அகதி

நண்பர்களுக்கு சவக்குழி நோண்டுவதைப் போலக் கடுமையான வேலை எதுவும் இல்லை. வீடற்ற பிச்சைக்காரர்கள், சுற்றுலாத் தளங்களில் கரைந்து போன சிறுமிகள், அரசு சாப்பாட்டை எதிர்பார்த்து காலே துறைமுக அலுவலக தற்காலிக கூடாரங்களில் கும்பல்கூடியிருந்தவர்களின் விரலிடுக்கில் நழுவும் குழந்தைகள்,  அந்தி வேளையில் சரக்கு அங்காடியிலிருந்து திரும்பும் போலீஷ் நாட்டு இளம் வேலையாட்களுக்காகக் கருநீலக் கண்ணும் ரத்தச் சிவப்பில் உதட்டுச் சாயம் பூசிய அரை உயிரில் தழைத்திருக்கும் பெண்கள் போன்றவர்கள் ஏற்கனவே பாதி இறந்தவர்கள். நீண்ட நாளாகப் பார்க்காதிருந்த நண்பனை சந்திப்பவர்கள் போல அவசரக்குழியானாலும் பாந்தமாகப் படுத்துக்கொள்வர். நண்பர்கள் அப்படியல்ல. முழுமையாகக் குழிக்குள் போவதற்குள் நம் உயிரில் பாதியைக் கேட்பார்கள். என் தொழிலில் அப்படிப் பெயரற்ற வீடற்ற பலரை அடக்கம் செய்வதற்காக லண்டனின் பல இருள் சந்துகளில் அலைந்திருக்கிறேன். நானும் அப்படிப்பட்ட பொந்துகளில் வாழ்பவன் என்பதால் எவ்விதமான சங்கடமும் இருப்பதில்லை. அப்படி ஒரு சந்தைத் தேடி இறந்துகொண்டிருக்கும் நண்பன் ரபிக்கைப் பார்க்க ஆல்ட்கேட் பூங்கா வழியாகப் போய்க்கொண்டிருந்தேன்.

‘டீக்டாக் ப்ரதர், ஹேனா? ஐயம் ரேமா. மி மம் காட் நைன் சில்ட்ரன். ஜஸ்ட் லைக் யூ ப்ரதர்’

முதலில் குரல் வந்ததால் சட்டென ஒரு திருப்பத்தில் வந்த உருவம் என்னை அதிரச்செய்யவில்லை. அவனது முழு உதடும் உள்ளே மடங்கி ஓரம் மட்டும் முடிச்சு போட்டதுபோல தடித்திருந்தது. குளிர் இரவில் டாட்டூவை மட்டுமே சட்டையாகப் போட்டிருந்தான். ஏதோ பேசிக்கொண்டே அருகே வந்தான். அறிமுகத்திலேயே முழு சரித்திரத்தையும் சொல்லிவிட ஜிப்ஸிகளால் மட்டுமே முடியும். அவன் யாசித்து வந்தது ஒரு பைண்ட் பியராக இருக்கலாம். இல்லை உண்மையில் என் நிறத்தைப் பார்த்து என்னோட பேச வந்தவனாக இருக்கலாம். ஜிப்ஸிக்கள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர். அதனாலேயே சாக்லேட் நிற இந்திய வம்சாவழியினரை அவர்களுள் ஒருவராக நினைத்துக்கொள்வார்கள். என் குடும்பம் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் கதியவாரிலிருந்து உகாண்டாவுக்கு ரயில் கட்டப்போனது போல. இவன் எந்த ஊரில் என்ன கட்டினான் எனக் கேட்கலாம். அரை பைண்ட் வாங்கிக்கொடுத்தால் பேசுவான். இன்று நேரமில்லை.

“காட் வொர்க் மேட்”, என அவன் பக்கம் பார்க்காமல் நடந்தேன்.

“நீ எந்த நாட்டவன்?”, என அதிகாரமாகக் கேட்டான். அவன் தன் தோளில் இருந்த பைக்குள் கைவிட்டதும் நான் என் வேகத்தை அதிகரித்தேன். சட்டென ஒரு சந்துக்குள் நான்கைந்து நபர்கள் பேசிக்கொண்டிருந்த சிறு குழுவைத் தாண்டியபின் திரும்பிப்பார்த்தேன். அவன் என்னைப் பார்த்தபடி நின்றிருந்தான். நான் திரும்பிப்பார்த்ததும் தயங்கித் தயங்கி பூங்காவின் மறுபக்கம் சென்று மறைந்தான். இவனைப் போன்றோருடன் பல காலங்கள் லண்டனின் பொந்துகளில் வசித்திருந்தாலும் யார் எப்படி இருப்பார்கள் எனச் சொல்ல முடியாது.

கிழக்கு லண்டனில் முன்பு செழிப்பான பகுதி எனச் சொல்லத்தக்க ஆல்கேட், ரோமானிய ஜிப்ஸிக்களையும், பங்களாதேஷ் நாட்டவர்களையும் அரவணைத்தபிறகு விதியென அனுமதித்த ஆப்பிரிக்க குஜராத்திகளில் நானும் ஒருவன். இப்போது தரைக்கு மேலேயும் எட்டாம் உலகமே. கிழக்கு லண்டனின் ஆல்ட்கேட் கீழ்மைகளுக்கானப் புகலிடமாகவும் வீடற்றவர்களின் அடைக்கலமாகவும் இருக்கிறது.

