தொலைந்து போன சிறுவர்கள்

தமிழில் :

என் மகன், நிகோலை நிகோலவிச் ப்யாசெட்ஸ்கி –நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கோல்யா – 24 மே மாதம் 1994 அன்று ரஷ்ய ராணுவத்திற்குள் அழைக்கப்பட்டான். அவனுக்கு வயது இருபது.

அவன் பயிற்சிக்காக ஓம்ஸ்கில் உள்ள சிறப்பு விமானபடை நிலையத்திலும் பின்னர் டூலா படைப்பிரிவின் ர்யாஸான் சேனையிலும் சென்றான். ராணுவ தளம் மாஸ்கோவில் எங்களுடைய வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இல்லை, மற்றும் அவன் இவ்வளவு அருகில் இருப்பதைக் குறித்து சந்தோஷத்துடன் இருந்தேன். நாங்கள் 28 நவம்பர் அன்று தொலைபேசியில் பேசிக் கொண்டோம். என்னை வந்து சந்திப்பத்ற்கு எப்போது வசதிப்படும் என தெரிந்து கொண்டு சொல்வதாக வாக்களித்தான் மற்றும் டிஸெம்பெர் 4ஆம் தேதி அவனை தொலைபேசியில் அழைக்குமாறு என்னிடம் கூறினான். என் மகனுடன் நான் நடத்திய இறுதி உரையாடல் அது. அடுத்த நாள், 29 நவம்பர், அவனுடைய மொத்த பட்டாளத்துடன் அவன் செச்சென்யாவிற்குள் விமானம் மூலம் அனுப்பப்பட்டான், இதை மிகவும் பின்னர் கூட நான் அறிந்திருக்கவில்லை.

டிசெம்பர் 22 அன்று நாங்கள் அறிந்தது என்னவென்றால் – அதிகாரபூர்வமற்ற செய்திகளால் – கோல்யா ‘தெற்கு திசையில்’ பணிக்காக அனுப்பப்பட்டுள்ளான். அதற்குள் ரஷ்யா செச்சென்யாவை நோக்கி படையெடுப்பு நடத்தியுள்ளதை நாங்கள் அறிந்திருந்தோம். நாங்கள் உடனடியாக எழுத்து மூலம் கேட்டோம்: எங்களுடைய மகன் எங்கிருக்கிறான்?

செச்சென்யாவிற்கு அனுப்பப்பட்ட இளம் வாலிபர்களுக்காக ‘ரஷ்யா ராணுவ வீரர்களின் தாயார் குழு’ பொட்டலங்களை சேகரிப்பதை செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொண்டேன். அதன் தலைமையகத்திற்கு 25 டிசெம்பர் சென்றேன். என் மகனுக்காக ஒரு பொட்டலத்தை பெற்றுக் கொண்டார்கள். அவன் எங்கிருக்கிறான் என இன்னும் எனக்கு தெரியவில்லை. அவனுடைய படைப்பிரிவு தலைமையகத்தின் தொலைபேசியை கண்டறிந்து 26 டிசெம்பர் முதல் ஒவ்வொரு நாளும் அவனைக் குறித்து விவரம் அறிந்து கொள்ள அழைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு எப்போதும் ஒரே பதிலே அளிக்கப்பட்டது: அவன் காயமடைந்தவர்களிலும், இறந்து போனவர்களிலும் இல்லை. பின்னர், 5 ஜனவரி அன்று, என் மகன் நிகோலை ப்யாசெட்ஸ்கி க்ரோஸ்னி நகரில் கொல்லப்பட்டான் என எனக்கு சொல்லப்பட்டது.
நான் ஐந்து நாட்களுக்கு ஒரு நிழலைப் போல உண்ணவும், அருந்தவும் முடியாமல் திரிந்தேன். புதுவருடத்திற்கு முந்தைய நாளின் போரில் இறந்து போன எங்களுடைய சிறுவர்களுக்காக, ஆயிரக்கணக்கான சிறுவர்கள், பிரார்த்தித்தேன். அவர்கள் எல்லோருக்காகவும் அழுதேன்.

