“எதிர்காலத்தில், மனிதர்கள் கார் ஓட்டுவது சட்டத்தில் அனுமதிக்கப்படாது”
டெஸ்லாவின், ஈலான் மஸ்க், இப்படி ஒரு பேட்டியில் முழங்கினார். மனிதர்கள் அவ்வளவு மோசமான ஓட்டுனர்களாம்!
1980 –களில், அமெரிக்காவில் குடிபுகுந்த நண்பர் ஒருவர் இந்தியா வந்த பொழுது, தான் வசிக்கும் சின்னக் கிராமம் பற்றி இவ்வாறு கூறினார்;
“நான் வாழ்வது நியூயார்க் நகரிலிருந்து ஒரு 100 மைல் தள்ளியுள்ள ஒரு சிறு ஊர். இவ்வூரில் வெறும் 2,500 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். பெரும்பாலும் நியூயார்க் நகரில் பணி புரிவோரே இவ்வூரில் வசிக்கிறார்கள். பெரிதாக ஒன்றும் இவ்வூரில் ஏதும் இல்லை. வெறும் 3 கார் டீலர்ஷிப்கள் மட்டுமே உள்ள ஊர்”
வெறும் 2,500 பேர் வசிக்கும் சின்ன ஊரில் 3 கார் டீலர்ஷிப்கள்! இதுவே அமெரிக்க வாழ்க்கை முறை. கார் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது. வட அமெரிக்காவை GM Country என்று சொல்வதுண்டு. கார் இல்லாமல் இங்குக் காலம் தள்ளுவது வெகு சில நகரங்களில் மட்டுமே சாத்தியம். கார்களின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்திலும் வட அமெரிக்கப் பங்கு மிகவும் முக்கியமானது. 20 –ஆம் நூற்றாண்டில், மிகவும் சமூகத்தைப் புரட்டிப் போட்ட விஷயங்கள்,
- கார் – தனி மனிதப் பயணச் சுதந்திரம்
- விமானம் – உலகின் எந்த மூலைக்கும் பயணிக்கும் சுதந்திரம்
- மின்சாரம் – மனித முன்னேற்றத்திற்கு வித்திட்ட ஒரு முக்கிய விஞ்ஞான மைல்கல்
- மின்ன்ணுவியல் மற்றும் கணினியியல் – தகவல் யுகம் உருவாகி உலகமயமான தொடர்புச் சுதந்திரம்
குதிரைகளிடமிருந்து மனிதனை விடுவித்து, வேகப் பயணம் என்பதன் முக்கிய முதல் படி, கார். கார் தொழில்நுட்பம் என்பது வட அமெரிக்கச் சாதாரணர்கள், ஊடகங்களை மிகவும் கவர்ந்த ஒரு தொழில். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, இணையம் என்று எங்கும் வியாபித்து இருப்பது கார் தொழில். இந்தக் கட்டுரைத் தொடரில், இந்தக் கார் தொழிலை மட்டுமல்லாது, சமூகத்தையே புரட்டிப் போட கூடிய ஒரு முன்னேற்றம் பற்றி அலசுவோம்.
கார் என்றவுடன், அதைச் சார்ந்திருக்கும் ஒரு உலகமே உள்ளது. வெறும் தயாரிப்பாளர்கள், மற்றும் நுகர்வோர் மட்டும் இதில் அடங்காது. இவர்கள் இரு தரப்பினரும் உடனே நம் மனதிற்கு வந்து போகும் முக்கியமானவர்கள். கார் உலகில், இன்னும் பல தரப்பினரும் பங்கு வகிக்கின்றனர்:
- அரசாங்கம் – முக்கியமாக உரிமம் (licensing) சார்ந்த அமைப்புகள்
- சீர்படுத்தும் அமைப்புகள் (regulatory bodies)
- காப்பீடு அமைப்புகள் (insurance organizations)
- பெரிய வாகனத் தொகுதி அமைப்புகள் (லாரி, மற்றும் பேருந்து) (fleets)
- வாடகை கார் (car rental) மற்றும் ஊபர், ஓலா போன்ற அமைப்புகள் (internet based car rental companies)
- வாகன பாதுகாப்பு அமைப்புகள் (auto safety standard bodies)
- ராணுவ அமைப்புகள் (military and defense organizations)
என்று பல அமைப்புகள், இந்தத் துறையோடு சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இந்த அமைப்புகள் எல்லாவற்றையும் புரட்டிப் போடும் தொழில் புரட்சி என்பது அடிக்கடி நிகழும் விஷயம் அல்ல. தானோட்டிக் கார்கள் (self-driven or driverless cars) என்பது அத்தகைய தொழில்நுட்பப் புரட்சி.
