லட்சுமிராஜபுரம் அரண்மனை

இராஜா கோரியின் பரந்த பிரதேசம். புதர்மண்டி முட்செடிகளும் சிதிலங்களும் அடைத்துக்கொண்டு பாதைகளும் சிதைந்து பயன்படுத்துவோர் யாருளர் என்று நிறைய அலட்சியமாய் இது நடக்குமா – நடந்திருக்கிறது. அந்நிய மண்ணில் திடீர்ப் பரிசுபோல் கையில் கிடைத்த தஞ்சாவூரை எப்படிக் கொடிகட்டி ஆண்டார்கள். செழுமையான தஞ்சாவூர்க் கலாச்சாரத்தைக் கலவையாக மாற்றிச் சிதைத்து வைத்தார்கள். ஆசைகள் பேராசைகள், பொறாமை, கயமை, வெற்றி, தோல்வி, காதல், காமம், போர், சூழ்ச்சி, கொலைகள் என்பனவற்றை எதிர்கொண்டு வாழ்வதும் ஆள்வதும் இராஜாக்களுக்குச் சகஜமானதுதான். இங்லீஷ் பிரபுக்களுக்கு வளைந்தும் நெளிந்தும், தண்டம் கட்டியும், கப்பம் கொடுத்தும் கூச்சமின்றி ஜீவித்திருந்தார்கள். சரித்திரத்தில் இடம்பெற்றவர்கள் இடம்பெறாதவர்கள் எல்லோருமே இந்த அடக்க ஸ்தலத்தில் மௌனித்துவிட்டார்கள். இராஜா கோரி – அதன் அமானுஷ்யம் உற்றுக்கேட்டால் சில அழுகுரல்களும் மர்மக் கதைகளும் கேட்கும்.

“நானே மகாராஜா. என்னை மிஞ்சியவர் எவருமில்லை… மராத்திய இரத்தம் நல்ல சிவப்பு – மேன்மையானது.”

வடவாற்றின் வௌ்ளம் காணாமல் போயிருந்தது. தஞ்சாவூரின் கழிவுநீர்ச் சாக்கடையாக மாறிப் போயிருந்தது. ஐம்பது அறுபது வருடங்களில் நிறைய மாற்றங்கள். இப்போதெல்லாம் நொடிப்பொழுதில்கூடப் புதிது புதிதாக வந்துவிடுகின்றன. பழையவை உருமாற்றம் கொள்கின்றன. தடுக்க முடியாது. சிறிது தொலைவில் பார வண்டிகளின் சப்தம் மட்டுமே கேட்கும். தஞ்சாவூர் – திருவையாறு பிரதான சாலை. அப்போதெல்லாம் பார வண்டிகளின் கடாமுடா என்ற ஓசைதான். டேய்ய்ய் என்று மாடுகளை விரட்டும் அதட்டல். மாடுகளும் இருட்டிக் கொண்டு வருவதைப் புரிந்துகொண்டு கழுத்து மணிகளசைய வண்டிகளை இழுத்துக்கொண்டு ஓடும். மங்கலாய் நினைவு. இந்த முதிர்ந்த வயதிலும் ஞாபகத்துக்கு வருவது ஆச்சரியம்தான். இப்போது நவீனரக மோட்டார் கார்கள் பறந்து கொண்டிருந்தன. இராஜாகோரியின் இடிபாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. இராஜாகோரியின் இடிபாடுகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஹுசூரைப் பற்றி எவருக்குத் தெரியும். வெங்கோபாராவ் தளிகேசுவரராவ்–?

