ராமலெட்சுமி திரும்ப அப்பாவீட்டோடு வந்துவிட்டாள். அவள் புருஷனைக் காணவில்லை. ஊரில் அடிக்கடி அவளுக்கும் அவனுக்கும் சண்டையாய் இருந்தது. அது பெரிய விஷயம் இல்லை. அவன்தான் கோபப்பட்டு கத்துவான். அவளை அடித்தும் இருக்கிறான். அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு அனுசரணையாக எப்படி நடந்து கொள்ளணும், அவளுக்கும் தெரியவில்லை.
ஒரு ராத்திரி அவள்பக்கத்தில் படுத்திருந்த புருஷன். காலையில் பார்த்தால் இல்லை. அவள் பரபரத்துத் தேடவில்லை. அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாமலேயே பல நாட்கள் கடந்திருக்கின்றன. எங்கோ வெளியே போயிருக்கிறான். வந்துவிடுவான்… என நினைத்தாள். அந்தநாள் முழுவதும் அவன் வரவில்லை. மறுநாளும் வரவில்லை. அவளுக்கு இப்போது பயம் வந்தது. எப்பவுமே பயத்துடனேயே தான் அவள் வாழ வேண்டியிருக்கிறது…
அப்பாவீட்டுக்குப் போய்விடலாமா? ராத்திரி இப்படி அவன்இல்லாமல் தனியே படுத்திருக்கவே பயமாய் இருந்தது. ஒரு அவர் ஒண்ணரை அவரில் பஸ்சில் போய் இறங்கிவிடலாம்… வேறு வழியில்லை. அவள் வந்துநின்ற நிலையைப் பார்த்ததும் சிவகடாட்சம் பதறிப்போனார். “என்னடி?” என்றார் அவள்கையைப் பிடித்துக்கொண்டு. “இவரைக் காணம்ப்பா…” என்றாள். அதைச் சொல்லுமுன் அழுகை வந்துவிட்டது.. சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிப்போன மனுசன். மூணுநாள் ஆச்சி. வீடு திரும்பவில்லை… “எய்யா நான் என்ன செய்யட்டும்?” என்று அழுதாள் ராமலெட்சுமி. “சாப்பிட்டியா?” என்றவர், என்ன கேள்வி, என்று தன்னையே நொந்துகொண்டு “மரகதம், பிள்ளைக்குச் சோறு போடு” என்று உள்ளே பார்த்துக் கத்தினார்.
அடுத்தவீட்டு சாமியப்பன் வந்தார். வயக்காட்டுப் பக்கம் பாம்பு கீம்பு… “விக்”கென்று உள்ளேயிருந்து ராமலெட்சுமியின் அழுகை கேட்டது. “என்னய்யா நீயி” என்று சாமியப்பனைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தார் சிவகடாட்சம். ரெண்டு பேருமாய் என்னென்னவோ பேசினார்கள். “மொதல்ல நாம ரெண்டு பேருமா அந்த ஊருக்குப் போயித் தேடுவோம்” என்றார் சிவகடாட்சம். சரி, என்று நண்பர் தலையாட்டினார். “மரகதம், பிள்ளையைப் பாத்துக்க. நான் போயிட்டு வந்திர்றேன்…” என்று ஜிப்பாவைத் தலைவழியே மாட்டிக்கொண்டார் சிவகடாட்சம். ராமலெட்சுமி தலையைத் தூக்கிப் பார்த்தாள். “கவலைப்படாதம்மா. நான் எப்பிடியும் அவனைக் கொண்டாந்திருவேன்…” என்று அப்பா அவள்தலையைத் தடவித் தந்தார். பின் வெளியே போனார்.
ஒரு நப்பாசையில் ராமலெட்சுமி குடியிருந்த வீட்டைப்போய் முதலில் பார்த்தார்கள். கஜேந்திரன் வந்திருக்கவில்லை. வீட்டில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. “வாங்க, நீங்களா? சாவி இருக்கு வேணுமா?” என்றார் பக்கத்து வீட்டுக்காரர். “உங்களைப் பார்க்கன்னுதான் லெட்சுமி கிளம்பிப்போறதாச் சொல்லிச்சு” என்றார். அவர்கள் இருவரும் தலையாட்டினார்கள். “சாவி இருக்கட்டும் ஐயா” என்றபடி தெருவுக்கு வந்தார்கள்.
