ஓம் மணி பத்மே ஹூம்

நான் கடைசியாக எப்போது அரக்கர்களை சந்தித்தேன்?

நான் சாதாரணமாகப் பிடிக்கும் ரயிலைத் தவறவிட்டிருந்தேன். பெரிதாக ஆளரவமற்ற ஸ்டேஷன். பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு ஒரு கையில் செல்பேசியும் இன்னொரு கையில் நாளிதழும் இருந்தாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அந்த பிச்சைக்காரன் வந்தான். “சில்லறை இருக்கிறதா?” எனக் கேட்டான். நிறைய அருவறுப்பும் கொஞ்சம் பயமும் வந்தது. அவனிருப்பதாகக் காட்டிக்கொள்ளாமல், நாளிதழைப் புரட்டினேன். அவனை முழுக்க உதாசீனம் செய்தேன்.

என்னுடைய அலட்சியமும் வீடற்றவரின் கையாலாகாத்தனமும் சேர்ந்துகொண்டது. அவன் பெருங்குரலெடுத்து என்னை வைய ஆரம்பித்தான். என்னை மட்டுமல்ல… உலகில் எல்லோரையும் அழைத்தான். கெட்ட வார்த்தைகளை ஸ்பஷ்டமாக, ஜோராக, சத்தமாக ஒவ்வொரு பயணியையும் நோக்கி உச்சரித்தான். கேட்கவே காது கூசியது. காவல்துறையினர் அவனைக் கைது செய்து உள்ளே தள்ள வேண்டுமென்று தோன்றியது. அவன் சொல்லும் மூர்க்க சொற்களைக் கேட்பதற்கு விருப்பமில்லாமல் அங்கிருந்து அகன்று கடுங்குளிரில் வெளியில் சென்று நடுங்குவது கூட பரவாயில்லை என முடிவெடுத்து, வாயிலை நோக்கி நகர்ந்தேன்.

அப்பொழுதுதான் அவன் தோன்றினான். அவன் முதுகில் ஒரு பெரிய சுமை இருந்தது. அவன் ஊர் ஊராக, நாடு நாடாக பயணிக்கும் நாடோடி. அவனின் மொத்த பயண சாமான்களும் அந்தத் தோள்பையில் இருந்தது. அந்த சுமைப்பையை சடாரென்று அவிழ்த்தான். பாசாங்கின்றி அந்தப் பெரியவரை, சாண்டா கிளாஸ் போல் வெண்ணிறமாக இருந்திருக்கக் கூடிய தாடியில் கருப்பு அழுக்குடன் காணப்பட்ட முதிய வீடற்றவரை கட்டியணைத்து ஆட்கொண்டான். “சாப்பிட்டாயா? உண்ண என்ன வேண்டும்?” என வினவினான். அன்றலர்ந்த ஆடை அழுக்கு படிவதையோ, எல்லோரும் அவர்களையே உற்று நோக்குவதையோ அவன் பொருட்படுத்தவயில்லை. அவன் கவனமெல்லாம் ஒன்றில் மட்டுமே இருந்தது. வீடற்றவனை நோக்கி “உனக்கு என்ன வேண்டும்?” என்று ஆதுரமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனை உணவகம் நோக்கி செலுத்திக் கொண்டிருந்தான்.

பால்ய வயதில் படித்த ”மேற்கே பயணம்” (Journey to the West) நினைவிற்கு வந்தது. இது சீனாவின் புகழ்பெற்ற பதினாறாம் நூற்றாண்டு காப்பிய நாவல். அதிலும் இப்படித்தான் ஒரு புத்த பிட்சு உலகெங்கும் பயணிக்கிறார். என்னைப் போன்ற அசுரர்களிடமிருந்து பலஹீனர்களைக் காக்கிறார்.

இந்தக் கதையில் குரங்குதான் முக்கிய நாயகர். இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் குரங்கின் நினைவு வருகிறது. (தொடர்புள்ள உரையாடல்: குழப்பவாதக் குரங்குகள் கட்டுரை – மறுவினைகள் & உச்சைசிரவஸும் குரங்கும்). இந்தப் ஜர்னி டு தி வெஸ்ட் புத்தகமும் குரங்கு ராஜாவும் அவரின் எஜமானத்தனமான குருவான – ‘த்ரிபீடக’ (त्रिपिटक) என்பவரின் பயணமும் பற்றிய கதை.

