மெய்ம்மை-கடந்த உலகில் உண்மை குறித்து…

அண்மையில் நண்பர் ஒருவர் பகிர்ந்த கட்டுரை சிக்கலான சில உணர்வுகளுக்குக் காரணமானது – The Real War on Science | City Journal. சுற்றுச்சூழல் சீர்கேடு, புவி வெப்பமயமாதல் போன்ற விஷயங்கள் இடதுசாரிகளின் சதியாகவும் அரசின் மிகை நடவடிக்கைகளுக்கு காரணமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு என்று நினைக்க வைத்த கட்டுரை. இது போல் பல கட்டுரைகளை இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது. மருத்துவம், பொருளாதாரம், உணவு முறை, அறிவியல் என்று எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அத்தனை வல்லுனர்களும் ஏற்றுக் கொண்டுவிட்ட விஷயத்தில் ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது என்பதையே சதித்திட்டத்தின் ஆதாரமாய்க் கொண்டு, முற்றிலும் மாறான பார்வை வலியுறுத்தப்படுகிறது.
குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில், முக்கியமான விஷயங்களில் தகவலறிவு பெற்றுக்கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நம் வாக்கு, அதன் பின் நம் ஆதரவு இருந்தால்தான் அறிவியல், கல்வி, சுகாதாரம் போன்ற எத்துறையிலும் அரசு மக்களுக்கு உகந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியும். இன்று, இணைய தொடர்பு உள்ள ஒவ்வொரு குடிமகனின் குரலும் சமூக ஊடகங்களின் வழியே அரசுக்கும் பிறருக்கும் கொண்டு செல்லப்படுகிறது. இதில் உயர்ந்து ஒலிக்கும், மிகுந்து ஒலிக்கும் குரல்கள் உருவாக்கும் கருத்துத் தோற்றத்தை கடந்து செல்வது எளிதல்ல. முன்னிருந்த அச்சு ஊடக உலகம் இதைவிட எளிதானது- துறை சார்ந்த வல்லுனர்களின் ஆலோசனை அரசுக்கு வழிகாட்டியிருக்கலாம், மக்களின் குரல் குறைவான எண்ணிக்கை கொண்ட பத்திரிக்கைகளில்தான் எதிரொலித்தது.
இன்றுள்ள கருத்துச் சூழலில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. நாம் எல்லாரும் தரவுகளைத் தெரிந்து கொள்வதிலோ, அவற்றின் உண்மையை உறுதி செய்து கொள்வதிலோ ஒரே அளவு அக்கறைகாட்டுவதில்லை. நம் பார்வையை வலுவாக்கும் செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம். அவற்றை விரும்பி பகிர்ந்து கொள்வதால் அவை கூடுதல் ஆற்றல் பெறுகின்றன. நிறைய பேர் பேசிக்கொள்ளும் விஷயங்களே கவனம் பெறுகின்றன, உண்மைக்கு இங்கு மதிப்பில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் நிறுவன அமைப்புகளும் அதன் களப்பணியாளர்களும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தகவல்களையும் பரப்புவது இரண்டாம் சிக்கல். உண்மையறியும் சல்லடை இல்லாத உலகில் இவை பரபரப்பு மதிப்பின் காரணமாய் மக்களை விரைந்துச் சென்றடைகின்றன. இணையம் உண்மையை அறியும் சாதனம் என்ற நிலையை எட்டாமல், எல்லாரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறியும் சாதனமாகி விட்டது.