விடுமுறை முடிந்து 11 ஜனவரி அன்று தான் டூலா படைப்பிரிவிடம் என் மகனின் உடலை என்னிடம் அனுப்புமாறு கோரிக்கையளிக்க முடிந்தது. என் மகன் தடயம் ஏதும் இல்லாமல் காணாமல் போயிவிட்டான் என அவர்கள் கூறினார்கள். தலைமையகத்தை மறுபடியும் தொலைபேசியியில் அழைத்தேன், என்னை காத்திருக்குமாறு கூறினார்கள். புதிய தகவல்: ‘எல்லா உடல்களும் ரோஸ்டோவ்-ஆன்-டான் இல் திரட்டப்படுகின்றன, அங்கிருந்து உங்களுடைய மகனின் உடல் மாஸ்க்கோவிற்கு அனுப்பப்படும்.’

என் மகன் எப்படி உயிரிழந்தான் என கேட்பதற்காக ராணுவ பிரிவு எண். 414450விற்கு மறுபடியும் தொலைபேசியில் அழைத்தேன். என் கோல்யா, ஜனவரி 1 அன்று க்ரோஸ்னியாவிற்குள் நுழைந்த, வீரர்களை கொண்டு செல்லும் ஊர்தி எண் 785இல் இருந்தான். பன்னிரெண்டு பேர் அடங்கிய அந்த பணிக் குழுவில் வெறும் மூன்று பேர் மட்டுமே உயிர் தப்பினார்கள். அங்கு என்ன நடந்தது என தெளிவாக அறிய முடியவில்லை; அந்த வண்டி இன்னும் காணப்படவில்லை. நான் உயிர் தப்பியவர்களுள் ஒருவரான, ஸெர்யோஸா ரோடியோனோவை தொடர்பு கொண்டேன். நோவோசெர்காஸ்க் மருத்துவமனையில் தன் காயங்களிலிருந்து குணமாகிக் கொண்டிருந்தான். என் கோல்யா ரயில் நிலையத்தின் மிக அருகில் வண்டிக்கு உள்ளே இறந்தான் என கூறினான். ரஷ்ய வீரர்களுக்கு அது என்ன ஊர் என்று தெரியாது; அவர்களிடம் வரைபடம் எதுவும் இல்லை. 25 ஜனவரி அன்று அந்த வண்டி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது ஆனால் அதில் என் மகனின் உடல் இல்லை என அறிந்தேன்.

26 ஜனவரி அன்று பிபிசியின் ஒரு குழுவுடன் ஆயிரம் மைல் தெற்கில் செசென்யா எல்லை மாநிலமான இங்குஷேதியாவின் நாஸ்ரான் நகருக்கு விமானத்தில் சென்றேன். பல்லாயிரம் அகதிகள் அந்நகரத்தில் கூடியிருந்தார்கள், மேலும் ரஷ்யா முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான தாய்மார்கள் தங்களுடைய மகன்களை தேடி வந்திருந்தார்கள், இருந்தும் அதில் சிலரே அவர்களை உயிருடன் கண்டுபிடித்தார்கள். நாஸ்ரானில் முதல் நாளில் நான் அறிந்து கொண்டது என்னவென்றால் க்ரோஸ்னியிலிருந்து ஸ்டாரியே அடாகி நகரத்திற்கு காயமடைந்தவர்களை கொண்டு செல்லும் செச்சென்ய பெண்மணி கோல்யாவின் இராணு அடையாள அட்டையை வைத்திருந்தாள். அவளை தேடிக் கண்டறிந்து, என் மகனைக் குறித்து ஏதேனும் தெரியுமா என அறிந்து கொள்ள வேண்டும், அதனால் நான் க்ரோஸ்னிக்கு சென்றேன். நகர மருத்துவமனை எண். 2இன் நிலவறையில் நான், ரஷ்யா ராணுவ வீரர்களின் தாயார் குழுவின் தலைவியான மரியா இவானோவா கிர்பஸோவாவை சந்தித்தேன். என் கோல்யா சிறைபிடிக்கப்பட்டவர்களின் நிரலில் இல்லை என்பதை அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

போர் விமானங்கள் அவ்வூரை தினமும் குண்டு வீசி தாக்கிக் கொண்டிருந்தன, மேலும் அங்கு இடைவிடாத துப்பாக்கி சூடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் அஞ்சவில்லை, நான் என் மகனுக்கு என்னவாயிற்று என தெரிந்து கொள்ள மட்டுமே வேண்டினேன். ஜனவரி 31 வரை அந்த செச்செனிய பெண்மணியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க என்னால் இயலவில்லை. அவளுடைய பெயர் ஸாரெமா. என் மகனின் ராணுவ அடையாள அட்டையை என்னிடம் கொடுத்தாள் ஆனால் அது எப்படி, எங்கே அவளிடம் வந்து சேர்ந்தது என்ன தெரியவில்லை. அந்த நூல் அறுந்து போனது. நான் நாஸ்ரனுக்கு திரும்பிச் சென்றேன் ஆனால் வெகு காலம் அங்கு தங்கவில்லை.

