எண்ணிய எண்ணியாங்கு

“ஹாவ்வ்வ்ஸ்ஸாஆஆட்ட்ட்” கீப்பரும் பெளலரும் தொண்டை வீங்க கத்தினர். அம்பயரின் கை உயரவில்லை, தலை இடமும் வலமும் ஆடியது. கதிர் மட்டையை கக்கத்தில் சொருகிக் கொண்டு க்ளவுசை கழட்டிக் கொண்டே தன் அணி அமர்ந்திருந்த புல் திட்டை நோக்கி நடந்தான்.அவன் பின்னால் எதிரணியின் கொண்டாட்ட களிப்பொலி.

கதிரின் கேப்டன் அவன் சேரில் சென்று உட்காரும் வரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். கதிர் எதுவும் பேசாமல் சேரில் உட்கார்ந்து பேடை கழட்ட ஆரம்பித்தான்.

கேப்டன் எழுந்து அருகில் வந்தான் ” அறிவுகெட்ட தாயோளி , பெரிய புளுத்தி மாதிரி வந்துகிட்டே இருக்க, அவந்தான் குடுக்கல இல்ல. உனக்கு பின்னாடி ஒருத்தன் தான் இருக்கான் ,யோசிக்க வேண்டாம்”  என்றான் சினத்தில் முகமெல்லாம் துடிக்க.

” வெறும் புளுத்தி பெருவழுதிகள் பெருகிட்டாங்க கேப்டன்” என்றான் வேகப்பந்து சுரேஷ், விஜய்காந்த் குரலில். அவன் பேட் கட்டிக் கொண்டு , கையில் புகையுடன் அமர்ந்திருந்தான். ” டேய் ஆடம் கில்கிறைஸ்டு, நான் எறங்க வேண்டிய நெலம வந்தது உன் கொட்டைய கழட்டிருவேன்” என்றான் கதிரை நோக்கி.

ஒரு சிரிப்பலை பரவி, சூழல் சற்று இளகியது.

கதிரும் சிரித்துக் கொண்டே கேப்டனைப் பார்த்து ” மாமா, நான் தொட்டேனு எனக்கு தெரியும், அங்க நின்னு ஆடி ஜெயிச்சாலும் தோக்கறத விட மோசமா பீல் பண்ணி இருப்பேன், உடு முப்பது ரன் தானே ,சதிசு தட்டிருவான், நிறைய ஓவர்ஸ் இருக்கு”.

கேப்டன் எரிச்சலுடன் ” வந்து சேர்றிங்க பார்றா எனக்குன்னு, டேய் வளத்தி ஒரு தம் குடு ” என்றான் சுரேசை பார்த்து.

பல வருடங்கள் கழித்து கல்லூரிக்கு நல்ல  அணி அமைந்திருந்தது. அரசு கலைக் கல்லூரிகளில் அத்தி பூப்பதை விட அரிதாகவே இப்படிப்பட்ட அணிகள் தற்செயலாக அமையும். அணி நிறைய வெற்றிகளை அவ்வருடம் ஈட்டி இருந்தது. கதிர் அணியின் மிக முக்கியமான மட்டையடி வீரன். பல போட்டிகளை தன்னை சுற்றி விழும் விக்கெட்டுகளுக்கு நடுவே நின்று வென்று கொடுத்திருக்கிறான்.

கேப்டனின் எரிச்சல் அவன் நடந்ததால் மட்டும் அல்ல, கதிர் கல்லூரி செயலாளர் தேர்தலில் நிற்க வேட்பு மனு தாக்கல் செய்திருந்தான். சென்னையில் நடக்கவிருக்கும் முக்கியமான லீக் ஆட்டத்திற்கு வரமுடியாது என்று சொல்லிவிட்டான். அந்த ஆட்டத்தை காண தமிழ் நாட்டு அணியின் தேர்வாளர்கள் வரவிருக்கிறார்கள். வளத்தி சுரேசையும், கதிரையும் காணவே அவர்கள் வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி. சென்னை பல்கலைகழக கல்லூரிகளுக்கிடையிலான போட்டியில் வளத்தி விக்கெட்டுகள் லிஸ்டில் முதலிடத்திலும், கதிர் ரன்களில் முதலிடத்திலும் இருந்தனர். சேலத்தில் இருந்து ஒருவன் ரஞ்சி விளையாட தேர்வானாலே பெரிய செய்தி, இதில் இருவர் தேர்வாவதற்கான வாய்ப்பு.

