழைத்து விடுப்பை உறுதி செய்துகொண்டாள். “தப்பா நினைக்காதீங்க மாமா..அவள தூங்க வைக்கிறது கூடச் செரமம் ..” ஐநூறு ரூபா ஃபோனை கையோடு கொண்டு போகச் சொன்னான் நானா.

சனிகிழமை காலை ஆறு மணிக்கு எல்லாம் வந்துவிட்டாலும். தூக்கத்தைக் கெடுக்க வேண்டாமே என கீழே வாட்ச்மேனோடு பேசிக்கொண்டு அங்கேயே இருந்தார். வள்ளி என்னவெல்லாம் அவஸ்தைப் பட்டிருப்பாளோ? தூங்கினாளோ இல்லையோ தெரியவில்லை. நேற்றெல்லாம் தனக்கு வள்ளி நினைப்பே வரவில்லையே ஏன்? கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஏழரைக்கு குடியிருப்புக்குச் சென்றபோது, வள்ளி பொம்மைகளைப் பரப்பி விளையாடிக் கொண்டிருந்தாள். அவரைக் கண்டதும் துள்ளிச் சிரித்துத் தவழ்ந்து வந்தாள். அவளை அள்ளித் தூக்கி முத்தமிட்டார்.

சுருக்கமாக  நானாவிடமும் அலமுவிடமும் ஊருக்குச் சென்று வந்த கதையைக் கூறினார். மீனாட்சி மிஷனில் பெரியவருக்கு மூளையில் அடைப்பு நீக்க ஏதோ ஆபரேஷன் என்றார்கள். ஒருநாள் சென்றால் தான் கண்விழிப்பாரா இல்லையா என தெரியும் என்றதால். போன இடத்தில் இன்னொரு நாள் தங்க வேண்டியதாகி விட்டது. மறுநாள் பெரியவர் கண்விழித்தார். எல்லோரையும் பார்த்தபோது பேச்சு வரவில்லை. உணர்ச்சி ததும்பி கண்ணீர் வந்தது. ஆபத்தில்லை பிழைத்துகொள்வார். ஆனால் மாதக்கணக்கு ஆகலாம் என்றார்கள். வீட்டுக்கும் ஒருநடை சென்று பார்த்துவிட்டு நேற்றிரவு பேருந்து ஏறினேன் என்றார். “அவசர அவசரமா இப்புடி விழுந்தடிச்சு வரணுமா என்ன? இன்னும் ரெண்டுநாள் இருந்துட்டு திங்கக்கிழம வந்திருக்கலாமே?” என்றாள் அலமு. வந்திருக்கலாம் தான். ஒன்றும் சொல்லாமல் தேத் தண்ணியை விழுங்கினார்.

வள்ளி அனத்தத் துவங்கினாள். இது அவள் தூங்கும் நேரம். தூளியை சரி செய்துவிட்டு அவளை தூக்கி அதில் போட்டார். அவர் பாடுவதற்கு முன் அந்த புதிய கலர் ஃபோனில் எஸ்.பி.பி “ஆயர்பாடி மாளிகையில்..” எனப் பாடத் துவங்கினார். “பொன்னழகைப் பார்ப்பதற்கும் ..போதை முத்தம் பெறுவதற்கும் கன்னியரே கோபியரே வாரீரோ “ என்று எஸ்.பி.பி பாடியபோது வழிந்த இரு கண்ணீர் சொட்டுக்கள் வள்ளியின் காலில் விழுந்ததை கூட பொருட்படுத்தாமல் புன்முறுவல் பூத்தபடியே உறங்கி போனாள்.

நாவன்னா லேனாவுக்கு தலை கிறுகிறுத்தது. தொண்டை நரம்புகளில் எடைக்கல்லை தொங்கவிட்டது போல் பேச்சு எழவில்லை. விளக்கொளியில் காட்சிகள் நீர்த்து மங்கின. தூளியை ஆட்டிவிட்டுவிட்டு முகம் கழுவச் சென்றார். கதவை அடைத்துக்கொண்டு மேனாட்டு கக்கூசில் அமர்ந்து கொண்டார். புத்து வந்து மரித்து போன வள்ளியாச்சியின் நினைவு அவருக்கு எழுந்தது, பெரியவர், நானா, ஆச்சி, அய்யா என தன்னை விட்டு அகன்ற எல்லோர் முகமும் நினைவுக்கு வந்தது. மூச்சை இழுத்து விட்டுகொண்டார். குழந்தைகள் அப்படித்தான் வளர்ந்துகொண்டே இருப்பார்கள். எந்தப் பொம்மையையும் வள்ளி ஒருவாரத்திற்கு மேல் திரும்பிக்கூடப் பார்த்ததில்லை. தான் இத்தனை மாதம் தாக்குப் பிடித்ததே அதிசயம் என எண்ணிக்கொண்டார். மனம் ஆசுவாசமடைந்தது.

முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தார். வள்ளி தூளியில் அனத்தத் துவங்கினாள். அலமு லேசாக ஆட்டிவிட்டாள். சிணுங்கல் கேவலாகவும், கேவல் அழுகையாகவும் மாறியது. பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். அலமு மீண்டும் பாடலைப் போட்டுவிட்டு ஆட்டினாள். அழுகை நிற்கவே இல்லை. குழந்தையை வெளியிலெடுத்துத் தோளில் போட்டு தட்டினாள். ஏதோ கெட்ட கனவு கண்டிருப்பாள் போலிருக்கிறது. கண் திறக்காமலேயே அழுது கொண்டிருந்தாள். வள்ளியின் தோளில் சிவந்த தடிப்பு ஒன்று தென்பட்டது. “கொசு கடிச்சுருக்குமா” என்றார். வள்ளியை வாங்கி தோளில் தட்டி “ஆயர்பாடி மாளிகையில்..” திரும்ப பாட துவங்கினார். ஆனால் அப்போதும் அழுகை நிற்கவில்லை. “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் ..போதை முத்தம் பெறுவதற்கும்” எனும் வரி வந்தவுடன் வள்ளி அழுகையை நிறுத்தி மலங்க மலங்க விழித்தாள். நாவன்னா லேனா திரும்ப அதே வரியை வாயை குவித்து வேறொரு குரலில் கோமாளித்தனமாக பாடினார். வள்ளிக்கு தூக்கம் கலைந்து விட்டது. நாவன்னா லேனாவின் குரலை கேட்டதும் இப்போது அவளுக்கு சிரிப்புச் சிரிப்பாக வந்தது.

—ooo—-

2 Replies to “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்”

  1. கதாசிரியர், நாவன்னா லேனா, அலமு, சாலா, வள்ளி போன்ற பாத்திரப் படைப்புக்களுடனும் கண்டணூர் சிவன் கோவில், ஜான் டாக்டர், மதுரை மிசன் ஹாஸ்பிடல் என எங்கள் பகுதியை குறிப்பிட்டு எங்கள் ஊருக்கே அழைத்துச்சென்று விட்டார்.
    சிராஜ் அபு தாபி யு ஏ இ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.