பெஸ்லானில் இருந்த ராணுவ தலைமை செயலகத்தில் மேலும் அறிந்து கொள்ளலாம் என முடிவெடுத்தேன், அதை முடித்த பின் இறந்த வீரர்களின் உடல்களை சேகரிக்கும் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகருக்கு பிரயாணிக்கலாம் என்று திட்டமிட்டேன். என் மகனின் உடல் ரோஸ்டோவில் தான் இருக்கும் என தலைமை செயலகத்தில் கூறினார்கள். நான் விமானம் மூலம் வடக்கு திசையில் ரோஸ்டோவிற்கு பெப்ரவரி 2ஆம் நாள் அதிகாலை சென்று, இறந்த வீரர்களில் பெயர்கள் அடங்கிய பதிவுப் பட்டியலில் தேடினேன். அந்த நிரல்கள் எதிலும் என் கோல்யாவின் பெயர் இல்லை. வெறும் நாற்பது சதவிகிதம் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன என எனக்கு சொல்லப்பட்டது. பிணங்களால் நிரப்பப்பட்ட எல்லா ரயில் பெட்டிகளிலும் நான் தேடிப் பார்க்க வேண்டியிருந்தது. அந்த பயங்கரத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது.
பெட்டிகள் முழுவதும் நிரம்பிக் கிடந்தன. பல உடல்கள் ஏற்கனவே அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தன: நாய்களால் கடிக்கப்பட்டு, துண்டங்களாக வெட்டப்பட்டு, எரிந்து… போர் தொடங்கி ஒரு மாதம் கடந்து விட்டது. ரோஸ்டோவ் நகரால் சமாளிக்க இயலவில்லை. ரயில் பெட்டிகளைத் தவிர மருத்துவமனைக்கு அருகில் கூடாரங்களால் ஆன நகரம் ஒன்றிருந்தது. கூடாரங்களும் பிராதங்களால் நிரப்பப்பட்டிருந்தன. நான் எல்லா பெட்டிகள் மற்றும் கூடாரங்களுக்குள்ளே சென்று ஒவ்வொரு சிறுவன், அந்த முகங்கள், அந்த கேசம், தலையற்று இருந்தால் அதன் கை, கால்களை பார்த்தேன். என் கோல்யாவை கண்டுபிடிப்பது எளிது, அவன் வலது கன்னத்தில் பிறவி அங்க அடையாளம் உண்டு. என்னோடு வேறு சில தாய்மார்களும் இருந்தனர். அவர்களுள் ஒருவர் தன் மகனை கண்டு கொண்டாள் ஆனால் என்னால் என் கோல்யாவை கண்டறிய முடியவில்லை. எல்லா ரயில் பெட்டிகளும் ரோஸ்டோவில் இல்லை என இராணுவ வீரர்க்ள் சொன்னார்கள் – இன்னும் நிறைய பெட்டிகள் செச்செனிய எல்லைக்கு அருகிலுள்ள மாஸ்டாக்கில் உள்ளன. அதனால் நான் மறுபடியும் தெற்கே மாஸ்டாக் சென்றேன், “மிர்” சினிமா இடத்திற்கு. நூற்றுக்கணக்கான தாய்மார்கள் ஒவ்வொரு நாளும் இங்கு கூடுகிறார்கள். ஒவ்வொருவரும் தன்னுடைய மகனை தேடிப்பிடிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.
க்ராஸ்னியில் இருந்து மாஸ்டாக் வந்த பிரேத ரயில் பெட்டிகளில் நான் தேட வேண்டியிருந்தது. நான் அணுகிய அதிகாரி எனக்கு உதவி செய்வதாக கூறினான்ர், ஆனால் அடுத்த முறை சந்தித்த போது தன்னால் எதுவும் செய்ய இயலாது என கூறிவிட்டார். “நான் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறாய்? உன் மகன் தடயமின்றி காணாமல் போயிவிட்டான் என பட்டியலில் உள்ளான்”. நான் பெறும் நம்பிக்கையின்மையால் செயலற்றுப் போனேன்.

