சினிமா நடிகர் சோ

சோவுக்கு என்ன தான் பல அறிவார்ந்த முகங்கள் இருந்தாலும் தமிழ் நாட்டின் மஞ்சள் பத்திரிகைகளும் திமுக போன்ற கட்சிகளும் அவரை ஒரு நடிகர் என்று அழைத்தே தங்களது கீழ்த்தரமான அரிப்பைப் போக்கிக் கொண்டன. தமிழ் நாட்டில் எந்தவொரு அறிவார்ந்த இயக்கம் சிந்தனைத் தூண்டுதல் நிகழ வேண்டுமானாலும் அதற்கான பரவலான பரிச்சயமான முகம் சினிமா உலகத்தில் இருந்தே வர வேண்டியிருப்பது திராவிட இயக்கங்கள் செய்த கேடுகளில் முக்கியமானதொன்று. சோவின் ஆர்வம் ஆரம்பத்தில் நகர்ப்புற மேடை நாடகங்களில் மட்டுமே இருந்தது. அவர் நடித்த மேடை நாடகம் ஒன்று சிவாஜிகணேசன் நடிக்க சினிமாவான பொழுது அவர் நாடகத்தில் நடித்த வேடத்தில் நடிப்பதற்காக சினிமாவுக்கு அழைக்கப் பட்டார். தன் வீட்டுக்குத் தெரியாமலும் தயக்கத்துடனுமேயே சினிமாவுக்குள் நுழைந்த சோ கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து சினிமாவில் புகழ் பெற்ற ஒரு நடிகராகவே தொடர்ந்தார்.

கணீரென்று தனித்துவமான குரல், சமயோதிடமான நையாண்டி, போகிற போக்கில் செய்யும் கேலிகள் தவிர்த்து அவர் ஒரு நல்ல ஸ்லாப்ஸ்டிக் காமெடியனாகவும் தமிழ் சினிமாவில் நிலை பெற்றார். கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நூற்றுக்கணக்கான சினிமாக்களில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார். எம் ஜி ஆரின் கட்சியான தி மு க வை அவர் கடுமையாக விமர்சனம் செய்த போதிலும் கூட எம் ஜி ஆரின் பல படங்களில் தொடர்ந்து காமெடி ரோல்களை சோ செய்து வந்தார்.

அவர் 70களில் திமுகவை கடுமையாக எதிர்த்து காமராஜர் ராஜாஜிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பொழுதும் துக்ளக் ஆரம்பித்த நேரத்திலும் அவர் தமிழ் நாட்டில் பரவலாக அறியப் பட்ட ஒரு பிரபலமான காமெடி நடிகராகியிருந்தார். அந்த சினிமா கவர்ச்சி அறிமுகம் அவரது பேச்சுக்கும் எழுத்துக்கும் நல்லதொரு அடித்தளத்தை அளித்திருந்தது. அவர் விரும்பினாலும் விரும்பியிருக்காவிட்டாலும் அவரது செயல்பாடுகளுக்குத் தேவையான அறிமுகத்தை சினிமா அவருக்கு அளித்தது. அவருக்குத் தனியான புது அறிமுகம் தேவைப் படவில்லை. ஆரம்பத்தில் நாடக சினிமா நடிகராக அறிமுகம் ஆன பொழுதும் அவர் வெகு விரைவிலேயே தனது துக்ளக் மூலமாக தமிழ் நாட்டின் ஒரு அறிவார்ந்த சிந்தனையாளராக அடையாளம் காணப் பட்டு விட்டார்.

நாடக மேடையில் அவருக்கு அளவற்ற சுதந்திரம் இருந்தது. சினிமாவில் அந்த சுதந்திரம் அவருக்கு அளிக்கப் படவில்லை. சினிமா என்பது பெரும் முதலீட்டைக் கோரும் சமரசங்களைக் கோரும் இடமாக இருந்தது. ஆகவே அவரது ஆரம்ப கால சினிமாக்களில் அவர் வெறும் ஸ்லாப் ஸ்டிக் காமெடியனாகவே தொடர வேண்டியிருந்தது. நாடகங்களில் அவரது விமர்சனங்களும் அரசியல் நையாண்டிகளும் சினிமாவுக்குள் அவரால் எளிதாகக் கொண்டு வர முடியவில்லை. எம் ஜி ஆருக்கு பயந்தும் அண்டியுமே தமிழ் சினிமா செயல் பட்டு வந்தது. அதை மீற சோ தனது சொந்தத் தயாரிப்புகளையும் ஒரு சில துணிவான காங்கிரஸ் ஆதரவு தயாரிப்பாளர்களின் சினிமாக்களையுமே ஓரளவுக்கு சார்ந்து இருக்க வேண்டி வந்தது.