என் சிறுவயது மிகவும் சந்தோஷம் நிரம்பிய நாட்களைக் கொண்டது. என் இன்றைய நிலைமைக்கு எவ்விதமான காரணத்தையும் அதில் தேடமுடியாது. சொல்லப்போனால் அந்த நினைவுகளில்லாமல் ஒரு நாளையும் என்னால் கடத்திவிட முடியாது. ரயில் டிப்போக்களில் இருள் வேளைகளில் திறந்திருக்கும் பெட்டிகளில் அடுக்கிவைக்கப்பட்ட சரக்கு மூட்டைகளுக்கு இடையே என்னைப் பொருத்திக்கொண்டு அந்த நினைவுகளை அசைபோடும் பல இரவுகள் உணவை மறக்க உதவியிருக்கின்றன. பதின்மவயது முடியும்வரை அன்னையின் கருப்பையைப் போல என்னைப் பாதுகாத்ததும் அவைதான்.

ப்ரிக் லேனுக்கு வந்த நாட்கள் முதலே கரித்துண்டும், வண்ணம் தோய்ந்த மரத்தூரிகையும் கைப்பழமாயிருந்தன. முதலில் நான் தங்கியிருந்த சரக்கு ரயில்களின் உள்சுவரில் அடிக்க ஆரம்பித்த கைகளுக்கு இடம் பற்றாமல் படங்கள் ரயிலுக்கு வெளியே பரவின. பெரும்பாலும் கெட்ட வார்த்தைகள் மிக அழகான வடிவங்களில் அடிப்பேன். என்னைக் கூட்டு சேர்த்துக்கொண்ட துருக்கி ஒருவன் காலிகிராஃபி தோற்றது என்றான். பிற பங்களாதேஷ் நாட்டவர்களிடம், ‘காலிபத்தின் அருள் நிரம்பப் பெற்றவன்’, என அறிமுகப்படுத்துவான். ‘ரபிக்கோட தோஸ்து, இன்னும் கறி அள்ளிப்போடு’, என சொல்லத்தொடங்கி எனக்கென ஒரு ஸ்பெஷல் பிரிக் லேன் கெபாப்களில் கிடைக்கும்.

ரபிக் வழியாக கிடைத்த கூட்டாளிகளில் எல்லா நாட்டவர்களையும் பார்க்கமுடியும். சரளமாக பத்துக்கும் மேற்பட்ட மொழியில் பேசி அறிமுகப்படுத்தியதுமே நெருங்கிவிடும் கலையை அவனிடமிருந்து நான் பெற்றேன். செவ்வாய், சனி இரவுகளில் பிரிக் லேனும், வுட்ஸ்டாக் வீதியும் இடைவெட்டும் சந்தில் பாதி இடிந்த நிலையிலான வாசலைக் கொண்ட வீட்டில் பூத்தொட்டியை மாற்றிவைக்க ரபிக் எனக்கு உத்தரவிட்ட நாளில் என் விதி மாறிவிட்டது என்பதை நான் உணரவில்லை. அங்கு தங்கியிருந்த ரஷ்யர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்த்தவர்கள் அல்ல என்பதையும் தாமதமாகவே உணர்ந்தேன். அப்படி பூந்தொட்டி புதிதாக மாற்றும் இரவுகள் அவர்கள் முழுவதும் விழித்திருந்து பவுடர் விநியோகம் செய்வார்கள் என்பதை ரபிக் சொல்லாவிட்டால் தவறவிட்டிருப்பேன்.

அடுத்தடுத்த மாதங்களில் பூந்தொட்டியை மாற்றும்போதெல்லாம் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்கும் சிறு பெண்ணுக்கு பூவை கொடுத்து சிரிக்கும்போது அது பிடுங்கிக்கொண்டு உள்ளே ஓடும். தொடர்ந்து அந்தக் குழந்தையும் பூந்தொட்டி மாற்றும் தினங்களில் எல்லாம் எனக்காகக் காத்திருக்கத் தொடங்கியிருப்பதைக் கதவைத் தட்டியவுடன் ஜன்னலருகே தெரிந்த அவளது தலை உணர்த்தியது. பூவை வாங்கியதும் தனது சிறு கால்களைக் கொண்டு வேகமாக உள்ளே இருட்டில் மறைந்துவிடும்.  அவளுக்கு நான்கு வயதிருக்குமா எனக் கேட்டபோது ரபிக் நானே ஆறு வருடங்களாகப் பார்த்து வருகிறேன் என்றான்.