மறுபடியும் க்ரோஸ்னிக்கு சென்றேன். இளம் ஜப்பானிய நிருபருடன் மொத்த நகரத்தின் எல்லா பிணங்களும் அடுக்கப்பட்டிருந்த மயானத்திற்கு சென்றேன்: ஆண்கள், பெண்கள், கிறுஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், இறப்பால் எல்லோரும் சமமானவர்களாக ஆக்கப்பட்டிருந்தார்கள். என் மகனை என்னால் காண் இயலவில்லை. இப்போது, அவன் உடலை கண்டடையும் நம்பிக்கை இழந்ததால், அவனை உயிருடன் தேடலாம் என முடிவெடுத்தேன். கடவுளின் மர்மமான திட்டத்தால் அவன் கைது செய்யப்பட்டிருக்கலாம் என நினைத்தேன்.

ஏப்ரல் 4 அன்று ரஷ்யா ராணுவ வீரர்களின் தாயார் குழுவைச் சேர்ந்த நானும் மற்றும் சிலர் செச்செனிய தலைவரான அஸ்லான் மஷடோவின் தலைமைச் செயலகமாகிய வேடேனோ என்ற கிராமத்திற்கு சென்றோம். ஒவ்வொரு பெண்மணியும் அங்கே வருவதற்கான பாதையை தானே உருவாக்கிக் கொண்டார்கள். நாங்கள் மொத்தம் இருபத்தி இரண்டு பேர் செச்செனிய தலைமை செயலகத்தில் சந்தித்துக் கொண்டோம். செச்செனியர்கள் நல்ல மனிதர்கள. எல்லா பெண்களுக்கும் இரவு உறங்குவதற்கு தங்குமிடம் அளிக்கப்பட்டது. மூன்று ரஷ்ய தாயார்கள், ஸ்வெட்லானா பெலிகோவா, தான்யா இவானோவா, ஓல்யா ஒஸிபென்கோ மற்றும் எனக்கு வோரோனேல் ஊருக்கு போய்விட்ட ஊர்காரகளின் வீடு அளிக்கப்பட்டது. நாங்கள் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் வெடெனோவில் வாழ்ந்தோம், மலை கிராமங்களில் அவ்வப்போது சென்று எங்கள் குழந்தைகளை தேடினோம்.

 

 

நாட்கள் கழிந்தன. மே மாதம் நம்பிக்கையில் ஒரு கீற்று தெரிந்தது. ஷடோய் மலைகளில் சில கைதிகள் இருப்பதாக அறிந்தோம், மற்றும் என் மகனின் குடும்பப்பெயர் குறிப்பிடப்பட்டது. மே 5ஆம் தேதி அஸ்லான் மஷடோவ் எங்களை சந்தித்தார். போர்நிறுத்தம் ஒப்பந்தமாகியிருந்த்து ஆனால் ரஷ்யர்கள் அவர்கள் தரப்பு செய்கடன்களை நிறைவேற்றவில்லை: கைதி பரிமாற்றம் ஏற்படவில்லை. போர்முனை வெடெனாவிற்கு அருகாமையில் வந்தது, ரஷ்ய குண்டுவீச்சு தாக்குதல்கள் அதிகமாயின. கிராமம் ஏழு முறை தாக்குதலுக்கு உள்ளானது. இரண்டு மாடி கட்டிடத்தை ஒரு குண்டு கற்கூளமாக்கியது, இறந்தவர்களை தோண்டி எடுப்பதற்கு இரண்டு நாள் ஆனது. 11 பேர் அதில் இருந்தனர், பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும். நாங்கள் மனமுடைந்து போனோம். நாங்கள் ரஷ்யர்கள், அவை ரஷ்ய குண்டுகள். விமானங்களில் அமர்ந்து சாவை அளிப்பவர்களை மனிதர்கள் என கூற முடியுமா? சில காலைகள் பிறகு குண்டுவீச்சின் முழு கோரத்தை நாங்கள் அனுபவித்தோம். காலை உணவிற்காக மேஜையில் உட்கார்ந்த்டிருந்த போது திடீரென விமானங்கள் வந்தன. முப்பது மீட்டர் தூரத்தில் முதல் குண்டு வெடித்தது. ஜன்னல்கள் உடைந்து சிதறின. கதவை நோக்கி நாங்கள் ஓடும் போதே இரண்டாவது குண்டு எங்கள் வீட்டின் மூலையில் வெடித்தது. எங்களுக்கு மேலே இருந்த தளம் உடைந்து விழுந்தது, கதவுகள் கீலிலிருந்து திருகி வெளியே வந்தன, பறக்கும் கண்ணாடியாலும், தூசியாலும் காற்று நிரம்பிவிட்டது. அடுத்த அரைமணி நேரம், தாக்குதல் முடியும் வரை கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒளிந்திருந்தோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். ஸ்வெடா (ஸ்வெட்லானா) கண்ணாடியால் கீறப்பட்டிருந்தாள், அவளுடைய கால் வீங்கி விட்டது. அவள் நடக்க சிரமப்பட்டாள் ஆனால் மற்றவர்கள் காயமடையவில்லை.