பயிற்சியாளரும் கேப்டனும் சொல்லிப்பார்த்து சலித்துவிட்டார்கள்.

“மாமா இதெல்லாம் சும்மா டைம் பாசு, இந்த தேர்தல்தாண்டா என் லைப்பு, விட்றுங்க என்னை” என்று சொல்லிவிட்டான்.அவன் குடும்பம் அரசியல் பிண்ணனி கொண்டது.  தமிழகத்தின் இரண்டு பெரிய கட்சிகளிலும் அவன் குடும்பத்தினர் பதவியில் இருந்தனர்.

சதிஸ் வழக்கம் போல் ஸ்ட்ரைக்கை தானே வைத்துக்கொண்டு வழக்கத்திற்கு மாறாக டொக்கு வைக்காமல் வேகமாக ரன்களை தட்டி ஆட்டத்தை முடித்தான்.

எதிரணியின் பயிற்சியாளர் எழுந்து வந்து கதிரின் கையை குலுக்கினார் ” you are one of those rare walkers, keep that sporting  spirit up” என்று தோளை தட்டிவிட்டு சென்றார்.

அதுவே கதிர் அவன் கல்லூரிக்கு ஆடிய கடைசி போட்டி.

கதிர் கல்லூரி தேர்தலில் முழுமூச்சாக இறங்கினான். முருக பவனில் ஆளுக்கு இரண்டு புரோட்டா, கால்பந்து மைதானத்திற்கு பின்புறம் உள்ள புதருக்குள் சாராயம் அதிகமாகவும் ஓல்டு மாங்க் கம்மியாகவும் கலந்த சரக்கு சப்ளை, “ப்ரெண்டு, கதிர்வேல், மறக்காம ஓட்டு போட்ரு” என சொல்லிக்கொண்டே காலில் விழுதல் என எல்லா சேலம் கலைக் கல்லூரி தேர்தல் சம்பிரதாயங்களையும் திறம்பட கடைப்பிடித்தான்.

அவனுக்கு எதிராக போட்டியிட்ட வேலு அப்படி ஒன்றும் சளைத்தவனல்ல. தன் புத்தம் புது யமஹாவை விற்று கல்லூரி வாசலில் தனக்கு கட் அவுட் வைத்துக் கொண்டான். கல்லூரி வரலாற்றிலேயே முதல் முறையாக சாராயத்துடன் ஒரிஜினல் சீமை சரக்கு கலந்து வழங்கி கல்லூரி குடிமக்களை மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்தான். இரண்டு புரோட்டாவுடன் ஒரு டபுள் ஆம்லெட்டும் போடுவதாக அறிவித்தான். அவ்வறிவிப்பால் கல்லூரி முழுக்க முருக பவன் நோக்கி படையெடுக்க , அதை மர மேஜை மேல் இரு கரம் கூப்பி நின்று கொண்டு பார்த்து,  களிப்பு பொங்க  “வெற்றி நிச்சயம்” என்று தன் அல்லக்கைகளிடம் பிரகடனப்படுத்தினான்.

கதிரின் கிரிக்கெட் பராக்கிரமங்களும், அனைவரிடமும் ஒட்டுக்காக அல்லாமல் உண்மையிலேயே நட்பு பாராட்டும் தன்மையும் வேலுவின் வெள்ளம் போன்ற செலவழிப்புகளை மீறி கதிரை வெற்றி பெறச்செய்தது.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் வாய் விட்டு கதறிக்கொண்டிருந்த வேலுவை கதிர் தான் முதலில் சென்று தேற்றினான். கடுப்பில் இருந்த வேலு கதிரை ஓங்கி ஒரு அறைவிட்டான். கதிர் அமைதியாக அவனை கட்டிப்பிடித்து “விடு மாமா” என்றான்.