அப்படி ஓடிய அழகைப் பார்த்து படியிறங்கிய நாளில் பச்சை கருப்பு சீருடை அணிந்த போலீஸார் என் வழியை மறித்து நின்றனர். அன்றும் அதற்கு அடுத்த ஏழு நாட்களும் என்னால் காவல் நிலைய அதிகாரிகளின் கால் பூட்ஸுகளை மட்டுமே பார்க்க முடிந்தது. எங்கெங்கோ கேள்விப்பட்ட போலீஸாரின் வன்முறையான விசாரணை முறை பற்றிய கதைகள் முழுமையாக நினைவுக்கு வந்தன. “இல்ல, எத்தனையோ சங்கடங்களைச் சந்தித்துவிட்டோம். மகனே, இது நம்மை வலுப்படுத்த மற்றுமொரு சோதனை”, என அப்பா கூறிய வார்த்தைகளை விழித்திருக்கும் நேரமெல்லாம் சொல்லிக்கொண்டேன். போலீஸார் என் மீது மூச்சுக்காற்றைக் கூட விடவில்லை. அடுத்த எட்டு நாட்களில் லேய்டன் காவல்கூடத்திலிருந்து வெளியே  வந்தேன்.

சாகக் கிடக்கிறான் எனக் கேள்விப்படும் வரை ரபிக்கை நான் பார்க்கவில்லை. கேள்விப்பட்ட நாள் முதல் நான் இருந்த சந்தில் அடைந்து கிடக்க முடியவில்லை. ரபிக் உடன் ஒன்றாகக் கழித்த நாட்களின் வறுமையும் மகிழ்வும் நினைவுக்கு வந்து என்னை அவனைத் தேடிக்கிளம்பவைத்தது.

ஆல்கேட் பூங்காவைக் கடந்தபோது இந்த இடம் மாறியிருக்கும் விதங்களை நினைத்து வந்துசேர்ந்தேன்.

முன்பிருந்த வீட்டை விட அழுக்கு மிகுந்த சிறிய அறையில் தங்கியிருந்தான். பிரிக் லேன் ஜம்மி மஸ்ஜித்-ப்ரிக் தர்காவுக்கு இடப்பக்கம் வரிசையாகக் கட்டப்பட்டிருந்த அடுக்ககக்கூட்டத்தின் பாய்லர் அறைக்கு மேலே ஒரு ஒடிசலான எலிப்பொந்து. கிழக்கு லண்டன் மண்ணுக்கு அடியில் எலிகள் உலகம் இருப்பது தெரியாத மக்களுக்கு இப்படிபட்ட வாழும் இடங்களும் தெரியாது. அங்கிருந்து கல்லெறி தூரத்தில் டவர் ஆஃப் லண்டன் இங்கிலாந்து கொடிதெரிந்தது. கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் அழுகிய பழ நெடி.

“ஹேம் ஷிவ், வா வா”, என கட்டிலை விட்டு எழ முயற்சித்தவன் மீண்டும் சரிந்து விழுந்தான். இடுப்பிலிருந்து கணுக்கால் வரை மாவுக்கட்டுப்போட்டுச் சுற்றியிருந்தது. அவனுடைய கழுத்து தொடர்பில்லாமல் ஆடிக்கொண்டிருந்தது. அரசு மருத்துவர்கள் கூட கைவிட்ட விஷ ஜூரம் என்றான். இருவாரங்களில் கால்நூற்றாண்டு வயதானவன் போலத் தோன்றினான்.

“குடிக்க பியர் இருக்கு. உள்ள போ”, எனக் கட்டையால் சமையலறை பக்கம் காட்டினான். ஓரிரு வார்த்தைகள் பேசவே சிரமப்பட்டவன் போலிருந்தான்.

சமையலறை என்பது அட்டைப்போட்டு ஒடுங்கியிருந்த அறையின் மூலை. காலையில் சாப்பிட்டு வைத்திருந்த சிக்கன் எலும்புகள் நீரில் மிதந்தன. கட்டிலுக்கு அருகே வந்து பார்த்தபோது அவனது உடலெங்கும் சூரியனின் கோடுகள். ஆஸிடின் நெடி அறையில். வார்த்தைகள் கோர்வையாக வர மறுத்தன. ஜூர அலைகள் அவன் கண்களில்

“நீ என்னைப் பார்க்க வரமாட்டேன்னு நினைச்சேன்”

நான் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். அவன் மீது கோபம் இருப்பதை அறிந்திருப்பான் என்றாலும் இந்த நிலையில் அதைப் பற்றிய அவனது குற்ற உணர்வை விவாதித்து ஆசுவாசத்தை வழங்கும் நிலையில் நான் இல்லை.

“நான் இந்த ஊருக்கு வந்த புதுசுல என்னென்ன நினைச்சேன் தெரியுமா”. நான் பியர் கோப்பைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டேன். சூடாக இருந்தது.

“ஒரு சின்ன கடை. பின்போர்ஷனில் வீடு. உகாண்டாவில் என் குடும்பம் வைத்திருந்த தானியக்கடை மாதிரி..”

அவனுடைய கற்பனையில் மட்டுமே இருக்கும் கடை பற்றி இத்தனை வருடங்களாகப் பேசிக்கொண்டிருப்பது ஆச்சர்யம். அந்த கனவை இன்னும் தக்கவைத்திருப்பது அதைவிட அதிகமான ஆச்சர்யம். ரபிக் மீண்டும் படுத்துக்கொண்டான். அவனது கால்கள் தன்னிச்சையாக ஆடிக்கொண்டிருந்தன. மதிய நேர வெக்கை இருவரது கழுத்தில். ஈரத்துணியால் உள்ளங்கையை துடைத்தபடி படுத்திருந்தான். கால்கட்டிலிருந்து ரத்தம் ஊறிய அடையாளம் தெரிந்தது.