த்ரிபீடக என்பவர் குரங்கிற்கு எஜமானா, குருவா? இது புத்தகத்தில் தெளிவாக இல்லை. யாருக்கு யார் எஜமானன்? யாரை குரு என்று நினைக்கிறோமோ, அவரே சீடராகவும் அடிபணிய வேண்டும் என்கிறார்கள். குரங்கும் புத்த நிலையை பயணத்தின் இறுதியில் அடைகிறது. அதன் எஜமானன் ஆன திரிபீடகரும் புத்தநிலையை அடைவதற்கான பயணத்தின் இறுதியில் புத்தராகிறார். இருவரும் ஒருவரின் துணையின்றி புத்தராகியிருக்க முடியாது. ஆனால், குரங்கு மனம் கட்டின்றி அலைவதால், அதை அடக்கியாள்வதற்கு எஜமானர் தேவைப்படுகிறார்.

புத்த மதக் கொள்கைகளில் முரண்பாடுகள் இருந்தததைக் கண்டு, அதன் உண்மைகளைக் கண்டறிய இந்தியாவில் 17 வருடங்கள் பயணம் மேற்கொண்ட பின், தான் கற்றவற்றை, சீன மொழியில் பெயர்த்துக் கொடுத்தவரின் பெயர் த்ரிபீடகா. திரிபீடகா என்பது புத்த மதச் சூத்திரங்களைக் கொண்ட ஏடுகளைக் கொண்டு வருவது. த்ரிபீடகா என்றால்
1) சூத்திரங்கள் – மஹாயான சூத்திரங்கள்,
2) சுட்ட பீடிகா, அபிதர்மா – தத்துவ மனோதத்துவ விசாரங்கள்,
3) வினயா- புத்த துறவியருக்கான உடை உணவு உணர்வுக் கட்டுப்பாடு

1942ல் ஆர்தர் வாலி (Arthur Waley) என்பவர் ’குரங்கு’ என்னும் பெயரில் சீன செவ்விலக்கியத்தை சற்றே சுருக்கி புத்தகத்தை வெளியிடுகிறார். இது இங்கிலாந்தில் அச்சிடப்படுகிறது. ஏற்கனவே நிறைய சீன மற்றும் ஜப்பானிய மொழி இலக்கியங்களை மொழிபெயர்த்தவர் ஆர்த்தர். சீன மொழியில் ’சூ ஜி’ (”Xiyou ji அல்லது Xi You Ji (அ) Hsi Yu Chi‘) என்றழைக்கப்பட்ட கதையை ஆர்த்தர் ஆங்கிலத்திற்கு கொணருகிறார். அந்தக் கதையை ஆயிரத்தியொன்று இரவுகள் போல் ரகசியமாய் சிறு வயதில் படித்திருக்கிறேன். அதனுடன் உறங்கியிருக்கிறேன். அந்தப் புத்தகத்தின் அழகிகள் மேல் அழுக்கான கனவுகள் கண்டிருக்கிறேன். அது சாகசங்களும் அறிவின் ரகசியங்களும் வாழ்க்கையின் விளங்கொண்ணா வினாக்களும் அடங்கிய புத்தகம். கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் புரியிலி தத்துவம் கொஞ்சம் காமம் என எல்லாமும் கலந்து கட்டி ஊட்டும் புத்தகம். நூறு அத்தியாங்கள் கொண்டது.

இதன் முதல் பகுதி குரங்கு ராஜாவைக் குறித்தது. வாலியும் அனுமனும் கலந்தது போல் ஒரு குரங்கு – சன் வு காங் (Sun Wukong). அது அதிதீவிர காரியவாதி + புத்திசாலி. பிரம்மச்சாரி; மரணமற்ற சிரஞ்சீவி. எல்லாவற்றையும் அடக்கியாளும் தன்மை கொண்ட குரங்கு. ஆனால், செருக்கு தலையேறினால், தன்னால் ஆகக் கூடிய செயல்நுட்பம் மறந்துபோகக் கூடிய மந்தி. இராமரின் அத்தியந்தமான சீடன் ஆஞ்சனேயர். இங்கே புத்தரின் சர்வ ரகசியங்களும் அறிந்த புத்திசாலி சன் வுகுங்.