அவனது நண்பர்கள் என்று யாரையும் இவர்களுக்குத் தெரியாது. எங்கே தேடுவது, எப்படி ஆரம்பிப்பது தெரியவில்லை. வீட்டில் ஒருவார்த்தை சொல்லிவிட்டுப் போகமாட்டானா இந்த மனுசன்? வரட்டும், நாலு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி கேட்கிறேன், என நினைத்துக்கொண்டார் சிவகடாட்சம். ஊர் எல்லை தாண்டினாலே நாலா திசையிலும் வயல்கள். அப்படி எங்கயாவது போய், பாம்பு கீம்பு கடிச்சி விழுந்து கிடக்கிறானோ… சாமியப்பனுக்கு அதே சந்தேகம் தான். அதையும் பார்த்திற வேண்டிதான். வேற வழி இல்லை. சும்மா அப்படியே நின்னுட்டிருக்க முடியுமா? “நீரு அந்தப் பக்கமாப் பாரும். நான் இந்தப் பக்கமாத் தேடிப் போறேன்” என்று பிரித்துக்கொண்டார்கள். மாலைவரை மாற்றி மாற்றித் தேடியாயிற்று. சாமியப்பனுக்கு நல்ல யோசனையே வராது… அவர் சொன்னாரேயென்று எங்கே கிணறு பார்த்தாலும் அதையும் எட்டிப் பார்த்தார்கள். “வீட்டில் அப்பிடி அவன் தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு எதுவும் நடக்கல்ல ஐயா” என்றார் அவர். எதுவுமே நடக்கவில்லை, என்கிறாள் இவள். பேச்சுவார்த்தையே இல்லை. ரெண்டுநாளாய் எதோ யோசனையில் இருந்திருக்கிறான். அவனுக்குக் கோபம் வந்திட்டால் பேசவே மாட்டான். ஆனால் ஆத்திரமாய் முகம் ஜிவுஜிவுவென்று மாறிவிடும். இஞ்சி தின்ற குரங்கு. இது அப்படியும் இல்லை. என்னவோ தன்யோசனை. அப்பன்னால் நாலுவார்த்தை பேசலாமே, என்றுதான் இருந்தது அவளுக்கு. அவளுக்குத் தெரியாமல் அவனுக்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. எல்லாத்தையும் அவளிடம் அவன் பேசுகிறவனும் அல்ல. அவளை அத்தனைக்கு அவன் மதிப்பவனும் அல்ல.
இனி என்ன பண்ண என்றுதான் குழப்பமாய் இருந்தது. திரும்ப வீடுவரை போய்ப் பார்த்தார்கள். அவனது அப்பா சிறுகாட்டூரில் இருக்கிறார். அவரது அலைபேசி எண் உள்ளங்கையளவு குறிப்பேட்டில் நல்லவேளை குறித்து வைத்திருந்தார். அங்கே ஃபோன் போட்டுக் கேட்டார்கள். கஜேந்திரன் வந்திருக்கவில்லை. “என்ன? இங்க வரல்லியே? ஊருக்கு அவனுக்கே போட்டுப் பாருங்க” என்றார்கள். கூமுட்டைகள். அவனுக்குப் போட்டுப் பாக்காமலா இவங்களைக் கேட்பார்கள்? அவனது அலைபேசி அடித்துக்கொண்டே யிருந்தது. எடுக்கவே இல்லை அவன். இப்போது வீட்டுவாசலில் இருந்து ஒருமுறை அடித்துப் பார்த்தார் சிவகடாட்சம். அலைபேசி ஒலித்தது, வீட்டுக்கு உள்ளேயிருந்து. அவன் அலைபேசியை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போயிருந்தான். தன்னைத் தேடக்கூடாது என்று அவன் நினைத்தானா? திட்டம் போட்டே காணாமல் பொனானா?… என முதன்முறையாக அவர் கவலைப்பட்டார்.