“நீ பேசாம ரெஸ்ட் எடு”, என அவனது பேச்சைத் தடுத்தேன்.

“இல்ல ஷிவ், நான் உளறுவதாக நினைக்காதே. அல்லா சத்தியமா, சத்தியமா நான் தெளிவாக இருக்கிறேன்”. அவன் நாக்கு குழைந்தபடி இருந்தாலும் அவன் குரலில் ஒரு வைராக்கியம் தெரிந்தது. விட்டத்தைப்பார்த்தபடி தொடர்ந்தான்:

மூன்று மாதங்களுக்குள் ஊரை காலி செய்யவேண்டும் என அரசு உத்தரவு. நாங்க இருந்தது டோரோரோ.  கிட்டதட்ட ஒரு சின்ன நகரம். உகாண்டாவிலேயே பெரிய ஊருன்னு சொல்லலாம். ஆப்பிரிக்க அரசு அலுவலில் அப்பாக்கு வேலை. அவருக்கு வேலை செய்யுமளவு மொழி தெரியும். தினப்படி சந்திக்கிறவங்கள்ல பலரும் குஜராத்திகள் என்பதால் மொழி பிரச்சனையில்லை. குஜராத்தி முஸ்லிம்களில் படிச்சவங்க குறைச்சல். எங்க குடும்பம் மாதிரி ஒருசிலர் மசூதியில் சந்திப்பேன். மிச்சவங்கெல்லாம் ரயில் கம்பனியில் கரியெடுக்கவும்,மலையில் கல்லு உடைக்கவும் இந்தியாவிலிருந்து வந்தவங்க. அவங்களோட பேசக்கூடாது என சின்ன வயசிலேயே தெரிஞ்சிகிட்டேன். டர்பனோட அப்பா ரோட்டில் நடந்தா அவங்க கண்ணு இயல்பா அவரைத் தொடரும். எதேச்சையாக இவரது கண்ணைச் சந்தித்தா தலையைத் தாழ்த்திப்பாங்க. அப்பா பின்னாடி நானும் அம்மாவும் நடந்துபோகும்போதுதான் அவங்க அப்பாவை எப்படி பாக்கறாங்கன்னு தெரியும். யூரோப்பா டவுனுள்ள இருந்த ஆபிஸுக்குப்போகும்போது அப்பாவும் நாங்களும் ரொம்ப அமைதியா ஆகிடுவோம்.

முக்காவாசிப்பேரு கண்ணுல உயிரே இருக்காது, எங்களை மாதிரி இந்தியர்களைப் பார்த்தா ஒரு வெறுப்பு தெரியும். ஆனா அல்லா எல்லாரும் ஒரே அளவுகோலை வெச்சிருக்கான். தொன்னூறு நாளிலே ஊரை காலி செய்யணும்னு இடி அமீன் தாதா சொல்லிட்டான். அவன் கனவுல வந்த அல்லா அப்படி சொல்லிட்டாரு பார்த்துக்க. எங்க அப்பா ஒல்லியா நரம்புச்சுருள் மாதிரி இருப்பார். அன்னிக்கு சாயங்காலம் வீட்டுக்கு வந்தவர் எப்படி எங்க போகப்போறோம்னு சொல்லச் சொல்ல நான் அவரோட கழுத்து சங்கு மேல கீழ ஏறி இறங்கறதையே பார்க்கிறேன். அப்போ எனக்கு பன்னிரெண்டு வயசிருக்கும். அப்பா ஆற்றாமை தாங்காம வர்ற அழுகைய கட்டுப்படுத்தி சொல்லச் சொல்ல எனக்குக் கோபம். அப்படியே இடி அமீன் கழுத்த அறுக்கிற ஒரு வேகம். அம்மா, ‘அல்லா, அல்லா’ எனத் திரும்பத் திரும்ப சொல்றாங்க தவிர வேற பேச்சே இல்லை. எத்தனை திடகாத்திரமான பொம்பிளை இப்படி மூளை பிசகினவங்க மாதிரி புலம்பறாங்கன்னு பார்க்கப்பார்க்க கோபமும் வேகமும் அதிகரிக்குது. மதியம்தான் டெய்லர் கடை வெச்சிருந்த அஷின் அண்ணே ஆளு சேர்க்கிறோம் வர்றியான்னாரு. ஆசை இருந்தாலும் அப்பாவுக்கு பயந்து அவர் கடைபக்கம் போறதையே நிறுத்திகிட்டேன்.

