சர்வாதிகாரம் வேரூன்றும்போது

தமிழில்: அ. சதானந்தன்

ஒரு தேசத்தின் வாழ்வில், குறிப்பாக எப்போது, சர்வாதிகாரம் வேர் கொள்கிறது? அது அரிதாகவே கணப்போதில் நிகழ்கிறது; அந்திப் பொழுதைப் போல் அது வந்தடைகிறது, துவக்கத்தில், கண்கள் பழகிக் கொள்கின்றன.

சுயமரியாதையை வென்றெடுக்கும் சாத்தியம் ஷ்யு ஹொங்சியை அரசியலுக்கு இழுத்தது. இரண்டாம் உலக யுத்த கால ஷாங்ஹாயில் ஏழ்மைக்குள் சரிந்து கொண்டிருந்த மத்திய வர்க்க குடும்பத்தில் ஒருவராய் வளர்ந்த ஷ்யு ஹொங்சி, ஜப்பானிய ஆக்கிரமிப்பையும் அதைத் தவிர்க்கத் தவறிய சீனத் தலைவர்களையும் வெறுத்தார். “எங்கள் குட்டையில் ஜப்பானிய ராணுவத்தினர் மீன் பிடிப்பார்கள். ஒற்றைக் காசுகூட கொடுக்காமல் இருப்பதிலேயே பெரிய கெண்டையை எடுத்துக் கொண்டு திமிராக நடந்து செல்வார்கள்,” என்று ஷ்யு பல ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதிய தன் சுயசரிதையில் நினைவுகூர்ந்தார். “எங்கள் தேசத்தின் சோகம் இளம் வயதில் என் அரசியல் விழிப்புணர்வைத் தட்டி எழுப்பியது.”

மீண்டும் சீனாவை வலிமையான நாடாக உருவாக்குவது குறித்து அவர் கனவு கண்டார், “அநீதியையும் இருளையும்” அழிக்க விரும்பினார். அவர் தன் பதினான்காவது வயதில், மாவ் ட்ஸெ டுங்கின் தரிசனமான புரட்சிகர மாற்றத்தில் நம்பிக்கை கொண்டு, 1949ஆம் ஆண்டில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பே கம்யூனிச கட்சியில் உறுப்பினரானார். மாவ்வின் திட்டத்தில் விரிசல்களை முதல் முறை காண நேர்ந்தபோது, துணிச்சல் மிகுந்த சீர்திருத்தத்தின் பக்க விளைவுகள் என்று அவற்றை நியாயப்படுத்திக் கொண்டார். தம்மிடையே இருந்த புரட்சி எதிர்ப்பாளர்களை அடையாளம் காண ஷ்யு மற்றும் அவரது பள்ளித் தோழர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர்களால் யாரையும் கண்டுகொள்ள முடியவில்லை. அவர்கள் அப்பாவிச் சிறுவன் ஒருவனைக் காட்டிக் கொடுத்தார்கள். “விமரிசனத்துக்குரிய இலக்குக்கான தேவையை நிறைவு செய்ய அவன் போதுமானதாக இருந்தான்”, என்று சமாதானப்படுத்திக் கொள்கிறார் ஷ்யு.

உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவனுக்குச் சிறிது காலம் சர்வாதிகாரம் பரிசளிக்கிறது. இடம் பெற அரிதான ஷாங்காயின் பிரபல மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில அவருக்கு அனுமதி கிடைத்தது. வன்முறை பரவிக் கொண்டிருந்தது. ஆனால் புரட்சிக்கு எதிரான செயல்களை ஒடுக்கும் நடவடிக்கையின்கீழ் (Campaign to Suppress Counter-Revolutionary Activities) மரண தண்டனைக்கு ஆளான ஆண்கள், பெண்களின் பட்டியல்கள் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டபோது அதை ஷ்யுவால் நியாயப்படுத்த முடிந்தது. தான் ஒரு ‘பார்வையாளர்’ மட்டுமே, என்று அவர் தனக்குச் சொல்லிக் கொண்டார்.

தன் மக்களிடம் அவர்களின் அக்கம் பக்கத்தில் வசிப்போரைக் கண்காணிக்கச் சொன்னார் மாவ், உள்ளிருந்தும் வெளியே இருந்தும் வரும் அச்சுறுத்தல்களை அம்பலப்படுத்தச் சொன்னார். ஷ்யு தன் பங்கைச் செய்தார், அவரும் ஒரு நாள் சந்தேகிக்கப்படும்வரை. 1957ஆம் ஆண்டு மாவ் “ஆயிரம் பூக்கள் மலரட்டும், நூற்றுக்கணக்கான சிந்தனைகள் பொருதிக் கொள்ளட்டும்,” என்ற அழைப்பை மீண்டும் விடுத்தார். சோவியத் யூனியனைக் குறித்துத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார் ஷ்யு, மாஸ்கோவின் கட்டுப்பாட்டுக்கு எதிரான ஹங்கேரிய கிளர்ச்சியை ஆதரித்துப் பேசினார். அது ஒரு பொறி. ஷ்யுவின் கல்லூரி முதல்வர், “கட்சிக்கு எதிரான துரோகி” என்று அவருக்கு பட்டம் சூட்டினார். இப்போது பலியாக ஆக்கப்பட்ட ஷ்யு, பிறரைக் குறித்து தான் கிளிப்பிள்ளையாகத் திருப்பிச் சொன்ன குற்றச்சாட்டுகள், “பொய்களேயன்றி வேறல்ல,” என்பதை உணர்ந்தார்.