போலிஸ் ஸ்டேஷன்ல ஒரு கம்பிளெயிண்ட் குடுத்துறலாம், என்றார் சாமியப்பன். “எங்காவது பாடிய ட்ரேஸ் பண்ணினால்…” என்று அவர் விளக்கினார். “ஒம்ம வாய்ல நல்ல வார்த்தையே வராதாய்யா?” என்றார் சிவகடாட்சம். என்றாலும் அதையும் செய்தார்கள். “ஏன் அவங்க மிஸஸ் வராமல் நீங்க மாத்திரம் வந்தீங்க?” என்று கேட்டான் இன்ஸ்பெக்டர். “மாத்தூர்ல ராமகிருஷ்ணன் தெரியுமா?” என்று புன்னகையுடன கேட்டார் சாமியபபன் அவரிடம். “தெரியாது. யார் அவரு?” “எங்க ரிலேடிவ்… அவர்தான் மாத்தூர்ல இன்ஸ்பெக்டர்” என்று மேலும் விரிந்த புன்னகையுடன் பேசினார் சாமியப்பன். “அதுக்கென்ன?” என்று அவர்பக்கம் திரும்பினான் இன்ஸ்பெக்டர். “அவங்க மிஸஸ் இல்லாமல் நீங்க வந்து பிராது குடுக்கறீங்க. இதையே நாங்க சந்தேகப்படறோம்… அவங்களைக் கூட்டிட்டு வாங்க” என்றான் அழுத்தமாய்.
ஒருவாரம் ஆகிவிட்டது. கஜேந்திரன் போன இடம் தெரியவில்லை. ராமலெட்சுமி முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவள் அழுவதை நிறுத்தி விட்டாள். ஒருமாதிரி வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை கவனிக்க வேண்டியிருந்தது. டாக்டரிடம் அழைத்துப் போனார்கள். “தூக்கமே இல்லை. நல்லா ரெஸ்ட் எடுக்கணும்” என்று ஊசி போட்டார்கள். மருந்துகளுடன் தூக்க மாத்திரையும் தந்தார்கள். என்றாலும் அவள் தூக்கம் வராமல் தவித்தாள். திடீரென படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள்.
ஏற்கனவே பயந்த சுபாவம். கிணற்றடிக்குப் போய்க் கைகழுவவே, கூட மரகதம் போனாள். அவள் சிரிப்பு போய்விட்டது. அவளையும் கூட்டிக்கொண்டு போலிஸ் நிலையம் போய்வந்ததில் இருந்து அவள் நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. அந்த இன்ஸ்பெக்டர் கிராதகன். அந்தப் பெண் மலங்க மலங்க விழிக்கிறது… அவளை நிற்கவைத்து என்னவெல்லாம் கேட்கிறான்.
அவருக்கு வேறபெண் யார்கூடயாவது தொடர்பு உண்டா?… என்கிறான். “உனக்கு?…” என்று அடுத்த கேள்வி. அவளுக்கு உடம்பே கூசியது. யார்கிட்டயாவது கடன் வாங்கித் திருப்பித் தராமல் வீட்டாண்ட தகராறு எதும் நடந்ததா? கெட்ட சகவாசம் எதும் உண்டா? யார் மேலயாவது சந்தேகப் படறீங்களா? உங்க வீட்ல நகை நட்டு எல்லாம் பத்திரமா இருக்கா? அதை அவன் எடுத்துக்கிட்டுப் போயிட்டானா… இங்க பாருங்க. போலிஸ்கிட்ட எதையும் மறைச்சோ குறைச்சோ சொல்லக்கூடாது. எப்பிடியும் நாளைக்கு எல்லாமே வெளிய வந்துரும்.. அப்ப நீங்க விஷயத்தை மறைச்சதும் வெளிய வந்துரும். அவனுக்கு எதிரில் நிற்கிற எல்லாருமே குற்றவாளிகளாய்த் தெரிந்தார்கள். சொத்துக்காக அவனையே கொன்றுவிட்டு இப்பிடி இவங்களே நாடகம் ஆடவும் கூடும்…
கேட்டால், எங்க கடமை, என்கிறான். சாமியப்பன் அந்தமுறை கூடவரவே யில்லை. “இவர் யாரு? இவரை ஏன் கூடக் கூட்டி வந்தீங்க?” என்று போனமுறையே கேட்டான் இன்ஸ்பெக்டர். சிலருக்கு சில ஆட்களை முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போய்விடுகிறது. இன்ஸ்பெக்டர் கன்னாபின்னாவென்று கற்பனைகள் செய்தான். “என்னய்யா, இந்தாளு பத்தாம் தேதியில யிருந்து காணம்… அதே தேதியில பக்கத்து ஊர்ல யாரும் பொம்பளை காணாமல் போயிருக்கான்னு விசாரிச்சிப் பாரு” என்கிறான். எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்.