அன்னிக்கு இரவு யாருக்கும் தூக்கம் இல்லை. தூரத்தில துப்பாக்கி சத்தமும் மிலிட்டரி வண்டி அணிவகுப்பும் கேட்டபடியே இருந்தது. ரெண்டு வீடு தாண்டியிருந்த பிஸ்வாஸ் குடும்பம் எங்க வீட்டுக்கு அடைக்கலம் புகுந்தனர். யாரும் வெளியே எட்டிப்பார்க்கவில்லை. ஒன்றுக்கு ரெண்டு தாள் போட்டுக்கொண்டு ஒரே அறையில் உட்கார்ந்திருந்தோம். பெண்களை மட்டுமல்ல கிழவிகளைக் கூட விட்டுவைக்காமல் கற்பழிக்கிழார்கள் எனவும் பதினைந்து வயதுகூட முடியாத கருப்பு இளைஞர்களில் அதிகக் கொலை செய்பவர்களுக்கு பணம் தருவதாக இடி அமீன் சொல்லியிருப்பதாகக் கதைகள். பலவிதமான கதைகள்.

மார்க்கெட் தெரு முழுவதும் காலியாகிவிட்டது. டோரோரோவிலிருந்து நான்குமணிநேரத்தில் இருக்கும் ரயில் நிலையத்துக்குப் போகும்வழி முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் மூட்டை முடிச்சுகளோடு செல்கிறார்கள். நேற்று பிறந்து குழந்தை முதல் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வயதானவர்கள் வரை எல்லாரும் உயிருக்கு பயந்து செல்கிறார்கள். இதை பக்கத்துவீட்டு அப்துல் சொன்னபோது நம்பமுடியாமல் உட்கார்ந்திருந்தோம். மார்க்கெட் தெருவைச் சுற்றி மட்டும் ஐயாயிரம் வீடுகள் இருக்குமே. அத்தனைபேரும் ரயில் ஏறி துறைமுகத்தை அடைவதெப்படி? இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் கொடூரங்களை யாரும் நினைவூட்டவில்லையே தவிர அந்த சிறு அறைக்குள் அதை மண்டைக்குள் ஓட்டிப்பார்க்காதவர்களே இல்லை.

“கடைசியில இங்கையும் ஓட்டமா, ஓட்டமா சொல்லுடா நஃரூப், ஐயோ ஓடணுமா?”, என்னோட பாட்டியோட புலம்பல் மட்டும் தொடர்ந்து இரவெல்லாம் கேட்டபடி இருந்தது. பாட்டியின் மண்டையில் கட்டையால் அடித்துவிடலாமா என நான் கேட்டபோது அப்பா ஒரு கணம் அதிர்த்தவர் போல என்னைப் பார்த்தார். நானும் சின்ன தங்கச்சியும் மட்டும் அப்போது சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அவளுக்கு ஆறு வயசு. பசியை பயம் போக்கிவிடமுடியுமா. என்றைக்குமில்லாதளவு மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு முடித்தாள் தங்கச்சி. அவள் சுரண்டிச்சாப்பிட்டத் தட்டை கையில் பிடித்த அம்மா கேவிகேவி அழத்தொடங்கினாள். இதற்காகவே காத்திருந்ததுபோல எல்லார் வாயில் பெரும் கேவல் பிறந்தது. யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த நேரத்தில் என் உடல் தனியாகவும் நினைவு வேறொன்றாகவும் இரண்டாய் பிரிந்தது. சுண்டிவிட்டது போல ஒரு சொடக்கில் நான் அந்த நிலத்திலிருந்தும் சொந்தங்களிலிருந்தும் பிரிந்துவிட்டேன். அடுத்தடுத்த நாட்கள் நடந்தவை யாருக்கோ ஆனதுபோலத் தோன்றியது. நான் தன்னிச்சையாக ஆனேன். சரசரவெனப் பரவிய அழுகல் வாடை ஈக்களைக் கூட்டமாக ஈர்ப்பது போல பயம் ஒரு வாடையானது. குஜராத்தி ஹிந்துக்கள் முதலில் ஊரைவிட்டு விலகத் தொடங்கினர். அடங்காத பசி போல பயம் மேலும் மேலும் தன்னையே உண்டு செரித்துக்கொண்டிருந்தது.

நாங்கள் கிளம்ப முடிவெடுத்தபோது ஒரு வார அவகாசம் மட்டுமே இருந்தது. பாட்டியும் அம்மாவும் இறந்துபோயிருக்கு நானும் தங்கச்சியும் நைரோபிக்கு ரயில் பிடிக்கச் சென்றோம். எங்க தாத்தா கட்டியிருந்த ரயில் மேடை உட்காரமுடியாதபடிக்கு பாறைக்கற்களால் குவிந்திருந்தது. பத்து ரயில்கள் வந்தாலும் முழுவதுமாக அள்ளிப்போகமுடியாதபடி கூட்டம். ரயில் வந்துகொண்டிருக்கும் செய்தி அழுகல் வாடையோடு வாடையாகக் காற்றில் கலந்திருந்தது. ரயில் மேடையில் காத்திருக்கும் நேரத்தில் நான் செல்லும் திசையில் எனது கடையைக் கட்டிவிட்டிருந்தேன். இறுக மூடினாலும் வெளிச்சத்துக்குக் குறைவிலாத விசாலமான மடக்கு ஜன்னல்களுடன். அழகழகான துருக்கி கம்பளங்களுடன், ஷரீஃப் ஈ மதீனா சன்ஸ் என தாத்தா காலத்துக் குடும்பக் கடைப் பெயர் பலகையுடன். கடையின் மேலே உயர தூண்களில் பெரிய ஒலிபெருக்கிகளும் கொடிகளும் எட்டுதிசையில்.

