கவிதைகள்


பேருந்து நிறுத்தம்

முத்துவேல்

இலவசம் அறிவித்த இடம் போல்
அவ்வளவு கூட்டம்
பேருந்து நிறுத்தத்தில்
பரபரப்புச் செய்திக்காக
காத்திருக்கும் ஊடகம் போல்
காத்திருந்தது கூட்டம்
பேருந்து வந்ததும்
அந்த செய்தியை ஆளுக்கொரு பக்கம்
பிடித்து பிய்த்து அதற்குள் மூழ்கிவிட்டனர்
அந்த இரும்புப் பெட்டி
எலாஸ்டிக் போல் விரிந்து
எல்லாரையும் ஏற்று கொண்டது
இப்போது காட்சி முடிந்த
திரையரங்கம் போல்
காலியாக இருந்தது நிறுத்தம்
என்னையும் ஒரு பெண்ணையும் தவிர
என் உருவமோ? உடல்மொழியோ?
ஆளற்ற இரவில் ஒரு ஆண் என்ற நினைப்போ?
அவள் பதட்டமானாள்
ஜோதியோ சுவாதியோ
நினைவில் வந்திருக்கும்
இவன் இப்படியே செத்துவிட கூடாதா என
மனம் ஏங்கியிருக்கும்
ஒவ்வொரு நொடியும் நெருப்பிலிருந்தாள்
என்னை குற்றவாளி கூண்டில்
நிறுத்தியிருந்தாள்
அலைபேசி நோண்டினாள்.அழைப்பு விடுத்தாள்
அநேகமாக என் அடையாளங்களை
யாருக்கோ சொல்லியிருப்பாள்
தன்னை சுற்றிலும் பாம்புகள் என
அவள் நடுங்கி நொறுங்கும் போது
கழுகு போல் வந்தது ஒரு பேருந்து
உலகத்து சாமிகளெல்லாம்
ஒன்றாக வந்தது போல்
முகம் சிரித்து ஏறினாள்
நானும் ஏற வேண்டியது தான்.
ஏறவில்லை
நான் கூண்டிலேயே நின்றிருந்தேன்
நான் நல்லவன் என்பதை
அவளுக்கு இனி எப்படிச் சொல்வேன்?

~oOo~

கங்கா

ஆதி கேசவன்

ஒரு குழந்தையின் பிடிவாதத்துடன்தான்

மீண்டும் மீண்டும்

என் கைகளில் ஏறினாய் .
இருந்தும் உன்னை முழுக்க நழுவவிட்டு விட்டுதான்
நான் வீடு திரும்ப வேண்டியிருந்தது.
கடைசியில் என் கால்களை கூட
பிடித்துப்பார்த்தாய் அல்லவா ?

ஜுஸ்

இன்று எழுந்து குளித்து
உண்டு உடுத்தி
சாம்பாரும் தயிரும்
தனித்தனி டப்பாக்களில் கட்டி,
வாசலில் நின்று
சாக்ஸ் போட்டபின், ஷு போடுவதற்கு முன்
போனை எடுத்து, மேனேஜரை அழைத்து
விடுப்பு சொன்னேன்,
குடிக்க மறந்த ஜூஸ் நிறைந்திருந்தது
எனது மேசையில்.

~oOo~

இருத்தல்

அருண் காந்தி

விரலிடுக்கின் எரிச்சலையும்
நகக் கண்ணின் தெறிப்பையும்
தாண்டி மீண்டும் மீண்டும்
அழைக்கிறது
ஆற்றுப் பரப்பில் அலையாடும்
நீர்க் கட்டிகளின் முணுமுணுப்பு
கூரான ஒரு நீர்க் கட்டி, அழுக்கான
நீர்க் கட்டியுடன் மோதி உராயும் ஒலிக்கு பயத்தில்
வந்த வழியே திரும்பிப் பறக்கும்
நீர்ப் பறவை நாளையும் இவ்விடம்
வருமா எனத் தெரியவில்லை
நட்டாற்றில் தொலைவில் விசைப்படகில்
மோதியுடையும் நீர்க் கட்டிகளுக்காக
பரிதாபமடையும் மனம்
நேற்றிருந்தது இன்றில்லை
எனும் ஆச்சர்யத்திலிருந்து
இன்றிருப்பது நாளையிருப்பதில்லை
எனும் ஆச்சரியத்திற்குத் தாவுகிறது
மேலும் அன்றைய பொழுதில்
காணும் நீர்க்கட்டிகளின் வடிவங்களில் இருத்திவைக்கப்படுகிறது
என்னுடைய அந்நாள்.

~oOo~

 அந்தக் கணம்

சரவணண் அபி

எத்தனையோ சொல்லிமுடித்தும்
எஞ்சி நிற்கிறது புரிதலின் குறை
குற்றம் உனதல்ல
அறிதலின் குறை
மொழியின் குறை
அசந்தர்ப்பங்களின் பங்கும்
இல்லாமலில்லை
பற்பல உறவுகளில்
புதுப்புது நிகழ்வுகளில்
புலன்களின் புரிதல்
மொழிகளின்றியும்
நிகழ்ந்தவண்ணமே
இருந்தபோதிலும்
இழந்ததும் பெற்றதும்
இவையென இத்தருணத்தில்
கடைவிரிக்க வேண்டியதில்லை
ஒரு திரியினின்று மற்றொன்று
பற்றிக் கொள்ளும்
அந்தக்
கணம் மட்டுமே வேண்டும்

~oOo~

 அதனால் என்ன

அன்பழகன் செந்தில்வேல்

துண்டு நிலம் கூட இல்லை
இரு கைகளையும்
பிச்சைப் பாத்திரம் போல குவித்து
வீட்டு முற்றத்தில்
மணி மணியாய் வந்து விழும்
மழைத் துளிகளை
ஏந்திக் கொள்கிறேன்

~oOo~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.