மூச்சுக்காற்று வெறும் காற்றாகும்போது

நான் ஒரு மருத்துவன். மருத்துவர்களிடையே தங்கள் எழுத்து திறமையினால் பிரபலமானவர்கள் பலர் உண்டு. மருத்துவம் பயிலும் முன்னர் நான் பல ஆங்கில மருத்துவ எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்து வியந்திருக்கிறேன். என்னை மருத்துவத்துறை மேல் ஆசை கொள்ள வைத்ததில் இவர்களுக்கும் ஓர் பங்கு உண்டு. ஆனால், முழு நேர மருத்துவனாகிய பிறகு நோயுடனும் நோயாளிகளுடனும் உறவு அதிகரித்ததால் இப்புத்தகங்கள் மேல் இருந்த ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. பொதுவாக எனக்கு புத்தகங்களின் மேல் இருந்த ஆர்வத்தை அறிந்த நண்பர்களும் உறவினர்களும் எனக்கு அன்பளிப்பாக இப்புத்தகங்களை கொடுப்பதை என்னால் தடை செய்ய முடியவில்லை. சமீப காலத்தில் இநதிய மருத்துவ எழுத்தாளர்களில் சிலர் அமெரிக்க மக்களுக்கு மிகவும் பரிச்சயமாகி உள்ளனர். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு அதிக முக்யத்வமும் வரவேற்பும் அமெரிக்காவில் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்க கூடும். நண்பர்களுடன் கலந்துரையாடும்போது இப்புத்தகங்களைப்பற்றிய அஞ்ஞானம் என்னை ததர்மசங்கடத்திற்கு ஆளாக்கி விடுகிறது. இந்த ஒரு இக்கட்டான நிலையில் உள்ள என்னிடம் சில வாரங்களுக்கு முன் என் மகள் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்து இதை கட்டாயமாக படிக்க வேண்டும் என்றாள். மறுபடியும் இதில் சிக்கி கொண்டு விட்டோமே என்று எண்ணியவண்ணம் புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன். ஒரு சில நிமிடங்களிலேயே இது வேறு விதமான புத்தகம் என்று புரிந்தது.

முன்னுரை

இதன் ஆசிரியர் பால் கலாநிதி (தந்தை கிருத்துவர்;தாய் இந்து) நம்மிடையே இல்லை. இன்னும் சொல்ல போனால் இப்புத்தகத்தை முடிக்குமுன்னரே அவரது காலம் ஆகி விட்டது. முன்னுரையில் முதல் வரிகளிலேயே நுரையீரல் புற்று நோய் கல்லீரலிலும் எலும்பிலும் பரவியிருப்பதை தான் எக்ஸ்ரேயில் பார்ப்பதை அறிவிக்கிறார். ஆறேழு மாதங்களாக விரைவான எடைக்குறைவும், இடை விடாத பின் முதுகு வலியும் , இருமல் தொந்தரவும், மாரழுத்தமும் இது புற்று நோயாக இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பினாலும், பின் புறத்து எக்ஸ்ரேயில் நோய் அறிகுறி ஒன்றும் தென்படாததால் தன்னுடைய மிகக்கடுமையான நரம்பு நோய் அறுவைசிகிச்சை பயிற்சியே இதற்கு காரணம் என்று நம் எல்லோரையும் போலவே தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு தன்னுடைய நண்பன் ஒருவனை நியூ யார்க்கில் பார்க்க கிளம்புகிறார். அவர் மனைவி உடன் செல்ல மறுத்து விடுகிறாள். மனைவியும் மருத்துவ பயிற்சியிலே இருப்பவள் இருவருடைய தீவிரமான பயிற்சி இவர்களிடையே இருந்த நெருக்கத்திற்கு இடையூறாக இருந்ததெனினும் அது ஓர் பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளதை அப்போதுதான் உணர்கிறார்.வேலையிலேயே மூழ்கி நேரம், காலம்,மனைவி, மக்கள் அனைவரையும் மறந்தவர்களிடமிருந்து இவையெல்லாமே மறைந்து விடும் என்பதை நமக்கு கோடி காட்டுகிறார். நண்பர் வீட்டில் குழந்தைகள் வலி பொறுக்காமல் அவர் படுத்திருக்கும் படுக்கையை சுற்றி விளையாடும் பொழுது 15 வருடங்களுக்கு முன் ரம்மியமான சூழ்நிலையில் “மரணமும் தத்துவமும் ” என்ற புத்தகத்தில் ஆழ்ந்திருந்தபோது அவரை சுற்றி சிறுவர்கள் விளையாடியதை நினைவு கூர்கிறார். வலியின் வேதனையினால் தன விடுமுறையை 3 நாட்களாக சுருக்கிக்கொண்டு ஊர் திரும்புகிறார். கிளம்புமுன் தன நண்பனிடம் முதன்முறையாக தன்னை புற்று நோய் கவ்வியிருக்கலாம் என்று வெளிப்படுத்துகிறார். அவரது குடும்ப மருத்துவர் மூலம் எக்ஸ்ரேயில் இரண்டு நுரையீரல்களும் பாதிக்கப்பட்திருப்பதை கேட்டறிந்து அவர் வேலை செய்யும் மருத்துவ மனையிலேயே ஒரு நோயாளியாக சேர்கிறார்.சேருமுன் அவர் மனைவி கண்ணீர் விட்டவாறே அவரை விட்டு ஒரு கணமும் பிரியமாட்டேன் என்று அழுத்தி சொல்கிறார்.

