இருப்பு

”ந்யாம ச்சோமா தயாரி” ஆங்கில எழுத்துக்கள் “8 புளூஸ் ஹோட்டல்”-ன் தலையில் பச்சை, சிவப்பு நியானில் மாறி மாறி மின்னின. ந்யாம ச்சோமா என்பது சுட்ட இறைச்சி. வெறும் உப்பு மட்டும் தூவி தீயில் சுட்டு பரிமாறுவார்கள். மிகப் பிரசித்தம். பெரும்பாலும் வெள்ளாட்டிறைச்சி. மாடும், பன்றியும் உண்டு. பசு இறைச்சிக்கென்று ரசிகர் கூட்டமுண்டு. கோயம்புத்தூரில் தடுக்கி விழுந்தால் பேக்கரி மாதிரி இங்கு கென்யாவில் புட்ச்சரிகளும் ந்யாமா ச்சோமா கடைகளும்.

ரவி காரை நிறுத்தி கதவு திறந்து இறங்கியதும் அவர்களைப் பார்த்து புன்னகைத்தான். ரோஸூம், எசெகியேலும் ஜான், ஜோயலோடு ஏற்கனவே அங்கு வந்து வாசலில் காத்திருந்தார்கள். தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, “தயாரி” எழுத்துக்களை பார்த்தவாறு “உங்களுக்குத் தெரியுமா, “ரெடி” என்பதற்கு எங்கள் மொழியிலும் ”தயார்”-தான் என்றான். “அப்படியா, இன்னொன்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். “ஷாப்”-பிற்கு நாங்கள் “துகா” என்கிறோம். இந்தியாவிலும் அந்த வார்த்தைதானாமே” என்று எசெகியேல் கேட்டான். “ஆம். வட இந்தியாவில் “ஷாப்”-பிற்கு “துக்கான்” என்பார்கள்” என்றான் ரவி. ”உள்ளே போகலாம்” என்று சொல்லிவிட்டு ரவி முன்னே நடந்தான். பரந்த புல் தரையின் நடுவிலிருந்த கற்கள் பதித்த பாதையில் பேசிக்கொண்டே நடந்தார்கள். ஹைஹீல்ஸின் குதிகால் கீழிருந்த கம்பி கற்களின் இடையில் மாட்டி ரோஸ் விழப்போனது. ரவி ரோஸின் கையை சட்டென்று பிடித்துக்கொண்டான். இடைவெளிகளை கவனித்து கால் வைத்து நடக்குமாறு சொன்னான்.

