சிரியாவே தன்  துயரத்தைச் சொல்லும் கவிதை

 
சிரியாவின் டேரா (Deraa) என்ற நகரில் மார்ச்,2011-ல் சில சிறார்கள் ஒரு பள்ளிக் கூடத்தின் சுவர்களில் புரட்சி முழக்கங்ளை எழுதியதற்காக கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட அதை எதிர்த்து சிரியாவின் அதிபர் ஆசாத்தின் பதவி இறக்கத்தை வலியுறுத்தி மக்களாட்சி வேண்டி எழுந்த ஒரு கிளர்ச்சி தான் சிரியாவில் இன்று உள் நாட்டுப் போராக வெடித்து முடியாததாயிருக்கிறது. சிரியாவின் அதிபர் ஆசாத்தின் சர்வாதிகாரத்துக்கெதிராக எழுந்த கிளர்ச்சி இப்போது திசை மாறிப் போயிருக்கிறது. அதிபர் ஆசாத்தின் படைகள் , ஆசாத்தை எதிர்க்கும் கிளர்ச்சிப் படைகள் இவற்றோடு இஸ்லாமிக் ஸ்டேட் (Islamic State) என்றழைக்கப்படும் ஜிகாதிஸ்டுகளும்(Jihadists) தங்களுக்குள் போரிடுகின்ற இந்த உள் நாட்டுப் போர், யார் ஆதிக்கம் என்பதை நிலைநிறுத்தும் போராக மாறி அப்பாவி மக்களைக் கொல்லும் இரத்தக் களறியாகியிருக்கிறது. ருசியா, ஈரான் போன்ற நாடுகள் ஆசாத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் கிளர்ச்சிப் படைகளுக்கு ஆதரவாகவும் செயல்படும் நிலையில் சிரியப் போர் அந்நிய நாடுகளின் காயுருட்டலில் இன்னும் சிக்கலாகியுள்ளது. கண் மூடித் தனமான விமானத் தாக்குதல்களில் இது வரை நாலரை லட்சத்திறகும் மேலான மக்கள் பலியாகியுள்ளனர். வெளியேற்றப்பட்டவர்கள் –பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும்- அகதிகளாய்ப் பல இலட்சக் கணக்கில். குழந்தைகளின் பலி ஆயிரக் கணக்கில். யூனிசெஃபின்(Unicef) கணக்குப்படி, சிரியாவின் மொத்தக் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர்- 3 மில்லியனுக்கும் மேலாக-கடந்த ஐந்தாண்டுப் போர்க் காலத்தில் பிறந்தவர்கள். அகதிகளாகவே பிறந்து சாவையும், அழிவையும், இழப்பையும் தவிர வேறெதுவும் அறியாதவர்கள். அகதியாய்த் தப்பிச் செல்லும் போது கடலில் படகு மூழ்கி, பிணமாய்க் கரையொதுங்கிய ஒரு மூன்று வயதுக் குழந்தையின் புகைப்படம் உலகின் மனச் சாட்சியை உலுக்கிப் போட்டது. சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய புராதான நகரமென்று அங்கீகரிக்கப்பட்ட அலெப்போ நகரம் சீரழிந்து போயுள்ளது. போரில் சிக்குண்ட சாதாரண மக்கள் தொகை தொகையாய் வெளியேற்றப்படுகின்றனர். புதுச்சேரியில் பிப்ரவரி 2016-ல் நடைபெற்ற பன்னாட்டு ஆவணக் குறும்பட விழாவில் திரையிடப்பட்ட அலெப்போவை அலைக்கழிக்கும் கொலைப் போரையும் பேரழிவையும் பேசும் Young Syrian Lenses என்ற ஆவணப்படத்தைப் பார்த்த யாரும் அதிர்ந்து போகாமல் இல்லை. மக்கள் வாழும் பகுதிகளில் வீழும் குண்டுகளின் பொழிவு, தரைமட்டமாகும் கட்டிடங்கள், அழிவின் அச்சுறுத்தலிலும் மரணத்தோடு விளையாடுவது போல் விளையாடும் சிறார்கள், அமர்ந்து மரணத்தை ஒரு மிடக்கு அருந்துவது போல் தேநீர் அருந்தும் மனிதர்களரென்று அலெப்போவின் போர்த் துயரத்தைப் பதிவு செய்கிறது இந்த ஆவணப் படம். இதன் பின்னணியில் மாராம் அல்- மாஸ்ரி( Maram al-Masri) என்ற பாரிஸில் வசிக்கும் ஒரு சிரியப் பெண் கவிஞரின் கவிதையை நான் வாசிக்க நேர்ந்தது. சிரியாவே தன் துயரத்தை நேரடியாகச் சொல்லும் கவிதையாய் அது இருக்கிறது. சிரியாவின் துயரம் மட்டுமல்ல அது. எந்தக் கொலைப் போரிலும் முதலில் பலியாகும் மனிதத்தின் துயரம் அது. அதன் தமிழாக்கம் தான் கீழ் வருவது.

