புகைப்படங்களின் கதைகள்

நாராயண் ராவுக்கு பூர்ணாபிஷேக சாந்தி. அவரது வயது நூறுக்கும் மேலே என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும். பிறந்த தேதி அவருக்கு நினைவில்லை. பிறந்த வருடம் நிச்சயம் 1916க்கு முன்புதான். மகன், மகள்களுக்கே பீம ரத சாந்தியெல்லாம் கழிந்து நான்கைந்து வருடங்கள் ஆகப்போகின்றன. பேரன் பேத்திகள் கொள்ளுப் பேத்திகளுக்கு இருந்த பரபரப்பில், அவர்களுக்கு இருந்த வாழ்க்கைப் போராட்டத்தில், நாராயண் ராவின் வயதைப் பற்றியே மறந்திருந்தார்கள். திடீரென்று ஒருநாள் அவருக்கு வயது நூறுக்கு மேல் ஆகிவிட்டதாகவும், பூர்ணாபிஷேக சாந்தி எப்போதோ செய்திருக்கவேண்டும் என்றும் இப்போதாவது செய்வோம் என்றும் முடிவெடுத்தார்கள். அவர் பிறந்த நட்சத்திரத்தையும் மாதத்தையும் ஒருவாறாகக் கணக்கிட்டு இன்னும் சில நாள்களில் பூர்ணாபிஷேக சாந்தி என்று முடிவு கட்டினார்கள்.

நாராயண் ராவ் திருநெல்வேலியில் தன் மூத்த மகனின் வீட்டில் தங்கி இருந்தார். மூத்தமகன் தனது மகன் வீட்டில் தங்கி இருந்தார். அப்படிப் பார்த்தால் நாராயண் ராவ் தன் பேரன் வீட்டில் தங்கி இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தப் பேரனுக்கே ஐம்பது வயதுக்கு அருகில் இருக்கும் என்பதையும் இவரது மகன் கல்யாணத்துக்கு நிற்கிறான் என்பதையும் இப்போதைக்கு விட்டுவிடலாம். நாராயண் ராவின் மனைவி இறந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. தன் மனைவியின் முகம் கூட சில சமயங்களில் அவருக்கு நினைவுக்கு வராது. அது அவருக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த வாழ்க்கையின் பொருள் என்ன என்ற சந்தேகம் எல்லாம் அவருக்கு வந்து, நாம் வாழ்வதற்கு என்ன அர்த்தம் என்பதில் கடும் மனக்குழப்பம் வந்து, இவற்றிலெல்லாமும் ஒரு சலிப்பு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது.

விலங்குகள் வாழும் காட்டைப் போல மனிதர்கள் என்பவர்கள் வாழும் ஒரு வகை இடம் இந்த உலகம் என்பதே அவருடைய முடிவாக இருந்தது. இந்த ஒட்டுமொத்த வாழ்க்கையை அவர் இப்படித்தான் தொகுத்து வைத்திருந்தார். யாரைப் பார்த்தாலும் எதோ ஒரு விநோதமான மனித உயிரைப் பார்க்கிறோம் என்பதைத் தாண்டி அவருக்கு எதுவும் தோன்றுவதில்லை. எதைப் பற்றிக் கேள்வி கேட்டாலும் இன்னும் நூறு வருடங்களுக்குப் பின்பு இதற்கெல்லாம் என்ன மதிப்பு என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.

காதும் கண்ணும் இன்னும் நன்றாகவே இருக்கிறது என்பதை அவராலேயே நம்பமுடியவில்லை. நான்கு நாள்களுக்கு முன்பு கொள்ளுப்பேரன்களில் ஒருவனை அழைத்து தூரத்தில் என்னவோ மின்னுது பாரு என்று அவர் சொன்னார். அவர் சொல்வதை கஷ்டப்பட்டுப் புரிந்துகொண்டு அங்கே சென்று அந்தக் கொள்ளுப் பேரன் பார்த்தபோது ஊசி ஒன்று அங்கே இருந்தது. அதை எடுத்துகொண்ட அந்தப் பேரன் தன் மனைவியைத் திட்டிக்கொண்டிருந்தான். எப்படி அந்த ஊசி அங்கே வந்தது, குழந்தைகள் கையில் (அதாவது எள்ளுக்குழந்தைகள்) கிடைத்தால் என்னாவது என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தான். அந்தப் பேரன் பெயரை நான்கு நாளாக நினைவுக்குக் கொண்டுவர முயன்று தோற்றுப் போய் அது வெட்டி வேலை எனக் கைவிட்டிருந்தார் நாராயண் ராவ். யாரையாவது கூப்பிடவேண்டும் என்றால் லோய் என்று அழைப்பதே அவரது வழக்கமாக இருந்தது.

அவருக்கென ஒரு கட்டில் போட்டுக் கொடுத்திருந்தார்கள். எலும்பும் தோலுமாக எஞ்சியிருக்கும் அவரது உடலுக்கு வலிக்கக்கூடாது என்று அதில் ஒரு மெத்தையும் இருந்தது. அந்த அறையிலேயே குளியலறையும் கழிப்பறையும் சேர்ந்தே இருந்தன. குழியலறைக்குள் சென்று கதைவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஒருதடவை குளித்தபோது அவரால் கதவைத் திறக்கமுடியாமல் போய்விட்டது. வீடே களேபரம் ஆகிவிட்டது. அவர் அப்படியே அந்தக் குளியறையில் படுத்துக்கொண்டுவிட்டார். ஆசாரி ஒருவரைக் கூட்டிக்கொண்டு வந்து தாழ்ப்பாளை உடைத்துத் திறந்தார்கள். மகனின் மருமகள் சத்தம் போட்டார். இவருக்கு எத்தனை வயது இருக்கும் என்று சொல்லிக் குழப்பப் போவதில்லை. நீங்களே ஒருவாறாக இனி யூகித்துக்கொள்ளுங்கள். தாழ்ப்பாள் போடவேண்டாம் என்றால் அவர் கேட்பதில்லை. அன்றிலிருந்து அவரது அறை, குளியலறை என எல்லா இடங்களிலும் உள்ள தாழ்ப்பாளை எடுத்துவிட்டார்கள். இது நடந்து எத்தனை வருடம் ஆயிற்று என்பதுகூட அவருக்கு சரியாக நினைவுக்கு வரவில்லை. அன்றிலிருந்து எல்லாமே திறந்த கதவுகளுடன்தான்.