ரவி பாம்பேயிலிருந்து இங்கு கொய்மலர் பண்ணைக்கு வேலைக்கு வந்து ஒன்றைரை வருடங்களாகிறது. எசெகியேல் அங்கு உற்பத்தி மேலாளராயிருந்தான். ரோஸூம், ஜோயலும் சீனியர் சூப்பர்வைசர்கள். ஜான் தரம் பிரிக்கும் அறைக்கும், பேக்கிங்கிற்கும் பொறுப்பு. கொய்மலர் வர்த்தகத்தில் பொதுவாகவே பிப்ரவரி முக்கியமான வர்த்தக மாதம். ரவியின் நிறுவனம் காதலர் தினத்தை அடுத்து, ருஷ்யாவின் பெண்கள் தினத்திற்காக மார்ச்சிலும் அதிகம் ஏற்றுமதி செய்வதால் ஜனவரி இறுதியிலிருந்து, மார்ச் முதல் வாரம் வரை ஓய்வில்லாத வேலையிருக்கும். அம்மாதங்களில் பூக்களின் ஆர்டர்கள் அதிகரிப்பதால், அதற்கேற்றாற்போல் பூக்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு, பசுங்குடில்களில் இரண்டு மாதங்கள் முன்பே ஆயத்தங்கள் செய்யவேண்டியிருக்கும். ஏற்றுமதி நாட்களில் தரப்பிரிவிலும், பேக்கிங்கிலும் இரவு பகலாக வேலையிருக்கும். குளிர்சாதன வசதிகொண்ட டிரக்குகள் நைவாஸா பண்ணைக்கும், நைரோபி விமான நிலையத்திற்கும் போய் வந்துகொண்டேயிருக்கும். இவ்விரண்டு மாதங்களிலும், வேலை செய்பவர்களின் ஒத்துழப்பும், விரைவும் மிக முக்கியம். சிறந்த உற்பத்தி தரும் பசுங்குடிலுக்கு போனஸ், தரப்பிரிவில் அதிக எண்ணிக்க கையாளும் குழுவிற்கு பரிசு, ஓவர் டைம் வேலையாட்களுக்கு சிறப்புணவு…நிறுவனம் அம்மாதங்களை நன்முறையில் கடக்க பிரயத்தனங்கள் மேற்கொள்ளும். ரவிக்கு அது முதல் வருட பருமென்பதால், தன்னை நிறுவனத்திற்கு நிரூபிக்கும் மெல்லிய பதட்டமிருந்தது. கீழ் வேலை செய்யும் முக்கிய நபர்களுக்கு, பிப்ரவரி மார்ச்சில் உற்பத்தியும், ஏற்றுமதியும் இலக்கை எட்டிவிட்டால் தான் ஒரு பார்ட்டி தருவதாக சொல்லியிருந்தான். அதற்காகத்தான் இன்று…

ஹோட்டலின் உள்ளில் சின்னச் சின்ன திறந்த குடில்களாய் தள்ளித் தள்ளி அமைத்திருந்தார்கள். குடில்கள் எல்லாம் கொஞ்சம் உயரத்தில் இருந்தது. துண்டு துண்டான வெளிச்சங்களாய் குடில்கள் பார்க்க அழகாக இருந்தது. இடதுபக்கம் திரும்பி “இங்கேயே உட்கார்ந்து கொள்வோமா?” கேட்டுவிட்டு, ரவி மரப்படிகளில் ஏறினான். எல்லோரும் உட்கார்ந்ததும் “என்ன வேண்டுமென்றாலும் ஆர்டர் பண்ணிக்கலாம். எது வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் திருப்தியா” ரவி சொல்லிவிட்டு “ஜான் நீ இன்று குடிப்பாயா?” என்று கேட்டான். ஜான் வேலைக்குச் சேருமுன் ”நகுரு” அருகில் அவர்கள் கிராமத்தின் சர்ச்சில் பாதிரியாராய் இருந்தவன். குடும்பம் அங்கிருக்கிறது. மூன்று குழந்தைகள். குடியும் சிகரெட்டும் கிடையாதென்றாலும் பெண்கள் விஷயத்தில் ஆள் பலே கில்லாடி. ”ஜான் உனக்கு எத்தனை குழந்தைகள் என்று கணக்கு வைத்திருக்கிறாயா?” என்று நாங்கள் கேலி செய்வதுண்டு. ஒன்பது வருடங்களாய் வேலை செய்கிறான்.

எசெகியேலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். தங்கையுடனும், குடும்பத்துடனும் பத்து கிலோமீட்டர் தள்ளி ”கினாம்பா”-வில் தங்கியிருக்கிறான். ஜோயலின் சொந்த ஊர் ”கிசுமு”. அங்கு ஒரு குடும்பம் உண்டு. இங்கு வந்து வேலைக்குச் சேர்ந்தபின் மற்றொரு திருமணம் செய்துகொண்டு எசெகியேலுக்குப் பக்கத்து காம்பவுண்டில் குடியிருக்கிறான்.