fake_separate_world_globe_round_bubble_dissipate_live

எப்போதும் பொய்கள் நம்மோடு இருந்திருக்கின்றன. அவை வலுவான தாக்கம் செலுத்தியுமிருக்கின்றன. ஆனால் அடிப்படையில், ஒரு உண்மையைச் சொன்னால் உலகம் அதை ஏற்றுக்கொள்ளும் என்று நினைப்பதற்கு இடம் இருந்திருக்கிறது. உண்மையை உறுதி செய்யும் இடத்தில் இருப்பவர்களின் கணிப்புக்கு மக்கள் மத்தியில் – ஊடகங்களின் உதவி காரணமாய்- மதிப்பு இருந்ததால் அந்த நிலை நிலவியிருக்கலாம். ஆனால் இன்று, வல்லுனர்களின் நேர்மையைச் சந்தேகிக்கும் நாமே துறை வல்லுனர்களாய் இருந்தாக வேண்டும். அது முடியாது என்றால், பத்திரிக்கைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு உள்ள பொறுப்புணர்வுடனாவது நாம் தகவல்களை அணுக கற்றுக்கொள்ள வேண்டும். அதைச் செய்யாத வரை, நாம் மெய்ம்மை-கடந்த உலகில்தான் இருப்போம். உண்மை ஏதோ இப்போதுதான் இறந்து விட்டது என்பதால் அல்ல, பொய்களின் குரல்கள் உரத்து ஒலிக்கின்றன என்பதால், சிந்தனையின் இடத்தைக் கோஷங்கள் கைப்பற்றி விட்டது என்பதால், நம் அரசியல் வெளியையும் சமூக வெளியையும் பொய்கள் கட்டமைக்கின்றன என்பதால்.
சாமானிய மனிதர்களான நம் பிரச்சினை, நமக்கு முழு உண்மையும் தெரியாத விஷயங்களில் எவரையும் சாராமல் முரண்பாடுகளை எதிர்கொள்வது எப்படி என்பதுதான். நமக்கு பல திசைகளிலிருந்து பல தகவல்களும் பார்வைகளும் கிடைக்கின்றன. இதில் எது உண்மை எது பொய் என்பதை விசாரித்து அறிய உதவும் அறிவோ நம்பத்தகுந்த ஆலோசகர்களோ நமக்கு இல்லை. இது போக, ஒரு விஷயம் நடந்து முடியும் வரை அது குறித்து நாம் எதையும் தீர்மானமாகச் சொல்ல முடியாது என்பதால் பெரும்பாலும் நம் மனச்சாய்வுகள் மற்றும் முன்முடிவுகளுக்கு ஏற்ற வகையில் தகவல்களை அணுகுகிறோம். சில சமயம் இதற்கு காரணம் ஆசை, அல்லது அச்சம், அல்லது அனுபவம், அல்லது அறிவு இப்படி நிறைய விஷயங்கள். ஆனால் எதுவும் இப்படிதான் இருக்கும் என்றோ நடக்கும் என்றோ அடித்துச் சொல்ல நமக்கு வழியில்லை என்பதுதான் உண்மை.
இதை ஏற்றுக்கொண்டால் அடுத்து, இயற்கையின் நிகழ்வுகளில் கூடுதலான நிச்சயத்தன்மை உண்டு, மனித நிகழ்வுகளில்தான் நிச்சயமின்மை கூடுகிறது என்பது நம் அனுபவம். நான் இன்று தூங்கப் போகும்போது நாளை எழுந்து வேலைக்குப் போவேன் என்பது உறுதியில்லை, ஆனால் சூரியன் உதிப்பதும் பொழுது புலர்வதும் உறுதி. இதைச் சந்தேகிப்பது அபத்தம். இயற்கை நிகழ்வுகளை நிச்சயம் நம்பலாம், ஆனால் எதுவரை? – நாளை உதிக்கும் சூரியன்தான் தினமும் உதிக்கப் போகிறான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இன்று போல் நாம் தொடர்ந்து இயற்கை வாயுக்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் புவி வெப்பமயமாவதையும் துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து புவியெங்கும் தாழ்தளத்தில் உள்ள கடலோரப் பிரதேசங்கள் பாதிக்கப்படுவதையும் யாராலும் தடுக்க முடியாது என்று ஏதாவது விதிக்கப்பட்டிருக்கிறதா, என்ன? விஞ்ஞானிகள் நினைப்பது பொய்க்கலாம், அல்லது இவர்கள் நினைத்த அளவு பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். இந்தக் கருத்தில் எவ்வளவு இயற்கை நிகழ்வு, எவ்வளவு மனித நிகழ்வு? நாம் இந்த விஷயத்தில் என்ன நிலை எடுப்பது, எப்படி? சூரியன் விஷயத்தில்கூட, நாளை சூரியன் உதிப்பது எவ்வளவு உறுதியோ, அதே அளவு உறுதியாய் நூறாண்டுகளுக்குப் பின், அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின், அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்குப்பின் சூரியன் உதிப்பான் என்று நம்ப முடியுமா? ஒரு விஷயம் எவ்வளவு உண்மை என்று நாம் நம்புகிறோம் என்பதை நம் அறிவில் நாம் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதே தீர்மானிக்கிறது.