மலர்கள் உதிர்ந்த ஒரு நாரைப் போல கட்டிலில் படுத்திருப்பார் நாராயண் ராவ். வரையப்பட்ட சில கோடுகள் போல அவரது மார்பெலும்புகள் தெரியும். வயிறு ஒட்டிக் கிடக்கும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நாவிதர் வந்து தலையை ஒட்ட வெட்டிப் போவார். முடி லேசாக வளர்ந்து குத்திக்கொண்டு நிற்கும். நாளிதழ் படிக்கும்போது கண்ணாடி போட்டுக்கொள்வார். கண்ணாடி கையில் கிடைக்கவில்லை என்றால் அப்படியே தட்டிமுட்டிப் படித்துவிடுவார். பேரனோ பேத்தியோ வந்து நேரம் இருக்கும்போது கண்ணாடியைத் தேடித் தருவார்கள்.

நன்கு உறங்கிக்கொண்டிருக்கும்போது விலகிக் கிடக்கும் வேட்டியை யாரோ வந்து சரி செய்துவிட்டுப் போவதை அவர் உணர்வார். கண்ணைத் திறக்காமல் மனதுக்குள்ளேயே நன்றி சொல்லிக்கொள்வார். இந்த உலகத்தில் மறைக்கவே தெரிவிக்கவோ ஒன்றும் இல்லை என்று அவருக்கு அப்போது தோன்றும். கன்னம் டொக்கு விழுந்து விட்டதை அடுத்து கண்ணாடி பார்ப்பதை நிறுத்திவிட்டார். முடியை வெட்ட நாவிதர் வரும்போது விடாப்பிடியாக கண்ணாடியை முகத்தில் காட்டிபெருசு, சரியா இருக்காஎன்று கேட்பார். அவர் வேகவேகமாகத் தலையை ஆட்டுவார். மற்ற சமயங்களில் அவர் கண்ணாடி பார்ப்பதில்லை.

வீட்டுக்குள் நடப்பதைப் பராக்கு பார்ப்பதிலேயே அவரது ஒவ்வொரு நாளும் கழிந்துகொண்டிருந்தது. எந்த வகையிலும் தொடர்பற்ற ஒரு மேடை நாடகம் நடந்துகொண்டிருப்பதைப் போலவே இருக்கும் அவருக்கு. அறைக்கு அந்தப் பக்கமும் இந்தப்பக்கமும் இருந்து எதாவது பேச்சு அவர் காதில் விழுந்துகொண்டே இருக்கும். எதையும் காதுகொடுத்துக் கேட்கமாட்டார். கேட்டாலும் புரியாது. ஏன் சம்பந்தமில்லாமல் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என நினைத்துக்கொள்வார். நம் காலத்தில் தான் இப்படி இந்த அளவுக்குப் பேசிக்கொண்டே இருந்தோமா என யோசித்துப் பார்த்தார். தன் மனைவி நினைவு வந்தது. அவள் முகம் ஏன் தனக்குச் சட்டென நினைவுக்கு வரவில்லை என்று யோசித்தார். குழந்தைகளின் நினைவு வந்தது. அந்தக் குழந்தைகள்தான் இப்போதும் தன் மகனும் மகளும் என நம்பவே ஏமாற்றமாக இருந்தது. ஏன் உலகம் அப்படியே நின்றுவிடவில்லை என்று வருத்தப்பட்டுக்கொள்வார்.

எப்போது முடியுமோ அப்போது காலையில் எந்திரிப்பார். மகனோ கொள்ளுப் பேத்தியோ வந்து வாய் கொப்பளிக்க நீர் கொடுத்து ஒரு தட்டில் அவர் துப்புவதை வாங்கிக் கொண்டு போய்க் கொட்டிவிட்டு, தட்டைக் கழுவி வைத்துவிட்டுப் போவார்கள். பின்பு ஒரு டம்பளர் காப்பி வரும். காலையில் ஒரு இட்லியோ ஒரு தோசையோ சாப்பிடுவார். மதியம் ஒரு கை உணவு உண்பார். சாதம் நன்கு குழைந்திருக்கவேண்டும். நன்கு மசித்த காய் எதாவது தொட்டுக்கொள்ள இருக்கும். சாம்பாரோ குழம்போ ஊற்றிக்கொள்வார். ஒரு டம்ப்ளர் மோர் சாப்பிடுவார். அவ்வளவுதான். இரவு சூடாகப் பால். நினைத்தபோதெல்லாம் தூங்குவார். என்ன யோசிப்பது என்றே யோசித்துக்கொண்டிருப்பார். அப்படியே பொழுதும் நாளும் கழியும்.

காலையில் எழுந்தவுடன் மலம் கழிப்பதில் சிரமம் இருந்தது. நான்கைந்து நாள் போல போகவே போகாது. ஒருதடவை மலம் கட்டிப்போய் இருந்தது. கஷ்டப்பட்டு முக்கியதில் பின்பக்கத்தில் பாதி வெளிவந்த மலம் கீழே விழவே இல்லை. தன் கையை வைத்து அதை எடுக்கப் பார்த்தார். வரவில்லை. அதிகமாக எக்கியதில் வயிற்றுக்குக் கீழே என்னவோ பிடித்துக்கொண்டது போல் இருந்தது. கையெல்லாம் அசிங்கமாகிவிட்டது. அப்படியே அங்கேயே இருந்தார். நீண்ட நேரமாகத் தன் அப்பாவை படுக்கையில் காணமே என்று தேடிய மகன் வந்து, எடுத்துவிட்டுக் கழுவி விட்டார். இவர் மகன் கையைத் தட்டிவிட்டார். தட்டும் அவர் கையை மகன் மீண்டும் தட்டிவிட்டு, தன் வேலையைச் செய்துவிட்டுப் போனார். அன்றெல்லாம் இவருக்கு என்னவோ போல் இருந்தது. மகனை நன்றாக வளர்த்திருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டார். தன்னைப் போன்ற அதீத ஆயுசு தன் மகனுக்கு வேண்டாம் என்ற நினைப்பும் கூடவே ஓடியது.