சன் வுகாங் வசிக்கும் குகையின் வாயிலில் பிரும்மாண்டமான திரைச்சீலை போல் அருவியொன்று கவிந்திருக்கிறது. அந்தக் குரங்கிற்கு மாயாஜாலாங்களும் மந்திரங்களும் தெரியும். இந்தக் கால கராத்தே, டேக்வாண்டோ போன்ற தற்காப்புக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறது. இந்தக் குரங்கு, பல்வேறு இடங்களுக்குச் சென்று, பல நாட்டவரிடமிருந்து அரிதான பொருள்களை கவர்ந்தோ, அன்பாக மிரட்டியோ, நட்பின் அடையாளமாக தானமாகவோப் பெற்றுக் கொண்டு வந்திருக்கிறது. இதில் தேவாமிர்தம் போல் இறவாவரம் தரும் அரிய காயகல்பங்களும் உண்டு. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பது பழமொழி. டிராகன் தேசத்திற்கு சென்றபோது, அங்கே துரும்பைப் பெற்றுக் கொண்டு வந்தது. அந்தத் துரும்பை தன் காதில் சொருகிக் கொள்ளும் குரங்கு. பகைவருக்கு ஏற்ப, அந்தத் துரும்பு – ஆயுதமாக, கம்பாக மாறும்; அல்லது நீர் பீய்ச்சி அடிக்கும் ஊதுகுழலாகும். எதிராளிக்கு ஏற்றவாறு அவர்களைத் தாக்க அந்தத் துரும்பு வினோத ரூபங்கள் பெறும். இதுவே தான் எதிர்கொள்ளும் பகைவர் அனைவரையும் வீழ்த்த சன் வுகாங் கைகொள்ளும் போர்க்கருவி.

இந்தக் குரங்கின் குரு – ‘த்ரிபீடக’. இவர் மெத்த படித்தவர். தூய பௌத்த துறவி. சன்சங் என்றழைக்கப்படுபவர். ஆனால், வம்பு தும்பிற்கு போகாமல் ஓரமாக ஒதுங்கிச் செல்பவர். இவருக்கு ஆயிரம் கடல், பல்லாயிரம் மலை தாண்டி மேற்கே இருக்கும் ராஜாளி சிகரத்தை அடைய வேண்டும் என்பது தீரா ஆசை. போகும் வழியில் புனித சூத்திரங்களையும் புத்த சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டு, அவற்றை பிரதியெடுத்து, திரும்ப சீனாவிற்குக் கொண்டெ சேர்க்க வேண்டும் என்பது அரச கட்டளை.

இவரின் பயணத்திற்கு

அ) குரங்கு – சன் வுகாங்: தன்னுள் இருக்கும் உள்ளீடின்மையை எவ்வாறு போக்குவது என கற்றறிபவர்
ஆ) பன்றி முகம் கொண்ட சூரன்: 猪悟能 – ஜூ வு நங் (Zhu Wuneng): தன்னுள் இருக்கும் சக்தியின் பராக்கிரமத்தை உணர்கிறவர்
இ) காபாலிகன் போல் மண்டையோட்டுகளைத் தரித்த அகோரி சன்னியாசி: 沙悟净 ஷா வு சிங் (Sha Wuching): களிமண் போன்ற அழுக்கில் இருந்து தூய்மைக்கான புனிதப் பாதையைத் தெரிந்து கொள்பவர்

துணை நிற்கிறார்கள்.

ஒருவருக்கு பல பெயர். மகாபாரதத்தில் சாந்தனுவின் மகனை பீஷ்மர் என்கிறோம். கங்காபுத்ரா என்போம். அவரின் அசல் பெயர் தேவவிரதர். பிதாமகர் என்றும் அழைக்கிறோம்.மஹாமஹிமா என்போம். முன்பிறப்பில் அஷ்டவசு என்றார்கள். அதுபோல் சரித்திரத்தில் இவருக்குப் பெயர் ஹுவான் சுவாங். மூன்று மதக் கொள்கைகளையும் ஒன்றிணைத்து நவீன சீனத் தத்துவ மதப் பண்புகளை உருவாக்கியதால் த்ரிபீடகர். சீன மொழியில் 玄奘 – சன்சங். சீனாவை ஆட்சி செய்த “டாங்” பேரரசில் வம்சாவளி அரசர் என்பதால், இவர் டாங் செங் என்று செல்லப்பெயராலும் அழைக்கப்பட்டார்.

அவர்களின் சாகசங்களும் இராட்சஸர்களை விதவிதமாக முடிவிற்கு கொணர்வதும் விசித்திரமான புதிர்களும் சுருக்கமாக முன்னூறு பக்கங்களில் சொல்லப்பட்டிருந்தது சிந்தையை இன்றளவும் ஆக்கிரமித்திருக்கிறது. சமீபத்தில் இந்த நூலின் முழு வடிவமும் நான்கு பாகங்களாக ஆண்டனி சி. யூ (Anthony C. Yu) என்பவரால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கங்களுக்கு முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 1983-ல் இந்த மொழியாக்கம் வெளியானது.