சிறிதும் பெரிதுமாய் ஏகப்பட்ட கோரிகள் – கோயில்கள். தஞ்சாவூரைக் கட்டியாண்ட மகாராஜாக்களின் அடக்க ஸ்தலம். சிவாஜி வம்சம், போன்ஸ்லே வம்சம், மராத்தியர் என அவருக்கு முன்னே கோலோச்சிய நாயக்க மன்னர்கலின் அடக்க ஸ்தலங்களும் இப்பிரதேசத்தில்தான் இருந்திருக்க வேண்டும். ஏகப்பட்ட மகாராணிகள், உபநாயகிகள், வலுக்கட்டாயமாக கவர்ந்து வரப்பட்ட காமக்கிழத்திகள் என எல்லோருமே இங்கேதான். மகாராஜாக்களின் இராஜீய விரிவுக்கும் அதிகாரத்திற்கும் ஏற்ப, சிறிதும், பெரிதும், பிரம்மாண்டதுமான கோரிகள். இடிந்து சிதைந்து மண் குவியலாகவும் கற்குவியல்களாகவும் கிடந்தன. இராஜாக்கள் காணாமல் போனபிறகு அடக்க ஸ்தலங்களுக்கு என்ன வேலை. என்ன பயன்? சர்கேலாகவும், கில்லேதார்களாகவும், ஜோதிடர்களாகவும் சமஸ்கிருதப் பண்டிதர்களாகவும் இருந்தவர்களின் வாரிசுகள் இப்போது சமையல்வேலை, எடுபிடி வேலை, பெட்டிக்கடை, டீக்கடை என்று ஐக்கியமாகிப் போயிருந்தனர். சாக்கடைச் சந்தில் மேல வீதியில் வசித்துக்கொண்டு சிதைந்த மராத்தி பேசிக்கொண்டு – அவ்வப்போது அஞ்சுமாடியையும் தர்பார் கானாவையும் மங்கல விலாசத்தையும் ஏக்கத்தோடு பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டு ஜீவித்துப் பழகிக் கொண்டிருந்தனர். தஞ்சாவூர் வீரியமிக்க மூச்சு – மராத்தியக் குரல்கள் திணறத் திணற ஜீவியப்பாடே பெரும்பாடு. மராத்தியும் குஜராத்தியும் தெலுங்கும் தமிழும் கலந்து புதுப்பாஷை பேசிக்கொண்டு – கஷ்டம்தான்.

எங்கும் அமானுஷ்ய அமைதி. திகிலூட்டும் மௌனம். கூடுதல் திகில் சேர்க்கும் வகையில் பெரிய கோரியின் உச்சியில் கழுகு ஒன்று பிரமாண்டமான தன் சிறகுகளை விரித்து விரித்துக் காட்டியபடி உட்கார்ந்திருந்தது. என் பிரதேசத்திற்குள் ஏன் நுழைந்தாய் என்று ஆட்சேபிப்பதைப்போல ‘‘கர் கர்” – ஒரு கற்றை முள் உள்ளங்காலில் அப்பிக்கொண்டது. இரத்தம் கசிந்தது. வலித்தது. எதற்காக வந்தாய் தளிகேசுவரராவ் மாடிகே. மராத்திய மிச்ச வாசனை ஈர்த்ததா?