வழி நெடுக பரதேசிக்குரல்களும் ஆதரவற்ற கதறல்களுமாக அந்த ரயில் கடந்தது. நான் அவர்களிடமிருந்தும் விலகிப்போக விரும்பினேன். கப்பலில் ஏறுவதற்காகக் காத்திருக்கும்போது நான் முழுவதுமாக விலகியிருந்தேன். அந்த நினைப்பை அசைபோட்டபடி துறைமுக காத்திருப்பு அறைக்கு வெளியே பொதிமூட்டைகளுக்குப் பக்கத்தில் நின்றபடி கடலையும் கரையின் ஆரவாரத்தையும் பார்த்திருந்தேன். கறுப்பின மக்களின் சிரிப்பொலிகளுக்கு இடையே சண்டையும் தீரா வசவுகளும் காற்றில் கலந்திருந்தன. அவர்கள் பேசிய வசவுச் சொற்கள் மெல்லிய குறுகுறுப்பைத் தந்தன. கண்ணாடித் தடுப்பு வழியாகத் தெரிந்த என் மக்கள் கூட்டம் ஓலத்தை விழுங்கியவர்கள் போல அலைபாயும் கண்களோடு உட்கார்ந்திருந்தனர். பலருக்கு குரல் எழும்பாமல் உள்ளே அமுங்கியிருந்தது.ஏதோ ஒரு குரல் வந்து, ‘நீங்கெல்லாம் திரும்ப உங்க வீட்டுக்குப் போயிடலாம்’ எனும் கட்டைளையை எதிர்பார்த்துப் பலர் காத்திருந்தனர். திரும்பிப் போனாலும் எதுவும் தமதில்லை எனும் நினைப்பு இருந்தபோதும். இருந்தபோதும். இது நமது நிலம். நான் தங்கையின் விரலை மேலும் இறுகப் பற்றினேன்.

கடலின் நாவு போல கப்பல் கிழித்துக்கொண்டுவந்தது. நங்கூரமிட்டு நின்றிருக்கும் வரை நான் கண்கொட்டாமல் பார்த்திருந்தேன். பாய்ந்து சென்று ஏறிவிடத் தூண்டும் தோற்றமுடையதுதான். கண்ணாடித்தடுப்புக்கு உள்ளே ஆரவாரம் பிய்த்துக்கொண்டது. அந்த கூட்டத்தில் என் அம்மா பாட்டி என எல்லாரையும் பார்த்தேன். என் தங்கையும் அதைப் பார்த்துவிட்டவள் போல பிடித்திருந்த என் கையை சொடுக்கினாள். சற்று முன்னகர்ந்தவள் முகம் பதித்த கண்ணாடித் தடுப்பில் கன்னங்களை வைத்துத் தேடினாள். அவளது முகத் தடம் ஈரமாகக் கண்ணாடியில் ஒட்டியது. (கண் தெரியாதவன் அழுவதுபோல விழிமேலே குத்தியிருக்க அதில் நீர் வழிந்தபடி சொன்னான் ரபிக்)

“ரபிக், நீ தூங்கு. உடம்பு அனலாய் கொதிக்குது. நான் மாத்திரை ஏற்பாடு செய்கிறேன்”, என எழ முற்பட்டேன்.

அவன் நான் பேசியதையே கேட்காதவன் போலத் தொடர்ந்தான்:

கப்பல் கிளம்பும்போது பொருளற்ற கூச்சல்கள் கரையை நோக்கிப் பாய்ந்தன. பலர் தங்கள் இஷ்ட தெய்வங்களைத் தொழுதபடி மேல்தளத்தில் சுருண்டு கிடந்தனர். ஒரு முஸல்மான் கிழவி தான் கொண்டுவந்திருந்த மூட்டைமீது சாய்ந்தபடி கண்ணை மூடிக்கிடந்தாள். நான்கு நாட்களுக்குப்பிறகும் அவள் குந்தியநிலையில் கிடந்ததை கவனிக்க யாருமில்லை. எங்கள் கப்பல் எங்கே போகிறது என்றுகூட யாருக்கும் தெரியவில்லை. இங்கிலாந்துக்குச் செல்வதாக ஒரு வதந்தி இருந்தாலும் அத்தனை தூரம் செல்லும் துணிவு பலருக்கும் இல்லை. நான் இந்தப் பயணம் முடிவடையக்கூடாது எனும் ஏக்கத்தில் கிடந்தேன். இனி எந்தவிதமான நிலத்தையும் கண்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு முறை வந்துவிட்டவனை மீண்டும் மீண்டும் தூண்டுவதற்கான மந்திரம் கொண்டது கடல் என தங்கைக்குக் கதை சொன்னேன். அப்பா கொடுத்த காசு அத்தனையையும் சாப்பாடாக மாற்றியிருந்தோம் நாங்கள். கழிப்பறையிலும் இரவில் இருளிலும் யாருமற்ற நேரத்திலெல்லாம் அவள் சாப்பிட்டபடியே இருந்தாள்..நாங்கள் இங்கு சேரும் வரை..