சோ தனது முகமது பின் துக்ளக் நாடகத்தை சினிமாவாக மாற்ற முனைந்த பொழுது திமுகவின் சார்பாக எம்ஜிஆர் அதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். அந்த சினிமாவுக்கு எவரும் உதவக் கூடாது என்று மிரட்டல் விடுத்தார். எம் ஜி ஆரின் மிரட்டலையும் மீறி எம் எஸ் விஸ்வநாதன், மனோரமா, சுகுமாரி போன்ற ஒரு சில நண்பர்கள் மட்டுமே சோவுக்கு உதவினார்கள். எம் ஜி ஆரின் கோரமான அராஜக முகத்தை வெளிப்படுத்திய தருணம் முகமது பின் துக்ளக் சினிமா.

பின்னர் எம் ஜி ஆர் தனிக்கட்சி ஆரம்பித்து அண்ணாயிசம் என்ற ஒரு அபத்தத்தை கொள்கை என்று நினைத்துக் கொண்டு உளறிக் கொட்டிய பொழுது அந்த அரசியல் கோமாளித்தனத்தை சோவால் தங்கப் பதக்கம் என்னும் ஒரு சினிமாவில் வெளிப்படையாக கிண்டல் அடிக்க முடிந்தது. எம் ஜி ஆருக்கு பயந்து சோ தனது விமர்சனங்களை நிறுத்தி விடவில்லை. எம் ஜி ஆரின் திட்டங்களையும் கோமாளித்தனங்களையும் சினிமாவில் இருந்து கொண்டே துணிந்து சினிமாக்களிலேயே விமர்சித்தவர் சோ மட்டுமே.

சோவின் சினிமா நடிப்புக்கும் அவரது நாடக நடிப்பிற்கும் பெரிய வேறுபாடுகள் எல்லாம் இருப்பதில்லை. எல்லா இடங்களிலும் அவரது பாணியில் அவர் பேசுவார், நடிப்பார். நாடகத்தையும் சினிமாவையும் அவர் பெரிதாகப் பொருட்படுத்தி சிக்கலான பல வகை நடிப்பையெல்லாம் அளிக்க அவர் மெனக்கெட்டுக் கொண்டது கிடையாது. ஒரேவிதமான நடிப்பையே அளித்து வந்தார். இருந்தாலும் அவரது வசன வெளிப்பாடுகளும் தற்செயலான துடிப்பான நையாண்டிகளும் அவருக்கு வரவேற்பை அளித்தன. சென்னை பாஷை அவருக்கு மிக லகுவாக வந்தது. அவரது முதல் படம் துவங்கி பல படங்களிலும் சென்னை குப்பத்து தமிழில் பேசி வந்தார். ரெட்டை வேடங்களில் நடிக்கும் பொழுது ஒரு பாத்திரத்துக்கு சென்னை பாஷையை பயன் படுத்திக் கொள்வார். அவரது காமெடிக்காக பொம்மலாட்டம், தேன் மழை போன்ற படங்கள் வெற்றி பெற்றன.

சோ வசனம் எழுதிய, இயக்கிய சில சினிமாக்களில் அவர் சற்று சுதந்திரமாக அரசியல் விமர்சனங்களை செய்ய முடிந்தது. உண்மையே உன் விலை என்ன? யாருக்கும் வெட்க்கமில்லை, முகமது பின் துக்ளக் போன்ற அவரது பல நாடகங்கள் சினிமாவாகவும் வந்து ஓரளவு வெற்றி பெற்றன.