“நிஜ அஸ்விஜ பகுளத்ரயோதசி முதல் தினம் இருவத்தஞ்சு நாழிக்கு மேலே சௌ சாயுபுமார்கள் எண்ணெய் ஸ்தானம் செய்வது. மஹால் கர்சேபோதே கணக்கு… பாவுபீஜ் ஸ்ரீதிவான் சாயபிடம் செலவுக்காக அறுவது சக்கரம். அங்கப் பிரதக்ஷத்திற்காக சுலக்ஷணா பாயி சாகேபுக்கு வௌ்ளி வாத்யமும் ஜோடலியும் செலுத்த உத்தரவாவது. ஒவ்வொருத்தருக்கும் முன்னூத்துப் பதினஞ்சு வீதம் அறுநூத்து முப்பதுக்கு ரெண்டு விலை அம்பது சக்கரம். இதை ஜமதார்காரை வில் செய்து தரவேண்டியது. நாகபூஜைக்குப் பள்ளியக்ரகாரம் இலட்சுமிராஜபுரம் அரண்மனையில் உசிருள்ள பாம்புகளைக் கொண்டு வரவேண்டும். ஒம்பது பாம்புகளுக்கு ஒரு பாம்பிற்கு ரெண்டு பணம் வீசம் தரவேண்டியது. இப்படிப் புலம்பியபடியே சுலக்ஷணாபாயி சாகேப் செத்துப் போனாளாம். அமிர்தராவ் இராமோஜி சர்ஜேராவ் காட்கேயின் முதல் பாயி சாகேப் அதிகாரத்தை விட்டுப் பிரிந்திருப்பது கஷ்டந்தாம். அதிகாரம் இல்லாமல் உயிர் வாழ்வதும் சிரமம்தான். அதைவிடச் சாவது உசிதமானது என்பது பாயி சாகேப் மார்களின் எண்ணம். பள்ளியக்ரகாரம் இலட்சுமிராஜபுரம் அரண்மனையில் சுலக்ஷணா பாயி சாகேப்தான் பிரதானம். காட்கேயின் பிரியமான பார்யாள். மராத்தா சாங்லி மகாராஜாவின் சீமந்த புத்ரி. அரண்மனை வாசம் நுகர நுகர அலுக்காது என்பாள். பள்ளியக்ரகாரம் இலட்சுமிராஜபுரம் அரண்மனையும் தளிகேசுரசுவாமி கோயிலும் பாயி சாகேப் காலத்தில்தான் பிரமாதமாக இருந்தது. அரண்மனையிலிருந்து இருபது தப்படி தூரத்தில் இருக்கும் கோயிலுக்குத் தனி அலங்காரப் பாதை. பட்டுப் படுதாக்களைப் போட்டு நீளப்பாதை. யார் கண்களிலும் குறிப்பாக, சாமான்யர் கண்களில் படாமல் சாமி தரிசனம் செய்ய– பாயி சாகேப் பின் கோயில் தரிசன வௌ்ளிக்கிழமைகளில் அமர்க்களப்படும். கோயில் மாடமெங்கும் அகல்விளக்குகள். மேளதாளம். தீவட்டி வரிசை, மராத்திய பிராமணர்களின் வேத கோஷம் – அரண்மனையில் நடக்கும் தாறுமாறான காரியங்களைச் சரிசெய்ய நூறு பிராமணர்களுக்கு நூறு கிராமங்கள் பிரம்மதேசம். நூறு பரதேசிகளுக்கு அன்னதானம் வேறு.”

தஞ்சாவூர் கோட்டை போன்ஸ்லேக்களைவிட அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்களாகக் காட்கே காட்டிக்கொள்ள ஆசைப்பட்டார். சர்கேலாக இருந்த பக்தேசிங் ராகேஜி ராவ், காட்கேக்குத் துணையாக இருந்து அவருடைய அந்தஸ்தையும் அதிகாரத்தையும் பிரம்மாண்டமாய்க் காட்டிக் கொண்டிருந்தான். இங்லீஷ் ரெசிடெண்டுகள் கும்பினி அதிகாரிகளோடு நெருக்கமாக இருக்கும் உபாயங்களைச் சொல்லிக் கொடுத்தான். கோட்டை போன்ஸ்லேக்கள் தங்களை மதிப்பதே இல்லை என்ற கோபமும் இருந்தது.

செயின்ட் பீட்டர்ஸ் சர்ச் மணியோசை வெகு துல்லியமாகக் கேட்டது. மேற்கே கொட்டுச் சத்தமும் ஆரவாரமும் வாண வேடிக்கைகளும் – வயதானவர் எவரேனும் செத்துப் போயிருக்கக்கூடும். வடவாற்றங்கரை நெடுக மேற்கே வெகு தூரமும் கிழக்கே பாலோபா நந்தவனம் தாண்டியும்கூட கோரிகள் இருந்தன. ஜாதிக்கொரு இடம். சம்ஸ்கார மண்டபங்கள் – இப்போது பெரும்பகுதி குடியிருப்புகளாகிவிட்டன என்பது புரிந்தது. அந்தக் கோரியின் இடிந்த படிக்கட்டின் ஓரமாக உட்கார்ந்தான் வேங்கோபாராவ் தளிகேசுவரராவ் மாடிகே. கால்கள் வலித்தன தலை சுற்றியது. உடனே எதற்காக வந்தோம் என்ற கேள்வியும். வந்து ஆகப்போவதென்ன. பள்ளியக்ரகாரம் அரண்மனை இடிபாடுகளைப் பார்க்கவா. அமிர்தராவ் ராமோஜி ஸர்கேராவ் காட்கே அதிகாரப் போதையும் அந்தப்புர போதையும் தலைக்கேறி அதீத ஆட்டம் போட்டதாகக் கேள்வி – கதை கதையாகச் சொன்னார்கள் இவன் யாரென்று தெரியாமலே. சர்கேல் பக்தேசிங் ஏகோஜியின் துர் போதனையால் அரண்மனை மெல்ல மெல்லக் கரைந்து கொண்டிருந்ததை வயதானவர்கள் பயத்தோடு விவரித்தார்கள். காணாமல் போனதையும் சொன்னார்கள் வருத்தத்தோடு.