நாங்கள் குண்டுவீச்சிற்கு பிறகு சில நாட்கள் வெடோனோவில் தங்கினோம். சந்தை மூடப்பட்டிருந்தது, உணவை வாங்கவே முடியாத நிலைமை, மற்றும், எங்கள் வீடு இடிந்துவிட்டதால் இரவில் வெட்டவெளியில் தூங்க வேண்டியிருந்தது. இரவு நட்சத்திரங்களால் நிரம்பியிருந்தது மற்றும் விமானங்கள் அவற்றினூடே சிமிஞ்சை விளக்குகளுடன் பறந்து சென்றன. நட்சத்திரங்களின் பின்புலத்தில் அவற்றை கண்டுபிடிப்பது கடினம். அதனால் கீழிருந்து அவர்களை தாக்க இயலாது என்பதால் அச்சமின்றி குண்டுவீச்சு நடத்தினார்கள். பலமுறை அந்த இரவுகளை நினைவு கூர்ந்தேன். கம்பளத்திற்கு அடியில் படுத்துக் கொண்டு, நட்சத்திரங்களிலிருந்து விமானங்களை பிரித்தறிய முயன்றோம். நட்சத்திரமொன்று விழுகின்றது என்றால் ஒரு விமானம் குண்டு வீச தயாராகிக் கொண்டிருக்கிறது என அர்த்தம்.

வாழும் எல்லா உயிர்களின் மேல் கொண்ட அன்பால் மட்டுமே இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை நிறுத்த  முடியும் என எண்ணிக் கொண்டேன்.

ஓல்யாவை ஸ்வெடாவுடன் அபாயம் குறைந்த மற்றொரு கிராமத்திற்கு அனுப்பினோம், அதன் பிறகு நான் செச்செனிய வீரர்களை எங்கள் குழந்தைகள் இருக்க சாத்தியமான ஷடோய் மலைகளுக்கு கூட்டி செல்ல இணங்கச் வைத்தேன். அது மலைப்பாதைகள் வழியே கடினமான பயணம். எப்போதும் விமானங்கள் மேலே இருப்பதால் விளக்குகளோ, கைப்பந்தங்களோ இல்லாமல் இரவு நேரத்தில் மட்டுமே பயணித்தோம். கிராமம் கிராமமாக இரண்டு மாதங்கள் சென்றோம். வீரர்கள் தங்களால் முடிந்த அளவு உதவினார்கள், தங்களுடைய ரொட்டிகளை பகிர்ந்தளித்தார்கள், எங்களுடைய பிள்ளைகளைக் குறித்த விபரங்களை மற்றவர்களிடம் கூறினார்கள். நாங்கள் குண்டுகளாலும், துப்பாக்கி சூடுகளாலும் பலமுறை தாக்கப்பட்டோம். ஆனால் எங்களின் மகன்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
நாங்கள் மறுபடியும் க்ரோஸ்னிக்கு, எரிந்து கைவிடப்பட்ட ரஷ்ய வாகனங்களும் நூற்றுக்கணக்கான இறந்த ரஷ்ய ராணுவ வீரர்களும் சிதறிக் கிடந்த சாலை வழியே, திரும்பிச் சென்றோம். சாலையோரம் பல பெரும் மயான குழிகள் இருந்தன. கண்ணீரின்றி அவற்றைக் காண இயலாது.