இப்படி போய்க்கொண்டிருந்த நாள்களில்தான் கொள்ளுப் பேரன் வந்து நாராயண் ராவுக்கு பூர்ணாபிஷேக சாந்தி செய்யவேண்டும் என்றான். வீட்டில் ஒன்று போல் எல்லாரும் சரியென்றார்கள். இத்தனை ஆண்டு காலம் வாழ்வது கொடுப்பினை என்றார்கள். இவர் எதையும் ஆமோதிக்கவுமில்லை. எதிர்க்கவுமில்லை. யாரும் இவரிடம் கேட்கவும் இல்லை. கொள்ளுப்பேரன் இவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டான். கையில் ஒரு வாய்ஸ் ரெக்கார்டருடன் வந்து சில கேள்விகள் கேட்டான். தான் நன்றாகப் பேசியதாகத்தான் நாராயண் ராவுக்குத் தோன்றியது. ஆனால் கொள்ளுப் பேரன் இவரது குரல் குழறுவதாகச் சொல்லிக்கொண்டிருந்தான். சுதந்திரம் கிடைத்தபோது என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு இவர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்தார். நீண்ட நேரம் யோசித்தார்.

கல்லிடைக் குறிச்சியில் இருந்தது நினைவுக்கு வந்தது. யாரோ கொடி ஏற்றி வைத்து ஆரஞ்சு மிட்டாய் கொடுத்ததை மீட்டெடுத்தார். யார் கொடியேற்றினார்கள் என்றோ அன்றைய நாளில் வேறென்ன நடந்தது என்றோ நினைவுக்கு வரவில்லை. கதர் ஆடை அணிந்தீர்களா என்று பேரன் கேட்டான். நினைவில்லை என்றார். ஆனால் அன்று வீட்டில் வடை பாயாசத்துடன் சாப்பிட்டதைச் சொன்னார். அம்மா நல்லா சமைச்சிருந்தா என்றார். எப்பவுமே நல்லா சமைப்பா என்றும் சொன்னார். அம்மாவை ஞாபகம் இருக்கா என்று கேட்டான் பேரன். அம்மாவை அவர் மறக்கவே இல்லை என்பதை அவன் கேள்வி கேட்டபோது சட்டென்று அவருக்குள் தோன்றிய அம்மாவின் முகம் சொன்னது. அவருக்கு சந்தோஷமாக இருந்தது.

வேறென்னமோ கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்த பேரனின் குரலை மீறி, நாராயண் ராவ் தன் அம்மாவின் நினைவுகளில் மூழ்கிக் கிடந்தார். எவ்வித யோசனையும் இன்றி நினைவுக்கு வந்ததைச் சொல்லிக்கொண்டிருந்தார். கொள்ளுப் பேரன் போதும் என்றுவிட்டுக் கிளம்பப் போனான். அவர் மெல்ல அவனிடம், “மேல ட்ரன்க் பெட்டில இருக்கிற போட்டோவையெல்லாம் எடேன், அதுல என் அம்மாஉங்க எள்ளுப் பாட்டி போட்டோ ஒண்ணு இருக்கு. நாளைக்கு ஒனக்கு புள்ள பொறந்தா எங்கம்மா தள்ளுப்பாட்டியாக்கும்என்றார். தள்ளுப்பாட்டியா என யோசித்து அவன் சிரித்தான். இன்னைக்கு சமயமில்லை, இன்னொரு சமயம் முத்தாத்தா என்றவனின் புன்னகையில் எங்கோ தன் சாயல் இருப்பதைக் கண்டுகொண்டார். அவரும் சிரித்தார். அங்கே நின்றுகொண்டிருந்த அவரது மருமகள்எத்தனையோ வருஷம் கழிச்சி சிரிக்கிறார்டாஎன்றாள். “சிரிக்கிற மாதிரி வெச்சிக்கோ பாட்டிஎன்றான் அவன். உடனே, “ஒன்னையே நாங்க பாத்துக்கணும்!” என்றும் அவனே சொன்னான்.

எதாவது ஒரு விழா வராதா என்று ஏங்கிக் கிடந்தது போல் வீட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. சதா எப்போதும் எதையோ பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு டைரி போட்டு எழுதிக்கொண்டே இருந்தார்கள். காலையும் மாலையும் இதே பேச்சுதான். பூர்ணாபிஷேக சாந்திக்கு எத்தனை பேர் வருவார்கள், எங்கே தங்க வைப்பது, என்ன செலவு, யார் யார் எவ்வளவு பணம் தருவது, சமையல் மெனு என்ன என்று ஏகப்பட்ட தடபுடல்கள் நடந்தன. தனக்காகத்தான் இத்தனையும் என்ற நினைத்த நாராயண் ராவ் இந்த விழா நடக்கும்வரையாவது தான் உயிருடன் இருக்கவேண்டுமே என நினைத்துக்கொண்டார். ஆனால் மற்ற யாருக்கும் இதைப் பற்றி எந்தக் கவலையும் இருக்கவில்லை. இவர் பிழைக்கமாட்டார் என எதிர்பார்த்து சொந்த பந்தங்கள் வந்து பார்த்த பிறகு இவர் கிட்டத்தட்ட மூன்று முறை பிழைத்துக்கொண்டிருந்தார். கடைசி முறை நெருங்கிய சொந்தம் தவிர பலர் வரவில்லை. எதாவதுன்னு சொல்லு என்று சொல்லிவிட்டார்கள்.

நாராயண் ராவ் தன் கைக்கு அருகில் இருந்த தாத்தாக் கம்பை எடுத்து தன் கட்டிலில் மட்மட்டெனத் தட்டினார். எதாவது தேவையென்றால் அப்படி தட்டுமாறு மகன் சொல்லி இருந்தார். மகன் மெல்ல நடந்து வந்து, “மெல்லதான் தட்டேன். என்ன வேணும்?” என்றார். எள்ளுப்பேரன் வந்துவிட்டானா, பூர்ணாபிஷேக சாந்தி என்றைக்கு என்றெல்லாம் கேட்டார். கொள்ளுப்பேரன் நாளை வருவதாகவும் மற்றவர்கள் வரும் சனிக்கிழமை வருவதாகவும் ஞாயிற்றுக் கிழமை பூர்ணாபிஷேக சாந்தி என்றும் சொன்னார் மகன். “இன்னும் ரெண்டு நாள்என்று சொன்னவரிடம் நாராயண் ராவ், “எள்ளுப் பேத்தி வர்றாளா?” என்று கேட்டார். “எல்லாரும் வர்றாங்கஎன்று சொன்னார் மகன். “எல்லாருக்கும் பல் தேய்க்க பேஸ்ட் வாங்கி வெச்சிடு. மாப்பிள்ளை முதல்தடவை வீட்டுக்கு வந்தப்போ வீட்டுல பேஸ்ட் இல்லைன்னு ஒரே ரகளைஎன்றார் நாராயண் ராவ். “அப்பா, நாங்க பாத்துக்கறோம். இதெல்லாம் நடந்து 50 வருஷம் ஆச்சு. உன் மாப்பிள்ளை போய் பத்து வருஷம் ஆச்சுஎன்று சொல்லிவிட்டுப் போனார்.