கமலாம்பாபாயி அனைவரையும்விட அதிகாரம் மிக்கவளாக இருந்தாளாம். இராகேஜி ராவின் தர்மபத்தினி. அவள்மேல் காட்கே கொண்ட மோகம் அளவிடமுடியாதது. நீட்டிய காகிதங்களிலெல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டுக் கவலை ஏதுமற்று இருக்குமளவிற்கு மோகம். ஸ்ரீ தளிகேசுவர சுவாமி கோயில் அங்கப் பிரதட்சிணம் செய்ய மாதந்தோறும் முப்பது சக்கரம் கொடுக்க வேண்டியது என்று ஹுசூர் கட்டளையிட்டிருந்தார். கமலாம்பா பாயியின் அத்தனை வரவுகளும் இலட்சுமிராஜபுரம் அரண்மனைக்குள் புகுந்துவிட்டனர். எல்லோருக்கும் உலுப்பை வழங்க மளமளவென உத்தரவாயிற்று. பத்தேசிங் ராகேஜிராவ் பக்கம் வீசிய அதிர்ஷ்டக்காற்று வெறும் காற்றல்ல சூறைக்காற்று.

மேகமூட்டம் கருப்பாய் அடர்த்தியாய் இதோ கொட்டித் தீர்த்து விடுவேன் என்பது போல மருட்டிக்கொண்டிருக்க – சற்றே நிமிர்த்திப் பார்த்தான்.

“அட… என்ன இது… என்ன இது நிஜம்தானா. கனவா” மீண்டும் மீண்டும் பார்த்தான். ஒரு பெரிய கழுகு தன் பிரம்மாண்டமான றெக்கைகளை விரித்தவாறு அங்குமிங்கும் பறந்தது. “என் உறைவிடத்தில் உனக்கென்ன வேலை… சாகேப்…” கண்களில் குரூரம்.

…. மோ…..ஜி……… கா…..ட்……கே…. என்று முகப்பில் கலைந்தும் சிந்துமாய் எழுத்துக்கள். காலம் அழித்ததா இயற்கை அழித்ததா. உன் பெயர் நிலைபெறத்தக்கதல்ல என்று தர்மதேவதையே வந்து சிதைத்ததா. நடுநடுவே கல்வெட்டு எழுத்துக்கள் மறைந்தும் உடைந்தும் போயிருந்தன. கண்களைக் கிடுக்கிக்கொண்டு மங்கலான எழுத்துக்களைச் சிரமப்பட்டு வாசிக்க முயன்றான். கண்களை அகல விரித்துக்கொண்டு துழாவினான். மெல்லப் பிடிபட்டது. புரிந்தது.

