அறிதெளிவின் எழுச்சியைக் குறித்து

நன்றி: The University Bookman: On the Rise of the Enlightenment

ஆந்தனி காட்லீபுடன் ஓர் உரையாடல் (Anthony Gottlieb)
நேர்காணல் எடுத்தவர்: ஜேபி ஓ’மாலி (JP O’Malley)

 

மேற்கத்திய தத்துவம் இரண்டரை ஆயிரம் ஆண்டுகள் ஆன முதிர் துறை. ஆனால், அதில் பெரும்பாலானவை தொடர்பற்ற இரு பெரும் அலைகளாக ஆர்ப்பரிப்புகளாக எழுந்தவை. ஒவ்வொரு எழுச்சியும் நூற்றைம்பது ஆண்டுகள் நீடித்தது.

அறிதல் என்னும் கனவு (The Dream of Reason) என்னும் நூலை ஆந்தனி காட்லீப் 2000ஆவது ஆண்டில் பிரசுரித்தபோது, அதில் கிரேக்க தத்துவவியலாளர்களான சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாடில் போன்றவர்களின் சிந்தனைகளைக் கொண்டு, மேற்கத்தியத் தத்துவத்தின் முதல் ஆர்ப்பரிப்பை விளக்குகிறார்.

சமீபத்தில் காட்லீப் அறிதெளிதல் என்னும் கனவு: நவீன தத்துவத்தின் எழுச்சி (The Dream of Enlightenment: The Rise of Modern Philosophy) என்னும் நூலை வெளியிட்டிருக்கிறார். அது வட யூரோப்பில் எழுந்த மதப்போர்களையும், கலிலியோவிய அறிவியலின் உதயத்தையும் முன்வைத்து மேற்கத்திய தத்துவத்தின் கதையைச் சொல்கிறது. 1630களில் ஆரம்பிக்கும் கதை ஃபிரெஞ்சுப் புரட்சி வரை நீடிக்கிறது. இந்தக் குறுகிய காலகட்டத்தில் டிகார்ட், ஹாப்ஸ், ஸ்பினோஸா, லாக், ஹ்யும், ரூஸோ, வொல்டேர் ஆகிய எல்லோரும் மேற்கத்திய சிந்தனைக்கும் கலாச்சாரத்திற்கும் இன்றியமையாத பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

இதை எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளரும் அறிஞருமான காட்லீபோடு ஜேபி ஓ’மாலி உரையாடினார். அப்போது காட்லீப், தான் ஏன் ரூஸோ (Rousseau)வின் அரசியலுடன் ஒத்துப்போவதில்லை என்றும், ஜான் லாக் எழுதிய அரசாங்கத்தைக் குறித்த இரண்டாவது விளக்கவுரை (John Locke’s Second Treatise of Government) எவ்வாறு ஃப்ரெஞ்சு புரட்சியிலும் அமெரிக்க அரசியலமைப்பிலும் செல்வாக்குமிக்கதாக இருந்தது என்றும், மானுடத்தின் முன்னேற்றத்தில் நம்பிக்கை கொள்வது எவ்வளவு பயனுள்ளது என்றும் விளக்கினார்.

~oOo~

பெரும்பாலான மேற்கத்திய தத்துவம், இரு பெரும் அலைகளாக ஆர்ப்பரித்தவை: பழங்கால கிரேக்கத்திலும் அதன் பிறகு நவீனகாலத்தின் துவக்கநிலையில் இருந்த வட யூரோப்பிலும். இந்த இரண்டு காலகட்டத்திற்கும் இடையே உள்ள மேற்கத்திய தத்துவத்தில் — பெரிய அளவில் வித்தியாங்கள் இருக்கிறதா?