கஜேந்திரனைப் பற்றிய தகவல்கள் இல்லை. எந்த ரயில்வே கேட்டில் எந்தப் பிணம் விழுந்தாலும், மார்ச்சுவரிக்கு எந்தப் பிணம் வந்தாலும் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து அவர்களைக் கூப்பிட்டு ஆள் வந்தது. ரெண்டுதரம் ராமலெட்சுமியை அழைத்துப் போய்க் காட்டினார்கள். அவள் பயந்து அலறி அழுத அழுகை… அப்பா அவளை இறுக்கிப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.
அதன்பிறகு அவரே இன்ஸ்பெக்ரிடம் சொல்லிவிட்டார். அடையாளம் காட்டணுமானால் இனி நான் வர்றேன். என் பெண் வேண்டாம்… அன்றைக்கு என்ன நல்ல மூடோ இன்ஸபெக்டர் சம்மதித்தான். ராமலெட்சுமி பேசுவதையே நிறுத்தி யிருந்தாள். எப்பவும் அவள் அறையில் விளக்கு எரியவிட வேண்டியிருந்தது. இராத்திரி அவள் தூங்கும் போதுகூட விளக்கு எரிந்தபடி இருந்தது. திடீரென்று அவள் பதறியெழுந்து அம்மாவைக் கட்டிக்கொள்வாள். அவள் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. என்னடி, என்று கேட்டால் அவளுக்குச் சொல்லத் தெரியவில்லை. அவள் சிரிப்பு தொலைந்திருந்தது.
ஆறு ஏழு மாசம் வரை அவளுக்கு அந்த நடுக்கம் இருந்துகொண்டே இருந்தது. திடீர் திடீரென்று மாதவிடாய் வேறு, ஒழுங்கற்றுப் போனது. விடாத மாத்திரைகள். சிலபோது மாத்திரை சாப்பிட அவள் முரணடு பிடித்தால் சாப்பாட்டோடு கலந்து தந்தார்கள். தூக்க மாத்திரையை அவள் விசிறியடித்தால் நர்ஸ் வரவழைத்து ஊசிபோட்டுத் தூங்க வைத்தார்கள். “நான் என்ன பாவம் பண்ணினேன்… என் தலைல இப்பிடி வந்து விடிஞ்சிட்டதே” என சிவகடாட்சம் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
~oOo~
பிறகு அவள் ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஒவ்வொரு ஜோசியராகக் காட்டினார்கள். எல்லாருமே “இவளுக்குக் கல்யாண யோகம் இல்லையே, எப்பிடிக் கல்யாணம் பண்ணினீங்க?” என்றார்கள். கல்யாணப் பொருத்தம் என்று ஒரு ஜோசியரையும் அவர் பார்க்கவில்லை. மாப்பிள்ளைவீட்டில் கேட்டு வந்தார்கள். மாப்பிள்ளை பேரில் சொந்த வீடு இருக்கிறது. பிடித்திருந்தது அவருக்கு. கல்யாணம் பண்ணிக்கொடுத்தார். அவ்வளவுதான். இதில் பிரச்னை வராது, என நினைத்தார். வந்தேவிட்டது. எத்தனை பெரிய அளவில் அந்தப் பிரச்னை வெடித்துவிட்டது. மாப்பிள்ளை வீட்டுக்காரர்க்ள் பக்கமும் யாருக்கும் எதுவும் புரியவில்லை. அங்கேயும் எங்கேயும் அவன் போகவில்லை. யாருமே அவனை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன் என்று பின்னாளில் தகவல் தரவில்லை. அவன் காணாமல் போனது அவர்களுக்கும் புதிராகவே இருந்தது. நாட்கள் மாதங்கள் வருடங்களாக ஓடின. ராமலெட்சுமி பாடுதான் பாவம். அவள் தேறி வரவேயில்லை.