இந்தப் புத்தகம் விதவிதமாக தொலைக்காட்சிக்காவும் வெள்ளித்திரைக்காகவும் காட்சியாக்கம் பெற்றிருப்பது யூடியுப் மூலமாக தெரியவருகிறது. சீனாவில் நான்கு புதினங்களை அவர்களின் செவ்வியல் இலக்கியமாகக் கருதுகிறார்கள்:

அ) 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நீர்க்கரை (水浒传)
ஆ) 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மூன்று ராஜ்ஜியங்களின் வீரகாவியம் (三国演义)
இ) 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிவப்பு மண்டபத்தின் கனவுகள் (红楼梦)

16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த மேற்கை நோக்கிய பயணம் புத்தகமும் – 西游记 இந்த அரிதான பட்டியலில் மாபெரும் சீனக் காப்பியமாகக் கருதப்படுகிறது. ஏன் என்று அலசுவதற்கு முன் சுருக்கமாக அதன் கதையைப் பார்த்துவிடுவோம்.

இந்த உலகின் துவக்கத்தில் ஒரு பாறாங்கல் இருந்தது. அந்தப் பாறை ஒரு கல்முட்டையை ஈன்றது. அந்த முட்டை, மெதுவாக குரங்கு போன்ற தோற்றமெடுத்தது. ஒரு நாள் அந்தக் கல் குரங்கு உயிர் பெற்றது. மற்ற குரங்குகளுடன் விளையாட ஆரம்பித்தது. கிட்கிந்தாபுரி போன்ற அந்தப் பிரதேசத்திற்கு அந்தக் குரங்கு, அரசராக ஆனது.

விளையாட்டாக பொழுதைக் கழித்த அந்தக் குரங்கிற்கு மரணத்தைக் குறித்த சிந்தனை எழுந்தது. அதனால், தன் சக கவி குழாமிடமிருந்து பிரியாவிடைப் பெற்றுக் கொண்டு, சாகாவரம் தேடிய பயணத்தைத் துவங்கியது. இறவாமை குறித்து முற்றும் அறிந்த குலபதி சுபோதி என்னும் மூதாளரின் குருகுலத்தில் மாணவராக சேர்கிறது. சீன ஞானி லா வோ த்ஸு சிந்தாந்தமான தா ஓ எனப்படும் டாவோயிஸத்தை உபதேசிப்பவர் குலபதி சுபோதி. அஷ்ட்மகா சித்திகள் எனப்படும்:

1. அணிமா – அணுவைப் போல் சிறிதாக தேகத்தை மாற்றிக் கொள்ளுதல்
2. மகிமா – மலையைப் போல் பெரிதாக்கிக் கொள்ளுதல்
3. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் ஆக்கிக் கொள்ளுதல்
4. கரிமா – கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாக்கிக் கொள்ளுதல்
5. பிராப்தி – எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
6. பிராகாமியம் – தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்
7. ஈசத்துவம் – தன்னை விட சக்தி வாய்ந்த தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்துதல்
8. வசித்துவம் – அனைத்தையும் ஆட்படுத்தி வசப்படுத்தல்.

உட்பட எழுபத்தி இரண்டு வித்தைகளைக் கற்றுக் கொள்கிறது.

இந்த நூலின் சிறப்பே இவ்வாறு சீனாவின் சித்தாந்தங்களை ஒன்றிணைப்பதுதான். பெளத்தம் உட்பட தாவோயிஸம், கான்பூசியஸம் ஆகிய மதக் கோட்பாடுகளை இந்த நூல் உள்ளடக்கமாக வைத்திருக்கிறது. இறந்தவர்களை நம் வழிகாட்டிகளாக, முன்னோர்களாக, தெய்வங்களாக நினைவில் என்றும் நிறுத்தி வழிபடுமாறு கன்ஃபூசியஸ் உபதேசிக்கிறார். ஆனால், இந்தியாவின் யோக வழிபாட்டையொத்த முறையை பின்பற்றும் தாவோயிசத்தில் கூடு விட்டு கூடு பாயலாம். இந்த இரு சித்தாந்தவாதிகளுக்கு நடுவில் கடும் பூசல் நிலவியது. ஒரு மதத்தினர் இன்னொரு சாராரை, வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள்.

எஸ்.எல்.வி. மூர்த்தி எழுதிய பண்டைய நாகரிகங்கள் நூலில் இருந்து:

கன்ஃப்யூஷியஸ் கி.மு. 551 முதல் கி.மு. 479 வரை, 72 ஆண்டுகள் வாழ்ந்தார். பிறரிடம் மரியாதை, பரந்த மனப்பான்மை, மன்னிக்கும் குணம், நன்றி காட்டுதல், விசுவாசம், தன்னம்பிக்கை, முன்னோரை வழிபடுதல் ஆகியவை இவருடைய முக்கிய கருத்துகள். கல்வியால் இந்தக் குணங்களை உருவாக்கலாம் என்று கன்ஃப்யூஷியஸ் நம்பினார். இதற்காக, ஒரு கல்விச் சாலையும் தொடங்கினார்.