அன்று முழுக்க சுந்தர் லாட்ஜில் வேலுவும் கதிரும் சேர்ந்து வெற்றி தோல்வி இரண்டையும் சாராயம் கலக்காத விஎஸ்ஓபி குடித்து அனுஷ்டித்தனர்.

தேர்தலுக்கு பிறகு கதிருக்கு கல்லூரி போர் அடித்தது. அவனுடைய தாய் மாமா கவுன்சிலர் தேர்தலில் அதே சமயத்தில் வென்றிருந்தார். அவருக்கு தொகுதியில் நல்ல பெயர் இருந்தது. அவருடன் தொகுதியில் சுற்றி வர ஆரம்பித்தான். கல்லூரி போவது சுத்தமாக குறைந்து போனது.

அவனுடைய இயல்பான நட்பு பாராட்டும் தன்மையும் , நேரம் காலம் பாராது கட்சிக்காக ஓடுவதும் மாவட்ட கட்சி தலைமையால் கவனிக்கப்பட்டது.

கல்லூரி மூன்றாம் ஆண்டு முடிந்தவுடன் கூட்டுறவு வங்கி தேர்தலில் கட்சியால் நிற்க வைக்கப்பட்டு வங்கி போர்டில் செயல் தலைவர் ஆனான்.

அவன் வாகனம் இரு சக்கரங்களை கூட்டிக்கொண்டது, ஆனால் கதிர் மாறவில்லை, அனைவரிடமும் அதே போலவே பழகினான், தன்னால் இயன்ற உதவிகள் செய்தான், உண்மையிலேயே தேவை இருப்பவர்களுக்கு சிபாரிசு செய்து கூட்டுறவு வங்கியில் தொழிற்கடன்களை வாங்கி கொடுத்தான், அவன் மாமாவுடன் தொகுதியை முன்பு போலவே சுற்றி வந்தான்.

ஒரு வருடம் கழித்து சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஒரு ஞாயிற்றுகிழமை காலையில் மாவட்டம் ஆளனுப்பி வரச்சொன்னார்.

“என்ன தம்பி ரெண்டாவது தொகுதில நல்லா கேன்வாஸ் பண்ணி வெச்சிருக்காப்பல தெரியுது”

கதிர் பயந்து போனான் ” அப்படி எல்லாம் இல்ல தலைவரே, மாமாவோட போய்ட்டு வந்துட்டு இருந்தேன் அவ்வளவுதான்”.

மாவட்டம் சிரித்தது ” பார்றா… தொகுதில கட்சிக்காரனெல்லாம் உன் பேரத்தான் சொல்றான், தொகுதி  பூரா நம்ம சாதிக்காரந்தான். உன் மாமன் சிட்டிங் கவுன்சிலரு அவரு நிக்க முடியாது, எதிர்ல எம் எல் ஏ மவன் நிக்கறானு பேச்சு இருக்கு, அவனும் உன்ன மாதிரி சின்ன பையந்தான் ,  நீ எம் எல் ஏ வுக்கு நிக்கிறியா”

கதிர் இதை எதிர்பார்க்கவில்லை , உள்ளே குளிர்ந்து போனான்,

“கட்சி சொன்னா நிக்கறன் தலைவரே”

” கட்சி சொன்னா ம்ம்” மாவட்டம் பக பகவென சிரித்தது. ” இங்க பாருப்பா உன் பேர அனுப்புறேன் பின்னாடி இல்ல நொல்லனு சொன்னியின்னா நல்லா இருக்காது, யோசிச்சு சொல்லு”

“கண்டிப்பா நிக்கறேன் தலைவரே, நீங்க பேரு அனுப்புங்க”.

நடந்ததை நம்பவே முடியாமல் வீடு போய் சேர்ந்தான், மாவட்டம் பேர் அனுப்பி விட்டால் பரிசீலனை எல்லாம் ஒன்றும் கட்சியில் கிடையாது , சீட் கொடுக்கப்பட்டு விடும். வீட்டில் ஏற்கனவே விஷயம் தெரிந்துவிட்டிருந்தது. அனைவர் முகத்திலும் பூரிப்பு. கதிர் சென்று மர சோபாவில் அமர்ந்தான்.