ரவி யதேச்சையாய் பக்கத்து குடில் பக்கம் திரும்பியபோது, அங்கிருந்து ரோடி கையசைத்தார். ரவியும் ஹாய் சொல்லி கைதூக்கி அசைத்தான். ரோடி பிரிட்டிஷ்காரர். நைவாஸா மலர் வர்த்தகப் பூங்காவினுள் பணிபுரிகிறர். கிரிக்கெட் ரசிகர். இந்தியாவில் ஐபிஎல் நடக்கும்போது, மேட்ச்கள் பார்ப்பதற்காகவே இந்தியப் பயணம் போய்வருவார். ரோடிக்கு முன்னால் கென்ய பெண் ஒன்று உட்கார்ந்திருந்தது. “யாரது எசெகியேல்?” ரவி கேட்டான். எசெகியேலுக்கும் அவரைத் தெரியும். எசெகியேல் சிரித்துக்கொண்டே “அவரின் முன்னால் மனைவிதான். போன வருடம் அவர் பண்ணையின் பசுங்குடிலில் வேலை செய்த அப்பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் இப்போது அப்பெண் அவருடன் இல்லை” என்றான்.

ரோஸ் சிரித்தது. “ஏன் சிரிக்கிறாய்?” என்றான் ரவி. “ஒன்றுமில்லை” சொல்லிவிட்டு விரல்களை உதடுகளில் வைத்து வாய் மூடிக்கொண்டது. உதடுகளில் மெலிதாய் இளஞ்சிவப்பு சாயம் பூசியிருந்தது. தலையில் கோர்த்த செயற்கை முடியின் சுருள் பின்னல்கள் பாதி வலது முன்முகத்திலும் பாதி பின்னாலும் தொங்கின. கண்களுக்கும், புருவங்களுக்கும் கறுப்பு மை தீட்டியிருந்தது. மேல்சட்டையின் மேலிரண்டு பித்தான்களை வழக்கம்போல் போடாமல் விட்டிருந்தது. ரவிக்கு கென்யா வந்த புதிதில் இங்கு பெண்களின் உடைப் பழக்கத்திற்கு சுவாதீனத்தோடு பார்வையை பழக்க இரண்டு மூன்று மாதங்கள் ஆனது. பின்னர் இயல்பானது. பெண்மைய சமூகம். பெண்கள்தான் வேலை செய்து குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்கள். குடும்பம் என்றால் பெரும்பாலும் அம்மாவும் குழந்தைகளும்தான். அப்பா முக்கியமேயில்லை. ரவிக்கு உள்ளூர் பெண்களின் வாழ்க்கை முறையையும், பொருளாதார தேவைகளையும், சமூக அமைப்பையும் பார்த்தபோது அவர்கள் மேல் பரிவுதான் உண்டானது. ஆனால் அப்பெண்கள் ஆண்களின் பரிவையோ தயவையோ எதிர்பார்ப்பதேயில்லை. ஆண்களின் குணாதிசயங்களை நன்கு அறிந்தவர்கள். ஆண்களை எங்கு வைக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும்.

