கலையும், இயலும்

நாங்கள் அப்போது  குடியிருந்த வாடகை வீடு ரொம்ப  வாகான ஒரு இடத்தில் இருந்தது. கடை,கண்ணி, பள்ளி, அப்பாவின் அலுவலகம் எல்லாம் பக்கத்தில் இருந்ததைத் தவிர இன்னுமொரு பெரிய சாதகமான விஷயம் ஒன்று இருந்தது. அதாவது  வீட்டுக்குள்ளிருந்தவாறே , வெளியில் நடக்கிற வித விதமான, சுவாரசியமான நிகழ்வுகளைப் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ஏதுவாக  தெருவின் முனையில், நாலு தெருவும் கூடுகிற இடத்தைப் பார்த்தாற் போல் இருந்தது.

அங்கே, அரசியல் கட்சிக் கூட்டங்கள், பாவிகளை அழைத்து ரட்சிக்கிற கூட்டங்கள், கம்பி மேல் நடக்கிற  கழைக்கூத்தாடி  வித்தைகள், அப்புறம்  எங்கள் தெருவில் கொஞ்சம் பிரபலமாக இருந்த ஒரு பையனின் சினிமா பாட்டுக்கான நடன நிகழ்ச்சிகள் (அனேகமாக எல்லாம் எம் ஜி ஆர் பாட்டுக்களுக்குத்தான் அவன் ஆடுவான். பின்னாளில், சினிமாக்களில் அவன் சில கதா நாயக நடிகர்களின் சிறு வயது பாத்திரங்களில் கூட நடித்தான்.), சில அபூர்வமான நேரங்களில் நாடகங்கள் கூட நடை பெறும்.  (வழக்கமான, வில்லன்பணக்கார பண்ணையார். அவர்  வீட்டுப் பெண்ணை பரம ஏழை வாலிபன் காதலிப்பது, பாட்டு , டான்ஸ், சண்டை, சூழ்ச்சிகள், நகைச்சுவைப் பகுதிகள், கடைசியில் அவர்கள் காதல் ஜெயிப்பது, இந்த மாதிரி நாடகங்கள்), இப்படி ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று நடை பெற்றுக் கொண்டிருக்கும்.

ஒரு சமயம் மூன்று நாட்கள் சைக்கிளில் விடாமல் சுற்றுகிற சவாலை ஏற்றுக் கொண்டு ஒரு ஆள் எங்கள்வீட்டு முனையருகில் சுற்றிக் கொண்டிருந்தான். பகல் வேளை முழுக்க கூட்டத்தின் ஆரவாரத்தில் உற்சாகமாக சுற்றிக் கொண்டிருந்தவனை, இரவில் தண்ணீர் குடிக்க எழுந்த பொழுது ஜன்னல் வழியாக யதேச்சையாகப் பார்த்தேன். தெரு விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் , யாருமில்லாத தனிமையிலும், தலையை குனிந்து கொண்டு மெதுவாக சுற்றிக் கொண்டிருந்தான். விவசாயம் பொய்த்துப் போன ஒரு கிராமத்தில் , இவன் அனுப்புகிற பணத்தை நம்பிக் கொண்டிருக்கிற அம்மா, அப்பா, தம்பி, தங்கைகளை நினைத்துக் கொண்டிருக்கிறானோ என்னவோ பாவம் என்று தோன்றியது. மறு நாள் அவனுக்கு அப்பா பெயரில் பத்து ரூபாய் கொடுத்ததும் , அவன் அப்பா பெயரை மைக்கில் சொல்லி திருவாளர் மூர்த்தி அவர்களின் தாராள குணத்தைப் புகழ்ந்து பேசியதும் , அப்புறம் தெருக் காரர்கள் அவனுக்கு, இரண்டும் , ஐந்துமாக நிறைய கொடுத்ததும் , இந்த குற்ற உணர்ச்சியை கொஞ்சம் போல குறைத்தது.

இது நடந்து கொஞ்ச நாட்கள் கழித்து ஒரு அரசியல் கூட்டம் நடந்தது. பொதுவாக தேர்தல் இல்லாத காலத்திலே கூட அரசியல் பொதுக் கூட்டங்கள் அதிகம் நடக்கிற மதுரையில் , பாராளு மன்ற தேர்தல் வந்தது ஒரு பெரிய திரு விழாக் கொண்டாட்டம் போல ஆனது.சூடும் , சுவாரசியமும் எல்லோரையும் தொற்றிக் கொண்டது.