மறுநாள் கொள்ளுப் பேரன் வந்ததும் ட்ரன்க் பெட்டியில் உள்ள புகைப்படங்களை எடுக்கச் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தார். அதிலுள்ள புகைப்படங்களை ஏன் இத்தனை நாள் பார்க்கவே தோன்றவில்லை என்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. பொழுதை வெட்டியாகக் கழித்த வேலைகளில் மீண்டும் மீண்டும் படங்களையாவது பார்த்துக்கொண்டிருக்கலாமே என்றிருந்தது. இந்தமுறை கொள்ளுப் பேரன் வந்ததும் எல்லாப் படங்களையும் தன் அறையிலேயே ஆணி போட்டு மாட்டித் தரச் சொல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டார். மனைவியின் முகத்தை இனியாவது மறக்காமல் இருக்கலாம். மனைவியைப் பற்றி நினைத்ததும், என்றைக்குமில்லாமல் இன்று மெல்ல மெல்ல அவரது மனைவியின் இளவயது முகம் அவருக்குள் திரண்டு வந்தது. மகனின் சின்ன வயதுச் சேட்டைகள் நினைவுக்கு வந்தன. மகளைக் கல்யாணம் செய்துகொடுத்த அன்று அழுததை நினைத்துச் சிரிப்பு வந்தது. மாப்பிள்ளை இறந்து போய் மகள் உடம்புக்கு முடியாமல் பூனேவில் இருப்பது ஞாபகம் வந்தது. மகள் இருக்கிறாளா என்றொரு சந்தேகம் வந்தது. நான்கைந்து வாரங்களுக்கு முன்பு போனில் பேசினாளே என்று அவரே சொல்லிக்கொண்டார். அவளது மகன் வயிற்றுப் பேரனிடம் தன் சாயல் இருப்பதை நினைத்துக்கொண்டவுடன் கையெடுத்துக் கடவுளைக் கும்பிட்டார். தான் தினமும் இனி கடவுளைக் கும்பிடவேண்டும் என்றும் உறுதி சொல்லிக்கொண்டார்.

கொள்ளுப் பேரன் மறுநாள் வந்து சேர்த்தான். அவன் பெயர் ராம் என்பது நாராயண் ராவுக்குச் சட்டென நினைவுக்கு வந்தது. தன் மொபைலில் தன் பாட்டியின் வீடியோவைக் காண்பித்தான் ராம். தன் மகளா இது என்று ஆச்சரியமாக இருந்தது. தலை நரைத்து பொட்டில்லாமல் விபூதி வைத்து, பல் போய், படுக்கையில் நைட்டியுடன் படுத்துக் கிடந்தபடி பேசினாள். அந்த வீடியோ வேண்டாம் என்று தட்டிவிட்டார். கேளு முத்தாத்தா என்றான் பேரன். மகள் பலவீனமான குரலில், “சௌரியவாநா இல்லி செந்தா இத்தானஎன்றவள் கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொண்டு, தன் நைட்டியை நன்றாகக் காலுக்குக் கீழே இழுத்துவிட்டுக்கொண்டு, பேசத் துவங்குமுன்பு, பேரன், தமிழ்ல பேசுவ்வா, யூ ட்யூப்ல போடணும் என்று சொல்லும் ராமின் குரல் வீடியோவில் கேட்டது. “பேசறண்டாஎன்றவள், “பூர்ணாபிஷேக சந்தியாமேவரமுடியலைஎன்றவள் கண்களைத் துடைத்துக்கொண்டாள். “தீர்க்காயுசா இருங்கோஉங்களுக்கென்ன ராஜாஎன்றாள். அத்தனையும் வீடியோவில் ஓடிக்கொண்டிருந்தது. “ராம் பத்தானா. மகனும் மருமகளும் வருவார்கள்என்றாள். பேரன் பெயர் ராம் என்பதைக் குறித்து வைத்துக்கொண்டார் நாராயண் ராவ். நாராயண் ராவ் தன் மகளுக்கு எதோ பதில் சொல்லப் போனார். ராம் உடனேமுத்தாத்தா, இது வீடியோஎன்று சொல்லிச் சிரித்தான்.

தன் கையிலிருந்த ஐபாடில் ஒரு பாட்டை ஓடவிட்டு தாத்தாவின் காதில் ஹெட்ஃபோனை மாட்டினான். எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடியகாந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனைபாடல் கேட்டது. நடுங்கும் கைகளால் ஹெட்ஃபோனை காதில் அழுத்திப் பிடித்துக்கொண்டார். ராம் தன் மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தான். பாடல் முடிந்ததும் அடுத்த பாடல் தொடங்கியது. சில நிமிடங்களில் நாராயண் ராவ்சாக்காஎன்றார். ராம், “முத்தாத்தா, 200 பாட்டு இருக்கு. அதுக்குள்ள என்ன போதும்?” என்றான். அவர், “இப்ப போதும். கேக்க பிடிக்கலைஎன்று சொல்லிவிட்டார். சரி என்று ஹெட்ஃபோனைக் கழட்டி வைத்துவிட்டுச் செல்ல இருந்தவனைக் கூப்பிட்டு, “மேல இருந்து போட்டோக்களை எடுக்கணும்என்றார். “இப்பவா?” “இப்ப இல்லைன்னா எப்பஎன்றார். “நாளைக்கு எடுக்கறேன்என்று சொல்லிவிட்டுப் போனான்.

கொஞ்ச நேரம் எம்.கே. தியாகராஜ பாகவதரைப் பற்றியும் காந்தியைப் பற்றியும் நினைத்துக்கொண்டிருந்தார். மீண்டும் ட்ரன்க் பெட்டிகளில் உள்ள புகைப்படங்களை நினைத்துக்கொண்டார். அதில் அவரது அம்மா ஒரக்கச்ச கட்டிக்கொண்டு, தீர்க்கமாகக் குங்குமம் வைத்துக்கொண்டு, ஒரு துளசிமாடம் முன்பு நின்று எடுத்திருந்த போட்டோ நிச்சயம் இருக்கவேண்டும். அதை அவர் பார்த்து எத்தனையோ நாள்களாகிவிட்டன. சொந்த வீடு என்பதால் இந்தப் படங்களெல்லாம் அப்படியே இருக்கின்றன, இல்லையென்றால் எப்போதோ எப்படியோ தொலைந்து போயிருக்கும் என நினைத்துக்கொண்டார். நாளை நிச்சயம் புகைப்படங்களைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே தூங்கிப் போனார்.