’2020 –ல் நாங்கள் தயாரிக்கும் கார்கள் யாவும் சுயமாக இயங்கும் கார்கள்’ – ஃபோர்டு கார் கம்பெனியின் தலைவர்.
’2024 –ல், முழுமையாக தானியங்கிக் கார்களை அறிமுகப்படுத்துவோம்’ – நிஸான் கார் கம்பெனியின் தலைவர்.
“2018 –ல் முழுமையாக தானியங்கிக் கார்களை அறிமுகப்படுத்துவோம்’ – ஜி.எம். கார் கம்பெனியின் தலைவர்
‘இன்றே எங்களது கார்கள் கிட்டத்தட்ட தானியங்கிக் கார்கள். இன்னும் ஒரே வருடத்தில் முழு தானியங்கிக் கார்களை நீங்கள் வாங்கலாம்” – டெஸ்லாவின் தலைவர்.
கண் பார்வையற்ற ஒருவரை நகரின் ஓரிடத்திலிருந்து அவர் போக வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் தானோட்டி கார் ஒன்றை கூகிள் முன் வைத்துள்ளது.
கூகிள் நிறுவனத்திலிருந்து வெளி வந்த இத்துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், கலிஃபோனியாவின் US 1 நெடுஞ்சாலையில், ஒரு தானோட்டிக் கூட்டு (self driving kit) ஒன்றை லாரியுடன் இணைத்து, 6 மணி நேரம் சரக்குடன் வெற்றிகரமாக பயணிக்க வைத்துள்ளார்கள்.
இவர்கள்
‘வருது வருது,
விலகு விலகு,
ரோபோ கார் வருது’
என்ற இளையராஜாவின் பாடலைப் பாடுகையில், பல அமெரிக்க மாநிலங்கள்/ நாடுகள் கோதாவில் இறங்கிவிட்டன.
- அமெரிக்க, நிவேடா மாநிலம், 2011 –ல் தானியங்கிக் கார்களை மாநிலத்தில் சோதிக்க அனுமதித்தது.
- யு.கே., 2013 –ல் தானியங்கிக் கார்களை சோதிக்க அனுமதித்தது.
- ஃப்ரான்ஸ், 2014 –ல் தானியங்கிக் கார்களை ப்ரெஞ்சு சாலைகளில் சோதனை செய்ய அனுமதித்தது
- சுவிஸ் நாடு, 2015 –ல் தானியங்கிக் கார்களை சோதிக்க அனுமதித்தது
- ஜெர்மனி, அமெரிக்க மாநிலங்களாகிய கலிஃபோர்னியா, மிசிகன், கனடாவின் அன்டேரியோ என்று பல நாடு, மாநிலங்களும் கோதாவில் இறங்கியுள்ளன
மிகவும் குழப்பமான ஒரு சூழலை கார் தயாரிப்பாளர்கள், ஊடகங்கள் மற்றும் அரசாங்கங்கள் உருவாக்கிவிட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால்,
- தானோட்டிக் கார் (self-driving car)
- தானியங்கிக் கார் (automatic cars or autonomous cars)
- ஓட்டுனர் அற்ற கார் (driverless cars)
- சில சமயங்களில் மட்டுமே ஓட்டுனர் தேவையான கார் (occasional driver required cars)
இப்படி, ககட்டு மேனிக்கு, எதை வேண்டுமானாலும் ஊடகங்கள் அதிகம் இந்தத் துறையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள், இதில், சில வாகன தொழில் நிபுணர்கள்,
‘தானோட்டிக் கார் இன்னும் ஒரு 50 முதல் 60 ஆண்டுகளுக்குச் சாத்தியம் இல்லை’
என்று, குட்டையைக் குழப்புகிறார்கள்!