காட்லீப்: பெருத்த வித்தியாசங்கள் இருக்கின்றன. சொல்லப் போனால், அவையிரண்டுமே பெருமளவில் அறிவார்ந்து ஊக்கத்தை உண்டாக்குகின்றன என்பதைத் தவிர இவையிரண்டிற்கும் நடுவே எந்தப் பொதுப் பண்பையும் என்னால் யோசிக்க இயலவில்லை. மற்ற எந்த சமயத்திலும் சுவாரசியமான தத்துவங்கள் இல்லை என்றோ இந்த இரண்டு அலைகள் மட்டுமே தத்துவவியலின் சுவாரசியமான காலகட்டம் என்றோ நான் சொல்லவில்லை

இன்றைய தத்துவவியலில் நம்மைக் குறிப்பிடத்தக்க வகையில் கவரும் பெரும்பாலானவை பழங்கால கிரேக்கத்தில் இருந்தோ, நூற்றைம்பதாண்டுகள் நீடித்த நவீனகாலத்தின் துவக்கநிலையில் இருந்த வட யூரோப்பில் இருந்தோ வந்தவை.

சொற்பொழிவு பொருள்களை விலக்கி தனியே பிரித்துவிட்டு அறிவால் தெளிந்துணர்ந்து கொள்பவைகளில் மட்டுமே கவனம் செலுத்துமாறு தன்னுடைய வாசகர்களிடம் டேக்கார்ட் கேட்டுக் கொண்டார். அதைக் குறித்து சுருக்கமாகப் பேச முடியுமா?

காட்லீப்: அது கிரேக்கர்களையும் புனித அகஸ்டீனை (St Augustine)யும் பிரதிபலிக்கும் பழங்கால எண்ணம்: நுண்மையான விஷயங்களைக் குறித்தும், எண்ணங்களைக் குறித்து ஆழ்வயப்பட்டு யோசிக்கும்போதும் அறிவாற்றல் எதை உற்பத்தியாக்குகிறதோ அவை சற்றே உயர்தரமானவை என்கிறார்கள் அவர்கள். நவீன தத்துவத்தின் தந்தை என்ற் டேக்கார்ட் (Descartes), சரியாகவே அழைக்கப்பட்டாலும், அவர் பழங்கால முகாமைச் சேர்ந்தவர்தான். எனினும், நாம் தற்போது செயலறிவு சார்ந்த அறிவியல் என்றழைக்கும் துறையை அவர் நாடினார்.

உடலையும் மனதையும் தனித்தனியே பிரித்து வைத்திருப்பது குறித்து டேக்கார்ட்-வின் எண்ணங்கள் என்ன?

காட்லீப்: ஒருவகையில் பார்த்தால் அவர் இந்த உடலுக்கும் மனதுக்குமான சிக்கலை கண்டுபிடிக்கிறார். அவர்தான் இந்த வினாவை அழுத்தந்திருத்தமாகக் கேட்கிறார்: மனமும் பொருண்மமும் எவ்வாறு பிணைகிறது? மனிதர்களின் உடலும் மனதும் மிகவும் நெருங்கி ஒன்றோடொன்று ஊடாடுகிறது என வெகு துல்லியமாக டேக்கார்ட் உணர்கிறார்: அவையிரண்டிற்கும் நடுவே பெரிய தடுப்பு எதுவும் கிடையாது.

பிளாட்டோ-வைப் போல் இல்லாமல் ஹாப்ஸ் வேறு மாதிரி கற்பனை செய்தார் என நீங்கள் எழுதுகிறீர்கள். எல்லோரையும் அச்சத்தில் வைத்திருந்து பொதுஅதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவியலாத, சட்டங்கள் இல்லாத உலகின் விபரீதங்களைக்குறித்து ஹாப்ஸ் சிந்திக்கிறார். இதன் தொடர்ச்சியாக, அச்சமும் குரூரமான முறையில் சாவுக்குள்ளாக்கப்படும் அபாயமும் உருவாகிறது. எனவே, அரசியல் ஆட்டத்தின் சரியான பக்கத்திற்கு ஹாப்ஸ் வந்து சேர்ந்திருக்கிறார் என வைத்துக் கொள்ளலாமா?