மறுநாள் காலை ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். நாளை பூர்ணாபிஷேக சாந்தி. நாராயண் ராவ் இன்னும் எழுந்திரிக்கவில்லை. இத்தனை நேரம் தூங்கமாட்டாரே என்று மகன் வந்து தொட்டுப் பார்த்தார். உடல் ஜில்லிட்டுப் போயிருந்தது. அப்பா அப்பா என்று உலுக்கினார். மெல்ல முனகினார். வெளியே ஓடி வந்து உடனே டாக்டரை அழைத்து வரும்படிச் சொன்னார் அவர். ராம் டாக்டருக்கு போன் செய்தான். அவர் உடனே வருவதாகச் சொன்னார். வீட்டுக்கு வந்திருந்த அத்தனை பேரும் நாராயண் ராவ் அறைக்குள் இருந்தார்கள். நாராயண் ராவ் மெல்ல முனகினார். ராம் சூடாக ஹார்லிக்ஸை அவருக்குப் புகட்டினான். ஒன்றிரண்டு மடக்கு குடித்தார். கொஞ்சம் இதமாக இருந்தது அவருக்கு. மெல்ல கண் விழித்தார். சுற்றிலும் எல்லாரும் நின்றிருப்பதைப் பார்த்தார். என்ன என்பதுபோல் தலையாட்டினார். மகன் ஒன்றுமில்லை என்றார். மருமகள், “ஒரு நிமிஷத்துல கதி கலங்கி போச்சு. என்னன்றதைப் பாருஎன்றார். மூன்றாவது மகனின் கடைசி மகள், “எதாவது ஆச்சுன்னாநினைக்கவே பக்குன்னு இருக்குஎன்றாள். நாராயண் ராவின் மூத்த மகன், “அப்படி எதுவும் ஆகாது. அப்படியே ஆனாலும் என்ன பண்ணமுடியும். எல்லாரும் இருக்கோம். அப்படியே செய்யவேண்டியதுதான்என்றார். ராம், “எல்லாத்தையும் அவர் முன்னாடி பேசணுமாஎன்றான். ஒவ்வொருவராக வெளியில் சென்றார்கள். மகன் வந்து அப்பாவைத் தொட்டுப் பார்த்தார். உடம்பு முன்னைப் போல குளிரவில்லை. கொஞ்சம் சூடாகவே இருந்தது. பாத்துக்கோ என்று ராமிடம் சொல்லிவிட்டு வெளியே போனார்.

நாராயண் ராவ் ராமிடம், “ட்ரன்க் பெட்டிய எடுஎன்றார். வெளியே குழந்தைகளுக்குப் பரிமாறிக்கொண்டிருந்த மூத்த மருமகள், “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்துல கண்ணுஎன்றார். ராம் இங்கிருந்தே சிரித்தான். சரி எடுக்கறேன் என்று தாத்தாவிடம் சொல்லிவிட்டு, ஒரு ஸ்டூலை இழுத்துப் போட்டு ஏறி, பரணில் இருந்த ட்ரன்க் பெட்டியைக் கீழே இறக்கினான். நாராயண் ராவின் கட்டிலுக்குக் கீழே கிடந்த ஒரு பழைய துணியால் ட்ரன்க் பெட்டியின் மீது படிந்து கிடந்த தூசியைத் தட்டிவிட்டுப் பெட்டியைத் திறந்தான்.

பெட்டிக்குள் விதவிதமான படங்கள் இருந்தன. ஒவ்வொன்றாக எடுத்து தாத்தாவின் முன் பரப்பி வைத்தான். நாராயண் ராவ் தன் கண்ணாடியைத் தேடிப் போட்டுக்கொண்டார். ஒவ்வொரு படமாகப் பார்த்தார். அவரது முகத்தில் தெரியும் உணர்வுகளை ராமால் புரிந்துகொள்ள இயலவில்லை. எதோ எண்ணம் வரவும், மெல்ல சத்தமின்றிச் சென்று அந்த அறையின் கதவுகளைப் பூட்டிவிட்டு, தன் மொபைல் கேமராவை ஆன் செய்து அவருக்குத் தெரியாமல் படம் பிடிக்குமாறு தூரத்தில் செய்துவிட்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான்.

அவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தான்.

முத்தாத்தா, இந்த போட்டோ யாரு?”

அவர் அந்த போட்டோவைக் கூர்ந்து பார்த்தார். சட்டென்று, “இது நாகுடாஎன்றார். “நாகு ஹீரோ மாதிரி இருப்பான். சினிமால நடிக்கணும்னு கொள்ளை ஆசை அவனுக்கு. படம்லாம் வாங்கி வித்தான். என்னமோ சரிப்பட்டு வரலை. இந்த போட்டோ எடுத்தது மதுரைல யானைக்கல்ல அவன் வீட்டுல. வீட்டுக்கு ஆளை கூட்டி வந்து போட்டோவா எடுத்தான். ஒண்ணு எப்படியோ நம்ம வீட்டுக்கு வந்திருக்கு. இவன்தான் உங்க அம்மாவை உங்கப்பாவுக்கு தரணும்னு ஒத்த கால்ல நின்னான். உங்கம்மாகிட்ட கேளு, இவனைப் பத்தி கதை கதையா சொல்வா. வீட்டுக்கு வந்தா நுழைஞ்சதும் அத்தே தங்குலுலி இதயாம்பான். வகை வகையா செஞ்சு வெச்சாலும் கீரை போட்ட பழங்கொழம்பு வேணும் இவனுக்கு. கைல சாதத்தை உருட்டி குழி பண்ணி அதுல ஊத்தி ஊத்தி சாப்பிடுவான். வேடிக்கையா சாப்பிடுவான். ஹார்ட் அட்டாக் வந்து செத்துப் போனான்என்றார்.