தமிழ் நாட்டில்  அப்போது இருந்த ஒரு பலம் வாய்ந்த மாநில கட்சியின் அரசியல் கூட்டம் மட்டும் மற்ற கட்சிக் கூட்டங்களிலிருந்து சற்று வித்தியாசமாக இருக்கும்.கூட்டம் ஆரம்பிப்பதற்கு இரண்டு, மூன்று மணி நேரம் முன்பிருந்தே பெரிய ஒலி பெருக்கிகளை தெருவெங்கும் கட்டி , பாடல்களை அலற விடுவார்கள், எல்லாம் அந்த கட்சித் தலைவரின் வீர தீர பராக்ரமங்களைப் பற்றி, உதாரணமாக எப்படி அவர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து தன் உயிரையும் விடத் துணிந்தார்( ரயிலை கொஞ்சம்   தூரம் முன்னாலேயே அவரின் தொண்டர்கள் நிறுத்திவைத்தது அந்த பாடலில் வராது), எப்படி அவர் கரிகால் சோழனுக்கும் , ராஜ ராஜ சோழனுக்கும் இணையானவர், எப்படி அவர் பெயரிலேயே அவர் மக்கள் பெயரில் அன்பு பூண்டவர்   என்று  வருகிறது , தமிழைக் காக்க அவர் செய்த தியாகங்கள் இப்படி பலப் பல பாடல்கள். எல்லாம் , நல்ல கர்னாடக சங்கீத ராகங்களில் , இல்லையென்றால் அப்போது ரொம்ப பிரபலமாக இருந்த பக்தி பாடல்களின் மெட்டில் அமைந்து இருக்கும். சிதம்பரம் ஜயராமனின் குரலில் அல்லது நாகூர் ஹனீஃபா குரலில் யாரோ நன்றாக பாடுவர்கள்.  “அன்பும் , மதியும் சேர்ந்தால் அதுவே அன்பு மதியாகும்!” இந்த மாதிரி வார்த்தைகள் இருக்கும், அந்த பாடல்களைக் கேட்டு கேட்டு எங்களுக்கெல்லாம் மனப்பாடமே ஆகி , நாங்களெல்லாம் பாடிக் கொண்டே இருப்போம். இதைத் தவிர கட்சிக் கூட்டம் நடப்பதற்கு சற்று முன்னரோ, இல்லை முடிந்த பின்னரோ, ஒரு கலை நிகழ்ச்சி இருக்கும் , பெரும்பாலும் பாட்டு கச்சேரி, சில சமயம் நடனமும்(அதை நடனம் என்று சொல்லுவது ரொம்பவே உயர்வு நவிற்சி அணி, ரிகார்டு டான்ஸுக்கு கொஞ்சம் மேலே, அவ்வளவுதான்) உண்டு.

 

பாட்டுக் கச்சேரி என்றால் , அவர்கள் கட்சியின் பெருமை ,இல்லை மத்தியஅரசில் இருக்கிற கட்சி நடத்துகிற அராஜகம் ,மற்ற மாநில கட்சிகளின் அயோக்யத்தனம், நாட்டு நடப்பு, என்று பல விஷயங்களைப் பற்றி இருக்கும். சுற்றிலும் வாத்யங்களோடு,  பாடகர்களாக நடுவில்  ஜிலு ஜிலுவென்ற புடவை கட்டிக் கொண்டுஒரு பெண்மணியும் , சிலுக்கு சட்டை போட்டுக் கொண்டு ஆணும் அமர்ந்து கொண்டிருப்பார்கள்.  முகமெல்லாம் ரோஸ் பவுடரிலும், மேடை வெளிச்சத்திலும் பளபளத்துக் கொண்டிருக்கும்.

அந்த சமயத்தில் ரொம்ப பிரபலமாக இருக்கிற தமிழ் , மற்றும் ஹிந்தி சினிமா பாடல்களின் மெட்டில் ,(ஹிந்தி ஒழிய வேண்டும் என்று புரட்சி செய்தவர்கள் அந்த மொழிப் பாடல்களை நகலெடுத்து ப் பாடியது ஒரு  நகைமுரண் தான்) பாடுவார்கள், கேட்க நன்றாகவே இருக்கும்.நடு நடுவில் கேலி, கிண்டல் பேச்சுகளும் உண்டு.