ரோஸ் பெந்தகொஸ்தே வகுப்பைச் சேர்ந்தது. இந்தியாவின் பெந்தகொஸ்தேக்கும், இங்கின் பெந்தகொஸ்தேக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ரோஸிற்கு இருபத்து மூன்று வயதென்று சொல்லியிருக்கிறது. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ரோஸிற்கு ஐந்து வயதாகும்போது அம்மா இறந்துவிட, அப்பா இன்னொரு திருமணம் செய்துகொண்டார். சித்தி கொடுமைகள் கென்யாவிலும் உண்டு. கஷ்டங்களூடே படிப்பும் நின்றுபோக, ஒரு இந்தியக் குடும்பத்தில் பத்து/பனிரெண்டு வயதில் சின்னச் சின்ன வீட்டு வேலைகளுக்கு சேர்ந்திருக்கிறது. அவர் தமிழ்நாட்டுக்காரர். ஜெயப்ரகாஷ். இங்கு ஜெ. தொண்ணூறுகளிலேயே கென்யாவிற்கு வந்து குடும்பத்தோடு செட்டிலானவர். ஒரு கொய்மலர் பண்ணை குழுமத்தில் உயர்பதவியில் இருந்தார். அந்த வீடு ரோஸிற்கு பிடித்துப்போனது. அங்கேயே சாப்பிட்டு, தங்கி அக்குடும்பத்தில் ஒன்றாகிவிட்டிருந்தது. ஜெ மனைவியும் ரோஸை நன்றாக பார்த்துக்கொண்டார். இந்திய சமையல் அனைத்தையும் ரோஸ் கற்றுக்கொண்டது. மாத சம்பளம் தவிர, வருடம் ஒருமுறை கிறிஸ்துமஸ்ஸிற்கு ஒருமாத விடுப்பில் போகும்போது புதுத்துணிகள் எடுத்துக்கொடுத்து, பணம் கொடுத்தனுப்புவார்கள். ரோஸ் அப்பா வீட்டிற்குப் போய் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு, மீதி நாட்களில் அம்மாவின் அம்மா வீட்டிற்கு போய்விடும்.

ரோஸிற்கு பதினெட்டான போது ஜெ அவர் பண்ணையின் பசுங்குடிலில் மேற்பார்வைப் பணியில் போட்டு, வேலை கற்றுக்கொள்ளச் சொல்லியிருக்கிறார். சில காரணங்களால் ஜெ குடும்பம் இந்தியா திரும்ப நேரிட்டபோது, ஜெ-யே சிபாரிசு செய்து, இலங்கை சசியின் கிட்டங்கலா பண்ணையில் சேர்த்து விட்டிருக்கிறார். ரவிக்கும் சசியை தெரியும். இரண்டு மூன்று முறை சந்தித்திருக்கிறான். ரோஸ் சசியை பற்றி கதை கதையாய் சொல்லும். “சரியான ஹிஸ்டீரியா பேஷண்ட். கோபம் வந்தால் காச்மூச்சென்று கத்துவார். கெட்ட மொழியில் உச்சஸ்தாயியில் திட்டுவார். எனக்கு ஏன் அங்கே வேலைக்குச் சேர்ந்தோம் என்றிருக்கும்” என்று சொல்லியிருக்கிறது.

பரிமாறும் சிப்பந்திப் பெண் வந்தது. மாலை வணக்கம் சொல்லிவிட்டு “ஆர்டர் எடுத்துக்கொள்ளட்டுமா?” என்றது. “அழகாயிருக்கிறாய் நீ. உன் பெயரென்ன? என்று கேட்டான் ரவி. “நன்றி. அலிசியா” என்றது. “முதலில் எனக்கு காபி, பாலுடன். இவர்களுக்கு சோடா” என்றான். “எனக்கு டங்காவிசி” ரோஸ் விரலுயர்த்தியது. கோலாவின் இஞ்சி சுவை கலந்த பானம். மற்றவர்கள் ஸ்ப்ரைட் என்றார்கள். கோலாவும், பெப்சியும் கென்ய மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. கென்யாவில் சோடா பான வர்த்தகம் மிக மிக அதிகம்.