“ரொம்ப சந்தோசண்டா” என்றார் அவன் அப்பா வாய் கொள்ளா சிரிப்புடன்.

“காசுக்கு என்ன சாமி பண்றது” என்றார் கதிரின் அம்மா. அப்போழுதுதான் உரைத்தது கதிருக்கு , கையில் இருந்து காசிறைக்க வேண்டி இருக்கும். தேர்தலில் தோற்று மொத்த சொத்தையும் இழந்த பல பங்காளிகள் அவன் உறவில் உண்டு.அவன் தந்தையே இப்படி சில பல சொத்துக்களை இழந்தவர்தான்.

“வெண்ணந்தூர் காட்டை வித்துரலாம், கடன் வாங்கி செலவு பண்ணி தோத்துட்டா , கடன் கட்ட முடியாது” என்றான்.

“டேய் அதுல உன் சித்தப்பனுக்கும் பங்கிருக்கு அவன் விக்க விட மாட்டான்” என்றார் கதிரின் அப்பா.

” வித்து அவர் பங்கை குடுத்துரலாம், நான் பேசறேன் அவர்ட்ட”  எழுந்து வாசலை நோக்கி நடந்தான். ” அட சித்த இருந்து ஒரு வாய் சாப்டுட்டு போ சாமி”

“இல்லம்மா போய் பாத்திட்டு வந்துர்ரேன்”

கதிரின் சித்தப்பாவிற்கு அரசியலில் பெரிய ஈடுபாடு கிடையாது , ஆனால் தன் குடும்பத்தில் இருந்த இரு கட்சியையும் சேர்ந்த அரசியல்வாதிகளின் பதவிகளை பயன்படுத்திக்கொண்டு ரோடு போடும் ஒப்பந்தங்கள் எடுத்து வசதியாய் இருந்தார். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர் வியாபாரம் படுப்பதில்லை.

பேர்லாண்ட்சில் இருந்த சித்தப்பாவின் பங்களாவிற்கு வெளியே காரை நிறுத்திவிட்டு கதிர் கேட்டை திறந்து  உள்ளே சென்றான். தோட்டக்காரர்கள் மரங்களுக்கு உரம் வைப்பதை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த சித்தி ” வா கண்ணு நல்லா இருக்கியா, எங்க ஆளேயே காணோம் ”  என்று முகமலர வரவேற்றார்.

“கொஞ்சம் வேல சித்தி ”

” ஆமா பாங்கு சேர்மேனுல்ல இப்ப” என்றார் சிரித்தபடி.

தன்னை உள்வாங்கி சூழ்ந்து கொண்ட இத்தாலிய சோபாவில் உட்கார்ந்தான். கதிருக்கு இந்த உயர் ரக மென்சோபாக்களை பிடிப்பதில்லை. படுத்துக்கொண்டிருப்பது போல் இருக்கும், இயல்பாக பேசவே முடியாது.

சித்தி மோர் கொண்டு வந்து கொடுத்தார், எழுந்து நின்று வாங்கினான்.  ” சித்தப்பா இருக்காரா சித்தி”.

“மேல தான் இருக்காரு, நீ ஒக்காரு கூட்டியார சொல்றேன்”

ஒரு வேலையாளிடம் சித்தி குரல் கொடுக்க அவன் விடு விடுவென்று மாடிப்படி ஏறினான்.

“செல்வத்தையும் பவித்ராவையும் காணம்”

“ட்யூசன் போயி இருக்குதுங்க.”

” ஞாயித்து கிழம கூடவா”

“ஆமா இப்புடி படிச்சே இதுங்க பாஸ் பண்றதுக்கு அல்லாடுதுங்க”

அவன் சித்தப்பா முண்டா கை பனியன் மட்டும் அணிந்து லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டே மாடி படி இறங்கி வந்தார்.

” வாடா சேர்மேனு” என்றார் சோபாவில் உட்கார்ந்தபடி.