ஆனால் அதற்காக நியூட்டனின் இரண்டாம் விதியோ, அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டோ நாளைக்கோ பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னோ காலாவதியாகப் போவதில்லை. சில விசேஷச் சூழல்களில் இந்த விதி மாறுபடலாம், இந்தத் தொழில்நுட்பம் பொய்க்கலாம் – நியூட்டனின் புவி ஈர்ப்பு விதியால் விளக்க முடியாத விஷயங்களை ஐன்ஷ்டீனின் சார்பியல் விதி விளக்குகிறது. இங்கும் நாம் நம் அறிவில் வைத்திருக்கும் நம்பிக்கைதான் உண்மை மீதான நம்பிக்கையாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. எப்போது அனுபவம் மாறுபடுகிறதோ, அப்போது அத்தனை விதிகளும் ரத்தாகின்றன.
இப்படிச் சொல்லலாம் – பிரம்மம் – எது இருக்கிறதோ அது சத்யம்-சிவம்-சுந்தரம் / சத்-சித்-ஆனந்தம் என்றெல்லாம் சொல்லும்போது இதெல்லாம் ஆதார உண்மைகள், இவை தம்மைத் தாமே அறிவித்துக் கொள்கின்றன, இவை பிறவற்றுக்கு துலக்கம் தருகின்றன, இவற்றைக் கொண்டுதான் நாம் பிறவற்றைப் புரிந்து கொள்கிறோம், பிற ஆதாரங்களால் இவை நிரூபிக்கப்படுவதில்லை; பிற விஷயங்கள்தான் இவற்றை மறைத்தும் திரித்தும் நம்மை அறியாமையில் ஆழ்த்துகின்றன என்று சொல்கிறோம் (மாயை என்பதன் வேர்ச்சொல் அளவிடுதலைக் குறிக்கிறது. மாயையின் சக்திகள் இருவகைப்பட்டவை – ஆவரணம் (மறைத்தல்) விக்ஷேபம் (திரித்தல்). நாம் எதைக் கொண்டு அறிகிறோமோ, அது மறைத்தல் மற்றும் திரித்தலால் களங்கப்பட்டிருக்கிறது). ஆனால் நம் அறிவு, அறிகிறேன் என்ற உணர்வு, சந்தேகத்துக்கு இடமற்றது. இது மட்டும்தான் நேரடியான, அனுமானிக்கப்படாத உண்மை.
உண்மை என்ற இந்த உணர்வின் வெளிச்சத்தில்தான் பிறவற்றை விசாரித்து பொருள் விளங்கிக் கொள்கிறோம். தகவல்கள் மற்றும் ஆதாரங்களால் உண்மை குறித்த குழப்பம் நேரும்போது, நாம் ‘இது உண்மை’ என்ற உணர்வைத்தான் ஆதாரமாய் கொள்ள வேண்டும், அதைச் செய்யாவிட்டால் எல்லாம் உண்மை, அல்லது, எதுவும் உண்மையில்லை என்ற இடத்துக்குப் போய் விடுவோம் (எதுவும் உண்மையில்லை என்ற இடத்திலிருந்து எல்லாம் சாத்தியம் என்ற இடத்துக்குச் செல்ல வெகு தொலைவு போக வேண்டியிருக்காது. அதற்குப்பின் புத்தொளிக்கால விழுமியங்களுக்கு இடமிருக்காது, இடைக்கால ஐரோப்பியாவின் இருள் கவிவதைத் தவிர்க்க முடியாது). முழு உண்மை எப்படி இருந்தாலும், ‘இது உண்மை’ என்று ஒன்றைக் கொள்வதால் எனக்கொரு உண்மை பிறருக்கொரு உண்மை என்று ஆவதில்லை; எல்லாருக்கும் ஒரே உண்மைதான், அதன் ஒரு கூறுதான் நமக்குப் புலப்படுகிறது என்ற உணர்வுடன் நம் பார்வைகளைப் பகிர்ந்து எந்தத் திசையில் செல்வது சிவம் – சுந்தரம் அல்லது சித் -ஆனந்தம் ஆகியவை இன்னும் பிரகாசமாய் ஒளிர உதவுகிறதோ, அந்தத் திசையில் செல்ல வேண்டியதுதான். இங்கு சிவம்- மங்கலம், சுந்தரம்- அழகு, சித்- இருப்பு, ஆனந்தம்- மகிழ்ச்சி ஆகிய சொற்களைத் தத்துவ தளத்துக்குரிய absolute senseல் பயன்படுத்தவில்லை. நம் சாதாரண அனுபவ உலகில் எது மங்கலமானது, எது அழகியது, எது இருப்பைப் பாதுகாக்கிறது, எது மகிழ்ச்சியளிக்கிறது என்ற கேள்விகளே இங்கு எழுப்பப்படுகின்றன.