சோவியத் குலாக்குகளைப் போல் அமைக்கப்பட்ட லாவ்காய்1 (கட்டாய உழைப்புத் தண்டனை முகாம்) செல்ல வேண்டுமென அவருக்கு 1958ஆம் அண்டு ஏப்ரல் மாதம் தண்டனையளிக்கப்பட்டது. வலதுசாரிகளுக்கு எதிரான நடவடிக்கையில் (Anti-Rightist Campaign) சீனாவெங்கும் தண்டிக்கப்பட்ட ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ஆண்கள் மற்றும் பெண்களில் அவரும் ஒருவர். தெற்கில் இருந்த, வறண்ட என்ஹ்வை மாநிலப் பகுதியான வெண்புல் மலை முகடு என்ற இடத்தில் இருந்த முகாமுக்கு அவர் அனுப்பப்பட்டார். அவரும் பிற சிறைக்கைதிகளும் மூங்கில் கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்டனர். “தரிசு நிலத்தை மீட்கும்” நோக்கத்தில் மண்ணை விரல்களால் சுரண்டக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

சர்வாதிகாரிகள் அடைய முடியாததை அளிக்கப் போவதாய்ச் சொல்கிறார்கள். 1958ஆம் ஆண்டில், பதினைந்தே ஆண்டுகளில் தன் தேசத்தை பிரிட்டனைத் தாண்டிச் செலுத்தப்போவதாக உறுதி பூண்டார் மாவ். ஷ்யுவின் முகாமில், ஒவ்வொரு நாளும் பத்தொன்பது மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. வயிற்றுப்போக்கு சிறைக்கைதிகளை வாதை செய்தது. ஷ்யுவின் கெண்டைக் கால்கள், நீர்க்கட்டிகளால் வீங்கி, தொடைகள் அளவுக்குப் பெருத்தன. அறுவடையை மும்மடங்கு பெருக்கப் போவதாய் உறுதி அளித்த மாவ், அதற்காக வழக்கத்தைவிட மும்மடங்கு நெருக்கமாய் விதைநெல்லை நடவு செய்ய ஆணை பிறப்பித்தார். பயிர்கள் மடிந்தன. உணவுப் பஞ்சம் மிகுந்தது.

அடுத்த பத்தாண்டுகளில் ஷ்யு மும்முறை லாவ்காயிலிருந்து தப்பினார். ஒவ்வொரு முறையும் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது விடாமுயற்சி திகைக்க வைப்பது. ஏனெனில், லாவ்காயில் இருந்து பிழைத்த ஹாரி உ பின்னர் கூறியது போல், “அந்நாட்களின் சீனம் முழுதும் சிறைதான்”. 1972ஆம் ஆண்டில் மீண்டும் தப்பிய ஷ்யு, ஒரு வழியாய் மங்கோலியாவை அடைந்து விடுதலை பெற்றார். அங்கு குடிபுகுந்து, பின்னர் மணம் புரிந்தார். அவர் தன் கதையை எழுதி வைத்தார், ஆனால் அவர் யாரென்பது யாருக்கும் தெரியாதிருந்தது. 2008ஆம் ஆண்டு அவர் இறந்தபோதும் அது பதிப்பிக்கப்பட்டிருக்கவில்லை. ஸ்வீடிஷ்-சீன பத்திரிக்கையாளரான எர்லிங் ஹோ, ஷ்யு தப்பியது பற்றிய ஒரு வாய்மொழிக் கதையை கேள்விப்பட்டு 2012ஆம் ஆண்டு அவரது கைப்பிரதியைக் கண்டுபிடித்தார். இம்மாதம், ஜனவரியில், “ஏற முடியாத சுவரில்லை” (“No Wall Too High”) ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்படுகிறது.

மனிதன் பலியாக மறுக்கிறான் என்பதை உறுதி செய்யும் வாக்குமூலமாய் ஷ்யுவின் கதையை வாசிக்கலாம், அல்லது, ஹங்கரியின் கிளர்ச்சி குறித்து ஆல்பர் காம்யூ எழுதியது போல், “அத்தனை காலம் சீற்றம் கொண்டிருந்த நேரடியான உண்மை, உலகின் பார்வையில் பெருவெடிப்பாகத் தன்னை அறிவித்துக் கொண்ட” கணத்தின் சித்திரமாய் வாசிக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேல், இதை ஒரு எச்சரிக்கையாய் வாசிக்க முடியும். சர்வாதிகாரம் வன்முறையில் துவங்குவதில்லை; ஒத்துழைப்பின் முதல் சைகையில்தான் அது துவங்குகிறது. சர்வாதிகாரம் உண்மையை முற்றுகையிடும்போது, மரியாதை கெடாது வாழும் ஆண்களையும் பெண்களையும் தன் முற்றுகையில் சுவீகரித்துக் கொள்வதுதான் அதன் நிரந்தர குற்றம்.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

1. லாவ்காய் சீனச் சித்திர எழுத்துகளில் இப்படி எழுதப்படும் என்று விக்கிபீடியா சொல்கிறது:勞改/劳改. இது லாவ்டொங் காவ்ஸாய் என்ற சொல்லின் சுருக்க வடிவு. மாவ் காலத்திலிருந்து சமீப காலம் வரை பல மிலியன் சீனர்கள் இந்தச் சொல்லால் குறிக்கப்பட்ட கட்டாய உழைப்பு முகாம்களிலேயே அடைக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.

மூலக் கட்டுரையை இங்கே காணலாம்:
When Tyranny Takes Hold – The New Yorker

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.