ஒரு ஜோசியன் “இந்த மாப்பிள்ளை இப்போது உயிருடன் இல்லை” என்றான். “நான் சொல்லல்ல?” என்றார் சாமியப்பன். அவரைக் கூடக் கூட்டிக்கொண்டே வந்திருக்கக் கூடாது. “வீட்டுக்குப் போயி அங்க எல்லார் முன்னாடியும் எதாவது உளறிக் கொட்டிட்டிருக்காதீரும்யா” என்றார் சிவகடாட்சம். “அப்பிடித் தெரிஞ்சிட்டாலும் தேவலையே” என்றுதான் அப்போது இருந்தது அவருக்கு. அவனைப் பற்றிய ஒரு தகவலும் இல்லை. இரவில் படுத்திருந்த ஆம்பளையைக் காலையில் எழுந்து பார்த்தால் இல்லை. இவளும் இப்பிடி இந்த இரண்டு வருடத்தில் உருக்குலைந்து போவாள் என்று யார் எதிர்பார்த்தார்கள்.
ராமலெட்சுமி அதிகம் யாருடனும் பேசுவதே கிடையாது. கூடத்தில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். அதையே வெறித்தபடி இருப்பாள். அதை அவள் பார்க்கிறாளா இல்லையா என்பதே தெரியாது. திடீரென்று தன்னைப்போல எதையோ நினைத்து அழுகிறாள். எதற்கு அழுகிறாள் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் சிரிப்பு… அவள் சிரித்தே பல வருடங்கள் ஆகிவிட்டன.
கஜேந்திரன் காணாமல் போய் நாலு வருடங்களுக்கு மேல் ஆகிறது. முதல் ஒரு வருடத்துக்குப் பின் அந்த இன்ஸ்பெக்டர் அவர்களைக் கூப்பிடுவதே கூட இல்லை. அவனே இவர்களை மறந்திருக்கவும் கூடும். இவர்களும் அவனைப் போய்ப் பார்ப்பது இல்லை. அவனே வேலைமாற்றி வேறு ஊருக்குப் போயிருக்கவும் கூடும். இப்போது அவர் கவலையெல்லாம் பெண்ணை எப்பாடு பட்டாவது தேற்றிக் கொண்டுவர வேண்டும் என்பதாய் இருந்தது. ஊருக்கு எந்தச் சாமியார் வந்தாலும் போய் விழுந்து வணங்கினார்கள். எந்த ஜோசியர் எந்த பரிகாரம் சொன்னாலும் அதைத் தட்டாமல் செய்தார்கள். பரிகார ஸ்தலங்களின் கோவில் குளத்தில் அதிகாலை நாலு மணிக்குக் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட சந்நிதியில் நின்றார்கள். மாவிளக்கு போட்டார்கள். எலுமிச்சம்பழ தோலைப் பிதுக்கித் திருப்பி அதில் நெய்விட்டு தீபம் ஏற்றினார்கள். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தினார்கள். அரளிப்பூ மாலை. சந்தன மாலை. வாழைப்பழ மாலை. அன்னதானம். திருஷ்டி கழித்தல்… எத்தனை விதமான பரிகாரங்கள். சுமங்கலிக்கு வஸ்திரம். பிராமணனுக்கு தட்சிணை. ஆலமரத்தைச் சுத்துதல்… முடிவே இல்லாத பரிகாரங்கள்.
ஒரு சாமியார் மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்றை பூஜையில் வைத்துக் கொடுத்தார். இதை வீட்டில் நாலுநாள் சாமி முன்னால் வைத்திருந்து வணங்குங்கள். வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி அணையவிடாமல் நாலுநாள் பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் இந்தத் தேங்காயைக் குழந்தை (ராமலெட்சுமிதான்) தலையை மூணு சுற்று சுற்றிவிட்டு நடுத்தெருவில் உடையுங்கள், என்றார். அதையும் செய்தாயிற்று.