நாராயண் ராவ் தன் வயதை உதறிவிட்டு நினைவை மெல்ல உடுத்திக்கொண்டிருந்தார். காலம் மிக வேகமாக நகன்று அவரது கட்டுக்குள் வந்து நின்றது. அவருக்குள் புதைந்துகிடந்த நினைவுகள் வேகம்கொண்டு மேலெழுந்தன. வீடியோ ஓடிக்கொண்டிருந்தது. அவரது வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு கணமும் அவருக்கு நினைவுக்கு வந்துவிட்டது போல அவர் நம்பிக்கையுடனும் எவ்வித யோசனையுமும் இன்றி கடகடவெனப் பேசினார். அவரது முகத்தின் பொலிவு கூடி இருந்தது. அவரது கையைப் பற்றித் தொட்டுப் பார்த்தான். முன்னைவிட கூடுதலாக சூடு ஏறி இருந்தது.

நாராயண் ராவ், “அந்தப் போட்டோவை எடு.”

முன்பைவிட குரலிலும் தீர்க்கம் இருந்தது. நடுக்கங்கள் இல்லை. குழறல் இல்லை. கணீர் என்றிருந்தது. விட்டால் பாடிவிடுவாரோ என்று தோன்றியது.

இதெல்லாம் யாருன்னாவது தெரியுமாடா ஒனக்கு? ஒந்து தெலிது. இவர் ராகு மாமா. உங்க அம்மாவுக்கு தூரத்து சொந்தம். வீட்டுக்கு வந்தா அரைப்படி சாப்பிடுவார். சாம்பார் சாதம், சாம்பார் சாதம், திரும்பவும் சாம்பார் சாதம். ஹா ஹா. அவர் எப்படா ரசம் சாப்பிடுவார், எப்படா மோர் சாப்பிடுவார்னு உங்க கொள்ளுப்பாட்டி முதுகை பிடிச்சிக்கிட்டு நிப்பா பார்த்துக்கோ. சுகர் வந்து காலை எடுத்தாங்க. ஆனாலும் வாயைக் கட்டலையேஎன்றார்.

தூரத்தில் இருந்த இன்னொரு போட்டோவை எடுத்த நாராயண் ராவ் அந்தப் போட்டோவில் இருந்த தூசியை கைகளால் துடைத்தார். “தாரு தெலித்தயாஎன்றார். “இந்திரா பாட்டி?” என்றான். “ஆமா. அவதான். சின்ன வயசுலயே போயிட்டா. எங்களுக்கு மூணாவது பொண்ணு இவ. மூத்தவன் உங்க மாமா தாத்தா. ரெண்டாவது உங்க பாட்டி. மூணாவது இவ. கல்யாணம் பண்ணி மூணு மாசத்துல கிணத்தடில விழுந்து தலைல அடிபட்டுப் போயிட்டா. செத்ததை எங்ககிட்ட சொல்லவே இல்லை. பத்தாவது நாளுக்கு சொல்லி விட்டா. உங்க மாமா போய் தாட்பூட்னு சத்தம் போட்டுட்டு அங்கயே தலைமுழுகிட்டு வந்துட்டான். பாவம், நல்ல தலைமுடி இவளுக்கு. உங்க கொள்ளுப்பாட்டி இவளுக்கு வாராவாரம் கைநிறைய நல்லெண்ணெய் விட்டு தலை தேச்சி விடுவா. வீடு முழுக்க சாம்பராணி மணம் வந்ததுன்னா இவ தலை உலர்த்தறதா அர்த்தம். உங்க அத்தை இவ ஜாடைதான்என்றார். சில சொந்தங்கள் ராமுக்குப் பிடிபடவில்லை. ஆனால் எல்லாமே புரிந்துவிட்டதாகத் தலை ஆட்டினான்.

அடுத்து ஒரு போட்டோவில் எதோ ஒரு தியேட்டர் போல இருந்தது. “இது செண்ட்ரல் தியேட்டர்டா. இப்பவும் இருக்கே. இல்லையோ? அதைவிடு. இங்கதான் ஹரிதாஸ் வந்தது. எத்தனையோ நாள் ஓடிச்சு. ஒரு வருஷத்துக்கும் மேல ஓடிச்சு போல ஞாபகம். நான் முதல் நாள் பார்த்தேண்டா. நீ பாட்டு போட்டு காண்பிச்சயே, அவர்தான் ஹீரோ. பாகவதர். கூட்டமானா கூட்டம். திருநெல்வேலி ஜில்லாவே தியேட்டர்ல திரண்ட மாதிரி. உங்க கொள்ளுப்பாட்டியானா மொதல் நாள் பார்க்கணும்ன்றா. ஊர்ல நான் ஜமீந்தார் வீட்டுல ட்யூஷன் எடுத்ததால அந்த மரியாதைக்கு தியேட்டர்க்காரன் டிக்கெட் கொடுத்தான். உங்க கொள்ளுப்பாட்டிக்கு அவ்ளோ பெருமைஎன்றார்.

முத்தாத்தா, இது யார் போட்டோ?”

இது தெல்லவா? ஹாஹா. நான்தாண்டா. வயசு 25 இருக்கும் அப்ப. மீசை வெச்சிக்கிட்டு இருந்தேன். என் அப்பாவுக்கு ரொம்ப கோபம். நம்ம ஜாதில மீசை வைக்கலாமாடான்னார். பத்து வயசுலயே கல்யாணம் ஆயாச்சு. 20 வயசுல முதல் பிள்ளை. பெரியவா சொல்றா, மீசையை எடுங்கோன்னா உங்க கொள்ளுப்பாட்டி. அப்புறம் எடுத்தேன்என்றார். “இது எங்க எடுத்தது?” “ஸ்டூடியோலதான். அப்பலாம் இப்ப மாதிரி ரோட்லல்லாம் போட்டோ எடுக்கணும்னா கேமரா வெச்சிருந்தாத்தான் உண்டு. அதெல்லாம் ரொம்ப செலவு. டவுண்ல ரெண்டு ஸ்டூடியோ இருந்தது. மலையாளி ஒருத்தன் வெச்சிருந்தான். அங்க எடுத்ததுஎன்றார்.

இந்த போட்டோ யாரு முத்தாத்தாஎன்றான். மொட்டைப் பாட்டி ஒருவரின் போட்டோ அது. நாராயண் ராவ் எத்தனை யோசித்தும் அது யாரென்று தெரியவில்லை. “உங்க கொள்ளுப்பாட்டியோட சொந்தக்காராவா இருக்கும். இதெல்லாம் எப்படி நம்மகிட்ட வந்தது, ஏன் உங்க கொள்ளுபாட்டி வெச்சிருந்தா, இத்தனை நாள் கண்ல ஏன் படலை, எதுக்கும் பதில் கிடையாதுஎன்றார். கொஞ்சம் நேரம் தலையை சொறிந்துவிட்டு, “அது அப்படித்தான்எனச் சொன்னார்.