“என்னா சமாச்சாரம், விஷயமில்லாம இந்த பக்கமெல்லாம் வர மாட்டியே நீயி”

“எம் எல் ஏ சீட்டு கெடச்சிருக்கு சித்தப்பா”

” எந்த தொகுதி”

” ரெண்டு”

சித்தப்பாவின் முகம் மாறியது, “நிக்கறனு சொல்லிட்டியா”

” ம்”

” டேய் உம் மாமனுக்கு ஒரு வார்டுல தாண்டா பவுசு, மத்ததெல்லாம் லிங்கத்தோட கோட்ட, அங்க எப்புடி ஜெயிப்ப”

“தொகுதியில வேல செஞ்சிருக்கேன் சித்தப்பா , இருக்க அதிருப்திக்கு அடுத்து எப்படியும் நம்ம ஆட்சிதான், கொஞ்சம் எறங்கி வேல செஞ்சா ஜெயிச்சிரலாம்”

” லிங்கம் அவன் பையனுக்கு சீட்டு கேட்டிருக்கானு கேள்வி பட்டேன், அவன ஜெயிக்க வைக்கறது கட்சில அவனுக்கு  மானப்பிரச்சனை , அஞ்சு வருசம் சம்பாதிச்சதை எல்லாம் எறக்குவாண்டா”

“அதுக்குதான் சித்தப்பா உங்கள பாக்க வந்தேன். வெண்ணந்தூர் காட்டை வித்து உங்க பங்கை குடுத்துட்டு மிச்சத்தை தேர்தல் செலவுக்கு வெச்சுக்கலாம்னு பாக்குறேன்”

” இந்த எழவுக்கு தாண்டா நான் இந்த சனியம் புடிச்ச பதவிங்க பக்கமெல்லாம் போவறதில்ல. கதிரு அது எங்கப்பாரு முள்ளா கெடந்த நெலத்த ஆளுக்காரனுங்கள கூட வெக்காம தனியா திருத்தி பொன்னு வெளவிச்ச பூமி. நான் சோத்துக்கே இல்லாட்டியும் அத விக்க உடமாட்டேன்”

“எங்கட்ட வேற எதுவுமே இல்ல சித்தப்பா.”

” ஆமா ஒண்ணொன்ணா வித்து அப்பனும் பையனும் கட்சி கட்டிகிட்டு திரிஞ்சிங்கனா என்ன மிஞ்சும்.வெளிய வாங்கு”

” வெளிய இதான் சாக்குனு பயங்கர வட்டி சொல்லுவானுங்க சித்தப்பா. காட்ட வெளிய விக்க வேணாம்னா , நான் உங்களுக்கு எங்க பங்கை எழுதி தரேன், நீங்க எனக்கு பணம் குடுத்துருங்க”

” எதுக்கு உங்கம்மாவும் மாமனும் ஊரெல்லாம் நாங்க ஏமாத்தி எழுதி வாங்கிட்டோம்னு சொல்லிட்டு திரியறத பாக்கவா”

அதுவரை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்த சித்தி

“கதிரு அந்த வெனையே வேணாம். உங்கப்பாரு வாச வரைக்கும் வந்து நின்னாருனு அந்த பூலாம்பட்டி காட்டை வாங்கிட்டு நாங்க வாங்குன பேச்சே போதும். ”

கதிர் அமைதியாய் சற்று நேரம் அமர்ந்திருந்தான்.

” சரி, எனக்கு கடனாவாவுது குடுங்க சித்தப்பா”

” காச தெரிஞ்சே ஆத்துல வீச சொல்றியா. சொன்னா கேளு அந்த தொகுதில ஜெயிக்கிறது ரொம்ப கஷ்டம். இன்னொரு அஞ்சு வருசம் பொறு, சேர்மேன் போஸ்டை வெச்சு கொஞ்சம் காசு பாரு. அடுத்த எலெக்சன்ல நில்லு, உனக்கு வயசிருக்கு அப்புறம் என்ன”

“நான் நிக்கறேனு சொல்லிட்டேன் சித்தப்பா , இப்ப மாற முடியாது.”