இளம்பருவம்

பெரும்பாலான பள்ளி நாட்கள் அரிசோனா நகரத்தில் கிங்க்மான் எனும் சிறிய பாலைவன பள்ளத்தாக்கில் கழிகிறது.. மற்ற மருத்துவர்களின் குழந்தைகள் போலவே தந்தையுடன் சேர்ந்து களித்த நேரம் சிறிதளவே என்ற சோகம் ஒரு புறம் இருக்க இவருடைய தாய், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்க்கும் மேல் ஓர் படி போய் தன பள்ளியிலேயே கல்லூரி பாடங்களை தனக்கு மட்டுமன்றி மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களை கற்பிக்க வற்புறுத்தி பள்ளியின் கல்வி தரத்தையே உயர்த்திய அதிசயத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். Stanford பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியமும் உயிரிய லும் இளங்கலை கல்லூரியில் பயில்கிறார்.அடுத்த மூன்று வருடங்கள் மேற்கொண்டு என்ன செய்வது என்று விளங்காததால் இலக்கிய படிப்பில் கழிகின்றது. “தார்மிக நடத்தை தார்மிக சிந்தனையை விட மேலானது” எனும் ஒரு புத்துணர்ச்சியினால் உந்தப்பட்டு மருத்துவ துறையில்தான் அவ்வனுபவத்தை அடைய முடியும் என்ற திட சிந்தனையால் மருத்துவக்கல்லூரியில் சேர்கிறார். வாழ்க்கையின் குறிக்கோளை காண விழைந்தவர் மருத்துவ கல்லூரி அனுபவங்களைப்பற்றி எழுதும்போது ஏனோ மரணத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறார். இதை எழுதும்போது தன வாழ்நாளின் எல்லை வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்திருந்ததாலோ என்று எண்ணத் தோணுகிறது. நான்காவது வருடத்தில் சக மாணவர்களெல்லாம் சுலபமான துறைகளில் பயிற்சி பெற விழையும்போது இவர் மிகவும் கடினமான நரம்பியல் அறுவைசிகிச்சை பயில ஸ்டான்போர்ட் ஆஸ்பத்திரியில் சேர்கிறார். இதற்க்கு காரணம் இத்துறையின் மூலமே மனி தர்களின் தனித்துவம், மனித வாழ்க்கையின் நோக்கம், மரணம் ஆகிய எல்லாவற்றிற்குமே விடை காண முடியும் என்ற திடமான நம்பிக்கையே என்று கூறுகிறார். இத்துறையில் சிகிச்சையினால் ஏற்படும் உடல் இயலாமையும் மூளைக் குறைவும் மரணமும் மிக சகஜம். ஆறு வருட பயிற்சியில் இவருடைய பங்கை நம்முன் வைக்கிறார். இவ்வனுபவம் எவ்வாறு அவரை ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக மட்டுமல்லாமல் ஒரு தேர்ந்த மனிதராக மாற்றியுள்ளது என்பதை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. கடைசி வருட பயிற்சி காலத்தில் அவருடைய நெருங்கிய தோழர் தற்கொலை செய்து கொண்ட விபரீதத்தை சமாளித்து எழுந்திருக்கும் முன்னரே அவருடைய உடம்பின் பல பகுதிகளுக்குள் பரவியுள்ள புற்று நோயை சந்திக்கும் தருணம் வந்து விட்டதை நாம் அறிகிறோம்.