(1)

சிறார்களின் விரல் நுனிகளால்
வெண் சாக்குக் கட்டியால்
பள்ளிக் கூடத்தின் மைதானச் சுவரில் ‘சுதந்திரம் என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்தது.
சுதந்திரம்
வரலாற்றின் சுவர்களில்
அவர்களின் பெயர்களை இரத்தத்தில் எழுதியிருக்கிறது.

(2)

நான் ஒரு மனிதன்.
நான் ஒரு மிருகமல்ல.
கூச்சலிடுவான்
அந்தப் பிரஜை-
அகமத் அப்துல் வகாப்.
தொலைக் காட்சித் திரைகளிலெல்லாம் தன் உடைந்த குரலில் அவனே நீக்கமற.
சிறையிலிருந்து தப்பிய ஒரு கைதி போல்
அவன் தப்பினான்.
அச்சம் மற்றும் மெளனத்தின் தளைகளை உடைத்தெறிந்து விட்ட அவனின் கழுத்து நரம்புகள் புடைக்கும்.
அவனின் விழிகள் சினத்தில் மூழ்கும்.
அவனது வாழ் நாளில் அவன் பல்ஜாக்கையோ அல்லது விக்டர் ஹியூகோவையோ வாசித்தது கிடையாது.
லெனினையோ கார்ல் மார்க்ஸையோ அறியான் அவன்.
அந்தக்
கணத்தில்……
அந்த சாதாரண பிரஜை அசாதாரணமாகி விட்டான்.

(3)

அவனை நீ பார்த்திருக்கிறாயா?
தலை உயர்த்தியும்
முதுகு நிமிர்ந்தும்
தன் குழந்தையைக் கைகளில் ஏந்திக் கொண்டு தனது பாதையில் வேகமாகச் செல்கின்றான்.
தந்தையால்
தான் இப்படி ஏந்திச் செல்லப்படுவதற்கு
எவ்வளவு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்திருக்கும் அந்தக் குழந்தை
அது மட்டும் உயிரோடிருந்திருந்தால்.

(4)

என் மகன் ஓர் அழகன்.
என் மகன் ஒரு வீரன்.
சர்வாதிகாரிக்கோ வீரர்கள் மேல் பொறாமை.
என் மகன் ஒரு வீரன்.
அவன்
என் அன்பு.
என் விழிகளின் ஒளி.
என் ஆன்மா.
சுற்றி நடந்து கொண்டே
சங்கடமாய் விழிகள் தாழ்த்திய அவர்களிடம் அவள் அவனைக் காட்டுகிறாள்.
அவள் கரங்களில் கிடப்பான் அவளின் மகன்
சிரித்தபடி
ஒரு படத்தின் சட்டத்திற்குள்.

(5)

அதன் தாயின் கருப் பையிலிருந்தல்ல
மண்ணின்
கருப்பையிலிருந்து
இந்தக் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
அது வரலாற்றுக்கு முந்தைய ஒரு சிலையல்ல.
அது ஒரு குழந்தை-
வெண்மையில் சுற்றப்பட்டு
ஒரு குண்டால் மூடப்பட்டு-
வாய்ப்பு கிடைக்காமல்
அதன் தாயின் பாலை முதல் முறையாய்ச் சப்புவதற்குக் கூட.

(6)

இனிப்பு மிட்டாய்ப் பொட்டலத்தில் கட்டப்பட்டது போல்
சிரியாவின் குழந்தைகள் சவப் பெட்டிக்குள் காண முடியாமல் கிடத்தப்படிருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் இனிப்புப் பண்டமல்ல.
அவர்கள்
சதை;
அன்பு;
ஒரு கனவு.
சிரியாவின் குழந்தைகளே!
சாலைகள் உங்களை எதிர்பார்த்திருக்கின்றன.
பொழில்கள் உங்களை எதிர்பார்த்திருக்கின்றன.
பள்ளிகளும், கோலோகலச் சதுக்கங்களும் உங்களை எதிர்பார்த்திருக்கின்றன.
இது மிகவும் சீக்கிரம்
நீங்கள் சொர்க்கத்தின் பறவைகளாகி வானில் விளையாடுவது.

(7)

நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள்.
நாங்கள் மயக்க மாத்திரைகளில் உயிர் வாழ்கிறோம்.
எங்களின் தாய் நாடு முக நூலாகி விட்டது.
அது மட்டும் இல்லாவிட்டால்
எல்லைகளில் காத்திருக்கும் எங்கள் முகங்களுக்கு மூடப்பட்டு விடும் வானத்தை அது திறக்கிறது.
நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள்.
செல் பேசியைத் தழுவிக் கொண்டு உறங்குகிறோம்.
எங்கள் தடுப்புத் திரைகளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி
சோகத்தில் சொக்குகிறோம்.
ஒரு நம்பிக்கையோடு விழிக்கிறோம்.
நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள்.
காதலர்கள் அவர்களின் அன்புக்குரியவர்களை கண் சிமிட்டுவதற்குள் கண்டு விடும் நம்பிக்கையில்
சிறையைச் சுற்றி அலைவது போல்
நாங்கள் எங்களின் தூர இல்லங்களைச் சுற்றி அலைகிறோம்.
நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள்.
சாவின் ஏலத்தில் விடப்பட்டிருக்கும் எங்களின் தாய் நாட்டின் மேலான காதலின் தீராத வியாதியில் பீடிக்கப்பட்டு.