காட்லீப்: நான் அப்படி நினைக்கவில்லை. அந்தக் காலத்தில் இருக்கும் நபர்களை எடுத்துக்கொண்டு, வலது, இடதுசாரி என்று பிரிப்பது கொஞ்சம் கடினம். சமத்துவவாதத்தை வைத்துக்கொண்டு பார்த்தால், ஹாப்ஸை இடது என்று சொல்வதற்கு முகாந்திரம் இருக்கிறது.

குடும்பப் பின்னணியினால் மட்டும் மக்களுக்கு அதிகாரம் அமையக்கூடாது என்று அவர் நினைத்தார். பலமான அரசாங்கத்தின் முக்கியத்துவம் குறித்த அவர் யோசனையும் வலதுசாரி தரப்பு அல்ல என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், கடைசியில் பார்த்தால், வேறு எந்த அரசாங்கத்தையும் விட சர்வாதிபத்திய கம்யூனிஸ்ட் அரசுகளே சர்வசக்தி கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் பொறுப்பு என்பது குடிமக்களைக் காப்பது என்பதை ஹாப்ஸ் யோசித்தார் எனச் சொல்வது சரியாக இருக்குமா?

காட்லீப்: நிச்சயமாக. அவருக்கு இது முக்கியமான விவகாரமாக இருந்தது. அவரின் வாழ்நாளில் மதப்போர்களும் உள்நாட்டுக் கலகங்களும் நடக்கின்றன. எனவே, சண்டையில் ஒருவரையொருவர் கொன்றுகொள்வதை அவர் காண்கிறார். பொதுவாக அது ஒரு மோசமான காலகட்டம். இந்த மாதிரி அசிங்கமானத் தூண்டுதல்களை அடக்கியாள பலமான அரசாங்கம் இல்லை என்பதே தவற்றுக்கான மூலகாரணமாகச் சொல்கிறார். ஒற்றைகுடையின் கீழ் பிரிக்கப்படாத சக்திவாய்ந்த இறையாண்மை – என்பதைக் குறித்து அவர் வாதிட வேண்டும்: உங்களின் நன்மைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் என்று சொல்லி அவர் பலம்பொருந்திய அரசை ஆதரிக்கிறார்.

சில நிலங்களைத் தனியார் சொத்தாக எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அந்த நில அபகரிப்பின் போதுதான், விஷயங்கள் மனிதகுலத்திற்கு எதிராக தீவிரமாக தவறாக செல்லத் தொடங்கியது என்று ரூஸோ சொல்கிறார். அவருடன் நீங்கள் ஒத்துப் போகிறீர்களா?

காட்லீப்: இந்த விஷயத்தில் நான் ரூஸோவுடன் ஒத்துப் போகவில்லை. எல்லாமே பன்னெடுங்காலமாக வீழ்ச்சியில் இருப்பதாக அவர் நினைக்கிறார். நான் நம்பிக்கைவாதி. நாகரிகத்தின் அடுத்தகட்டமாக நம்மில் பலர் பார்க்கக்கூடியதை, அவர் பின்னகர்வாகக் கருதுகிறார். இந்த விஷயத்தில் அவருடன் ஒத்துப் போக எனக்கு பெரிதாக ஏதுமில்லை. அசலான சிந்தனைவாதிகளில் அவர் குறிப்பிடத்தகுந்தவராகவே நான் நினைக்கிறேன். ஆனால், சமூக மற்றும் அரசியல் கேள்விகளில் அவர் எங்கே சரிப்படுகிறார் என்று பார்த்தால் பெரிதாக எதுவும் எனக்கு கிட்டவில்லை.

’கடவுளின் வார்த்தைகள் தவறானவை; ஏனென்றால் அவை மனிதரால் மீள் இடப்பட்டது’ என்று முதன் முதலாக ஸ்பினோசா மட்டுமே முழுமையான முறையில் வாதிட்டதாக உங்கள் புத்தகத்தில் எழுதுகிறீர்கள். கிறித்துவம் என்பது நீங்கி மனிதநேயம் என்பதை முன்னிறுத்திய பாதையைக் கொண்ட மதச்சார்பற்ற யூரோப்பிற்கு, ஸ்பினோசாவின் கருத்து வித்திட்டதா?