லாவோஸி கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவர் சித்தாந்தம் டவ் (Taoism) என்று அழைக்கப்படுகிறது. அனைத்து உயிர்களும், பொருள்களும் ஒரே இயற்கையின் பல வடிவங்கள். மனிதன் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும் என்கிறது தாவோயிஸம்.

இந்த மாதிரி குரு சுபோதியிடம் தனிமையில் கற்றுக் கொண்ட வித்தைகளில் ஒன்றான தேவதாரு மரமாக மாறுவதை எல்லோர் முன்னிலையிலும் செய்து காட்டிய அதிகப்பிரசங்கித்தனத்தால், குரங்கை தன் குருகுலத்தில் இருந்து விரட்டி விடுகிறார். அது தன் சொந்த ராஜ்ஜியத்திற்கேத் திரும்புகிறது. ஆனால், வந்தது போல் வருடக்கணக்கில் பயணிப்பதில்லை. நினைத்த க்ஷணத்தில் நினைத்த இடத்திற்கு பறந்து தாவிச் சென்றடைகிறது. 108,000 காத தூரத்தை நொடிப் பொழுதில் கடக்கிறது.

இவ்வளவு கற்றிருந்தாலும் தன்னுடைய 342வது வயதில் அதன் அந்திமக் காலம் நெருங்குவதை குரங்கால் உணரமுடிகிறது.

அதன் கனவில் எமன் ஆளும் மரணவுலகிற்கு, குரங்கு சென்றடைகிறது. யமதர்மராஜன் முன்னிலையில், பூதவுடலைத் துறந்து வரும் உயிர்களின் பாவ புண்ணியங்களைத் தன்னுடைய ஏட்டிலிருந்து படிக்கிறார். அங்கே சித்ரகுப்தன் போன்ற கணக்கர்கள் வைத்திருக்கும் தஸ்தாவேஜில் இருந்து தன்னுடைய விவரங்கள் அடங்கிய பக்கத்தைக் கிழித்துவிடுகிறது. அதனுடன் தன் சக குரங்குகளின் பெயர்களையும் கிழித்து சுக்கு நூறாக்கி விடுகிறது.

இந்த மாதிரி அராஜகங்களுக்கு குரங்கு பதிலளிக்குமாறு பச்சைக்கல் மஹாராஜாவிடமிருந்து சம்மன் அனுப்பப்படுகிறது. குரங்கும் சொர்க்கத்திற்குச் சென்று விசாரணையை எதிர்கொள்கிறது. அங்கே, குதிரை லாயத்தைப் பராமரிக்கும் மிகப்பெரிய பொறுப்பைத் தருவதாக தீர்ப்பளிக்கப்படுகிறது. நாளடைவில் இந்தப் பதவி வெறும் கண்துடைப்பு மட்டுமே என்றும் தன்னை அடக்கியொடுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதையும் குரங்கு புரிந்துகொள்கிறது.

அதன் எதிர்ப்பை நசுக்க தேவாதி தேவர்களும் அஷ்டலோக அரசர்களும் மும்மூர்த்திகளும் வருகிறார்கள். எவராலும் குரங்கு ராஜாவை தோற்கடிக்கமுடியவில்லை. இப்பொழுது கண், காது, மூக்கு, வாய், மெய் என ஐம்புலன்களை உணர்த்தும் குழிப்பேரி (peach) விருந்திற்குள் குரங்கு ராஜா அத்துமீறி நுழைகிறார். இது ஐந்து வகையான தியான புத்தர்களையும் குறிக்கிறது. பெளத்த தாந்திரீகமான வஜ்ராயனம் இந்த பஞ்ச புத்தர்களை விரிவாகச் சொல்லியிருக்கிறது. அவர்கள் வைரோச்சனர், அக்ஷேப்பியர், ரத்ன சம்பவர், அமிதபர், அமோக சித்தி.

வஜ்ர புத்தர் என்பது உருவம்; அடக்கம் சார்ந்த தெளிவு பெற்றால் இந்த நிலையை குரங்கு மனம் அடையும். ரத்தின புத்தர் என்பது உணர்ச்சி; ஆசையை விட்டொழித்தால், குரங்கு இந்த நிலையை அடையும். பத்ம புத்தர் என்பது அவதானித்து உள்ளுணர்தல்; தன்னலத்தை விட்டொழித்தால் இந்நிலையை அடைவோம். கர்ம புத்தர் என்பது நோக்கம்; பொறுமையாக அனுதினமும் எல்லா முந்தைய நிலைகளையும் கடைபிடித்தால் இந்த புத்தர் ஆகிறோம். கடைசியில் புத்தர் என்பது விழிப்புணர்வு (அ) சைதன்யம்.

இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விரலினை குறிப்பவர்கள் என்றும், முறையே
1. பெருவிரல் வைரோச்சனர், வெண் எழுத்துக்களில் “ஓம்” என்பதையும்;
2. ஆள்காட்டி விரல் – அக்ஷேப்பியர், நீல நிற “ஹம்” என்பதையும்,
3. நடுவிரல் – ரத்ன சம்பவர், மஞ்சள் நிற “திராம்” என்பதையும்,
4. மோதிர விரல் – அமிதபர், சிவப்பு நிற “ஹ்ரீம்” என்பதையும்,
5. சுண்டு விரல் – அமோக சித்தி, பச்சை நிற “அ” என்பதையும் குறிக்கும்.

இந்த ஐந்து விரல்களைக் கொண்டு அந்தக் குரங்கு ராஜாவை புத்தர் அடக்குகிறார். அந்தக் குரங்கை ஐந்து சிகரங்கள் உள்ள மலையின் கீழே தள்ளி அடைக்கிறார். குரங்கு தன் தவத்தை அங்கே அனுஷ்டிக்கிறது.

புத்தருக்கு தன்னுடைய உபதேசங்களை மேற்கில் இருக்கும் இந்தியாவில் இருந்து கிழக்கில் இருக்கும் சீனாவிற்கு எடுத்துச் செல்ல நம்பகமான போதிசத்துவர் தேவைப்படுகிறார். இதற்குத் தகுதியுடைய நபரை கண்டுபிடிக்கும் பொறுப்பை குவான் யின் (Kuan-yin) ஏற்றுக் கொள்கிறார். அந்த குவான் யின் கண்டுபிடிப்பவர்தான் ஹுவான் சுவாங் (Hsüan Tsang). இவருடைய இடர்மிகுந்த பயணங்களில் துணையாக பாதுகாவலனாக இருக்க குரங்கு ராஜாவை மீட்பித்து ஆட்கொள்ளுமாறு, ஹுவான் சுவாங்கிற்குப் பரிந்துரைக்கப்படுகிறது. அவரும் குரங்கை பாதாள லோகத்தில் இருந்து எழுப்பி தன்னுடைய சேவகனாக்கிக் கொள்கிறார்.

இந்தக் கதை நூறு அத்தியாயங்களில் சொல்லப்பட்டிருந்தாலும் ஏழு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்:

1) சராசரி உலகம்: குரங்காக பிறப்பது, வளர்வது
2) எதிர்பாராத சாகசங்களுக்கான அழைப்பு: குரங்கு தன் குருவைத் தேடிச் செல்லுதல்; அங்கே பல சித்துகளைக் கற்றல்
3) சக்கரத்திற்குள் சிக்காமல் சகதிக்குள் உழலுதல்: நியமிக்கப்பட்ட உயர் பதவியை துச்சமென தூக்கி வீசிவிட்டு, தேவர்களுடனான நிரந்தர நல்வாழ்வை விட்டு விலகுதல்
4) உண்மையான புத்தரை கண்டுபிடிக்கும் பயணத்தைத் துவங்குதல்: திரிபீடகாவுடன் ஆன சந்திப்பு
5) புத்தருடன் சிரமம் நிறைந்த பயணத்தை மேற்கொள்ளல்: இது இடையூறுகள் நிறைந்த பாதை. சாகாவரம் பெற நினைத்த குரங்கு, இறப்பிற்கு துணிகிறது.
6) வாசற்படியைக் கடத்தல்: எப்போது மந்திரத்தால் மனதைக் கட்டுப்படுத்த முடியாது என்று உணர்கிறோமோ, அப்போது தன்னடக்கமும் செயல்வீரியமும் துவங்கும் என்று அறிதல்
7) மறுபடி இடம் திரும்புதல்: புத்தரை சந்தித்தல், மரணத்தை எதிர்கொள்ளுதல், மீட்சி அடைதல், மீண்டும் சொந்த வீட்டிற்கே சென்று தன் பரிவாரங்களுக்குக் கற்றதை பரப்புதல்

நம்முடைய இராமாயணமும் மஹாபாரதமும் சொல்லும் பல கதைகள் ”மேற்கே பயணம்” (Journey to the West)ல் சொருகப்பட்டிருக்கின்றன:

1. யக்‌ஷ பிரக்ஞம் – விவாதம்: கேள்வியும் பதிலும் – மேற்கே அனுப்பப்பட வேண்டியவரை குவான் யின் சாதாரணமாகத் தேர்ந்தெடுக்கவில்லை. எது சந்தோஷம்? எப்படி வருத்தத்தைப் போக்குவது போன்ற எளிய கேள்விகளுக்கு விடை கோருகிறார்.