“உங்களுக்கும் சேர்த்து ந்யாமா ச்சோமா சொல்லட்டுமா மிஸ்டர் ரவி? இன்று மட்டும் எடுத்துக்கொள்கிறீர்களா?” சிரித்துக்கொண்டே கேட்டான் எசெகியேல். “வேண்டாம். எனக்கு ப்ரௌன் சப்பாத்தி போதும்”. ஒரு கிலோ வெள்ளாட்டின் இறைச்சியும், விஸ்கியும் ஆர்டர் செய்துவிட்டு, ரோஸை பார்த்தான். “எனக்கு பியர் போதும்” என்றது. “உண்மையாகவா? தயக்கம் வேண்டாம். வைன் வேண்டுமென்றாலும் வாங்கிக்கொள்” என்றான். “வேண்டாம். பியர் போதும்” என்றது. “நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடுவதில்லை?” ரோஸ் கேட்டது. “சொன்னால் உனக்குப் புரியுமா என்று தெரியவில்லை. சிறு வயதில் சாப்பிட்டுக்கொண்டுதானிருந்தேன். இப்போது நிறுத்தி இருபத்தியோரு வருடங்களாகிறது. என் வாழ்வின் இலக்கிற்கு இவை தொந்தரவு செய்யக்கூடும் என்று என் பெரியவர்கள் சொன்னார்கள்” என்றான். “இதுவரை குடித்ததுமில்லையா?”. “இல்லை” என்றான். “நீங்கள் சந்தோஷத்தை இழக்கிறீர்கள்” என்றது. ஜோயல் “எனக்கு கடைசியில் கொஞ்சம் உகாலி (மக்காச்சோள களி) வேண்டும். இல்லையென்றால் எனக்கு இரவு தூக்கம் வராது” என்றான்.

அலிசியா சோடாக்கள், விஸ்கி, பியர், கண்ணாடிக் குடுவைகள் கொண்டுவந்து வைத்துவிட்டு, “உங்களுக்கு காபி எடுத்து வருகிறேன். நியாமா தயாராக அரை மணி நேரமாகும். க்ரிப்ஸூம், கடலையும் தரட்டுமா?” என்றது. “சரி” என்றான். பேசிக்கொண்டே குடிக்க ஆரம்பித்தார்கள்.

“இந்தியாவில் பசு இறைச்சி சாப்பிடமாட்டார்களாமே? உங்களுக்கு ஏன் இத்தனை கடவுள்கள்?” என்றான் எசெகியேல். ரவி புன்னகைத்துவிட்டு ”மற்றொரு நாள் விரிவாக சொல்கிறேன்” என்றான். நான்கு மரப்பலகை தட்டுக்களில் ந்யாமா ச்சோமா ஆவிபறக்க வந்தது. அலிசியா பெரிய கத்தி வைத்து மரத்தட்டிலேயே சிறு துண்டுகளாக்கி எல்லோருக்கும் நகர்த்தியது. “வேறேதேனும் வேண்டுமா?” அலிசியா கேட்க “இன்னொரு காபி. ஜானுக்கு இன்னொரு சோடா” என்றான். ப்ரவுன் சப்பாத்தி சுருட்டப்பட்டு ஃபோர்க்கில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. இடது கையால் ஃபோர்க் சப்பாத்தியை கடித்தபடி காபியை உறிஞ்சினான் ரவி.

பேச்சுக்கள் நிறுவன இயக்குநர்களின் மேனரிசங்கள், ஸ்டாஃப்களின் இடையிலான அரசியல்கள், கென்யாவின் இனக்குழு வன்முறைகள், கென்ய அரசு அலுவகங்களின் லஞ்ச ஊழல்கள், சர்ச் பாதிரியார்களின் வேஷங்களும், பண வேட்டையும்…எல்லாவற்றையும் சுற்றிச் சுழன்றது.

ரோஸ் மூன்று மக் பியரை முடித்திருந்தது. “வைன் ஒரு ஸ்மால் வாங்கிக் கொள்ளட்டுமா?” – என்றது. “வேண்டாம். விஸ்கி கொஞ்சம் எடுத்துக்கொள்கிறேன்.” சொல்லிவிட்டு விஸ்கியை கொஞ்சம் ஊற்றிக்கொண்டது. “மடாடுவில் திரும்ப வீட்டிற்குப் போகவேண்டும். ஞாபகம் வைத்துக்கொள்” புன்னகையுடன் சொன்னான் ரவி. ரோஸ் நைரோபி-நகுரு சாலையில், நைவாஸா அருகில் லாய்னியில் அறை எடுத்திருந்தது.