காட்லீப்: அது பங்காற்றி இருக்கிறது. மனிதரால் உருவாக்கப்பட்ட இலக்கிய காவியமாக கிறித்துவத் திருமுறையைப் (பைபிள்) பார்க்க வேண்டும் என்ற சிந்தனையை முதலில் முன்வைத்தவர்களில் ஸ்பினோசா ஒருவர். அன்றைய காலகட்டத்தில் இது புதுமையான எண்ணம். அதை ஜனங்களின் மட்டுப்படுத்தப்பட்ட அறிவுக்கு புலப்படுமாறு விளக்கி ஊக்குவிக்கிறார். அவர்தான் இந்தக் கருத்தை முதன்முதலில் சொன்னதாக நான் சொல்லவில்லை. ஆனால், இந்த எண்ணத்தை பரந்துபட்டு பொதுவில் சொன்ன பல சிந்தனாவாதிகளில் முதன்மையானவர்.

ஜான் லாக் எழுதிய அரசாங்கத்தைக் குறித்த இரண்டாவது விளக்கவுரை (John Locke’s Second Treatise of Government) தான் ஃப்ரெஞ்சு புரட்சிக்கும் அமெரிக்க அரசியலமைப்பு சாசனத்திற்கும் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்திற்கும் மூலவித்தாகச் சொல்லப்படுகிறது. அரசியல் தத்துவவியலில் அதற்கு ஏன் அவ்வளவு பெரிய முக்கியத்துவம் தரப்படுகிறது?

காட்லீப்: இதை ஹாப்ஸ் சொன்ன கருத்துக்கு முரணாக சித்தரிக்க முடியும். அரசு எவ்வளவு மோசமாகச் செயல்பட்டாலும் அதற்கு எதிராக போராடக்கூடாது என்று ஹாப்ஸ் கருதினார். ஆனால் நிலைமை மோசமடைந்தால் கிளர்ச்சி செய்ய உரிமை உண்டு என்று லாக் நினைத்தார். ஏனெனில் அவரைப் பொறுத்தவரை சமூக ஒப்பந்தம் என்பது மக்களுக்கும் ஆளுவோருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒரு பேரம் ஆகும். ஆட்சியாளர் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் போது அந்த ஒப்பந்தம் உடைந்து போகிறது. நீங்கள் மற்றொரு தலைவரைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்படுகிறீர்கள். லாக்-கின் எண்ணங்களில் பிற்காலப் புரட்சியாளர்களைக் கவர்ந்த மிக முக்கியமான கருத்து இதுவே.

’சமூக ஒப்பந்தம்’ என்றால் என்ன அர்த்தம்? அது வரலாற்றில் எப்போது உருவாகியது?

காட்லீப்: சமூக ஒப்பந்தத்தின் பல்வேறு படிகள் இங்கு உள்ளன. அவற்றில் சில, நம்மிடமுள்ள  பழமையான அரசியல் நூல்களின் காலத்தைச் சேர்ந்தவை.

அதன்படி, கூட்டுறவின் மூலம் அதிக பயன்களைப் பெறலாம் என்று உணர்ந்த மக்கள் பாதுகாப்புக் கருதி ஒன்றிணைந்ததனாலேயே அரசுகள் அமைந்தன.  இதனால்தான் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இது நீண்டகாலமாக நடந்துவருவது. எப்படி சமூகங்கள் உருவாகி ஒன்றிணைந்தன என்பது கிரேக்கப் புராணங்களில் உள்ளது. பிறகு, நவீன காலத்தின் முற்பகுதியில் – ருஸோ, லாக், ஹாப்ஸ் போன்றவர்களால் – இது வெளிப்படையாகத் தெரிந்தது. ஒரு வரலாற்றுக் குறிப்பாக மட்டுமல்லாமல், அரசை நியாயப்படுத்தும் முகமாகவும் லாக் இதை ஒருங்கிணைத்தார்

லாக்  (Locke)யிடம் இருந்து ஒரேயொரு மிகப் பெரிய யோசனையை மொத்தமாகச் சொன்னால், அது என்னவாக இருக்கும்?