சட்டென பேச்சை நிறுத்தியவன் “உங்கிட்ட ஒரு வேலை சொல்லணும்” என்றான்.

“என்னது?”, ஒரே சீராகச் கேட்டுவந்தவன் சட்டென கண்ணைத் திறந்துப் பார்த்தேன்.

“உங்கிட்ட ஒரு வேலை சொல்லணும்..கடைசி வேலை”

ரபிக்கின் முகத்தில் துயரத்தின் சாயை முழுவதுமாகப் படிந்திருந்தது. நான் அவனது தங்கை பற்றி கேட்க நினைத்தேன். இதுவரை அவளைப் பற்றி அவன் சொன்னதேயில்லை.

“சொல்லு”, எனக் காத்திருந்தேன்

ரபிக் கண்களை மூடித் திறந்தான். அவனது உடல் தன்னிச்சையாகத் தூக்கிப் போட்டபடி இருந்ததைக் காணமுடியாமல் அழுகையைக் கட்டுப்படுத்தினேன்.

எதிர்பாராத நொடியில் சட்டென நகர்ந்து என் அருகே வந்தான்.

“அந்த வீட்டுக்குத் திரும்பப் போகணும்.”

அவன் எந்த வீட்டைச் சொல்கிறான் எனத் தெரிந்தும் நான் பதில் சொல்லாமல் இறுக முகத்தை வைத்திருந்தேன்.

“அந்த பொண்ணை காப்பாத்தணும்”

ஏறிவிட்ட வைராக்கியத்தோடு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். இடுப்பை உந்தி உந்தி நகர்ந்தவன் பழைய மாதிரி உட்கார்ந்துகொண்டான்.சூரியன் சோம்பத்தொடங்கியிருந்தது. கண்களில் இமைகளைச் சுற்றி ஈரம் கசிந்து கிடந்தான் ரபிக்.

அன்றைக்கு இரவு மீண்டும் ரபிக் நினைவுக்கு வந்தான். கொஞ்சம் போல காய்ந்த ரொட்டியும் சூடான சிக்கன் சூப்பும் நான் அவனுக்கு ஊட்டிவிட முயன்றேன். சிறு குழந்தைக்கும் போதாத அளவு சாப்பிட்டான். மீதி அவன் கழுத்தில் வழிந்து மார்பில் ஒட்டியிருந்தது.

“இந்தளவு இருட்டு மசாகாவில் என்றுமே கிடையாது தெரியுமா? ஆமாம். இந்தளவு குளிரும் கூடக் கிடையாது. அந்த ரஷ்யப்பெண் என்னை வந்து பார்த்தாளா?”

அழிவோ தேய்வோ இல்லாதது ரபிக்கின் ஞாபகம் எனும் நினைப்பை நான் கைவிட்டேன்.

“ரஷ்யப்பெண்ணுக்கு நீ இருக்கும் இடம் தெரிந்தாலும் ஆறு வயதுப்பெண் வரமுடியுமா?”

“ஏன் இதுக்கென்ன? நடந்தா அரை மைல் தூரம் கூட இருக்காது. பிஸ்மில்லா மசூதி கூட எத்தனை பக்கத்தில் இருக்கு”

ரபிக் இன்னும் பழைய வீட்டில் இருப்பதாக நம்புகிறான்.

“அந்தப்பெண்ணை நீ போய் பார்க்கணும். இன்னும் கொஞ்ச நாளில் அவ காணாமப்போயிடுவா. நான் சொல்ற இடத்துக்கு அவளைக் கூட்டிவிடணும்”

நான் எழுந்து சமையலறை இருந்த மூலைக்குச் சென்றேன். கெட்டிலில் ஆறியிருந்த நீரைக் கொட்டிவிட்டு மீண்டும் நிரப்பினேன். அடியிலிருந்து வண்டலாக வெள்ளைச் சுண்ணாம்பு கட்டிகட்டியாக வெளியேறியது. அதை அப்படியே வைத்துவிட்டு கட்டிலுக்குத் திரும்பினேன்.

“என்ன ஷிவ், அந்த வீடு மறந்திடுச்சா?”

“இல்லை. ஆனா நான்  திரும்பவும் அங்க போகமாட்டேன்”

“இந்த ஒரு தடவை மட்டும் செஞ்சிரு.”, ரபிக் சில நொடிகள் மெளனமாக இருந்தான். “எனக்கு அவளைப் பார்க்க வேணும் போலவே இருக்கு ஷிவ்”. அவன் மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டான்.

ஒரு பழைய கனவு துல்லியமாக மீண்டு வந்தது போல அவன் நிதானமாக அவன் கட்ட நினைத்த கடையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான்.