Means are the Ends“, என்றார் காந்தி. மோசமாக நடந்து கொண்டு அல்லது பிறருக்கு தீங்கு இழைத்து ஒரு உயர்வை அடையப் போகிறோம் என்பதையோ ஒரு நன்மையைச் செய்யப் போகிறோம் என்பதையோ அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. வழிமுறை எப்படி இருக்கிறதோ அப்படிதான் முடிவும் இருக்கப் போகிறது என்று நம்புகிறார் அவர். இதற்கு ஒரு நல்ல உதாரணம் சொன்னால், என்ன செய்வது என்ற குழப்பம் அல்லது தன்னைக் குறித்து அகங்காரம் அல்லது உற்சாகமின்மை இருக்கும் சமயத்தில் தான் பார்த்த மிக ஏழையான, மிகவும் ஒடுக்கப்பட்ட, ஆதரவற்றவனின் முகத்தை நினைவுக்குக் கொண்டு வந்து, தான் எடுக்கப் போகும் முடிவால் இவனுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்று கேட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தாராம் காந்தி. அந்தக் கேள்வியைக் கேட்டவுடன் சரியான முடிவு தெரிந்து விடும் என்கிறார் அவர்.
காந்தி அளவுக்கு போகாவிட்டாலும் நாம் பிறரின் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி கூட்டுகிறோமா, அல்லது அதை அவலத்தைக் கொண்டு நிறைக்கிறோமா என்பதை அடுத்தடுத்து பார்த்துக் கொண்டிருந்தாலே என்ன செய்ய வேண்டும் என்பது ஓரளவு புலப்பட்டு விடும். உலகத்தில் நடப்பது குறித்தும் ஓரளவுக்கு இப்படி புரிந்து கொண்டு நாம் எங்கே யாருடன் நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்வது சாத்தியம் என்று தோன்றுகிறது. எனவே, ஒவ்வொரு விஷயத்திலும் இருக்கிற ஆதாரங்களை எல்லாம் பொருத்திப் பார்த்து எல்லாமே அவரவர் அளவில் உண்மை என்றோ உண்மை என்ற ஒன்றே இல்லை என்றோ குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. ஆங்காங்கே உடைந்து கிடக்கும் கண்ணாடித் துண்டங்களை ஒட்ட வைத்து அதில் பிரதிபலிப்பதைக் கொண்டு ஒரு காட்சியைப் பெறுவது போல் நாம் உண்மையை உணர்கிறோம். அது முழு உண்மையாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது பிறரின் இன்றைய இருப்புக்கு பாதுகாப்பு தருகிறது, பிறரின் வளர்ச்சிக்கு உதவுகிறது, பிறரின் மகிழ்ச்சிக்குக் காரணம் ஆகிறது என்றால் அதை ஏற்றுக் கொள்ளலாம். இந்த அடிப்படையில் எது உண்மை என்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது, எதிரெதிர் நிலைகளை நியாயப்படுத்தும் அவரவர் தகவல்களும் வாதங்களும் நமக்கு இடையிலுள்ள தொலைவை அதிகரிக்கவே செய்கின்றன.