வீட்டில் சக்கரத் தகடு வாங்கிவைத்து பூஜை செய்தார்கள். போகாத கோவில் இல்லை. சுத்தாத தெய்வம் இல்லை. பார்க்காத ஜோசியரும் இல்லை. எந்த ஊரில் எந்தக் கோவில் பிரசித்தம்… எந்த ஜோசியர் பிரசித்தம் எல்லாரையும் பார்த்தார்கள். எத்தனையோ சாமியாரையும் பார்த்தாயிற்று. ஒரு மாற்றமும் காணவில்லை. பெண்ணைப் பார்க்கப் பார்க்க அவருக்குப் பதறியது. “எல்லாம் முன்ஜென்ம பாவம் மரகதம்… இப்ப பிள்ளை இப்பிடித் திண்டாடுது” என்றார். ராமலெட்சுமியின் ஜாதகம் தவிர, தன் ஜாதகத்தையும், மரகதத்தின் ஜாதகத்தையும் கூட காட்டினார்கள்.
~oOo~
ராமேஸ்வரத்தில் அமாவாசைத் திதி, தர்ப்பணம் என்றுகூட முன்னோர் சாபம் தீர்த்தார்கள். கோவில் சுற்றுலா என்று டூரிஸ்ட் பஸ்களில் சனக்கூட்டத்துடன் போனார்கள். வேதகிரி என்று ஒரு ஊர். அங்கே மதியம் ஒரு ஹால்ட். கூட இருந்த நபர் இங்க ஒரு ஜோசியர் இருக்கிறார். ரொம்ப சக்தியான ஆளு. உள்ள வர்றவங்க முகத்தைப் பார்த்தே பலன் சொல்வாராக்கும்? எங்க அக்காபொண்ணு போயிட்டு வந்து சொன்னா. “உனக்கு அடுத்த மார்ச்ல நல்லவேலை வேறவேலை கிடைக்கும்மா” அப்டின்னிருக்கார். உள்ளயே நுழையல. ஜாதகமோ கைரேகையோ எதுவுமே பாக்கல. “அப்பிடியே நடந்ததா?” என்று கேட்டாள் மரகதம் ஆர்வத்துடன். “பின்னே? இப்ப கவர்மென்ட் ஆபிசரா இருக்கா. நல்ல இடத்துல கல்யாணமும் ஆகி ஜோரா இருக்கா…”
சரி என்று அந்த ஜோசியரையும் பார்த்தார்கள். அவர் ரொம்ப நேரம் ராமலெட்சமியையே பார்த்தார். பெருமூச்சு விட்டார். “இந்தப் பொண்ணு பாவம் எவ்வளவு கஷ்டப்படுது… ஆனால் இவ ஜாதகப்படி இவ புருஷன்… இன்னும் சாகல்ல. உயிரோட தான் இருக்கான்” என்றார் அவர். “கூடிய சீக்கிரம் இவளும் அவனும் சந்திக்கக்கூட வாய்ப்பு இருக்கு” என்றார். வேடிக்கையாய் இருந்தது. எத்தனையோ பார்த்தாச்சி. இனிமேலா வரப்போகிறான் என்று இருந்தது அவருக்கு. ஜோசியரின் எதிரே பெரிய காளிஸ்வரி படம் இருந்தது. அதன் எதிரே இருந்த குங்கும டப்பாவில் இருந்து பிரசாதம் எடுத்துக் கொடுத்தார். வாங்கிக்கொண்டு திரும்பினார்கள்.