(8)

சுதந்திரத்தின் பிள்ளைகள்
வெள்ளையர் குழுமத்தின் ஆடைகளை உடுப்பதில்லை.
அவர்களின் தோல் முரட்டு ஆடைகளுக்கு பழகி விட்டது.
சுதந்திரத்தின் பிள்ளைகள்
ஏற்கனவே உடுத்திப் போட்ட ஆடைகளையே அணிகிறார்கள்.
அவர்களின் காலணிகள் மிகவும் பெரிதானவை அடுத்த ஆண்டில் கூட கால்களில் பொருந்துவதற்கு.
பெரும்பாலும்
அவர்கள் அணிவது அவர்களின் நிர்வாணத்தையும் வடுக்களையுமே.
சுதந்திரத்தின் பிள்ளைகள்
சகிப்புத் தண்ணீரில் முக்கி எடுத்த உலர்ந்த ரொட்டியைத் தவிர
வாழைப் பழங்களின் அல்லது ஸ்டிராபெர்ரிகளின் சுவையை அறிவதில்லை.
சாக்லெட் பிஸ்கட்டுகளைத் தின்னுவதில்லை.
மாலையில் சுதந்திரத்தின் பிள்ளைகள் வெந்நீர்க் குளியல் செய்வதில்லை.
சோப்பின் கலர் கலர் நுரைகளோடு விளையாடுவதில்லை.
அவர்கள் ரப்பர் டயர்களோடும், தகர டப்பாக்களோடும், வெடி குண்டுகளின் எச்சங்களோடும் விளையாடுகிறார்கள்.
தூங்கப் போகும் முன்
சுதந்திரத்தின் பிள்ளைகள் பல் துலக்குவதில்லை.
ராஜா ராணிக் கதைகளெல்லாம் கேட்பதில்லை.
அவர்கள் கேட்பது குளிரின், அச்சத்தின் நிசப்தத்தை மட்டுமே.
நடை பாதைகளில்
அகதி முகாம்களில்
அல்லது கல்லறைகளில்
சுதந்திரத்தின் பிள்ளைகளும் மற்ற எல்லாக் குழந்தைகள் போல் தங்களின் அன்புக்குரிய அம்மாவை எதிர்பார்க்கிறார்கள்.

(9)

சிரியாவின் மலைகளிலும் சமவெளிகளிலும்
அகதி முகாம்களிலும்
அவள் நிர்வாணமாய் எதிர்ப்படுகிறாள்.
சகதியில் அவள் பாதங்கள் சிக்கியிருக்கும்.
குளிரில் அவள் கைகளில் வெடிப்புகள் உண்டாகியிருக்கும்.
ஆனாலும்
அவள் மேற் செல்கிறாள்.
அவளது கைகளைக் குழந்தைகள் பற்றிக் கொண்டிருக்க
கடந்து போய்க் கொண்டிருக்கிறாள்.
அவள் ஓடுகையில்
குழந்தைகள் கீழே விழும்.
அவள் துயருற்றுக் கதறுகிறாள்.
ஆனாலும் மேற் செல்கிறாள்.
அவள் கால் உடைந்து விடுகிறது.
ஆனாலும் மேற் செல்கிறாள்.
அவளின் தொண்டையைக் கிழிக்கிறார்கள் அவர்கள்.
ஆனாலும் விடாது பாடுகிறாள் அவள்.
கற்பழிக்கப்பட்ட ஒரு தாய்க்கு சிரியாவின் சிறையில் பிறந்த
அந்தப் பையன் கேட்பான்:
’அம்மா
ஒரு கதை சொல்’லென்று.

(10)

‘அன்றொரு காலத்தில்
ஓர் அமைதியான சாலை எதிர் தெரியும் ஜன்னலுடைய வீட்டில்
ஒரு சிறுவன் தன் தாயோடு வசித்து வந்தான்.’
ஜன்னலென்றால் என்ன?
சிறுவன் குறுக்கிடுவான்.
‘அது
சூரியன் நுழையும் ஒரு திறப்பு சுவரில்.
சில சமயங்களில் அந்த ஜன்னல் மாடத்தில் பறவைகள் தொடும்.’
பறவைகளென்றால் என்ன?
குறுக்கிடுவான் சிறுவன்.
அதற்கு
கதை சொல்லி
ஒரு பேனாவை எடுத்து
சுவரில்
ஒரு ஜன்னலையும்
இரு சிறகுகளுடன் ஒரு சிறுவனையும்
வரைவான்.
பறவைகளென்றால் என்ன?
குறுக்கிடுவான் சிறுவன்.
அதற்கு
கதை சொல்லி
ஒரு பேனாவை எடுத்து
சுவரில்
ஒரு ஜன்னலையும்
இரு சிறகுகளுடன் ஒரு சிறுவனையும்
வரைவான்.

(ஆங்கிலம் வழி தமிழில்: Source: Sabad, An Anthology of World Poetry; Edited by K.Satchidanandan, Sahitya Akademi)