மறுபடி அரை கிலோ இறைச்சி ஆர்டர் செய்தார்கள். ரோஸின் கண்கள் ஒளியேறியிருந்தது. பேச்சும், சிரிப்பும் அதிகமாகி, சிரிக்கும்போதெல்லாம் ரவியின் தொடைகளில் அடித்துக்கொண்டிருந்தது. “ஜான், நீ மேய்ச்சலை குறைக்கவேண்டும். இல்லையென்றால் நோய் வந்து செத்துப்போவாய்” சொல்லிவிட்டு கிளுகிளுவென்று சிரித்தது. ஜான் ஒன்றும் பேசாமல் சிரித்துக்கொண்டான். “உன் சம்பளத்தில் எப்படி இத்தனை பெண் நண்பர்களை சமாளிக்கிறாய்?” என்றது. ஜான் அதற்கும் சிரித்துவைத்தான். “என் நட்பு வேண்டுமென்றால் உன் முழுச் சம்பளத்தையும் எனக்கே தரவேண்டியிருக்கும்” இம்முறை ஜோயலும் சேர்ந்து சிரித்தான்.

“நீ ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை ரோஸ்?” என்று கேட்டான் ரவி. “நான் சந்தோஷமாக இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? பெந்தகொஸ்தேயில் உருப்படியாய் எவன் கிடைக்கிறான்?” என்றது. “ஒரு இந்தியனைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா?” ரவி கண்களில் குறும்புடன் கேட்டான். “கடவுளே! மாட்டவே மாட்டேன். ஒரு நல்ல கென்ய பெந்தகொஸ்தேக்காரன் கிடைக்கவில்லையென்றால் ஒரு வெள்ளைக்காரனைத் திருமணம் செய்துகொள்வேனே தவிர, இந்தியனைத் திருமணம் செய்யும் தவறைச் செய்யமாட்டேன்” என்றது. ”ஏன் அப்படிச் சொல்கிறாய்?; இந்திய ஆண்கள் மிகவும் நல்லவர்கள். ஒரு மனைவியோடு மட்டும்தான் வாழ்வார்கள்” என்றான் ரவி. ரோஸ் குபீரென்று சிரித்தது. “அப்படியா மிஸ்டர் ரவி. பொதுவாக ஆண்கள் எல்லோரும் பாலிகேமஸ்தானே? நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுவார்களா என்ன? உங்கள் நாட்டில் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லையோ என்னவோ? எனக்கு இங்கு சில இந்திய ஆண் நண்பர்களும், வெள்ளைக்கார ஆண் நண்பர்களும் உண்டு. வெள்ளைக்காரர்கள் எவ்வளவோ மேல். முஜூங்குக்கள் மதிப்பளிக்கத் தெரிந்தவர்கள்.” என்றது.

“ஜிப்ஷோஃபில்லா நிறுவனத்தின் சுனிலை தெரியுமா உங்களுக்கு? எனக்கு இங்கு சிபாரிசு செய்து வேலை வாங்கித் தந்தவர்”. ரவிக்கு சுனிலைத் தெரியும். கேரளாக்காரர். ஜிப்ஷோஃபில்லாவில் அக்கவுண்ட்ஸில் இருக்கிறார். எட்டு வருடங்களாய் கென்யாவில் வாசம். “நான் உங்களிடம் சொன்னதாய் அவரிடம் சொல்லவேண்டாம். சென்ற ஆகஸ்டில் அவர் குடும்பம் இந்தியா போயிருந்தபோது அழைத்திருந்தார். போய் மூன்று நாட்கள் தங்கிவிட்டு வந்தேன். திரும்பும்போது ஒரு டிவிடி ப்ளேயரும், துணிமணிகளும் வாங்கிக்கொடுத்தார். பெரும் குடிகாரர். காலையில் எழுந்ததுமே குடிக்க ஆரம்பித்துவிடுகிறார்” என்றது.