காட்லீப்: மக்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்காகச் சிந்திக்க வேண்டும். அறிதெளிவின் முத்திரைக் கருத்துகளில் இதுவும் ஒன்று.

மூளைச் செயல்பாடுகளில் மனிதருக்கும் உயரிய மிருகங்களுக்கும் அடிப்படையில் பெரிய அளவில் வித்தியாசங்கள் கிடையாது என்பதை முன்வைத்து டார்வின் எழுதிய மனிதனின் இறங்குமுகம் (Darwin’s Descent of Man) வெளியாவதற்கு நூறாண்டுகள் முன்பே – டேவிட் ஹூம் இதே முடிவிற்கு வருகிறார். அவர் ஏன் அதை நம்பினார்?

காட்லீப்: மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் இருக்கக்கூடும் என்று நம்பும் அடிப்படை மதவாத பாரபட்சத்திற்கு அப்பாற்பட்டவர் ஹூம். பழமையான மதங்களில் மனிதர்களுக்கு ஆத்மா உண்டென்றும் விலங்குகளுக்குக் கிடையாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. அத்தகைய மாதங்களில் இருந்து சிறிதளவே ஹூம் கருத்துகளை எடுத்துக்கொண்டிருந்தார்.

எனவே, அவர் கிறித்துவத்தின் மீது கொண்டிருந்த அவநம்பிக்கை, அவரது சிந்தனையை விரிவுபடுத்தி விலங்குகள் செய்வதும் சொல்வதும் நாம் செய்வதை விட வேறுபாடானவை அல்ல என்பதை அவற்றுக்கு உணர்த்தியது.

ஹூம் எழுதியதன் நோக்கம் என்னவென்றால், நம்முடைய அறிவு என்பது எத்துணை தூரம் நம்முடைய வரையறுக்கப்பட்ட அனுபவங்களினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது என்பதை புலப்படுத்தவே.  இதனால் என்ன சொல்ல வருகிறீர்கள்?

காட்லீப்: மனித மனம் பலவீனமானது, குறிப்பிட்ட எல்லைகளுக்கு உட்பட்டது என்பதை விவரிக்க ஹூம் பலவிதமான ‘அவநம்பிக்கைப் பிரச்சனைகளை’ தந்தளித்தார். இந்தப் பிரச்சனைகள் தத்துவ ஞானிகளால் இன்றளவும் விவாதிக்கப்படுகின்றன. அவரைப் பொருத்தவரை அனுபவத்தையும் உலகாயதமான விஷயங்களையுமே நாம் சார்ந்திருக்கவேண்டியிருக்கிறது.

உங்கள் புத்தகத்தின் இறுதிமுடிவாக – அறிதெளிவு – பல தருணங்களில் பல்வேறு சகாப்தங்களின் எதிர்மறையான விஷயங்களுக்கு பழியேற்றுக் கொண்டிருக்கிறது: பிரெஞ்சுப் புரட்சியின் அரசபயங்கரவாதத்திற்கு; ஃபாசிசம் மற்றும் கம்யூனிஸத்தின் இருண்ட பகுதிகளுக்கு; யுடோப்பிய கற்பனையுலகின் பைத்தியக்காரர்களுக்கு. அந்த கருதுகோளோடு நீங்கள் ஒத்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்?