இன்னொரு போட்டோவை எடுத்து ராம் காட்டினான். அது ஒரு குடும்ப போட்டோ. “என் அறுபதாம் கல்யாணம். 45 வருஷம் இருக்கும். அதுல வருஷம் போட்டிருக்கான்னு பாருஎன்றார். இல்லை முத்தாத்தா என்றான். “இதை வீட்ல எடுத்தோம். பெருமாள் கோவில் சன்னிதி முடுக்கு வீட்ல எடுத்தது. கைல கொழந்தையோட ஓரமா நிக்கறா பாரு, அது உங்க பாட்டி. கைல இருக்கிறது உங்க அம்மாடா. இந்த ஓரமா நிக்கிறது தர்மன். உங்க கொள்ளுப்பாட்டிக்கு அண்ணா. சரியான முரடன். கீழ ரெண்டாவது வரிசைல ரெண்டாவதா நிக்கிறது உன் மாமா தாத்தா. எப்படி இருக்கான் பாரு. இப்பத்தான் வயசாயிப் போயிட்டான். அடுத்து அவன் பொண்டாட்டி. கீழ உட்கார்ந்து இருக்கிறது அவன் பொண்ணு லக்ஷ்மி. வரிசையா உட்கார்ந்து இருக்கிறது, ராஜி, வத்ஸலா, துரை, ஷீலா, உமா. மேல் வரிசைல அந்த ஓரத்துல பாட்டிக்கு அடுத்து நிக்கறது உங்க சின்னமாமா தாத்தா. என் நாலாவது பையன். கோச்சிக்கிட்டு போனவன் வரவே இல்லை. இவனை நினைச்சே போய்ச் சேர்ந்தா உங்க கொள்ளுப்பாட்டி. எத்தனையோ சொந்தங்கள். எத்தனையோ சம்பவங்கள். எதை மறக்கலை எதை நினைக்கலை. போயிண்டே இருக்கு எல்லாம்என்றவர், “கொள்ளுப்பாட்டிக்கு முகமெல்லாம் பூரிப்பைப் பாருஎன்றார். “அப்ப நான் எவ்வளவு வெயிட் இருப்பேன் தெரியுமா ஒனக்கு? நூறு கிலோவுக்கு மேலடாஇப்ப பாருஎன்றுவிட்டு தன் கைகளை தூக்கி ஆட்டிக் காண்பித்தார். போதும் முத்தாத்தா என்றவன் அவரது கைகளை கீழே அமர்த்தினான். மீண்டும் சூடு மெல்ல இறங்குவது போலத் தெரிந்தது.

டாக்டர் ஏன் இன்னும் வரவில்லை என்று யோசித்தான். “சரி முத்தாத்தா, இதெல்லாம் எடுத்து வெச்சிடலாம். ஃபங்ஷன் முடிஞ்சதும் பார்க்கலாம்என்றான். “இரோஎன்று அழுந்தச் சொன்னவர், என் அம்மா போட்டோவைப் பாருடா என்றார். ஒவ்வொரு போட்டோவாகத் தேடினான் ராம். ஒரு போட்டோவில் டர்பன் வைத்துக்கொண்டு சுருட்டி விட்ட மீசையுடன் கண்ணாடியுடன் யாரோ ஒருவர் இருந்தார். அதைக் கையில் எடுத்தவர், “இவர் பேருஎதோ பிள்ளைடா. இவர்தான் காந்தி திருநெல்வேலி வந்தப்ப சாவடி பிள்ளைகிட்ட சொல்லி என்னைக் கூட்டிக்கிட்டுப் போய் காந்தியைக் காமிச்சவர்என்றார். “என்னது, காந்தியை திருநெல்வேலில பார்த்திருக்கீங்களா?” என்றான். “ஏண்டா, பார்க்கக்கூடாதா? பக்கத்துல நின்னு பார்த்தேன். கைல ஒரு ரோஜாப்பூ கொடுத்தார். அதைக் கொண்டு வந்து உங்க கொள்ளுப்பாட்டிக்கிட்ட கொடுத்தேன். அதை ரொம்ப நாள் வீட்லயே வெச்சிண்டு இருந்தா. காந்தியைப் பார்க்கிறதே ஒரு அமைதிடா. எம்கேடி சும்மாவா பாடினான், காந்தியைப் போலொரு சாந்த ஸ்வரூபனைக் காண்பதும் அரிதாமேன்னு. புண்ணியம். கோடி புண்ணியம்என்றபோது அவருக்கு புரை ஏறியது. இருமல் வந்தது. இருமல் கூடிக்கொண்டே போனது. ராம் அவர் நெஞ்சைத் தடவிவிட்டான். உடல் சூடு இன்னும் குறைந்ததிருந்தது. போதும் தாத்தா படுத்துக்கோங்க என்றான். அப்படியே அவரை மெத்தையில் சாய்த்தான்.

ஓடிப்போய் வீடியோவை நிறுத்தினான். நாராயண் ராவின் இருமல் கூடிக்கொண்டே போனது. அவர் தலைமாட்டில் இருந்த செம்பு நீரில்லாமல் காலியாக இருந்தது. கதவைத் திறந்து, “தாத்தா, பாட்டி, தண்ணி கொண்டுவாங்க. டாக்டரைக் கூப்பிடுங்கஎன்று கத்திவிட்டு தாத்தாவின் அருகில் வந்தான். அவர் நெஞ்சைத் தடவிவிட்டான். கொஞ்சம் நேரத்துக்கு முன்பிருந்தது போல ஜில்லிட்டு விட்டிருந்தது. அவரது மகனும் மருமகளும் மெல்ல நடந்து அறைக்குள் வந்தார்கள். “என்னடா ஆச்சுஎன்றார் மூத்த மகன். “தாத்தா,  பேசிக்கிட்டே இருந்தார். அப்படியே இருமல் வந்து உடம்பு ஜில்லாயிடுச்சுஎன்றான். “கட்டைல போறவன் அந்த டாக்டர் எங்க போனான்? நாளை பூர்ணாபிஷேக சாந்தி. இன்னைக்கு உயிரை எடுக்கறதேஎன்றார். “நீ சும்மா இருனேஎன்ற மகன், நாராயண் ராவ் அருகில் குனிந்துஏன்ப்பா, ஏனு மாடுத்தஎன்றார். அவர் என்னவோ சொன்னார். இவருக்குக் காதில் விழவில்லை. ராம் அவரை விலக்கிவிட்டு நாராயண் ராவின் காதருகில் குனிந்து கேட்டான். அவர் மெல்ல இருமிக்கொண்டே முக்கி முக்கி, “என் அம்மா போட்டா எங்கஎன்றார். “துளசி மாடத்துக்கு முன்னாடி எடுத்திருப்பாஎன்றும் சொன்னார்.