தொடர்ந்து ரோஸ்தான் பேசிக்கொண்டிருந்தது. சட்டென்று நேரம் பார்த்துவிட்டு “என் கதைகள் தீராதவை மிஸ்டர் ரவி. நேரம் ஒன்பதரை ஆகிவிட்டது. பத்துமணிக்கு மேல் மடாடு கிடைப்பது கஷ்ட்ம்” என்று எழுந்துகொண்டது. ரவி “போகலாமா எசெகியேல். வேறெதேனும் வேண்டுமா?” என்று கேட்டான். எசெகியேலும், ஜோயலும் ஆளுக்கொரு பியர் கேன் வாங்கி கையில் வைத்துக்கொண்டு கிளம்பினர். பில் கொண்டுவந்த அலிசியாவிற்கு, பணம் கொடுத்து, ஐம்பது ஷில்லிங் டிப்ஸ் தந்து கட்டிக்கொண்டு கன்னம் வைத்து “நன்றி” சொன்னான் ரவி.

நடந்து கார் பார்க்கிங்கிற்கு வந்தார்கள். “இனிய மாலைக்கு நன்றி மிஸ்டர் ரவி” சொல்லி கைகுலுக்கிவிட்டு எசெகியேலும் ஜோயலும், எசேகியேல் கொண்டுவந்திருந்த சைனா பைக்கில் ஏறி கிளம்பினார்கள். “கவனமாகச் செல்லுங்கள்” என்றான் ரவி. ஜான் “இங்கேயே பக்கத்தில் என் உறவினர் வீடொன்றிருக்கிறது. தங்கிவிட்டு நாளை பண்ணைக்கு வந்துவிடுகிறேன்” சொல்லி விடைபெற்று சென்றான். ரோஸ் கமுக்கமாய் சிரித்து “இங்கு எத்தனையாவது நம்பரை வைத்திருக்கிறானோ” என்று கிசுகிசுத்தது. மடாடு வந்தால் அங்கிருந்தே தெரியுமென்பதால், காருக்கு பக்கத்திலேயே நின்று பேசிக்கொண்டிருந்தனர் ரவியும், ரோஸூம்.

“நிறையக் குடிப்பாயா? உடம்பைப் பார்த்துக்கொள்” என்றான் ரவி. “இல்லையில்லை. தினமும் குடிப்பதில்லை. எப்போதாவதுதான்” என்றது ரோஸ். “இந்தியாவில் உங்கள் குடும்பம் நலம்தானே மிஸ்டர் ரவி? நான் விசாரித்ததாக அவர்களுக்குச் சொல்லுங்கள்”. ரவி நர்மதாவையும் குழந்தை சந்திராவையும் நினைத்துக்கொண்டான். நள்ளிரவு தாண்டியிருக்கும் அங்கு இப்போது. ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். “நலம்தான். மே மாதத்தில் இங்கு வந்தாலும் வருவார்கள்” என்றான். “அவர்கள் இங்கு வருவதாயிருந்தால் எனக்கு வளையல்கள் வாங்கிவரச் சொல்கிறீர்களா?. எனக்கு கைநிறைய போட்டுக்கொள்ள வேண்டுமென்று ஆசை” ரவியின் கைபிடித்துக்கொண்டு கேட்டது. “சொல்கிறேன்” என்றான் ரவி.