இது எதுவும் புதிது அல்ல- வில்லியம் ஜேம்ஸ் எழுதியதில் பல மேற்கோள்கள் இது போல் கிடைக்கின்றன. களங்கமற்ற, உறுதியான உண்மை ஒன்றே ஒன்றுதான்- இப்போதைய இருப்பின் பிரக்ஞைதான் அது, என்றார் அவர். இதனால்தான் தனி மனிதனிடம் பரிவும் எளிய உண்மைகளில் நாட்டமும் காட்டுகிறார். ஓரிடத்தில் பேதம் உள்ளது என்றால் அந்த பேதம் வேறோரிடத்தில் வெளிப்பட்டுதான் தீரும்- கருத்து நிலையில் உள்ள பேதம் வேறோரிடத்தில் தூல வடிவில் பேதம் தட்டத்தான் செய்யும், அந்தப் பேதலிப்பின் விளைவுக்கு யாரோ ஒருவன், ஏதோ ஒரு வகையில், எங்கோ ஓரிடத்தில், ஏதோ ஒரு காலத்தில் பலியாகவே செய்வான் என்கிறார் வில்லியம் ஜேம்ஸ். இங்கிருந்தே அவர், எளிய உண்மைகள் போதும், மகத்தான உண்மைகள் சந்தேகத்துக்கு உரியவை, எளிய வெற்றிகள் போதும், மகத்தானவை ஆபத்தானவை என்ற இடத்துக்கும் செல்கிறார்.
உண்மை செலாவணி ஆவது கருத்தொருமித்த சூழலில்தான் என்பதை நாம் இப்போது, உண்மையை யாரும் சீண்டாத நேரடி அனுபவ முட்டுச்சந்துகளின் முனைக்கு வந்தபின், உணரத் துவங்கியிருக்கிறோம். உண்மை பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையில் புழங்குகிறது, யாரும் கேள்வி கேட்காத வரைதான் நம் கருத்துகளும் நம்பிக்கைகளும் செல்லுபடியாகின்றன- யாரும் ஏற்க மறுக்காதவரை நம் நாணயங்கள் செல்லுபடியாவது போல், என்று வில்லியம் ஜேம்ஸ் சொல்வது கசப்பாக இருந்தாலும், அதன் உண்மையை இன்று எவ்வளவு சப்பு கொட்டி ரசிக்க முடிகிறது!

One Reply to “மெய்ம்மை-கடந்த உலகில் உண்மை குறித்து…”

  1. உண்மை தோல் போர்த்திய பொய்கள் இன்று மட்டுமல்ல, அவை என்றுமே இருந்து வந்திருகின்றன. முற்காலங்களில் ஊடகங்களும்,வல்லுனர்களும் எது உண்மை, எது பொய் என்னும் விவாதத்தை அவர்கள் கட்டில் வைத்திருந்தார்கள். அவர்கள் உண்மை என்றதெல்லாம் உண்மையுமல்ல, பொய் என்றதெல்லாம் பொய்யும் அல்ல. இதை பற்றிய கருத்து பரிமாற்றங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை. ஒரு சாமானிய மனிதனின் கருத்து அவனை சுற்றி ஒரு பத்து பேரை சென்றடைந்திருந்தால் அது பெரிய விஷயம். இன்று நிலைமை தலை கீழ். அவரவர்களுக்கு, அவரவரது உண்மை. பெரிய கூட்டங்கள் உரத்து ஒலிக்கின்றன. மெய்மைக்கு அப்பால் என்பது தற்காலத்து வார்த்தை பிரயோகமாக இருக்கலாம், ஆனால் அது முற்காலங்களிலும் இருந்து வந்திருகிறது.
    எது ஒன்று நிரூபிக்க படுகிறதோ அது உண்மை என்று ஆங்கில அகராதிகள் சொல்லுகின்றன (Truth – A fact that has been verified). இதை நாம் ஏற்று கொள்வோமானால், இன்று நிகழும் பல விவாதங்களின் அடித்தளம் அனுமானங்களாலும், யூகங்களிளாலும் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன என அறிந்துகொள்ள முடியும். இது சரியா / தவறா என்பதை விட இது தவிர்க்க முடியாத ஒன்று என்பதுதான் நிதர்சனம். வல்லுனர்கள் தங்கள் வலுவை இழந்து விட்டார்கள். வல்லவர்கள் சாமானியர்கலின் குரலை, அவர்களது அறியாமையை, முட்டாள்தனத்தை தங்களுக்கு சாதகமாக, தாங்கள் பரப்பும் பொய்களுக்கு மூடியாக ஆக்கி கொண்டு விட்டார்கள்.

Leave a Reply to பாலாஜி Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.