அந்த கால கட்டத்தில் மத்திய அரசின் கட்டாய குடும்ப கட்டுப்பாடு கிராமப் புறங்களில் கல்யாணமே ஆகாத இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களின் அறியாமையையும், வறுமையையும் பயன்படுத்தி கட்டாய  குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடை பெற்றுக் கொண்டிருந்த  நேரமது. அன்றைய பொதுக் கூட்டத்தில்  அதற்கு விமர்சனமாக ஒரு பாட்டு பாடினார்கள். அது “ஆராதனா” படத்தில் வந்த  “ரூப் தேரா மஸ்தானா” என்ற பாடலின் மெட்டில் அமைந்திருந்தது. “ லூப்பு தரான் , வுட்றானா?”. கூட்டத்தினரின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது விசிலும் , கைதட்டலுமாக. வீட்டுக்குள் கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்குமே, புரிந்தும் புரியாத நிலையிலும்  சிரிப்பு தாங்கவில்லை.  பல நாட்கள் வரை அந்த ஒரிஜினலை விட்டு விட்டு , அந்த லூப்பு தரான்னை யே பாடிக் கொண்டிருந்த தும், அம்மா பல முறை அதட்டியதும், பிறகு அதை நிறுத்தியதும்  வேறு விஷயம்.

அன்று கச்சேரி முடிந்து, கூட்டமெல்லாம் கலைந்து, மேடையின் பளீர் விளக்குகளெல்லாம் அணைக்கப் பட்டு சோகையாய் ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்த மேடையில், அந்த ஜிலு ஜிலு புடவை அம்மா, முகத்தின் அலங்காரங்களெல்லாம் கலைந்து, எதையோ குனிந்து தேடிக் கொண்டிருந்தார்கள் .பாடிக் கொண்டிருந்த பொழுது இருந்த முகம் இல்லை, அதில் எத்தனையோ குழப்பங்களும் , கவலைகளும் இருந்த மாதிரி இருந்தது.  பாடிக் கொண்டிருந்தவரை, நான் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாலும், மனதின் மூலையில் , ஒரு மேட்டிமைத்தனமான எள்ளலும், கொஞ்சம் எரிச்சலும் இருந்தன. அந்த ஒப்பனை கலைந்த கவலை படர்ந்த முகம் , இந்த அம்மாவும், ஏதோஒரு வீட்டின் அம்மாதானே பாவம்! எனத் தோன்ற, எனக்கு அந்த சைக்கிள் ஓட்டினவன் நினைவு வந்தது.

 

 

அந்த வருடம், நான் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். அரட்டையும் கலகலப்புமாய்  இருந்த எங்கள் குழுவில் ஒரு புதுப் பெண் வந்து சேர்ந்தாள். கலா வேறு ஒரு கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்துவிட்டு எங்கள் கல்லூரியில் சேர்ந்திருந்தாள். மிகவும் அமைதியான பெண். சாந்து பொட்டுக்கு மேல் வைத்த சிறிய விபூதிக் கீற்றோடு அவள் முகம் படு சாந்தமாக இருக்கும். படிப்பில் படு புத்திசாலி.  நாங்கள் அடிக்கிற அரட்டை,கேலி, கிண்டல், உரத்த சிரிப்பு இவைகளுக்கிடையே ஏதோ, ஒரு வார்த்தை , அரை வார்த்தை பொருத்தமாக சொல்லியே தானும் , எங்கள் குழுவில் ஒருத்திதான் என்பதை அழகாக நிலை நாட்டி விடுவாள். சில மாதங்களில் , மற்ற எல்லாரையும் விட என்னிடம் நெருக்கமாக உணர்ந்தாள்.

அந்த வார நடுவில்  இன்டெக்ரல் கால்குலஸ் குறுந்தேர்வு இருந்தது. தான்  இடையில் வராமல் இருந்த நாட்களில் நடந்ததை தெரிந்து கொள்ள என் நோட்டுப் புத்தகத்தை முந்தின தினம் கலா வாங்கியிருந்தாள்.

“ ஏம்பா, என்னோட நோட்டு புக்கை கொண்டு வந்தயா?”

“ஐய்யோ! மறந்து போச்சேப்பா! நாளைக்கு கொண்டுட்டு வரட்டா?” என்றாள் கலா

“கால்குலஸ் டெஸ்டுக்கு ப்ரெபேர் பண்ண ஒரு நாள் போதாதுப்பா! இப்ப என்ன பண்றது?”