பத்து நிமிடங்களாகியும் மடாடு எதுவும் வரவில்லை. “உங்களுக்கு இங்கு பெண் நண்பர்கள் இருக்கிறார்களா மிஸ்டர் ரவி?” ரோஸின் கேள்விக்கு ரவி சிரித்தான். “நீ என்ன அர்த்தப்படுத்துகிறாய் என்று புரிகிறது. இல்லை” என்றான். ஹோட்டல் உள்ளிருந்து காலின்ஸின் “ஹலோ” பாடல் காற்றில் மிதந்து வந்தது. ரோஸ் கூடவே ஹம்மிங் செய்தபடி “எனக்கு இவரையும், வெஸ்ட் லைஃப் குழுவையும் மிகவும் பிடிக்கும்” என்றது. சட்டென்று அருகில் வந்து, தோளில் சாய்ந்தபடி, கைகோர்த்து “உங்களுக்கு இன்றிரவு என்னுடன் உறங்க விருப்பமா?” என்று கொஞ்சலாய் கேட்டது. மெல்லிய ரோஜாவின் வாசனைத்திரவிய மணம். மடாடு வந்தது. ரவி சிரித்துக்கொண்டே “மடாடு வந்துவிட்டது. கவனமாகச் செல். நாளை விடுமுறை எடுத்துக்கொள். நாளை மறுநாள் பண்ணையில் சந்திக்கலாம்” என்றான். “ஒரு நல்லிரவை வீணாக்குகிறீர்கள். வருத்தப்படுவீர்கள். அப்புறம் உங்கள் இஷ்டம்” உதடு சுழித்து சொல்லிவிட்டு ஏறிக்கொண்டது.

ரவி வீடுதிரும்பி உறங்கச் செல்கையில் மணி பதினொன்றானது. கனவில் ரோஜா மணத்தோடு நர்மதா அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு சிணுங்கினாள். மொபைலின் ரிங்டோன் கேட்டு தூக்க கலக்கத்தில் தடவி கண்ணாடி தேடி எடுத்துப் போட்டுக்கொண்டு மொபைலை எடுத்தான். மணி இரண்டாகியிருந்தது. டிரைவர் ஜேம்ஸ். ஏன் இந்நேரத்தில்?; இந்நேரம் டிரக், பெட்டிகள் ஏற்றிக்கொண்டு விமான நிலையம் சென்றிருக்கவேண்டுமே?. “யெஸ்” என்றான். “மிஸ்டர் ரவி. இங்கு நைரோபி சாலையில் ஏனோ தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல். நான் மாய்மஹியோ ரூட்டில் செல்லட்டுமா?. நீங்கள் புக்கிங் ஏஜெண்டிற்கு ஃபோன் செய்து நான் ஒரு மணி நேரம் தாமதம் என்று சொல்லிவிடுங்கள்” என்றான். சரியென்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்ததும் மறுபடி தூங்கிப்போனான்.

மறுநாள் காலை கிளம்பி அலுவலகம் வந்தபோது, முழுக்க பரபரப்பு பேச்சாயிருந்தது. லாய்னிக்கு முன்னால், சாலை இறக்கத்தில் பெட்ரோல் திரவம் ஏற்றிவந்த டேங்கர் லாரி கட்டுப்பாடிழந்து தாறுமாறாய் ஓடி முன்னால் வந்த வாகனங்களை இடித்து வெடித்துச் சிதறியதில், கிட்டத்தட்ட முப்பது பேர் இறந்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். ரவி லாய்னிக்கருகில் என்றதும் பதட்டம் கொண்டான். கம்ப்யூட்டரை அவசரமாகத் திறந்து செய்திகள் பக்கம் சென்றபோது, பிபிசி பக்கத்தில் புகைப்படங்களுடன் அச்செய்தியிருந்தது. இரண்டு மூன்று மடாடுகளும் விபத்தில் எரிந்ததாக சொல்லப்பட்டிருந்தது. ரவி “இருக்கக் கூடாது” என்று பிரார்த்தித்துக்கொண்டே, மெல்லியதாய் நடுங்கும் விரல்களால் ரோஸின் தொலைபேசி எண்களை மொபைலில் அழுத்தினான். அழைப்பு செல்லவில்லை. எசெகியேலின் ஃபோன் வந்தது. ஆன் செய்து காதில் வைத்தான்.

குபுக்கென்று கண்கள் நிரம்பியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.