துளசி மாடம் முன்னாடியா? அது எங்கம்மா போட்டோவாச்சே. அது இங்க எப்படிஎன்றார் மருமகள். “எங்கம்மா போட்டோவும் அப்படித்தான் எடுத்தது. கொஞ்சம் வாயை மூடுஎன்று தன் மனைவியிடம் கடுப்புடன் சொன்னார் மகன். நாராயண் ராவ்,  “அப்புறம் ரஸ்தால எடுத்த போட்டோ ஒண்ணு உண்டே. அது நானும் அவளும் எடுத்துக்கிட்டது, அது எங்க?” என்றார். உடம்பு இன்னும் ஜில்லிட்டுக்கொண்டே போனது. மூத்த மருமகள் மீண்டும் கொஞ்சம் சூடாக ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தாள். அதை நாராயண் ராவ் குடிக்கவே இல்லை. “இந்த வீட்ல ஒண்ணு வெச்சா வெச்ச இடத்துல இருக்கிறதில்லைஎன்றார். அதற்கு மருமகள், “இவர் எதை எங்க எப்ப வெச்சார். ஒண்ணும் புரியலையேஎன்றார். மகன், “நின்ன சும்மா இருத்த ஹேலிதஎன்றார். ராம் விடாமல் நாராயண் ராவின் நெஞ்சைத் தடவிக்கொண்டே இருந்தான். கொஞ்ச நேரத்தில் நாராயண் ராவ் மயக்கமாகவும் டாக்டர் வரவும் சரியாக இருந்தது.

டாக்டர்  ஒரு ஊசி போட்டுவிட்டு கஷ்டம் என்றார். ஹாஸ்பிடலில் சேர்க்கலாமா என்று ராம் கேட்கவும் டாக்டர்எதுக்கு?” என்று கேட்டார். அனைவரும் பதில் சொல்லாமல் இருந்தார்கள். “நைட் தாண்டறது கஷ்டம். சொல்றவங்களுக்குச் சொல்லிடுங்கஎன்று சொல்லிவிட்டுப் போனார். “இது என்னடா கஷ்டம்என்ற மருமகள், “நாளை ஒருநாளை கடத்திடு ராகவேந்திராஎன்று வேண்டிக்கொண்டார். “அப்படியே கடத்தினாலும் எப்படி நாளை பூர்ணாபிஷேக சாந்தி பண்றதுஎன்று மூத்த மகனின் இரண்டாவது மாப்பிள்ளை கேட்டார். யாருக்கும் எந்த பதிலும் சொல்லத் தெரியவில்லை. மகன் சொன்னார், “நாளைக்கு எது நடக்குதோ நடக்கட்டும். நல்லதோ கெட்டதோ ஆகட்டும்என்று சொல்லிவிட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு வெளியில் வந்தார்.

இரவு நாராயண் ராவின் நிலைமை மேலும் மேலும் மோசமானது. மூச்சு அடங்கிக்கொண்டே போவதாக மகன் சொன்னார். இரவில் யாராவது அவர் அறையில் தூங்காமல் இருக்கவேண்டும் என்று சொல்லி ராமை அங்கே இருக்கச் சொன்னார்கள். அவன் அவர் அருகிலேயே உட்கார்ந்திருந்தான். அவரது வீடியோவை ஓடவிட்டுப் பார்த்தான். இத்தனை பேசிய முத்தாத்தாவுக்கு இது கடைசி நாளா என்ற கேள்வி எழுந்தது. அழுகை வரவில்லை என்றாலும் என்னவோ கஷ்டமாக இருந்தது. நாளை காலை அவன் அம்மாவும் அப்பாவும் வந்து விடுவதாக எஸ் எம் எஸ் அனுப்பி இருந்தார்கள். தாத்தாவைத் தொட்டுப் பார்த்தான். உடல் ஜில்லிட்டிருந்தது. என்னவோ யோசித்துக்கொண்டே அவனறியாமல் அப்படியே உறங்கிப் போனான்.

மறுநாள் காலை தாத்தா தன் கம்பால் தட்டினார். அடித்துப் புரண்டு எழுந்த ராமிடம், “அம்மா போட்டோவையும் அவ போட்டோவையும் தேடிக் கொடுடா எப்படியாவதுஎன்றார். “இன்னைக்குத்தானே பூர்ணாபிஷேக சாந்தி, ஷேவ் பண்ணுடா எனக்குஎன்று சொல்லிவிட்டு மெல்லத் தட்டுத் தடுமாறி பாத்ரூமுக்குள் போனார். சத்தம் கேட்டு உள்ளே வந்தவர்களிடம் மூத்த மருமகள், “அணையப் போற விளக்குன்னு எடுத்துக்கறதா, நாலாவது தடவைன்னு எடுத்துக்கறதான்னு தெரியலையே ராகவேந்திராஎன்றார்.

4 Replies to “புகைப்படங்களின் கதைகள்”

  1. அருமை…ஹரன். சூடாமணியின் கதைகளை ரசித்து..வாசித்திருக்கிறேன். அதைப்போன்றதொரு அனுபவம், இக்கதையை வாசிக்கும்போதும். என் தாத்தா(95 வயதில் இறந்தார்), கும்பகோணத்தில் என் சகோதரனுடன் வசிக்கும் என் அம்மா (85 வயது) ஆகியோரின் நினைவுகள்…கண்கள் கசிந்தன. நன்றி ஹரன்.

  2. ஹரிதாஸ் ஓடிய தியேட்டர் ராயல் டாக்கீஸ்(சென்ட்ரல் இல்லை..அந்த மலையாளக்காரர் ஸ்டூடியோ பெயர் மாரார் ஸ்டூடியோ வாகையடி முக்கில் இருந்தது.மிக அருமையான கட்டுரை திரு ஹரிஹரபிரஸன்னா,வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.