காட்லீப்: நான் முன்னேற்றத்தை நம்புகிறேன். மனித வாழ்க்கை பல விதங்களிலும் மேன்மையடைந்திருக்கிறது என்பதை மறுப்பது முட்டாள்தனமானது. நெடுநாள் வாழும் பலர், பசிக்கொடுமையால் மிகச் சிலரே உயிரிழப்பது  எல்லாம் சில எளிய உதாரணங்கள். அறிதெளிவைப் பற்றிய விவாதத்தைப் பொருத்தவரை, நீங்கள் எப்படி அதை வரையறுக்கிறீர்கள், யாரிடம் அதைக் காண்கிறீர்கள் என்பதையெல்லாம் சார்ந்தது அது. ஓரளவிற்கு, நீங்கள் உண்மையான அறிதெளிவு என்று எதை நினைக்கிறீர்கள் என்பதற்கான மதிப்பீடு  அது.

எனவே, பொதுவாகப் பார்த்தால் அறிதெளிவு என்பதை நீங்கள் நேர்மறையான அறிவார்ந்த இயக்கமாகப் பார்க்கிறீர்களா?

காட்லீப்: ஆமாம். அதேசமயம், அது உண்மையாக அமையவேண்டும் என்ற விதத்தில் அதை விளக்க முற்படுகின்றேன் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். அறிதெளிவு என்ற வார்த்தைப் பிரயோகத்தை பதினெட்டாம் நூற்றாண்டு பிரஞ்சுச் சிந்தனையாளர்களுக்கு மட்டுமே உரிமையாக அளிக்கவேண்டும். அவர்கள் பிரகாசமான புதிய நூற்றாண்டில் வாழ்வதாக வெளிப்படையாகக் கருதினார்கள். இருளை விலக்க ஒளியைக் கொண்டுவருவதாக எண்ணினார்கள்.

2 Replies to “அறிதெளிவின் எழுச்சியைக் குறித்து”

 1. லாக், ஸ்பினாசோ, போன்றவர்கள் குறித்தான கருத்துகளின் மொழிபெயர்ப்பு தெளிவாக புரிகிறது. ஆனால் பிற பகுதிகளை வாசிக்கும் போது மொழிபெயர்ப்பின் நெருடல் இருந்து கொண்டே இருக்கிறது. இரு உதாரணங்ள்,

  “Descartes urged his readers to focus on things that are objects of the intellect alone and totally separate from matter. Can you briefly talk about this?” என்ற இந்த கேள்விக்கான மொழிபெயர்பில் சொற்பொழிவு என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

  சொற்பொழிவு பொருள்களை விலக்கி தனியே பிரித்துவிட்டு அறிவால் தெளிந்துணர்ந்து கொள்பவைகளில் மட்டுமே கவனம் செலுத்துமாறு தன்னுடைய வாசகர்களிடம் டேக்கார்ட் கேட்டுக் கொண்டார். அதைக் குறித்து சுருக்கமாகப் பேச முடியுமா?

  புலனறிபொருட்களை முற்றாக ஒதுக்கிவைத்துவிட்டு அகமறிபொருட்களை மட்டுமே கூர்ந்து நோக்க தன் வாசகர்களை வலியுறுத்துகிறார் டெகார்டு. – என்பதே அந்த கேள்வியாக தெரிகிறது.

  Does this then mean we should put Hobbes on the right side of the political spectrum? என்ற கேள்வியை,

  “எனவே, அரசியல் ஆட்டத்தின் சரியான பக்கத்திற்கு ஹாப்ஸ் வந்து சேர்ந்திருக்கிறார் என வைத்துக் கொள்ளலாமா?”

  என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

  ஆனால் உண்மையில் கேள்வி, ஹோப்சை அரசியல் புலத்தில் வலது சாரியாக கொள்ளலாமா என்பதே. அப்படி கேள்வி இருக்கும் போது தான் அந்த பதிலும் பொருந்தி வருகிறது.

 2. தேவி பிரசாத் சட்ட்டர்ஜியின் ‘ இந்திய தத்துவம் ஒரு அறிமுகம்” மற்றும் பிற தத்துவ பாடங்கள் படித்துக்கொண்டிருக்கும் , இந்த வேளையில் எனக்கு மிக முக்கியமான ஒரு கட்டுரை இது. சொல்வனத்திற்கு நன்றி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.