இத்துடன், வாகனத் தயாரிப்பாளர்கள், தங்களுடைய புதிய கார் மாடல்களில் உள்ள சில அம்சங்களை தானோட்டிக் கார்கள் என்று விளம்பரம் செய்வதோடு, நுகர்வோரை ஏகத்தும் குழப்பி வருகிறார்கள். உதாரணத்திற்கு,
- தானே இணை நிறுத்தும் (parallel park assist) அம்சம் கொண்ட காரை தானோட்டிக் கார் என்று கூசாமல் சொல்லி விடுகிறார்கள்
- காரின் முன் மிக அருகாமையில் வாகனம் இருந்தால், அலரும் அம்சம் (proximity warning) கொண்ட கார், அல்லது அருகாமையில் கார் இருந்தால், வேகத்தைக் குறைக்கும் அம்சம் (proximity speed control) கொண்ட காரை தானோட்டிக் கார் என்று விற்பனையாளர்கள் தள்ளி விடுகிறார்கள்
- வரைபாதையிலிருந்து சற்று அடுத்த வரைபாதைக்குச் சறுக்கினால், உங்களை எச்சரிக்கும் அம்சம் (lane departure warning) கொண்ட காரை தானோட்டிக் கார் என்று எளிதில் சொல்லி விடுகிறார்கள்
- சாலையில் உள்ள மற்ற வாகனங்களின் வேகத்திற்கேற்ப உங்களது வாகனத்தில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் அம்சம் (adaptive cruise control) கொண்ட காரையும் தானோட்டிக் கார் என்று சொல்லி வருகிறார்கள்
இப்படிப் பல ஓட்டுனர் உதவி அம்சங்கள் இன்று குழப்பமாக தானோட்டிக் கார் என்று புத்தாடை அணிந்து வலம் வருகின்றன. உண்மையில் தானோட்டி காருக்கும் இவற்றிற்கும் என்ன வித்தியாசம்?
முக்கிய வித்தியாசம் இதுதான் – ஓட்டுனர் உதவி அம்சங்கள் சில நிமிடங்கள் மட்டுமே இயங்கும் அம்சங்கள். தானோட்டிக் கார் சாலையில் கார் ஓடும் ஒவ்வொரு நொடியும் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அத்துடன், தவறு நடந்தால், திருத்த மனித ஓட்டுனர் யாரும் இருக்க மாட்டார்கள்.
இன்னொரு முக்கிய விஷயம் – தானியங்கிக் கார் (automatic or autonomous) என்ற பதத்திற்கும் தானோட்டிக் கார் என்ற பதத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பொதுவாக, தானியக்கம் என்பது, ஒரு குறிப்பிட்ட செயலை மீண்டும் மீண்டும் ஒரு எந்திரம் துல்லியமாகச் செய்வதைக் குறிக்கிறது, உதாரணத்திற்கு, ஒரு கார் கழுவும் நிலயத்தில், கார்களை சோப்பு போட்டு கழுவும் எந்திரத்தைத் தானியங்கி கார் கழுவும் எந்திரம் என்று தாராளமாகச் சொல்லலாம். இந்த எந்திரம் எதைச் செய்யாது?
- பஸ் வந்தால் கழுவத் தெரியாது
- காரின் எண்ணெய்களை மாற்றத் தெரியாது
- காரில் பெட்ரோல் இல்லையேல் நிரப்பத் தெரியாது
- காரின் விளக்குகளை மாற்றத் தெரியாது
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். தானியக்கம் என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் எந்திரம் ஒரு குறிக்கோளுடன் இயங்குவது. கார் ஓட்டுவது என்பது நம்மில் பலருக்கு அலுப்பான விஷயமானாலும், கார் ஓட்டுவது என்பது நின்றிருக்கும் காரைக் கழுவுவது போன்ற செயல் அல்ல. நமக்கே தெரியாமல், பல விஷயங்களை ஒருங்கிணைந்து செய்யும் மிகச் சிக்கலான ஒரு செயல் கார் ஓட்டுவது. இந்தச் செயலை ஓர் எந்திரத்திற்குக் கற்பிப்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல.
ஒரு பயிற்சியாளர் பக்கத்தில் சொல்லிக் கொடுக்க இருக்கும் பொழுதே பல நாட்கள்/வாரங்கள் ஆகும் ஒரு திறன் கார் ஓட்டுவது. அத்துடன், அப்படிப் பயிற்சி எடுத்த பின் சில மாத அனுபவத்திற்குப் பிறகே நாமெல்லாம் ஒரு தன்னம்பிக்கையோடு கார் ஓட்டுகிறோம். முக்கியமாக, நாம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் , மனிதன் இன்னொரு மனிதனுக்குக் கற்பிப்பதற்கும், மனிதன் எந்திரத்திற்குக் கற்பிப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மனிதத் தவறுகள் பெரும்பாலும் இறப்பு என்ற விஷயம் இல்லாதவரை மன்னிக்கப் படுகிறது. எந்திரத் தவறுகளுக்கு மன்னிப்பு என்பது மிகவும் சர்ச்சைக்குரிய விஷயம்.