அவர் கதை வசனம் எழுதிய பொம்மலாட்டம், நினைவில் நின்றவள், பணம் பத்தும் செய்யும்,மனம் ஒரு குரங்கு, தேன்மழை, ஆயிரம் பொய், மிஸ்டர் சம்பத் போன்ற படங்கள் அவரது வசனங்களுக்காகவும் காமெடிக்காவும் வெற்றிகரமாக ஓடின. அவரது மிஸ்டர் சம்பத் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகையிடம் பொய் சொல்லி அவரது மேனேஜராக நுழைந்து பல பித்தலாட்டங்கள் எல்லாம் செய்து கடைசியில் மாட்டிக் கொள்வார். அவர் எழுதி இயக்கியிருந்த அந்த சினிமாவைப் போலவே, நிஜ வாழ்வில் அவரது நண்பர் சினிமாவில் நுழைந்த கதையும் இருந்தது ஒரு வினோதமான முரணே.

கிட்டத்தட்ட நூறு சினிமாக்களில் நடித்தும், வசனம் திரைக்கதை எழுதியும் இயக்கியும் வந்த சோ ஒரு கட்டத்தில் சினிமாவில் தன்னால் சுதந்திரமாக செயல் பட முடியாது என்பதை உணர்ந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இருந்தாலும் கமலஹாசனின் காதலா காதலா சினிமா மிரட்டல்களினால் தடைப் பட்ட பொழுது தன் முகமது பின் துக்ளக் தடை பட்டதை நினைவு கூர்ந்து அந்த சினிமாவில் நடித்தார். சினிமாவிலும் அரசியலிலும் மிரட்டல்களையும் அராஜகங்களையும் முதல் ஆளாக நின்று எதிர்த்து வந்தவர் சோ. தன் நாடகங்களை தொலைக்காட்சித் தொடர்களாக நீட்டித்து அவற்றிலும் தொலைக்காட்சி தொடர்கள் பிரபலமாக இருந்த 90களில் நடித்து வந்தார். அந்தத் தொடர்களில் அவருக்கு சினிமாக்களை விட அதிக சுதந்திரம் இருந்தது. அவரது சரஸ்வதியின் செல்வன், எங்கே பிராமணன் போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் பெரும் வெற்றி பெற்றன.

தனது சினிமா அனுபவங்களை பின்னர் துக்ளக்கில் திரையுலகைத் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தொடராக எழுதினார். சினிமாவில் அவர் பழகிய பல நண்பர்களது சிறப்புக்களை அவர்களது மனிதாபிமானங்களைத அறிமுகம் செய்து வைத்தார். பல நடிகர்களது தொழில்நுட்ப வல்லுனர்களது வெளியே தெரியாத பண்புகளை அவர் அறிமுகப் படுத்தினார்.

சோ ஒரு சினிமா நடிகராக தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல் பட்டு வந்தாலும் கூட தமிழ் சினிமாவின் மீதும் அதன் கலைத் தன்மை மீதும் அவருக்கு பெரிய அபிமானம் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் வெகுவாக வியந்து பாராட்டிய ஒரு சில சினிமாக்களும் கூட சங்கராபரணம், சிபிஐ டைரிக் குறிப்பு போன்ற பிற மொழிப் படங்களாகவே இருந்தன.