2. லக்‌ஷ்மணர் கோடு வரைந்ததும் சீதை கோட்டைத் தாண்டியதும்: இந்த வட்டத்தைத் தாண்டி வெளியே வரவேண்டாம் என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். தண்ணீர் தளும்பாது; தளும்பினால்?

3. இராமரும் வானர சேனையும்: இங்கே புத்த பிக்குவும் அவருக்கு உறுதுணையாக குரங்கு ராஜவும்

4. பீஷ்மர் என்னும் அரசரின் பெரியப்பா – வஞ்சகத்திற்கும் ஆட்சிக்கும் துணைபோகும் பெரியவர் கதை நூறு அத்தியாயங்களில் ஒன்றாக வருகிறது. அரசின் தன்னலத்திற்காக எதையும் செய்யத் துணியும் மாமாவும் வருகிறார்.

5. மாய மான்: எல்லாமே மாயை என்றால் எது அசல் என்பது போன்ற கேள்விகளை எழுப்பும் சம்பவம் ஒரு அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. இந்தக் கதையின் நீட்சியாக புத்தரிடமிருந்து புத்தர் தோன்றுகிறார் என்பதும் சொல்லப்படுகிறது. அதாவது ஆதி கௌதம் புத்தர் – தான் புத்தத்தன்மையை அடைந்து விட்டோம் என்பதை எப்படி உணர்ந்து தெளிந்திருப்பார்?

6. பதினான்கு வருட வனவாசம் அனுபவித்தாலும் நொடி நேரத்தில் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள்

7. எல்லோரும் சகோதரர்கள்: பிறப்பால் குரங்காக, பன்றியாக இருந்தாலும் செய்கையால் உயர்பவர்கள்: கதையின் கடைசியில் குரங்கு ராஜா பிறப்பால் மந்தியாக இருந்தாலும் தன் செய்து முடிக்கும் ஆற்றலாலும் ஏன் செய்கிறோம் என்பதை உணர்ந்ததாலும் புத்தராக உயர்நிலையை அடைகிறார்.

8. கூடு விட்டு கூடு பாய்வது – அஞ்ஞாதவாசம்: பன்றி முகம் கொண்ட ஜூ பைஜே (Zhu Bajie) என்பவரைத் தொண்டராக்க வேண்டும். அதற்கு அந்தப் பன்றியின் மனைவி போன்ற தோற்றத்தை குரங்கு ராஜா எடுக்கிறார்.

9. ஒவ்வொரு நற்செய்கை புரிபவரையும் தன்னுடைய சகோதரராக ராமர் வரிப்பார்; இங்கே அவ்வாறே புத்தநிலையை தங்களின் நற்காரியங்களால் எய்துகின்றனர்

10. ஆற்றில் விடப்பட்ட குழந்தை கர்ணன் போல் புத்தபிக்குவும் அனாதையாக அனுப்பப்படுகிறார்.

11. தன் உடலின் ஒவ்வொரு ரோமத்தையும் ஒரு உயிராகப் படைக்கும் வித்தையையும் சன் வு குங் கற்றிருக்கிறான்: லங்கா தகனத்திற்குப் பிறகு அனுமன் தன் வாலை கடலில் முழ்க வைத்து அணைக்கும் போது சிந்திய வேர்வைத் துளியிலிருந்து பாதாள லோக காப்பாளன் மகர-த்வஜன் பிறந்ததாக இராமாயணம் கூறுகிறது

12. ஒரே ஒரு முறை மட்டும் ஒரு அரசனின் உயிர் காக்க பச்சிலை வைத்திய ஆற்றலைப் சன் வு குங் பயன் படுத்துகிறான்: துரோணகிரியில் இருந்த, லக்ஷ்மணனைக் காத்த பச்சிலை மருத்துவ ஆற்றல்

கட்டுரையின் தலைப்பிற்கு வந்துவிடலாம். அந்த மந்திரம் எப்போது, எதற்காக உபதேசிக்கப் படுகிறது?

ஹுவான் சுவாங் என்பவரால் தன் குரங்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. செல்லும் பாதையோ கொடிய வழிப்பறிக் கொள்ளையர்களும் அரக்கர்களும் நிறைந்த பாதை. அதில் பலசாலியான திடகாத்திரமான துணை நிச்சயம் தேவை. ஆனால், குரங்கோ தேவையின்றி வன்முறையில் இறங்குகிறது. எதற்கெடுத்தாலும் அடி, யாரைப் பார்த்தாலும் கொலை என்று சகலரையும் வெட்டிச் சாய்க்கிறது. இதே போல் தொடர்ந்தால், தொண்டர்களும் சீடர்களும் கூட வில்லன்களாக எதிரிகளாகி விடுவார்கள். அப்போது குவான் யின் – ”ஓம் மணி பத்மே ஹூம்” மந்திரத்தை உச்சாடனம் செய்யச் சொல்கிறார். குரங்கு மனம் புத்தர் வழி செல்கிறது.