நுகர்வோர் இத்துறை சார்ந்த அறிவிப்புகளால், குழம்புவது மிகவும் இயற்கையான விஷயம். இக்கட்டுரையின் நோக்கம் குழப்பத்தைக் குறைப்பது அல்லது அகற்றுவது.
இன்றைய ஊடகங்கள் தானியங்கிக் கார்களின் முக்கியமான பங்கீடு என்று எதைச் சொல்கிறது?
- வழி தெரியாமல் தொலைந்து போவதற்கு வழியே இல்லை – இவை இயங்கும் பாதையைக் கணினி ஒன்று கட்டுப்படுத்துவதால், தொலைந்து போவதற்கு வாய்ப்பே இல்லை
- நிறுத்துமிடம் தேடி அலைய வேண்டாம். பெரும் நகர்களின் மையப் பகுதிகளில், நிறுத்துமிடம் என்பது ஒரு பெரிய தலைவலி சமாச்சாரம். தானோட்டிக் கார்கள் நிறுத்துமிடம் தேடிச் சென்று தானே நிறுத்திக் கொள்ளும்
- ஏற, மற்றும் இறங்க இடம் தேவையில்லாததால், தானோட்டிக் கார்கள், மிக நெருக்கமாக நிறுத்தப்படலாம். ஒரு நிறுத்தும் தளத்தில் 100 கார்கள் இன்று நிறுத்த முடியும் என்று கொண்டால், அதே இடத்தில் 130 முதல் 140 தானோட்டிக் கார்களை நிறுத்த முடியும்
- குளிர் நாடுகளில், உறைந்த பனியை சுரண்டி எடுக்கும் அலுப்பூட்டும் வேலையைச் செய்ய வேண்டாம். அழைத்தால், சுத்தமான தானோட்டிக் கார் உங்கள் வீடு/அலுவலகம் முன் வந்தடையும்
- சுட்டெரிக்கும் நாடுகளில், அதே போல, காரை முடுக்குனால், சரியாகக் குளிர்சாதனம் வேலை செய்ய 10 நிமிடம் காத்திருக்கத் தேவையில்லை. அழைத்தால் வரும் தானோட்டிக் கார், குளிர்ச்சியாகவே இருக்கும்
- வயதாகி விட்டதா, உடலில் ஊனம் உள்ளதா – கார் ஓட்டல் பற்றிய கவலை தேவையில்லை. தானோட்டிக் கார் இருக்கையில் யாருக்குக் கார் ஓட்டத் தெரிய வேண்டும்?
- கொஞ்சம் பார்டியில் அதிகமாக மது அருந்தினால் பிரச்னையில்லை. நாமா கார் ஓட்டப் போகிறோம்? தானோட்டிக் கார் உங்களை வீடு வரை அழைத்துச் செல்லும்
- இரவில் நெடுஞ்சாலையில் கார் ஓட்ட பயமா? பிரச்னையில்லை. தானோட்டிக் காரிடம் அந்த வேலையை விட்டு விடுங்கள். நீங்கள் புத்தகம் படித்துக் கொண்டோ, இசை கேட்டுக் கொண்டோ, விடியோ பார்த்துக் கொண்டோ பயணம் செய்யலாம்
- பன்னிரண்டு வயது மகள் தோழியுடன் நகரின் இன்னொரு கோடியில் உள்ள அவள் வீட்டில் விளையாடி, இரவு உறங்கி காலை வீடு திரும்ப வேண்டுமா? சரி என்று சொன்னால், மற்றதை தானோட்டிக் கார்கள் பார்த்துக் கொள்ளும். தானோட்டிக் கார்களில் பயணிக்க உரிமம் ஒன்றும் தேவையில்லையே
- மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட போக்குவரத்துக் பாதுகாப்பு அமைப்புகள் – வேக எல்லைகள், அதி வேக தண்டணை சீட்டுக்கள், ஓட்டுனர் காப்பீடு போன்ற விஷயங்கள் தேவையில்லாமல் போகும்
- வேறு ஊருக்குப் பயணிக்கும் பொழுது, (நம்முடைய அதிஷ்டம், எப்பொழுதும் விமானம் புதிய ஊருக்கு இரவிலேயே சென்றடையும்) வாடகைக் காரை எடுத்து, அதன் பல புதிய அம்சங்களைத் தேடித் தேடி அறிவது அலுப்பு தட்டும் விஷயம். தானோட்டிக் கார் இருந்தால், இந்த இம்சைகள் எதுவும் கிடையாது. புதிய ஊரில் உள்ள சாலை விதிகளுடன் போராடவும் தேவையில்லை