” அப்ப நானொன்னும் சொல்றதிக்கில்ல , உன்னிஷ்டம் போல பண்ணு, என்கிட்ட நயா பைசா எதிர்பாக்காத அவ்வளவுதான்”

“இப்படி எதுக்குமே பிடி கொடுக்காம பேசினிங்கன்னா எப்படி”

” நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன், நீ கெளம்பு ஆவற வேலய பாரு, போ”

” ஏங்க இப்புடி வெடுக்குனு பேசிறிங்க , நீ இரு கண்ணு , வராதவன் வந்திருக்க சோறு தின்னிட்டு போவலாம்” என்றார் சித்தி

” ஆமா விருந்து வெச்சு அனுப்பு , இருக்க வீட்டையும் வித்து எலெக்சன்ல நின்னு தோத்துட்டு தெருவுல தான் நிக்க போவுது மொத்த குடும்பமும்” சித்தப்பா கோபமாக எழுந்து மாடிப்படியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

கதிர் “நீங்க லிங்கம் ஜெயிக்குனும்னு என்னை நிக்க உடாம பண்றிங்க சித்தப்பா”

சித்தப்பா நின்று திரும்பினார்

” ரெண்டு மாசம் முன்னாடி லிங்கம் எடுத்த ரோடு கான்ட்ராக்ட் சிண்டிகேட்டுல நீங்களும் இருக்கிங்கன்னு எனக்கு தெரியும்” என்றான் குரலை உயர்த்தி

” தெரிஞ்சிகிட்டு என்ன மசுத்துக்கு இங்க வந்த.” கோபத்தில் அவர் உடல் ஆடியது

” நீங்க ஒன்னும் எனக்கு பிச்ச போட வேண்டாம் சொத்தை விக்க கையெழுத்து போடுங்க போதும்”

“டேய் முடியாதுறா உன்னால ஆனதை பாத்துக்க” சொல்லுவிட்டு விருட்டென்று படியேறினார்.

சித்தி அதிர்ச்சியில் மாடிப்படியை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

கதிர் எழுந்து வெளியேறினான்.

வீட்டிற்கு வரும் வழியில் போன் அடித்தது, எடுத்தான், ” சார் மாலை முரசு சேலம் ஆபிஸ்ல இருந்து பேசறோம் , ரெண்டாவுது தொகுதி அதிகாரப்பூர்வ வேட்பாளரா கட்சி உங்கள அறிவிச்சிருக்கு , இன்னைக்கு சாய்ந்திரம் பேப்பர்ல வரும், அது கூட போட ஒரு சின்ன பேட்டி கொடுக்க முடியுமா?”

” கேள்விகளை மெஸஜா அனுப்புங்க நான் இமெயில்ல பதில் அனுப்புறேன்”

மறுமுனை சற்று தயங்கி “சரி சார்” என்றது.

தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் மொபைல் போனை ஆப் செய்தான்.

வண்டியை கட்சி அலுவலகத்திற்கு விட்டான்.

அலுவலகம் நிரம்பி வழிந்தது. டிவியில் கட்சி சானல் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டிருந்தது.

நேராக மாவட்டத்தின் அறைக்கு சென்றான். சுற்றி சேலம் மாவட்ட வேட்பாளர்கள் சூழ குறு நில மன்னர் போல் மாவட்டம் பிரகாசமாய் உட்கார்ந்திருந்தார். நேராக போய் அவர் காலில் விழுந்தான் . சிரித்து கொண்டே தோலில் தடவினார், எழச்சொல்லவில்லை. கதிரே எழுந்தான். ” தம்பி கதிர்வேல் தெரியுமில்ல மாரியப்பன் மகன், ராஜேந்திரனோட மருமகன்” என்றார் பொதுவாக எல்லோருக்கும் கேட்கும் படி. சுற்றிலும் ஆமோதிப்பு தலையசைப்புகள்.  கதிர் அவர் அருகில் அமர்ந்தான்.

மாவட்டம் ” லிங்கம் அவம்புள்ளக்கி சீட்டு வாங்கிட்டான், நாளைக்கு அவனுங்க லிஸ்டு வெளிய வருது” சற்று குரலைத்தாழ்த்தி காதருகே வந்து ” கட்சி உன் தொகுதிக்கு ஒரு ரூவா ஒதுக்கி இருக்கு, நான் மாவட்ட நிதியா ஒன்னு தரேன், மிச்சம் நீ தான் பாக்கனும். முடியுமில்ல” என்றார்

“நான் பாத்துக்கறேன் தலைவரே” என்றான் கதிர்.