கொஞ்ச நேர தயக்கத்திற்குப் பிறகு

“எங்க வீட்டுக்கு வந்து எடுத்துட்டுப் போறயா?’ என்றாள்.

“ம்! போலாமே!”

போனோம் .டவுனுக்குள்ளேயே அவள் வீடு இருந்தது. எப்பிடித்தான் கண்டு பிடித்து தினம் தினம் போகிறாளோ என்று நினைத்தேன், அத்தனை சந்து, பொந்துகளுக்குள்ளே, சிடுக்கு வழிப் பாதையாக இருந்தது.

ஒரு வீட்டின் பக்க வாட்டில் இருந்த மாடிப் படி வழியாக ஏறிக்கொண்டே மெல்லிய குரலில் தயங்கினாற் போல்” வா” என்றாள். மேலே ஏறியதும் , நல்ல பெரிய வீடாக இருக்கிறதே என்று தோன்றியது. அந்த பெரிய மாடிப் பகுதியின் பாதிப் பகுதி முழுக்க கீற்று வேய்ந்து ஒரு பெரிய கூடம் போன்ற இடம் இருந்தது. மற்ற பகுதியும் நல்ல பெரியதாக இருக்கும் என்று தோன்றியது.அந்த கூடத்தில் , இடது புறத்தில், சில நாற்காலிகளும் மர பெஞ்சும்  போடப் பட்டிருந்தன, அதன் வலது புறம் ஒரு பழங்காலத்து மேஜை , கோடியில் ஒரு மர பீரோ, பக்கத்தில் பெரிய கூடை ஒன்று, அப்புறம் பெரிய பித்தளைக் கொப்பரை ஒன்று, பக்கத்தில் இரண்டு, மூன்று சில்லுண்டி பாத்திரங்கள். மர பெஞ்சுக்கு பின்னால் இரண்டு , மூன்று கொடிகள்  கயிற்றில் கட்டி அதில் துணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. மேஜைக்கு அருகில் இருந்த கதவு வழியாக உள்ளே  போய்க் கொண்டே “கொஞ்சம் இரு வரேன்!” என்றாள்.

என்ன செய்வது என்று தெரியாமல் கொடியில் அசைந்து கொண்டிருந்த துணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பள பளவென்ற மிட்டய் ரோஸ் சட்டை யாருடையதாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“ என் கூட படிக்கற பிள்ளை வந்திருக்கு” என்று பின் பக்கம் யாரையோ பார்த்து சொல்லிக் கொண்டே ஒரு பெரிய வெங்கல டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள்.

“அப்பிடியா ! வரட்டும் , வரட்டும் !” என்று சொல்லிக் கொண்டே  வெள்ளை புடவையை கிராமத்துப் பாணி யில் கட்டிக் கொண்டிருந்த பாட்டி வந்தார். காது வளர்த்து கனமான பாம்படம் போட்டுக் கொண்டிருந்தார்கள். திறந்திருந்த வெண்மையான தோள் பக்கத்தில் பச்சை குத்தியிருந்தது.அது என்ன படம் அல்லது எழுத்து என்று பார்க்க முயற்சி செய்தேன். முடியவில்லை. கண்களை விலக்கிக் கொண்டு பாட்டியைப் பார்த்தேன்.

என்னைக் கண்டதும் கண்களிலும், முகத்திலும் ஒரு சிறிய மாற்றம் , நொடி நேரத்திற்கும் குறைவாக.சட்டென்று அதை மாற்றிக் கொண்டு “உக்காரு!” என்றார்கள்.

“பேரு என்ன?”

சொன்னேன்.

“அப்பா என்ன பண்றாரு?”

“பாங்கில வேலை பாக்கறாரு”

“அம்மாவும்  வேலைக்கு போகுதா?”

“இல்ல!”

“எத்தினி பிள்ளைங்க?”

“நாலு பேரு, அண்ணன், தம்பி ,நான், தங்கச்சி”

கேள்விகள் எல்லாம் தீர்ந்து போய் ஒரு சங்கடமான மௌனம்.

“வீடு எங்க ? டவுனுக்குள்றயா?”

“இல்ல! தல்லாகுளம்”

“அங்கிட்டு இருந்தா ,இம்புட்டு தூரம் காலேஸுக்கு வார? “

“ம்.. பஸ்ஸு நிறைய வருதே!”

