செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்ட இஸ்ரோ பெண்மணிகள்

இந்தக் காணொளியை வாசகர்களுக்குக் கொடுப்பதில் சொல்வனம் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது. இந்தியா செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பிய விண்கலம் 2014 இல் செவ்வாய் கிரகத்தை அடைந்து அந்தக் கிரகத்தைச் சுற்றி சுழற்சியில் அமர்ந்தது. இதன் சிறப்பு- இது இன்னொரு கிரகத்தைச் சுற்றி வர ஒரு கலத்தை அனுப்புவதில் இந்தியாவின் முதல் முயற்சி.

இந்த முயற்சிக்குப் பின்னே இருந்த மூன்று பெண் அறிவியலாளர்கள்:

1. சீதா சோமசுந்தரம் – திட்ட இயக்குனர், இஸ்ரோ இந்திய விண்வெளி ஆய்வு மையம்
2. நந்தினி ஹரிநாத் – திட்ட மேலாளர், ஏவுகணை வடிவமைப்பு – செயல்முறை இயக்குநர்
3. மினால் ரோஹித் – அறிவியலாளர் மற்றும் பொறியாளர் – செவ்வாய் கிரகத்திற்கான மீத்தேன் உணர்கருவி திட்ட மேலாளர்

இவர்களை முன்னிறுத்திக் காட்டி, மிகச் சில நிமிடங்களில் இந்தக் காணொளி இந்தியாவுக்கும், இந்தியருக்கும் பெருமிதம் மிகும்படி செய்கிறது. வணிக ஆடம்பரங்கள் ஏதும் இல்லாது, அடக்கமான இசையோடு, இந்தக் காணொளி சொல்லும் கதை- நம் இந்தியப் பெண்கள் மூவர், தம் பங்கு இந்தச் சிக்கலான தொழில் நுட்ப முயற்சியில் என்னென்ன என்பதையும், எப்படி மொத்த இந்தியாவும் இவர்தம் முயற்சியில் கண் நாட்டிப் பார்த்தது என்பதையும், இந்த முயற்சியின் வெற்றி தம்முடன் பணியாற்றிய எல்லாருடைய கூட்டு முயற்சியின் வெற்றி என்பதையும் இந்தப் பெண்மணிகள்- என்ன ஒரு அற்புத மணிகள் அவர்கள்!- இயல்பான தன்மையோடு நம்மிடம் சொல்கிறார்கள். ஓரிடத்தில் இந்த முயற்சியின் சுருக்கெழுத்துப் பெயரான MOM என்பது எப்படிப் பொருத்தமானது என்பதைச் சுட்டுகிறார்கள். செவ்வாய் கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்பும் முயற்சிக்கு ஒன்பது மாதங்கள் பிடித்தனவாம். அது குழந்தைப் பேறு காலத்தை ஒத்திருக்கிறது என்பது மறை சுட்டு.

நாட்டைப் பிளக்கவும், இந்திய ஒற்றுமையை ஒழிக்கவும் ஏராளமான சக்திகள் நம்மைச் சுற்றிக் கடும் முயற்சியில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில், இந்தியரின் ஒருங்குபட்ட முயற்சிகள் எத்தகைய அற்புத சாதனைகளை நமக்குச் சாத்தியமாக்கி இருக்கின்றன என்பதை நினைவூட்டும் இந்தக் காணொளி, குடியரசு தினத்தின் அருமையை நமக்கு இன்னொரு விதத்தில் உணர்த்துகிறது. இந்தப் பெண்களின் சாதனைகள் நம் அனைவருக்கும் பெருமை உணர்வைக் கொணர்பவை. உலக விண்வெளிப் பயண அமைப்புகளில் மிக அரிய சாதனைகளைப் பகட்டின்றி, பெரும் விளம்பரங்கள் இன்றிச் செய்து வரும் ஐஎஸ் ஆர் ஓ அமைப்பு அரசமைப்புகள் கூடச் செவ்வனே செயல்பட முடியும் என்று காட்டுகிற ஒன்று என நாம் சொல்லலாமா?