துக்ளக் பத்திரிகையில் சினிமாவுக்கு என்று அளிக்கப் பட்ட ஒரே இடம் போஸ்ட் மார்ட்டம் என்ற சினிமா விமர்சனமும் அதற்காக சம்பந்தப் பட்ட இயக்குனரின் பதிலும். தமிழ் சினிமாவின் அபத்தங்களை அதன் கோமாளித்தனங்களை மிகை நடிப்புகளை யதார்த்தமின்மைகளை செயற்கைத்தனங்களை கதாநாயக ஆராதனைகளை கடுமையான கூரிய கத்தி கொண்டு கிழித்தன துக்ளக்கின் போஸ்ட்மார்ட்டங்கள். கிட்டத்தட்ட அனைத்து தமிழ் சினிமாக்களையுமே துக்ளக்கின் விமர்சனங்கள் குத்திக் கிழித்து ரத்தக் களறியாக்கின. அதுவும் குத்தலும் நக்கலும் கிண்டலுமாக அந்தப் படத்தில் சம்பந்தப் பட்ட அனைவருமே மானக்கேட்டில் தூக்கில் தொங்கிக் கொள்ளும் வண்ணம் இருக்கும். அந்த விமர்சனங்கள் பெரும்பாலும் கலாபூர்வமாகவோ, ரசனை அடிப்படையிலோ நுட்பமாகவோ இருக்காது. சினிமாக்களின் அபத்தங்களை கிண்டல் அடிக்கும் மேலோட்டமான விமர்சனங்கள்தான் அவை. ஆனால் அப்பொழுதைய தமிழ் சினிமாக்களும் அந்த லட்சணத்தில்தான் இருந்தன. அவற்றை பெரும்பாலும் துர்வாசர் என்ற ராமச்சந்திரன் எழுதி வந்தார். பின்னர் அதே வண்ணநிலவன் ருத்ரையா இயக்கத்தில் அவள் அப்படித்தான் என்றொரு வித்தியாசமான தமிழின் குறிப்பிடத்தக்க ஒரு சினிமாவை எடுத்த பொழுது சோ அவை போன்ற முயற்சிகளுக்கு உதவி செய்திருந்தார். தான் நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அந்த சினிமாக்களின் அனைத்து அபத்தங்களையும் தன் பத்திரிகையிலேயே கிழித்துத் தொங்க விட அவர் அனுமதியளித்தே வந்திருந்தார். பத்திரிகை சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் தன்னிடத்தில் இருந்தே அவர் துவங்கி வந்தார்.

மேடைப் பேச்சாளர் சோ

சோ தமிழின் அபாரமான மேடைப் பேச்சாளர். மேடைப் பேச்சு என்பதை அலங்காரமான அடுக்கு மொழியில் பேசப் படும் அர்த்தமில்லாத குப்பைகளாகவே திராவிட இயக்கங்கள் வளர்த்து வைத்திருந்தன. திராவிட இயக்கங்களின் பிரபலமான பேச்சாளர்களான அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், கருணாநிதி போன்றோர்களின் பேச்சுக்கள் அனைத்துமே வெறும் அர்த்தமற்ற அடுக்கு மொழிக் குப்பைகளாகவே இருந்தன. காங்கிரஸ் மேடைகளில் அந்த அளவுக்கு அடுக்கு மொழி பேச்சாளர்கள் உருவாகவில்லை. 1971 தேர்தலின் பொழுது காமராஜர் தலமையிலான பழைய காங்கிரஸ் கட்சியின் முக்கியமான மேடைப் பேச்சாளராக உருவானவர் சோ ராமசாமி. சோ வின் மேடைப் பிரசகங்கள் திராவிட இயக்கங்கள் உருவாக்கி வைத்திருந்த மேடை குப்பைகளுக்கு நேர் எதிரானவையாக இருந்தன. அவரது குரல் தனித்துவமானது. அவரது குரல் கணீரென்று ஒலிப்பது. அவர் பேச ஆரம்பித்தவுடனேயே பல்லாயிரக்கணக்கான கூட்ட்டத்தின் ஆரவாரம் அடங்கி அமைதி பேணும். அலங்காரமில்லாத பேச்சாக இருக்கும். திராவிட இயக்கக் கூட்டங்களின் வியாதிகளான மேடையில் இருக்கும் இல்லாத நூற்றுக்கணக்கான நிர்வாகிகளை விளித்துப் பேசுவதாகவெல்லாம் இருக்காது. நேரடியாக அனைவருக்கும் வணக்கம் என்று சொல்லி விட்டு விஷயத்துக்கு வந்து விடுவார். அவரது பொதுக் கூட்டங்களில் சுமார் ஒரு மணி முதல் இரண்டு மணி நேரங்கள் வரையிலும் பேசுவார். நடப்பு அரசியல் அதன் மீதான அவரது விமர்சனங்கள் அவரது எதிர்பார்ப்புகள் என்று மிகவும் கச்சிதமான நேர்த்தியான தெளிவான உரையாக இருக்கும் அவரது மேடைப் பேச்சுக்கள்