போன முறை வந்த போது பழக்கமான சில செச்செனிய பெண்களை நான் க்ரோஸ்னியில் சந்தித்தேன், அவர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்தும் கொண்டேன். ஆனால் அவர்கள் கூறியவற்றில் எதுவும் எங்களின் நம்பிக்கையை அதிகரிக்கவில்லை. இனி மாஸ்கோவிற்கு திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது என எனக்கு தோன்றியது – என் மகனை 7 மாதங்களுக்கு மேலாக தேடிக் கொண்டிருக்கிறேன். தான்யா அங்கேயே தங்கி தன் மகன் ஆந்ட்ரேயை தொடர்ந்து தேடுவதாக முடிவெடுத்தாள். நான் கோல்யாவின் புகைப்படத்தை அவளிடம் விட்டு வந்தேன்.
நான் 20 ஆகஸ்ட் மாஸ்கோவிற்கு வந்தேன். 4 செப்டெம்பெர் டான்யா தொலைபேசியில் அழைத்தாள்: அவள் என் கோல்யாவை 21 பெப்ரெவரி அன்று எடுக்கப்பட்ட காணொளி ஒன்றில் அடையாளம் கண்டு கொண்டாள். மாஸ்கோவிலிருந்து 2000 மைல் கிழக்கிலிருந்த ஆல்டாய் மலைகளின் ஸ்டெப்னோ ஓஸ்ரோ என்ற கிராமத்தில் யெவ்ஜெனி ஸெர்கெயேவிச் கிலேவ் என்ற பெயரில் அடக்கம் செய்யப்பட்டிருந்தான். யெவ்ஜெனியின் பெற்றோர் கிராமதிற்கு வந்தவுடன் சவப்பட்டியை திறந்து பார்த்திருக்கிறார்கள் ஆனால் உடலை அடையாளம் காண முடியாதபடி இருந்தது. அதனால் தங்கள் மகன் என நினைத்து என் மகனை அடக்கம் செய்து விட்டார்கள். ஆறு மாதம் கழித்து மற்றொருவரை அடக்கம் செய்தனர்; இந்த முறை அது அவர்களுடைய மகன். அவன் பெட்டி எண் 162இன் இருந்திருக்கிறான், அவன் பெயர் தொங்கணிக்குள் மறைவாக இருந்தது. அவனுடைய தாய் ரோஸ்டோவ் வந்து, அவனை அடையாளம் கண்டு, வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். என் கோல்யாவிற்கு அருகில் அவனை புதைத்தார்கள். 15 அக்டோபர் வரை இருவரும் அருகிலேயே கிடந்தார்கள், என் மகன் அகழ்ந்து எடுக்கப்பட்டு என் விண்ணப்பத்தின் பேரில் மாஸ்கோவிற்கு மறு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டான்.

தான்யா இவனோவா அடக்கம் செய்கையில் வந்திருந்தாள். ரோஸ்டோவில் அவளுடைய ஆன்ட்ரேயை அடையாளம் கண்டுவிட்டாள், இருந்தும் ‘அடையாளம்’ என்ற சொல் பொருத்தமாக இருக்காது. அவன் முழுவதுமாக எரிந்து போயிருந்தான்; நிபுணர்கள் மண்டையோட்டை யும், நெஞ்சையும் எக்ஸ்ரே எடுத்து, இரத்த பிரிவை அறிந்து அது அவனென கூறியிருந்தனர். டான்யா அவளது ஒரே மகனை அப்போதுதான் புதைத்திருந்தாள், இருந்தாலும் என் மகனின் பிணவடக்கத்திற்கு வந்து, என் துயரத்திற்கு ஆறுதல் கூறினாள். அவளுக்கு என் நன்றிகள்.

இராணுவம் எப்படி உதவினார்கள்? ஒன்றும் உதவவில்லை. என் மகனின் பிரிவிலிருந்து ஒருவர் மட்டுமே வந்தார். அவன் சவப்பெட்டியை சக வீரர்கள் யாரும் சுமக்கவில்லை, என் மகனின் பள்ளி நண்பர்கள் தான் சுமந்தார்கள். அவனுடைய இறுதி அடக்கத்திற்கு அரசு சார்பில் நிதியளிக்கப்படாது என எனக்கு கூறப்பட்டது ஏனென்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அடுத்த மூச்சிலேயே இதைச் சொன்ன மனிதர் – இராணுவ பிரிவு எண். 41450வின் பிரதிநிதி – கடமையின் அழைப்பை ஏற்று என் மகன் சென்றதாக குறிப்பிட்டார்.

என்ன கடப்பாடு இது? என்னிடமிருந்த மிக பொக்கிஷமான ஒன்றை எடுத்துப் போன இந்த நாட்டிற்கு நாம் என்ன கடன்பட்டிருக்கிறோம்?

ஆங்கில மொழிபெயர்ப்புபெட்ரிஷியா கோக்ரெல் மற்றும் காலினா ஆர்லோவா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.