சற்று நேரம் அலுவலகத்தில் இருந்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டுவிட்டு , தன்னுடன் வக்கீல் கிருஷ்ணனை கூட்டிக்கொண்டு கிளம்பினான்.

கிருஷ்ணன் கதிருக்கு கட்சியில் நெருக்கமான நட்புகளில் ஒருவன். வண்டியை சத்திரம் இறக்கத்தில் விட்டான், வண்டிக்குள் இருந்தே தள்ளுவண்டிக் கடையில் கொத்து புரோட்டா ஆர்டர் செய்தான்.

கிருஷ்ணன் ” என்னா கதிரு ஒரு மாதிரி இருக்க,மூஞ்சில எம் எல் ஏ சீட்டு கெடச்ச சந்தோசமே இல்லியே”

“இந்து வாரிசுரிமை சட்டப்படி உயில் எழுதாத சொத்தை எப்படி பங்கு போடுவாங்கணா” என்றான் கதிர்.

” சர்தான் சட்ட ஆலோசனையா, இன்னைக்கி புல் தண்ணில மெதக்கலாம்னு பாத்தேன்.  நீ என்னடானா வாரிசு கீரிசுனுக்கிட்டு இருக்க.”

” ப்ச், சொல்ணா , விஷயமாத்தான் கேக்குறேன்”

“சுருக்கமா சொல்லனும்னா , உயிரோட இருக்க நேரடி வாரிசுகளுக்கு சரிவிகிதமா பங்கு வரும். அப்படி யாரும் இல்லாத பட்சத்துல இறந்தவருடைய சகோதர , சகோதரி யாராவுது உயிரோட இருந்தா அவங்களுக்கு போகும். பொம்பள புள்ளங்களுக்கு கொஞ்சம் பங்கு கம்மியா வரும்”

கதிர் அமைதியாக உட்கார்ந்திருந்தான்

“என்ன ஓன்னும் சொல்ல மாட்டேன்ற, எதுக்கு இதெல்லாம் கேக்குற”

கொத்து புரோட்டா வந்தது ” சாப்டுணா சொல்றேன்”

எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்து கை கழுவினர்.

கதிர் வண்டியை கிளப்பினான் , இருள் மெல்ல கவிந்து வந்தது.

“டேய் கேள்வி மேல கேள்வி கேக்குற, நான் கேட்டா பதில் ஏதும் சொல்லாம உம்முனு இருக்க, எங்க போறோம் இப்போ” என்றான் க்ருஷ்ணன். கதிர் அப்போதும் எதுவும் பேசாதது பார்த்துவிட்டு பாட்டை போட்டுவிட்டு ரோட்டை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

வண்டி நாலு ரோடு வழியில் சென்றது, ஐந்து ரோடு தாண்டி ரவுண்டானா சுற்றி பேர்லாண்ட்ஸ் ரோட்டில் நுழைந்தது.

அவன் சித்தப்பா வீட்டிற்கு ஒரு தெரு தள்ளி வண்டியை நிறுத்தினான்.

“கேள்வி எதும் கேக்காதணா , பேசாம நட”. ரோட்டில் ஆள் நடமாட்டமே இல்லை, பெரும் பணக்காரர்கள் மட்டும் குடியிருக்கும் இவ்வீதிகளில் எப்போதும் பெரிய ஆள் நடமாட்டம் இருப்பதில்லை.

சித்தப்பா வீட்டை அடைந்தான், கேட் இன்னும் பூட்டப்படவில்லை வெறுமனே சாற்றி வைக்கப்பட்டிருந்தது, திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

தோட்ட வேலை சாமான்கள் தென்னை மரத்திற்கு கீழே போடப்பட்டிருந்தது, அதிலிருந்து ஒரு மண் வெட்டியை கையில் எடுத்தான் கதிர்.

க்ருஷ்ணனுக்கு சட்டென்று அனைத்தும் புரிந்தது, கேட்டை மூட ஓடினான்.  உள்ளே டிவி ஓடும் ஓசை கேட்டது.

 

கதிர் கதவை தட்டி விட்டு காத்திருந்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.