“ஹிஸ் ஹைனசு அமிர்தராவ். இராமோஜி ஸர்ஜேராவ் காட்கே….” கண்களைத் துடைத்துக்கொண்டு மீண்டும் பார்த்தான். சந்தேகமே இல்லை. அவனுடைய பெயர்தான். ஹிஸ் ஹைனசு அமிர்தராவ் ராமோஜி ஸர்ஜேராவ் காட்கே – ஒரு விதத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் – உறவுக் கணக்கு போட்டால் இவனுடைய தாத்தாதான். தஞ்சாவூர் கோட்டை பள்ளியக்ரகாரம் இலட்சுமிராஜபுரம் அரண்மனையில் கோலோச்சிய கொடூரன். “ஹிஸ் ஹைனசு அமிர்தராவ் ராமோஜி ஸர்ஜேராவ் காட்கே” ஹிஸ் ஹைனசு – என்ன ஹிஸ் ஹைனசு… அரண்மனையில் இருட்டறையில் கிடந்த ஏகப்பட்ட சுவடிகளைக் காலின் மெக்கன்ஸி துரைக்குக் கொடுத்ததால் மெக்கன்ஸியின் நண்பர் மெட்ராஸ் கவர்னர் எஸ். டபுள்யூ கிஸ்டர்ஸிலி துரை சன்னத்து மாதிரி கொடுத்தது. டேய் கொலைகாரா சொந்தப் பேரனுக்கு இராஜ்யம் போய்விடக்கூடாதென்று கொல்வதற்கு எந்தக் கல்நெஞ்சனுக்காவது மனசு வருமா. உனக்கு வந்தது. உன் அபிமான சுந்தரியின் உத்தரவுக்கு மயங்கித் துரத்தித் துரத்தி அடித்தாய். சர்கேல் பத்தேசிங் ராகேஜியினால் சிறை வைக்கப்பட்டு இருட்டிலேயே செத்துப்போன அப்பாவின் ஆவி உன்னை மன்னிக்காது. ஏழாவது பாரியாளின் மகனென்ற இளக்காரம். இராட்சசா… என்று கத்த வேண்டும் போலிருந்தது. பெரியகோயில் மணிச்சத்தம் கேட்டது.

“வளர்ப்புத்தாய் ருக்மிணிபாயி இரவோடு இரவாகத் தூக்கிக்கொண்டு வடக்கே இரயிலேறிப் போனதால் தப்பித்தது தெரியுமா உனக்கு.” வடக்கே சதாராவில் ஓட்டலில் வேலை செய்து சொந்தமாக அந்த ஓட்டலையே வாங்கி – என் வளர்ச்சி உனக்குத் தெரியாது காட்கே… அது ஒரு பெரிய கதை கேட்டால் பொறாமைப்படுவாய்.

ருக்மிணிபாய் அடிக்கடிச் சொல்லிவிட்டு அழுவாள். “பள்ளியக்ரகாரம் இலட்சுமிராஜ புரம் அரண்மனை உன் சொத்து தளிகேசுரசாமி கோயில் உன் சொத்து.”

இலட்சுமிராஜபுரம் அரண்மனை இடிந்து கிடந்தது. சுற்றுச்சுவர்கள் மல்லாந்து கிடந்தன. அரண்மனையின் சிதைந்த மாடி விளிம்பில் இரண்டு பெரிய அரச மரங்கள் நெடுநெடுவென வளர்ந்திருந்தன. வவ்வால் புழுக்கை நாற்றம். முன் மண்டப இடிபாடு களிடையே சாரட் வண்டி – சக்கரங்கள் தனித்தனியாகக் குப்புறக் கிடந்தன. பாயி சாகேப் மார்கள் குளிப்பதற்கென்றே பிரத்யேக அலங்காரங்களோடு கட்டியிருந்த வெண்ணாற்றுப் படித்துறை பாளம் பாளமாகக் காட்சியளித்தது. கும்பலாய் இலட்சுமிராஜபுரம் அரண்மனையை ஆக்கிரமித்திருந்த சக்கேல் பத்தேசிங் ராகேஜியின் உறவினர்கள் வெளியேறி விட்டிருந்தனர். மீதியிருந்தவர்கள் ரேஷன் அரிசி வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சக்ரேல் என்ன ஆட்டம் போட்டான். சிப்பந்திகள் பங்க் நாயக், கில்லேதார் சர்காருடைய தூரத்துப் பந்துக்கள் என எல்லோருக்கும் வசந்த பஞ்சமியன்று நடக்கும் ஸதர் தர்பாரில் தலா அறுவது வராகன் மொயின் மாதந்தோறும் கொடுக்க உத்தரவிட்டது இந்த சர்கேல்தான் என்று ருக்மிணிபாய் அடிக்கடிச் சொல்வாள். “வெங்கோபா உன் சொத்து இப்படித் தண்ணீராய்ச் செலவழிந்தது. கேட்பாரில்லை. காட்கே அவனுக்கு அடங்கிக் கிடந்தான்” – புலம்புவாள். தஞ்சாவூர் பத்தே தர்வாஜா அருகே அனாதையாக நின்றிருந்தவனுக்கு அதிகார அதிர்ஷ்டம். இங்லீஷ் கும்பினி ரெசிடெண்டுகளும் இதைக் கண்டு கொள்ளவில்லை. உரிய பரிசுகள் தவறாமல் போய்க் கொண்டிருந்தன.