திரும்பவும் அமைதி. கலாவைப் பார்த்தேன். அவள் ஏதோ தர்மசங்கடத்தில்  இருப்பவள் போல் இருந்தாள். மேஜையிலிருந்து நோட்டை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.நான் எழுந்தேன்.

“எலெக்சன் வருதே, யாருக்கு ஓட்டு போடலாம் இருக்க?” பாட்டி.

“எங்களுக்கெல்லாம் ஓட்டு இல்லையே பாட்டி!”

“அப்பத்தா ! இருபத்தொண்ணு வயசு ஆக வேணாமா, ஓட்டுப் போட” என்றாள் கலா. ”சரிப்பா! நீ கிளம்பு! பஸ்ஸுக்கு நேரம் ஆச்சுல்ல”

“ஏய் கலை! நீ சும்மாஇரு! நான் ஏதோகேக்கறேன் , அது சொல்லிட்டுப் போகுது! “.

என்னைப் பார்த்து ” நீ சொல்லு ! நீ போட முடியும்னா எந்த கட்சிக்குப் போடுவ?”என்றார் பாட்டி.

எங்கள் பாராளுமன்ற தொகுதியில் அப்பொழுது இடது சாரி கட்சியைச் சேர்ந்த ஒரு  படித்த, பண்பான,எளிமையான மனிதர்   நின்றிருந்தார். அப்போது இலட்சிய வாதங்களில், கம்யூனிஸத்தில் நம்பிக்கை  வைக்கிற இளம் வயது, அவர் பெயரைச் சொன்னேன்.

“ஏன், அந்த ஆளும் உன்னை மாதிரி பாப்பார ஜாதி, அதனாலயா?”

சொடுக்கென்று சவுக்கின் வீறல்.

பாப்பார ஜாதி என்பது  அவமானபடுத்த தக்க ஒரு வசவு என்பதை , மேம்பாலத்தில் , கருப்பு மையால் “பாம்பையும், பாப்பானையும் , பார்த்தால், பாப்பானை முதலில் அடி” “ஆரிய வந்தேறி! பாப்பானே வெளியேறு!” என்றெல்லாம்  எழுதப் பட்டிருந்த வாசகங்களைப் படிக்கும் பொழுது தெரிந்து கொண்டிருக்கிறேன், ஆனால் யாரோ ஒருவர் அதை என் முகத்துக்கு நேரே சொல்லும் பொழுது அந்த சொல்லின் முழு வெறுப்பும், அருவெறுப்பும் என் மேல் கவிந்து , கன்னமும்,காதும் ஜிவ்வென்று எரிந்தன.

நாக்கு குளற சொன்னேன் “சத்தியமா , எனக்கு அவர் என்ன ஜாதின்னு தெரியாது, பேப்பரில அவரோட இன்டர்…. ”

என்னை பாதியில் வெட்டி ”ஆமா, ஆமா! இந்த பொய்யை நம்பத்தான் நான் காது வளத்து வச்சிருக்கேன், சும்மா போவியா!”

கலா கிட்டத்தட்ட என்னை தள்ளிக் கொண்டு படி இறங்கினாள்.

கடைசி படியருகில் நின்று கொண்டு மெதுவாக சொன்னாள்,

“ எங்க அப்பா கடை வச்சுருக்கார்னு நான் சொன்னேன் இல்ல , அது பொய்! எங்க அப்பாவும் , அம்மாவும் கட்சி மேடையில பாட்டு பாடுவாங்க , அதுக்கு கட்சி கொடுக்கற பணம்தான்  எங்க வருமானம்!”

அவள் நெற்றியைப் பார்த்தேன்.

“அது பவுடர், திருநீறு மாதிரி வச்சுக்குவேன், வீட்டுக்கு வரமுன்னே அழிச்சிடுவேன்”

“நீ என்னைப் பத்தி தப்பா நினைக்கல இல்ல “ இதைச் சொல்லும் பொழுது அவள் கண்கள் கலங்கின.

நான் “இல்லை “ என்றேன்.

“காலேஜ்ல யாரு கிட்டயும் சொல்லிடாத! ப்ளீஸ்!” முகம் அழுகையில் கோணி, நீர் பிம்பமென நலுங்கியது.

“சொல்ல மாட்டேன்!”

என்னை பாப்பாத்தி என்றதை விட நான் பொய் சொல்லுகிறேன் என்று பாட்டி என்னைப் பற்றி சொன்னதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது என்று அவளிடம் சொல்ல நினைத்தேன்.

ஆனால் சொல்லாமல் நடந்தேன்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.