அதற்குள் அடுத்த நபர் ஒருவர், சாமியார் ஒருவர் அந்த ஊருக்கு வந்திருப்பதாகச் சொன்னார். “ரொமப சக்திவாய்ந்த சாமியார். எங்க பெரியம்மாபையன்…” என அவர் ஒரு கதை சொன்னார். “எல்லாருக்கும் சக்தி இருக்கு. நமக்கு தான் பெத்துக்கற அதிர்ஷ்டம் இல்லை” என்றார் சிவகடாட்சம். ஒருவகையில் உலகில் எத்தனை விதமான பிரச்னைகள் இருக்கின்றன. கூடவருகிற இந்த தம்பதிகளுக்குக் குழந்தை இல்லை. கல்யாணம் ஆகி பதினைந்து வருடம் ஆகிறது. அதற்காகவே ஷேத்ராடனம் என வந்திருக்கிறார்கள். நம்ம கதை வேற மாதிரி. எத்தனை சாமியார் பாத்தாச்சி, என்றிருந்தது.
“மத்த சாமியார் மாதிரி இல்லை இவரு” என்றார் கூட வந்தவர். “எந்தப் பொருள் காணாமல் போனாலும்… கிடைக்கும் கிடைக்காதுன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு சொல்லிருவாரு… பொருள் எந்த திசையில் கிடைக்கும், அதையும் சொல்லிருவாரு… ஒருதடவை…” என அவர் ஆரம்பிக்க வந்தபோது அந்த சாமியாரின் ஜாகைக்கு வந்திருந்தார்கள். அபார கூட்டம். திரும்பிப் போய்விடலாமா என்றிருந்தது. “என்ன இவ்ள கூட்டம் இருக்கே?” என்றார் சிவகடாட்சம். “இவர்கிட்ட என்ன விசேஷம்னால், வரிசை எல்லாம் கிடையாது. அவரா சட்னு ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து உள்ள கூப்பிடுவாரு. அதனாலதான் அவர் சொல்றது பலிக்கிறது. காரியம் பலிதம் ஆகாத ஆசாமிகளை அவர் உள்ளே கூப்பிடறதே இல்லை.”
ராமலெட்சுமிக்கு உள்ளே வரவே இஷ்டம் இல்லை. விட்டால் அவள் அங்கேயே தூங்கிவிடுவாளாட்டம் இருந்தது. அத்தனை அசதியாய் இருந்தாள். தொடர்ச்சியாய் அவர்கள் பல கோவில்களைப் பார்த்துக்கொண்டே வந்திருந்தார்கள். ஒரு ஓரமாய் உட்காரக் கூட இயலாமல் போய் நின்றார்கள். திடீரென்று ஒரு சீடர் வந்து அவர்களை ஸ்வாமி கூப்பிடுவதாகச் சொன்னார். “நாங்க உள்ள வர்றது ஸ்வாமிக்குத் தெரிஞ்சதா?” என ஆச்சர்யமாய்க் கேட்டார் சிவகடாட்சம். “சிவப்பு ஜிப்பாக்காரரை உள்ளே அழைச்சிண்டு வான்னு சொல்லிவிட்டார்” என்றார் சீடர். சாமியார் உள்ளறையில் இருக்கிறார். எழுந்து எட்டிப் பார்த்தாப்போல தன்னை எப்படி அவர் அடையாளங் கண்டார். வேளைன்னு ஒண்ணு இருக்கு போல. அப்பவே சிவகடாட்சத்துக்கு சிலிர்த்தது. பெண்ணுக்கு விமோசனம் இங்கேயாவது கிடைக்குமா என்று பரபரப்பானார். ராமலெட்சுமியைக் கூட்டிக்கொண்டு ஸ்வாமி இருந்த அறைக்குள் நுழைந்தார்.
நுழைந்த ஜோரில் ராமலெட்சுமி, ஆச்சர்யம்… சிரிக்க ஆரம்பித்தாள். ஆகா, என்ற கணம் அது. சிவகடாட்சம் பூரித்துப்போய் ஸ்வாமியைப் பார்த்தார். பெரிய தாடி. கையில் கமண்டலம். தலையில் சிவப்பு முண்டாசு. ஆனால் அவருக்குத் தெரிந்தது. அது கஜேந்திரன். ராமலெட்சுமி சிரித்தது ஸ்வாமியைப் பார்த்தா, சிவகடாட்சத்தைப் பார்த்தா தெரியவில்லை. சுற்றிலும் சீடர்கள் ஸ்வாமியின் வாக்குக்குக் காத்திருந்தார்கள்