நோயுடன் போராட்டம்

மருத்துவர்கள் மிக மோசமான நோயாளிகள் என்று ஓர் வசனம் உண்டு. இவரும் அதற்கு விதி விலக்கல்ல என்பதை முதல் சில பக்கங்களில் காண முடிகிறது. நுரையீரல் புற்று நோய் ஆராய்ச்சி சமீப காலத்தில் மிக முன்னேற்றமடைந்துள்ளது. பல புதிய மருந்துகள் பழைய மருந்துகளை போல் உடலை வறுத்தெடுக்காமல் மூன்று மாதங்கள் முதல் பல வருடங்கள் வரை நீடித்து வாழும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக உள்ளன.இவை புற்றுநோய் உயிரணுக்களில் உள்ள மாற்றங்களை எதிர்க்கும் தன்மையை கொண்டு அமைந்துள்ளன. ஆனால் இந்த உயிரணுக்கள் புதிய மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்வதனால் இப்புதிய மருந்துகளும் வலிமையற்று போவதால் நோயை எதிர்க்கும் சக்தியை இழந்து முடிவில் நோய்க்கு இரை யாகின்றனர்.. இவரும் இப்புதிய மருந்தினால் மறு பிழைப்பு பெறுகின்றார். இச்சமயத்தில் இவரது மனைவி முன்னரே சேமித்து வைத்த விந்துவை நூதன முறையால் பெற்று கர்ப்பமடைகிறார்.சில வாரங்கள் இவருடைய ஆத்ம நண்பர்களான புத்தகஙகளுடன் செல்கின்றன. உடல் சிறிது தேறியவுடன் கடைசி வருட பயிற்சியை முடிக்க விரும்பி வேலைக்கு திரும்புகிறார். சில வாரங்களிலேயே உடல் வலி யையும் வயிற்று குமட்டலையும் பாராது முழு நேர பொறுப்புகளை ஏற்று கொள்கிறார். ஏழு மாதங்ககுக்கு பிறகு மின்கதிர் பரிசீலனையில் ஒரு புதிய கட்டி நுரையீரலை பாதித்திருப்பதை பார்த்து சோகமடைகிறார். தன மருத்துவ நாட்களுக்கு முடிவு வந்து விட்டதை அறிகிறார். மரணத்துடன் போராட்டம் உயிரணுக்களில் புதிய மாற்றங்கள் மறுபரிசோதனையில் தெரிய வராததால் வழக்கமாக உபயோகிக்கும் மருந்துகளை ஆரம்பிக்கிறார். மருந்துகளின் தாங்க முடியாத உபாதைகளையும் சகித்து கொள்கிறார் தன் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் . எலிசபெத் அகேடியா அமெரிக்க சுதந்திர தினத்தன்று பிறக்கிறாள், அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்பதோடு அவர் எழுத்து நின்று விடுகிறது.

இப்புத்தகத்தின் மிக ச்சிறப்பான அம்சங்கள் பல. அவரது குறுகிய வாழ்க்கையின் திடீர் திருப்பங்களை தனது சொந்த எண்ணக்குவியல்களாலும் அவரை கவர்ந்த புத்தகங்கள் மூலமாகவும் விவரிக்கும் அழகு, மருத்துவரான பின்னரும் இலக்கியமும் தத்துவமுமே அவரது இரு ஊன்றுகோல்களாக விளங்கியது என்பதை ஒவ்வொரு பக்கத்திலும் ஊர்ஜிதம் செய்தல், அவரது மனைவியின் மனதை உருக்கும் முடிவுரை, மருத்துவர்.ஏப்ரஹாம் வர்கீஸ் அவர்களின் முன்னுரை என இன்னும் பல. கலாநிதி கற்ற கலை சமூகத்திற்கு பயன் பட விடாமல் காலன் அவரை வரித்து கொண்டாலும் இந்த ஒரே புத்தகத்தின் மூலம் காலத்தால் அழிக்கமுடியாத நூலாசியர்களின் பட்டியலில் ஐக்கியமாகி விட்டார் என்பதில் சந்தேகமேயில்லை.

One Reply to “மூச்சுக்காற்று வெறும் காற்றாகும்போது”

  1. வணக்கம். நல்ல புத்தகத்துக்கு நல்லதொரு அறிமுகம். வாசுவுக்கு வாழ்த்துகள். மூன்று மாதங்களுக்கு முன்பாக ஒரு மருத்துவ நண்பரைச் சந்தித்தபோது, அவர் எனக்கு இப்புத்தகத்தைப் படிக்கும்படி சொன்னார். நான் அதைப் படித்துவிட்டு, எனக்கு நெருக்கமான நண்பர்களுக்கெல்லாம் படித்துப் பார்க்கும்படி சொல்லி புத்தகத்தைக் கொடுத்தனுப்பினேன். தற்செயலாக சென்னையில் வசிக்கும் நண்பரிடம் இதைப்பற்றிப் பகிர்ந்துகொண்டபோது, அதை அவர் ஏற்கனவே படித்துவிட்டதாகவும் அதை மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னார். போன மாதம் அது புத்தகமாகவும் வெளிவந்துவிட்டது. சென்னை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. மொழிபெயர்த்திருப்பவர் நடராஜன்

    அன்புடன்
    பாவண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.