- அட்டா காரில் பெட்ரோல் தீர்ந்து விட்டதே என்று பெட்ரோல் பம்பைத் தேடி அலைய வேண்டாம் (அதுவும் புதிய ஊரில்). தானோட்டிக் காருக்கு பெட்ரோல் அளவு, மற்றும் எங்கு பெட்ரோல் கிடைக்கும் என்பது எல்லாம் அத்துப்படி
- போக்குவரத்து நெரிசல் – பெரும்பாலும் மனித ஓட்டுனர்களால் உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் இது. ஒழுங்கான வேகத்தில், வரைபாதைக்கு உட்பட்டுப் பயணிக்கும் தானோட்டிக் கார்கள் நெரிசலை மிகவும் குறைத்து விடும்
- வழியில் ஒரு விபத்து நேரிட்டால், பின் வரும் வாகனங்கள் சரியான தகவல் இல்லாமல், நெடுஞ்சாலையில் போராடி, போக வேண்டிய இடத்திற்குச் செல்வதற்குள் போதும் என்றாவது நம் அன்றாட அலுப்பூட்டும் விஷயங்களில் ஒன்று. தானோட்டிக் கார்கள், தகவலை ஜி.பி.எஸ் மூலம் பெற்று, தன்னுடைய பயணத்தை மாற்றியமைக்கும் திறம் கொண்டவையாக இருக்கும். இதனால், பயணிக்கு எந்த டென்ஷனும் இல்லை
கனவில் கூட இப்படி ஒருவருக்குத் தோன்றியிருக்குமா என்பது சந்தேகம். ஆனால், இன்று தானோட்டிக் கார்களின் சாத்தியம் எப்படியெல்லாம் பலரை சிந்திக்க வைக்கிறது பாருங்கள். சொல்லப் போனால், முழுவதும் இந்தப் புரட்சியின் வீச்சை யாரும் புரிந்து கொள்ள வில்லை என்று தாராளமாகச் சொல்லலாம்.
அடுத்த பகுதியில், இத்துறையில் என்னவெல்லாம் இன்று நடக்கிறது என்று மேல்வாரியாகப் பார்ப்போம்.
தமிழ்ப் பரிந்துரை
தமிழ்ச் சொற்கள் எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். கார் சம்பந்தமான பல தொழில்நுட்பச் சொற்கள் தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லை. உதாரணம், ஆக்ஸிலரேட்டர் மற்றும் ப்ரேக். இதை தமிழில் மொழிபெயர்த்தால், நம்மில் பலருக்கும் புரியாது. இதனால், இது போன்ற வழக்குச் சொற்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன். சிலபுதியசொற்களுக்குநிகரானசிலதமிழ்ச்சொற்களைஇங்குபரிசீலனைக்கெனமுன்வைக்கிறேன்
ஆங்கிலச் சொல் |
தமிழ்ப் பரிந்துரை |
Licensing |
உரிமம் |
Regulatory bodies |
சீர்படுத்தும் அமைப்புகள் |
Insurance |
காப்பீடு |
Vehicle fleets |
வாகனத் தொகுதி அமைப்புகள் |
Auto safety standard bodies |
வாகன பாதுகாப்பு அமைப்புகள் |
Self-driven cars or Driverless cars |
தானோட்டிக்கார்கள் |
Parallel park assist |
தானே இணை நிறுத்தும் வசதி |
Proximity warning feature |
அருகாமை எச்சரிக்கை அம்சம் |
Traffic lanes |
வரைபாதை |
Lane departure warning feature |
வரைபாதையிலிருந்து சறுக்கல், எச்சரிக்கை அம்சம் |