மாடிப்படிகளில் ஏறியபோது பொலபொலவெனக் காரை உதிர்ந்தது. இடிந்து விடுமோ என்ற பயம். யாரும் புழங்கியதற்கான அறிகுறி தென்படவில்லை. வெளியே மூன்று நான்கு பரதேசிகள் தவிர மனித வாசனையே இல்லை. யாரிட்ட சாபமிது. பாழடைந்த பெரிய அறையின் சுவரில் பிரம்மாண்டமான படம். அது யாரென்று புரிபட நேரமாகவில்லை. கொடூரத் தாத்தா அமிர்தராவ் காட்கே. சரியான மராத்தியத் தோற்றம். பெரிய தலைப்பாகை அடர்த்தியான முறுக்கு மீசை, நீளமான ஷெர்வாணி, தங்கப் பிடி வைத்த உடைவாள், நிறையவே பருத்தவயிறு – பிரமாதமாய்த்தான் வரைந்திருந்தான் ஓவியன். தாத்தாவே சதா என்னை கனவிலும்கூட பயமுறுத்திக்கொண்டிருந்த தாத்தாவே. உன் பேரனை அற்பத்தனத்தோடு ஏன் கொல்ல நினைத்தாய். இராஜீய விவகாரங்களில் கொலைகளும் முக்கியமானவையா. அவரின் கண்கள் – கொலைவெறிக் கண்கள் – என்ன செய்வது. இப்போது இராஜாகோரியில் அடக்கமாகிவிட்டாய். “பள்ளியக்ரகாரம் லட்சுமிராஜபுரம் அரண்மனை உன் சொத்து. உன் ராஜ்யம்” என்று ஓயாத ருக்மிணிபாயி குரல். காலம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிராது. தளிகேசுர சாமியும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். இது நிஜமானது. நியாயமானது.

இடிந்துபோயிருந்தாலும் சற்றுப் பயமாக இருந்தது. ஜோஸ்யம் ஜகன்நாத பட் கோஸ் வாமி சொன்னது பலிக்கவில்லை. மகாராஜாக்களுக்குச் சாவே கிடையாது – பலிக்கவில்லை. ஒருமிடறு தண்ணீர் குடித்தால் நா வறட்சி தீருமென்று தோன்றியது. வடவாறு வறண்டிருந்தது. கோரியின் உச்சியில் கழுகின் “கர்…கர்…” இன்னுமா போகவில்லை. காட்கேயின் சமாதிக்குக் காவலா. தூரத்தில் நாய்கள் ஓலமிடும் சப்தம். தெற்கே பலத்த இடி – பார்த்துக் கொண்டிருக்கும் போதே படபடவென்று இறகுகளை விரித்தது. முன்னிலும் வேகமாகக் கர்கர்ரென்றது. உற்றுப் பார்த்தால் அந்தக் கண்கள் – யாரது. அட.

கர்…கர்… வேகமாகக் கீழ்நோக்கிப் பாய்ந்தது கிழட்டுக் கழுகு புயல் மாதிரி. வெகு மூர்க்கமாய் –

“ஐயோ… ஐ…ய்…யோ… ஓ…ஓ….. என்ன இது. இமைக்கும் நேரம் – யாரது யாரது”

ஹிஸ் ஹைனசு வெங்கோபாராவ் தளிகேசுரராவ் மாடிகே இரத்தக் குழம்பானான். கழுகின் குரூரமான குரல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.