குவான் யின் என்பவர் யார்? அவர்தான் அவலோகிதர். புத்தர்களின் கருணையின் வடிவாக கருதப்படுகிறார். மணிபத்ம என்பது இங்கு அனைத்தும் புத்தர்களின் கருணையின் ஒட்டுமொத்த வடிவமாக வணங்கப்படும் போதிசத்துவ அவலோகிதேசுவரரை குறிக்கிறது.அவலோகிதேசுவரர் கையில் தாமரையையும் சிந்தாமணி இரத்தினத்தையும் ஏந்தியவர்.

இது பௌத்தர்களின் தலையாய மிக முக்கியமான மந்திரங்களுள் ஒன்று. இதை மணி மந்திரம் எனவும் அழைப்பர். இந்த ஆறெழுத்து மந்திரம் (ஷடாக்ஷர மந்திரம்) அவலோகிதேஷ்வரருடன் தொடர்புடையது. அதிலும் குறிப்பாக நான்கு கைகள் (சதுர்புஜ ரூபம்) கொண்ட அவலோகிதேஷ்வரருக்கு உரியதாக கருதப்படுகிறது. எனவே தான் நான்கு கைகள் கொண்ட அவலோகிதேஷ்வர் ஷடாக்ஷரி (ஆறெழுத்துகளின் அதிபதி) என அழைக்கப்படுகிறார்.

இந்த அவலோகிதேசுவரர் பொதிகை மலையில் வசித்தார் எனவும் தமிழ் போதித்தார் எனவும் தமிழ்ப்பௌத்தர்கள் நம்புகின்றனர். இந்த மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்துவதற்காக இந்த மந்திரத்தை திபெத்தியர்கள் பாறைகளில் செதுக்கியும், பிரார்த்தனை சக்கரங்களில் எழுதியும் வைக்கின்றனர். ஒவ்வொரு முறை இந்த சக்கரத்தை நாம் சுழற்றும் போது, அது மந்திரத்தை உச்சரித்ததின் பலனை தருகின்றதென நம்பப்படுகிறது.

மணிபத்மே என்றால் “தாமரையில் இருக்கும் சிந்தாமணியே” அல்லது “தாமரையையும் சிந்தாமணி ரத்தினத்தையும் கையில் ஏந்தியவனே” என்று பொருள். இங்கு மணி என குறிப்பிடப்படுவது அனைத்தையும் தர வல்ல சிந்தாமணி ரத்தினம் ஆகும்.

இந்த மந்திரம் முதன் முதலின் நான்காம் நூற்றாண்டு இறுதியில் இயற்றப்பட்ட காரண்டவியூக சூத்திரத்தில் காணப்படுகிறது. காரண்டவியூக சூத்திரத்தில் கௌதம புத்தர் இவ்வாறு கூறுகிறார், “இது தான் மிகவும் பயனுள்ள மந்திரம். நான் கூட இதைப் பெற வேண்டி பல புத்தர்களிடம் வேண்டினேன், இறுதியில் இந்த மந்திரத்தை அமிதாப புத்தரிடமிருந்து பெற்றேன்”

எனினும் பௌத்தத்தில் மந்திரங்களின் பொருள் இரண்டாம் பட்சம் தான். மந்திரத்தின் மேலும் மந்திரத்தின் அதிபதியாக உள்ள புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள நம்பிக்கையே முதண்மையானது. குரங்கு மனம் மாறி திருந்தும் என்று திக்கு தெரியாமல் புத்தத் தத்துவங்களை நோக்கி பயணிப்பவர் நம்புகிறார். எவ்வளவு பெரிய அசுரனாக இருந்தாலும் அவரை தன்வழி கொண்டு வரமுடியும் என நம்புபவர் வெற்றியடைகிறார். அப்படி நீங்களும் குரங்கு போன்ற சக்தியை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள: ”ஓம் மணி பத்மே ஹூம்”.

மந்திரம் புரிந்தால் உங்கள் பயணம் துவங்கிவிட்டது என்றே அர்த்தம் என்பார் புத்தர்.

The Journey to the West Translated and Edited by Anthony C. Yu.
Volume One. 530 pp. Cloth, $35. Paper, $8.95.
Volume Two. 438 pp. Cloth, $35. Paper, $12.50.
Volume Three. 454 pp. Cloth, $35.
Volume Four. 45l pp. Cloth, $35.
Chicago: The University of Chicago Press.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.