அடுத்த நாள் ப்ரிக் லேனுக்குப் போகும்போது நான்கைந்து வீதிகள் சுற்றிவிட்டு லிவர்பூல் தெருவின் துருக்கிக் கடைகளின் வழியே சென்றேன். மீண்டும் அந்த வீட்டுக்குச் செல்லவேண்டும் எனும் நினைப்பு பாறாங்கல்லாகக் கனத்தது. சில வருடங்களாகவே புழங்கிய பகுதிதான் என்றாலும் வழி மறந்தவன் போல சுற்றிவந்தேன். ரபிக் அடையாளம் காட்டியதால் இரவு நேரங்களிலும் சிக்கலில்லாமல் எங்காவது ஒதுங்கிக் கொள்ள அவனது நண்பர்கள் இடம் கொடுத்திருந்தனர். செயிண்ட் போட்டாஃப் பூங்காவுக்குள் எத்தனை முறை நடந்தாலும் ஆங்காங்கு அடைக்கலம் கொடுத்தவர்களே நினைவில் தங்கினர். கடைசியாகத் தங்கியிருந்த ஈஸ்ட்கோட் லேனுக்குள் நுழையும்போது மனம் பாரத்தைத் தாங்கமுடியாததாக ஆனது. இந்த வீதியில் இருந்த வீடற்ற பலரது பிணங்களை அப்புறப்படுத்த பலமுறை கவுன்சில் கல்லறைக்குச் சென்றிருக்கிறேன். எவ்விதமான சலனமும் இல்லாது அநாதரவற்ற உடல்களை கவனித்துக்கொள்ளும் குழுவுக்கு உதவி எரித்து கிடைத்த பணத்தில் உண்டிருக்கிறேன். வெள்ளத்திலும், கடும்பனியிலும் அரைகுறையாகக் கிடந்தவர்களைக் கூட நாங்கள் தூக்கிச் சென்றிருக்கிறோம். இப்போது அந்த மன அமைதி இல்லை.

அந்த இடத்துக்கு வந்துவிட்டாயிற்று. விசாலமான, பகட்டான நவீன கட்டடங்கள் நாற்புறமும் காணப்படுகையில் இந்த விடுதி மட்டும் புதர்களுக்கும், தன்னிச்சையாக வளர்ந்த செடி கொடிகளுக்கும் மத்தியில் இருந்தது. பயத்தோடு போகும்போதும் சுற்றுப்பார்வை எத்தனை துல்லியமாக இருக்கிறது என்பது ஆச்சர்யம் தான். வெளியே பூந்தொட்டி இல்லை. கதவுக்கு வெளியே செடிகளுக்குப் பக்கத்தில் மர நாற்காலிகள் ரெண்டு மடித்து வைக்கப்பட்டிருந்தன. கதவு நிறத்துக்குப் பொருத்தமான நிறங்களில். சில வாரங்களுக்கு முன் போலீசாரால் ரெய்டு செய்யப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை. உள்ளே ஆள் நடமாட்டம் இருப்பதாகவும் தெரியவில்லை. உண்மையில் இந்த வீட்டுக்குத் தான் வந்தேனா எனச் சந்தேகம் ஏற்பட்டது. நான் வந்தது உண்மைதான். அது கனவல்ல. ஒரு வாரத்துக்கும் மேலாக விசாரிக்கப்பட்டதும் நடந்ததே. சந்தேகமில்லை. சிறிது நேரம் வீட்டைச் சுற்றி வந்தபின் பெல்லை அழுத்தினேன். யாரும் திறக்கவில்லை. ரெண்டாம் முறை முயலவில்லை.

மீண்டும் ஈஸ்ட்கோட் லேன். உண்மையில் லண்டனுக்கு வந்த பல இரவுகளில் நாம் இரகசியமாக விம்மி விம்மி அழுதிருக்கிறேன். பலமுறை இங்கிருந்து ஓடிப்போக வேண்டும் என்றிருக்கிறது.ரபிக்கை சந்தித்த முதல்முறையும் தப்பிப்போகும் எண்ணத்துடனே நான் இருந்தேன். அந்த எண்ணம் இப்போது  வீதியில் நடக்கும்போது ஒரு கடும் வாசனை போல என்னைச் சுற்றிக்கொள்கிறது. வேகமாகச் சென்று ரஷ்யனின் வீட்டுக்கு முன்னே மீண்டும் நின்றேன். எப்படியேனும் அந்தப் பெண்ணைக் காப்பாற்றியே ஆகவேண்டும். ரபிக் பிழைக்கமாட்டான் என்றாலும் அவன் தெரிந்துகொள்வான்.

மீண்டும் கதவைத் தட்டினேன்.

மாலை வீட்டுக்கு வந்தபோது ரபிக் முழுவதுமாக மயக்க நிலையில் இருந்தான். வெளிறிய முகம் சோகையை அப்பியிருந்தது. அவனது கண்கள் அவளை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டாயா எனக் கேட்டன.  “அந்தப் பெண் அங்கு தான் இருந்தாள். இப்போது அரசின் குழந்தைகள் சீரமைப்புக் குழு பாதுகாப்பில் அந்த வீடு வந்துவிட்டது”, என்றேன். நான் அருகே சென்று அவனது தலையைக் கோதினேன். ஐம்பது வயது எனச் சொன்னாலும் யாரும் நம்பமுடியாத தேகம் நைந்துபோன நாரைப்போலக் கிடந்தது. இன்னும் சில மணிநேரங்கள் தான். இரவு கவிவதற்காகக் காத்திருந்தேன்.

அதுவரை ரபிக் கண்மூடிக் கிடப்பான். அவனது கடையை நான் பார்த்துக்கொண்டிருப்பேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.