சோ ஒரு ஊரில் பேசுகிறார் என்றால் பத்தாயிரம் முதல் லட்சக்கணக்கானோர் அவர் பேசுவதைக் கேட்க்கக் கூடுவார்கள். எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராமல் ஒரு பத்திரிகையாளராக ஒரு சிந்தனையாளராக அவர் பேசுவதைக் கேட்க்க தமிழ் நாட்டில் கூடிய கூட்டம் வேறு எந்தவொரு தனி ஆளுமைக்கும் கூடியது கிடையாது. சோவைப் போலவே ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கண்ணதாசன் ஆகியோர் மேடைப் பேச்சுகளில் ஈடுபட்ட போதிலும் சோவின் பேச்சில் இருந்த தெளிவு, தீர்க்கம், நுட்பம், கம்பீரம் வேறு எவருக்கும் அமைந்தது கிடையாது.

அவர் நாடகம் நடத்தச் செல்லும் ஊர்களிலும் நாடகம் முடிந்த பிறகு இரவு 9 மணிக்குப் பிறகு அந்த ஊர்க்காரர்கள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களிலும், பழைய காங்கிரஸ் பின்னர் ஜனதா கட்சி ஏற்பாடு செய்த கூட்டங்களிமும் அவர் தொடர்ந்து பேசி வந்தார். தேர்தல் காலங்களில் ஜனதா கட்சியை ஆதரித்து அவர் தேர்தல் பிரசாரங்களும் செய்து வந்தார். அவர் ஆதரிக்கும் கட்சியினராகவே இருந்தாலும் கூட அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களையும் அதே மேடையில் வைத்து அவர் கிண்டல் அடிக்கத் தயங்க மாட்டார்.

தமிழ் நாட்டின் மேடை பிரசாரங்கள் மூலமாக அரசியல் பிரசாரங்கள் நடந்து வந்த கால கட்டம் இப்பொழுது கிடையாது. ஆனால் 1970 முதல் 90கள் வரையிலும் சோ தனது நடிப்பு, நாடகம், பத்திரிகை தவிர்த்து மக்களிடம் நேரடியாகவும் உரையாடியே வந்தார். தமிழ் நாட்டின் முக்கியமான தரமான அபாரமான மேடைப் பேச்சாளராக ஒரு பிரசங்கியாக நான் கருதுவேன். அந்தக் காலத்தின் அனைத்து மேடைப் பேச்சாளர்களையும் அரசியல்வாதிகளையும் கேட்டவன் என்ற முறையில் சோவுக்கு இணையான ஒரு மேடைப் பேச்சாளர் தமிழில் கிடையாது என்று உறுதியாகச் சொல்வேன். பிற்காலத்தில் அவரது மேடைப் பேச்சுக்கள் அவரது துக்ளக் வருடாந்திர விழாவில் மட்டுமே நிகழ்ந்தன. அந்தப் பேச்சுக்கள் யாவும் இப்பொழுது யூட்யூப் காட்சிகளாகக் கிடைக்கின்றன. அவரது பழைய அரசியல் மேடைப் பேச்சுக்களின் ஒலி வடிவம் கிடைக்குமாயின் தமிழ் நாட்டின் அரசியலை நாம் அவற்றின் மூலமாக மட்டுமே முழுமையாக அறிந்து கொள்ள முடியும்

(தொடரும்)

3 Replies to “சினிமா நடிகர் சோ”

  1. பாரதி திரைப்படத்தை குறித்த துக்ளக் -இன் விமர்சனத்தையும் குறிப்பிட்டு இருக்கலாம். அனைத்து பத்திரிகைகளும், அரசாங்கமும் அந்த படத்தை கொண்டாடிய போது துக்ளக் மட்டும்தான் அந்த திரைப்படத்தில் இருந்த அபத்தங்களை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தது. பின் நாட்களில் திரு. சீனி. விச்வனாதனும் இது குறித்து தன்னுடைய ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  2. அவர் சினிமா நடிகர் என்று கூறினால் அது அரிப்பு. அப்படி சொல்பவர்கள் மஞ்சள். பிறகேன் அவருடைய இத்தனை சினிமா வீடியோக்கள்.? அவர் ஆத்து ஆத்துவென்று ஆத்திய பிற இலக்கிய பணிகளை குறிப்பிட வேண்டியதுதானே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.